OTT யில் பார்த்த படம்
Assi
"கோர்ட்டில் ஜெயிப்பது என்பதற்கான பொருள் என்ன? தோற்பது என்பதஸிற்கான பொருள் என்ன?
பாதிக்கப்பட்ட பெண்ணின் கேள்வி.
ஆமாம் என்ன பொருள்?
Pink படத்தின் வேறு வடிவம் என்று என்ன வைக்கும் படம். அதே டாப்ஸி பன்னு ஹீரோயின். பெரும்பாலும் கோர்ட் காட்சிகள்.
ஆசிரியையாக பணிபுரியும் கனி குஸ்ருதி பள்ளி முடிந்து ஒரு பார்ட்டி அட்டென்ட் செய்து திரும்பும் வழியில் ஐந்து இலைகண்ர்களால் காரில் கடத்தப்பட்டு சீரழிக்கபப்டுகிறார். அவர் இறந்து விடுவார் என்று எண்ணி ரயில்வே லைன் அருகில் வீசி விட்டு செல்ல முகம் தெரியாத நபரால் காப்பாற்றப்படுகிறார். அன்பான ஆதரவான கணவன். பெரிய மனிதத்தோரணையுடன் ஆறேழு வயது மகன்.
கணவனின் அலுவலகத்தில் பணிபுரியும் குமுத் மிஸ்ரா தனி கதை வைத்திருக்கிறார். அவர் மனைவி ஒரு சாலை விபத்தில் இறக்க, அதற்கான நீதி கிடைக்காமல் கடும் மனா உளைச்சலில் இருக்கிறார்.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து ஆஜர் செய்தபின் போராட்டம் தொடங்குகிறது. நீதி தடுமாறுகிறது. நேர்மையான நீதிபதி நம்மூர் ரேவதி நியாயமாக நடக்க போராடுகிறார்.
நடுவில் குற்றவாளிகளில் இருவரை குடியால் மறைத்துக்கொண்டு ஒருவன் கொலை செய்கிறான். அவனுக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது. அம்பரெல்லா ,மேன் என்று அழைக்கப்படுகிறான் அந்த மர்ம மனிதன். அவன் செயல்களை டாப்ஸி எதிர்க்க அவர் முகத்தில் சாணி வீசப்படுகிறது.
இத்தனை கூத்துகளையும் அந்த சிறுவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான். Assi என்றால் ஹிந்தியில் 80 என்று அர்த்தம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு நாடு முழுவதும் 80 பெண்கள் சீரழிக்கபப்டுகிறார்கள் என்கிறது படம். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 நிமிடங்கள் என்று ஸ்லைட் மாதிரி காட்டி நினைவு படுத்திக்க கொண்டே இருக்கிறார்கள்.
டாப்ஸி தனது வாதங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கலங்காமல் பேசுவது போல வைத்திருக்கலாம் என்று தோன்றியது. நாஸிருத்தீன் ஷா வருகிறார். என்ன அவர் ரோல் என்பது குழப்பம். குமுத் மிஸ்ராவை அவர் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பது புரியவில்லை.
ZEE 5 ல் பார்த்தேன். ஹிந்தியில்தான் பார்த்தேன்.
பார்க்கலாம்.
==========================================================================================
கவிதைகள் புதிது
மழையிலே கதகதப்பு
இளமையின் குறுகுறுப்பு
மழைச்சாரல்..
மனதிலும் சாரல்
அருகில் இருந்திருக்கலாம்
நீ
போர்வையின் கதகதப்பில் பொதிந்து
மோக மழையில்
நனைகிறது இளமை
மழைக் காலமும் பனிக்காலமும்
சுகமானது
நனைந்தபடி வருகிறேன்
மழையில்
இல்லம் சேர்ந்ததும்
இழைய நீயிருப்பாய்
என்ற நினைவில்
கதகதப்பாய்
நனைந்தபடி வருகிறேன்
மழையில்
======================================================================================
கமல் - எழுத்தாளர் சுஜாதா சந்திப்பு. 1979 - 80 மே 3 ஆம் தேதி சுஜாதா பிறந்தநாளையொட்டி பேஸ்புக்கில் பகிர எடுத்து வைத்திருந்தேன். அங்கு இதைவிட பெரிய உரையாடல் சுஜாதா - சிவகுமார் உரையாடலை பகிர்ந்து விட்டேன்!
சுஜாதா : கதாசிரியருக்கும், நடிகருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. நீங்க பல பாத்திரங்களை ஏற்று நடிக்கிறீங்க. அவங்க குணாதிசயங்களை 'ஸ்டெடி' பண்றீங்க. நாவலாசிரியர் ஒரே நாவலில் எல்லா கேரக்டர்களுக்கு குள்ளும் புகுந்து வரணும். அந்தந்த கேரக்டருக்கு உரிய பாணியில் அவர்களைப் பேச வைக்கணும். அதுக்கு வந்து- காதில் விழுறதையெல்லாம் கவனமா 'கலெக்ட்’ பண்ணணும். நான் நண்பர் ஒருவருடன் லண்டன் போயிருந்தப்போ ரோடு ஓரத்திலே ஒரு ஜோடி அழுந்தந்திருத்தமா 'கிஸ்' பண்ணிக்கிட்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என் நண்பர் நின்று உற்றுப் பார்த்துவிட்டு 'சாப்பிட றான்யா' என்றார். 'ப்ளூஃபிலிம்' பார்க்க அங்கேயுள்ள ஒரு தியேட்டருக்குச் சென்றோம். திரையில் ஒரு பெரிய கார் வருவதையும், அதிலிருந்து ஒரு அழகான பெண் இறங்குவதையும் காட்டினான். என் நண்பருக்கு ஒரே கோபம். 'அவுக்க வேண்டியதுதானே - இதில் என்ன கார் எல்லாம். 108 அடி ஃபிலிம் வேஸ்ட். இதிலே வேற 'ஏ' சர்டிபிகேட்' என்று அலுத்துக் கொண்டார். 'பிளேபாய்'ல ஒரு ஜோக் வந்திருந்தது. ப்ளூஃபிலிம் எடுக்கிற டைரக்டர் ஒருவர் ஷூட் பண்றார். “Cut it" कांض "You Please go on" என்கிறார். அதுமாதிரி “you Please go on தமிழ்ப்படத்தில் உண்டா கமல்?
கமல் : இல்லியே! அதெல்லாம் சாயங்காலம் ஷூட்டிங் முடிஞ்ச பிறகு எங்க திறமையிலே நாங்க ஏதாவது சம்பாதிச்சிகிட்டாதான். இப்போ உங்க கதைகள் சில படமான விதமெல்லாம் சரியில்லேன்னு பேட்டி எல்லாம் கொடுக்கற நீங்க ஏன் சினிமாவுக்கு கதை கொடுக்கறீங்க? விட்டுட வேண்டியதுதானே!"
சுஜாதா : கொடுக்கலேன்னா எடுத்துக்கறாங்க. அது மட்டுமில்லாம கதையை வாங்கிய உடனே என்ன சொல்றாங்க தெரியுமா? 'ஸ்கிரீன்பிளே மாதிரியே எழுதியிருக்கீங்க. அப்படியே படமாக எடுக்கப் போகிறோம்' அப்படீங்கறாங்க. அதுக்கப்புறம் "என்ன நீங்க எடுக்கப் போறீங்கன்னு உங்க ஸ்கிரீன் பிளேயைக் கொஞ்சம் காட்டினீங்கன்னா பரவாயில்லையே” என்று கேட்கிற நிலைக்கு நம்மளைக் கொண்டு வந்துடுவாங்க, அப்புறம் 'சி'க்கு போகும்போது இது சரியா வராதுன்னு ஆரம்பிப்பாங்க. அதுக்குப்பிறகு தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு அவங்க அவஸ்தைப்படப் போறாங்களேன்னு எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதாகி விடுகிறது.
கமல்: 'மழைத்தல்'னு நீங்க ஒருமுறை எழுதியிருக்கீங்க இல்லே 'பெய்யெனப் பெய்யும் மழை. மழைக்கு மெனில் சொல் உன்தாயிடம், நாடு நனையட்டும்'னு நான் எழுதியிருந்தேன், மழைக்கும்னு சொல்றது ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னுட்டாங்க சார்.
சுஜாதா : சொல்லலாம். தவறில்லை.
கமல் : சுப்பிரமணிய ராஜூவோ மாலனோ யார்னு ஞாபகமில்லை. ‘கீழ்பர்த்தில் ஒரு நல்ல நாட்டுக்கட்டை மனத்திற்குள் அவளைப் படுக்க வைத்தேன்' அப்ப டீன்னு எழுதியிருந்தாங்க.
சுஜாதா: புதுக் கவிதையில கல்யாண்ஜி எல்லாம்... பிரமாதம். ஒரு வேலைக்காரி சுமாரா இருக்கறவ பெருக்கிட்டிருக்கா. 'தரை சுத்தமாயிடுச்சி. மனம் குப்பையாயிடிச்சி' அப்படீங்கறார் நாலு பக்கக் கதை அந்த இரண்டு வரிகளில் வந்துடறதே!
கமல்: இன்னொன்று நான் படிச்சேன். 'கறுப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்' அப்படீன்னு. என்ன கற்பனை பாருங்க.
சுஜாதா : இன்னொரு புதுக்கவிதை நான் படிச்சேன் ''கண்ணீர்' என்ற தலைப்பில். 'இதயத்தில்தானே இடி. இங்கே ஏன் மழை'ன்னு எழுதியிருந்தாங்க. இன்னொருவர் இப்படி 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம். என் கல்யாணம் மட்டும் ஏன் நொச்சிக் குப்பத்தில் நிச்சயிக்கப்படுகிறது?'
கமல் : சினிமா கவிஞர்கள் பலர் பிரமாதமாக பாட்டு எழுதியிருக்காங்க. நான் சினிமா பாட்டுப் புத்தகத்திலே யிருந்தும் கலைஞர் கருணாநிதி வசனம் படிச்சும்தான் தமிழ் நல்லா பேச கத்துக்கிட்டேன்.
சுஜாதா : உங்க மாதிரி ஆளோடு எவ்வளவு நேரம் பேசறதுன்னாலும் நான் தயார்தான். ஆனால் இன்னிக்கு இரவு 9-30 மணி ரயிலில் பெங்களூர் போகணும். ஓ.கே. கமல். இன்னொரு முறை மீட்பண்ணி நாம பேசுவோம்.
கமல் : ஓ..யெஸ்! சந்திப்போம். சமீபத்தில் உங்க நாவல் ஏதாவது படமாகுதா?
சுஜாதா: 'கரையெல்லாம் செண்பகப் பூ' கதையை டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் வாங்கியிருக்கிறார். 'சாவி'யில் நான் எழுதிய 'காகிதச் சங்கிலிகள்' கதையை பஞ்சு அருணாசலம் வாங்கியிருக்கிறார். இன்னிக்கு காலையில்தான் பூசை நடந்தது. ஓ.கே. புறப்படுகிறேன் கமல் சந்திப்போம்.
திரைக்கதிர்
======================================================================================
'நம்மவர்' படம் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ரௌடி காலேஜில் VP யாக வருவார் கமல். இருக்கும் இடத்திலிருந்து மாடியில் உலவிக்கொண்டிருக்கையில் சில மாணவர்கள் போதைப் பழக்கத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பார். முதல்முறை அவர்களை துரத்துகையில் தப்பி விடுவார்கள். மறுமுறை முயற்சிக்கையில் மொட்டை மாடியிலிருந்து அப்படியே மரத்தை வளைத்து கீழே குதிப்பார். வாசுவின் இந்த செயலைக் கேட்டபோது அது நினைவுக்கு வந்தது எனக்கு.
வாசு ஸார்
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நல்லாட்சியின் ஆரம்பத்திலேயே கஞ்சா புழக்கம் கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஊடுருவி விட்டது என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன செய்வது அப்படி ஒரு ஆட்சியாளர்களை தேர்வு செய்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும்..
ஒரு மாத காலமாக எங்கள் பள்ளியில் யாரோ ஒருவன் வெளியில் இருந்து வந்து கஞ்சா பொட்டலத்தை விற்றுவிட்டு செல்கிறான் என்ற செய்தி எனக்கு வந்து கொண்டே இருந்தது... நான் AHM என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்து, இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று பெரிய வகுப்பு மாணவர்கள் நாலு பேரை அழைத்தேன். பள்ளியின் ஒரு மூலையில் - அதாவது அவன் விற்பனை செய்யும் அந்தப் பகுதியில் இருந்து கண்காணிக்கச் சொன்னேன். அவன் வந்தததும் எனக்கு தகவல் தெரிவித்து விட்டு அவனை அங்கிருந்து துரத்துமாறு சொன்னேன்.
அடுத்த நாளே அவன் வந்தான். அவன் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் சொன்னபடி செய்யச் சொல்லி மாணவர்களுக்கு சொல்லி விட்டு நானும் தயாரானேன்.
மாணவர்கள் அங்கிருந்து துரத்த, அவன் காம்பவுண்டுக்கு வெளியே தப்பி ஓடினான்.
அவன் காம்பவுண்டு சுவற்றிற்கு வெளியே ஓடி வருகின்ற அந்த நேரத்தில் நான் சுவற்றின் மேல் ஏறி நின்று அவன் மீது பாய்ந்து அவனைப் பிடித்தேன். அவனிடம் ஏதாவது ஆயுதம் இருந்திருந்தால் என் கதி என்னவாகி இருக்கும் என்று தெரியாது... நான் அப்போது அதை யோசிக்கவே இல்லை. மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தும் எண்ணம் மட்டுமே மனம் முழுக்க இருந்தது.
மாணவர்களும் வந்துவிட அனைவரும் சேர்ந்து அவனைப் பிடித்து விட்டோம்.
அவனை உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஒப்படைக்கவும் செய்தோம். இந்த நிகழ்வில் நான் போட்டிருந்த Pant கிழிந்து விட்டதை என் உடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் கவனித்துக் கூறினார். வீடு அருகில் தான் என்பதால் உடனடியாக வீட்டிற்கு வந்து Pantஐ மாற்றினேன்.
=====================================================================================
ஜெய்சங்கர் உஷா நந்தினி நடித்து, 1971 ல் வெளிவந்த 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்திலிருந்து ஒரு பாடல்.
எஸ் பி பாலசுப்ரமணியம் வசந்தா பாடிய பாடல். கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.
லேசாக ஏதோ ஒரு ஹிந்திப் பாடலை நினைவு படுத்தும். காட்சி பரயாதான் 'து பியார்' பாடல் காட்சியை சற்றே நினைவு படுத்தும்!
====================================================================================
வாடகை ஓட்டுநர்களுடனான அனுபவம்..
ஒரு திருமணத்துக்காக சித்தூர் சென்றபோது வந்த டிரைவர் பெரும்பாலும் எனக்கு வரும் ஆஸ்தான டிரைவர். புதிதாக ஒருவர் வந்தாலே எங்களுடன் ஒருவர் என்ற நிலையிலேயே அவரை வைப்போம். இருந்தாலும் அவர்கள் தங்கள் தொழில் "தர்மங்களை" விடுவதில்லை!
சித்தூரில் இந்த Use and Throw தட்டுகள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டோம். கிளம்புவதற்குள் அதை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் நினைத்திருந்தோம். ஆனால் இங்கே அங்கே சுற்றி வந்தபோதெல்லாம் விட்டு விட்டு கோவில் சென்று திரும்பி வந்தபோது கண்ணில் பட, அவரை காரை நிறுத்தத் சொன்னேன்.
இவர்களுக்கெல்லாம் ஒரு வழக்கம் என்ன என்றால் முதலில் நீங்கள் சொல்லி இருக்கும் இடம்தான் மெயின், நடுவில் நிறுத்தத் சொல்வது மனதில் பதியாது, அல்லது பதியாதது போல இருந்து விடுவார்கள். ''காரை சாலையின் இடது பக்கம் ஓட்டுங்கள்'' என்பேன் - ஏதாவது கடை தென்பட்டால் உடனே நிறுத்த வசதியாக. ஆனால் இவர்கள் வலது புறமாக ஓட்டி வந்து விட்டு அதைத் தாண்டி சிறிது தூரம் சென்று விடுவார்கள். அதாவது டிராஃபிக்கினால் அப்படி செல்கிறார்களாம்! பின்னால் வண்டிகள் வருகிறதாம். அப்படியும் ஓரிரு முறை யு டர்ன் போடுங்கள் என்றும் சொல்லி இருக்கிறேன். ஏன் இப்படி இவர்கள் இருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கும்! அதிலும் பாஸ் ரொம்பவே கடுப்பாவார்!
விஷயத்துக்கு வருகிறேன். அப்படி அந்தக் கடையைப் பார்த்ததும் நிறுத்தத் சொன்னதும் வழக்கமான பாணியில் தாண்டி நிறுத்தி விட்டு அவரே ஒரு பதிலும் சொன்னார்.."இனிமே வரிசையா நிறைய கடை இருக்கு ஸார்.. நானே நேற்று பார்த்தேன். அப்படியே போய் பார்த்துக்கலாம்"
சரி என்று கிளம்பினால் ஒரு கடை கூட அந்த வரிசையில் அப்புறம் தென்படவில்லை என்பதோடு திருமணம் முடிந்து ஊர் திரும்பும் வழியிலும் கடைகள் இல்லை. டிரைவரின் கேள்வி "ஊருக்குள் அந்தக் கடைய போய்ப் பார்க்கலாமா ஸார்?"
கிண்டல்தானே!
கோபத்தை அடக்கிக் கொண்டு "இதோ பாருங்க ரஜினி.. (அதுதான் அவர் பெயர்) முதல் வாய்ப்பு எப்போ கிடைக்குதோ அதை அங்கே யூஸ் செய்துகொண்டு விட வேண்டும்... அப்புறம் தேடினாலும் கிடைக்காது"
செயற்கையாக தன் குற்றத்தை தானே நொந்து கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டே வந்தார். அப்புறம் வந்த டிரிப்புகளிலும் சரி, கடந்த வெள்ளிக்கிழமை சேலம் சென்றபோதும் சரி, குறுகலான மார்க்கெட் ரோடில், அல்லது உருப்படாத கடையில் எல்லாம் ஸ்லோ செய்து எங்களை அங்கே வாங்கச் சொன்னார். நான் சொன்ன வசனங்களை புதுசு போல எனக்குத் திரும்பிச் சொன்னார். நான் கண்டு கொள்ளவில்லை. 'இன்னும் போங்க' என்று சொல்லி நல்ல கடையிலேயே வாங்கினேன்.
அவர் வேண்டாம் என்று விட்டு விடுவதத்தானே என்றுதானே தோன்றுகிறது? வாடகை ஓட்டுநர்களில் இந்த அளவு சாதுவான, கொஞ்சம் நியாயமானவராகவும் கூட டிரைவர்கள் அமைவது சிரமம். மற்ற டிரைவர்களுக்கு இவர் எவ்வளவோ தேவலாம்.
மேலும் அவர்களுக்கும் எவ்வளவோ எரிச்சல்கள்..
=====================================================================================
ஒரு முறை இயக்குனர் பாலாவும் அவர் குருநாதர் பாலு மகேந்திராவும் அலுவலக ஜன்னல், கதவு எல்லாம் பூட்டி விட்டு வெளியே புறப்பட்டார்கள்.
கார் சிறிது தூரம் வந்த பிறகு "அடடா.." என்றார் பாலு. டிரைவர் பதட்டமாக, "வண்டியை திருப்புப்பா....உடனே அலுவலகம் போகணும்..." அவரின் பரபரப்பு பாலாவுக்கும் பதட்டத்தை வரவழைத்தது. டிரைவரும் வேகமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். வண்டி அலுவலகம் வந்தவுடன் பாலா இறங்கி உள்ளே ஓடினார்...உள்ளே....
1954ல் பிரேமா என்கிற நடிகை 'நீலக்குயில்' என்கிற படத்தில் சத்யனின் மனைவியாக நடித்து அறிமுகமானார். முதல் நாயகியாக மிஸ் குமாரி என்கிற நடிகை இருந்ததால் அந்தப்படத்தில் இரண்டாம் நாயகியானார் ப்ரேமா. அதனாலோ என்னவோ பிரேமாவுக்கு இரண்டாம், மூன்றாம், நான்காம் ரோல்களே பின்னாளில் கிடைத்தன. முன்னணி நாயகியாக அவரால் வரவே முடியவில்லை. அவருக்கு அது வருத்தமாகவே இருந்தது. K.P.மேனன் என்பவரோடு திருமணம் நடந்து பிரேமாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததுமே பிரேமா முடிவெடுத்து விட்டார். இவளை இதே திரையுலகில் மிகப்பெரும் நடிகையாக்குவேன் என்கிற சபதம் ஷோபா என்கிற மகளின் மூலம் பூர்த்தியானது.
மூன்று வயது முதலே மகளை நடிக்க வைக்கத்தொடங்கினார் ப்ரேமா. மகாலட்சுமியாக இருந்த மகள் ஷோபாவாகி நாயகியும் ஆனார். பாவம் ப்ரேமா...மகளின் மனநிலையை அறியாதவராக இருந்தார். மகள் இளவயதிலேலே நடிப்புத்தொழிலுக்கு வந்ததால் சிறுவயதில் பெரிய வயதுக்கான மனநிலையை பெற்றிருந்தார்.
அம்மாவிடமிருந்து தப்பிக்கவே பாலு மகேந்திராவிடம் அடைக்கலமானார் ஷோபா. அங்கிள் என்று அழைத்துக்கொண்டிருந்த பாலுவும் ஷோபாவுக்கு தாலி கட்டினார். பாலு சாதிக்க பேய்ப்பசி உள்ளவர். அவர் தன் கேரியரை பார்ப்பதா ஷோபாவை பார்ப்பதா என தெரியாமல் தடுமாறினார். இலங்கையிலிருந்து திருமணம்செய்து அழைத்து வந்த அகிலாவும் வீட்டில் இருக்கிறார். பாலுவிடம் எதையோ எதிர்பார்த்த ஷோபா ஒரு நாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாலுவுக்கு அதிர்ச்சி. தன்னால் ஒரு உயிர் போனால் யாரால் தாங்கமுடியும்?. பாலுவின் வாழ்வில் தீராப்பழியை அவரே அழைத்து வாங்கி வைத்துக்கொண்டார். ஓடி ஓடி நடிப்பு வாய்ப்பு வாங்கிய ப்ரேமா பாலுவின் மீது வழக்கெல்லாம் தொடுத்தார். ஒரு நாள் தன் மனசாட்சியின் கேள்விகள் தாளாமல் ப்ரேமாவும் தற்கொலை செய்து கொண்டார்.
பாலாவும், பாலுவும் ஓடிப்போய் அலுவலகத்தை திறந்ததும் பாலு ஓடிப்போய் ஜன்னல் கதவை திறந்து விட்டார். அங்கு ஒரு தாய்ப்பூனை கதவை திறந்ததும் ஜன்னலின் வழியே ஓடிச்சென்று புத்தக அலமாரியின் கீழே பதுங்கியது. பாலா குனிந்து பார்த்தபோது அங்கு சில புதிதாகப் பிறந்த குட்டிப்பூனைகளுக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தது. "அவசரத்தில் இந்த தாய்ப்பூனையை மறந்துவிட்டேன். எப்போதாவது வெளியே சென்று விட்டு வந்து குட்டிகளுக்கு பால் கொடுக்கும். நல்ல வேளை ஞாபகம் வந்தது"....பாலு மகேந்திராவின் குரலில் ஆசுவாசாம் தெரிந்தது. எத்தனை மனிதம்?...
இந்த மனிதத்தைப் பெற பாலு மகேந்திரா கொடுத்த விலை தான் பெரிது. இந்த காருண்யத்தில் நூற்றில் பத்து பங்கு இருந்திருந்தால் கூட ஷோபா என்கிற குழந்தைப்பெண் தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்று தோன்றுகிறது. ஷோபாவுக்கு அஞ்சலிகள்....
மனித வாழ்வில் நாமெல்லாம் பொம்மலாட்டக்கயிறு கட்டிய பொம்மைகள்...சரி தானே.....?
மீள்...
Selvan anbu
======================================================================================
1985 ம் வருடம் வெளியான 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே படம். செமி ஆக்ஷன் படம் என்று சொல்லலாம். மாதவி ஜோடி.
இளையராஜா இசை. இன்று பகிரும் பாடல் வைரமுத்து எழுத்தில். பாலு மகேந்திராவின் இன்னொரு அபிமான நடிகை மௌனிகா அறிமுகமான படமாம் இது.
இந்தப் பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று. SPB இந்தப் பாடலில் பல்லவியை மட்டுமே பாடுவார். சரணங்கள் மட்டுமே பாடுவார் ஜானகி அம்மா. சோகம் சொல்லும் பாடல். வசீகரமான வரிகள். "நானுறங்கும் நாள் வேண்டும் சாய்ந்துகொள்ள தோள் வேண்டும் என் கண்ணில் நீர் வேண்டும் சுகமாக அழவேண்டும்..."
என்னுடைய கேசெட் காலங்களில் மதுரை வானொலியில் இந்த பாடல் ஒலிபரப்பானபோது ரேடியோவிலிருந்து தலைவர் பாடிய வரிகளை மட்டும் பாஸ் செய்து பாஸ் செய்து, பதிவு செய்து வைத்திருந்தேன். அது ஒரு நேர பைத்தியம்!
இளையராஜா வழங்கி இருக்கும் ஸ்லோ மெலடி. அந்த ஆரம்ப இசை.. பாடல் ஆரம்பம்.. SPB யின் மென்மையான கீழ் ஸ்தாயி ஆரம்பம்.
==========================================================================================
பொக்கிஷம் :
இரண்டு விளம்பரங்கள், இரண்டு கோபுலு ஓவியங்கள், இரண்டு விமர்சனங்கள்!
========================================================================================
சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பார்கள். நீதிமன்றங்களும் அரசும் கைகோர்த்து இப்படி நடந்து கொள்ளும்போது பாதிக்கப்பட்டவர் மனநிலை கொதிநிலையை அடைகிறது...

ஜோக்ஸ் :
கடைசி ஜோக்கை படிக்க முடியாமல் போனால்.. வருந்துகிறேன்.

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!