எங்கள் பிளாக்கின் ஒரு பதிவில் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு பதில் எழுதும் விதமாக சட் என்று தமிழ் அரசர்கள் என்பவர் பாண்டிய அரசர்கள்தாம், சேர அரசர்களைக் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் சோழ, பல்லவ அரசர்கள் வெளியிலிருந்து (தமிழ் நிலத்துக்கு) வந்தவர்கள் என்று கொஞ்சம் துடுக்குத்தனமாக எழுதிவிட்டேன். நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் அப்படி எழுதிவிட்டாலும், அது உண்மையல்ல என்பது தெரிந்தும் அதனைப் பற்றி விரிவாக எழுதவில்லையே என்று என் மனத்தை உறுத்தியது.
தமிழகம் பண்டைக் காலம் தொட்டே சேர சோழ பாண்டிய நாடுகளாக இருந்துவந்தது. இவற்றை அந்த அந்த மரபு சார்ந்த அரசர்கள் ஆண்டுவந்தனர். மூன்று அரசர்களுமே தமிழை, தமிழ் மரபை, கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. இருந்தாலும் அவர்களுள், பாண்டிய அரசர்கள், சங்க காலம் தொட்டே சங்கங்கள் அமைத்து தமிழை, புலவர்களைப் போற்றி வந்தனர். அவர்கள் அமைத்த ‘கடைச்சங்கம்’ கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்து கிபி 2ம் நூற்றாண்டு வரையிலானது என்று வரலாற்று அறிஞர்கள் அபிப்ராயப்படுகின்றனர். கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்கள் என்று கூறப்படும் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை போன்றவைகளின் மூலம், தொண்டைமண்டலத்தை ஆண்ட பல்லவர் காலத்திற்கு முன்பு தமிழகம் எப்படி இருந்தது என்பதைச் சிறிது அறிந்துகொள்ள இயலும்.
பாண்டிய நாடு என்பது மதுரை, இராமனாதபுரம், நெல்லைச் சீமை, வேதாரண்யம் போன்ற பகுதிகள் சேர்ந்தது. இதன் தலைநகரம் மதுரை. குறிப்பிடத்தக்க துறைமுகம் கொற்கை. (கொற்கை பற்றி கிமு நான்காம் நூற்றாண்டில் சக்கரவர்த்தியாக இருந்த சந்திரகுப்த மௌரியரின் அமைச்சர் சாணக்கியன் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்). சிலப்பதிகாரம் சொல்லும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற பாண்டிய மன்னர்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவர்கள்.
சோழ நாடு, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கிழக்கே இருந்த கடற்கரையுடன் கூடியது. சோழ நாட்டின் தலைநகராக உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் விளங்கின. காவிரிப் பூம்பட்டினம் மிகச் சிறந்த துறைமுகப் பட்டினமாக கிமு 2ம் நூற்றாண்டிலிருந்து கிபி 2ம் நூற்றாண்டு வரை விளங்கியது என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு. இங்கு அயல்நாட்டிற்கு நிறைய ஏற்றுமதியும் அங்கிருந்து இறக்குமதியும் நடைபெற்றன. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்கள் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் கிபி இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்தப் பட்டினம் சிறந்த வாணிபத் தலமாக அமைந்திருந்தது. அயல் நாட்டு வாணிபர்கள் புகார் நகரில் குடியேறி இருந்தனர். கடைச்சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய சோழ அரசன் கரிகால் பெருவளத்தான் ஆவான். சோழ வளநாட்டின் செழுமையினால்தான் சோழ வளநாடு சோறுடைத்து என்ற பெயர் பெற்றது. (பாண்டிய நாடு முத்துடைத்து, சேரநாடு வேழமுடைத்து. இதெல்லாம் யார் எங்கே சொல்லியிருக்கிறார்கள் என்று எழுதப் புகுந்தால் அது இன்னொரு பகுதியாக நீண்டுவிடும்.
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப் பாலையில் தொடக்க வரிகளாக,
"வசையில்
புகழ், வயங்கு
வெண்மீன்;
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற் பாடிய தளி உணவின்;
புள் தேம்பப் புயல் மாறி,
வான் பொய்ப்பினும், தான்
பொய்யா... காவிரி"
என்று அமைந்துள்ளன. சோழ வளநாட்டின் நெற்களஞ்சியத்துக்குக் காரணம் அங்கு பாயும் காவிரிதான்.
பொருள்: வசையில் புகழ்-குற்றமில்லாத புகழை உடைய வயங்கு வெண்மீன் – பிரகாசமான வெள்ளியைக் குறிக்கிறது-நட்சத்திரம். இது மழைக்குக் காரணம் என்று குறிப்பிடுவர். திசை திரிந்து தெற்கு ஏகினும்-அது தான் வழக்கமாகச் செல்லும் பாதையை விட்டு விலகி வேறு திசை சென்றாலும், தற்பாடிய தளி உணவின் புள் தேம்ப – வானத்தைப் பாடி, அதிலிருந்து விழும் மழைத்துளியையே உணவாக உண்டு வாழும் பறவை வாடி அழும்படி திசை மாறி வான் பொய்த்தாலும், தான் பொய்யா-எப்போதும் தண்ணீர் வரத்து இருக்கும் காவிரி.
சேர நாடு கொச்சி, திருவாங்கூர் நாடுகளையும் மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரையையும் உடைத்தது. (இந்த திருவாங்கூர் நாட்டில்தான் நாகர்கோயில் சார்ந்த பகுதிகள் வரும்). இதன் தலைநகரம் வஞ்சி. முசிறி, தொண்டி போன்ற துறைமுகங்களைக் கொண்டது சேர நாடு. இங்கிருந்துதான் தேக்கு, அகில், மிளகு, யானைத் தந்தங்கள் போன்றவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அரசர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அவன் மகன் செங்குட்டுவன் போன்றவர்கள் புகழ் பெற்றிருந்தனர். சேரர் குலத்தைச் சார்ந்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பான் மகாபாரதப் போரில் தொடர்புபடுத்தப்படுபவன் (சேரர் குலம் நெடிய வரலாறு உடையது என்பதற்காக இதனைக் குறிப்பிட்டுள்ளேன்). இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை (அல்லது குல முன்னோர்) உதியஞ்சேரலாதன் என்பான்.
தொண்டை நாடு என்பது குறும்பர்களால் ஆளப்பட்டுவந்தது என்றும் அவர்கள் தங்கள் நாட்டை 24 கோட்டங்களாகப் பிரித்து ஆண்டனர் என்றும், காவிரிப் பூம்பட்டினத்துடன் கடல் வழி வாணிபம் நடத்தினர் என்றும் சொல்கின்றனர். சேக்கிழார் சொன்ன செய்தியை வைத்து, கரிகாலனே காஞ்சி மாநகரத்தின் பெருமையை அறிந்து படையெடுத்து அதனைக் கைப்பற்றி சோழ நாட்டை விரிவாக்கினான் என்றும் சொல்கின்றனர். பிற்காலத்தைய தெலுங்கு நாட்டுச் சோழரும், தங்களின் முன்னோர் கரிகாலன் என்று பெருமை பேசியிருப்பதால், கரிகாலன், சோழ வள நாட்டை, ஆந்திரா வரை பரவியிருக்கச் செய்திருந்தான் என்று கொள்ளலாம். வரலாறு கரிகாலனை, இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வடபுலத்து அரசர்களிடம் பரிசில்கள் பெற்று வந்தவன் என்று குறிப்பிடுகிறது.
வட நாட்டுக்குச் சென்ற அரசர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் சோழ அரசன் கரிகாலனும், சேர அரசன் செங்குட்டுவனும். (இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். சிலப்பதிகாரம் சொல்வதை வைத்தும், அந்தச் சமயத்தில் வாணிபம் பற்றியும் இலங்கை அரசன் கயவாகு பற்றியும் சொல்லும் செய்திகளை வைத்தும் இந்த அரசர்கள் காலம் என்னவாக இருந்திருக்கும், எப்போது அவர்கள் வடநாடு சென்று வெற்றியுடன் திரும்பியிருப்பார்கள் என்பதை அறுதியிடுகிறார்கள். எல்லாம் ஓரளவு அனுமானம்தான்)
சிலப்பதிகாரம், செங்குட்டுவன், பத்தினிக்கு விழா எடுத்தபோது வந்திருந்த அரசர்களுள், இலங்கை அரசன் கயவாகுவும் ஒருவன் என்கிறது. இந்த கயவாகுவின் காலம் கிபி 170-190 என்பதால், அந்தக் காலம்தான் செங்குட்டுவன் காலமாக இருந்திருக்கும். இந்தக் காலத்தில் தமிழகத்திற்கு வடக்கே கங்கை ஆறு வரை ஆண்டுகொண்டிருந்தவர்கள் ஆந்திர சதகர்ணி அரசனான யக்ஞஸ்ரீ என்பவன். இந்த சதகர்ணி என்பதை சிலப்பதிகாரம் ‘நூற்றுவர் கன்னர்’ என்று குறிப்பிடுகிறது. அதனால் இந்தக் காலத்தில்தான் செங்குட்டுவன், யக்ஞஸ்ரீயின் துணை கொண்டு கங்கையாற்றைக் கடந்து மீண்டு வந்திருக்கவேண்டும்.
இலங்கையை தமிழர்கள் முதலில் ஆண்ட காலம் கிமு 160-100. பிறகு கிமு 44-17 க்கிடையில் 15 ஆண்டுகள். இந்தக் காலத்தையே கரிகாலன் காலமாகக் கொள்கிறார்கள். அப்போது கடல் வாணிபம் உச்சத்தை அடைந்திருந்ததாம். அந்தச் சமயங்களில் (அதாவது கிமு 39 முதல் 14 வரையிலான காலத்தில்) ரோமப் பேரரசனான அகஸ்டஸ் எனபவனுக்கு பாண்டிய அரசன் தூதுக்குழு ஒன்றை அனுப்பியிருக்கிறான். (சமீபத்தில் எகிப்திய பிரமிடுகளில் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றன என்ற காணொளிகளைப் பார்த்தேன்).
இப்படி ஆரம்பகால கட்ட (அதாவது இலக்கியங்கள் மூலம் தெரியவரும்) தமிழக வரலாற்றைப் பார்த்தால், நம்மில் எத்தனை தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கி இனத்தைப் பெருக்கினார்கள், வாணிபம் செய்ய வந்து இங்குள்ள தமிழர்களோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் எவ்வளவு பேர் என்று அறுதியிட முடியாது. (அரசியல் என்றாலும் தற்காலத்தில், அரசியல்வாதிகளுள் ஒரு குடும்பம் ஆந்திர ஓங்கோலிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்றும் இன்னொரு கட்சியின் தலைவர், ஆந்திர இனம் என்றும், இங்கு தங்கள் வசதிக்காக தொல்காப்பியன் என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டு தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் படித்தேன். எப்போதும்போல, தமிழர்கள் இவர்களிடமிருந்து தமிழின் பெருமையை 'ஆ' என வாயைப் பிளந்துகொண்டு கேட்டுக்கொள்வார்கள், அப்புறம் ஏன் தமிழர்களே அமைச்சரவையிலோ இல்லை கட்சியிலோ முக்கியப் பொறுப்பில் இல்லையே என்றெல்லாம் யோசிக்காமல்)
ஏதோ பரீட்சைக்குப் படிப்பதைப் போல இன்றைய பகுதி அமைந்துவிட்டதோ? மூன்று நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர்கள்தாம் என்பதை எழுத விரும்பினேன். அது இப்படி நீண்டுவிட்டது. (விக்கியிலிருந்து எடுத்த நாட்டின் பிரிவுகளைப் பற்றிய படம் கீழே. இது ஆங்கில வரலாற்று ஆசிரியர்களின் புத்தகத்திலிருந்து எடுத்திருக்கலாம்)
கிமு 300 - கிபி 400 வரையிலான சங்ககாலத் தமிழகம்.
கல்வெட்டுகள் ஓரளவு படிக்கும்படியாகத்தான் இருக்கின்றன. ஆனால்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் போல அச்சடித்ததுபோல இல்லை.
இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே
படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்தலி இரு கண்
குளிர
தில்லையிலே (இடது)
திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என
திகுதிமிதகுதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே
புன்னகையொடு (இடது)
பாபநாசம்
சிவன் பாடல் நினைவுக்கு வருகிறதா?
இந்தக் கல்வெட்டில்தான் தஞ்சை பெரியகோயில் போன்று எழுத்துக்கள் இருந்ததைக் கண்டேன்.
மேலே உள்ள சிற்பம் சரஸ்வதி தேவி. கையில் வீணை இல்லாமல் எழுந்தருளி இருப்பது சிறப்பு. சரஸ்வதியின் வீணை கச்சபி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சிவபெருமானிடம் இருந்த அந்த வீணை பிறகு சரஸ்வதிக்கு வந்தது. வீணை இல்லாத, பாதி பத்மாசனத்தில் தாமரை பீடத்தில் அமர்ந்து காட்சி தரும் சரஸ்வதி அபூர்வம். ஞான உபதேசம் அருளும் வகையில் இந்தச் சிற்பம் அமைந்துள்ளது.
அவ்வளவு பெரிய யாளியின்மீது அமர்ந்து வீரன் போரிடும் காட்சி தெரிகிறதா?
இன்றைக்குப்
பகிர்ந்த படங்களை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி அடுத்த வாரம்
தொடர்வோமா?
(தொடரும்)
நெல்லை, நீங்கள் இரண்டாவது பத்தியில் சொல்லியிருப்பது போலவேதான் நானும்....அதுவும் நாம் தமிழ்ப்பாடங்களில் பாண்டியர், சங்க இலக்கியம் வளர்த்த என்று படித்திருந்ததால் கடைச்சங்கம்,,,, சங்கப்புலவர்கள், மதுரை என்றெல்லாம் வாசித்திருந்ததால்...
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. மிக்க நன்றி
நீக்குஎனக்கு 'சங்கம் வளர்த்த தமிழ்.. தாய்ப்புலவர் காத்த தமிழ்' பாடலும், 'சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட தமிழ்நாடு' பாடலும் நினைவுக்கு வருகின்றன!
நீக்குபாரதியார் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்
நீக்குபடைத்த தமிழ்நாடு என்று சிலப்பதிகாரத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.
வாங்க ஸ்ரீராம். பாரதிக்கு முன் யாரும் சொல்லலையா? உவேசா பதிப்பிக்கலைனா எத்தனை பேருக்கு தெரியும்?
நீக்குகலாம்... சில வார்த்தை, வரிகளால் தூண்டப்பட்டு எனக்கு சட்டென நினைவுக்கு வருவதைத்தானே நான் சொல்ல முடியும்!!
நீக்குஸ்ரீராம் நீங்க சொல்லியிருக்கும் பாடல்கள் நினைவுக்கு வந்தன. பாரதியின் பாடல் உட்பட. அது சோழ பாண்டியர் காலக் கதையாச்சே!
நீக்குகீதா
சோழ வளநாட்டின் செழுமையினால்தான் சோழ வளநாடு சோறுடைத்து என்ற பெயர் பெற்றது. (பாண்டிய நாடு முத்துடைத்து, சேரநாடு வேழமுடைத்து.//
பதிலளிநீக்குஔவையார் பாடியது இல்லையா? கூடவே தொண்டைநாடு சான்றோருடைத்து என்று கல்வியிலும் அறிவிலும் சிறந்தவர்கள் என்று இந்த நான்கு அரசுகளைப் பற்றியும் சொல்லியிருப்பதை வாசித்த நினைவு
கீதா
ஆமாம். நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். அப்படீன்னாக்க மற்ற மண்டலங்களில் சான்றோர்கள் இல்லைனு அர்த்தமில்லை
நீக்குபாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் சோறு இல்லை என்றும் அர்த்தமில்லை! ஹிஹிஹிஹி...
நீக்குஔவை பாடியதை அந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாதுங்கோ!!!! ஹாஹாஹா அவங்க அப்பப்ப விசிட் அடிச்சப்ப அரசைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதுண்டுல்லையா அப்படி!!!! அவர் அங்கு கண்ட சிறப்பை
நீக்குகீதா
வான் பொய்த்தாலும், தான் பொய்யா-எப்போதும் தண்ணீர் வரத்து இருக்கும் காவிரி.//
பதிலளிநீக்குஅதெல்லாம் ஒரு காலமோ? இப்ப அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய சூழலோ? ஆனால் இதெல்லாம் ஆட்சியாளர்களைப் பொருத்துதான்...
கீதா
இல்லை. நாம் அளவுக்கு அதிகமாக உபயோகிக்கிறோம். ஆற்றுநீரை எப்படியெல்லாம் உபயோகிக்கிறோம் என யோசியுங்கள்
நீக்குகண்டிப்பாக....மோசமாகப் பயன்படுத்துகிறோம்! மழையையும் வீணடிக்கிறோமே
நீக்குகீதா
எங்கூரெல்லாம் அப்ப திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால்தானே மலையாள வாசமுள்ள பூமி (இலங்கைத் தமிழ் அவங்க கலாச்சார, உணவு உடை வாசமும் அடிக்கும், கேரளத்திலும் கன்னியாகுமரிப்பகுதிகளிலும்) கோவில்களில் கூட கேரளத்துப் பழக்கங்கள்தாம்.
பதிலளிநீக்குஉதியன் சேரலாதன் - மகாபாரதம் தொடர்பு சமீபத்தில் அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது.
கீதா
ஆமாம் சேச்சி. சமீபத்துல கண்டுபிடித்தேன் (னு நினைக்கிறேன்). அம்மா வழி நிச்சயம் கேரளா. அவங்க முன்னோர் மத்திய கேரளாவிலிருந்து பல தலைமுறைகள் முன்பு இடம் பெயர்ந்தவங்க
நீக்குஓ!!! உங்கள் அம்மா வழியா!!?
நீக்குஎன் அப்பாவின் தாத்தா திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறார். அம்பி என்று அங்கு சொல்வாங்க. கடலில் நீந்துவாராம். அலையோடு வராமல் அதை எதிர்த்து நீஞ்சுவாராம். என் தாத்தாவின் தைரியம் என் அப்பாவுக்கு இல்லை!!!! தாத்தாவோடான நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
கீதா
கரிகாலனும், செங்குட்டுவனும் வடக்கு வரை சென்றனர் என்பதை இலக்கியங்களில் அறிந்தாலும் தடயங்கள் இப்ப உள்ளனவா?
பதிலளிநீக்குசிக்கிம் நீங்க போயிருந்தீங்க இல்லையா? அப்ப அங்கு சோழக்கணவாய் (Chola pass), சோழ மலைத்தொடர் என்று அங்கு போர்டுகள் இருந்தனவா பார்க்க முடிஞ்சதா?
கீதா
அது போல சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் சிலை வைக்க இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்ததாக.....அப்படினாக்க அங்கும் சான்றுகள் தடயங்கள் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
சிற்பங்கள் படங்கள், மரங்களின் பின்னணியில் இருக்கும் அந்த மண்டபம் படம் செமையா இருக்கு, நெல்லை
பதிலளிநீக்குகீதா
எனக்குமே ரொம்ப பிடித்திருந்தது. இடம் விலை ஏறுவதற்குள் கங்கை கொண்ட சோழபுரம் பக்கத்துல வீடு வாங்கிக்கொண்டு போயிடலாமா?
நீக்குஹாஹாஹா....விலை ஏறுவதை விடுங்க..முதல்ல உங்களுக்கு நிலம் அலல்து வீடு கிடைக்குதான்னு பாருங்க. சுத்தி ஏதோ ரோடு போட்டிடாம..
நீக்குகீதா
படவரவு ஆட புலி அதள் ஆட
பதிலளிநீக்குபக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்தலி இரு கண் குளிர
தில்லையிலே (இடது)//
ஆமாம் அருமையான பாடல். கமாஸ் ராகத்தில், சுதா ரகுநாதன் பாடிக் கேட்டிருக்கிறேன். கற்றும் கொண்டேன் ஹிஹிஹி
கீதா
பாடி அனுப்புங்களேன் கீதா ரங்கன் க்கா. உடனே எல்லோரையும் போல குரல் இப்போ போயிடுச்சுன்னு பஞ்சப் பாட்டு பாடாதீங்க ஹா ஹா ஹா
நீக்குஹிஹிஹி....நோ பஞ்சப்பாட்டு! ஆனா வெக்கமா கீது
நீக்குகீதா
இந்தக் கல்வெட்டில்தான் தஞ்சை பெரியகோயில் போன்று எழுத்துக்கள் இருந்ததைக் கண்டேன்.//
பதிலளிநீக்குஇந்தப் படத்தில் எழுத்துகள் நல்ல அழுத்தமாக இருப்பதைச் சொல்ல வந்தேன் தஞ்சை கோவில் போல இருக்கேன்னு நீங்க குறிப்பிட்டிருக்கீங்க, நெல்லை
கீதா
ஆமாம். கல்வெட்டில் தஞ்சை பெரிய கோவில் சூப்பர்
நீக்குவீணை இல்லா சரஸ்வதி - நெல்லை, நீங்க சொன்ன பிறகுதான் அது சரஸ்வதி என்று புரிந்து கொண்டேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கவில்லை என்றால் தெரிந்திருக்காது.
பதிலளிநீக்குகீதா
வீணையை சர்வீஸுக்கு விட்டிருக்காங்களோ...!! ஹிஹிஹி..
நீக்குதாமரை பீடத்தில் அமர்ந்தால் ஸரஸ்வதியா? லட்சுமி அமர்வதில்லையா? வேறு ஏதும் அடையாளங்கள் உண்டா?
ஹைஃபைவ் ஸ்ரீராம்....நான் சொல்ல நினைத்து கரன்ட் போனதால் விட்டுப் போச்சு. எங்க வீட்டு வீணை நினைவுக்கு வந்தது. கம்பி சரி பண்ணி மாட்டணும்...ஸோ நானும் அப்படிச் சொல்ல நினைத்தேன்...நீங்க சொல்லிட்டீங்க!
நீக்குஅதேதான் வேறு என்ன அடையாளங்கள் சரஸ்வதிக்கு வெள்ளைத் தாமரை சிற்பங்களில் தெரியாது. புஸ்தகம் ஏதாச்சும் கைல இருக்குமா?
கீதா
அவ்வளவு பெரிய யாளியின்மீது அமர்ந்து வீரன் போரிடும் காட்சி தெரிகிறதா?//
பதிலளிநீக்குதெரியுது, நெல்லை. இப்படிச் சோழர்களின் பங்கு இருக்கும் கோயில்களில் இப்படியான சிற்பங்கள் இருப்ப்பது அவங்க காலத்தில் என்பது தெரிகிறது. குறிப்பாக இங்கு கர்நாடகாவில் அவங்க இருந்த காலம் என்று சொல்லப்படுவது.
கீதா
கர்நாடகான்னு பிரிப்பதால் அப்படித் தெரியுது. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் அவங்க ராஜ்ஜியம்தான்
நீக்குஅது சரிதான் நெல்லை, ஆனா இப்ப சொல்லணும்னா அப்படிச் சொன்னாத்தானே புரியும்...நம்ம பகுதில இருந்தது போல இங்கும் நெடுங்காலம் இருந்தாங்களா? வாசித்த போது அப்படித் தெரியலையே
நீக்குகீதா
படங்கள் எல்லாம் சூப்பர்!
பதிலளிநீக்குஅட! ஆச்சரியம் இன்று எல்லாக் கருத்துகளும் இந்த ஐடியிலிருந்து வந்துவிட்டன. இல்லைனா மாறி மாறி போட வேண்டும் எனும் போது பொறுமையை சோதிக்கும்!!
கீதா
எல்லாம் இறைவன் செயல். அல்லது இணையத்தின் கருணை
நீக்குஇணையத்தின் கருணை! பாருங்க இப்பவும் இதே ஐடில கொடுக்குது. இல்லைனா நான் நொந்து நூடுல்ஸ் ஆகி வெயில்ல வாடி வதங்கிப் போயிருப்பேன் நெல்லை.
நீக்குபாவம் இறைவனை விட்டுருங்க நெல்லை.
அதிருக்கட்டும், இங்கயே வெய்யிலை தாங்க முடியலை சென்னைல எப்படி இருக்கு? இன்று நான் சென்னையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் காதின் பிரச்சனையால் போகவில்லை.
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. நலமா
நீக்கு///படவரவு ஆட புலி அதள் ஆட///
பதிலளிநீக்குபட அரவு ஆட புலி அதள் ஆட என்பதே சரி
படத்தை உடைய நாகம் ஆட
புலித்தோலும் ஆட...
அடடா...
வாங்க துரை செல்வராஜ் சார். பாடும் முறையைக் கொடுத்திருக்கிறேன். பட அரவு சரிதான். பாடும்போது படவரவு எனவே வரும். எனக்குப் பிடித்த பாடல். (இது பக்கத்திலேயே ஸ்ரீராம் வருவதில்லை. திரையுடன் சரி)
நீக்குஇதுகளை நான் ரசிப்பதோடு சரி.. அதைப் பகிர்ந்தால் நான், கீதா, சூர்யா மட்டும் ரசிப்போம். அபப்டியும் சில பாடல்கள் பகிர்ந்திருப்பது உங்கள் நினைவிலேயே இல்லையே...! நீங்களே ரசிப்பதில்லை.
நீக்குஹா ஹா ஹா. உண்மைதான் ஸ்ரீராம்
நீக்குஅப்படிப் போடுங்க ஸ்ரீராம். நெல்லைய ஒரு பிடி பிடிங்க!!
நீக்குகீதா
எத்தனை எத்தனை தரவுகள்...
பதிலளிநீக்குஅற்புதப் படங்கள்...
சிறப்பான பதிவு....
மிக்க நன்றி துரை செல்வராஜ் சார். கண் பிரச்சனையிலும் கருத்து எழுதியதற்கு
நீக்குவீணை இல்லா சரஸ்வதி...
பதிலளிநீக்குஇடக்கையில் சுவடி தாங்கிய பாவனை...
அம்ருத கலசம் ஜபமாலை....
வீணா புஸ்தகதாரிணி போற்றி...
இந்தச் சிற்பம் அபூர்வம் துரை செல்வராஜ் சார்
நீக்குதுரை அண்ணா நோட் செய்து கொண்டேன். வீணை அல்லாத மற்ற விஷயங்கள் சரஸ்வதி என்று அறிந்திட. சுவடி இருக்கா? சிற்பத்தில்?
நீக்குகீதா
பொறுமையாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, குறிப்புகள் எடுத்து அழகாக, அருமையாக எழுதி வருகிறீர்கள் நெல்லை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம். போரடிக்கலை என்பதே நல்ல செய்திதான்
நீக்குஅன்பின் நெல்லை...
பதிலளிநீக்குசென்ற வார சண்டீச பதம் பற்றி
ஒரு பதிவு எனது தளத்தில்...
வருகை தரவும்...
நாளைக்குள் பார்க்கிறேன். தற்போது சென்னையில்
நீக்குWill come afterwards.
பதிலளிநீக்கு@ கீதா
பதிலளிநீக்கு///வீணை அல்லாத மற்ற விஷயங்கள்
சரஸ்வதி என்று அறிந்திட.
சுவடி இருக்கா?..////
இச்சிற்பத்தில் சுவடி தாங்கிய
பாவனையில் இடக்கதம்
காட்டப்பட்டுள்ளது
இடக்கரம்
நீக்குகாட்டப்பட்டுள்ளது..
சங்ககால தமிழகம் படம் தந்தது சிறப்பு.
பதிலளிநீக்குவித்தியாசமான சிற்பங்கள் பலவும் தந்துள்ளீர்கள். நிறைந்த வரலாறுகளையும் எடுத்துச் சொல்கிறீர்கள். காத்திரமான பகிர்வு.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//தமிழகம் பண்டைக் காலம் தொட்டே சேர சோழ பாண்டிய நாடுகளாக இருந்துவந்தது.//
பதிலளிநீக்குநல்ல விரிவான வரலாறு.
நிறைய படித்து நிறைய செய்திகள் பதிவில் சொன்னது மகிழ்ச்சி.
சரஸ்வதி ஒரு கையில் (அட்சமாலை)சபமாலை , இன்னொரு கையில் புனித நீர் (அமுத கலசம்) உள்ள பாத்திரம். மற்றொரு கை இறைவன் ஒருவனே என்பது போல ஒரு விரலை மேல் நோக்கி தூக்கி வைத்து இருப்பார். ஆனால் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தோற்றம் என்றும் சொல்வார்கள்.
இன்னொரு கையில் ஓலை சுவடியை பிடித்து இருக்கும் தோற்றம் ஆனால் ஓலை சுவடி இருக்காது. தாமரை பூ மேல் ஞான சரஸ்வதியாக வீற்று இருப்பார்.
படங்கள் எல்லாம் மிக அருமையாக எடுத்து இருக்கிறீர்கள்.
கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சை கோயில் எல்லாம் படம் எடுக்க அலுக்காது. எடுத்து கொண்டே இருக்கலாம்.
பாபநாசம் சிவன் பாடல் பகிர்வு அருமை.
தொடர்கிறேன்.