31.3.26

வேதாளக் கதை : பறக்கும் குதிரை - அம்புலிமாமா கதை

 குழந்தை மனம் யாருக்குதான் இல்லை?  உங்களுக்கு இல்லையா?  எனக்கில்லையா?  காமிக்ச் ஆகட்டும், அம்புலிமாமா, ரத்னபாலா ஆகட்டும் அந்த நாட்களை  ம4ரக்க முடியுமா?  எப்போது பார்த்தாலும் ஜெயகாந்தன், அம்பை, அநுத்தமா தி ஜா என்றுதான் படிக்க வேண்டுமா.  அதுதான் பொக்கிஷமா?  நம் பால்யம் நமக்கு பொக்கிஷம் இல்லையா? அதனால்...

இந்த விக்ரமாதித்தன் எதற்கு அந்த மரத்தின் மீதேறி ஏறி அந்த உடலை வீழ்த்தி எடுத்துச் செல்ல முயல்கிறான் என்பதற்கே ஒரு முன் கதை உண்டு.  ஆரம்ப காலங்களில் அதையும் பிரசுரித்து வந்தார்கள் என்று நினைவு.  ஆனால் அந்தக் கதைதான் என்ன!

அதென்ன, எப்போது பார்த்தாலும் "இக் கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் பதில் கூறாவிட்டால்" என்றே வேதாளம் கூறுகிறது?  தெரியாவிட்டால்தானே பதில் சொல்லாமல் இருப்பார்கள்!  அதேபோல அதென்ன "மௌனம் கலையவே"

எனக்கென்னவோ இந்தக் கதை உட்பட, விக்ரமாதித்தன் வேதாளத்துக்குச் சொல்லும் பதில்கள் வழவழகொழகொழா என்று தான் இருப்பதாகத் தோன்றும்.


பறக்கும் குதிரை

வேதாளம் சொல்லும் கதை 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி நடந்து செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே! இந்த பயங்கர நள்ளிரவில் நீ இவ்வளவு சிரமப்பட்டு எதையோ சாதிக்க முயல்வதைப் பார்த்தால் நீ உன் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறாயோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு தனது நிலை புரியாமல் நடந்து கொண்ட கோவிந்தன் என்ற இளைஞனின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்" என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது.

காஞ்சனபுர மன்னன் காந்திவர்மனுக்கு ஒரு புதல்வியும் ஒரு புதல்வனும் இருந்தனர். புதல்வி புஷ்பலதா மூத்தவள். அவள் வளர்ந்து விவாக வயதை அடைந்ததும் மன்னன் அவளுக்குத் திருமணம் செய்ய எண்ணினான்.  அதை அவளிடம் கூறவே புஷ்பலதாவும்  "தந்தையே! நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. யார் ஒரு பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து எனக்குக் கொடுக்கிறாரோ அவரைத்தான் நான் மணந்து கொள்வேன்" என்றாள். 
அதைக்கேட்ட மன்னன் திகைத்து  "மகளே! பறக்கும் குதிரை என்பதைக் கதைகளில் தான் படித்திருக்கிறோமேயொழிய யாரும் அதை நேரில் கண்டதில்லை.  எனவே இந்த ஆசையை விட்டு விடு" என்றான். ஆனால் புஷ்பலதாவோ பிடிவாதமாக "எனக்குப் பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து கொடுப்பவனைத்தான் நான் மணப்பேன். வேறு யாரையும் மணக்கமாட்டேன்" என்று கூறி லிட்டாள்.

தன் மகளின் பிடிவாதத்தைத் தகர்க்க முடியாதெனக் கண்ட "மன்னன் பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து தன் மகள் முன் நிறுத்துபவருக்குத் தன் மகளை மணம் செய்து வைப்பதாக நாடெங்கும் பறைசாற்றுவித்தான். இதனை அறிந்து பல அரசகுமாரர்கள் பறக்கும் குதிரை எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு அது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவர்கள் தம் முயற்சியைக் கை விட்டு விட்டார்கள். இப்படியே ஒரு வருடம் கழிந்தது.

அந்த நாட்டில் கோவிந்தன் என்ற இளைஞன் இருந்தான். அவன் நல்ல அழகன். ஆனால் தாய் தந்தையற்ற அனாதை.  அவன் அவ்வூர் பெருமாள் கோவில் அர்ச்சகர் நரசிம்மபட்டரிடம் வேலைக்கு அமர்ந்து பூமாலைகள் தொடுத்து கோவிலுக்குக் கொடுத்து கோவிலில் கிடைக்கும் பிரசாதமான உண்டக்கட்டியை வாங்கி உண்டு வாழ்ந்து வரலானான். அவன் மன்னனின் அறிவிப்பைக் கேட் டதும் “நான் பறக்கும் குதிரையைத் தேடிக் கண்டு பிடித்து கொண்டு வந்து அரசகுமாரியின் முன் நிறுத்தி அவளை ஏன் மணந்து கொள்ளக் கூடாது?" என்று எண்ணினான். எனவே அவன் கோவில் அர்ச்சகர் நரசிம்மபட்டரிடம் விஷயத்தைக் கூறி "பறக்கும் குதிரை எங்கே கிடைக்கும்?" என்று கேட்டான்.

பட்டரும் "கோவிந்தா! நீ அதிகம் படிக்கவில்லை. அதனால் அக்குதிரை பூவுலகில் இருப்பதாக நினைக்கிறாய். அது பூலோகத்தில் இல்லை. தேவலோகம், சுந்தர்வ லோகம் போன்ற பிற உலகங்களில் நீ போனால் அதைக் காண முடியும்" என்றார். அங்கு எப்படிப் போவது என்று கோவிந்தன் கேட்கவே பட்டரும்" நீ விந்திய மலைக் காட்டிற்குப் போனால் மலை உச்சியில் சில குகைகளும் தடாகங்களும் சோலைகளும் உள்ளன. இரவு வேளைகளில் கந்தர்வ கன்னிகைகள் அங்கு வந்து போகிறார்கள். அவர்களின் உதவியால் நீ கந்தர்வ லோகம் சென்றால் அங்கு பறக்கும் குதிரையைக் காணலாம்" என்றார்.

கோவிந்தனும் பட்டரிடம் தான் விந்தியமலைக்குப் போய் வருவதாகக் கூறிக் கிளம்பிச் சென்றான். பட்டர் கூறிய படி அவன் மலையின் உச்சியை அடைந்த போது ஒரு சில குகைகளையும் ஒரு தடாகத்தையும் அதன் கரையில் பெரிய மரங்களையும் செடிகொடிகளையும் கண்டான். அவன் பல கொடிகளை அறுத்து பின்னி நீண்ட கயிறாக்கி ஊஞ்சல் போலக் கட்டினான். அதில் ஆங்காங்கு வண்ணமலர்களைச் சொருகி அழகுபடுத்தினான். அதன் பின் ஒரு மரத்தின் பின் உட்கார்ந்து கொண்டு கந்தர்வக் கன்னிகைகள் வருவார்களா என்று எதிர்பார்க்கலானான்.
அன்று பௌர்ணமி. அப்போது இரவு வேளை. நிலா பால் போல் காய்ந்து கொண்ருந்தது. நள்ளிரவானதும் சில சுந்தர்வ கன்னிகைகள் வந்தார்கள். அவர்கள் தடாகத்தில் இறங்கிக் குளித்து விட்டு கரைக்கு வந்தார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி கோவிந்தன் கட்டியிரு ந்த அழகிய ஊஞ்சலைப் பார்த்தாள். அதில் உட்கார்ந்து அவள் ஊஞ்சலாடலானாள். சற்று நேரமானதும் மற்ற சுந்தர்வக் கன்னிகைகள் "மதுமதி!" நேரமாகிறது வா. நம் லோகத்திற்குப் போகலாம் " என்றார்கள். மதுமதியோ "நீங்கள் போய்க் கொண்டிருங்கள். நான் சற்று நேரம் ஊஞ்சலாடி விட்டுப் பிறகு வருகிறேன்" என்றாள். எனவே அக் கன்னிகைளும் சென்று விட்டார் கள்.

மதுமதி சற்று நேரம் ஊஞ்சலாடி விட்டுக் கீழே இறங்கிப் புறப்படலானாள் அப்போது கோவிந்தன் ஓடி வந்து அவள் முன் நின்று " நான் கட்டி வைத்த ஊஞ்சலில் இவ்வளவு நேரம் ஆடினீர்களே. அதற்கு பதில் உதவியாக எனக்கு ஏதாவது செய்யாமல் போவது நியாயமா?" என்று கேட்டான். மதுமதியும் அவனை வியப்புடன் பார்த்து, “நீ யார்? உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதைக் கொடுக்கிறேன்" என்றாள்.  கோவிந்தனும் தன்னைப் பற்றிக் கூறி ''எனக்குப் பறக்கும் குதிரை வேண்டும். அதைக் கொண்டு போய் அரசகுமாரி புஷ்பலதாவிடம் கொடுத்து விட்டு அவளை நான் மணக்கப் போகிறேன்" என்றான்.

மதுமதியும் "ஓ! பறக்கும் குதிரையா? அதை என்னால் கொடுக்க முடியாதே. உனக்கு நீ கேட்பதைக் கொடுப்பதாக வாக்களித்து விட்டேன், அதனால் உன்னை என் கந்தர்வ லோகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு பல பறக்கும் குதிரைகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கொண்டு செல்வது உன் பொறுப்பு" என்றாள். கோவிந்தன் அதற்குச் சம்மதிக்கவே மதுமதி அவனை ஒரு முத்து மாலையாக மாற்றித் தன் கழுத்தில் அணிந்து கொண்டு கந்தர்வ லோகத்திற்குச் சென்றாள்.
அங்கே போனதும் அவள் முத்து மாலையைக் கழற்றி கோவிந்தனை முன் போல மானிடனாக்கி கந்தர்வ மன்னனின் குதிரை லாயத்தைக்காட்டி "இங்கு பல பறக்கும் குதிரைகள் உள்ளன. அவற்றில் ஒன்றை நீ உன் சாமர்த்தியத்தால் பூலோகத்திற்குக் கொண்டு செல்லலாம்" என்று கூறி விட்டுச் சென்றாள். 

கோவிந்தன் அவற்றில் ஒரு குதிரை மிக அழகாக இருப்பதைப் பார்த்தான். உடனே அவன் அங்கிருந்த பூங்காவிலிருந்து மலர் களைப்பறித்து வந்து மாலைகள் கட்டி அக் குதிரைக்கு அணிவித்து அலங்காரம் செய்தான். அதை எப்படி பூலோகத்திற்கு ஓட்டிச் செல்வது என்று யோசிக்கலானான்.

அன்று கந்தர்வ மன்னனின் பிறந்த நாள். அன்று அம்மன்னன் தன் லாயத்திருந்து ஒரு நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்து அந்த ஆண்டு முழுவதும் அதன் மீது அமர்ந்து சவாரி செய்வது அவன் வழக்கம். அந்த வழக்கப்படியே அந்த ஆண்டும் குதிரையைத் தேர்ந்தெடுத்தான் அது பறக்கும் குதிரை. அதற்கு அந்த கௌரவம் கிட்டியதற்கு கந்தர்வர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள்.

அன்றிரவு கோவிந்தன் மன்னனின் லாயத்திற்குச் சென்றான். அக் குதிரையும் ''எனக்கு ஒரு ஆண்டு காலம் மன்னனின் சவாரிக் குதிரையாக இருக்க வழி செய்தாய். இதற்குக் கைமாறாக உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டது. கோவிந்தனும் தன்னைப் பற்றி விவரமாகக் கூறி, தான்
அரசகுமாரி புஷ்பலதாவை மணக்க விரும்புவதாகக் கூறினான். அது கேட்டு அக்குதிரை பலமாகச்சிரித்து "மானிடனே! நீ இப்படி ஆசைப் படுவது சரியல்ல. மாலை சுட்டிப் பிழைக்கும் நீ அரசகுமாரியை மணக்க ஏன் ஆசைப்படுகிறாய்? கந்தர்வலோகத்துக் குதிரைகள் பூவுலகிற்குப் போகக்கூடாது. ஆயினும் உனக்கு கைமாறு செய்வதாக நான் கூறி விட்டதால் உன் விருப்பபடி செய்கிறேன். என் மீது உட்கார்" என்றது. கோவிந்தனும் ஆழ்ந்து யோசித்தவாறே அந்தப் பறக்கும் குதிரை மீது ஏறி அமர அது அவனை காஞ்சனபுரம் கொண்டு போய் இளவரசி புஷ்பலதா முன் நிறுத்தியது.

கோவிந்தனும் திகைத்துப் பதுமை போல நின்ற அரசகுமாரியிடம் "அரசகுமாரியே! இதோ பற க்கும் குதிரை. இதன் மீது அமர்ந்து ஆகாயத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறந்து மகிழுங் கள். நான் போய் வருகிறேன்" எனக் கூறி வணங்கி விட்டு அவளைத் திரும்பிக் கூட பாராமல் அங்கிருந்து சென்று விட்டான்.

வேதாளம் இக்கதையைக் கூறி 'அரசகுமாரியை மணக்கக் கடும் முயற்சி செய்த கோவிந்தன் முடிவில் அவளை மணக்காமலே ஏன் போய் விட்டான்? இக் கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் பதில் கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்" என்றது.

விக்கிரமனும் "கோவிந்தன் அதிகம் படிக்காதவன். பட்டர் சொன்ன பிறகே பறக்கும் குதிரை பூலோகத்தில் கிடையாது என்றும் கந்தர்வ லோகத்தில் அல்லது தேவலோகத்திலோ இருக்கும் என்று தெரிந்து கொண்டான். சுந்தர்வ லோகக் குதிரை அவன் மிகவும் ஏழை என்பதையும் அரசகுமாரி பணக்காரி என்றும் எடுத்துக் கூறிய போது தான் அவனுக்குத் தன் நிலையும் அந்தஸ்தும் என்ன என்று தெரிந்தது. அதுவரை அவன் தன் படிப்பு பற்றியோ பணம் பற்றியோ நினைத்துப் பார்த்தது கூட இல்லை. பறக்கும் குதிரை அவனது ஆசை சரியல்ல என்று கூறியது அவனது சிந்தனையைக் கிளறி விட்டது. அதன் முடிவுதான் அவன் அரச குமாரியை மணக்காமல் செய்து விட்டது. இது அவனது சரியான முடிவே" என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்க மரத்தில் மீண்டும் ஏறிக் கொண்டது.

அம்புலிமாமா ஜூலை 2000

===========================================================================================


விக்ரமாதித்தன் அந்த முருங்கை மரத்தின் மீது ஏறி, வேதாளம் இருக்கும் உடலை எடுத்து வர முயல்வதற்குப் பின்னால் ஒரு பெரிய பழிவாங்கும் கதை மற்றும் வாக்குறுதி உள்ளது.
அந்த முன் கதை இதுதான்:
  • பழிவாங்கும் தாந்திரிகன்: விக்ரமாதித்தன் அரசவைக்கு தினமும் ஒரு முனிவர் (சாந்திசீலன்) வந்து ஒரு பழத்தைக் கொடுத்துச் செல்வார். விக்ரமாதித்தன் அதைத் தன் கருவூலத்தில் வைப்பார். ஒருநாள் தவறுதலாக ஒரு பழம் உடைந்து, உள்ளே விலைமதிப்பற்ற மாணிக்கம் இருப்பதைக்கண்டு, அத்தனை பழங்களையும் உடைத்துப் பார்த்தபோது அனைத்துப் பழங்களிலும் ரத்தினங்கள் இருந்தன.
  • சதித் திட்டம்: காரணம் கேட்டு முனிவரை அழைத்தபோது, "வேறொரு சக்திவாய்ந்த தாந்திரிகன் உன்னைக் கொன்று, அந்தப் பழத்தைக் கொண்டு உலகம் முழுவதும் ஆளக்கூடிய சக்தியைப் பெற நினைப்பதாகவும், அதனால் விக்ரமாதித்தன் மயானத்தில் இருக்கும் ஒரு உடலைக் கொண்டு வந்து தன்னுடைய யாகத்திற்கு உதவினால், அந்தத் தாந்திரிகனைப் பழிவாங்கலாம்" என்றும் முனிவர் கூறுகிறார்.
  • வாக்குறுதி: அந்தத் தாந்திரிகனைப் பழிவாங்கவும், தன் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும், விக்ரமாதித்தன் மயானத்தில் இருக்கும் மரத்தில் தொங்கும் வேதாளத்தின் உடலை எடுத்து வந்து, அந்தத் தாந்திரிகனிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளிக்கிறான்.
இந்தக் காரணத்திற்காகவே விக்ரமாதித்தன் வேதாளத்தை தன் தோளில் சுமந்து, மௌன விரதத்துடன், வழியில் அது சொல்லும் கதைகளுக்குப் பதில் சொல்லாமல் கொண்டு வர முயல்கிறான். ஆனால், விக்ரமாதித்தனின் புத்திசாலித்தனத்தை சோதிக்க வேதாளம் கேள்வி கேட்க, பதிலளிக்கும் விக்ரமாதித்தன், ஒவ்வொரு முறையும் வேதாளத்தை மரத்தின் மீதே பறக்க விடுகிறான்.
========================================================================================
வேதாளத்தின் வரலாறு 
உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதுதான் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் அழகிய உடை ஒன்றை தைத்து கொடுக்க வேண்டும் என்று. புட்பதத்தன் தான் நினைத்தது போலவே அழகிய ஆடைகளை தயாரித்து அதனை ஈசனுக்கு வழங்க கைலாயத்திற்கு சென்றான். அங்கு சென்று ஈசனை பார்த்த மகிழ்ச்சியில் வந்த வேலையை மறந்து விட்டு ஈசனை வணங்கியே நேரத்தை கழித்தி விட்டான். ஈசனிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் திரும்பிய போது இருள் சூழ்ந்துவிட்டது. பிறகுதான் அவனுக்கு ஆடையை ஈசனுக்கும், பார்வதிக்கும் தராமல் வந்துவிட்டது நியாபகம் வந்தது. இருட்டியும் விட்டதால் கைலாயத்தின் வாசலிலேயே படுக்க முடிவெடுத்தான்.
அன்று இரவு சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அது கைலாயத்தின் வாசலில் படுத்திருந்த புட்பதத்தன் காதுகளில் விழுந்துவிட்டது. மறுநாள் ஈசனிடம் சென்று தான் கொண்டுவந்த ஆடைகளை கொடுத்துவிட்டு ஆசிபெற்ற புட்பதத்தன், நேற்று இரவு தான் கைலாய வாசலில் படுத்திருந்ததையும், சிவன் கூறிய தேவ ரகசியத்தை கேட்டு விட்டதையும், அப்போதிருந்தே தன் மனம் படாதபாடு படுவதையும் கூறினான். தேவ ரகசியத்தை கேட்டு விட்டதால் கோபமுற்றார் சிவபெருமான், இருப்பினும் அவன் உண்மையை கூறியதால் அதனை எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் கூறக்கூடாது என்று அவனை எச்சரித்து அனுப்பினார்.

சிவனின் சாபம் கைலாயத்திலிருந்து திரும்பி வந்த புட்பதத்தன் பல நாட்கள் நிம்மதியின்றி தவித்து வந்தான். அவன் மனைவி பல முறை கேட்டும் காரணம் என்னவென்று சொல்லாத புட்பதத்தன் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் அந்த தேவ ரகசியத்தை தன் மனைவியிடம் கூறிவிட்டான். இது உடனே ஈசனுக்கு தெரிந்துவிட்டது. தன் பேச்சை மதிக்காத புட்பதத்தனை வேதாளமாக மாறி பூமியில் முருங்கை மரத்தில் தொங்கும்படியும், ரகசியத்தை காக்க முடியாத நீ இனி கேள்விகள் கேட்டுக்கொண்டே உன் வாழ்நாளை கழிப்பாய் என்றும், ரகசியத்தை கேட்ட தேவதத்தை வனத்தில் இரவு முழுவதும் வீணை வாசித்து மற்றவர் உறக்கத்தை கெடுத்து கொண்டே இருப்பாய் என்றும் சாபமளித்தார்.

முனிவரின் சூழ்ச்சி பல ஆண்டுகளாக வேதாளமாக புட்பதத்தன் சுடுகாட்டில் உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் முனிவன் ஒருவன் வேதாளத்தை தன் அடிமையாக்கி அதன் சக்திகள் மூலம் உலகத்தை ஆள நினைத்தான்.அதற்காக தவமிருந்த போது காளி தேவி 1000 அரசர்களின் தலையை தனக்கு காணிக்கையாக அளித்தால் உன் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார். அந்த கொடூர முனிவனும் பல அரசர்களை ஏமாற்றி காளி கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களை பலிகொடுக்க தொடங்கினான். இப்படியே 999 அரசர்களின் தலையை காளிக்கு பலிகொடுத்தான்.

விக்கிரமாதித்தன் ஆயிரமாவது பலியாக விக்கிரமதித்தனை பலி கொடுக்க நினைத்த முனிவன் விக்கிரமாதித்தனின் அரசவைக்கு சென்று காட்டுக்குள் ஒரு காளி கோவில் இருப்பதாகவும், அங்கு வேண்டினால் உங்கள் நாடு வளம்பெறும் எனவும் கூறினான். விக்கிரமாதித்தனும் முனிவனின் பேச்சை நம்பி அவனுடன் செல்ல சம்மதித்தான்.

வீணை இசை முனிவனுடன் காளி கோவிலுக்கு சென்ற விக்கிரமாதித்தன் அன்று இரவு அந்த கோவில் மண்டபத்தில் தங்க முடிவெடுத்தான். முனிவனும் பூஜை முடிந்தவுடன் விக்கிரமாதித்தனை பலியிட முடிவெடுத்தான். அப்பொழுது தூரத்திலிருந்து கேட்ட மனதை மயக்கும் வீணை இசை அவனை ஈர்த்தது. இசை வந்த திசைநோக்கி நடந்தான். அங்கே ஒரு அழகிய பெண் இருட்டில் அமர்ந்துகொண்டு வீணை வாசித்து கொண்டிருந்தாள். அவளிடம் நீ யார் ஏன் வனத்திற்குள் அமர்ந்து வீணை வாசித்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.
விக்கிரமாதித்தனின் கருணை அந்த பெண் வேறு யாருமல்ல தேவ ரகசியத்தை கேட்ட புட்பதத்தனின் மனைவி தேவதத்தை. அவள் தன் கதையை விக்கிரமதித்தனிடம் கூற அவள் மேல் இரக்கம் கொண்டான் விக்கிரமாதித்தன். தங்களுடைய சாபம் தீர என்ன செய்ய வேண்டுமென்று தேவதத்தையிடம் விரும்பினான். அதற்கு தேவதத்தை நானும் வேதாளமாக தொங்கிகொண்டிக்ருக்கும் என் கணவரும் காட்டிற்குள் இருக்கும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டால் எங்கள் சாபம் நீங்கும். ஆனால் என் கணவரை அந்த முருங்கை மரத்தில் இருந்து இறக்கி காளி கோவிலுக்கு அழைத்து வருவது இயலாத ஒன்று என்றுகூறி அழுதாள். அது எவ்வளவு பெரிய ஆபத்தாய் இருந்தாலும் நான் அதனை செய்கிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றான் விக்கிரமாதித்தன்.
வேதாளத்தின் நிபந்தனை சுடுகாட்டிற்கு சென்ற விக்கிரமாதித்தன் அங்கு தலைகீழாக தொங்கி கொண்டிருந்த வேதாளத்தை கட்டி முதுகில் போட்டுக்கொண்டான். அதுவரை அமைதியாக இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச தொடங்கியது. " நாம் கோவிலுக்கு செல்லும் வரை நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது, அதேநேரம் நான் ஒரு கதை சொல்லி அதிலிருந்து கேள்வி கேட்பேன். அதற்கு பதில் தெரிந்தும் நீ கூறவில்லை என்றால் உன் தலை வெடித்து சிதறிவிடும் " என்று கூறியது. விக்கிரமாதித்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க அவர்களின் பயணம் தொடங்கியது.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் அவனிடம் கதை சொல்ல தொடங்கியது. விக்கிரமாதித்தனும் கதை கேட்க தொடங்கினான். இறுதியாக வேதாளம் கதையிலிருந்து ஒரு கேள்வி கேட்டது. அதற்கான விடை விக்கிரமாதித்தனுக்கு தெரிந்தே இருந்தது. பதில் கூறினால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றுவிடும். பதில் கூறவில்லை என்றால் தலை வெடித்து சிதறிவிடும், என்ன செய்யலாம் என்று யோசித்த விக்கிரமாதித்தன் பதிலே கூறிவிடலாம் என்று வாய்திறந்து பதில் கூறிவிட்டான். தான் இட்ட நிபந்தனையை விக்கிரமாதித்தன் மீறிவிட்டதால் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம். இதேபோல 24 முறை கதை சொல்லி மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம்.

சாப விமோசனம் மீண்டும் வேதாளத்தை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினான் விக்கிரமாதித்தன். இம்முறையும் வேதாளம் கதை சொல்ல தொடங்கியது. ஆனால் விக்கிரமாதித்தன் வாயை திறந்து பேசவில்லை. கேள்விக்கு பதில் கூறுவது போலவே பாசாங்கு செய்துகொண்டு கோவில் வரை வந்துவிட்டான். விக்கிரமதித்தனையே கவனித்து வந்த வேதாளம் கோவில் வந்துவிட்டதை உணரவில்லை. சிவன் கூறியபடி கோவிலுக்கு புட்பதத்தனும், தேவதத்தையும் சேர்ந்து வந்தததால் அவர்களின் சாபம் நீங்கியது.

முனிவரின் மரணம் சாபம் நீங்கிய புட்பதத்தன் விக்கிரமாதித்தனுக்கு நன்றி கூறியதோடு முனிவனின் உண்மையான எண்ணத்தை பற்றியும் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன் அந்த முனிவரின் தலையை காளி தேவி முன் வெட்டி வீழ்த்தினான். அப்போது அங்கு தோன்றிய காளி தேவி " விக்கிரமாதித்தா நீ கொடுத்த பலியில் என் மனம் குளிர்ந்தது உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள் " என்று கூறினார். அதற்கு விக்கிரமாதித்தன் முனிவனால் கொல்லப்பட்ட அணைத்து அரசர்களும் உயிர்பெற வேண்டும் என்று வரம் கேட்டார். காளி தேவியும் விக்கிரமாதித்தன் கேட்ட வரத்தை தந்ததோடு அவனையும், அவன் நாட்டு மக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார்

Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/2018/unknown-story-of-vikramadithyan-and-vedhalam-022533.html

15 கருத்துகள்:

  1. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு செவ்வாய் கதையை, அதே சிறுவனின் ஆர்வத்தோடு படித்தேன்.

    விக்ரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கிச் செல்ல இதுதான் காரணமா?

    நல்ல பகிர்வு. எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... நன்றி. நான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. பறக்கும் குதிரை... ப்ளாட் எளியது என்றாலும் நல்லா எழுதியிருக்காங்க. சிறுவர்களை மனதில் வைத்து ஒரு பத்திரிகை நடத்தியிருக்காங்களே.. அது நம் தலைமுறையோடு போச்சு. இப்போ பிறந்த குழந்தை கையில் மொபைலைக் கொடுத்து வாழ்க்கையின் இனிய தருணங்களைப் பறித்துவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் எனக்கும் வருத்தம்.  அம்புலிமாமா தமிழில் இந்தப் பெயரிலும் மற்ற மொழிகளில், முக்கியமாக தெலுங்கில்  சந்தமாமா என்றும் மலையாளத்தில் அம்பிளி அம்மாவான் என்று நாகி ரெட்டியாரால் July, 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
        
      அம்புலிமாமா, கோகுலம் (கல்கி நிறுவனம்) பாலமித்ரா, ரத்னபாலா போன்ற புத்தகங்கள் இன்றும் வருகின்றனவா தெரியாது!

      நீக்கு
  3. வேதாளத்தின் வரலாறும் இன்டரெஸ்டிங். தேர்ந்தெடுத்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

    ஆமாம் இருபத்தி நாலு கதைகள்தானா? முடிவுப் பகுதியை இதுவரை படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! விக்கிரமாததித்தன், வேதாளம் கதை! மிகச் சிறிய வயதிலேயே தொடர் கதைகள் வாசிக்கத் தொடங்கி விட்டதால் அம்புலிமாமாவெல்லாம் நிஷித்தமாக இருந்தது எனக்கு. ஆனாலும், இந்த விக்கிரமாதித்தன் கதை மட்டும் அதில் படிப்பேன். தொலைகட்சியிலும் விக்ரம் அவுர் வேதாள் என்று வந்தது.

      நீக்கு
    2. இல்லை நெல்லை.  வேதாளம் கதைகளுக்கு முடிவே கிடையாது.  அல்லது குறிப்பிட்ட 24 கதைகள் விக்ரமாதித்தன் கதைகளில் இருக்குமோ என்னவோ...  என்னிடம் புத்தகம் இருக்கிறது.  தேடி எடுத்து, தேடிப்பார்க்கிறேன்!  இவர்கள் அதை தொடரும் கதையாக்கி விட்டார்கள்!

      நீக்கு
    3. நிஷித்தமாக? வாங்க பானு அக்கா... ஆமாம் தொலைக்காட்சியிலும் தொடராக வந்தது.

      நீக்கு
  4. ஸ்ரீராம் எனக்கும் இக்கதையில் பதில்கள் ஷார்ப்பா இல்லாதது போலத்தான் தோன்றும்..

    கதை fantasy கதைகள் எப்பவுமே சுவாரசியம்தான். யோசிக்கவும் வைக்கும்

    இதிலும் கேள்விகள் வந்தாலும், தகுதிக்கேற்ப என்பதுதான் முக்கியமான பாயின்ட்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  ஒருவேளை சிறு வயதில் குழந்தைகளுக்கு சிறிய நீதிகளை, நல்ல வழக்கங்களை சொல்லிக்கொடுக்கவோ என்னவோ..  ஆனாலும்...

      நீக்கு
  5. வேதாளத்தின் மூலமும் தெரிந்தது. இதுவரை அறியாதது, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் 'உடன் இணைப்பா'க அந்த சிறு விவரம் மட்டும் வைத்து அதனுடன் வேறு பகிர்ந்திருந்தேன்.  தேடிக்கொண்டிருக்கையில் இது கிடைத்ததும் அதையே பெரிய, முக்கிய துணையாக்கி விட்டேன்!

      நீக்கு
  6. வேதாளம் கூறிய கடைசி கதையில் ஒரு ராஜாவும் அவன் மகனும் காட்டிற்குச் செல்வார்கள். அதில் காட்டுப் பாதையில் இரண்டு பெண்களின் காலடிகள் தென்படும். ஒரு காலடி சிறியதாகவும், மற்றொன்று பெரிதாகவும் இருக்கும். பெரிய காலடி உள்ள பெண்ணை ராஜாவும், சிறிய காலடி கொண்ட பெண்ணை இளவரசனும் மணந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, அந்த காலடிகளை தொடர்ந்து செல்வார்கள். அவை முடியும் இடத்தில் ஒரு குடிசை இருக்கும், அதில் ஒரு தாயும், மகளும் வசிப்பார்கள், ஆனால் தாயின் பாதம் சிரியதாகவும், மகளின் பாதம் பெரியதாகவும் இருக்கும். தங்கள் உடன்படிக்கையின்படி மகளை தந்தையும், தாயை மகனும் மணந்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் என்ன உறவு? என்று வேதாளம் கேள்வி கேட்க, விக்கிரமாதித்தனுக்கு பதில் தெரியாது. சரி ஏதோ திரைப்படம் நினைவுக்கு வறுகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *நினைவுக்கு வருகிறதா?

      நீக்கு
    2. அட..  நினைவு வைத்திருக்கிறீர்கள்.  ஆனால் திரைப்படம் ஒன்றும் எனக்கு நினைவுக்கு வரவில்லையே....

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!