28.5.26

"உன்னையே கொல்லவேண்டும் போலுள்ளது.. வரவா?"

 

கனவுச் சம்பவம்.... 

சுமார் 25 படிகள் இறங்கி கீழே கதவைப் பூட்டவேண்டும்.  அபார்ட்மெண்ட்தான். பதினைந்து படி இறங்கியதும் சிறு இடைவெளி.  அங்கே இன்னொரு வீடு.  அப்புறம் பத்து படி வளைந்து இறங்கி கதவு பூட்ட வேண்டும்.  இந்த மாதம் இவர், அடுத்த மாதம் இன்னொருவர் என்று எங்கள் ஐந்து வீடுகளுக்குள் ஒப்பந்தம்.  ஆறாவது வீடு தரைத்தளம்.  அவருக்கு இதில் பங்கில்லை.

இறங்கிச் சென்றபோது யாரோ என்னைத் தாண்டிச் செல்வது போல இருந்தது.  பூட்டும்போது மேலே எரிக் சென்றவர் திரும்ப வேண்டுமே..  யார் அது, அவர்கள் பார்த்துக் கொள்வார்களா என்று சிந்தனை வர, திரும்பி பத்து படி ஏறி வளைவில் பார்த்...

அங்கே நின்று கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்ட்ஸ் இளைஞியின் கைகளில் கத்தி.  சட்டென சுவரோடு ஒண்டிக் கொண்டாலும் பார்த்து விட்டாள்.  வேகமாக இறங்க முற்பட,  நானும் படபடப்புடன் இறங்கி கதவைத் திறந்து சாலைக்கு வந்தேன்.  அங்கே ஒருவன் நின்று கொண்டிருக்க, அவன் கண்கள் அவளை பார்த்தது.  அடுத்த கணம் நான் ஓடத்தொடங்கினேன்.   அவர்களும் துரத்தினார்கள்.

இரைக்க இரைக்க ஓடினேன்.  கண்ணில் படும் தூரம் வரை மக்கள் யாருமே கண்ணில் படாதது ஒரு அபத்திரத்தைத் தோற்றுவித்து பயத்தைக் கூட்ட மக்கள் இங்கிருப்பார்கள், யாராவது இங்கே கண்ணில் படுவார்கள் என்று ஒவ்வொரு இடமாக அங்குமிங்கும் ஓடுகிறேன்.  

ஓரிடத்தில் சிலபேர் கண்ணில்பட, அங்கு நின்று காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்துகிறேன்.  குரலே எழும்பா விட்டாலும் ஓரிருவராக பின்னர் இன்னும் சிலர் என்று கூடுகிறார்கள். நான் யாரைப் பார்த்து பயப்படுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.  அவர்கள் இருவரும் என்னருகிலேயே நின்று அவர்களும் யாரையோ தேடுவது போல நடிக்கிறார்கள்.  இருவர் கைகளிலும் சற்றே மறைவாய் ஒரு பெரிய கத்தி.

அவர்களை சுட்டிக் காட்டும் தைரியம் எனக்கில்லை.  மேற்கொண்டு ஓடுகிறேன்.  அவர்கள் என்னத்த துரத்தினால் மக்கள் கண்டு கொள்வார்கள் என்று நினைத்து ஓடுகிறேன்.  என்ன நடந்தது என்று தெரியாமல் ஓடுகிறேன்.

ஒரு அபார்ட்மெண்ட் படிகளுக்குள் நுழைந்து அங்கிருக்கும் கதவை மூடிவிட்டு அங்கே அதிசயமாக, அகாரணமாக காணப்பட்ட ஒரு திரைச் சீலையினைப் பார்க்கிறேன்.  சற்று தூரத்தில் நிதானமாக, ஆனால் வேகமான நடையில் வரும் அவர்களை பார்த்தேன்.  மெல்ல அந்த திரைச்சீலைக்குள் புகுந்து இயற்கையாக அது சுருண்டிருப்பது போல என்னை மறைத்து நின்று கொள்கிறேன்.  இப்போது கதவைத் திறந்து கொண்டு ஓட முடியாத நிலை.

பக்கத்து எண்ட்ரன்ஸில் நுழைந்த அவர் என் மிக அருகே உள்ள பக்கத்துக்கு மாடிப்படி வளைவில் நின்று தேடுகிறான்.  சிவந்த அவன் முகத்தில் பூனைக்கண்கள் நெருப்பு போல ஜொலிக்க அவை என்னைத் தேடுவதைக் கண்டு முதுகு ஜில்லிட்டது.

என்ன செய்யப்போகிறேன்?  எப்படி தப்பிக்கப் போகிறேன்?  யார் இவர்கள்?  நான் எதையுமே அபாயகரமானதாக பார்க்கவில்லையே...  அவர்களிடம் எப்படிச் சொல்ல..  பேசுவதைக் கேட்பவர்கள் போலவே இல்லையே...

அவனைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நான் இருந்த பக்கத்தின் கீழ்க் கதவு திறக்கப்பட்டதையோ, ஒரு உருவம் என்னை, திரைசீலையை நெருங்கியதையோ, அதைப் பற்றியதையோ நான் கவனிக்கவில்லை.

கனவுதான்.  இரவு முழுவதும் தூக்கமில்லாமல் இருந்து அதிகாலை மூன்றரை மணிக்குமேல் போனாப்போகுதுன்னு வந்த தூக்கத்தைக் கெடுத்த கனவு.

எழுந்து அமர்ந்துவிட்டு திருப்பிப் படுத்தாலும் இதே கனவு தொடர்கிறது.  மறுபடி எழுந்து பாத்ரூம் சென்று கால்களை நனைத்துக் கொண்டு வந்து படுத்தாலும் கனவு தொடர்கிறது.  மறுபடி எழுந்து 'முருகா முருகா' என்று சொல்லிப் படுத்தாலும் கனவு தொடர்க்கிறது.   தூங்கி கொண்டிருந்த பாஸை எழுப்பி "ஏய்..  என்னைக் கொல்ல வர்றாங்க" என்றேன் பாதி உண்மையான கலக்கத்துடன்.

"உம்..." என்று கேட்டுக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தார் பாஸ்...  

"நேபாளி மாதிரி ஒரு ஆம்பளையும், ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணுமா ரெண்டு பேர் என்னை துரத்தறாங்க, கையில் கத்தியுடன்..",

"உம்..."

அடச்சே...

"முருகா முருகான்னு சொல்லு..."

"முருகா..."

ம்ஹூம்..  என் பிரச்னையை நான்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.  ஆமாம், ஏன் துரத்துகிறார்கள்?  என்னை ஏன் கொள்ள வேண்டும்.  யாரையோ தேடித்தானே வந்தார்கள்?  நான் பார்த்து விட்டேன் என்பதாலா?  அவர்களைக் கொல்லவே இல்லை போலவே...  அப்புறம் என்னை மட்டும் ஏன்...

நிஜம் போலவே சிந்தனைகள் ஓட மறுபடி தூங்கினேன்.  இந்த முறையும் கிட்டத்தட்ட இதே கனவு வந்தது..  பின்னால் எழுந்த என் சிந்தனைகளுடனும், முருகா முருகா என்ற பிரார்த்தனைகளின் நினைவுகளுடனும் இதே கனவு வேறு வகையில் தொடர..

அட போங்கடா...

எழுந்து விட்டேன்.

===========================================================================================

1980 ; வெளியான படம் மகேந்திரனின் ஜானி.  இளையராஜா ராஜாங்கம்.  இளையராஜா தனது 83 வது வயதில் 1540 வது படத்துக்கு இசை அமைக்கிறார் என்று செய்தி பார்த்தேன்.  நம்பமுடியாத பேரதிசயம் அவர்.  

இந்தப் படத்தில் S P ஷைலஜாவுக்கு ஒரு அற்புதமான பாடல் கொடுத்தார்.  ஸ்{SPB தன் நண்பன் இளையஜாவிடம் தன் தங்கை ஷைலஜாவை காட்டி நல்ல வாய்ப்பு கொடுக்கச் சொல்லி, சில பாடல்களை அவரும் இவருக்கு கொடுத்து வந்த நேரத்தில் இந்தப் பாடல் சற்றே வித்தியாசமாய் இருந்து, பாட அவர் சற்று சிரமப்பட்டதாய் அண்ணனிடம் பின்னர் சொன்னதாக படித்த நினைவு.  கங்கை அமரன் பாடல்.  திரையில் சுபாஷினி, ரஜினி.  முள்ளும் மலரும் பட, ராமன் ஆண்டாலும்' காட்சியை நினைவு படுத்தும் நடன அசைவு ஆரம்பம்!

========================================================================================

சேர்க்கை சரியில்லை என்று 
குற்றம் கூறும் வழியின்றி, 
வாச்சவன் சரியில்லை அதனால் 
வாழ்க்கை போனது  என்று 
வாய்நோக அரற்றும் குறை இன்றி, 
நித்தமும் உன் அருளை, உன் பெருமையை 
பாடிப்பரவசம் அடைவோரையே எமக்கு 
நட்பாக, உறவாகக் கொடு சிவனே..


எதிர்பார்ப்பில்லாமல் இரு 
என்று சொல்லி 
மற்றவர்கள் அப்படி 
இருக்க வேண்டும் என்றே 
எதிர்பார்க்கிறோம்!!

======================================================================================

இமேஜ் பார்க்காத சிவாஜி 
நடிகர் திலகம் சிவாஜி பிற்காலத்தில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு தந்தையாக நடித்துள்ளார். ஆனால் அவர் இளம் வயதாக இருக்கும்போது, படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹீரோக்களின் தந்தையாக நடித்துள்ளார்.

அதில் முக்கியமான படம் 'வாழ்விலே ஒரு நாள்'. இந்தப் படத்தில் தன் வயதையொத்த ஸ்ரீராம் என்ற நடிகருக்கு தந்தையாக நடித்தார். செய்த குற்றத்திற்காக தந்தையையே கைது செய்யும் போலீஸ் அதிகாரியாக ஸ்ரீராம் நடித்தார். இவர்களுடன் ஜி.வரலட்சுமி, ராஜசுலோச்சனா, வி.கே.ராமசாமி. உள்ளிட்ட பலர் நடித்தனர்.

வி.கே.ராமசாமி வில்லனாக நடித்தார். சிவாஜிக்கும், வி.கே.ராமசாமிக்கும் இரண்டு சண்டை காட்சிகள் கூட படத்தில் உண்டு. அப்போதைய அரசியல் பிரமுகரான ஏவிபி. ஆசைத்தம்பி என்பவர் எழுதிய 'கசப்பும் இனிப்பும்' என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது.

தினமலர் பிளாஷ்பேக் 10/1/26

======================================================================================

காந்தியடிகளால் தம் குரு என்று கருதப்பட்ட ருஷ்ய ஞானி டால்ஸ்டாய், 'பல கோடி மக்களை கொண்ட இந்தியாவானது ஒரு பிரிட்டிஷ் கம்பெனிக்கு அடிமைப்பட்டதற்கு இந்திய சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளே காரணம்' என்று கூறுகிறார்
வியாபாரம் செய்ய வந்த ஒரு கம்பெனிக்காரர் 20 கோடி தொகையினரான மக்களை அடிமைப்படுத்தினார்கள்.
மூடநம்பிக்கை சிறிதும் இல்லாத ஒரு மனிதனிடம் இதைச் சொல்லிப் பாருங்கள். இச்சொற்களின் பொருள் என்ன என்பதை அவன் உணர மாட்டான். 30 ஆயிரம் பேர் பெரிய வஸ்தாதுகள் அல்லர். பலம் குறைந்த அந்த மக்கள் வீரமும், ஆற்றலும், சுதந்திர வேட்கையும் மிக்கவர்கள் ஆன 20 கோடி மக்களை அடக்கி பணிய வைத்து விட்டார்கள் என்றால் அதற்கு பொருள் என்ன? 30,000 20 கோடி என்ற எண்களை பார்க்கின்றபோது என்ன தெரிகிறது? இந்தியனை அடிமைப்படுத்தியது ஆங்கிலேயர் அல்லர். இந்தியர் தம்மைத்தானே அடிமைப் படுத்திக் கொண்டனர் என்பது விளங்கவில்லையா? "
இது 'சுதந்திர இந்துஸ்தானம்' என்ற இந்திய பத்திரிகை ஒன்றின் ஆசிரியருக்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.

'- விடுதலைப் போரில் தமிழகம்' என்ற நூலில் ம பொ சி. -

========================================================================================

இளையராஜாவின் இன்னொரு இசைவிருந்து.  இன்னொரு புதிய பாடகிக்கு ஒரு மிக நல்ல பாடல் வழங்கினார் இளையராஜா.  உமா ரமணனுக்கு வாய்த்த ஒரு அருமையான பாடல்.

1981 ல் வெளிவந்த பாரதி வாசுவின் பன்னீரபுஷ்பங்கள் படத்தில் வரும் ஆனந்தரங்கம் கேட்கும் காலம் எனும் பாடல்.  இதுவும் கங்கை அமரன் பாடல்தான்.


=====================================================================================

சில நகைச்சுவைகளும்.  நினைவுக்குளத்தில் எறியும் சில கற்களும்!









சுஜாதாவின் இந்தக் கதையைப் படித்து விட்டு ஒருவர் "உன்னையே கொல்லவேண்டும் போலுள்ளது..  வரவா?" என்று லெட்டர் போட்டிருந்தாராம்!





குமாரி பிரேமலதா கதை தொடரலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நாடகம்!





45 கருத்துகள்:

  1. அந்த 'அட! போங்கடா'வில் தான் அது வரை எழுதிய அத்தனையும் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...  எழுத்தில்தான் இவ்வளவு.  கனவில் அது சில கணங்கள்தான்!

      நீக்கு
  2. எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன?.
    அந்தப் பழைய பத்திரிக்கை ப் பக்கங்களைப் பார்ப்பதில் இப்பொழுதும் ஒரு அலாதி இன்பம் நம்மை வசப்படுத்துகிறது.
    அதே பத்திரிகையின் இன்றைய பக்கங்கள் பிற்காலத்தில் இதே மாதிரியான உண்ர்வுகளை நம்மில் ஏற்படுத்துமா?
    முடிந்தவத்கள் யோசித்துப் பார்க்கலாம்
    யோசிப்பவர்களில் பதில் தான் இக்கால தமிழ் பத்திரிகைகளின் எழுச்சியும் அல்லது வீழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகம்தான்.  அவரவர்களுக்கு அவரவர் இளமை சுகம்.  இப்போது இருப்பவர்களுக்கு படிக்கும் பழக்கமே இல்லை.  இப்போது இருப்பவர்களுக்கு பிற்காலத்தில் வாட்ஸாப் நிலையே மாறி அட்வான்ஸ் டெக் வர, இதைச் சொல்லி பெருமூச்சு விடுவார்களாயிருக்கும்.  மாற்றம் ஒன்றே மாறாதது! எழுச்சியும் வீழ்ச்சியும் நம் மனதில் தான். காலம் சென்று கொண்டே இருக்கும்.

      நீக்கு
    2. அன்றைக்கிருந்த குமுதம் விகடன் சாவி கல்கி குங்குமம் போன்ற பத்திரிகைகளின் பதிப்பை இப்போதும் படிக்கலாம். தற்கால பத்திரிகைகள் அனைத்தும் அவற்றில் பத்து சதம் கூட இல்லை. காரணம் மக்களின் தரம் பத்து சதம்தான்

      நீக்கு
    3. வாங்க நெல்லை.  தற்கால பத்திரிகைகள் விஷயம் இல்லாமல் திண்டாடுகிறன்றன.  பெரும்பாலும் சினிமா செய்திகளையே வைத்து பக்கங்களை நிரப்புகின்றன.  அந்தக் காலத்தில் கதைகள் படிக்க பத்திரிகைகள் மட்டும்தான்.  ஆனால் இப்போது?  அதனால் கதைகள் என்பது அலுத்துப்போகும் அளவு படிக்க முடிகிறதது.

      நீக்கு
    4. இதே போல தற்கால மேலே குறிப்பிட்ட பத்திரிகளின் பக்கங்களையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா, ஸ்ரீராம்? ஒரு மாறுதலா இருக்குமே என்பதற்காகத் தான்.

      அது சரி, எபியை இக்கால இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?
      யாராவது சொல்லுங்களேன்.

      ஒரே மாதிரியான பின்னூட்டங்களில் மாற்றம் வந்தால் இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும் என்பதால் இந்த ஆசை.

      நீக்கு
    5. // இதே போல தற்கால மேலே குறிப்பிட்ட பத்திரிகளின் பக்கங்களையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா, ஸ்ரீராம்? ஒரு மாறுதலா இருக்குமே என்பதற்காகத் தான். //

      முடியும் என்றுதான் நினைக்கிறேன்.  பார்ப்போம்.

      வலைத்தள பக்கங்களை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது கடினம்.  ரஷ்ய பனிக்கரடியிடம் கம்பளி விற்பது போல.

      நீக்கு
  3. டால்ஸ்டாய் கருத்து நூறு சதம் சரி. பொதுவாக இந்தியர்கள் அதிலும் இந்துக்கள் நல்ல குடிமக்கள் அல்லர். சுயநலவாதிகள். தேசத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் எண்ணாதவர்கள். அவர்களைப் பொறுத்தவரை எவன் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை. தன் பிழைப்பு ஓடவேண்டும். இவர்களுக்கு ஏற்ற மாதிரி வெளிநாட்டுஊஅ தலைவர்கள் பிற நாட்டிற்கு நல்லது செய்யும் ராகுல் குடும்பம் மம்தா ஸ்டாலின் போன்ற தலைவர்கள் அமைகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நம்நாட்டு மக்களுக்கு மட்டுந்தான் பொருந்துமா?

      நீக்கு
  4. காந்தியே டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தி வழி தனி வழி.  அவர் எண்ணங்களும் செயல்பாடுகளுமே வேறாயிருந்தது.

      நீக்கு
    2. என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் எண்ணங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றா? :))

      நீக்கு
    3. இல்லை. இரண்டுமே வேறு திசையில் குவிந்திருந்தது. இதைத் தொடர விருப்பமில்லை!

      நீக்கு
  5. இளையராஜா 1500 படங்கள்.. அதில் எண்பது சதத்துக்கு மேல் ஹிட் பாடல்கள். யாராலும் நெருங்க இயலாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் மனதில் 80 சதவிகிதம் ஹிட் என்றால் இன்னொருவர் மனதில் நாம் விட்டிருக்கும் 20 சதவிகிதம் சேர்த்து வேறொரு அளவீட்டில் 80 சதவிகிதம் ஹிட்.  இசையைப் பொறுத்த வரை இளையராஜா யுகபுருஷர்.

      நீக்கு
    2. உண்மைதான். எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

      நீக்கு
    3. ஆக மஹாகவி பாரதிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
      பாரதியார் கவிதைகளுக்கு இசை அமைத்தவர்களை கொண்டாடி மகிழ்வோம்.

      நீக்கு
    4. ஓ... யுகபுருஷர் வார்த்தை உறுத்துகிறதோ!

      நீக்கு
    5. இல்லை. இசை அமைத்தவர்கள் என்று பன்மையில் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இளங்காலை வணக்கம். அப்பாடி என்ன பயங்கரமான கனவு ஶ்ரீராம். !!! எனக்குத் தொலைந்து போவது போலக் கனவு வரும். எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு நான் பத்திரமாய் இருக்கேன் என்று எனக்கே உறுதிப் படுத்திக் கொள்வேன். திரில்லர் படங்கள் பார்த்துவிட்டுப் படுக்க வேண்டாம். மனசின் குழப்பம் கனவுகளாகின்றன. நல்ல தூக்கம் வரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா..  வணக்கம். த்ரில்லர் படங்கள் நான் மதியம் அல்லது மாலையில் பார்ப்பேன்.  இரவில் பார்ப்பதில்லை!!  கனவுகளுக்கான காரணங்களை கண்டுபிடிக்க முடிவதேயில்லை.  முன்னர் எனக்கு என்னை ஒரு யானை துரத்திக் கொண்டே இருந்ததது.  பல மாதங்கள் அந்தக் கனவு வந்தது!

      நீக்கு
    2. உண்மைதான் மா. . கனவுகளுக்கு அர்த்தம் இல்லைதான். இப்போது அதிகப் பயக்கனவுகள் வருவதில்லை. சிங்கம் கனவில் வரமாட்டாரா என்று நினைப்பேன். ஆளைவிடு என்று போய்விட்டார்:)

      நீக்கு
    3. எதிர்பார்க்கும் எதிர்பார்க்கும் கனவு வந்தால் எப்படி?!  சினிமாவா புக் செய்து பார்க்க!!  எதிர்பாராத ​நேரத்தில், எதிர்பாராதபடி வருவார்.

      நீக்கு
  7. ஆனந்த ராகம் உமா ரமணன் இரண்டையும் மறக்க முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  உமா ரமணனுக்கு பெரிய ப்ரேக்கைக் கொடுத்த பாடல்.  ஆனால் ரமணனால் ஏனோ இவரளவு புகழ்பெற முடியவில்லை!

      நீக்கு
    2. நன்றாகப் பாடுவார். அந்தக் காலங்களில் இவர்களின் இசையை தான் தம்பி திருமண ரிசப்ஷனுக்கு வைத்தோம். இரண்டு மணி நேரக் கச்சேரி.

      நீக்கு
    3. ஆமாம்.  இன்றும் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு புத்தாண்டிரவில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி நன்றாக நினைவிருக்கிறது. 

      அவர் ஒரு படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் தெரியுமோ..  காதல் காதல் காதல் 

      நீக்கு
  8. சிவாஜி சாரைப் பற்றி எத்தனை பாராட்டினாலும் தகும். சமீபத்தில் கூட, ஏதோ நடிகை அவரது நேர மேலாண்மையைச் சிலாகித்திருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியோ..  அவர்தான் சமீபத்தில் பேட்டியளித்திருந்த அந்தக் கால நடிகை! 

      நீக்கு
    2. நான் நேற்று நடிகர் மோகன்ராமின் பேட்டியை கேட்டேன். அதில் படையப்பா படத்தில் ஒரு நாலு வரி வசனத்தை சொல்லி சொல்லி பார்த்து, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் நாலுவிதமாக சொல்லிக் காட்டினாராம் சிவாஜி, கே.எஸ்.ரவிகுமார், "முதல் வரி இரண்டாவது முறை சொன்ன மாதிரி, இரண்டாவது வரி நாலாவது முறை சொன்ன மாதிரி" என்றதும், "அப்படியா? சரியா சொல்றேனா பாரு" என்று சொல்லிக் காட்டினாராம். இதைப் பார்த்த நடிகை லட்சுமி, "பாரு அவருடைய அனுபவம் எவ்வளவு? இருந்தாலும் என்ன டெடிகெஷன்! அதனால்தன் அவர் அங்க இருக்கார்" என்றாராம்.

      நீக்கு
    3. அது சிவாஜி! 'என் விருப்பத்துக்கு நடிக்கவில்லை, உன் விருப்பம் சொல்லு' என்று இருந்திருக்கிறார்.

      நீக்கு
  9. மீண்டும் காலை பார்க்கலாம். அனைவருக்கும் நல்ல நாளுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. ஹாஹாஹா! நல்ல கனவு! எனக்கு நேற்று நான் அண்டர்கவர் ஆஃபிசராக இருக்கிறேன், நான் செல்ல வேண்டிய ஒரு ஆபரேஷனுக்காக என்னோடு வந்திருக்கும் இன்னொரு அண்டர்கவர் ஆஃபிசர் செல்கிறார். எதிராளிகள் என்னை அடையாளம் கண்டுவிடப் போகிறார்கள் என்று எனக்கு பயம் வருகிறது, இத்தனை நாட்கள் என்னை காப்பாற்றிய சாய்ராம் இனிமேலும் காப்பாற்ற மாட்டாரா என்று நினைத்துக் கொள்கிறேன். முழிப்பு வந்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு பார்த்த 'துரந்தர்' தினமும் கேட்கும் சாய்பாபாவின் உரைகள் இரண்டும் கலந்து வந்து விட்டதோ என்ரு தோன்ரியது. ஹஹஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. நான் சமீபத்தில் த்ரில்லர் படம் கூட எதுவும் பார்க்கவில்லை!

      நீக்கு
  11. //எதிர்பார்ப்பில்லாமல் இரு
    என்று சொல்லி
    மற்றவர்கள் அப்படி
    இருக்க வேண்டும் என்றே
    எதிர்பார்க்கிறோம்!!//
    சபாஷ்!

    பதிலளிநீக்கு
  12. ஆசைய காத்துல தூது விட்டு.. பாட்டின் ரிதம் எனக்குப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எனக்கும் அதுவும் பிடிக்கும்!

      நீக்கு
  13. புஷ்பா தங்கதுரைக்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் குமாரி பிரேமலதா. எதிர்பாத்த அளவு ரீச் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமாரி பிரேமலதா யார் என்று ஜீவி ஸார் சொல்வார்!

      நீக்கு
  14. சுஜாதாவின் கதையை முழுமையாக பகிர்ந்திருக்கலாம்.
    ஜோக்குகளை பெரிது பண்ணி படிக்க அலுப்பாக இருக்கிறது. காலையில் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே..  ஸ்வீட் ட்ரீம்ஸ்.  நாட் ஸ்வெட் ட்ரீம்ஸ்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!