31.5.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் - நெல்லைத்தமிழன்

 

கங்கைகொண்ட சோழபுரம்-பள்ளிகொண்ட பெருமாள். 

பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில் நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் மூலாஸ்தானத்தில் ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீரங்கநாதர் என்று எழுதியிருப்பதால், நாதமுனிகளுக்கும் இந்தக் கோவிலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று தோன்றியது. 1400 ஆண்டுகள் பழைமையான கோயில் இது.

நாதமுனிகளுக்கு இந்த இடத்தில் ரங்கநாதர் பள்ளிகொண்ட நிலையில் காட்சி கொடுத்தாராம். நாதமுனிகள் காலம் 900.  (833-951). இந்தக் கோயில் அதற்கும் முற்பட்ட காலமாக இருந்திருக்கவேண்டும். பிற்காலத்தில் ஆண்டாள் சந்நிதி வந்திருக்கலாம். (என்னுடைய புரிதல் படி, ஆண்டாளுக்கு தனிச் சன்னிதி ராமானுஜர் காலத்திற்குப் பிறகு வந்திருக்கலாம், ஒவ்வொரு கோயிலிலும்). அல்லது ராஜேந்திர சோழன் காலத்தில் இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டிருந்திருக்கலாம்.

இந்தக் கோயிலின் மூலவர், ஸ்ரீ நாதமுனிகள் ரங்கநாதர் என்று எழுதப்பட்டிருந்தது. நாதமுனிகளுக்கும் இந்தக் கோயிலுக்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு. (சனிக்கிழமை வாரம் ஒரு பாசுரம்தொடர் படிப்பவர்களுக்கு நாதமுனிகள் யார் என்பதும் திவ்யப் பிரபந்தத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பும் தெரிந்திருக்கும்).

இந்தக் கோயிலை தற்போது அந்த ஊரில் இருப்பவர் ஒருவர்தான் பார்த்துக்கொள்கிறார். கோயில் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கீழ் வருகிறது (அதாவது அதற்குள்ள அதிகாரியின் பொறுப்பில்). நாங்கள் சென்றிருந்தபோது கோயில் மூடப்பட்டிருந்தது. நல்லவேளை, தன்னுடைய மொபைல் எண்ணை சுவற்றில் எழுதிவைத்திருந்தார் கோயிலைப் பார்த்துக்கொள்பவர். அவருக்கு போன் செய்து, கோயிலைத் தரிசிக்கணும் என்று சொன்னோம். அவருடைய மாட்டைக் கட்டிவைத்துவிட்டு சிறிது நேரத்தில் வருகிறேன் என்றார். பதினைந்து நிமிடங்கள் கழித்து அவர் வந்து கோயிலைத் திறந்து எங்களுக்குக் காண்பித்தார்.

நாங்கள் எதுவும் எடுத்துச்சென்றிருக்கவில்லை. (இதனை உபகாரம் என்று அழைப்போம். பெருமாளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் ஏதேனும் உபகாரம் கொடுத்தால்தான், அர்ச்சகர் அர்ச்சனை செய்வார். உபகாரம் கல்கண்டு அல்லது வாழைப்பழமாகக் கூட இருக்கலாம்).

பெருமாளை நன்றாக தரிசனம் செய்தோம். கோயிலில் பல படங்கள் எடுத்தேன், பதிவு எழுதும்போது பகிரலாம், மற்றவர்களும் வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கோவிலுக்கு தரிசனத்திற்குச் செல்ல வாய்ப்பு உண்டாகும் என்பதால்.

இந்தப் பகுதியை எழுதும்போது கோயிலைப் பற்றி மேலும் விவரம் பெற இணையத்தைத் துழாவிக்கொண்டிருந்த போதுஒவ்வொரு கோயிலுக்குப் பின்னும் என்ற தளத்திற்குச் சென்றேன்.  (https://behindeverytemple.org/பாழடைந்து கிடைக்கும் கோயில்களை புனருத்தாரணம் செய்யும் சேவை எப்படி தனக்கு ஏற்பட்டது என்று இந்தச் சேவையை ஆரம்பித்த ஆனந்தா  என்பவர் எழுதியிருக்கிறார். அவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலைப் படித்த பிறகு (சுவாமி பரமஹம்ஸ யோகானந்தா  அவர்கள் எழுதிய நூல்), இந்தியா, தமிழகத்தின் கோயில்களுக்கு தன்னுடைய மனைவியுடன் பயணம் மேற்கொண்டு, பிறகு கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரைச் சந்தித்தபின், நலிந்து கிடக்கும் கோயில்களை மற்ற ஒத்த ஆர்வமுடையவர்களிடமிருந்து நன்கொடை வாங்கிச் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்ட தாம். அதற்காக ஒரு கோயிலைத் தேர்ந்தெடுத்த பிறகு, என்ன என்ன செலவு ஆகும் என்பதையெல்லாம் திட்டமிட்டு, நன்கொடை சேர்த்து அந்தக் கோயிலைச் சீரமைக்கிறார்களாம்.

அவர்கள் தளத்தில் இந்த நெல்லிக்குப்பம் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் முன்பு எந்த நிலையில் இருந்தது என்று படங்கள் பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றை நான் இங்கு தந்துள்ளேன். அதன் பிறகு நான் சென்றபோது எடுத்த படங்களைக் கொடுத்துள்ளேன்.

கோயில் முன்பு எப்படி இருந்தது என்பது தெரியாததால், ஏன் ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய விஷ்ணு சிலை ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் யோசித்தேன். இவர்கள் சீர் செய்வதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தது என்று புரிந்துவிட்டது. அந்த மூர்த்தங்களின் அமைப்பைப் பார்க்கும்போது வேறு கோயிலிலிருந்து இந்த தெய்வச் சிலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று தோன்றியது (அந்தக் கோயில் முழுவதுமாக பாழ்பட்டதோ இல்லை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோ? யாரே அறிவர்)

கோயிலைச் சீரமைக்கும் தொண்டினைச் செய்துகொண்டிருக்கும் இவர்கள், நன்கொடையாக வரும் பணத்தை கோயிலைச் சீரமைக்கவே முழுவதும் உபயோகப்படுத்துகிறார்களாம். நன்கொடை பெற மார்க்கெட்டிங் செய்வது மற்றும் பிற பணிகளுக்குச் சொந்தப் பணத்தைத்தான் உபயோகிக்கிறோம் என்று சொல்கிறார்கள். எங்கோ பிறந்து வளர்ந்த ஒருவருக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் பாதையைக் காட்டியிருக்கிறது என்று எண்ணி வியந்தேன்.

தற்போது கோயில் நன்கு சீரமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்கள் இந்தக் கோயிலைச் சீரமைக்கும் கைங்கர்யத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பு கோயில் எந்த நிலையில் இருந்தது என்று படங்கள் பதிவிட்டிருந்தார்கள். ஒப்பீட்டுக்காக அந்தப் படங்களை இந்தப் பதிவில் எடுத்தாண்டிருக்கிறேன். கீழே உள்ளவை புனரமைப்புக்கு முன்பு கோயில் இருந்த நிலையைச் சொல்லும். சீரமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது எடுத்த சில படங்களையும் பகிர்ந்திருக்கிறேன்.

 

 

 

மூலவர் ரங்கநாதர். 

287149389_560526325646624_496110653507623540_n

 

286268577_560526538979936_4843887210600655618_n

 

செங்கல் சுவர்களின் மீது சிமெண்ட் பூசி சுற்றுச் சுவர் எழுப்பப்படுகிறது

புகைப்படம்-2022-12-29-06-23-36

பழைய விமானத்தைச் சீர் செய்கின்றனர்.

இனி நான் சென்றபோது எடுத்த படங்கள். கோயில் புதுப் பூச்சுடன் மிளிர்ந்தது. ஆயினும் தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்தால்தான் பழைமையைப் பேண முடியும்.

 

 

இந்தக் கோவிலுக்கு நான் காவல் என்று சொல்கிறதோ இந்தச் சின்னஞ்சிறு நாய்க்குட்டி?

 


 

இந்தப் பெருமாள் முகத்தில் வசீகரப் புன்னகை. பல கோயில்களில் தரிசனத்துக்கே சில பல விநாடிகள்தாம் கிடைக்கும். இங்கோ அமைதியாக அவனைத் தரிசிக்க முடிந்தது.

 

 

 

 

 

 

 

பச்சைமா மலைபோல் மேனி பவழ வாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே. 

சிறிய அளவிலான, சுமார் ஏழு அல்லது எட்டு அடிகள் நீளமுடைய ஆதிசேஷன் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தரிசனம் தரும் ரங்கநாதர். 

பல நேரங்களில் திட்டமிடாமல் சில கோயில் தரிசனம் வாய்த்திருக்கிறது. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்ற வரி எவ்வளவு உண்மையானதுஇப்படி ஒரு கோயில் இருக்கிறது என்றே எங்களுக்குத் தெரியாது. நாதமுனிகள் திருவரசு சென்று அங்கு அதனைப் பார்த்துக்கொள்ளும் வைணவரிடம் பேசியபோது, அவர் இந்தக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள் என்று சொன்னார். அதன் பேரில் இந்தக் கோயிலுக்குச் சென்றோம்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், நாதமுனிகள், ஆளவந்தார் அவதாரஸ்தலம், காட்டுமன்னார் கோயிலில் இருந்து ஒரு கிமீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது என்றார்.அதற்கு நாங்கள், காட்டுமன்னார் கோயில் அர்ச்சகரிடம் கேட்டபோது, கோயிலில் இருந்த நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் சன்னிதிகள்தாம் அவர்களுடைய அவதாரஸ்தலம் என்று சொன்னாரே என்று கேட்டேன். அதற்கு அவர், அவதாரஸ்தலத்தை தற்போது வைத்திருக்கும் ஒருவரது அலைபேசி எண்ணைக் கொடுத்தார். திரும்பவும் 15 கிமீட்டர் சென்ற பாதையிலேயே பயணிக்க அன்று எங்களுக்கு வாய்ப்பு இல்லை. அதனால் அவர்களின் அவதாரஸ்தலத்தைத் தரிசிக்க இயலவில்லை. இத்தனைக்கும் காட்டுமன்னார் கோயிலில் கோவில் நடை திறக்க 8 /4 மணி ஆனது. நாங்கள் 7 மணிக்கே அங்கு சென்றுவிட்டோம். தெரிந்திருந்தால் அவதாரஸ்தலத்தை தரிசித்திருந்திருக்கலாம் சில நேரங்களில் நமக்கு அத்தகைய தரிசனங்கள் அமைவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த முறை நிச்சயம் செல்லவேண்டும்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய்

வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 

16 கருத்துகள்:

  1. உபகாரம் - புதுசு எனக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். இப்போதான் வீடு திரும்பினேன்.

      கோயில்களில் பெருமாளுக்கு அர்ச்சிக்க, அமிசி பண்ண, ஏதேனும் கொண்டுவந்திருக்கிறீர்களா என்பதற்கு உபகாரம் உண்டா எனக் கேட்பர். அது இல்லாமல் அர்ச்சனை செய்வது இல்லை.

      நீக்கு
  2. பைரவர்-பைரவி - யை காவல்னுதானே சொல்வாங்க புராணங்களில் இல்லையா. அதான் நீங்க சொல்றாப்ல அங்கு நிற்கிறது போல. உண்மையிலேயே இங்கு சில கோயில்களில் இந்த பைரவ பைரவிகள் இருந்து ரொம்பவே பாதுகாக்கின்றன என்று கோயிலில் பூசை செய்யறவங்களே சொல்லி அதைப் பாதுக்காக்கறாங்க. சின்ன கோயில்களில். யாரேனும் சந்தேகத்துக்குரியவர்கள் கோயிலுக்குள் நுழைய இருந்தால் விடுவதில்லை என்றும் சொல்கிறார் அவர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களுக்கு காவல் தெய்வம் உண்டு. திருவரங்கத்தில் காடாக இருந்தபோது யானைகள் ஊருக்குள் வருமாம். அதற்காகத்தான் காவலுக்கு காட்டழகியசிங்கர் கோயிலே அமைக்கப்பட்டது என்பர்.

      அடுத்தமுறை திருவரங்கம் பெரிய தெற்குக் கோபுரத்தின் கீழே காவல் தெய்வம் சன்னிதியைப் பாருங்கள்.

      நீக்கு
  3. பழைய நிலைக்கும் புதிய நிலைக்கும் நல்ல வித்தியாசம். இப்ப நன்றாகப் பணி நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. கூடவே அந்தத் தூண்கள் சுவர் எல்லாம் அப்படியே பழைய கல் அப்படியே விட்டிருப்பதும் சிறப்பு. இல்லைனா பழைமை தெரியாது.

    அந்தப் பெருமாள் தேவியருக்குத் தனி சன்னதி இல்லையோ? அதைத்தான் சொல்லியிருக்கீங்களோ தனியாக இருக்காங்கன்னு?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்மண்டப் ஓரமாக அந்தச் சிலைகள் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கின்றன

      நீக்கு
  4. அந்த ஆஞ்சு பழைய நிலையா?

    மக்கள் ஏன் இப்படி அழுக்காக்குகிறார்கள்? விளக்கு ஏத்துகிறேன் என்று? நாம இப்படிச் சொன்னா உடனே இது இறைவனுக்கு எதிரான வார்த்தை உனக்கு நம்பிக்கை இல்லை....அப்படி எல்லாம் அவர்களின் உணர்வுகளை நம்பிக்கைகளைக் குறை சொல்லக் கூடாதுன்னு குரல் வரலாம். என்னைப் பொருத்தவரை கோயில்கள் சிற்பங்கள் எவ்வளவு பாடுபட்டுக் கட்டி புனரமைக்கிறாங்க. அதை நாம பாதுகாக்கணும் இல்லையா. கோயிலின் உட்புறமாக இருந்தாலும் சரி வெளிப்புறமாக இருந்தாலும் சரி. ஆஞ்சுவுக்கு அடுத்தாப்ல இருப்பவர் யார்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பற்றி எழுதுகிறேன். கோயில் நம் சொத்து என்ற எண்ணம் வரணும். எதையும் தொடக்கூடாது, அழுக்காக்கக்கூடாது என்ற எண்ணம் இருக்கணும்.

      நீக்கு
  5. இராமானுஜருக்கும் ஆண்டாளுக்கும் இடையேயான பந்தம் மிகவும் போற்றப்படும் ஒன்று. ஆண்டாளின் நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை பாசுரங்களின் ஆழ்ந்த தத்துவங்களை உணர்ந்து போற்றியவர் இராமானுஜர். தன்னை சகோதரராக நினைத்தவர் என்பதால்தானே கோதா அக்ரஜர் னு சொல்வதுண்டு. அதனால், நெல்லை, நீங்க ஊகிப்பது போல் இராமானுஜர் காலத்தில்தான் ஆண்டாளுக்கான தனி சன்நிதிகள் வந்திருக்கலாம் என்று எனக்கும் தோன்றியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் இருந்திருக்கும் கீதா ரங்கன்.

      நீக்கு
  6. ஆஞ்சுவுக்கு அடுத்த படம் நல்ல பளிச்சுனு இருக்கு. புனரமைத்தபின் என்று தெரிகிறது. அந்த தூண்களுடன் உள்ள கூடம் போன்ற படம் செமையா இருக்கு அழகு.

    பள்ளிகொண்ட பெருமாள் சன்நிதி நல்ல பழைமை என்று தெரிகிறது.

    அவதார ஸ்தலங்கள் தகவல் வேறுபடுகிறதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவதார தலங்கள் தகவல்கள் வேறுபடுகிறதோ.... இது புரியவில்லை. எதைச் சொல்லுகிறீர்கள்?

      நீக்கு
  7. கடைசில ஆஞ்சு புனரமைக்கப்பட்டபின் படம் காணலையே, நெல்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. 1400 ஆண்டுகள் பழமையான கோயில்.
    மூல ஸ்தானத்தில் ஸ்ரீரங்கனாதர் எழுந்தருளியிருக்கும் படம் போட்டிருக்கிறீர்கள்
    வெளிப்பக்கத்தில் தற்கால எழுத்து வடிவில் 'ஸ்ரீநாதமுனிகள் ஸ்ரீரங்கநாதர்'
    என்று எழுதியிருப்பதாக சொல்கிறீர்கள்.
    யார் எழுதியிருப்பார்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்குள்ளவர்கள் சமீப காலங்களில், பக்தர்களுக்குத் தெரியணும் என நினைத்து ஒரு ரெஃபரென்சாக எழுதியிருப்பார்கள். வாங்க ஜீவி சார்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!