வல்லிக்கண்ணன்
ஒரு தெரு.
ஒதுக்குப்புறமான தெரு அல்ல. போக்குவரத்து அதிகமாக உள்ள முக்கியமான வீதிகளில் ஒன்றுதான் அது.
நாகரிக யுகத்தின் ஜீவத் துடிப்பான வேகம் அந்தத் தெருவிலும் மனித நடமாட்டமாகவும், சைக்கிள்களின் ஓட்டமாகவும், கார் வகையராக்களின் துரித இயக்கமாகவும் பரிணமித்துக்கொண்டு தானிருந்தது.
தெருவின் ஒரு இடத்தில் ஒரு நாய் செத்துக் கிடந்தது.
அது கிடந்த இடம் தெருவின் மத்தியுமல்ல; ஒரு ஓரமும் அல்ல. அந்த நாய் நடு வீதியில் காரிலோ வண்டியிலோ அடிபட்டு, வேதனையோடு நகர்ந்து நகாந்து தெரு ஓரத்தை அடைய முயற்சித்து, அம் முயற்சியிலேயே உயிரை விட்டிருக்க வேண்டும். தெரு நடுவில் அழுத்தமாகப் படிந்திருந்த ரத்தச் சிதறலும், நெடுகிலும் கறையாய் ஓடிக்கிடந்த சுவடும் அப்படித்தான் எடுத்துக் காட்டின.
நாய் எப்படி அடிப்பட்டது; எவ்வளவு வேதனை அனுபவித்தது; எப்பொழுது செத்தது என்பது எதுவும் யாருக்கும் தெரியாது. அது செத்துக்கிடந்தது. அது எல்லோர் பார்வையிலும் பட்டது. எவர் மனசிலாவது உறுத்தியதா?-தெரியாது!
கார்களில் போகிற பெரிய மனிதர்கள் பார்வையில் எல்லாம் பட்டாலும் எதுவும் படாத மாதிரித்தான். அவர்களில் பலர் காரில் ஏறி உட்கார்ந்ததும் தான் சுமக்கிற தனது கூட்டுக்குள்ளேயே ஒடுங்கிவிடும் நத்தை மாதிரி தம்மில் தாமே முடங்கிவிடுவார்கள். பிறகு இறங்க வேண்டிய இடம் வந்ததும்தான் உயிர்ப்பு காட்டுவார்கள். அவர்களுக்குப் புற உலக விஷயங்களில் சிரத்தை எதுவும் இருக்க முடியாது.
தாமே இயங்கும் வேக வாகனங்களில் சவாரி போகிறவர்கள் சாதாரண விஷயங்களைக் கவனிக்க முடியுமா என்ன? தலை போகிற வேகத்திலே பறக்கிற அவர்களே ஏதாவது விபத்தில் மாட்டிக் கொண்டால்தான் "ஓகோ. இதுதான் பூலோகமா!" என்ற உணர்ச்சி பிறக்கும் அவர்களுக்கு.
-ஓ, மறந்துவிட்டேனே! வேறொரு சந்தர்ப்பத்திலும் உணர்வு பிறக்கும்தான். மினுக்கும் அலங்காரத்தோடு அல்லது உறுத்தும் அலங்கோலத்துடன் நவயுக ஜூலியட் அசைந்து நடந்து செல்வதையோ, பஸ் ஸ்டாப்பில் நிற்பதையோ காணும் போதுதான்.
கேவலம் ஒரு நாய் - அதிலும், அடிபட்டுச் செத்த நாய் பெரும்பாலோர் கண்களை உறுத்தாததில் அதிசயம் எதுவும் இல்லைதான்.
கார்கள் ஓடிக் கொண்டிருந்தன.
"சால மிகுத்துப் பெய்த" மனிதச் சுமையைத் தாங்கியவாறு பஸ்கள் போய்வந்துகொண்டுதான் இருந்தன. சைக்கிள்கள். ரிக்ஷாக்கள், வகையரா வகையரா எதற்கும் குறைவு இல்லை அந்த வீதியிலே.
நடந்து போகிறவர்கள்?
அவர்கள் இல்லாமலா தெரு என்று ஒன்று இருக்க முடியும்? போனார்கள்; வந்தார்கள். பலப்பல பண்பினர் அவர்கள்...
"இதென்னய்யா?"
"என்னமோ செத்துக் கிடக்குது!"
"நாய் ஓய்!"
"காரிலே அடிபட்டிருக்கும். நாய் பெருத்தாப்பிலே என்பது சும்மா தானா? ஏகப்பட்ட நாய்கள்! அதிலே ஒரு நாய் செத்தால் என்ன கெட்டுவிடப்போகிறது?" என்றபடி போனார்கள் அவர்கள். நாய் உடல் அப்படியேதான் கிடந்தது.
வெயில் ஏறிக்கொண்டிருந்தது. ஈக்கள் மொய்த்தன. சிறுவர்கள் வேடிக்கையாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். பெரியவர்கள் பார்த்தார்கள்; பாராமலும் போனார்கள்.
காற்றடித்தது மழை பெய்தது. இரவு வந்தது; போனது... பொழுது விடிந்தது. சூரியன் சுடும் வெயில் வீசினான்...
அந்த நாய் உடல் அங்கேயே தான் கிடந்தது. நடந்து போனவர்கள் மூஞ்சியைச் சுளித்தார்கள். சிலர் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.
"சே, தரித்திரம்! தரித்திரம்!"
"நகரம் வரவர மோசமாகி வருகிறது. ஒரு தெரு கூட சுத்தமாக இல்லை".
"அதிலும் மழை பெய்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தெரு. பூராவும் ஆபாச மேடுதான்".
இப்படி இருவர்பேசிக்கொண்டு போனார்கள்.
"நகரசபை தன் கடமையைச் சரிவரச் செய்வதில்லை. பாருமேன் தெருவிலே இப்படியா கிடப்பது?"
"அப்புறம் அழகு நகரம் எப்படித்தான் அமையுமோ?"
"தெருக்களை தினம் சுத்தம் செய்வது இல்லை. அழகுபடுத்த பூங்காக்கள் அமைக்கிறார்களாம்!"
இது ஒரு சம்பாஷணை.
அவர்களும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போனார்கள். தினந்தோறும் அப்படிப் போகத் தயங்கவும் மாட்டார்கள்.
அந்த நாய் அழுகிக் கிடந்தது அதே இடத்தில்.
ஒருவர் பார்த்தார். "அசுத்தமே வியாதிக்குக் காரணம்” என்ற போர்டு ஒன்றையும் பார்த்தார். ஏதோ எண்ணம் ஏற்படவே, முகத்திலே சிரிப்பு படர்ந்தது. அவர் வேகமாக முன்னேறினார். ஆபீசுக்குப் போனதும், ஆபீஸ் மேஜையிலிருந்த தாளை எடுத்து, ஆபீஸ் பேனாவினால், ஆபீஸ் மையை உபயோகித்து, "ஆசிரியருக்குக்கடிதம்" எழுதினார். அதை பிரபல ஆங்கில தினசரிக்கு அனுப்பி வைத்தார். அந்த "லெட்டர் டு தி எடிட்டரில், நகர வீதியின் அசுத்தம். அதனால் விளையக்கூடிய நோய் முதலியனபற்றிச் சூடாக எழுதியிருந்தார்.
அதைத் தபாலில் சேர்த்ததும், தன் கடமையைச் செய்த திருப்தி ஏற்பட்டுவிட்டது அவருக்கு.
அந்த நாய் அதே இடத்தில் தான் கிடந்தது.
"சமூக சேவை" செய்யும் மாதுசிரோமணிகள் இருவர் அவ்வழியாகப் போக நேர்ந்தது. அவர்கள் கூடை மாதிரியும், சட்டி மாதிரியும் இருந்த "வேனிட்டிபேக்" கைத் திறந்து எதையோ எடுத்து மூக்கருகில், பிடித்தபடி வேக நடை நடந்தார்கள். வாசனை படிந்த கைக்குட்டையால் வீசிக் கொண்டார்கள். "ரொம்ப டர்ட்டியாப் போச்சு!" என்று முனங்கினாள் ஒருத்தி.
"சுகாதார வார”த்துக்கு ஓடியாடி உழைத்த அம்மையார் அவள். "தெய்வத் தன்மை போன்றது சுத்தம். சுத்தம் என்பதே தனி அழகுதான்" என்றெல்லாம் உபதேசித்தவள் அவள். இன்னும் உபதேசிக்காமலா இருப்பாள்?
அவள் போனாள்.
அந்த நாய் உடல் அங்குதான் கிடந்தது.
பக்தி செய்வதைப் பிழைப்பாகக் கொண்டுவிட்ட இரண்டு உத்தமர்கள் நடந்தார்கள். மண்ணுலகத்து மோசமான வாடை அவர்கள் புலன்களைத் தாக்கியது. சிந்தனையைக் கிளறியது.
"நகரம் என்பது நரகத்தின் மறு உரு" என்றார் ஒருவர்.
மற்றவர் ஆமோதித்தார். "அதனால்தான் இராமலிங்கர் சொன்னார் தேட்டிலே மிகுந்த சென்னையிலிருந்தால் என்னுளம்சிறுகுறும் என்று நாட்டிடை நல்லதோர் நகர்ப்புறம் நண்ணினேன்..."
"இந்த மனம் இருக்கிறதே, அதைக் குரங்கு என்றார்கள். பேய் என்றார்கள். நான் நினைக்கிறேன் அதைக் கழுகு என்று கூடச் சொல்லலாம். "கழுகு அசுத்தங்களையும் ஆபாசங்களையும் உணர்ந்தறிந்து நாடுவது போலவே, மனமும் பறந்து பாய்ந்து அவற்றைச் சுற்றி வட்டமிட்டு உழல்கிறது. பிணத்தின்மீது அதற்கு மோகம்"
"ஆமாம் ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்... அதைச் சுடுகாட்டுக் காக்கை என்றும் சொல்லலாம்..காக்கை உகக்கும் பிணம் என்று ஒரு பாட்டு இருப்பதாக ஞாபகம்!"
அவ்விரண்டு பேரும் சொற்களைக் குத்தி இழுத்துக் குதறியபடி போனார்கள்.
நாய் நாறிக்கொண்டு கிடந்தது அதே இடத்தில்...
அவரவர் வேலை அவர் அவர்களுக்கு! அவரவர் கவலைகள் எவ்வளவோ!
வெயிலும், காற்றும், தூசியும், ஈயும் தம் தம் வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டுதான் இருந்தன..
அவ்வழியே ஒருவன் வந்தான்... நின்றான்... அங்குமிங்கும் பார்த்தான்.
சற்று தள்ளி ஒரு பள்ளம் தென்பட்டது. அவன் கையில் மண் வெட்டியும் இருந்தது.
அவன் அந்த உடலை எடுத்துக் குழியில் சேர்த்தான். மண்ணைக் அள்ளிப் போட்டான். நன்கு மூடினான். தன் வழியே போனான். அப்படி ஒரு வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டவன் இல்லை அவன். அவன் செய்த வேலைக்குக் கூலி கிடைக்காது என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இருந்தாலும், நாறிக்கிடந்த நாய் உடல் அவன் பார்வையில் பட்டதும், ஏதாவது செய்தாகவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
பின்குறிப்பு : இன்று செவ்வாய்க்கு கதை இரண்டு மூன்று மனதில் யோசனை ஓட, இந்தப் புத்தகம் கிடைத்ததும் இதிலிருந்து எடுக்கலாம் என்று தோன்றியது. நான் பார்த்த தகுதி ஒன்றுதான்.. வெளியிட தகுந்ததாய் குறைந்த பக்கங்கள். அந்தப் புத்தகத்திலேயே இதுதான் குறைந்த பக்கங்கள் கொண்டதாய் இருந்தது. ஐந்து பக்கங்கள் மட்டுமே. வெளியிட்டு படித்த பொது கடந்த இரண்டு வாரங்களின் தொடர்ச்சி போல தெரிந்தது.- ஸ்ரீராம்
========================================================================================
வல்லிக்கண்ணன் அறிமுகம்
இலக்கியச் செல்வர் என்று போற்றப்படும் மூத்த முற்போக்கு எழுத்தாளர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய 18 சிறுகதைகளின் தொகுப்பாகும். இந்த நூல். நண்பர் திரு வ. விஜயபாஸ்கரன் அவர்கள் 1955 முதல் 1962 வரை நடத்திய முற்போக்கு இதழ் 'சரஸ்வதி'யில் வெளிவந்தவை இச்சிறுகதைகள். நூலாசிரியர் பற்றிய ஒரு குறிப்பை இத்துடன் இணைத்துள்ளோம். 60 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய வாழ்வில் அவரின் சாதனைகளை (சிறுகதை, குறுநாவல், கட்டுரை, கவிதை, நாடகம் முதலியன) ஓரளவு இது எடுத்துக்கூறும் என நம்புகிறோம். தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள் வரலாறு பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். 82 வயது ஆகியும் இளைஞன் போன்று சுறு சுறுப்புடன் தமது இலக்கிய பணியை தொடர்ந்து செய்து கொண்டும் இளம் எழுத்தாளர்களை ஊக்கு வித்தும் வருகிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டபுள் தமாக்கா!
வேறு எதையாவது இதனுடன் இணைப்பதற்கு பதிலாக ஒரு சிறு சின்னஞ்சிறு புதுமையாக வல்லிக்கண்ணன் அவர்களின் இன்னொரு கதையை அதே புத்தகத்திலிருந்து தந்து விடுகிறேன். காதைக் கொண்டாங்க,, முதல் கதை எனக்கு அவ்வளவு திருப்தி தரவில்லை!!
இளகிய மனசு
மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு.
அப்படித்தான் சொல்லி வாந்தார்கள் அவளை அறிந்தவர்கள் எல்லோரும். அவளும் அவ்வாறு எடுத்துக் சொல்லத் தவறுவதில்லை.
பெரிய இடத்தைச் சேர்ந்தவள் அவள். உருவத்திலும் அவள் பெரியவள்தான். பொதுவான ஸ்திரீ தர்மத்தை அவளும் அனுஷ்டித்து வந்தாள். அதனால் அவளது வயது. நின்றுபோன கடியாரத்தின் முட்கள் போல, கிழிக்கப்படாத காலண்டர் தாளைப்போல. ஒரே எண்ணில் நின்றிருந்தது. அஞ்சாறு வருஷங்களாகவே அவள் வயது இருபத்து நான்காகத்தான் இருந்தது!
அதற்காக அவளுடைய உடல் வளர்ச்சியுறாமல் போகவில்லை. கேவலம் நூற்றைம்பது பவுண்டு மாத்திரமே கனத்திருந்த அவளது தேகம் நாளடைவில் இருநூற்றுச் சொச்சம் பவுண்டு எடையாகப் பெருத்திருந்தது. வேலை எதுவுமே செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தும், அப்படி உட்கார்ந்தே இருப்பது அலுத்துப் போனால் படுத்தும், உடலுக்குச் சுகம் தேடினால் அது பெரியதனம் பெறாதா என்ன? பெருஞ் சாப்பாட்டுக்கு இடைப்பட்ட வேளைகளில் எல்லாம் பழம் என்றும், பாதாம் பருப்பு என்றும், சாக்லெட் என்றும் உள்ளே திணித்துக் கொண்டிருந்தால், அதை எல்லாம் ஏற்றுக் கொள்கிற உடல், கொடியாகவா இருக்கும்? ஆகவே, மீனாட்சி அம்மாள் பிறப்பினால் மட்டுமல்ல. தோற்றத்தினாலும் பெரிய மனுஷியாகத்தான் விளங்கினாள்.
அவளுக்கிருந்த இளகிய மனசு அவளுடைய பெருந் தன்மையின் மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று தான் பலரும் சொன்னார்கள்.
"நம்ம பெரிய வீட்டு மீனாட்சிக்கு இருக்கிற தங்கமான மனசு வேறு யாருக்குமே இருக்க முடியாது. துன்பத்தைக் கண்டு சகிக்க முடியாது அவளாலே. இன்னொருத்தர் காலில் முள் தைத்துவிட்டால் அவளுக்குத் தனது கண்ணிலே குத்திவிட்டது போல் களகளவென்று கண்ணீர் வடித்து விடுவாள் அப்பாவி" இது அம்மாளை அறிந்த ஒரு அம்மையாரின் அபிப்பிராயம்.
"இதைப்போயி பெரிசாச் சொல்லுறியே! அன்னைக்கொரு நாள் நான் மீனாட்சியைப் பார்க்கப்போனேன் பாரு. அப்ப அவள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். நான் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன். பிறகு அவளைத்தேற்றி விசாரிச்சதிலே விஷயம் புரிஞ்சது. அவள் ஒரு புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருந்தாளாம். அதிலே உள்ள கதாநாயகிக்கு ஏகப்பட்ட கஷ்டமும் துன்பமும் வந்து அவள் வேதனைப்படுகிறாள். அதனாலே மீனாட்சிக்கு மனசு குழம்பி சோகம் முட்டி, அழுகை வந்துவிட்டது. ஐயோ பாவம்" என்று நீட்டி நீட்டிப் பேசினாள் பார்வதி என்றொரு அம்மாள்.
அவள் பேச்சு பொய் அல்ல. மீனாட்சியின் குணவிசித்திரங்களில் அதுவும் ஒன்று தான்.
பொழுதுபோக்கிற்காகக் கதை படிக்கிற மீனாட்சி அம்மாள். தான் படித்துக் கொண்டிருப்பது கதை என்பதை மறந்தே விடுவாள். கதா பாத்திரங்கள் அனுபவிக்கிற கொடுமைகள் அவள் உள்ளத்தைத் தொடும்: உணர்வைக் கிளுகிளுக்கச் செய்யும். கண்ணின் மணிகள் நீரிலே மிதக்கும். அப்புறம் கண்ணீர் பெருகி ஓடவேண்டியது தானே!
கலியாணம் ஆகாமல் ஏக்கமடைந்து "என்று வருவானோ?" என மனம் குமைந்து புழுங்குகிற கன்னிப் பெண்களின் நிலைமை அவளுக்கு வேதனை தரும். கணவனை இழந்து வாழ்க்கை வெயிலி ல் வாடி வதங்கும்இளம் விதவையின் துயரம் அவள் உள்ளத்தில் பெருத்த துக்கத்தை எழுப்பும். மாற்றாந் தாயின் கொடுமைக்கு இலக்காகும் சிறு பிள்ளைகள், ஏழை எளியவர்கள், பொதுவாக எல்லோருடைய வேதனையும் தான் அவளைக் கண்கலங்க வைத்துவிடும். கதைகளைப் படிக்கறபோது தான்!
-சில கதைக்காரர்கள் "இலக்கியம் பண்ணுகிறேன்", "உணர்ச்சிகளைச் சித்திரிக்கிறேன்" என்று சொல்லி, எங்காவது கதையை ஆரம்பிப்பது - திடுதிப்பென்று முடித்து விடுவது கதாபாத்திரங்களின் மனசைப் போட்டுத் "தாளித்து புரட்டி துவட்டி எடுப்பது போன்ற உத்திகளைக் கையாளுகிறார்கள் அல்லவா? அவ்வித எழுத்துக்களை பெரிய இடத்து மீனாட்சி அம்மாள்படிக்க நேர்ந்தால், அவளுக்குச் சில தினங்கள் தூக்கமே பிடிக்காமல் போய்விடும். கதாபாத்திரங்களின் உளப்போராட்டங்களைப் படித்தால் அவளுக்கு ஒடுக்க முடியாதவாறு உள்ளக் குழப்பம் ஏற்பட்டுவிடும்.
கதைச் சுவைக்காக, "வீட்டை விட்டுக் கிளம்பிய அவன் இருளோடு இருளாகக் கலந்து மறைந்தான்" என்பதுபோல் எதையாவது எழுதிக் கதையை முடித்து விடுகிறார்களே சிலபேர். மீனாட்சி அம்மாள் எவ்வளவு கஷ்டப்படுவாள் என்பது அவர்களுக்குத் தெரியாது பாவம்!
"வீட்டை விட்டு வெளியே போனவன் சாப்பாட்டுக்கு என்ன செய்தானோ? எங்கே படுத்துத் தூங்கினானோ? என்ன ஆகிறானோ?" என்று பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை அலைமோதச் செய்து தனது உள்ளத்தையே ஒரு கடலாக மாற்றிக்கொண்டு அவதியுறுவாள் அவள். என்றோ படித்த எதையாவது எண்ணிக்கொண்டு, "பாவம், அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம்! உடம்பு பூராவும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொள்ளணும் என்றால்? ஐயோ!" என்று மனம் துணுக்குறுவாள். அவள் கண்கள் தானாகவே கலங்கிவிடும்.
"உள்ளம் உருக்கும் கதை" என்று விளம்பரப்படுத்தப்படுகிற சினிமாப் படங்களைப் பார்க்கப் போனால் மீனாட்சி அம்மாளின் கைக்குட்டை "சொட்டச் சொட்ட நனைந்து போகும். அதற்காகப் படங்களைப் பார்க்கச் செல்லாமல் இருந்து விடுவாளா அவள்? எந்தப் பெண் தான் அப்படி நின்று விடுகிறாள்?
இவற்றினால் எல்லாம் தான் பலரும் சொன்னார்கள் "மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு" என்று.
"இளகிய மனசு" படைத்த பெரிய வீட்டு அம்மாள் தர்மத்துக்குப் பயந்தவள்; நியாயத்தை அனுஷ்டிக்க ஆசைப்படுபவள்.
கண்டிப்பானவள். வீட்டு வேலைக்காரர்கள் சிறு தவறு செய்து விட்டாலும் அவர்களை மன்னிக்கத்துணியாதவள். அவர்களுடைய தவறின் தன்மை அவர்கள் மனசில் உறைக்கும்படி ஏசியும், தண்டித்தும் நேர்மையை நிலை நாட்டத் தயங்காதவள்.
அவளுடைய இளகிய மனசை அறிந்தவர்கள் இக்குணங்களை எல்லாம் "பாராட்ட வேண்டிய அம்சங்கள்" என்ற கணக்கில் தான் சேர்த்தார்கள்.
இவ்வாறு பாராட்டுப் பெற்ற பண்புகள் சில சமயங்களில் ஏற்படுத்திய விளைவுகள் பாராட்டியவர்களின் மனதில் எத்தகைய எண்ணங்களையும் எழுப்பவில்லை போலும்!
ஒரு நாள் பார்வதி அம்மாள் "பெரிய வீட்டு மீனாட்சி"யைக் காணச் சென்றிருந்தாள். அப்போது அந்த வீட்டில் கூப்பாடும் அழுகையுமாக இருந்தது. வீட்டு வேலைக்காரச் சிறுமியை அதன் அப்பன் அறைந்து கொண்டிருந்தான். முதுகில் "பளார் பளார்" என்று பேயறை கொடுத்தான் அவன். எட்டு வயதுச் சிறுமி, "ஜயோ..அம்மா... நான் இல்லே... எனக்குத் தெரியாது சாமி சத்தியமாக நான் எடுக்கலே" என்று அலறியது. விக்கலுக்கும் விம்மலுக்கும் ஓலத்துக்கும் ஊடாக எழுந்த அலறல் மிகவும் பரிதாபகரமாக ஒலித்தது.
அந்த இடத்தில்தான் மீனாட்சி அம்மாளும் நின்றாள். சிறுமியின் வேதனைக்குரல் அவள் உள்ளத்தைத் தொட முடியாமலா போய்விட்டது?" என்ன விஷயம்?" என்று விசாரித்தாள் பார்வதி.
மீனாட்சியின் இரண்டரை வயதுக் குழந்தை கையில் நாலணாக் காசு இருந்ததாம். அது காணாமல் போய்விட்டதாம். குழந்தையைக் கவனித்து கொண்டிருந்த சிறுமிதான் திருடியிருக்கவேண்டும்; அது ஐஸ்க்கிரீம் வாங்கித் தின்றது; ரிப்பன்காரனிடம் பேசிக் கொண் டிருந்தது என்றெல்லாம் மீனாட்சி அம்மாள் சொன்னாள். தோட்டத்தில் வேலைபார்த்து வந்தான் சிறுமியின் தந்தை. அவனிடம் தனது கட்சியைச் சொல்லி, "திருட்டுப் பிள்ளையை இங்கே வேலைக்கு வைத்துக்கொள்ள முடியாது. கூட்டிக்கொண்டு நீயும் போய்ச்சேரு. அதுதான் தண்டனை" என அறிவித்தாள்.
அவன் கெஞ்சினான். மன்னிப்புக் கேட்டான். தனது மகளை அறைந்து நொருக்கினான்.
"இப்படிச் செய்ய வேண்டியதுதான். இதென்ன திருட்டுப் புத்தி? நாலணா போனால் போகுது என்று விட்டு விடலாம். இன்னொரு நாளைக்கு இந்தப் புள்ளெ வெள்ளிப் பாத்திரம், தங்க நகைகளை எடுத்துக்கிட்டுப் போகாது என்பது என்ன நிச்சயம்?" என்று திடமாகத் தெரிவித்தாள் மீனாட்சி அம்மாள்.
“ஆமாம். நாலணாவை. இந்தப் பிள்ளைதான் எடுத்தது என்று எப்படி நிச்சயமாகச் சொல்லமுடியும்?" என்று கேட்கத் தோன்றவில்லை பார்வதி அம்மாளுக்கு. "முளைச்சு மூணு இலை விடலே. அதுக்குள்ள இந்த மூதேவிக்கு மூளைபோற போக்கைப் பாரேன்!" என்றுதான் அவள் ஆமோதித்தாள்.
"இளகிய மனம்" பெற்ற மீனாட்சி அம்மாளின் பண்பாட்டுக்கு மிகப் பெரிய உதாரணமாக விளங்கியது ஒரு நிகழ்ச்சி.
வண்டிக்காரன் வயது அதிகமானவன். இருந்தாலும் தனது கடமையை ஒழுங்காகச் செய்து வந்தான் அவன். அவனும் அவனது குடும்பத்தினரும் பெரிய வீட்டின் தோட்டத்து மூலை ஒன்றில் குடிசை அமைத்து வசித்தனர். திடீரென்று கடுமையான ஜுரத்தில் விழுந்தான் வண்டிக்காரன். அவன் குணமடைந்து எழ ஒருமாதம் பிடித்தது. அதற்குள் வேறொரு ஆளை நியமித்து விட்டதால். இனிமேல் அவன் வேலைக்கு வேண்டியதில்லை என்று எசமானியம்மாள் உத்திரவிட்டாள். உடனடியாகவே தோட்டத்துக்குடிசையையும் காலி செய்துவிட்டு அவன் போய்விட வேண்டும் என்றாள்.
"அம்மா, நான் பிள்ளைக்குட்டிக்காரன். இந்தத் தள்ளாத காலத்திலே நான் எங்கே அம்மா போவேன்? இந்த மூலையிலேயே ஒண்டிக்கிடக்கும்படி தயவுபண்ணுங்க" என்று கும்பிட்டுக் குழைந்து கெஞ்சினான். காலில் விழுந்து வேண்டினான்.
அவனும் அவன் குடும்பத்தினரும் மூலைக் குடிசையில் வசிப்பதனால் பெரியவீட்டு அம்மாளுக்கு நஷ்டம் எதுவும் வந்துவிடாது. எனினும் "கொள்கையில் உறுதி வேண்டும்" என நம்பிய மீனாட்சி அம்மாள் வேலைக்காரர்களை ஏவி; கிழவனின் சட்டி பானை தட்டு முட்டுச்சாமான்களை எல்லாம் எடுத்து ரோட்டிலே விட்டெறியும்படி கட்டளையிட்டாள்.
கிழவன் அழுத அழுகையும் பேசிய பேச்சும் அவள் உள்ளத்தைத் தொடவில்லை; ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்தின.
மீனாட்சி அம்மாளுக்கு இளகிய மனசு தான். அவளை அறிந்தவர்கள் அனைவரும் உணர்ந்த உண்மை அது.
ஆயினும் அவள் கண்டிப்பானவள். பெரிய வீட்டு அம்மாளின் குணங்களை அறிந்தவர்கள் இதையும் அறியமாட்டார்களா என்ன?
பின்குறிப்பு.... காதைக் கொண்டாங்க... சரி.. வேணாம் விடுங்க...
இந்தக் கதைகள் பற்றிய விமர்சனங்களுக்கு ஜீவி ஸார் பதிலளித்தால் சந்தோஷமாக இருக்கும். ஒரு எழுத்தாளரின் பார்வையும் புலனாகும்.
&&&&&&&

காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... வணக்கம்.
நீக்குநேரம் ஒதுக்கி பிறகு வருகிறேன். நன்றி, ஸ்ரீராம்.
பதிலளிநீக்குவாங்க.. நன்றி ஜீவி ஸார்.
நீக்குதமிழ்நாட்டுல எல்லாரும் ஆழ்ந்துட்டாங்க போல!!! நானும் தான்.
பதிலளிநீக்குஎங்க தளத்துல நேத்திலிருந்தே ஸ்ரீராம் தவிர யாரும் காணோம்....!!!!!!!
கதைகளை வாசித்துவிட்டு வரேன் ஸ்ரீராம்
கீதா
// தமிழ்நாட்டுல எல்லாரும் ஆழ்ந்துட்டாங்க போல!!! நானும் தான். //
நீக்குஒரு வார்த்தை மிஸ் ஆகுதோ..?!! வாங்க கீதா..
அதென்னவோ எங்கள் தளத்தில் நண்பர்களின் பதிவுகள் அப்டேட் ஆவது ரொம்ப நேரம் எடுக்கிறது.
நீக்குஆமாம் சொன்னீங்களே ஸ்ரீராம்.
நீக்குஅந்த ஒரு வார்த்தை எல்லாருக்கும் தெரிஞ்சதாச்சேன்னு விட்டேன்!! அதுவும் எதுக்கு வம்புன்னு வேண்டாமேன்னு.
கீதா
எங்கிட்ட வல்லிக்கண்ணன் கதைகள் புத்தகம் பிடிஃப் வடிவில் இருக்கிறது. இவை அதில் இருக்கா என்று வாசித்தால் தெரியும்
பதிலளிநீக்குகீதா
அப்பா இப்படி சில புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறார். தொட்டால் உதிர்வது போல இருக்கின்றன புத்தகங்கள்.
நீக்குகதைகள் இரண்டுமே பெரிதாக ஈர்க்கவில்லை.
பதிலளிநீக்குவாங்க வெங்கட். நன்றி.
நீக்குஏதாவது விமர்சனமாக எழுதினால் நலமாக இருக்கும். ஜீவி ஸாருக்கும் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.
இரண்டு கதைகளுமே ஸோ ஸோ ஸோ தான். கதை என்றே சொல்ல முடியவில்லை.
பதிலளிநீக்குமுதலாவது கதை சும்மா போகிற போக்கில் (இறந்த நாயைக் கண்டும் எல்லோரும் போய்க் கொண்டிருப்பது போல ) சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். முடிவும் கூட, ஏதோ கட்டுரை இல்லைனா அனுபவப் பகிர்வு போல என்று எண்ண வைத்தது.
மனதைக் கவர்ந்து ஒட்டிக் கொள்ளவில்லை இத்தனைக்கும் இறந்து கிடப்பது ஒரு செல்லம்.
தலைப்பைப் பார்த்து என்னென்னவோ எண்ணினேன்.
கீதா
இரண்டாவது கதையும் அப்படித்தான். தலைப்பும் கருவும் நல்லாருக்கு ஆனா எழுதிய விதம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பதிலளிநீக்குகதையில் பிற எழுத்தாளர்களைச் சுட்டுவது போன்றும் தோன்றியது.
திருப்பம் எதுவும் இல்லை. ஒரு கதாபாத்திர விவரம் போன்றே இருக்கிறது.
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குவேவாத வெயிலில் நாயாய் அலைகிறேன் பத்திரிக்கை கொடுக்க என்று குறிப்பால் உணர்த்துகிறீர்களோ? ஜில்லு ஜிக்கி தெரு நாய் என்று ஒரு நாய்க்கதைகள் வரிசை. அடுத்து ஜீனோவையும் போடுங்கள். வரிசை முழுமை பெறும்.
பதிலளிநீக்கு
Jayakumar
இந்தக்காலத்தில் மீனாக்ஷி அம்மாள் போல சிறுமிகளை வேலைக்கு வைத்தால்.......
பதிலளிநீக்குதற்காலத்தில் பெண்கள் கண்ணீர் விட மெகா சீரியல்கள் தான் உதவுகின்றன. சினிமா இளைஞர் பக்கம் திரும்பிவிட்டது, நாவல் பத்திரிகைகள் படிக்க பொறுமை இல்லை.
காலங்கள் மாறுகின்றன. காட்சிகளும். அதற்கேற்ப கதைகளும் மாறுகின்றன.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவல்லிக்கண்ணன் அவர்களின் கதைகள் பகிர்வு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅந்தக்கால சினிமாக்கள் , மற்றும் கதைகளில் சமூகசேவை செய்யும் பெண்களை கேலி செய்யும் பாத்திரம் இடம் பெறும் வல்லிக்கண்ணன் கதையில் இடம் பெற்று இருக்கிறது.
//அவ்வழியே ஒருவன் வந்தான்... நின்றான்//
நல்ல மனிதன் அந்த நாயின் உடல் மேலும் நாறி போகாமல் இறுதி மரியாதை செய்து விட்டார், நல்ல மனிதர். உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்
//மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு.//
பதிலளிநீக்குஇப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். கதையில், சினிமாவில் கஷ்டப்படுபவர்களை பார்த்தால் வருந்தும் இவர்கள் உண்மையில் வேறு குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபெரிய ஊராகத்தான் இருக்கணும். அதில் முக்கியமான போக்குவரத்துகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் ஒரு தெருவில் ஒரு நாய், தெருநாய் தான், விபத்தில் சிக்கிச் செத்திருக்கிறது. சாலை ஓரம்னு இல்லாட்டியும் கொஞ்சமானும் ஒதுக்குப் புறமாக நடுத்தெருவில் இல்லாமல் செத்துக்கிடக்கிறது. நாறவும் ஆரம்பித்துவிட்டதால் செத்து ஒரு நாளோ அரை நாளோ ஆகி இருக்கணும். அந்த வழியே பலர் போனாலும் அனைவரும் அந்த நாயைப் பார்த்தாலும் எவருக்கும் அதைப் புதைக்கணும், அப்புறப்படுத்தணும், யாரையாவது கூப்பிட்டாவது செய்யணும். இது ஒரு சமூக சிந்தனை அக்கறையில் செய்ய வேண்டிய விஷயம். அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒன்று எனத் தோன்றவில்லை. சமூக சேவை செய்பவர்கள் உள்பட சுத்தம் பற்றிச் சொற்பொழிவாற்றும் மக்கள் உள்படப் பார்த்துக் கொண்டே போகிறார்கள். கடைசியில் ஒரே ஒரு மனிதன் வந்து ஏற்கெனவே அந்த நாய் செத்துக்கிடப்பதைப் பார்த்திருக்கணும். வரும்போதே கையில் மண்வெட்டியோடு வருகிறான். வந்து நாயை எடுத்துப் போட்டு மண்ணால் மூடி விட்டு யாரிடமிருந்தும் எந்தவிதமான பாராட்டையும் எதிர்பார்க்காமல் அவன் போக்கில் போகிறான். மக்களுக்கு சமூக சிந்தனையோ, அசுத்தத்தை அகற்றும் பண்போ சுத்தமாக இருப்பதில்லை. , அசுத்தத்தை அகற்றும் இயல்பு என்பது தானாகவே வர வேண்டிய ஒன்று. நானால் நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் இதை எல்லாம் எதிர்ப்பார்க்கவே முடியாது. வல்லிக்கண்ணன் காலத்திலேயே அப்படி என்றால் இப்போக் கேட்கவே வேண்டாம். எக்காலத்திற்கும் எடுத்துக் காட்டும் விதமான கதை. கதைனு சொல்ல முடியாது. நிகழ்வு.
பதிலளிநீக்குஅடுத்த கதை என்னும் சொல்லாடலும் மனித மனம் பற்றியே. மனித மனங்களையும் அதன் கிறுக்குப் புத்தியையும் புடம் போட்டுக் காட்டி இருக்கார் வல்லிக்கண்ணன். பொதுவாக மனிதர்கள் அது ஆணோ, பெண்ணோ மற்றவர்கள் கண்களுக்குத் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ளும் அளவுக்கு உண்மையில் இருப்பதில்லை. அவர்களின் முகமூடி ஏதோ ஒரு சமயம் கிழிந்து விடுகிறது. ஆனாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அந்த மனிதனோ, மனுஷியோ தன்னைப் பற்றிக் கட்டமைத்துக் கொள்ளும் ஓர் பிம்பம் அப்படி அவர்களை நல்லவர்கள் போல சித்திரித்துக் காட்டி விடுகிறது. கதைகளிலும் திரைப்படங்களிலும் வரும் கதை மாந்தர்களின் கஷ்டங்களை எண்ணி உருகும் மீனாக்ஷி அம்மாள் நிஜ வாழ்வில் ஓர் குழந்தைப்பெண்ணைத் திருட்டுக்குற்றம் சுமத்தி வேலையை விட்டு நீக்கும் அளவுக்குக் கொடியவள். இதைப் படிக்கையில் "குட்டி" என்ற பெயரில் வந்த குறும்படமும் நடிகை எம்.என்.ராஜம் அவர்கள் அந்தப் பெண்ணைத் துன்புறுத்துவதாகப் பார்த்ததும் நினைவில் வந்தது. அதே போல் மீனாக்ஷி அம்மாள் வயதான ஒரு வண்டிக்காரனுக்குக் கூட இரக்கம் காட்டவில்லை. சாமான்களை எடுத்து வீசி நடுரோடில் எறிகிறாள். ஆனாலும் இதையும் நியாயப்படுத்துபவர்கள் இருப்பதால் அவள் பெயர் என்னமோ கெடுவதில்லை. நிஜ வாழ்விலும் இப்படியான மனிதர்கள் இருக்காங்க. எங்க வீட்டிலேயே உண்டு. தன்னைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் போட்டுக் கொண்டு அதன் ஆரா ஒளிர்வது போல் காட்டிக் கொண்டு மற்றவர்களைப் பழியும் வாங்கிட்டு எதுவுமே தெரியாதது போல் அமைதியாக இருக்கும் நபர்கள் நம்மிடையே வாழத்தான் செய்கின்றனர்.
பதிலளிநீக்குபொழுது போகவோ விறுவிறுப்புக்காகவோ கதை படித்தால் அவங்களுக்கு இதைக் கதைனு ஒப்புக்கொள்ளவோ, இந்த எழுத்தை சிலாகித்துப் பேசவோ தோன்றாது தான். ஆழ்மனச் சிந்தனைகளிலிருந்து இப்படியான எண்ணங்கள் பிறக்கின்றன. வல்லிக்கண்ணன் அதைத் தான் பகிர்ந்திருக்கார். ஜனரஞ்சகமான கதைகளையே படிச்சவங்களுக்கு இதை ஜீரணிப்பது கஷ்டம் தான். வரேன் அப்புறமா.
பதிலளிநீக்குஆமாம் இரண்டு கதைகளும் கதைகளல்ல. அன்றைய அக்காலகட்டத்தில் யதார்த்தங்கள். யதார்த்தங்கள் தாம் வாழ்கையை வாழவைக்கின்றன என்ற உண்மையை உணர்வோருக்கு இக்கதைகள் தத்துவ பாடமாய் அமையும்.
நீக்குJayakumar
தி/கீதா இந்தக்கதைகளை உளவியல் ரீதியில் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டிருப்பார்னு நினைச்சு வந்தேன். அவரும் என்னமோ சாதாரணமாகக் கடந்து போயிட்டார். தேர்தல் முடிவுகளின் தாக்கம்னு நினைக்கிறேன். இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை போல! :)))) எனக்கும் கவலை, வருத்தம், துக்கம், ஆற்றாமை எல்லாமும் இருக்கு. ஆனால் மறு தேர்தலுக்கே அதிக வாய்ப்பு எனவும் தோன்றுவதால் அப்படியே விட்டுட்டேன். பார்ப்போம் என்ன ஆகும் என. போகப் போகத் தான் தெரியும். ஒரு சிலர் இரு கழகங்களும் கூட்டணி அமைக்கலாம் எனவும் சொல்லிட்டு இருக்காங்க. அதைவிட கேவலம் வேறே ஏதும் இல்லை, என்னதான் ஒரே குட்டையில் ஊறிய மட்டைன்னாலும். வெவ்வேறு மரங்கள் இல்லையோ?
பதிலளிநீக்குநெல்லை, கமலா எல்லோரும் பயணங்களில் இருக்காங்களோ? யாரையுமே காணோமே?
பதிலளிநீக்குதுரை கூட வரலை போல. உடல் நலமாய் இருக்காரா?
பதிலளிநீக்குவல்லிக் கண்ணனின் இரு கதைகளும் வெவ்வேறு போக்கில் .
பதிலளிநீக்குமுதல்கதை தெருவில் செத்துக் கிடக்கும் நாய் யதார்த்தம்.
இரண்டாவது மீனாட்சி அம்மாளின் இரு முகங்கள் பற்றி பேசுகிறது. இப்படியும் சிலர் உள்ளார்கள்தானே..