16.5.26

வாரம் ஒரு பாசுரம் - பகுதி 20 -- நான் படிச்ச கதை

               

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 20 

உடல் நிலை சரியில்லாத ஆளவந்தாரிடம், அவரது மூன்று சீடர்களும் வருந்த, அவர்களை வருத்தப்படவேண்டாம், உங்களுக்கு திருவரங்கமே திருமந்திரத்துக்கான அர்த்தம், திருமலையே சரம ஸ்லோகத்திற்கான அர்த்தம், காஞ்சீபுரமே த்வய மந்திர த்துக்கான அர்த்தம்.  இதற்குக் கண் கண்ட உதாரணம், திருப்பாணாழ்வார், குறும்பறுத்த நம்பி மற்றும் திருக்கச்சி நம்பி ஆகிய மூவர் என்று ஆளவந்தார் பதிலளித்தார். 

அப்போது திருவரங்கப் பெருமாள் அரையர், ஆளவந்தாரிடம், வைணவ தரிசனத்திற்குத் தலைவரான நீங்கள் திருநாடு சென்றால் (அதாவது மறைந்தால்) எங்களைப் போன்ற சிறியவர்கள் அழிந்துபோவதால் என்ன குறை இருக்கிறது? அதனால் நீங்கள் மறைந்தால், நாமும் உயிர் தியாகம் செய்துவிடுவோம் என்று சொன்னார். அதை பெரிய நம்பியும் திருக்கோஷ்டியூர் நம்பியும் ஆமோதித்தனர். 

அதற்கு ஆளவந்தார், இது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமன்று. ஒருவன் பெருமாள் திருவடியை அடைகின்றான் என்றால் சந்தோஷம் கொள்ளவேண்டுமே தவிர துக்கிக்கலாகாது என்று அறிவுரை சொன்னார். 

இப்படி இருக்கையில் ஆளவந்தாருக்கு உடல்நிலை சரியாகிவிட்ட து. பெரிய நம்பி மற்றும் திருக்கோஷ்டியூர் நம்பி ஆகிய இருவருடனும் திருவரங்கம் பெரிய கோயிலில் பெரிய பெருமாளின் (அரங்கநாதர்) தரிசனத்திற்குச் சென்றார். அப்போது அரங்கநாதருக்கு முழு திருமஞ்சனமாகி, திரை விலக்கவும், ஆளவந்தார் வேத கோஷத்தின் பின்புலத்தில் இருகை கூப்பி பெருமாளைச் சேவித்தார். திருவரங்கப் பெருமாள் அரையர், வழக்கத்திற்கு மாறாக ஏதோ நினைவில் ‘சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின’ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைச் சேவித்தார் இதைக் கேட்டு அங்கிருந்த பெரியோர்கள் எல்லோரும், இது என்ன அதிசயம் என்று வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். 

இது-சூழ்விசும்பு அணிமுகில், சம்பிரதாயத்தில் மிக முக்கியமான பதிகம். இதைப்பற்றி இப்போ எழுதினால் கதை வேறு கிளைக்குச் சென்றுவிடும். அதனால் எழுதவேண்டாம் என்று நினைத்தேன்.ஆனால் அந்தப் பாசுரம் சேவித்ததைக் கேட்டு பெரியோர்கள் எல்லோரும் எதற்காக வியப்பும் அதிர்ச்சியும் அடையவேண்டும் என்ற சந்தேகமெழும். 

இன்னொன்று, அரையர் என்பவர்கள் பெருமாளிடம் கைங்கர்யம் செய்பவர்கள். அவர்களோ இல்லை அர்ச்சகர்களோ எம்பெருமான் சன்னிதியில் ஏதேனும் சொன்னால், அது பெருமாளே அவர்கள் முகமாகச் சொல்கிறார் என்றே அர்த்தம். 

நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களை இயற்றியுள்ளார் என்று முன்பே பார்த்தோம். முதலாவதாக இயற்றியது திருவிருத்தம். நூறு பாசுரங்களை உடைய இந்தப் பிரபந்த த்தில், திருமாலை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் நாயகி பாவனையில் அந்தாதியாக இயற்றியிருக்கிறார். (அந்தாதி-ஒரு பாடலின் முடிவு வார்த்தையோ இல்லை கடைசி வரியில் உள்ள வார்த்தையோ, அர்த்தமோ அடுத்த பாடலின் தொடக்கமாக வரும்). இதில் இறைவன் அருளைப் பெற ஏங்கி, கடைசியில் சரண் அடைவதாக வரும். இந்த பிரபந்தத்தை ருக்வேத சாரம், அதாவது ருக்வேதக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது என்பர். 

அடுத்ததாக அவர் இயற்றியது, திருவாசிரியம். ஏழு ஆசிரியப் பாக்களினால் அமையப்பெற்ற இந்த பிரபந்தம் யஜுர் வேத சாரமாகக் கூறப்படுகிறது. திருமாலின் உருவம், குணம் மற்றும் விபூதிகளைச் சொல்கிறது இந்தப் பிரபந்தம். 

மூன்றாவதாக நம்மாழ்வார் இயற்றியது பெரிய திருவந்தாதி. இதில் 87 வெண்பாக்களும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன.  இதனை அதர்வணவேத சாரமாகக் கூறுவர். 

கடைசியாக அவர் இயற்றியது திருவாய்மொழி என்ற பிரபந்தம். இதில் 1102 பாசுரங்கள் உள்ளன. பத்து பத்துக்களாக உள்ள இந்தப் பிரபந்தத்தில், ஒவ்வொரு பத்திலும் பத்து பதிகங்கள் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலும் பதினோரு பாசுரங்கள் உள்ளன. வேதத்தின் கருத்துக்களை தமிழ்ப்படுத்தி எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கொடுத்துள்ளதால் இதனை திராவிட வேதம் என்கின்றனர்.  இதில் பத்தம் பத்தின் 9ம் பதிகம் ‘சூழ்விசும் அணிமுகில்’ என்று தோன்றும் பதிகம். இந்தப் பதிகத்தில் மயர்வற மதிநலம் அருளப்பட்ட நம்மாழ்வார், திருநாடு, நலமந்தமில்லதோர் நாடு என்று அழைக்கப்படும் வானவருலகம் சென்று (வீடு என்று அழைக்கப்படும் வீடுபேறு) அங்கு அடியார்களுடன் சேர்ந்தமையை இந்தப் பதிகத்தில் சொல்கிறார்.  அந்த நாடு எப்படி இருக்கும் என்பதை இந்தப் பத்துப் பாசுரங்களால் விவரிக்கிறார். இதைத் தொடர்ந்த பத்தாவது பதிகமான ‘முனியே நான்முகனே’ என்ற பதிகத்தில் எல்லையற்ற அன்பால் திருமாலைத் தான் சேர்ந்தமையை அருளிச்செய்கிறார். 

அதனால், திருவரங்கப் பெருமாள் அரையர், சூழ்விசும்பு அணிமுகில் என்ற பாசுரத்தைச் சேவித்ததைக் கேட்டு, ஆளவந்தார் திருநாடலங்கரிக்கப் போகிறாரோ என்று வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். 

இதைப் படிக்கும் நமக்கு ஒரு சந்தேகம் வரும். வீடுபேறு, மோக்ஷம், திருநாடு என்றால் என்ன?  வைணவ சமயம் ‘வீடு’ என்பதை தனி உலகம் என்று கூறுகிறது. திருக்குறளை இங்கு நோக்குவோம். 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 

தன்னை பக்தியோடு நினைப்பவரது உள்ளத் தாமரையில் வீற்றிருப்பவரின் திருவடிகளை அடைந்தவர், எல்லா உலகிற்கும் மேலானதான ‘வீட்டு உலகின்’கண் அழிவின்றி வாழ்வார். 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும். 

தன்னுடைய உடலை ‘நான்’ என்றும் பொருட்களை ‘எனது’ என்றும் எண்ணுகின்ற ஆணவத்தை, மயக்கத்தை விலக்குபவன், தேவர்களுக்கும் அரிதான வீடுபேற்றை அடைவான். (இதில் வீட்டை தனி உலகம் என்கிறார் திருவள்ளுவர்) 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து 

மனத்திலுள்ள சந்தேகங்களை நீக்கி உண்மைப் பொருளை உணர்ந்து தெளிவு பெற்றவர்களுக்கு, அவர்கள் வாழும் இந்த நிலவுலகைவிட, வானுலகம் (வீடு பேறு) மிக அருகில் இருக்கும். 

பால் எல்லாம் நல் ஆவின் பால் ஆமோ? பாரில் உள்ள
நூல் எல்லாம் வள்ளுவர் செய் நூல் ஆமோ? - நூலில்
பரித்த உரை எல்லாம் பரிமேல் அழகன்
தெரித்த உரை ஆமோ? தெளி 

திருக்குறளுக்கு பரிமேலழகர் உரைதான் மிகவும் மூத்தது. அதன் சிறப்பைப் பற்றிய வெண்பா இது.  இந்த வெண்பாவை இயற்றியவர் கவிச்சக்கரவர்த்தி ஜெயக்கொண்டார். பரிமேலழகர் உரைச் சிறப்பு பாயிரத்தில் உள்ள வெண்பா இது. 

பொருள்: நல்ல பசுமாட்டின் பாலைப் போல வேறு பால் சிறப்பாகுமா? ஆகாது. உலகத்தில் உள்ள மற்ற நூல்கள் எல்லாம் திருவள்ளுவர் செய்த திருக்குறளைப் போலாகுமா? ஆகமுடியாது. அதுபோல, ஒரு நூலுக்குப் பலர் உரை எழுதலாம். ஆனால் பரிமேலழகர், திருக்குறளுக்குத் தெளிவான நுட்பமான உரை அளித்ததுபோல, மற்ற உரைகள் அமையுமா? 

இந்த வீடு எப்படி இருக்கும்? நம்மாழ்வார் இதனை ‘நலமந்த மில்லதோர் நாடு’ என்கிறார். நலம் அந்தமில்லதோர் நாடு. அழிவில்லாத இன்பத்தை உடைய ஒப்பற்ற நாடு. இதனை பிற்காலத்தில் பரிமேலழகர், ‘அந்தமில் இன்பத்து அழிவில் வீடு’ என்கிறார். அதாவது அழியாத எல்லையற்ற பேரின்ப நிலை. மனித வாழ்க்கையில் நான்கு முக்கிய நிலைகளை, நோக்கத்தை அறம், பொருள், இன்பம், வீடு என்பர். நன்மை பயக்கும் ஒழுக்கம், அறவழியில் ஈட்டும் செல்வம், நேர்மையான நுகர்ச்சி மற்றும் வாழ்க்கைப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு அடையும் பேரின்ப நிலை அல்லது வீடுபேறு. 

ஆளவந்தார், இராமானுஜர் வரலாற்றிலிருந்து நாம் கொஞ்சம் விலகிச் சென்றுவிட்டோம். தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருவாய்மொழி போன்றவற்றைக் கொஞ்சம் ஒப்பு நோக்க ஆரம்பித்துவிட்டோம். 

தமிழர்களுக்கு என்று தனி மதம் என்றெல்லாம் பலர் பேசத் தலைப்பட்டுவிட்டார்கள். இதன் காரணம், அவர்களுக்குத்தான் சங்க இலக்கியங்கள் என்றால் என்ன என்றே தெரியாதே.  இங்கு சங்க இலக்கியத்திலிருந்து ஒரு பாடலை மாத்திரம் பகிர்கிறேன். 

நற்றிணை என்பது, சங்க இலக்கியத்தைச் சேர்ந்த அகத்திணை நூலாகும். இதன் காலம் கிமு 3ம் நூற்றாண்டிலிருந்து கிபி 2ம் நூற்றாண்டாக இருக்கலாம் (இதற்கு முன்பு திருவள்ளுவர் காலம் கிமு 31 என்று பார்த்திருக்கிறோம்). நற்றிணையின் கடவுள் பாயிரத்தில், பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியிருக்கும் பாவின் அர்த்தத்தை இந்த வாரம் பார்த்துவிட்டு, ஆளவந்தார் சரித்திரத்தைத் தொடரலாம். 

மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன்’ – என்ப –
தீது அற விளங்கிய திகிரியோனே 

பொருள்: பெரிய நிலப்பரப்பை அவன் சிவந்த திருவடியாக, தூய நீரை உடைய சங்குகள் முழங்கும் கடலைத் தன் ஆடையாக,  ஆகாயத்தைத் தன் உடலாக, திசைகளைக் கைகளாக, குளிர்ந்த கதிர்களை உடைய சந்திரன் மற்றும் சூரியனை தன் கண்களாக, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியவனாக இருக்கிறான் வேத முதல்வன். குற்றமில்லாத அவனையே சான்றோர்கள் இறைவன் என்கிறார்கள். 

விளக்கம்: பௌவம்-கடல், உடுக்கை-ஆடை, வளை-சங்கு, நரல்-சப்தமிடும், விசும்பு-ஆகாயம், திகிரியோன் – சக்ரபாணி – சக்கரத்தைக் கத்தில் ஏந்தியவன் 

இப்போது ஆளவந்தார் வரலாற்றைத் தொடர்வோம். திருவரங்கப் பெருமாள் அரையர் சூழ்விசும் பணிமுகில் பாசுரம் சேவித்ததைக் கேட்டு அங்கிருந்த எல்லோரும் மிக்க ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர அடைந்து நின்றபோது, பெரிய பெருமாளின் திருநெற்றியிலிருந்து மாலை நழுவி விழுந்தது.  அர்ச்சகர்கள் அதனை எடுத்து ஆளவந்தாருக்கு பிரசாதிக்க, திருவரங்கப் பெருமாள் அரையர், சடாரியை ஆளவந்தாருக்குச் சாற்றினார்.  எல்லோரும் சந்தோஷமடைய, ஆளவந்தார் தன் கோஷ்டியுடன் தன்னுடைய மடத்திற்கு எழுந்தருளினார். 

இந்தச் சமயத்தில், ஆளவந்தாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு காஞ்சீபுரத்திலிருந்து இரண்டு வைணவர்கள் வந்து ஆளவந்தாரைச் சேவித்தனர். அவர்களிடம், ஆளவந்தார், ‘இளையாழ்வார் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்று வினவ, அவர்களும், இளையாழ்வார் யாதவப் பிரகாசரிடமிருந்து பிரிந்து தேவப்பெருமாளுக்கு கைங்கர்யங்கள் செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்ல, ஆளவந்தார் மிகவும் மகிழ்வுற்றார். அத்வைத ஆசிரியரிடமிருந்து அவர் விலகியதே, பேரருளாளப் பெருமாள் கிருபையால்தான் என்று எண்ணி மகிழ்ந்தார்.  (காரணம், அவருக்கு இளையாழ்வார் தன்னுடைய சம்ப்ரதாயத்துக்கு வந்து அடுத்த தலைவராக வரவேணும் என்ற எண்ணம்தான்) 

ஆளவந்தார், தான் இயற்றிய எட்டு பிரபந்தங்களில், மிகவும் அருமையான ஸ்தோத்ர ரத்நத்தை பெரிய நம்பி கையிலே கொடுத்து, இளையாழ்வார் இப்போது யாதவப் பிரகாசரிடமிருந்து விலகி இருக்கிறார். அவரை இப்போது நம்முடன் சேர்க்கவேண்டும்  என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். பெரிய நம்பியும் அப்போதே ஆளவந்தாரிடம் விடைபெற்று காஞ்சியை நோக்கிச் சென்றார்.

காவிரியின் கரையில் ஆளவந்தார் படித்துறை அமைந்துள்ளது. இங்குதான் ஆளவந்தார் காவிரி நதியில் தினமும் ஸ்னானம் செய்வார். இதற்கு அப்புறம் சிறிது தூரத்தில் தவராசன் படித்துறை அமைந்துள்ளது. அது இராமானுஜர் ஸ்னானம் செய்யும் படித்துறை. (தற்போது அந்தப் படித்துறைக்குச் செல்வது கடினம்)

ஆளவந்தார் படித்துறை அமைந்திருந்த இடத்தின் அருகிலேயே ஆளவந்தாரின் திருவரசு காணப்படுகிறது. இது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்வோம்...

======================================================================================

நான் படிச்ச கதை - JKC

கணக்கு தப்புங்க மிஸ்!

கதையாசிரியர்: இரா.எட்வின்

 

இரா எட்வின் பிறப்பு: 1963 கடவூர். பெற்றோர் ஆசிரியர்கள் ஆனதால் பல ஊர்களில் வசித்து படித்து அவரும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். கடைசியாக சமயபுரம் மாரியம்மன் மேல் நிலை பள்ளியில் ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியராக பணி புரிந்து ஒய்வு பெற்றவர்.  பெரம்பலூரில் வசிக்கிறார்.  

சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், கலை இலக்கியச் சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர் என்னும் பன்முக ஆளுமைகொண்டவர்.

2011 அக்டோபர் 1 ஆம் நாள் முதல் சென்னையில் இருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

இவரது முகநூல் பக்கம்

https://www.facebook.com/ira.etvin.2025

பிளாகுகள் :

http://www.eraaedwin.com/

https://edwineraa.blogspot.com/

www.eraaedwin.com

https://perumazai.blogspot.com/

பல youtube காணொளிகளும் பதிந்துள்ளார். இரண்டு கீழே.

https://www.youtube.com/watch?v=NUFWSzTwhnM

https://www.youtube.com/watch?v=UWYbx7HJ5us

தமிழ் மணம் இருந்த காலத்தில் இவருடைய படைப்புகள் பிரபலமாக இருந்தன. சிறிது காலம் தினமணி பத்திரிக்கையிலும் படைப்புகள் வெளிவந்துள்ளன. 

கணக்கு தப்புங்க மிஸ்!

முன்னுரை  

சிறு வயதில் தாத்தாவோ பாட்டியோ பிள்ளைகளுக்கு ஒரு கணக்கு போடுவர். ‘ஒரு மரத்துக் கிளையில் 10 குருவிகள் உட்கார்ந்து இருக்கின்றன. அதில் ஒன்றை வேடன் அம்பெய்து வீழ்த்திவிட்டான்.  பாக்கி எத்தனை குருவி இருக்கும்?  

குழந்தைகள் பதிலுக்கு ஏற்ப அவர்கள் விடையை மாற்றுவர். ஒன்றும் இருக்காது என்று விடை கூறினால் ‘அது எப்படி பாக்கி குருவிகள் வேறே இடத்தில் இருக்குமே’ என்று மடக்குவர். ஒன்பது குருவிகள் என்று கூறினால் ‘எப்படி எல்லாக் குருவிகளும் பறந்து போய்விடுமே.’ என்று விடை கூறுவர். இது ஒரு விளையாட்டு. இது போன்று பல்பு கொடுக்கும் கணக்குகளில் சின்னக் குழந்தைகள் புத்திசாலிகள்.  

பின் வரும் கணக்கும் அது போன்றதே.  

அவன் போட்ட கணக்கொன்று

இவள் போட்ட கணக்கொன்று

இரண்டுமே தவறானது  என்ற பட்டுக்கோட்டையார் பாடலுக்கு இக்கதை ஒரு உதாரணம்.

கதை sirukathaigal.com இருந்து எடுத்தது.   

கணக்கு தப்புங்க மிஸ்!

எப்படித்தான் இந்த மிஸ் மட்டும் மணி அடித்ததும் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறாரோ? என்று எல்லா பிள்ளைகளுக்கும் எப்பவுமே கௌரி டீச்சரைக் குறித்த சந்தேகம் இருக்கும்.

மணி ஒலித்ததும் கௌரி வகுப்பறை வாசலுக்கு வருகிறாரா? அல்லது அவர் வந்ததைப் பார்த்து மணி ஒலிக்கிறதா? என்று ஒரு பட்டிமன்றமே வைத்துவிடலாம். சாலமன் பாப்பையா அல்லது நீதியரசர் கிருஷ்ணய்யராலேயே சரியான ஒரு தீர்ப்பினை வழங்க முடியாத விவகாரம் இது.

 

“குட் மார்னிங் மிஸ்” என்ற குழந்தைகளின் அன்பினை சிந்தாமல் சிதறாமல் ஒரு புன்னகையோடு ஏற்பார். “தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது போதாது, இவரது குரலுக்கு எதையாவது புதிதாய்ச் சொல்ல வேண்டும் என்று, ரசனை என்றால் என்ன என்று கேட்கும் கூர் மழுங்கிப் போன மொக்கையையும் எண்ண வைக்கும் தமது குரலால் “குட்மார்னிங் குட்டீஸ்’ என்பார்.

அப்போது ஒவ்வொரு குழந்தைக்கும் தேனை விட இனிய எதையோ தேனோடு கலந்து செய்த ஏதோ ஒன்று தங்கள் காது வழி உள்ளிறங்கி, உசிரோடு ஒன்று கலப்பதை உணர முடியும். தினமும் இது வாடிக்கையாய் நிகழ்ந்தாலும் இது பிள்ளைக்களுக்கும் திகட்டியதில்லை, கௌரிக்கும் திகட்டியதில்லை.

“கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்று சொல்லுமளவுக்கு வேப்பங்காயைவிடவும் கசந்த பாரதிக்கே கௌரி மிஸ் கணக்கு நடத்தினால் இனித்துப் புரிந்திருக்கும்.

வீட்டுப் பாட நோட்டுகளை ஆசிரியர் அறையிலுள்ள அவரது மேசையில் வைத்து விட்டால் போதும். ஓய்வுபட்ட நேரத்தில் திருத்தி அனைத்து நோட்டுகளையும் தானே எடுத்து வந்து விடுவார். மாணவர்களை அந்த வேலைக்கு பயன்படுத்த மாட்டார்.

அன்று இடைவேளைக்கு அடுத்த வகுப்பு 3ஏ. வழக்கம் போல நோட்டுகளை சுமந்தபடியே வகுப்புக்குள் நுழைந்து வணக்கம் ஏற்று, வணங்கிய பிறகு,

“நாளைக்கு ஹோம் வொர்க் என்னன்னு நோட்ல எழுதியிருக்கேன். அம்மாகிட்ட காட்டி சரியா செஞ்சு வரணும். ஓகே.’

“ஓகே மிஸ்’

அவர் எப்போதும் எல்லா வகுப்புகளிலும், எதுவாயிருந்தாலும் அம்மாவிடம்தான் கேட்கச் சொல்வார். அதே போல் எதற்காகவும் எப்போதும் அப்பாக்களை அழைத்து வரச் சொன்னதும் இல்லை. அது ஏனென்று தெரியவில்லை என்று சொல்வதைவிட ஏனென்று அவருக்கே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்று கணிதத்தில் கழித்தலையும், இன்றைய தேதியில் அவசியம் தேவைப்படுகிற கடன்வாங்கி கழித்தலையும் அனைவருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுத்தவர், “புரியுதா குட்டீஸ்?’

“நல்லாப் புரியுதுங்க மிஸ்.’

“சரி, அப்ப ஒரு கணக்கு தரேன், செய்றீங்களா?’

“செய்றோம் மிஸ்.’

“தள்ளுவண்டிக்காரரிடம் 57 ரூபாய்க்கு பழங்களை வாங்கிய ராணி அவரிடம் 80 ரூபாய் தந்தால் அவர் ராணிக்கு எவ்வளவு மிச்சம் தருவார்?’

கணக்கை எழுதிப் போட்டுவிட்டு வகுப்பறையை சுற்றிச் சுற்றி வந்தவர் எப்போதும் சொன்ன வேலையை ஒழுங்காகவும் உற்சாகத்தோடும் செய்யும் ரிகாஷ் கணக்கை செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்ததைப் பார்த்துவிட்டார்.

“ஏன் ரிகாஷ், உடம்பு சரியில்லையா?’

“இல்லீங்க மிஸ். ஜொரமெல்லாம் இல்ல.’

“அப்புறம் என்னடா? வீட்ல அம்மா ஏதும் தம்பிய அடிச்சாங்களா?’

“இல்லீங்க மிஸ். முத்தம் கொடுத்துதான் என்னைய வேன்ல ஏத்துனாங்க.’

“அப்புறம் ஏண்டா கணக்கு போடாம இருக்குற?’

எதுவும் பேசாமல் நின்றான்.

“ஏம்பா புரியலையா?’

“புரியுதுங்க மிஸ்.’

கோபப்பட்டே பழக்கம் இல்லாத கௌரிக்கும் சன்னமாய்க் கோபம் வந்தது.

“அப்புறம் ஏண்டா கணக்கப் போடல?’

நின்றான்.

“சொல்லுடா, அப்புறம் ஏன் போடல?’

“கணக்கு தப்புங்க மிஸ்.’

அப்படியே மிரண்டு போனாள் கௌரி. “கணக்கு தப்பா?’

“ஆமாங்க மிஸ்.’

தெளிவாய் தெறித்தது பதில்.

“கணக்கு தப்பா? ஏம்பா மத்த பசங்க எல்லாம் சரியா போட்டிருக்கீங்களா?’

எல்லோரும் 80 ரூபாயில் 57 ரூபாய் போக 23 ரூபாய் மிச்சம் என்று சரியாக போட்டிருந்தனர்.

கொஞ்ச நேரம் அப்படியே அசைவற்று நின்றிருந்த கௌரி செல்லில் ரிகாஷ் அம்மாவை பிடித்தார்.

“வணக்கம் மிஸ்.’

“கொஞ்சம் ஸ்கூலுக்கு வாங்க மேம். கணக்கு போட மாட்டேன்னு ரிகாஷ் அடம் பிடிக்கிறான்.’

ஈகோவே இல்லாதிருந்தது போலத்த தோற்றமளித்த கௌரிக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் அது சத்தமே செய்யாமல் இருந்திருக்கிறது.

இதற்குள் மணி அடித்துவிடவே கௌரி வெளியேறினார்.

மிஸ் கிட்டயே எதிர்த்துப் பேசியதாக ரிகாஷ் மீது ஒரு பிம்பம் விழுந்து விட்டது. யாரும் அவனோடு பேசவே பயந்தார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அந்த வகுப்பின் அவன் அன்னியப்பட்டுத்தான் போனான்.

இதைக் கேட்டவுடன் போட்டது போட்டபடி அப்படியே போட்டுவிட்டு, பள்ளிக்கு வந்தார் ரிகாஷின் அம்மா உமா.

வழக்கத்துக்கு மாறாக நிலைகுலைந்த நிலையில் மேசையில் தலை கவிழ்த்தவாறு கிடந்தார் கௌரி. இதுவரை இந்த நிலையில் அவரை யாரும் பார்த்தது இல்லை.

“குட் மார்னிங் மிஸ்.’

குரல் கேட்டு நிமிர்ந்த கௌரியின் கண்கள் சிவந்திருந்ததையும், ஈரம் பூசிக் கொண்டிருப்பதையும் உமாவால் பார்க்க முடிந்தது.

“வாங்க’

சுரத்தே இல்லாமல் வந்தது.

“சொல்லுங்க மிஸ். ரிகாஷ் ஏதும் தப்பு பண்ணிட்டானா?’

“என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல யாரும் எங்கிட்ட இப்படிப் பேசினதில்லங்க மேடம்.’

கௌரியால் பேசவே முடியவில்லை. விட்டால் கதறியே விடுவார் போல இருந்தது. கணக்கு ஆசிரியை என்பதாலோ என்னவோ கண்ணீர் ஸ்கேல் வைத்துக் கிழித்ததுபோல் நேர்கோட்டில் வழிந்து கொண்டிருந்தது.

உமாவுக்கு உதறவே ஆரம்பித்திருந்தது. ஏதோ பெரிதாய் பேசி மிஸ்ஸோட மனத்தைக் கிழித்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.

“என்ன மிஸ் செஞ்சான்?’

“விடுங்க, எல்லாம் என் தலை எழுத்து. வேற என்ன சொல்றது? உச்சா போக டவுசர் கழட்டத் தெரியாத பிள்ளை கிட்டல்லாம் வாங்கணும்னு எழுதி இருந்தா வேற என்ன செய்ய முடியும்?’

“அவன் ஒரு மனுசன்னு இப்படிப் போய் உடையுறீங்களே மிஸ். குச்சிய எடுத்து நாலு வெளுத்தா அடங்குறான். என்னங்க மிஸ் சொன்னான்?’

கௌரியும் உமாவும் பேசிக் கொண்டே வகுப்பருகே வந்திருந்தனர். உமா, ரிகாஷின் அம்மா என்பதை உணர்ந்திருந்த ஆங்கில ஆசிரியை அவனை வெளியே அனுப்பினார்.

வந்த ரிகாஷ் எதுவுமே நடக்காதது போல் கௌரியைப் பார்த்து, “குட்மார்னிங் மிஸ்’ சொல்லிவிட்டு அம்மாவின் அருகில் வந்து ஒட்டிக்கொண்டான்.

“மிஸ்ஸ என்ன சொன்ன?’ ஒரு கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு அதட்டலாகக் கேட்டாள்.

“ஒண்ணும் சொல்லலையே. ஒண்ணும் சொல்லல தானேங்க மிஸ். நீயே வேணா மிஸ்ஸக் கேளேன்…’

“பொய் சொல்லாத, வாய்ல சூடு வச்சுருவேன் ஆமா…’

ரிகாஷ் அழ ஆரம்பித்திருந்தான்.

“சொல்லுங்க மிஸ், என்ன சொன்னான்? அப்படியே அடுப்புல வச்சு எரிச்சுப் புடறேன்.’

கௌரி எதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தார். இருவருமே ஒன்றும் சொல்லாததால் உமாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஆங்கில மிஸ்ஸோட மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காக வந்த ரிகாஷின் வகுப்பு பெண் கோகிலாவை நிறுத்தி,

“ரிகாஷ் என்ன பாப்பா செஞ்சான்?’

“அவன் மிஸ் கொடுத்த கணக்கே தப்புங்கறான். எல்லாரும் சரியா கணக்கப் போட்டுட்டோம். அவன் மட்டும் கணக்கு தப்பு, போட மாட்டேங்கறான் ஆன்ட்டி.’

நிற்காமல் ஓடினாள்.

“ஏண்டா மிஸ் கொடுத்த கணக்கப் போட்டியா?’

அவனது மௌனம் அவளைக் கோபப்படுத்தவே, “கேக்கறேன்ல. மிஸ் கொடுத்த கணக்க ஏண்டா போடல?"

“அந்தக் கணக்கு தப்பு.’

தான் கொடுத்த கணக்கை இவனைத் தவிர எல்லோரும் அந்தக் கணக்கை செய்ததையும் சொன்ன கௌரி, “எங்க ப்ரின்சியே எங்கிட்ட இப்படி பேசினது இல்ல.’

“இதுல என்னடா தப்பு?’

“57 ரூபாய்க்கு எப்படிம்மா 80 ரூபா கொடுப்பாங்க?’

“ஏண்டா நேத்து அம்மா அஞ்சு ரூபாய்க்கு தக்காளி வாங்கிட்டு பத்து ரூபா கொடுத்து மீதி அஞ்சு ரூபா வாங்கல, அது மாதிரிதான் இதுவும்.’

“அஞ்சு ரூபா தக்காளிக்கு அஞ்சு ரூபா தரலாம், பத்து ரூபா தரலாம், இருபது ரூபா தரலாம், ஐம்பது ரூபா தரலாம், நூறும் தரலாம். ஆனா பதினஞ்சு ரூபா தருவாங்களா?’

கொஞ்சம் புரிந்தது போல இருந்தது உமாவுக்கு.

“இப்ப என்ன தாண்டா சொல்ற கட்டையில போறவனே?  எண்பது ரூபாயில ஐம்பத்தி ஏழு போச்சுன்னா மீதி இருபத்தி மூணுதானே?’

“அதுதான் தப்பும்மா.’

“லூசாம்மா நீ. 57 ரூபாய்க்கு எப்படிம்மா 80 ரூபா கொடுப்பாங்க. ஐம்பது ரூபாய்தாள் பத்து ரூபாய் தாள் ஒண்ணும் ஆக 60 கொடுக்கலாம், இல்லாட்டி மூணு இருபது ரூபா தாளா 60 கொடுக்கலாம், அல்லது ஐம்பது ஒண்ணும் இருபது ஒண்ணும் ஆக 70 கொடுக்கலாம் 80 ரூபா எப்படிம்மா கொடுப்பாங்க?’

ரிகாஷ் சொல்வதின் நியாயம் உமாவுக்குப் புரிந்தது. ஆனாலும், “குதர்க்கமாவா பேசற வீட்டுக்கு வா வாய்ல சூடு வைக்கறேன்’ என்றவள்,

“அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் மிஸ். சின்னப் பையன், தெரியாம பேசிட்டான். தயவுசெஞ்சு மன்னிச்சுக்குங்க. நானும் கண்டிச்சு வைக்கிறேன். இப்படி ஏதாவது அதிகப் பிரசங்கித்தனமா செஞ்சான்னா கண்ண மட்டும் வச்சிட்டு எல்லாத்தையும் உரிச்சு எடுத்திடுங்க மிஸ். அத உட்டுட்டு நீங்க ஏன் இப்படி உடைஞ்சு போகணும். வீட்டுக்கு வரட்டும் கொதிக்கிற ஒலையில போட்டு வேகவைக்கறேன்’ கை எடுத்துக் கும்பிட்டவாறு விடை பெற்றாள்.

“கணக்கு தப்புங்க மிஸ்’ என்ற ரிகாஷின் கூற்றில் இருந்த நியாயம் உமாவுக்கு மட்டுமல்ல கௌரி டீச்சருக்கும் விளங்கவே செய்தது.

– ஏப்ரல் 2012

உங்களுக்கும் ஒரு குட்டீஸ் புதிர்

● உங்களிடம் கூடையில் 10 ஆப்பிள்களும் அடுத்து 10 நண்பர்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஒரு ஆப்பிள் கொடுக்கிறீர்கள். இப்போது உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் தலா ஒரு ஆப்பிள் இருக்கிறது. ஆனால், கூடையில் இன்னும் ஒரு ஆப்பிள் மீதம் இருக்கிறது. இது எப்படி சாத்தியம்?

கொஞ்சமா

கொஞ்சறாங்க மிஸ்

என்பதைத் தவிர

பள்ளிக்கு மட்டம் போடுவதற்கான

எந்தக் காரணமும் இல்லை

கிரிஷிடம் 

இது அவர் எழுதிய கவிதை.

சம்பந்தி

ஒரு கார்

வாங்கியிருக்கிறார்

சுதா

ஒரு வீடு

வாங்கியிருக்கிறாள்

பாஜக

ஏழு எம்பிக்களை

வாங்கியிருக்கிறது

என்பதாக

இந்தியாவின் நேற்று

நிறைவாகியிருக்கிறது.

at April 28, 2026 

7 B னா சும்மாவா?

“நீ படிச்சு என்னவாவ?

கலக்ட்ராவேன்.

கலக்டராயி?

டி.வி. பார்ப்பேன். எல்லாருக்கும் சாக்லெட்

வாங்கித் தர்ருவேன்.

ஐஸ் க்ரீம் வாங்கித் தருவேன்.

குழந்தைகள் இப்படியே வளரட்டும். (பக்.23)

விக்ரமாதித்யனின் கவிதை ஒன்று கீழே

“குழந்தைகள்

குழந்தைகளாகவே

இருக்கிறார்கள்”, – விக்ரமாதித்யன் 

இவரைப் பற்றி மேலும் அறிய 

இரா-எட்வின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!