20.4.26

"திங்க"க்கிழமை  : கடலைப்பருப்பு, கோதுமைரவை இலை அடை -- ராதா சுரேஷ் ரெஸிப்பி,

 

 கடலைப்பருப்பு, கோதுமை ரவை இலை அடை

ராதா சுரேஷ்

கடலைப் பருப்பை, வடைக்கு ஊற வைப்பது போன்று 15-30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உடைத்த கோதுமை ரவையையும் (Lapsi Rava / Broken Wheat Rava / Dalia) ஊற வைக்க வேண்டும். இவற்றை ஊறவைக்கும் போதே அவற்றோடு ஜீரகப் பொடி, மிளகுப் பொடி, தேவையான உப்பு எல்லாம் போட்டு ஊறவைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவற்றின் சுவை கோதுமை ரவையிலும் பருப்பிலும் நன்றாக ஏறிவிடும்.

ஊற வைக்கும் போது அளவாகத் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். காரணம், ஊறிய பிறகு கீழே சொல்பவற்றைக் கலக்கும் போது அடை மாவு பதத்தில் இருக்க வேண்டும்..

அரை மணி நேரம் ஊறிய பின், இதோடு 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன்தான். அதற்கு மேல் போட்டால் கலவை 'கொழ கொழ' என்று ஆகிவிடும்.

இதோடு, பச்சைக் கோஸ், உருளைக் கிழங்கு இவற்றைத் துருவிச் சேர்க்கவும். காரத்திற்கேற்ப பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

ஏற்கனவே உப்பு போட்டிருக்கிறோம். எனவே அதைச் சரிபார்த்துக் கொண்டு தேவையான உப்பைக் கலந்து கொள்ளவும்.

இதோடு ஒரே ஒரு ஸ்பூன் தயிர் கலந்து கொண்டால், சோடா உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.


இவை எல்லாவற்றையும் கலந்த பின் 10 நிமிடம் வைத்துவிட்டு, வாழை இலையை, தேவையான அளவில் கட் செய்து கொண்டு, அதில் இக் கலவையை கொஞ்சம் ஊற்றி (கலவை அடை மாவு பதத்தில் தான் இருக்க வேண்டும்) இலையால் மூடி வைக்க வேண்டும். இப்படி ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி ஆவியில் வேக வைக்கலாம்.

இதில் சேர்க்கப்படும் சுவை நம் சுவையைப் பொறுத்துதான்.  மிளகு ஜீரகத்திற்குப் பதிலாக, சிவப்புமிளகாய்ப் பொடி, ஸ்வீட் கார்ன் சேத்துக் கொள்ளலாம், உங்கள் விருப்பம். ஆனால் செய்யும் முறை இதேதான்.

10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்துவிட்டு, காரச் சட்னி அல்லது விருப்பம் இருந்தால் இனிப்புச் சட்னியுடன் சாப்பிடலாம். வேர்க்கடலைச் சட்னி, புதினா சட்னி இவை எல்லாம் இதற்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

பொதுவாகக் கடலைப் பருப்பு ஊற வைத்துவிட்டு ரொம்ப யோசிப்போம், இதைச் சுண்டலாகச் செய்யலாமா? வேறு என்ன செய்யலாம் என்று.

இப்படிச் செய்துவிட்டால் புரதச் சத்தோடு ஆவியில் வேக வைத்த உணவாக சாப்பிட எளிதாக இருக்கும். வயதானதும் பல் பிரச்சனை வரும் பலருக்கும், பருப்பு டேஸ்ட் பிடிக்கும் ஆனால் சாப்பிட மென்மையாக இருக்க வேண்டும் என்பதால் வயதானவர்களுக்கும் சாப்பிட எளிதாக இருக்கும்.

எனவே, எளிதான காலை உணவு.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனுபவம் பொதுமை...



ஹலோ... ஹலோ...

--------------------------------------

ஹலோ..

ஹலோ.. கீதா ரெங்கன்.. கேட்குதா.. நெட்ஒர்க் சரியில்லை போல ...

"கேக்குது சொல்லுங்க ஸ்ரீராம்..

"உங்க மருமகள் எப்படி?" ன்னு இந்தக் காலத்தில் யாராவது கேட்டால்  "ஓ.. அவ இந்த வீட்டோட வந்த உடனேயே ஜெல் ஆயிட்டா" என்கிறார்கள்!  எனக்குத் தெரிஞ்சதெல்லாம் டைஜின்ஜெல், பெயின் (ஆயின்மென்ட்) ஜெல் லாம்தான் தெரியும்.. கல்யாணமாகிப் போனதும் உங்க அனுபவம் என்ன கீதா..?"

"எழுதியே அனுப்பிடறேனே..."

"ஓகே கீதா..."

*********************

முக்கடல் சந்திக்கும் பகுதியிலிருந்து வங்காளவிரிகுடா கரையோரம்

திருமணமான புதிது. நாகர்கோவில், கேரளம், திருநெல்வேலி வாசத்துடன். புகுந்த வீடு, வாங்கல், வடுவூர் கலவை. இருந்தது சென்னையில். வீட்டில் விருந்துகள்! விருந்தினருக்குச் சாப்பாடு பரிமாறுகையில், "பச்சடி எடுத்துக் கொண்டு வா" என்று என்னிடம் சொல்லப்பட்டது. 

தேடினேன் தேடினேன்.... அடுக்களையின் எல்லை வரை தேடினேன்! ம்ஹூம் என் கண்ணில் படவே இல்லை.

'நாம வெள்ளரிக்கா துருவிக் கொடுத்தோம், காய் கட் பண்ணிக் கொடுத்தோம். மாங்காய் நறுக்கவே இல்லையே...வேற எந்த காயில் பச்சடி செய்வாங்க? பைனாப்பிள் கூட நறுக்கலையே! நம்ம ஊர் பைனாப்பிள் பச்சடி எல்லாம் இவங்களுக்குத் தெரிய சான்ஸே இல்ல' 

ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன்......  பார்த்துக் கொண்டே இருக்கிறேன்... டிராயருக்குள்ள கூட தேடிட்டேன்!

"என்ன இன்னும் பச்சடி வரலை" என்று அங்கு ஒரே பரபரப்பு.  என்னடா இது கீதாவுக்கு வந்த சோதனை!

அப்ப என்ன கையில் மொபைலா? ஜெமினியா? Chat Gpt யா? சென்னை வழக்கில் பச்சடி என்றால் என்ன? சொல் ஜெமினி, என்று கேட்க?

"என்ன நீ இன்னும் பச்சடி கொண்டு வரலை? என்ன பண்ணிண்டுருக்க இங்க?" கேட்டுக் கொண்டே மாமியார் உள்ளே வந்தார், "அம்மா பச்சடி எங்க இருக்கு?"

"பச்சடினா என்னன்னு தெரியாதா உனக்கு?"  ஒரு சின்ன நக்கல் தொனி.

"இதோ இருக்கு பாரு" என்று காட்டி, "கொண்டு போ"

"ஓ! இது நம்மாத்துல வெள்ளரிக்காய் கிச்சடின்னு (ச்)சொல்(லு)வோமாக்கும்" அப்போதெல்லாம் என் தமிழில் கொஞ்சம் மலையாள/திருநெல்வேலி வாசம் அதிகமாகவே தெரியும். 

"நம்மாத்துலயா? உங்காத்துலன்னு (ஸொ)சொல்லு" என்றார் ஒரு மாமா. மைன்ட் வாய்ஸ், என்ன இது பிரிவினை? உங்க வீடு எங்க வீடுன்னு?

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். கொஞ்ச நேரம் கேரளத்து உச்சரிப்பு, தமிழ் நாட்டு உச்சரிப்பு என்று சம்பாஷணைகள் தொடர்ந்தன.

"இங்க கிச்சடினா ரவை கிச்சடின்னு, காயெல்லாம் போட்டு செய்யறதைச் சொல்வோம், உங்க ஊர்ல அதுக்கு என்ன சொல்வேள்?"

"நம்ப ஊர்ல.... (ஓ நம்மாத்துல, நம்ம ஊர்ல சொல்லக் கூடாதோ மாற்றிக்கொண்டேன்.) இல்லை, எங்க ஊர்ல இது வெஜிடபிள் உப்புமான்னு சொல்லுவோமாக்கும். கிச்சடினா, அரிசி பருப்பு, காய் எல்லாம் போட்டுச் செய்யறதில்லையோ? எங்க அத்தை நார்த்ல இருந்திருக்காங்க, செஞ்சு தந்ததுண்டு."

கிச்சடி பச்சடி மனதில் பதிந்துவிட்டது. உங்க எங்க... இது பிடிபட ரொம்ப நாளாகின. ஆனாலும் நம்ம வீட்டில் என்று சொல்வது மட்டும் விட முடியவில்லை.  (அப்புறம் அம்மாவும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்!!!!!) 

வெள்ளரிக்காய்ப் பச்சடி என்று சொல்லியிருந்தாலாவது, கொஞ்சம் யூகித்திருக்கலாம். அப்பவும் கூட சந்தேகம் வந்திருக்கும் "வெள்ளரிக்காய்ல பச்சடியா?" என்று வெல்லம் இருக்கா என்று தேடியிருப்பேன். கிச்சடினா உப்பு, பச்சடினா தித்திப்புனுதானே நம்ம ஊர்ல!  

ஒரு நாள்..... "பூஷணி வாங்கிண்டு வா."

"கடை?"

"இந்தண்டை போய் இடதுபக்கம் திரும்பினா கடை இருக்கும். இல்லைனா அந்தண்டை தெருக்கோடில கடைல வாங்கிக்கோ"  

ஏற்கனவே தெரிந்த சொற்கள்தானே. ஆனால் நம்ம ஊர்ப்பக்கம் வழக்கத்தில் இல்லாதவை என்றாலும் மூளையில் இருக்கும் அகராதி கொடுத்துவிட்டது. 

கேட்டைத் தாண்டி வெளியில் என்ன இருக்கு என்பதும் தெரியாது. அது பிரச்சனை இல்லை. மொட்டையாகப் பூஷணின்னா?

"அம்மா, மஞ்ச பூஷணியா? வெள்ளைப் பூஷணியா?"

"இதுலயும் குழப்பமா? திருஷ்டி பூஷணி தெரியுமா?"

"திருஷ்டிப் பூஷணியா? பூஷணிக்காய்க்குத் திருஷ்டிப் படுமா?"

நம் வீட்டில் பூஷணி எல்லாம் திருஷ்டி கழித்துப் பார்த்ததில்லை. ஊரிலும். இப்போது வந்திருக்கலாம். ஆனால் அப்போது என் அறிவிற்கு எட்டியவரை இல்லை.

பேசாமல் தானே ஒரு கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

"அம்மா ஒரு நிமிஷம், நம்ம ஊர்ல, மஞ்சள் பூஷணி, வெள்ளைப் பூஷணின்னு சொல்லுவோம். உங்களுக்கு வெள்ளை வேண்டுமா மஞ்சள் வேணுமான்னு சொன்னீங்கனா, நான் வாங்கிட்டு வந்துருவேன். இல்லைனா நானும் உங்க கூட வரேன்"

"இதுக்கும் உங்க ஊர்ல வேற பெயரா?"

"மஞ்சப் பூஷணி இல்லைனா மத்தன். வெள்ளைப் பூஷணிக்கு, தடியங்காய், இளவன், கும்பளங்களாய்னு சொல்லிப் பழக்கம்"

"நீ சொல்ற மஞ்சள் பூஷணிய நாங்க இங்க பறங்கிக்காய்ம்போம். வெள்ளைப் பூஷணிதான் சொன்னேன். ஒரு துண்டு வாங்கிக்கோ."

அடுத்த குழப்பம். 'வெள்ளைப் பூஷணி துண்டுனா சின்னதா இருக்குமே எப்படி அது போதும் இத்தனை பேருக்கு? துடைக்கற துண்டு வாங்கச் சொல்றாங்களா?'

நம்ம வீட்டில் மஞ்சள் பூஷணியாகட்டும், வெள்ளைப் பூஷணியாகட்டும் எதையும் வெட்டி வாங்கியதில்லை. எல்லாமே முழுதாகத்தான் வாங்கி வந்து பழக்கம். சந்தைக்குச் சென்று வாங்கியதால் அப்படி நறுக்கி வைத்துப் பார்த்ததும் இல்லை அப்போதெல்லாம்.

காய் நறுக்கும் போது, "சின்ன துண்டமா போடு" இல்லைனா "தானுக்குப் பெரிய துண்டமா போடு!" போடத் தெரியலைனா "தண்டம்". இது நம்ம வூடு!

"துண்டுனா தெரியாதா? தமிழ்லதானே சொல்றேன்." மற்றொரு அண்ணியிடம், "இவளுக்கு நான் எது பேசினாலும் புரியல. நீ சொல்லு அவகிட்ட".

"பத்தைனா தெரியும்லியா ?"

"தேங்காய்ப் பத்தை?"

"அதே மாதிரி"

"ஓ கீத்து! எனக்கும் தமிழ் நல்லாவே தெரியும். ஆனா, வார்த்தைகள் ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு அர்த்தம். சரி, துண்டு எத்தற எண்ணம் வாங்கணும்?" டக்கென்று வந்துவிட்டது அப்போதைய என் மொழி.

"என்னது? எத்தற? எண்ணம்கறா இவ. உதை வாங்கணும்னு சொல்றா மாதிரி இருக்கு"

"ஓ! ஸாரி. பேச்சு வழக்குல டக்குனு வந்துருது. எவ்வளவு வாங்கணும்?" கான்ஷியஸாக, "எத்தனை துண்டு (துண்டம் என்பதையும் தவிர்த்தேன்) வாங்கணும்"

"1/2 கிலோ அளவு கட் பண்ணி வைச்சிருப்பான். துண்டு இல்லைனா, 1/2 கிலோ கட் பண்ணி வாங்கிக்கோ. புளிப்புக் கூட்டுக்குத்தான். போறும். கொண்டைக்கடலையும் போடறதுனால..." 

அப்போதும் எனக்குச் சந்தேகம் 1/2 கிலோ எப்படிப் போதும்? நம்ம வீட்டுல அண்டா குண்டான்னு பழக்கம்!

இப்படியாக, பூஷணி, பரங்கி, இந்தக் கிச்சடி பச்சடி எல்லாம் பதிய கொஞ்சம் நாளாச்சு.

அது போல சமையல் வகைகள்...  புளிக்காய்ச்சல் போன்ற ஒன்று கடுகுப் பச்சடி. ஆண்களுக்கு மட்டும் போடுவாங்க. எங்களுக்கு ம்ஹூம். எனக்கு அதைப் பற்றி அறிந்தே ஆக வேண்டும்!

"ஹையோ கடுகை தித்திப்பா செய்வாங்களா? எப்படி இருக்கும்" என்று அண்ணியிடம் கேட்டேன். அவங்களுக்கும் இது புதுசாம். ஒரு நாள் அம்மா கிளறிக் கொண்டிருந்த போது வாசனை வரவும், கல்லுரலில்  இட்லிக்கு அரைத்துக் கொண்டிருந்த நான் டக்கென்று அடுக்களைக்குள் நுழைந்துவிட்டேன்.  

"கடுகுப் பச்சடின்னு சொன்னீங்களே.  அது இதுவா?"

ஒரு சிரிப்பு! அச்சிரிப்பு அவருடைய ட்ரேட்மார்க்! கீதாக்கா சொல்லுவாரே "இஃகி இஃகி இஃகி" அந்த பாணியில் சிரிப்பார்!  

'தெய்வீகச் சிரிப்பைய்யா' நாகேஷ் என் மனதிற்குள் வசனம் பேசினார்!  நான் 'சிரிப்பம்மா' என்று மாற்றிக்கொண்டேன்! மனதுக்குள்தான்!

"எப்படிச் செய்யணும்?"

அதே சிரிப்பு.

'இதற்கும் சிரிப்புதானா'  நாகேஷ் மீண்டும் விசிட்!

ஆனால் பின்னர் எப்படியோ அந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டு நம்ம எபியில் அந்தக் குறிப்புகளும் வந்திருக்கின்றன என்பது வேறு விஷயம்.

அந்தக் குறிப்புகளை எல்லாம் எப்படிக் கற்றுக் கொண்டேன்? நடிகை சரோஜா தேவி நிறைய ரகசியம் சொல்லியிருக்கிறார் தெரியுமோ!!! அப்படி "ரகசியம் ரகசியம் பரம ரகசியம்" என்று சரோஜா தேவி கண்களை உருட்டி அபிநயத்துடன் ஆடுவாரே! அப்படி என்னை நினைச்சுக்கோங்க!!!! பாவம் நீங்க!  பயந்து கருத்து போடாம ஓடிடாதீங்க!

ரகசியம் பின்னர்!

மொத்தத்தில் புகுந்த வீட்டில் சமாளிக்கத் தனியாக ஒரு அகராதி போட வேண்டியதானது!!

93 கருத்துகள்:

  1. ராதா சுரேஷ் அவங்களோட செய்முறை நல்லாருக்கு.

    நான் இதே போல வேறொரு வடிவத்தில் எபி ல முன்ன ஆனா காஞ்சிபுரம் இட்லி செய்வது போலச் செய்யலாம்னு போட்டிருந்த நினைவு.

    இதுல அவங்க முழுகா போட்டிருக்காங்க, நான் அரைத்துச் செய்வதுண்டு.

    நேற்று கூட இப்படியானதின் வேறொரு வெர்ஷன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   நீங்களும் செய்திருப்பது சிறப்பு.

      வரவர மக்கள் 'திங்க'வுக்கு அனுப்புவது குறைந்து விட்டது.  மேலும் JKC இதுவரை செய்யாத பதார்த்தம் உண்டா என்றும் கேட்கிறார்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் என் "சாவிப் பலகை!!!" ரொம்ப படுத்துது முழுசா என்று வர வேண்டியது முழுகான்னு..!!!!

      புதுசு அனுப்பலாம் ஸ்ரீராம். பாருங்க ஜெ கே அண்ணா பிடிக்கலைன்னு சொல்லிடுவாரோ!!! ஹாஹாஹாஹா போட்டா, அந்தச் சின்னக் குழந்தைக்கு ஏத்தாப்ல இருக்கணுமே!!! அப்படி ஒன்னு போட்டிடுவோம்!

      கீதா

      நீக்கு
    3. ஆனாலும் மனம் என்னவோ அதைச் சரியாகப் படித்து விட்டது!  ஏதாவது ஒரு சமையல் பொருளை மாற்றியோ, கூடவோ சேர்த்தால் அது புதுப் பண்டமாகி விடும்..  வேறு வழி?!!

      நீக்கு
  2. செய்முறையில் ஒரே ஒரு டவுட். ஸ்ரீராம் நீங்க முடிஞ்சா கேட்டுச் சொல்லுங்க....

    வடைக்கு ஊற வைப்பது போல....அரை மணி நேரம்..ஒகே...ஆனால் வடைக்கு அரைத்து பொரித்து என்பதால் க ப வெந்துடும்.

    இங்க அரை மணி நேரம் ப்ளஸ் 10 நிமிஷம் கலந்ததுக்கு அப்புறம்னு வைச்சுக்கிட்டாலும் கோதுமை ரவையும், பருப்பும் அப்படியே ஆவியில் எனும் போது வெந்துவிடுமா? கோதுமை ரவை கூட வெந்துவிடும் சன்னமாக இருந்தால்...ஆனா பருப்பு? ஒரு டவுட்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்கிறேன் கீதா.. பதில் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது!

      நீக்கு
    2. ஓகே ஸ்ரீராம் நன்றி கேட்டுச் சொன்னதுக்கு!

      கீதா

      நீக்கு
  3. ஹலோ ஹலோ படங்கள் சூப்பர், ஸ்ரீராம். இடப்பக்கம் உள்ளவர் வலப்பக்கம் உள்ள பெண் ஆண் வடிவில் போல இருக்கே!!!!!!!!!!!!!!!!!!!!!!11ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. அப்படியா தெரிகிறது?!

      நீக்கு
    2. யெஸ்!!!! உங்க முகம் தான் ஆனா பாருங்க நெத்தில கோபி எல்லாம் வைச்சு விட்டிருக்கு!!! சாட் ஜிபிடிக்கு உங்களை இப்படி அழகுப்படுத்திப் பார்க்க ஆசை பாருங்க!!!!

      கீதா

      நீக்கு
    3. உங்க ரெண்டு பெர் படத்தையும் கொடுத்திருப்பார்.

      நீக்கு
    4. அப்படித்தான் செய்திருக்கிறார்!!! கீதாக்கா...அதான் சில சமயம் இப்படி படுத்தி எடுக்கும். ரொம்ப இன்புட் கொடுத்துக் கெஞ்சணும்.

      கீதா

      நீக்கு
  4. இலை அடை செய்முறை சூப்பர். வெறும்ன சாப்பிடலாம் என்றாலும், எனக்கு அடைக்குத் தொட்டுக்கொள்வதுபோல, ப.மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வழுமூன அரைத்த சட்னி தொட்டுக்க நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... பச்சை மிளகாய் சட்னி சாப்பிடுவீங்களா? காரம் சாப்பிட மாட்டீங்கன்னு நினைச்சேன்!

      நீக்கு
    2. நான் ரொம்ப காரம் சாப்பிடுவேன். அதுக்கு ஏத்த மாதிரி கோபம் வரும்.

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா...  ஹையோ..  பயமா இருக்கே..!

      நீக்கு
    4. நெல்லை, ஹாஹாஹா வழுமூன நெல்லைன்னு கரெக்ட்டா காமிச்சிடுச்சு!!!!! எங்க பாட்டி வெழுமூனன்னு சொல்வாங்க.

      நான் கூட இங்க சில திங்க பதிவுகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  5. மனைவி என்னிடம் வெண்டைக்காய் பச்சிடி பண்ணியிருக்கேன் என்றதும், நம்ம வீட்டில் கிச்சடின்னுதானே சொல்லுவா, இவ என்ன பச்சடிங்கறான்னு குழம்பியிருக்கேன்.

    சென்ற வருடம் குக் வித் கோமாளில மலையாள தேசத்துல கிச்சடின்றுதான் சொல்வாங்க என்பதைக் கேட்டபின்தான் சந்தேகம் தெளிந்தமு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சடி குழப்பம் புதுசு எனக்கு.  ஆனால் நம்மூரில் பச்சடி என்றாலே சாதா பச்சடிதான்.  இனிப்பாயிருந்தால் ஸ்வீட் பச்சடி என்று குறிப்பிடுவோம் இல்லையா?

      நீக்கு
    2. எங்க வீட்டில் எல்லாமே கிச்சடி. காய்கறி போட்டு உப்புமா பண்ணி அதை கிச்சடின்னு சொல்ற வழக்கமும் இல்லை. பச்சடி என்றால் மாங்காய் இனிப்புப் பச்சடிதான்.

      நீக்கு
    3. முதல் விஷயம் ஓகே. இரண்டாவது விஷயம் பச்சடி என்றால் தக்காளி,வெள்ளரி பச்சடி எல்லாம். மாங்காய் இனிப்பு பச்சடி போன்றவைகளை ஸ்வீட் பச்சடி என்றுதான் சொல்வோம்.

      நீக்கு
    4. நன்றி நெல்லை...

      நீங்க அடுக்களைக்குப் போய் தேடலையா அப்ப!! பரவால்ல வெண்டைக்காய்ன்னு சொன்னதால டக்குனு ஓரளவு யூகிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

      இன்னும் சிலவற்றிற்குக் குழம்பினீங்களா?

      உங்க அம்மா சைட் திருவனந்தபுரம் தொடர்பு அவங்க வீட்டு சீனியர்கள் உண்டுன்னு நீங்க இங்கு எப்பவோ சொல்லி வாசித்த நினைவு.

      இந்தப் பச்சடி வேறொரு சமயத்தில் வேறொரு குழப்பத்தை உண்டாக்கியது சொல்கிறேன் பின்னர்.

      கீதா

      நீக்கு
    5. எங்க வீட்டில் எல்லாமே கிச்சடி. காய்கறி போட்டு உப்புமா பண்ணி அதை கிச்சடின்னு சொல்ற வழக்கமும் இல்லை. பச்சடி என்றால் மாங்காய் இனிப்புப் பச்சடிதான்.//

      அதேதான் நெல்லை, என் பி வீட்டிலும். டிட்டோ!

      கீதா

      நீக்கு
  6. கீதா ரங்கன் அனுபவம் நன்று. எங்கள் வீட்டை ரிலேட் செய்ய முடிந்ததால் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் கவனிக்கவும்.

      நீக்கு
    2. நன்றி நெல்லை....ரிலேட் செய்ய முடியும்...என்ன உங்களுக்கு அடுக்களைக்குப் போக வேண்டியதில்லையே!!! ஹாஹாஹா....நமக்கு அங்குதானே!!

      இன்னும் சில வாக்குகள் கேட்டு முதலில் குழம்பியிருப்பீங்கன்னு நினைக்கிறேன், நெல்லை.

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் கவனித்துவிட்டேன்!!

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும்
    அக்ஷய திருதியை
    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி,  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ....  ஆ...  வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க...  வாங்க கமலா அக்கா...   வணக்கம்.    லீவ் முடிஞ்சுதா?  நன்றாக என்ஜாய் செய்தீர்களா?  ஓரு மெமோ கொடுக்கலாம்னு நினைச்சோம்!  நல்லவேளை, வந்துட்டீங்க!

      நீக்கு
    2. ஆமாம்..! நல்லபடியாக ஊர் சுற்றி விட்டு வந்தாச்சு. இனி என் அறுவை கருத்துக்களும், எப்போது போலவும், தொடரும் அபாயமும் தொடரும்.:))) என்னை எதிர்பார்த்து காத்திருந்த உங்கள் அனைவரின் அன்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள். என்னாலும் பதிவுலகில் உங்கள் அனைவரையும் சந்திக்காமல் இத்தனை நாட்கள் இருக்கிறேனே என்ற தவிப்பு மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. அதனால் இன்று நானும் ஓடி வந்து விட்டேன். நன்றி.

      நீக்கு
    3. அப்படி இருந்தால் முன்னாலேயே  அவ்வப்போதாவது வந்திருக்கக் கூடாதோ..   மொபைலில்தானே எப்போதும் உங்கள் ராஜ்ஜியம்!

      நீக்கு
    4. வந்ததே தமிழ் வருடப்பிறப்பன்றுதான். உடனே இத்தனை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்ல வேண்டியவர்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள். வீட்டின் பிற வேலைகள். (ஒரு வாரத்திற்கும் மேலாக பூட்டியிருந்த வீட்டை சுத்தப்படுத்துதல்.) அதுதான் கைகளை கட்டி கைப்பேசியை எடுக்கக்கூட அனுமதிக்கவில்லை. கைப்பேசி வேறு, நிறைய புகைப்படங்கள் காரணமாக தகறாறு செய்து சம்பல் விடுத்த வண்ணம் இருந்தது. மன்னிக்கவும்.

      நீக்கு
    5. *சோம்பல் என திருத்திப் படிக்கவும். so, அதைக்குற்றம் சொன்னால் அதற்கும் கோபம் வருகிறது. "சோ" வை காட்ட மறுக்கிறது. நன்றி.

      நீக்கு
    6. வாங்க வாங்க கமலாக்கா....

      //அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.//

      பார்த்து நாளாச்சே!!!!

      நெல்லை என்ன உங்களைக் கலாய்க்காம விட்டுவிட்டார்!! அதை எதிர்ப்பார்த்தேன்!!

      கீதா

      நீக்கு
  9. இலை அடை என்றதும் இனிப்பு பலகாரம் என்று ஆசையாக வந்தேன். இது எப்படி இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. உங்கள் ஏமாற்றத்துக்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அனைவரும் நலமா? நாங்கள் குடும்பத்துடன் சுற்றுப்பயணங்கள் முடிந்து வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனால், நேற்றும் முமுவதும் வெளியில் சுற்றியாச்சு. (இது இன்னமும் தொடரும் என்னவோ தெரியவில்லை.) வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல்நல பிரச்சனை. பேத்திக்கு காது, வலி. டாக்டர், மருந்து எனவும், மகளுக்கு தொடரும் பல் பிரச்சனையால் ஒரு வாரமாக பயங்கரமான பல் வலி. சனியன்று பல் டாக்டரிடம் விஜயம். நாளையும் காலையில் பல் டாக்டரிடம் செல்ல வேண்டும். அவர்" சுலபமாக பல்லை எடுத்து உங்களிடம் பத்திரமாக தந்து விடுகிறேன்" என்று ஜோக் அடித்திருக்கிறார். எனக்கு உடல்வலி, கால்வலி மருந்தில்லாமல் வேலைகளும், இப்படியாக ஒரு வாரமும் ந(க)டந்து செல்கிறது. இயல்பு நிலைக்காக பிரார்த்திக்கிறேன். நடுநடுவில் பதிவுகளை படித்தும் வருகிறேன். அனைவரும் மிக, மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அனைவருக்கும் என் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரின் குறைகளும், உடல் நலமும் சீராக பிரார்த்தனைகள் கமலா அக்கா.  

      நீக்கு
    2. நாங்கலாம் நலம். நீங்க எல்லாரும் உடம்பை கவனிச்சுக்கோங்க அக்கா. அது ரொம்ப முக்கியம் இப்ப இங்கும் வெயில் வழக்கமான கோடைதான் என்றாலும் மழை அவ்வப்போது பெய்யும் அது இந்த முறை காணலை.

      மழையும் கோடை காலத்தைக் கண்டு பம்மிடுச்சோ!!!! இந்த வெயில்ல பெஞ்சா நாமும் சுடாகிடுவோம்னு!!!!

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவு நன்றாக உள்ளது. இலை அடை செய்ததில்லை. ஆனால் எப்போதும் போல் அடை மாவை வைத்து செய்யாமல், கோதுமை ரவையயும் சேர்த்தது சிறப்பு. ஆனாலும், எனக்கும் சகோதரி கீதா ரெங்கனைப்போல கடலைப்பருப்பு வேகுமா என்ற சந்தேகம் வருகிறது. (ஏனெனில் பல் பிரச்சனை காரணமாக எனக்கும் வெந்த சாதத்தையே கடிப்பது சிரமமாக உள்ளது.) ஆனாலும், இன்றைய வித்தியாசமான சமையல் குறிப்புக்கு சகோதரி ராதா சுரேஷ் அவர்களுக்கு என் அன்பான நன்றி. ஒருமுறை இவ்வாறு செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள் கமலா அக்கா...  உங்கள் சந்தேகத்துக்கு ராதா பதில் சொல்லி இருப்பதை பார்த்திருப்பீர்கள்.  கீதா கேட்டிருப்பதற்கு.

      நீக்கு
    2. அக்கா இது நல்லாருக்கும் தைரியமா செஞ்சு பார்க்கலாம். நான் கொஞ்சம் அரைத்துச் செய்வேன் பருப்பை...

      கீதா

      நீக்கு
  12. //ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன்...... பார்த்துக் கொண்டே இருக்கிறேன்... டிராயருக்குள்ள கூட தேடிட்டேன்!// ஹாஹாஹா! பச்சடியை டிராயரில் தேடினீர்களா? திருச்சியில் எங்கள் நண்பர்கள் வீட்டுக்கு பம்பாயில் பிறந்து,வளர்ந்த பெண் மருமகளாக வந்தார். அவளிடம் மாமியார், "பத்தை ஒழிச்சு மித்ததில்(முற்றத்தில்) போடு" என்றதும், அந்தப் பெண் ஒழித்த பத்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு "மித்தம் எங்கே? மித்தம் எங்கே?" என்று வீடு முழுவதும் தேட, முதலில் திகைத்த வீடு பின்னர் சிரித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா பானுக்கா நீங்க சிரித்த அந்த வாக்கின் அந்த ரகசியத்தை இப்ப இங்கு சொல்லவில்லை நான்!! "----------------" added to liven it up!!!!

      கீதா

      நீக்கு
    2. மித்தத்தை முத்தம்னு நினைச்சுட்டாரோ? ஆனால் நாங்கல்லாம், (மதுரைக்காரங்க முத்தம்) என்று தான் சொல்லுவோம். அது போல் மாங்காய்ப் பச்சடிதான் சொல்லுவோம். மாங்காய்ப் பச்சடின்னாலே அது இனிப்புப் பச்சடிதான். வெஜிடபுள் உப்புமா தான் அப்போல்லாம் அம்மா பண்ணுவா. இந்தக் கிச்சடி என்னும் வார்த்தையே ராஜஸ்தான் வந்தப்புறமாத் தான் பழக்கம்.

      நீக்கு
    3. கீதாக்கா சில வீடுகளில் முற்றத்தை / முத்தம் என்பதை மித்தம்னு சொல்றாங்க. ஆமா மாங்காய்ப் பச்சடினா இனிப்புதான் கிச்சடி எல்லாம் நார்த்ல என் அத்தை இருந்ததால் தெரிந்தவை இல்லைனா வீட்டில் வெஜிடபிள் உப்புமா என்றுதான்.

      கீதா

      நீக்கு
  13. படிப்பதற்கு முன் வலப்பக்க ஓவியத்தை பார்த்து விட்டு கீதா ரங்கன் போல் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். இடப்பக்க ஓவியம் என்ன அவருக்கே ஆண் வேடம் போட்டு விட்டிருக்கிறார்கள்? என்று யோசிக்க வைத்தது. உடன்பிறவா சகோதரர் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி...  கொடுத்து மாற்றியதென்னவோ என் படம்தான்!

      நீக்கு
    2. ஆஹா!!! பானுக்கா உங்கள் கருத்து, warmed the cockles of my heart!!!!!

      கீதா

      நீக்கு
    3. //உடன்பிறவா சகோதரர் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறாரோ?// yessoo yessu.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    சகோதரி கீதா ரெங்கன் எழுதிய புகுந்த வீட்டு அனுபவங்கள் அருமையாக இருக்கிறது. தொடர்பான ஓவியங்கள் அருமை. அவர் அனுபவம் எனக்கும் அப்படியே டிட்டோ. "பத்தை" என்பதை நானும் சென்னை வந்துதான் தெரிந்து கொண்டேன்." பூசணி கீற்று"என்றுதான் கடைகளில் வாங்கும் போது பிறந்த வீட்டில் சொல்வோம். இங்கு வந்தவுடன் "கீற்றா" "அதென்ன கீற்று தென்னங்கீற்றா"என்ற கிண்டல் வேறு. "ஒவ்வொரு ஊரிலும், வீட்டிலும் இருக்கும் சொல்லாடல்" வித்தியாசமானதுதான். ஒரு மட்டும் அதை புரிந்து கொண்டு பிறந்தகம் செல்லும் போது, அப்படி பயன்படுத்தினால், அங்கும் கேலிகள்தான். "என்ன..! புகுந்த வீட்டோடு ஒரேடியாக ஐக்கியமாகி விட்டாயா.? "என்ற கேலிப் பேச்சுகள். எல்லாவற்றையும் கடந்து, சகித்து வரும் போது இப்போது வீட்டில், மருமகள்களின் பேச்சுவார்த்தைக் குழப்பங்கள். ஆகக்கூடி "நீ இன்னமும்.கற்றுத் தெளியவில்லை" என நினைக்கும் வண்ணம் "வாழ்க்கை தன் கை வீசி" நம்மை கேலி செய்தவாறு நகர்கிறது. சுவையான கட்டுரைக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைச்சேன் கமலாக்கா நீங்க, நெல்லை எல்லாம் நம்ம பக்கமாச்சே!!! அதனால சொல்வீங்கன்னு தெரியும்!!

      அக்கா!!!! நெவர் நெவர்!!!! வாழ்க்கை நம்மைக் கேலி செய்யவில்லை அக்கா. அதெல்லாம் நீங்க கதைகள் ல பயன்படுத்திக்கோங்க!!!! யதார்த்தத்தில் வேண்டாம்.

      நாம நிறைய வட்டார வழக்குகள், குடும்ப வழக்குச் சொற்களை கற்க முடிகிறதே இல்லையா...நமக்கு அது கிடைச்சிருக்குன்னு நினைத்து நம்மை நாம் strengthen செய்து கொள்வோம்! இப்படி வழக்குச் சொற்கள் கிடைக்கக் கிடைக்க நாம அந்தக் கற்பனைய எழுத்துகளில் வடித்துவிடலாமே!! என்ன சொல்றீங்க!

      கீற்றா....தென்னங் கீற்றா.....//

      இருங்க இருங்க இதை நான் எப்படிக் கையாண்டேன்னு சொல்றேன்...அப்பால...நாமெல்லாம் சளைச்சிடுவோமா என்ன? கலாய்ச்சா...

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. கமலா சொன்ன மாதிரி எனக்கும் பல முறை நமக்கு எதுவும் தெரியலையே என்னும் உணர்வு வரு. அதுவும் புக்ககத்தில் எல்லோருமே ஒருவருக்கொருவர் ஏதாவது ஒரு வகையில் சொந்தம். அவங்களுக்குள் பேசிக்கும்போது நான் தனித்து விடப்படுவேன். அப்போல்லாம் தோணத்தான் செய்கிறது. :))))))

      நீக்கு
    3. வேடிக்கை என்னன்னா அவரிடம் எனக்கோ என்னிடம் அவருக்கோ இப்படி ஒரு எண்ணம் வரலை. இரண்டு பேருமே முதல் நாளிலிருந்தே ஒருத்தர் சொல்லுவதை மத்தவங்க எதுக்காகன்னும் ஏன்னும் புரிஞ்சுண்டோம். இது எங்க வீட்டில் கூட எல்லோருக்கும் ஆச்சரியமான ஒன்று.

      நீக்கு
  15. ​இன்றைய கோதுமை அடை எனக்கு பிடிக்கவில்லை. பார்க்க ஒரு ஈர்ப்பு இருந்தால் தான் என்னைப் போல் உள்ள சிறுவர்கள் "ஒன்னு ட்ரை பண்ணி பார்க்கலாம்" என்று கருதுவர்.

    கல்யாணம் ஆகி திருவனந்தபுரத்தில் தனி குடித்தனம். மனைவியின் "அரசாணிக்காய் கூட்டு", "ஒரே தடியாய் கொட்டிட்டாங்க" போன்ற சொற்றொடர்களால் நான் "பேந்த" விழித்தது. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜெ கெ அண்ணா, அப்ப அக்கா கொங்கு மண்டலமா? அங்குதானே அரசாணிக்காய்ன்னு சொல்றது வழக்கம்! மஞ்சள் பூஷணிய. ஆனால் குயப்புதே....ஒரே தடியாய் கொட்டிட்டாங்க - இது நாரோயில்ல சொல்றதாச்சே!!!

      கீதா

      நீக்கு
    2. // இன்றைய கோதுமை அடை எனக்கு பிடிக்கவில்லை. //

      அச்சச்சோ....

      நீக்கு
    3. ​ஆமாம் கொங்கு தான். பூர்வீகம் பாளையம்கோட்டை. இதெல்லாம் கூட பரவாயில்லை. துடப்பத்திற்கு பீ மாறு என்பதும் அழுகிறாள் என்பதற்கு அழுகுறால் என்பதும் தான் சகிக்கமுடியாது.

      Jayakumar

      நீக்கு
    4. Thirunelveli and Palayamkottai are just like twin cities. Like Hydarabad and Secundrabad. Then how come she is from Kongu Nadu?

      நீக்கு
    5. இந்த அழுகுறா என்பது இப்போதெல்லாம் (பல வருடங்களாகவே) திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபலம் ஆகி விட்ட வார்த்தைகளில் ஒன்று. அதோடு சொல்ல மாட்றா, சொல்ல மாட்றாங்க, வந்தாராமாம் என்பதெல்லாம் இப்போதைய திராவிடத் தமிழிச் சொற்கள்.

      நீக்கு
    6. grewup in coimbatore, born in palayamkottai, my f-in-law worked in colomboo. later at coimbatore.

      நீக்கு
    7. //துடப்பத்திற்கு பீ மாறு என்பதும்// இதற்கு துடைப்பம் எதற்கு உபயோகப்பட்டது என்பது தெரிந்திருக்கணும். துடைப்பத்தில் இரண்டு வகை. ஒன்று புல்லின் மூலம் செய்யும் விளக்குமாறு. இரண்டாவது தென்னங்கீற்றில் செய்யும் துடைப்பம். முன்பு வீட்டில் டாய்லெட் என்பது நீளமான மேடை, அதன் பின்புறம் பள்ளம் (அதாவது 3/4-1 அடி அகலம் நீளமாக இருக்கும்) இது வீட்டின் பின்புறம் ஆனால் வீட்டிற்குள் இருக்கும். மறுநாள் காலையில், சுத்தம் செய்பவர்கள் தென்னம் விளக்குமாறு கொண்டு வாளியில் அள்ளி பிறகு தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்துவிட்டுச் செல்வார்கள். இதனை நான் ஜங்க்‌ஷனில் எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன். அதனால்தான் அந்த வாரியலுக்கு உங்கள் மனைவி சொல்லும் பெயர்.

      நீக்கு
    8. புல்லில் செய்யும் விளக்குமாறு வீட்டிற்குள் உபயோகிப்பர். இதில் பூ போன்ற பகுதி வீட்டில் விழும். இதனைச் சுத்தம் செய்யணும்.

      தென்னங்கீற்று விளக்குமாறு, புதிதாக, தோசைக்கல்லில் ஹோட்டல்களில் உபயோகிப்பதைப் பார்த்திருக்கலாம்.

      நீக்கு
    9. ஜெ கே அண்ணா, அதானா விஷயம்...அரசாணிக்காய்....

      .ஒரே தடியாய் கொட்டிட்டாங்க இதன் காரணமும் புரியுது அவங்க அப்பா கொலம்போல இருந்திருக்காங்களே!!!!

      கீதா

      நீக்கு
  16. ஹா ஹா… ஒரு “In-laws Tamil Survival Manual” படிச்ச மாதிரி feeling 🤣 அந்த “பச்சடி எடுத்துக்கொண்டு வா”ன்னு சொன்னதுக்காக drawerக்குள்ள கூட தேடியது… அந்த level dedicationக்கு ஒரு அவார்ட் குடுத்துருக்கணும் உங்களுக்கு! ஒங்க ஊர்ல பச்சடி = sweet side dish… இங்க பச்சடி = வெள்ளரிக்காய் கிச்சடி…
    “துண்டு எத்தற எண்ணம் வாங்கணும்?” — நல்ல comedy track 🤣 ஆகக்கூடி first few months உங்களுக்கும் உங்கள் புக்ககத்து உறவினர்களுக்கும் conversation இல்ல, decoding + survival தான். ஆனா அந்த confusionலயே நல்ல bonding உருவாக சந்தர்ப்பம் இருந்திருக்கும்… கடைசில நீங்க ஒரு புதிய “Kerala-Chennai Tamil Dictionary”யே உருவாக்கிட்டீங்க! Super writing.
    /'தெய்வீகச் சிரிப்பைய்யா' நாகேஷ் என் மனதிற்குள் வசனம் பேசினார்! நான் 'சிரிப்பம்மா' என்று மாற்றிக்கொண்டேன்! மனதுக்குள்தான்!/
    திருவிளையாடல் தருமியை நினைவு கொள்வதற்கு மிகப் பொருத்தமான சம்பவம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா!!!!!

      அந்த டிராயர் சமாச்சாரம் - ''------" added to liven it up!!!!

      ஆமாம் சில மாதங்கள் ஒரு bond உருவாக ஆனது....எங்கள் பகுதி பதார்த்தங்கள்...என்று அப்போதெல்லாம் எனக்கு ரொம்பவே மலையாளம் கலந்த தமிழ். படித்தது தமிழ் மீடியம், தமிழ் மொழிப்பாடம் என்றாலும்....

      தெய்வீகச் சிரிப்பம்மா என்றுதான் ௳னதில் நினைத்தேன் அப்படியே போட நினைத்து....ஏனோ மாற்றினேன், சூர்யா!!!

      இன்னும் சில பழக்க வழக்கங்கள்....bond gel ஆன ரகசியம் அது ரகசியம்...ஹாஹாஹா

      ரொம்ப ரசித்து வாசித்ததற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு நன்றி சூர்யா ஜி..

      கீதா

      நீக்கு
  17. இலையில் செய்யப்படும் அனைத்தும் அந்த இலையின் வாசனையுடன் இருக்கும். அந்த வாசனை பிடிக்கும். சுவையான குறிப்பு.

    புகுந்த வீட்டில் - ஹாஹா... நல்ல அனுபவம் தான். ஒரு ஊரிலிருந்து இன்னுமொரு ஊருக்கு, மாநிலத்திற்கு, நாட்டிற்குச் செல்லும்போது இப்படியான அனுபவங்கள் நிறையவே கிடைக்கும். சமாளிக்க சிறிது காலம் பிடிக்கும் என்றால், பின்னர் நினைத்துப் பார்க்கும்போது ரசனை தான். கீதா ஜி அவர்களின் அனுபவங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வெங்கட்ஜி, ஒரே பகுதியிலேயே கூட ஒவ்வொரு குடும்பத்திற்குமே கூட வித்தியாசங்கள் வருகின்றனவே இல்லையா...

      நிச்சயமாக நிறைய அனுபவ்னகள். கொஞ்சம் காலம் எடுத்தது என்றாலும் நான் அந்த அனுபவங்களை ரொம்ப ரசித்து ஏற்றுக் கொண்டேன்....என்ன இப்படிச் சொல்றாங்க என்று எடுத்துக் கொள்ளாமல் புதிதாகக் கற்றுக் கொள்வது என்று.

      நன்றி வெங்கட்ஜி!

      கீதா

      நீக்கு
    2. என்னோட மன்னிக்கோ அல்லது தம்பி மனைவிக்கோ இந்தப் பிரச்னை இல்லை. ஏனெனில் மன்னி தூரத்துச் சொந்தம் என்பதோடு மேல்மங்கலம் பக்கம் பெரியகுளம் தான் அவங்க ஊர். ஆகவே பேச்சு, சமையல், பழக்க வழக்கங்கள் எதுவும் மாறாது. தம்பி மனைவியின் அம்மாவுக்கோ பிறந்த ஊர் மேல்மங்கலம்/ வாழ்க்கைப்பட்டது கல்லிடைக்குறிச்சி என்றாலும் எங்க பாட்டியின் தம்பி மனைவிக்குட் திருநெல்வேலி என்பதோடு என்னோட நான்கு சொந்த மாமிகளும் திருநெல்வேலிக்காரங்க தான் என்பதால் எங்களுக்குத் திருநெல்வேலி பாஷை ரொம்பப் பழக்கம். என்னோட ஒரு பெரியப்பா பெண்ணின் புக்ககம் அரவங்குளம். அவள் கல்யாணம் ஆகிப் போனதும் அப்படியே அந்த ஊர் பாஷையில் ஐக்கியம் ஆகிவிட்டாள். ஒரு மாதத்துக்கெல்லாம் மதுரை வந்தப்போத் திருநெல்வேலிக்காரங்க மாதிரியே பேசினாள் என்பதோடு அவங்களை மாதிரி அடிக்கடி, "ஓஓ" என்றும் சொல்லுவாள். இப்போல்லாம் அந்த மாதிரி எந்தத் திருநெல்வேலிக்காரரும் பேசுவதில்லை.

      நீக்கு
    3. அக்கா உங்க வீட்டு விஷயங்கள் சுவாரசியம். ஆமாம் நாங்க அடிக்கடி ஓ என்று சொல்வதுண்டு கேரளத்துப் பக்கமும். கருத்தில் கூட நான் ஓ ன்னு முதலில் சொல்லியிருப்பேன்!!!!

      நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  18. இந்த மாதிரி நானும் நிறையத் திண்டாடி இருக்கேன். இதை எல்லாம் எழுதியும் இருக்கேன். ஆனால் இதெல்லாம் ரசிக்கும்படியாக எனக்கு நடக்கலை. ஏதோ ஒரு புது உலகுக்குள் புகுந்தாப்போல் இருக்கும். அவங்களுக்கோ, நம்ம ஊர்ப்பெண்ணாக இல்லையேனு வருத்தம். எப்படியோ 55 வருடங்கள் கடந்தாச்சு. எங்க மாமியார் வீட்டிலே முழுக்க முழுக்கத் தஞ்சாவூர் பாஷை தான். அதோடு பெரியவங்களோட பேசும்போது இழுத்துப் போர்த்திக்கொண்டு தலைக் குனிஞ்சு கொண்டு தான் பேசணும்பாங்க. எங்களுக்கோ முகத்துக்கு நேராகக் கண்களைப் பார்த்துப் பேசி வழக்கம் தேங்காய்க் கீத்து என்பதை நாங்க தேங்காய்ச் சில் என்போம். சென்னைக்கு வந்து குடித்தனம் வைச்சப்போக் கடையில் தேங்காய்ச் சில் கொடுங்கனு கேட்டா அவருக்குப் புரியலை. நல்லவேளையாப் பக்கத்தில் ஒருத்தர் தேங்காய்க் கீத்துனு சொல்லி வாங்கினாரோ பிழைச்சேன். நாங்க கீத்துன்னா பெரிதாகப்பூஷணிக்காய்க் கீத்துப் போல இருந்தால் தான் சொல்லுவோம் சில் என்றால் அளவில் சின்னது. இன்னும் சொல்லப் போனால் பெரிய வெங்காயம், குடை மிளகாய், கோவைக்காய் போன்றவற்றைச் சென்னையில் தான் முதல் முதலில் பார்த்தேன். சித்தி வீட்டில் இருந்தப்போ சித்தி அவற்றைச் சமைத்தும் போட்டார். அப்பளத்தை நாங்க "வாட்டு"வோம், புக்ககத்தில் "சுடு"வாங்க. சித்தி வீட்டில் "காய்ச்சு"வாங்க. இஃகி,இஃகி,இஃகி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பளாத்தை பொரிக்கலாம் இல்லைனா காச்சலாம். அதனைப்போய் எதற்கு வாட்டி வதைக்கிறீங்க? இல்லை சுட்டுக் கொல்றீங்க கீசா மேடம்?

      நீக்கு
    2. ஆமாம் தேங்காய்ச்சில்லுனா கொஞ்சம் பெரிசு ஓடோடு

      நானும் சென்னை வந்தபிறகுதான் குடை மிளகாய், கோவைக்காய் எல்லாம் பார்த்தது. ஏன் காலிஃப்ளவர் கூட அதுக்குப் பிறகுதான்

      ஆமாம் நம்ம வீட்டிலும் வாட்டுதல்.இல்லைனா காய்ச்சின்னும்...அங்கு சுடுதல்!!!!

      கீதா

      நீக்கு
  19. சித்தப்பாவெல்லாம் பிறந்தப்போ இருந்து செகந்திராபாத்வாசி என்பதால் அவங்க தமிழில் சரளமாகத் தெலுங்கு மொழியும் வரும். முதலில் புரியக் கஷ்டமா இருந்தாலும் சென்னைத் தமிழைக் கேட்டுக் கேட்டு அதுவும் பழக்கமாயிடுத்து.

    பதிலளிநீக்கு
  20. சாதரணமாக அடைக்கு அரைப்பதையே அரிசிக்குப் பதிலாக கோதுமை ரவை போட்டு நான் அடிக்கடி பண்ணுவேன். இந்த மாதிரி இட்லித்தட்டில் வேக வைக்கலை. ஆனாலும் கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உடைச்சுட்டோ அல்லது ஊறியதும் மிக்சி ஜாரில் ஒரு சுத்தோ விட்டுவிட்டுச் சேர்க்கலாம். பைன்டிங்கிற்குக் கடலை மாவு தேவைப்பட்டிருக்காது. என்றாலும் கொஞ்சம் அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன் கலக்கலாம். பைன்டிங்கில் உத்தரவாதம் இருக்கும். அல்லது எல்லாவற்றையும் கிளறிக் கொட்டிட்டுத் தவலை அடை போல வெண்கல உருளி இல்லைனா அடி கனமான இரும்புச் சட்டியில் போட்டுத் தட்டி எடுக்கலாம். இதிலும் வெரைட்டியாகப் பண்ணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேட்டில் வைச்சும் எடுக்கலாம். நேரம், காலம், சுவையைப் பொறுத்து இது அமையும்.

      நீக்கு
  21. இந்தப்பக்கமிருந்து ஸ்ரீராமும், அந்தப் பக்கம் கீதா ரங்கனும் பேசுவது போலப்படம் போட்டிருப்பதாக முதலில் நினைச்சேன். ஆனால் கருத்துக்களில் வேறே மாதிரி வந்திருக்கு. என்றாலும் வலப்பக்கம் கீதா ரங்கனைத் தான் சுட்டுகிறது என்பதை அவங்களைப் பார்த்திருக்கும் எல்லோரும் புரிஞ்சுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....அதே கீதாக்கா. ஜெமினி ரொம்ப மோசம் கேட்டேளா.... இவ்வளவு அழகா காட்டிருக்கேன்னு!!!!!!!!!!!!!!!!!!!!!!! அடையாளம் தெரியாம கொடுக்காது போல!

      கீதா

      நீக்கு
  22. எனக்குப் பலாப்பழச்சுளைகளோடு வெல்லம், தேங்காய் சேர்த்துப் பண்ணும் இலை அடை ரொம்பப் பிடிக்கும். அம்பத்தூரில் பக்கத்து வீட்டுப் பாலக்காட்டு மாமி பண்ணுவாங்க. அவங்களுக்குப் பலாப்பழம் கொண்டு வ்ந்து கொடுப்பது என் பொறுப்பு. அவங்களிடம் கற்றுக் கொண்டு நானும் ஓரிரு முறை முயற்சி செய்தேன். நன்றாக வந்தது என்றாலும் அதற்கு வாக்குகள் குறைவே. ஆகவே பின்னர் பக்கத்து வீட்டில் பண்ணும்போது ஓசி வாங்கிச் சாப்பிடுவது தான் நம்ம ராசினு வைச்சுட்டேன்.

    பதிலளிநீக்கு
  23. இந்த நம்மாத்துலே என்பதை நானும் நம்ம ஊர்ப்பக்கமெல்லாம் என அடிக்கடி சொல்லி இருக்கேன். பின்னர் மதுரைப்பக்கம் என மாற்றிக் கொண்டேன்.

    இந்தக் கடுகுப் பச்சடி என்பது அநேகமாகக் கடுகு, வெந்தயம் சேர்த்துப் பாகற்காய்களைப் போட்டு மோர் சாதத்துக்குத் தொட்டுக்கப் பண்ணுவதா? நீங்க திங்கற பதிவிலே போட்ட நினைவு. ஆனால் செய்முறை நினைவில் இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த நம்மாத்துலே// நம் ஆம் என்று உபயோகப்படுத்துவதுதான் நல்ல வைணவ பரிபாஷை என்பது தெரியும். ஆனால் இப்போல்லாம் எங்க வீட்ல ...தான். வீடு என்பது நம் எல்லோருடையது என்ற அர்த்தம்.

      நீக்கு
    2. கீதாக்கா அண்ட் நெல்லை....இப்பவும் நம்மாத்துல என்று தான் நான் பயன்படுத்துவது. இங்கு கருத்துலயும் கூட பயன்படுத்துவதுண்டு. எங்க உங்க ன்னு சொன்னா அது என்னவோ பிரிவினை போலத் தோன்றும்

      கீதா

      நீக்கு
  24. பச்சடி என்பதை பச்சை செடி என்று செடி சட்டியை கொண்டு வராமல் போனீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜெ கெ அண்ணா, நல்ல காலம் அந்த அளவு நான் மோசமா இல்லையாக்கும் அப்போ!!!

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!