13.5.26

சிறு தானியங்கள் உடலுக்கு மிக நல்லது என்று சொல்றாங்களே... உங்கள் அபிப்ராயம் என்ன?

 

கேள்வி பதில்கள் :

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பெரும்பான்மையோர் உடல் எடையைக் குறைக்க படாத பாடு படும்பொழுது தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் மட்டும் எப்படி ஒல்லி குச்சிகளாக இருக்கிறார்கள்?

# விடாமுயற்சி தரும் வெற்றி. டி என் ஏ பிரமாதம்.

& அவர்கள் சாப்பிடுவது எதுவும் உடம்பில் ஒட்டுவது இல்லை போலிருக்கு!  

மனதளவில் இளமையாக இருக்கிறேன் என்பது சாத்தியமா?  ஏனென்றால் இப்போது 50+ல் இருப்பவர்கள் இளமையாக இருந்தபொழுது அவர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், ரசனைகள் எல்லாம் இன்றைய காலத்திற்கு கொஞ்சம் கூட பொருந்தாதவை. அப்படியிருக்க மனதால் கூட இளமை சாத்தியமாகுமா?

# மனதளவில் இளமை = உடலளவில் இயலாமை.  மூப்பை மீறி மனநிறைவோடு இருக்கும் நல்வாய்ப்பு.

& நானும் கூட வேலை பார்த்த எல்லா வருடங்களிலும், மற்ற எல்லா வேலைகளையும் மனைவி பார்த்துக்கொண்டதால், (வாலண்டரி)  ரிடயர் ஆகும் வரை மனதளவில் 18 ஆகவே நினைத்து வாழ்ந்தேன். முதல் பேரன் பிறந்த 55 வயதில் எனக்கும் வயதாகி விட்டது - நான் இனி இளமையான தாத்தா என்று உணர்ந்தேன்! 

எம்.ஜி.ஆரை வாத்தியார் என்றார்கள், எஸ்.பி.பியை வாத்தியார் என்கிறார்கள், சுஜாதாவை வாத்தியார் என்கிறார்கள் இவர்கள் ஈடுபட்ட துறையில் இருக்கும் மற்றவர்களுக்கு கிடைக்காத வாத்தியார் பட்டம் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?

# இது யாரோ கொடுக்கிற பட்டம் இல்லையே.  வாத்தியாரே என்றால் மெட்ராஸ் பாஷையில் கெட்டிக்காரர் என்று பொருள். திறமையை மதித்து ஒப்புக் கொண்டவர் வெளிப்படுத்தும் கௌரவம்.

நெல்லைத்தமிழன் :

1. ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் ஆண்களும் கிச்சன் வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமா?  (இருவரும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றால், பெண்கள் ஓயாம பேசிக்கிட்டே இருப்பாங்களே, அதுபோல ஆண்களும் பேச ஆரம்பிக்கணுமா என்ற சந்தேகமும் வருது)  

# வீட்டு வேலை செய்வது அகௌரவம் என்ற மனப்பாங்கு இல்லாத வரை, வீட்டு வேலைகள் யாவற்றையும் செய்ய இல்லத்தரசியோ வேறு எவரோ இருந்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.  அப்படியில்லாதபோது கணவர் பேப்பர் படித்துப் பொழுதுபோக்கக் கூடாது.

2.   முன்பு பால் உடலுக்கு நல்லது என்று சொன்னாங்க. பிறகு ஊசி போட்டு பாலைக் கறக்கறாங்க, அதனால நமக்குத் தெரிந்த வீடுகளில் பால் கறக்கும்போது பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்கள். பிறகு  ஏ2 பால்தான் நல்லது என்று சொல்றாங்க. இப்படி நினைச்ச போதெல்லாம் முன்னால நாம செய்துகொண்டிருந்தது தவறுனு சொல்றாங்களே.. இவங்கள்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகு பால் பொருட்கள் பக்கம் போலாம் என்று நினைப்பது சரிதானே   

# ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு அவதிப்படாமல் முடிவு செய்வதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

3.  சிறு தானியங்கள் உடலுக்கு மிக நல்லது என்று சொல்றாங்களே... உங்கள் அபிப்ராயம் என்ன?  

# எதானாலும் உடம்புக்கு ஒத்துப் போனால் நல்லதுதான்.  அரிசியைக் காட்டிலும் வேறு எதுவானாலும் சரிதான் என்று சொல்வது போலாகி விட்டது நிலைமை.

& நல்லதுதான். ஆனால் ஏனோ எனக்கு அவற்றை சாப்பிட்டால் பசி அடங்குவது இல்லை! 

4.  பொழுது போவதற்கு இது இதற்கு ஒரு நாளில் இவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது என்ன என்ன?  

# என் வயதில் இதற்கு பதில் அளிப்பது கடினம்.  எனினும் உடல் சார்ந்த பயிற்சி, மனதை வழிப்படுத்தும் தியானம் முதலானவை,  பொருள் பொதிந்த பேச்சு பிரசங்கம், அமைதி தரும் இசை இவற்றுக்கு கொஞ்சமேனும் நேரம் ஒதுக்க வேண்டும்.  அந்த நேரம் வெட்டி அரட்டை வீண்வம்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

& இப்போதெல்லாம் நடைப்பயிற்சி செய்யும் அரை / முக்கால் மணி நேரம், மடிக்கணினியில் தட்டச்சு செய்யும் நேரம் தவிர ஊரில் இருக்கும் நாட்களில் மற்ற நேரங்கள் யாவும் வெட்டிப்பொழுதுதான் எனக்கு! 

5.  எங்கள் வளாகத்தில் வாரத்தில் சனி (என்று நினைக்கிறேன்) காலைல, சாலை பக்கம் சில அண்டா நிறைய உணவை வைத்துக்கொண்டு வருகின்ற ஆட்டோ மற்றும் மக்களுக்கு உணவு தானம் செய்யறாங்க. இப்படிப்பட்ட தானங்கள் தேவையானவர்களைத்தான் சென்று அடைகின்றனவா?

# இவை கொடுப்பவருக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பது பெறுபவரது யோக்கியதாம்சங்களைச் சார்ந்ததல்ல.

& குரோம்பேட்டையில் எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் (இப்போது அவர் உயிருடன் இல்லை) ஞாயிறுதோறும் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு பிரட் பாக்கெட் கொடுப்பார். அவர் வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இருந்ததால், போகப்போக அவர் வீட்டிற்கு ஞாயிற்றுக் கிழமைகளில், பல்லாவரம் , தாம்பரம் பக்கங்களிலிலிருந்துகூட ரயிலில் பிச்சைக்காரர்கள் வந்து வரிசையில் நின்று அவர் வீட்டிலிருந்து பிரட் வாங்கி செல்வது வழக்கமாக இருந்தது! பிச்சைக்காரர்கள் மட்டும் அல்ல - நம் சாதாரண மக்கள் கூட ஏதாவது ஒன்று ஓசியில் கிடைக்கிறது என்றால் அங்கே கூட்டம் கூடிவிடுகிறார்கள். இதனால் யாருக்கும் எந்த புண்ணியமும் இல்லை என்பது   என் கருத்து.  

= = = = = = = = = = = =

படமும் பதமும் : 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 


பத்து நாட்களுக்கு முன்புவரை இப்படியிருந்த  மரங்கள் .. 


கிளைகளின் நுனியில் மொட்டு போல காணப்படுவது... இலைகள் .. 


இப்போது 'இலை'த்து விட்டது சாரி துளிர்த்து விட்டது! 

நெல்லைத்தமிழன் : 


இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் ஏதேனும் கவிதை உருவாகிறதா?


என் பெண், திருமணத்துக்கு முன்பு வேலையை ரிசைன் செய்துவிட்டு, கடைசி வாரத்தில் எங்களை அவள் வேலை பார்த்த வளாகத்துக்கு வரச்சொன்னாள்.  அங்கு இருந்த பிட்சா பேக்கரி என்ற கடையில், ஐயோ பாவம், மோனாலிசா அந்தக் கடையில் பிட்சா சாப்பிடுவதுபோல ஓவியங்கள் இருந்தன. லூவரில் நான் பார்த்த ஒரிஜினல் மோனா லிசா ஓவியம் எங்கே... இங்கே பரிதாபமாக பிட்சா கடையில் இருக்கும் இந்த ஓவியம் எங்கே! 





அந்த வளாகத்தில் நான் பார்த்த ஒரு பெரிய சிற்பம். அங்க வேஸ்ட் மெட்டீரியல்கள், பாத்திர பண்டங்களை வைத்து உருவாக்கியிருந்த சிற்பத்தையும் பார்த்தேன். இந்தச் சிற்பம் எப்படி இருக்கிறது? யாரையேனும் நினைவுபடுத்துகிறதா?

அடுத்த வாரம் இன்னும் சில வித்தியாசமான சிற்பங்கள் .. 

== = = = = = = = = =

KGG பக்கம்: 

பார்க் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள ஹோட்டலிலிருந்து வெளியே வந்தவுடன் அந்தப் பையன் நேற்று காலை சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும், இதே ஹோட்டலில் காலை டிஃபன் சாப்பிட்டதாகவும், கையில் காசு இல்லை என்று தெரிந்தவுடன், அந்த ஹோட்டல் உரிமையாளர் அவனைத் திட்டி அவனைப் பற்றி விவரங்கள் கேட்டு அறிந்து மீண்டும் பாம்பே செல்லுமாறு அவனிடம் சொல்லி அனுப்பினாராம். 

ஆனால் அவன் அதன்படி செய்யவில்லை போலிருக்கு. 

இவனை கையில் காசு கொடுத்தோ அல்லது டிஃபன் செலவு மட்டும் போதும் சும்மா திருப்பி அனுப்பினாலோ அவன் மீண்டும் பிச்சை எடுக்க அல்லது குழந்தைகளை ஊனப்படுத்தி பிச்சை எடுக்கவைக்கும் கூட்டத்தில் சிக்கிவிடுவான் என்று பயந்தேன். 

எனவே அவனுக்காக அவன் வீட்டிற்கு கடிதம் எழுதி அனுப்பியபின் அவனை அழைத்துக்கொண்டு, பார்க் ஸ்டேஷன் வந்து, அங்கிருந்து அவனுக்கு குரோம்பேட்டை செல்ல ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டு (எனக்கு அப்போதெல்லாம்  தாம்பரம் டு கத்திவாக்கம் via பீச் ஸ்டேஷன் சீசன் டிக்கெட் வைத்திருப்பேன் ) ரயில் பிடித்தேன். 

இரண்டு நாட்களுக்குள் அவனைத் தேடி என் விலாசத்திற்கு யாராவது வந்து எனக்கு நன்றி சொல்லி ( "சார் நீங்க தெய்வம்! என் குலக்கொழுந்தை மீண்டும் நான் அடைய தெய்வமே உங்களை அனுப்பியுள்ளது. என் பையனை மீண்டும் பார்ப்போமா என்ற ஏக்கத்தில் அவனுடைய அம்மா அங்கே சாப்பிடாமல் இருக்கிறாள்" - என்றெல்லாம் வசனம் மனதில் ஓடியது!) அவனை அழைத்துச் செல்வார்கள் அல்லது சென்னையில் உள்ள வேறு உறவினர்கள் யாரிடமாவது 

பிறகு அவனிடம் அவனைப் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக விஜாரித்தேன். 

பாலசுப்ரமணியனுக்கு  எப்போதுமே படிப்பில் ஆர்வம் இல்லை. அவனுடைய அப்பாவும், அம்மாவின் சகோதரனும் (பாலசுவின் தாய் மாமா) சேர்ந்து பாம்பேயில் சமையல் வேலைகள் செய்து பிழைத்து வருகிறார்கள். 

தாய் மாமா அடிக்கடி இவனிடம் தனக்கு சிறு வயதில் படிப்பு வரவில்லை என்றும், அதனால் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு ஓடி வந்து, பிறகு சமையல் வேலை கற்றுக்கொண்டதாகவும் இப்போது அதனால்  பிழைத்து வருவதாகவும் கூறியுள்ளார். 

அதனால் இந்தப் பையன், தானும் சென்னைக்கு ஓடி வந்து பிழைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளான். 

ஓடி வந்தபின்தான் அவனுக்கு அவன் வயதை ஒத்த சிறுவர்கள் சென்னை போன்ற இடங்களில் வேலை தேடுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்துள்ளது. கையில் காசு இல்லாமல் வயிற்றுக்கு சாப்பிடுவது கூட கடினமான விஷயம் என்று அவனுக்குத் தெரிந்திருக்கும். 

அவனை என் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு என் மனைவியிடம் அவனுடைய கதையை சுருக்கமாகக் கூறி இரண்டொரு நாட்கள் அவன் நம்முடன் இருக்கட்டும்; அவனைத் தேடி யாராவது வந்தாள் அவர்களிடம் இவனை ஒப்படைத்துவிடலாம் என்று சொன்னேன். என் மனைவிக்கு இந்த விவகாரத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லை என்று தோன்றியது. ஆனாலும் என் விருப்பத்திற்கு மாறாக அவள் ஒன்றும் சொல்லவில்லை. 

வீட்டில் என் அப்பா இருந்தார். (அம்மா அப்போது வேறு ஊரில் இருந்தார்) அப்பாவுக்கும் கிட்டத்தட்ட இந்த வகை பரோபகார சிந்தனைகள் உண்டு என்பதால் அப்போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. 

பையனும் பெண்ணும் அருகில் இருந்த நர்சரி ஸ்கூலில் அப்போது படித்து வந்தார்கள். ஸ்கூல் சென்றிருந்தார்கள். 

நான் பிறகு கிளம்பி, அலுவலகம் போய் சேர்ந்தேன். (காலை) அரை நாள் கேஷுவல் லீவு போட்டேன். 

மாலையில் வீட்டுக்கு வந்ததும், அவன் என்ன செய்தான் என்று என் மனைவியிடம் கேட்டேன். 

அவனிடம் அவன் போட்டு வந்த காக்கி அரை டிராயரும் அழுக்கு வெள்ளை சட்டையும் தவிர்த்து வேறு டிரஸ் எதுவும் இல்லாததால், அவன் குளித்த பிறகு என்னுடைய பையனின் பழைய டிராயர் / சட்டை அணிந்தான் (அளவு ரொம்ப சிறியதாக இருந்தபோதிலும் ) என்றும், போட்டிருந்த உடைகளை, துவைத்து காயப் போட்டிருந்ததாகவும் சொன்னாள்.  நன்றாக சாப்பிட்டான் என்றும் இரண்டு நாட்கள் தூங்காததால் நன்றாகத் தூங்கினான் என்றும் சொன்னாள். 

மறுநாள், பையனின் வேறு ஒரு சட்டை, ஆனால் கீழே என்னுடைய அப்பாவின் அங்கவஸ்திர துணியோ அல்லது ஒரு துண்டோ அணிந்திருந்தான். 

எனக்கு அந்த வாரம் முழுவதும் அலுவலகம் இருந்ததால், வார இறுதிக்குள் ஏதேனும் வழி கிடைக்கும் என்று நினைத்து நானும் என் மனைவியும் பொறுமையாக இருந்தோம். 

(தொடரும்)  

1 கருத்து:

  1. பரோபகார சிந்தனை பரிதாபமான சிந்தனையாகிவிட்டதா எனத் தெரிந்துகொள்ளும் ஆவல் வருகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!