17.5.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் - நெல்லைத்தமிழன்

 

மாளிகைமேடு. 

இதுவரை நான் பார்த்திராத, எல்லோரும் இராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோயிலை அமைக்க உத்வேகமாக இருந்தது, காஞ்சி கைலாசநாதர் கோயில் என்பதால்அதனைக் காணச் சென்றேன்இந்தக் கோயிலையும், பரமேச்வர விண்ணகரம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலையும் ஒருசேரக் காணவேண்டும். அப்போதுதான் பல்லவர்களின் மகோன்னதம் தெரியும். அதனால் இந்தக் கோயில்களைப் பார்த்த பிறகு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் மற்றும் இராமஸ்வாமி கோயிலைப் பார்ப்போம்.  என்று சென்றவாரம் முடித்திருந்தேன். (இதனை பல மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன். ஆனால் முழுமையாக எழுதி முடியவில்லை என்பதால்-அதாவது நான் பத்து அல்லது பன்னிரண்டு பகுதிகளையும் தொடர்ந்து எழுதி அவற்றை ஒருசேர கௌதமன் சாருக்கு அனுப்புவேன். சில சமயங்களில், உடனே நேரம் கிடைத்தால் இன்னும் பத்து பகுதிகள் அனுப்பிவிடுவேன். சில சமயங்களில் படங்களைக் கோர்த்து சில பகுதிகளில் மாத்திரம் டெக்ஸ்ட் எழுதியிருப்பேன். அதனால் பிறகு தொடர்ந்து எழுதும்போது அவற்றில் மாற்றம் செய்வதும், அடுத்த பகுதிக்கு வேறு கோயிலையோ இடங்களையோ முதலில் எழுதலாம் என்று எண்ணுவதும் நடக்கும்).

2026 ஃபெப்ருவரியில் கும்பகோணம் சென்றிருந்தபோது, வைணவ குரு பரம்பரை சம்பந்தமான இடங்களுக்குச் செல்லவேண்டும், வைணவ ஆச்சார்யர்களின் திருவரசுகளுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்போது முன்பு சென்றபோது காணவிட்டுப்போன மாளிகை மேட்டையும் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். காலையில் நேராக காட்டுமன்னார் கோயிலுக்குச் சென்று அங்கு தரிசனம் முடித்த பிறகு, அங்கிருந்து குருகைக்காவலப்பர் திருவரசுக்குச் சென்றுவிட்டு பிறகு நாதமுனிகள் திருவரசுக்குச் சென்றோம். அது கங்கைகொண்ட சோழபுரம் கோயிலிலிருந்து நடக்கும் தூரம் என்று போட்டிருந்ததால், பளீர் என்று தெரிந்த கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் செல்லாமல் அருகிலிருந்த நாதமுனிகள் திருவரசுக்குச் சென்றோம்நாதமுனிகள் திருவரசைப் பார்த்துக்கொண்டிருந்தவர், எங்களிடம், அருகில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் நெல்லித்தோப்பில் இருக்கிறது, 3-4 கிமீட்டர் தூரம்தான், அதனால் அங்கு சென்று தரிசனம் செய்துவிட்டு பிறகு மற்ற இடங்களுக்குச் செல்லுங்கள் என்றார். அதன்படி அந்த இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு, பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைப் பார்த்தபிறகு திரும்ப ஆரம்பித்தோம். மூன்று கிமீ தூரம் கடந்த பிறகு மனைவி, ஏதோ ஒரு மேடுஎன்ற ஊரைப் பார்த்துவிட்டு, மாளிகை மேட்டுக்குச் செல்லணும் என்று சொன்னீர்களே என நினைவுபடுத்தினார். அதன்படி வண்டியைத் திருப்பி கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பின்பகுதியில் (அதற்கு கோயிலிலிருந்து  3 கிமீ தூரம் செல்லவேண்டும்) அமைந்துள்ள மாளிகை மேடு என்ற இட த்திற்குச் சென்றோம். பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், அந்த இடத்திற்குச் சென்று அதில் கால் வைக்கவேண்டும் என்ற ஆசை இருந்ததால் சென்றேன். சோழர் காலக் கோயில்கள் என்ற தலைப்பு இருப்பதால், அதனைத் தொடர்ந்து பள்ளிகொண்ட பெருமாள் கோயிலைப் பற்றியும் எழுதிவிட்டுத்தான் பல்லவர் வரலாற்றுக்குள் புகும் எண்ணம் இருக்கிறது.

கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலிருந்து நெடுஞ்சாலைக்கு வந்த பிறகு, குருவாலப்பர் என்று அழைக்கப்படும் ஊரின் விலக்கில் சுமார் 1 கிமீட்டர் தூரம் சென்றால் மாளிகை மேடு என்று அழைக்கப்படும் இடம் வருகிறது.

இராஜேந்திர சோழன் படை வடபுலத்துக்குச் சென்று கங்கையைத் தாண்டி வெற்றி பெற்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழீச்வரம் என்ற கோயிலும், கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரும் நிர்மாணிக்கப்பட்டதை அறிவோம். அதுதான் ராஜேந்திரனின் தலைநகரமாக இருந்தது (சாளுக்கிய சோழர்கள் ஆட்சியின்போதும் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது)

தந்தை இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பெரிய அரண்மனை இருந்தது. அது தவிர, பழையாறையில் பெரிய அரண்மனை இருந்தது. பழையாறையில் நான்கு பெரிய சிவன் கோயில்களும் இருந்த ன. பழையாறையில் இருந்த அரண்மனை பிற்காலத்தில் முழுவதுமாகச் சிதைந்து தற்போது வயல்வெளியாக உள்ளது. அந்த அரண்மனையில்தான் இராஜராஜனின் பாட்டி செம்பியன் மாதேவியாரும் தமக்கை குந்தவையும் வாழ்ந்தனர். ராஜராஜனின் மனைவி வானவன் மாதேவியும் அந்த அரண்மனையில்தான் வாழ்ந்துவந்தார். அவருடைய குமாரன் இராஜேந்திரன்.

கல்வி இல்லாதவன் செல்வந்தனாக இருந்தாலும் புகழ் பெறுவதில்லை. அதனால்தான் அரச குமாரர்களுக்கு நல்ல கல்வி போதிக்கப்பட்டுவந்தது. (இதற்கு அக்பர் போல சில விதிவிலக்குகள் உண்டு) செல்வத்தைவிட, அதிகாரத்தைவிட கல்வி பெரியதா?

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் மன்னர்க்கு

தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு. 

என்ற பாட்டால் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம்நாலடியார், கல்வியைப் பற்றிச் சொல்லும்போதுஅன்னம் நீரை விட்டுவிட்டுப் பாலை மாத்திரம் பருகுவது போல, வாழ்நாளில் கிடைக்கும் குறைவான நேரத்தில், நல்ல நூல்களைக் கற்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

இப்படிக் கற்றதனால்தான் இராஜேந்திரன், பண்டித சோழன் என்று புகழ்பெற்றான். தந்தை இராஜேந்திர சோழனும், திருமுறை கண்ட சோழன் என்று புகழ் பெற்றது, அவனுடைய கல்வியறிவினால், திருமுறைகளைக் கண்டறிந்து அதனைச் சீர் செய்யும் பொறுப்பை நம்பியாண்டார் நம்பியிடம் ஒப்படைத்து, அதன் காரணமாக சைவ சமயத்திற்குப் பெரும் சிறப்பு செய்ததனால்தான்.

ராஜேந்திரன் பிறந்து பதினைந்து ஆண்டுகள் கழித்துத்தான் ராஜராஜன் பட்ட திற்கு வந்தான். தந்தை சுமார் முப்பது ஆண்டுகள் அரசாண்ட பிறகு ராஜேந்திர சோழன் பட்டத்திற்கு வந்தான்பட்டத்திற்கு வரும்போது ராஜேந்திர சோழனுக்கு ஏறத்தாழ 45 வயது.

ராஜராஜன் பட்டத்திற்கு வந்து ஐந்து ஆண்டுகளில் ராஜேந்திர சோழன் இளவரசனாக முடிசூட்டப்பட்டான் (சுமார் 20 வயது).  போருக்குத் தலைமை தாங்கி, பாண்டிய அரசன், அவனுக்குத் துணையாக வந்த இலங்கை மன்ன ன் மற்றும் சேரர் படையை ஒடுக்கினான். பிறகு மேற்குத்தொடர்ச்சி மலை வழியாகச் சென்று சேர அரசனுடன் போரிட்டு அவனை வீழ்த்தி, சேர நாட்டுத் துறைமுக நகரங்களையும் வீழ்த்தினான். அப்போதுதான் சேரநாடு முதல் முறையாக சோழ நாட்டிற்கு அடிமைப்பட்டது.

மேலைச் சாளுக்கியர்கள் என்பவர்கள், கர்நாடகாவின் கல்யாணி நகரைத் தலைநகராகக் கொண்டு தக்காணப் பீடபூமியை ஆண்ட புகழ் பெற்ற கன்னட அரச மரபினர். இவர்கள் அரசு இரண்டாம் தைலப்பனால் தோற்றுவிக்கப்பட்டது (960களில்) . இவரது மகன் சத்தியாசிரியன், 997ல் தொடங்கி பதினோரு வருடங்கள் ஆண்டவன். தந்தையின் ஆட்சியின்போதே இளவரசாக பல வருடங்கள் இருந்தவன்மேலைச் சாளுக்கிய நாடு, கிருஷ்ணா, துங்கபத்ரை ஆறுகளுக்கு வடக்குப் பகுதியை ஆண்டனர். இவர்களுடைய உறவினரான கீழைச் சாளுக்கியர் கோதாவரிக்கும் கிருஷ்ணாவுக்கும் இடைப்பட்ட நிலத்தை ஆண்டுவந்தனர். கீழைச்சாளுக்கியர்கள் ஆண்ட நிலம், வேங்கைநாடு என்று ராஜராஜன் காலத்தில் அறியப்பட்டுவந்தது.

சாளுக்கிய வம்சத்தில் புகழ் பெற்றிருந்தவன் இரண்டாம் புலிகேசிஏழாம் நூற்றாண்டில் கங்க மன்னனைத் தன்னுடன் சேர்த்துக்கோண்டு பல்லவர்கள் மீது படையெடுத்து, அவர்கள் வசமிருந்த (முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்) வேங்கி நாட்டைக் கைப்பற்றி, அதற்கு தன்னுடைய தம்பியான விஷ்ணுவர்தனை அரசனாக்கினான். இப்படித்தான் கீழைச் சாளுக்கிய அரசு தோன்றியது. இவர்களின் தலைநகரம் வேங்கி என்பதால், அது வேங்கிநாடு என்று அழைக்கப்பட்டது.

பத்தாம் நூற்றாண்டில், (அதாவது 940-999 கதை), வேங்கி நாட்டு மன்னனாக இருந்தவன் தானார்ணவன். அவனுக்கு சக்திவர்மன் மற்றும் விமலாதித்தன் என்று இரண்டு மகன்கள். இந்த வரலாற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

இதற்கிடையில் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை இருந்த பகுதியின் படங்களைப் பார்க்க ஆரம்பிக்கலாம்இந்த அரண்மனை, கங்கைகொண்ட சோழன் மாளிகை, முடிகொண்ட சோழன் மாளிகை, சோழ கேரளன் மாளிகை என்றெல்லாம் அழைக்கப்பட்டதுஇந்த அரண்மனையைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பொ..1030லிருந்து பொ.. 1119 வரை இருக்கின்றனஅதாவது குலோத்துங்கச் சோழன் மகன் விக்கிரம சோழன் காலம் வரை இந்த அரண்மனை உபயோகத்தில் இருந்திருக்கிறது (அதற்குப் பிறகும் இருந்திருக்க வேண்டும். கல்வெட்டுகள் கிடைக்கவில்லை). இந்த அரண்மனையிலிருந்து அரசாணைகள் பிறப்பித்த மன்னர்கள் ராஜேந்திர சோழன் முதல் குலோத்துங்கச் சோழன் வரை. இனி படப்பகுதி.

குருவாலப்பர் விலக்கிலிருந்து அரண்மனை மேடு செல்லும் பாதை. ஏதோ ஒற்றையடிப் பாதை போல ஆளரவமற்று இருந்தது.

இந்த இடம் தொல்லியல் துறையின் கீழ் வருவதை விளக்கும் பதாகை. அரண்மனை பல ஏக்கருக்குப் பரந்து விருந்து கிடந்ததாம். அரண்மனைச் சுவற்றிர்க்கும் கங்கைகொண்ட சோழீச்வரம் கோயிலுக்கும் சில மீட்டர் (10 மீட்டருக்குள்) இடைவெளிதானாம். இடையில் அகழி இருந்ததாகச் சொன்னார். அரண்மனையிலிருந்து பத்து நிமிட நடையில் கோவில் வந்துவிடும் என்றார்.

நிலத்திற்கு அந்தப் பகுதியில் மரங்களாக இருக்கும் இடமும் அரண்மனைப் பகுதிதானாம். ஆனால் அந்த இடம் இன்னொருவருக்குச் சொந்தமாக இருக்கிறதாம். பிற்காலத்தில் அந்த இடத்தையும் கையகப்படுத்தி அகழாய்வு செய்வார்களாக இருக்கும்.

நான் (ங்கள்) அரண்மனை அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதியைப் பார்த்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது அந்தப் பகுதியைக் கவனித்துக்கொள்பவர் வந்து இந்த இடங்களைப் பற்றி நிறைய விளக்கினார்பிறகு அவரே எங்களை சிற்பக் கூட த்திற்கும் கூட்டிச் சென்றார். வரலாற்றை இந்தப் பதிவுகளுக்காகப் படித்திருந்த தால் அவர் சொன்னதில் பல எனக்குச் சட் என்று புரிந்துவிட்டது. என்னாலும் சிலவற்றிர்க்கு காரணங்கள் சொல்ல முடிந்தது.

 

 

 

 

செங்கற்களால் கட்டப்பட்ட அடித்தளத்தின் மீது சரியாகப் பொருந்துமாறு கருங்கல் வைத்து அதன் மீது மரத்தால் அரண்மனை எழுப்பப்பட்டது என்று சொன்னார்கள்.

 

 

இந்த அரண்மனைப் பகுதி அகழ்வாய்வில் அதிகமாகக் கிடைத்தவை எல் வடிவத்தில் உள்ள கூரை ஓடுகளாம். இவை 26 செ.மீ வரை நீளமாகவும், தலைப் பகுதியில் கொக்கி போன்றும் காணப்படுகிறதாம். இவை அரண்மனையின் முகப்புப் பகுதியில் உபயோகித்த கூரை ஓடுகளாக இருக்கலாமாம்.

இந்த அரண்மனைப் பகுதியை அகழ்வாய்வு செய்தபோது, தந்தப் பொருட்கள் மற்றும் சீன தேசத்து பீங்கான் பொருட்கள் அதிக அளவில் கிடைத்ததாம்சோழர்கள், சீன தேசத்துடன் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வாணிபத் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். போர்சலைன் மற்றும் செலடைன் வகை பீங்கான் பானை ஓடுகள் இங்கு அதிக அளவில் கிடைத்தனவாம்.

இந்தப் பகுதிகளில் யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் கிடைத்தமையால், இது அரண்மனைப் பகுதியாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று சொன்னார். இவையெல்லாம் அலங்காரப் பொருட்களாம்.

நடுவில் ஓடை போலத் தெரிவது, அரண்மனை கழிவு நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதை என்று சொன்னார்.

அடிப்பகுதியின் கற்கள் தெரிகிறதா?

 

மிகப் பெரும் அரண்மனையின் அடிப்பகுதி (basement)

பல இடங்களை தார்ப்பாயினால் மூடி வைத்திருந்தார்கள். இன்னும் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

மாளிகை மேடு முழுவதுமாகவே ஆக்கிரமிப்பில்தான் இருந்த தாம். முன்பு அகழாய்வு செய்த இடத்தைத் தவிர, தற்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 2021ல் இடத்தையும் வாங்கித் தந்து அகழாய்வு செய்ய பணமும் ஒதுக்கித் தந்தாராம்.

மாளிகை மேட்டைப் பார்த்த பிறகு அதன் எதிரே இருந்த சிற்பக் கூடத்திற்குச் சென்றோம். அந்த இடங்களைக் கவனித்துக்கொண்டிருந்தவர் எங்களை அங்கு கூட்டிச் சென்றார்.

அங்கு என்ன பார்த்தோம் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

(தொடரும்) 

19 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. https://mathysblog.blogspot.com/2014/07/blog-post_27.html
    மன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் ! என்ற பதிவில்

    இது மன்னர் இராஜேந்திர சோழன் மாளிகை இருந்த இடம் !
    "மாளிகைமேடு "என்று இந்த இடத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

    மன்னன் ராஜேந்திரன் சோழன் இருந்த மாளிகை மண்ணாகிப் போனபின் அதை ’மாளிகைமேடு’ என்று இப்போது அழைக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு போய் இருந்தோம்.

    என்று போட்டு இருக்கிறேன் அப்படி என்றால் 2004 ஆம் ஆண்டு போய் இருக்கிறோம். அப்போது கம்பி வேலி மட்டும் போட்டு இருந்தார்கள் அந்த பகுதியை.

    மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிற்பங்களை கம்பி தடுப்புக்குள் வைத்து இருக்கிறார்கள். அருங்காட்சியத்திலும் சிலவற்றை வைத்து இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அருங்காட்சியகம் இருக்கிறது. அரசு விடுமுறை நாள் எல்லாம் இதற்கும் விடுமுறை. வேலை நாள் போனால் தான் அருங்காட்சியகம் பார்க்க முடியும். என்று சொல்லி இருந்தேன்.
    ஜனவரி 1 ஆம் தேதியே போவதால் அருங்காட்சியகம் பார்க்க முடிவதே இல்லை.


    கீழடி அருங்காட்சியகம் போன்ற தள அருங்காட்சியகத்தை உங்கள் பதிவின் மூலம் பார்த்து விட்டேன்.
    அருமையாக படங்களுடன் விவரங்கள் தந்து இருக்கிறீர்கள்.

    கங்கை கொண்ட சோழபுரம்,குருகைக்காவலப்பர் கோயில் , மற்றும் நாதமுனிகள் திருவரசுக்குச் சென்றது எல்லாம் நினைவுகளில் வந்து போகிறது.

    உங்கள் பதிவின் மூலம் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலையும் பார்க்க ஆவல். நாங்கள் அந்த கோயில் போகவில்லை.

    பதிலளிநீக்கு
  3. மன்னன் மகள் கதையில் சாண்டில்யன் வந்தியத்தேவன் சொல்வதாக சொல்கிறார், கங்கை கொண்ட சோழபுரம் என்று ராஜேந்திர சோழன் கங்கையை வெற்றி கொள்வதற்கு முன்னரே பெயர் வைத்து விட்டார் என்று.

    பதிலளிநீக்கு
  4. தங்கம் தென்னரசு செய்துள்ள இரண்டாம் உருப்படியான வேலை. முதலாவது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் மெதுவாக ஒவ்வொரு இடமாக தோண்டி இடம் பங்கப்படாமல் மீட்டுக் கொண்டே சென்றார்கள்.  ஒரு வராண்டதா போன்ற அமைப்பை அவர்கள் தோண்டும்போது அங்கிருந்து ஒரு மனிதன் மெல்ல எழுந்து நடந்து வந்தான்.

    ஆராய்ச்சி செய்பவர்களும், தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்து பின்வாங்க அவன் தெளிவான தமிழில், "பயப்பட வேண்டாம்.  குலோத்துங்கச் சோழன் காலத்தில் எனக்கு கிடைத்த ஒரு குளிகையை உண்டேன்.  அது இரண்டாயிரம் வயது தாண்டியும் உயிர் பிழைக்க வைக்கும் என்றார் அதைக் கொடுத்த அந்த தாடிப்பெரியவர். 

    இந்த இடமெல்லாம் மண்ணால் மூடப்பட்டபோது "கவலைப்படாதே இன்னுமொரு ஆயிரம் வருடங்கள் கழித்து நீ வெளிப்படுவாய். உன்னைக் காக்க அந்தக் காலத்து ​மனிதர்கள் வருவார்கள்" என்று சொன்னார்.  இதோ இப்போது கூட அவர் வந்து சென்றார்.  "உன்னை அழைத்துச் செல்ல மனிதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லிச் சென்றார்" என்றார் அந்த ஆறடிக்கும் உயரமான மனிதன்.  அவன் உடைகளோ வித்தியாசமாக இருந்தன...

    "அவர்களுடன் செல்..  உனக்கு நிறைய வேலை இருக்கிறது.  நான் பின்னர் அங்கே வந்து உன்னைச் சந்திக்கிறேன்" என்று அந்தப் பெரியவர் சொன்னதை அந்த மனிதன் இவர்களிடம் சொல்லவில்லை! 

    ஒரு கற்பனை...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் கற்பனை கதை நன்றாக உள்ளது. இது நிஜமாகவே என்றாவது நடந்தாலும் வியப்பில்லை. சில நாட்கள் /மாதங்கள் அது வியப்பாக பேசப்படும்.. பின் தற்சமயம் உயிருடன் எழுந்து வந்த மனிதனும், சிறிது காலத்திற்குப்பின் (அது நாள்வரை அடக்கம் மாதிரி உணர்வற்றி அடங்கி கிடந்த அந்த மனிதனும்,) சுற்றி வாழும் மனிதர்களைப் பார்த்து அனைத்தும் கற்றுக் கொண்டு, சுயநல போர்வையில் அடக்கமாகி விடுவான்.இதுதான் இப்போதைய உலக நீதி. :)))

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
    2. ஒரு நோக்கத்துடன் வந்திருப்பவன் அப்படி திசை மாறமாட்டான்!

      நீக்கு
    3. உங்கள் அசாத்திய நம்பிக்கைக்கு பாராட்டுக்கள். அவனே இறைவனாக வாழ்ந்து அனைவரையும் திருத்தி நல்வழிபடுத்தட்டும். வேண்டுவோம். 🙏.

      நீக்கு
    4. சுஜாதா கதை என்ரு சொல்லப் போகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன், உங்களுடைய கற்பனை.. சிறப்பு!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    நெல்லைத் தமிழர் சகோதரரின் நேற்றைய குரு பரம்பரை பதிவையும், கணக்கு டீச்சர் கதையையும் இன்றுதான் படித்தேன். இரண்டுமே அருமையாக உள்ளது. சகோதரர் நெல்லைத்தமிழர் குரு பரம்பரை பகுதியை சிறப்பாக சொல்லி வருகிறார். அவரது கற்றறியும் ஆர்வமும், அதை வெளிப்படுத்தும் விதமான எழுத்துத்திறனும் வியக்க வைக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள்.

    இன்றைய பகுதியான கங்கை கொண்ட சோழீச்வர கோவிலைப் பற்றியும், சோழ பேரரசு பற்றியும் விபரமாக எழுதி வருகிறார். அதற்கான அவரின் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. பதிவில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். படங்களும், விபரங்களும் மிக அருமையாக உள்ளது. நாங்கள் இங்கெல்லாம் சென்றதில்லை. அதனால் நிதானமாக படித்து தெரிந்து கொள்கிறேன். அழகாவும், விளக்கமாகவும் சொல்லி வரும் சகோதரருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வெகு சிறப்பான பதிவு...
    பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  9. மாளிகை மேடு சென்றதில்லை...
    மீண்டும் நல் வாய்ப்பு கிடைக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  10. தஞ்சையில் இப்படிப்பட்ட அகழ்வு ஆய்வுக்கெல்லாம்
    வாய்ப்பே இல்லை...

    இவர்களே கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்....

    பதிலளிநீக்கு
  11. ராஜராஜ சோழனின் ஆனை மங்கலச் செப்பேடுள்
    டச்சு நாட்டில் இருந்து திரும்பி வர இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
  12. ஆனை மங்கலச் செப்பேடுகள்
    உள் நாட்டு கயவர்களிடம் கிடைத்திருந்தால்
    பேரீச்சங் கொட்டைகளாகி இருக்கும்..

    பதிலளிநீக்கு
  13. ஓரு காலத்தில் அரண்மணையாக இருந்த இடம் இப்போது இடிபாடுகளாக இருப்பதை பார்க்க மனசுக்கு சங்கடமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!