14.5.26

மத்தூர் வடையும் மல்லிகைப்பூ இட்லியும் பின்னே இடியாப்ப இலங்கை சொதியும்

பெங்களுருவில் போக்குவரத்துச் சிக்கலில் ஒரே நாளில் 10 பேரைப் பார்த்து வர முடியுமா?  முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று சென்ற வாரம் சென்று வந்தேன்.  நம் அருமையான டிரைவருடனும் சில நல்ல, மற்றும் எரிச்சலூட்டும் அனுபவங்கள்.  இனிப்பும் கசப்பும் இணைந்ததுதானே வாழ்க்கைப் பயணமே!  அந்த அனுபவங்களையும் அவ்வப்போது எழுதுகிறேன்!

உள்ளே இருக்கும் மக்களை காக்க சாலையை கண்காணித்துக் கொண்டே வருகிறார்களோ இந்த மன்னர் சகோதரர்கள்!! உள்ளே இருப்பவர்கள் MLA க்களோ என்ற சந்தேகம் வந்ததது நண்பருக்கு!


காலை நான்கு மணிக்கே கிளம்பி முதலில் சித்தூர் வழியாக செல்ல நினைத்து அப்புறம் சித்தூருக்கு 40 கிலோமீட்டருக்கு முன் உறவு ஒன்று சொன்னதன் பேரில் இடதுபுறம் திரும்பி பேர்ணாம்பட் வழியாக பெங்களூரு OMR ஐ அடைந்தோம்.

பேர்ணாம்பட்டில் காலை உணவை முடித்து விடுங்கள் அப்புறம் நல்ல கடை இருக்காது என்று சொல்லி இருந்தாலும் அங்கு தேடியதில் (ஊருக்குள் செல்லாமல்) ஒன்றும் சிக்காமல், V.கோட்டாவில் வெஜ் மட்டும் இருக்கும் ஒரு ஹோட்டலைப் பிடித்து காலை உணவை முடித்தோம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல தரமான இட்லி கைக்கும் வாய்க்கும் கிடைத்தது!  உப்புமா, பொங்கல் எல்லாம் இருக்கிறது என்று அவர்கள் சொன்னதால் அவற்றை ஒரு ஸ்பூன் மட்டும் கேட்டு வாங்கி சுவைத்துப் பார்த்தேன்.  உப்புமா நன்றாகக் குழைந்து டம்ளரில் ஊற்றி பருகும் பதம்! பொங்கல் ரொம்ப சுமார்.  

ஆளுக்கு ஒரு பூரி வாங்கி சாப்பிட்டோம்.  உருளை மசால் சுகமில்லை.  பெரிய சைஸ் பூரி. மத்தூர் வடை வைத்திருந்தார்கள்.  ஒன்று பத்து ரூபாய்.  நன்றாய் இருந்தது.
எங்கெங்கு செல்ல வேண்டும் என்று அதனதன் லொகேஷன்களை அவருக்கு அனுப்பியதும் பயணத்திட்டத்தை கீதா கச்சிதமாக வடிவமைத்துக் கொடுத்திருந்தார். நடுவில் அட்டூர் எனப்படும் ஒரு இடம் மட்டும் துண்டாக படுத்தியது.  அதையும் ஒரு வழியாக முடித்தோம்.  பத்து அல்லது 15 நிமிடங்கள் ஒவ்வொரு வீட்டிலும்.

வலைத்தோழி ராமலக்ஷ்மியை முதன் முதலாக சந்தித்தோம்.  அமைதியான இடத்தில சுத்தமான சூழலில் அழகான வீடு.  அழகான தோட்டம்.  அவர் தளத்தில் வெளியாகும் புகைப்படங்கள் எடுக்கப்படும் இடத்தை கண்டு களித்தோம்.


ராமலக்ஷ்மி தந்த ஸ்வீட், முறுக்கு.

பாஸுக்கு அவர் தந்த கிஃப்ட் 
நெல்லைத்தமிழனை அவர் வீட்டில் சந்தித்தோம்.    சென்ற முறையே நாங்கள் அவர் இல்லம் வரவில்லை என்பது அவரின் குறை என்பது தெரிந்தது.  ஸ்வீட் போடாத அழகான வாட்டர்மெலான் ஜூஸ் கொடுத்தார்.  அருமையான 'குணுக்கு' போட்டு கொடுத்தார் அவர் பாஸ்.   கொஞ்சம் பார்சலும் வாங்கி கொண்டோம் - வழியில் கொறிக்க!  எதிர்பாரா பரிசுடன் அங்கிருந்தும் கிளம்பினோம்.

பத்து மணிக்கு தொடங்கிய பயணத்தில் கீதா ரெங்கன் வீட்டுக்கு வந்தபோது மணி ஒன்பது.  "மதிய சாப்பாடு தயார் செய்து வைக்கவா?" என்று கேட்டிருந்தார்.  அந்த சிரமம் எல்லாம் வேண்டாம் என்று எல்லோருக்குமே - எல்லோருமே உணவு தயார் செய்து வைக்கிறோம் என்று சொல்லி இருந்தார்கள் - எங்கள் திட்டத்தில் நாங்கள் எந்த நேரம் எங்கிருப்போம் என்று தெரியாது எனவே ஒன்றும் சிரமப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.  'போகிறபோக்கில் டின்னருக்குதான் எங்கள் வீடு வருவீர்கள் போல' என்று கீதா ரெங்கன் சொல்லி இருந்தார்.  அப்படிதான் நடந்தது.  வேண்டாம் என்று சொன்னாலும் தட்டில் இடியாப்பம் போட்டு, இலங்கை சொதி ஊற்றிக் கொடுத்தார்.  
ரெங்கன் ஸாரும் அன்புடன் உபசரித்தார்.  சிறுபிள்ளை போல அவர் ஓடி ஓடி பரிமாறியது சங்கடமாக இருந்தது.  அந்த நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்கிறோமே என்று.

இடியாப்பம் எனக்குப் பிடிக்காது.  ஆனால் கீதா தந்த இடியாப்பத்தை இன்னும் கேட்டு வாங்கிச் சாப்பிட வைத்தது வர அதற்குத் துணையாய் தந்த சொதி.....  இன்னா டேஸ்ட்டு மாமு...  டிரைவருக்கும் சாலப்பரிந்து இடியாப்பம் தந்து அவர் வயிற்றையும் நிரப்பியதில் நேரம் போனது தெரியவில்லை.  இங்கு மட்டும் 20 நிமிடங்கள்.

பிறகு கேஜிஜியைப் பார்த்தபோது மணி 10.  இன்னும் ஒரு வீடு பாக்கி இருந்தாலும், கேஜிஜி சொல் கேட்டு அவர் வீட்டிலேயுயே இரவு படுக்கலாம் என்று முடிவெடுத்தபோது காற்றில் நாணல் ஆடுவது போல உடல் ஆடிக் கொண்டிருந்தது.  "உனக்கே அப்டின்னாசை டிரைவருக்கு எப்படி இருக்கும்? சேஃப்டி முக்கியம் ஸ்ரீ" என்றார்.

காலை 'வெள்'ளென எழுந்து பாக்கி இருந்த இன்னொரு எங்கள் ஆசிரியர் KGY வீடு.  
அவரே காபி தயாரிக்க, அவர் மருமகள் விரைந்து இட்லி, இட்லி உப்புமா, சட்னி, வெங்காயம் தக்காளி தொக்கு, மிளகாய்ப்பொடி, நறுக்கிய மாம்பழத் துண்டுகள் என காலை உணவு தந்து அசத்தினார்.  அத்தையை சிறிய இடைவெளிக்குப் பின் பார்த்ததும் சந்தோஷம்.

போகும் வழியிலும், வரும் வழியிலும் ஆங்காங்கே சிலபல புகைப்படங்கள்! அவைகளை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.  இங்கும் அடஹியே ஒரு தனிப்பதிவாகப் போட்டு ஒருநாளை சமாளிக்கிறேன்!

========================================================================================

காதல் 
வேகமெடுத்தபோது 
மோகமும் இருந்தது 
காலம் 
வேகமெடுத்தபோது 
காதல் மட்டுமே இருந்தது.


உன்னைத் சந்திக்க வருகையில் 
வரும் வேகத்தையும், 
உன்னைத் சந்தித்து விட்டு 
மனமில்லாமல் 
மெதுவாகத் திரும்புவதையும்,
உன்னை சந்திக்க முடியாமல் 
மனமில்லாமல் நின்று நின்று 
தயங்கி நான் 
திரும்புவதையும், 
கவனித்துக் கொண்டே 
இருக்கிறது 
உன் வீட்டுக்கு வரும்  சாலை.
நான் வராத நாட்களில் 
ஒருவேளை 
அது என்னைக் காணாமல் 
தேடுமோ..

==========================================================================================

புதுமொழிகள் 2 - 2015 ல் பகிர்ந்தது.
கந்தலானால் கசக்கி எறி. கூழானால் போஸ்டர் ஒட்டு.
.
முற்பகல் போனால் பிற்பகலிலும் வராது. (கரண்ட்)
.
கற்க கசடற கற்பவை கற்றபின் விற்க அதற்குத் தக.
.
எந்தையும் தாயும் அலைபேசி இல்லாமல் இருந்ததும் இந்நாடே...
.
திரைகடலோடியும் திரைப்படம் பாரு...
.
ஆண்டிராய்டின் அழகு ஆப்ஸில் தெரியும்..
.
அரசன் அன்று கொல்வான்.. ஆண்டிராய்ட் நின்று கொல்லும்.
.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்; ஆண்டிராய்ட் இல்லாதவன் நொந்து நூலாவான்.

=================================================================================================

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பிரமிட் நடராசன் தயாரிப்பில் 1999 ல் வெளியான படம் 'சங்கமம்'. ரஹ்மான், விந்தியா, மணிவண்ணன், வடிவேலு, சார்லி நடித்த படம். A R ரஹ்மான் இசையில் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். ஆனால் அவர் தாமதம் செய்ததில் தயாரிப்பாளருக்கு கடும் கோபம். பாடல்கள் வைரமுத்து.

அந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள். முதல் பாடல் சங்கர் மஹாதேவன் பாடியது. ச மா நல்ல குரல் வளம் கொண்டவர். இவர் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.


========================================================================================

SunNext ல் பார்த்தேன்.

2019 ல் வந்த காளிதாஸ் படத்தின் தொடர்ச்சியும்.  அதைப் பார்க்கவில்லை.  இதைப் பார்த்தபின் அதைப் பார்க்கவும் தோன்றவில்லை.

நான்கு வயதுப் பெண்குழந்தை காணாமல்போகிறாள்.  அதை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் - பரத் - அசிஸ்டன்ட் கமிஷனர் வைஷ்ணவியுடன் துப்பறிகிறார்.  தோல்வி மேல் தோல்வி,  வைஷ்ணவிக்கு பரத்தை பிடிக்கவில்லை.  வைஷ்ணவியை யாருக்குமே பிடிக்கவில்லை - பரத் தவிர!  அவர் யாரை கொலைகாரர் என்று நினைக்கிறாரோ அவர் கொலைகாரன் அல்ல.  ஆனால் அவர் கொலை செய்கிறார்.  அவர் முதலிலேயே ஒரு பெண்ணை கொலை செய்ததாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்று பின்னர் தெரிகிறது.  சம்பந்தப்பட்ட கேஸில் அவர் காப்பாற்றப்பட உதவியது அப்போதைய காதலியின் சாட்சி.  அவர் அப்போது மைனர் என்பதால் அடையாளம் மறைக்கப்படுகிறது.  இப்போது பார்த்தால் அவர்தான் இறந்த குழந்தையின் தாய்.  

இவர் அல்ல என்றால் வேறு யார் என்று ஒருவழியாய் கண்டுபிடிக்கும் நேரம் அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.  அப்புறம் அது தற்கொலை அல்ல என்று தெரிகிறது.  கேஸ் முடிந்து விட்டதா?  இல்லை அப்போதுதான் தொடங்குகிறது.  கொலைகாரர் யார் என்று தெரியும்போது எந்த திடுக்கிடலும் இல்லை.  அவர் பிடிப்படவும் இல்லை.  என்ன படமோ போங்க...

நிறைய கோர்ட் ஸீன் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

============================================================================================

வாசு ஸார் 

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே காதல்...

அப்பேர்ப்பட்ட ஒரு மாணவன் "சார் அர்ஜெண்டா restroom போயிட்டு வர்றேன்." என்று கூறிவிட்டு சென்றான் பத்து நிமிடங்கள் கழித்தும் அவனை காணவில்லை. 

வேறு வகுப்பு மாணவர்கள் என்னிடம் ஓடி வந்து "சார் நீங்க அனுப்புன அந்த மாணவன வெளியில தூக்கிட்டு போயி அடிக்கிறாங்க சார்" என்று கூறியவுடன் பதைபதைப்புடன் அவர்கள் சென்ற திசையை நோக்கி காம்பௌண்ட் சுவற்றின் மேல் ஏறி ( 10 அடிச்சுவர்) எகிறி குதித்து கையை ஊனிக் கொண்டு அந்த மாணவனை வெளியாட்களிடம் இருந்து காப்பாற்றினேன். 

காரணம் என்னுடைய மாணவன் காதலிக்கும் அதே பெண்ணை அந்த கும்பலில் இருந்த ஒருவன் காதலிக்கிறான். இதனால் பாட்டிலை உடைத்து (சாராய பாட்டில் தான்)  வயிற்றில் குத்துவதற்கு அந்த ஆள் தயாராகி விட்டான். 

அவனிடம் பேசி சமாதானப்படுத்தி மாணவனை பத்திரமாக மீட்டேன். Infatuation என்பது இந்த காலத்தில் மிகவும் சர்வ சாதாரணமான விஷயமாகிவிட்டது. ஆறாம் வகுப்பிலேயே அது என் ஆளு இது உன் ஆளு என்று மாணவர்கள் பங்கு போட்டுக் கொள்ளும் அளவிற்கு சமுதாயம் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் கொடுக்கும் அனைத்து சலுகைகளுக்கும் தான் இங்கே முதலிடம். 
அதனை ஆசிரியர்கள் தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு ஒரு அழுத்தம் (extra burden apart from the duty).
படிப்பது என்பது என்னவோ இரண்டாம் பட்சம் தான். 

ஆசிரியர் மாணவர்களை திட்டக்கூடாது, முறைக்க கூடாது, அவன் என்ன தவறு செய்தாலும் சிரித்துக்கொண்டே எதிர்மறையான விமர்சனம் ஏதும் செய்யாமல் நேர்மறையாக மட்டுமே சொல்ல வேண்டும் என்பது அரசாங்கத்தின் கட்டளை. 

ஆடிக் கறக்கிற மாட்ட ஆடி கறக்கணும், பாடி கறக்கற மாட்ட பாடி கறக்கணும் என்பது பழமொழி. 

ஆனால் இங்கே அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக் கொண்டு ஆசிரியர் சிரித்துக்கொண்டே தன்னுடைய பணியை செய்ய வேண்டும் என்று கட்டளை. 
Spare the rod spoil the child என்ற அருமையான ஆங்கில பழமொழி மொத்தமாக மறைந்து விட்டது.

சென்ற வாரம் சொன்ன கஞ்சா கேஸில் சொல்ல கொஞ்சம் தொடர்ச்சி இருக்கிறது.

அந்த மாணவனை காப்பாற்றிய அன்றைய மாலை பொழுதில் சுவர் ஏறி குதித்த கை ஊன்றிய அந்தத் தோள்களில் பயங்கர வலி. 

மைதிலி மருத்துவராக மாறி என்னை கவனிக்க நான் பிழைத்தேன். இத்தனைக்கும் பிறகும் உனக்கேன் இந்த வேலை என்று என்னை அவள் கேட்டதே இல்லை. ஏனென்றால் தொரப்பாடியில் வேலை செய்வது என்பது எவ்வளவு சவாலான பணி என்பது அவளுக்கு நன்றாக தெரியும். அவளது ஒத்துழைப்பு இருந்திருக்காவிட்டால் நான் என்றோ மாறுதல் வாங்கி இருப்பேன்.

குழுமத்தில் வாசு இதைப் பகிர்ந்தபோது வாசுவின் தங்கை கேட்டது :

"உனக்கு gateஐ திறந்து கொண்டு போகவே தெரியாதா? ஆன்னா ஊன்னா சுவர் ஏறி குதிக்கிற? Fracture ஆச்சுன்னா?"

அங்கேயே வாசு அதற்கு கொடுத்த பதில்! :

"இது பள்ளியின் பின்பகுதியில் நடந்தது என்பதால் கேட் வழியாக செல்வதற்கு நேரமின்மை காரணமாக இவ்வாறு செய்து விட்டேன்...  உனக்கும் என்னுடைய உறுதி மொழி உரித்தாகும்"

வாசுவின் துணைவி மைதிலியும் ஆசிரியைதான்.  மாணவ, மாணவியரின் தொல்லை வேண்டாம் என்று பதவி உயர்வை மறுத்து ஆசிரியையாகவே தொடர்கிறார்.

அவர் எனக்கு கொடுத்த வாய்ஸ் மெசேஜில் "அன்னிக்கி நான் வீட்டுக்கு வந்தப்போ ஹால் ஸோபாவில் வாசுவோட பேண்ட் கிடந்தது.  சரியா ப்ளஸ் போடற இடத்துல ஒரு பக்கம் அரை அடியும், ஒரு பக்கம் ஒரு அடியும் கிழிந்திருந்தது.  புது பேண்ட்டாச்சே..  எப்படி கிழிந்தது என்று யோசித்து வாசு வந்ததும் கேட்டேன்.  வாசு சொன்னதைக் கேட்டதும் சம்பவம் வேற லெவல் என்று தெரிந்தது."

நான் அதாவது ஸ்ரீராம் வாசுவைக் கேட்டது..  "நீ சொல்றது நம்ப முடியாத அளவு சாகசமா இருக்கு..  எப்படி அதை நீ செஞ்சே?  ஏதாவது ஆகியிருந்தா..?"

இதற்கு மைதிலியின் பதில் "அதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன்.  எனக்கே தெரியல என்று சொன்னார் வாசு.  அப்போ தோள் வலி மட்டுமில்லை, மணிக்கட்டும் பிசகி சுமார் 15 இருபது நாட்கள் செமஸ் பெயின்.  ஆர்த்தோ கிட்ட போய் சரி செய்து கொண்டோம்."

அதற்கு வாசுவின் பதிலோ, "அதாவது அந்த நேரத்துல எங்கிருந்துதான் அந்த வேகம் வந்தது தெரியல என் கண் முன்னாடி இருக்கின்றது எல்லாமே அந்தப் பையன காப்பாத்தணும் அப்படின்ற அந்த எண்ணம் மட்டுமே அதில் தானா எங்க இருந்து தான் எனக்கு அந்த பலம் வந்தது தெரியல நல்ல வேளையா காப்பாத்திட்டேன்"

தொடர்ந்து மைதிலி சொன்னது "அந்த நாளுக்கு அப்புறம் வாசு ஸ்கூல் கிளம்பும்போது "பாரு..  ஒழுங்கா ஸ்கூலுக்கு போனோமா, பாடம் நடத்தினோமா, வந்தோமான்னு இருக்கணும்.  அதை விட்டுட்டு இந்த சுவர் ஏறிக்குதிக்கறது, டேங்க்லேருந்து குதிக்கறதுல்லாம் வச்சுக்காதே" என்று தினசரி சொல்லி அனுப்புவாராம் வாசுவின் மாமனார்!

========================================================================================

சங்கமம் படத்திலிருந்து இரண்டாவது பாடல் ஸ்ரீனிவாஸ் - சுஜாதா மோகன் பாடிய பாடல்.  இனிமையான ஒரு மெலடி.

===========================================================================================



‘‘மகுடம் காத்த மங்கை’’ படத்தின் மூலமாக என் கழுத்தில் வசனகர்த்தா என்ற ‘ஐ.டி’ கார்டைக் கட்டிய விஸ்வநாதன் ஒருநாள் என்னை சந்தித்தார். அவரும், கோடீஸ்வரராவும் சேர்ந்து ‘நளதமயந்தி’ தெலுங்குப் படத்தை அதே பெயரில் தமிழாக்கம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்கள். கோடீஸ்வர ராவ் அப்போது பிரபல ஒலிப்பதிவாளராக விளங்கியவர். டைரக்டர் டி.யோகானந்தின் தம்பி இவர் என்பது கூடுதல் சிறப்பு.

முன்னாள் கர்நாடக முதல்–அமைச்சராக இருந்த தேவராஜ் அர்சுவின் சகோதரரான கெம்பராஜ் அர்ஸ் தயாரித்து அவரே ‘நளன்’ ஆகவும், பி.பானுமதி ‘தமயந்தி’ ஆகவும் நளதமயந்தி தெலுங்கு படத்தில் நடித்திருந்தனர்.

முதன் முதல் என்னைப் பட உலகில் அறிமுகம் செய்தவராயிற்றே என்ற நன்றி உணர்வுடன் ஒப்புக்கொண்டேன்.

தமிழாக்கப் படத்தில் பானுமதியே தன் சொந்தக்குரலில் பாடி, வசனம் பேசுவதாக ஏற்பாடாகியிருந்தது.

அவருக்கு சொந்தமான பரணி ஸ்டூடியோ ஒலிப்பதிவுக் கூடத்தில் டப்பிங் வேலை தொடங்கியது. முதல் நாள் பானுமதி வந்தார். சற்று நேரம் முன்வரிசை நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து சாய்ந்த வண்ணம் கண்களை மூடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.

வைத்த விழி வாங்காமல் அவரின் மஞ்சள் நிற வதனத்தையே நான் பார்த்துக்கொண்டு நின்றேன்.

அஞ்சனம் தீட்டப்பெறாத அகன்ற விழிகளுடன் கூடி, ஒப்பனை இல்லாமல் அவர் இயற்கை அழகுடன் இருந்தார். அப்போது அவருக்கு வயது 33. (7.9.1925–ல் பிறந்த அவர், என்னைவிட சரியாக 6 வயது மூன்று நாட்கள் மூத்தவர். அதே செப்டம்பர் 10.9.1931–ல் நான் பிறந்தேன்)

கண்களைத் திறந்து சுற்றிலும் ஒரு நோட்டமிட்டுவிட்டு ‘யார் வசனகர்த்தா’ என்று கேட்டார்.

அருகில் நின்ற கோடீஸ்வரராவால் நான் அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டேன். அப்போது அவர் தான் அங்கு சவுண்ட் என்ஜினீயராக இருந்தார்.

என்னை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார்.

அந்த நாட்களில் நான் மிகவும் ஒல்லியாக இருப்பேன். இளவயது வேறு!

‘இந்தச் சின்னப் பையனா?’ என்று எண்ணியிருப்பாரோ என்னவோ. அவரது சிவந்த இதழ்களின் இடுக்கில் ஒரு சிறு நகை நெளிவதைக் கவனித்தேன்.

என் குடலில் ஒரு கொட்டைப் புளி கரைந்தது! என்ன நடக்குமோ? புலியின் முன் ஒரு ஆட்டுக்குட்டி போல நான் நின்றேன்.

எடுத்த எடுப்பில் என்னை ‘இன்டர்வியூ’ செய்தார்.

‘ஒங்க பேரென்னா?’

‘ஆரூர்தாஸ்’.

‘உங்களுக்கு டப்பிங் டெக்னிக் தெரியுமா?’

‘நல்லாத் தெரியும்’.

‘எப்படி…?’

‘தஞ்சை ராமையாதாஸ் கிட்டே அஸிஸ்டெண்டா இருந்து கத்துக்கிட்டேன். அவர்தான் எனக்கு குரு’.

‘அப்படியா? இது ஒங்களுக்கு எத்தனையாவது படம்?’

‘மூணாவது படம்’.

‘சரி, முதல் ரீல்லேருந்து போவோம். நான் ‘லூப்’பை – படத்தைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். அதுக்கான வசனத்தை நீங்க படிச்சித் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கணும். சரியா ‘ஸிங்க்’ ஆனப்பறம் ‘டேக்’ போகலாம். பேப்பரைப் பார்த்துப் படிச்சிப்பேசி எனக்குப் பழக்கம் இல்லே. நீங்க படிச்சிக்கிட்டே வாங்க. அதைக்கேட்டு எனக்கு அப்படியே மனப்பாடம் ஆயிடும்’.

‘அம்மா! எனக்கும் பேப்பரைப் பார்த்துப் படிச்சி சொல்லணுங்குற அவசியம் இல்லே. ஒரு தடவை எழுதினாலே எனக்கு மனப்பாடம் ஆயிடும். நான் படத்தைப் பார்த்து டயலாக்கை சொல்லிக்கிட்டே வர்றேன். நீங்க கவனிங்க’.

ஒரு நொடிப்பொழுது என் முகத்தையே உற்றுப்பார்த்தார். பிறகு சொன்னார்:–

‘வெரிகுட்! அப்போ ஒங்ககிட்டே பேசுறது எனக்கு ரொம்ப ஈஸியா இருக்கும்’.

ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக முதல் ரீல் முழுவதும் பேசி முடித்தார். பிறகு என்னிடம் பேசினார்:–

‘இவ்வளவு நேரம் நான் டப்பிங் பேசுனதே கிடையாது. உங்ககிட்டேதான் பேசியிருக்கேன். காரணம் வசனங்கள் ரொம்ப சரளமாகவும், லிப்புக்குச் சரியா ‘ஸிங்க்’ ஆகுற மாதிரியும் இருக்கு. அதோட கேட்ட உடனே டக் டக்குன்னு ‘ஆல்டர்நேட்டிவ்’ டயலாக் சொல்லிடுறீங்க. ‘ஐயேம் வெரி ஹேப்பி வித் யுவர் டயலாக்ஸ்’.

‘தேங்க்யூம்மா…’

‘பியூச்சர்ல ஒங்க வாத்தியார் மாதிரி நீங்களும் டப்பிங்ல மாஸ்டரா வருவீங்கன்னு நினைக்கிறேன்.

பானுமதி தொடர்ந்தார்:–

‘ஜூபிடர் பிக்சர்ஸ் எங்ககிட்டேருந்து ரைட்ஸ் வாங்கி தமிழ்லே ‘டப்’ பண்ணுன லைலா மஜ்னு படத்துக்கு வசனம் பாட்டு ரெண்டையும் எஸ்.டி.சுந்தரம் எழுதுனாரு. டப்பிங் சமயத்துல அப்பப்போ அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். சில தடவைங்க நான் கோச்சிக்கிட்டு எழுந்து போயிருக்கேன். அப்புறம் அவரே வந்து என்னைச் சமாதானப்படுத்துவாரு.

மத்தவுங்களோட திறமையை மதிக்க எனக்குத் தெரியும். அதே சமயத்துல என்னை யாரும் ‘கண்ட்ரோல்’ பண்ணவோ, ‘ஓவர்டேக்’ பண்ணவோ விடமாட்டேன். ‘ஐ டோண்ட் கேர்’னு தூக்கி வீசிட்டு வந்திடுவேன். ‘ஐயேம் வெரி ஸென்ஸிட்டிவ்!’.

‘அம்மா! ஒங்களைப்பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன்’.

‘என்னான்னு…’

‘நீங்க ஒரு நெருங்க முடியாத நெருப்புன்னு எல்லாரும் சொல்லுவாங்க’.

‘ஐயையோ! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே’.

‘இந்தப் படத்துலகூட – அந்த அம்மாவை நீ எப்படி சமாளிச்சி வசனம் சொல்லிக் குடுக்கப்போறே? நீ புதுசு. அதிலேயும் இளசு அப்படின்னு சிலர் என்னைப் பயமுறுத்துனாங்க. முடிஞ்சவரைக்கும் பாக்குறேன். முடியலேன்னா விட்டுட்டு ஓடிவந்திடுறேன்னு அவுங்களுக்கு சொன்னேன்’.

இதைக்கேட்டு அவர் பலமாகச் சிரித்துவிட்டு, ‘இப்போ நான் தான் ஒங்களைவிட்டு ஓடிடலாமான்னு நினைக்குறேன்’ என்றார்.

பதிலுக்கு நான் சிரித்தேன்.

(அவர் முகத்தைக் கவிழ்த்தியபடி) ‘சின்ன வயசாருந்தாலும் நல்லா பேசுறீங்க. இப்படி ‘ஓப்பன் ஹார்ட்டா’ பேசுறது எனக்குப் பிடிக்கும். ரைட், நாளைக்கு வர்றேன். எனக்காக நீங்க காத்திருக்க வேண்டாம். மத்த வேலையைப் பாருங்க. நான் வர்றதுக்கு முந்தி சொல்லி அனுப்புறேன், பை’.

அந்த அழகிய அன்னப்பறவை அங்கிருந்து எழுந்து அளவெடுத்து வைப்பதுபோல அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து சென்றது. அந்தச் சிறு நடையில் ஒரு கம்பீரமும், கலை அழகும் இருந்ததை நான் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

அது சினிமா நடையோ சிங்கார நடையோ அல்ல.

இயற்கை நடை! இயல்பாக இருந்தது!

அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து இளமையிலேயே நல்ல கல்வி அறிவு பெற்றிருந்த காரணத்தால் அவருடைய பேச்சு, பார்வை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருந்ததை நான் அறிந்து கொண்டேன்.

பானுமதி போனபிறகு அருகில் நின்ற நண்பர் விஸ்வநாதனும், கோடீஸ்வரராவும் என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, ‘அந்த அம்மாகிட்டே நீ இவ்வளவு தைரியமா பேசிச் சமாளிப்பேன்னு நாங்க நினைக்கவே இல்லே. ரொம்ப சந்தோஷம். ஒரு கவலை எங்களை விட்டுச்சி’ என்றனர்.

டப்பிங் பணிகள் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே பல நாள் பழகியதுபோன்ற ஒரு பாங்குடன் பானுமதி அம்மா பழகினார். அவரைப்பற்றி ஏற்கனவே என் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த ஒருவித இறுக்கமும், புழுக்கமும் என்னை விட்டு விலகின! அதனால் அவருடைய முழு ஒத்துழைப்புடன் ‘நளதமயந்தி’ தமிழாக்கப்பணி நல்லபடியாக நடந்து முடிந்தது.

தயாரிப்பாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. பேசியதைவிட சற்றுக் கூடுதலாகவே சம்பளம் கொடுத்தார்கள்.

இது நடந்து ஏழெட்டு வருடங்களில் நான் வளர்ந்து ஆளாகி, பல படங்களுக்கு எழுதியும்கூட எந்த ஒரு படத்திலும் பானுமதி அம்மா நடிக்கவும் இல்லை. அவரை எந்த ஸ்டூடியோவிலும் சந்திக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைக்கவில்லை.

1966! காவிரிக்கரைப்படுகை நந்நிலத்தில் நன்கு உரமிட்டு வளர்ந்து வளைந்து வரப்பில் கிடக்கும் சம்பாக்கதிர்போல நான் விளைந்து மகத்தான மகசூல் கண்டு மகிழ்ந்து வெற்றி பெற்றிருந்த வளை…

வாசு ஸ்டூடியோ அதிபர் அமரர் என் அன்பிற்கினிய அண்ணன் வாசுமேனன் தயாரித்த ‘பூவும் பொட்டும்’ படத்திற்கு நான் திரைக்கதை வசனம் எழுதினேன். அதில் குணசித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியராகவும், அவருடைய மனைவியாக பானுமதி அம்மாவும் நடிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.

அம்மாவுக்கு கதை சொல்வதற்காக அவர் வீட்டிற்கு அண்ணன் வாசுமேனன் என்னை அழைத்துச் சென்றார்.

பல வருடங்களுக்குப் பின்னர் பானுமதி அம்மாவை நான் பார்க்கப்போகிறேன். பரவச உணர்வு உள்ளத்தில் படர்ந்தது!


சினிமாவின் மறுபக்கம் - ஆரூர்தாஸ் - தினத்தந்தி

========================================================================

இந்த வாரம் ராசிபலன் 

31-5-2010 6-6-2010

நான் கடகம்.  (ஒவ்வொன்றிலும்) நான்கு விஷயங்கள் பொருந்தி வருகிறது.


மேஷம்

தன்னம்பிக்கை தொடர்ந்து வளருமுங்க. அதனால் புதுவிஷயங்களை திட்டமிட்டு முடிப்பீங்க. பிள்ளைகளை வருத்திக்கிட்டிருந்த உடல்நலக்குறைகள் சீராகுமுங்க. உறவுக்காரங்களும் நண்பர்களும் பாராட்டற மாதிரி சாதனை செய்வீங்க. கூடப்பிறந்தவங்களுக்காகக் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேற்று மதத்துக் காரங்க உதவுவாங்க. காய்ச்சல், சளித் தொந்தரவுன்னு உபாதை வருமுங்க. வியாபாரத்துல எதிர்பாராத தனலாபம் உண்டுங்க. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்துல ஆர்வமா ஈடுபடுவீங்க. நவக்கிரக ஸ்தோத்திரம் சொல்லி, சனிக்கிழமைல நவக்கிரக வலம் வாங்க. நலமே சூழும்.

ரிஷபம்

எதிர்பார்த்த பணம் வருமுங்க. தடைப் பட்ட வேலை விரைவாக முடியுமுங்க. பள்ளிநாள் சினேகிதரை சந்திச்சு மலரும் நினைவுகளில் திளைப்பீங்க. தொல்லை தந்துகிட்டிருந்த கடனை பைசல் செய்ய புதுவழி பிறக்குமுங்க. கணவன்-மனைவிக்குள் எந்த கருத்து வேற்றுமையும் இருக்காதுங்க. கனவுத்தொல்லை, கண் எரிச்சல்னு கொஞ்சம் அவதிப்படுவீங்க. முதுகுவலியும் இருக்குங்க. வியாபாரத்துல உபத்திரவம் கொடுத்த பங்குதாரர்களை மாற்றுவீங்க. உத்யோகத்துல பணிகளை வேகமாக முடிக்கப் பாருங்க. வியாழக்கிழமை விரதம் இருந்து, குரு சந்நதியில் விளக்கேற்றி, குருபகவான் துதி சொல்லுங்க. வாழ்க்கை ஒளிரும்.

மிதுனம்

தடைபட்ட வேலைகளை சாமர்த்தியமான பேச்சால முடிப்பீங்க. பண உதவி சிரமமில்லாம கிடைக்குமுங்க. பிள்ளைகளால உங்க சமூக அந்தஸ்து உயருமுங்க. உடன்பிறந்தவங்க ஒத்தாசையாக இருப்பாங்க. தாய்வழி உறவுக்காரங்களால கொஞ்சம் மனஸ்தாபம் வரும்; விட்டுக் கொடுத்துப் போயிடுங்க. பிரபலங்கள் அறிமுகமாவாங்க. மூட்டுவலி, சதைப் பிடிப்புன்னு கோளாறு வருமுங்க. புது வாகன யோகம் இருக்குங்க. வியாபாரத்துல, தாட்சண்யம் பார்க்காம பாக்கிகளை வசூலிச்சுடுங்க. உத்யோகத்துல மேலதிகாரி ஆதரவா இருப்பாருங்க. ஆஞ்சநேயரை தரிசிச்சு, அனுமன் நாமாவளி சொல்லுங்க. அல்லல் அகலும்.

கடகம்

சரியான நேரத்துல உங்க திறமைகளை வெளிப்படுத்துவீங்க. சின்ன சின்ன வாக்கு வாதங்கள் இருந்தாலும், அது குடும்ப நன்மைக்கானதுங்கறதால ஒற்றுமை குறையாதுங்க. பிள்ளைகளோட விருப்பங்களை நிறைவேற்றி சந்தோஷப்படுத்துவீங்க. பழைய நண்பர்களை சந்திக்கறதால் ஆதாயம் உண்டுங்க. வெளிவட்டாரத்துல மதிப்பு கூடுமுங்க. தாய்மாமன், அத்தை வழி மனஸ்தாபங்கள் விலகுமுங்க. ஆன்மிகத்துல நாட்டம் அதிகரிக்குமுங்க. வியாபாரம் மேன்மையடையும். உத்யோகத்துல பாராட்டு பெறுவீங்க. பல்வலி, பார்வைக் கோளாறுன்னு உபாதை வருமுங்க. முருகப் பெருமானை வணங்கி, கந்தசஷ்டி கவசம் படிங்க. மேன்மை பெருகும்.

சிம்மம்

கலையுணர்வு இருக்கறதால வேலை யெல்லாம் பிறர் பாராட்டற மாதிரி நிறைவேறுமுங்க. சகோதரரோடு இருந்த மனப் போராட்டம் விலகுமுங்க. பிள்ளைகளோட திறமைகளை வெளிக்கொணர்வீங்க. ரொம்ப நாளா சந்திக்க நினைச்ச நண்பரை இப்ப சந்திப்பீங்க. அடிவயிற்று வலி, வாயுக்கோளாறுன்னு வருமுங்க. விடுபட்ட பிரார்த்தனைகள் நிறைவேறுமுங்க. வெளிநாட்டில் இருக்கறவங்க உதவுவாங்க. வியாபாரத்துல பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியிருக்குமுங்க. உத்யோகத்துல மேலதிகாரியோடு வாக்கு வாதம் ஏற்படுமுங்க. பெருமாள் கோயில்ல நெய்தீபம் ஏற்றி, கோவிந்த நாமாவளி படிங்க. பெருமை சிறக்கும்.

கன்னி

வார முற்பகுதியில அலைச்சல் இருந்தாலும் அதுக்கும் சேர்த்து வெச்சு ஆதாயம் அடைவீங்க. பெரிய மனிதர்களோட சந்திப்பு, பல நன்மைகளைத் தருமுங்க. மறைமுக எதிர்ப்புகள் அடங்குமுங்க. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியுமுங்க. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியும் எதிர்கால லாபமும் உண்டுங்க. தாயாரின் உடல் நலத்துல அக்கறை எடுத்துக்கோங்க. வியாபாரத்துல போட்டிகளைத் தவிர்க்க முடியாது; சமாளிக்கத்தான் வேணுமுங்க. உத்யோகத்துல அவசர முடிவுகள் எடுத்துடாதீங்க. சூட்டால் தொண்டை புகைச்சல் வரும்;சளி பிடிக்குமுங்க. விஷ்ணு துர்க்கை வழிபாடு பண்ணுங்க. அபிராமி அந்தாதி படிங்க. வினைகள் தீரும்.

துலாம்

மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவெடுப்பீங்க. குடும்ப சச்சரவை உங்க பொறுமைதான் தீர்க்கணுமுங்க. சூழ்நிலை தெரியாம முரண்டு பிடிச்ச பிள்ளைங்க, அனுசரணையா நடந்துப்பாங்க. தந்தையின் ஆசீர்வாதமும் ஆலோசனையும் பேருதவியா இருக்குமுங்க. முன்கோபத்தைக் கட்டுப்படுத்திக்கணுமுங்க. சகோதரர்கள் உங்களைப் புரிஞ்சுகிட்டு நடந்துப்பாங்க. ஆடம்பரத்தைக் குறைச்சுக்கோங்க. வாரப் பிற்பகுதியில பணம் வருமுங்க. வியாபாரத்துல லாபம் அதிகரிக்குமுங்க. உத்யோகத்துல மேலதிகாரி ஆதரவா இருப்பாருங்க. துர்க்கை வழிபாடு பண்ணுங்க. ராகுகால துர்க்கா கவசம் சொல்லுங்க. துயரம் நீங்கும்.

விருச்சிகம்

ரொம்ப நாளா வாங்க நினைச்சிருந்த பொருளை வாங்குவீங்க. தம்பதிக்குள் பிணக்குகள் நீங்குமுங்க. பிள்ளைகளோட பிடிவாதம் தளருமுங்க. சகோதரர்கள் உதவியா இருப்பாங்க. வாகன வசதி பெருகுமுங்க. வெளிவட்டாரத்ல மதிப்பு உயருமுங்க. வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகுமுங்க. நெஞ்செரிச்சல், கண்வலின்னு உபாதை வருமுங்க. அரசாங்க அனுகூலங்கள் அதிகரிக்குமுங்க. வியாபாரத்துல இதமாகப் பேசி வரவேண்டிய பாக்கிகளை வசூலிக்கணுமுங்க. உத்யோகத்துல மேலதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவீங்க. தட்சிணாமூர்த்தியை வழிபடுங்க; ஆதித்ய ஹ்ருதயம் படிங்க. ஆனந்தம் பொங்கும்.

தனுசு

அடுத்தவங்களைக் குறை சொல்லிக்கிட்டிருக்காம, தடைப்பட்ட வேலைகளை முடிக்கற வழியைப் பாருங்க. குடும்பத்துல அமைதி நிலவுமுங்க. அடுத்தடுத்து ஏற்பாடாகும் பயணங்களால் திக்குமுக்காடுவீங்க. சகோதரரோட இருந்த பிரச்னை முடிவுக்கு வரும். உறவுக்காரங்க, நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாரப் பிற்பகுதியில கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வயிற்றுவலி, அலர்ஜின்னு கோளாறு வருமுங்க. வியாபாரத்துல போட்டிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பீங்க. உத்யோகத்துல மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும், மேலதிகாரியோட ஆதரவால அதையெல்லாம் வெற்றி கொள்வீங்க. அம்மனுக்கு விளக்கேற்றுங்க. அம்மன் துதி பாடுங்க. நன்மைகள் விளையும்.

மகரம்

தடைபட்ட சில காரியங்கள் இந்த வாரத்துல முடியுமுங்க. குடும்பத்துல உங்க பேச்சுக்கு உரிய மதிப்பு இருக்குமுங்க. பிள்ளைங்க ஆசைப்பட்டுக் கேட்டதை வாங்கிக் கொடுப்பீங்க. தாயாரின் உடல் நலம் சீராகுமுங்க. அரசாங்க காரியங்கள்ல அனுகூலம் உண்டுங்க. வெளியூர் பயணங்கள்ல ஆதாயம் கிடைக்குமுங்க. வாயுக் கோளாறு, மூச்சுப்பிடிப்பு, நெஞ்சுவலின்னு உபத்திரவம் வரும். புதுமுயற்சிகள்ல வெற்றி உண்டுங்க. சொந்த-பந்தங்களின் வருகை அதிகமாகுமுங்க. வியாபாரத்துல வேலையாட்களால பிரச்னை வந்தாலும் உடனே விலகிடுமுங்க. உத்யோகத்துல சுமுக போக்கு நிலவுமுங்க. வலம்புரி விநாயகரை வணங்குங்க, விநாயகர் காரிய சித்தி மாலை படிங்க. கவலைகள் தீரும்.

கும்பம்

மறைமுகமா செயல்பட்டவங்களை இனங்கண்டு ஒதுக்குவீங்க. மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்தே வரன் அமையுமுங்க. கூடப்பிறந்தவங்களோட விருப்பங்களைப் பூர்த்தி செய்வீங்க. சரும நமைச்சல், வாய்ப்புண்ணுன்னு கோளாறு வரும். உறவினர்கள்கிட்ட மதிப்பு கூடுமுங்க. அதிகாரப் பதவியில் இருக்கறவங்க உதவுவாங்க. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்குமுங்க கோயில் புனரமைப்புப் பணியில் ஈடுபடுவீங்க. அக்கம் பக்க வீட்டார் அனுசரணையா இருப்பாங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த ஆலோசனை செய்வீங்க. உத்யோகத்துல மகிழ்ச்சியுண்டுங்க. துர்க்கை வழிபாடு பண்ணுங்க. ராகுகால துர்க்கா கவசம் சொல்லுங்க. தொட்டது துலங்கும்.

மீனம்

வெளிவட்டாரப் பழக்கத்தில் நன்மதிப்பு கூடுமுங்க. மனக்குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்குமுங்க. குடும்பத்துல அப்பப்ப நிலவி வந்த கூச்சல் குழப்பமெல்லாம் தீருமுங்க. பிள்ளைகளோட எண்ணங்களை நிறைவேற்ற சேமிப்பைக் கொஞ்சம் கரைக்க வேண்டியிருக்குமுங்க. சுபவிசேஷ நிமித்தமாக வரும் உறவினர்களால கலகலப்பான சூழல் அமையுமுங்க. எதிர்பார்த்திருந்த அரசாங்க ஆதாயம் கிடைக்குமுங்க. வியாபாரம் செழிக்குமுங்க. உத்யோகத்துல எல்லாரும் உங்ககிட்ட யோசனை கேட்பாங்க. பித்தக் கோளாறால் தலைச்சுற்றல். வாந்தின்னு வருமுங்க. சிவதரிசனம் பண்ணுங்க. கோளறு திருப்பதிகம் படிங்க. கோள்கள் நலம் தரும். 

- ஜோதிட ரத்னா கே பி வித்யாதரன் -
==========================================================================================

பொக்கிஷம் :  

'
கதையின் முடிவு கல்கியின் கையெழுத்திலேயே....

ஜெ' யின் சில பழைய ஓவியங்கள்.








இவற்றில் ஏதாவது ரிப்பீட் இருந்தால் மன்னியுங்கள்.  இப்போது இவற்றை இங்கு பகிர்ந்ததும் முகநூலுக்கு உதவும் என்று வைத்திருக்காமல் டெலீட் செய்து விட்டேன்.  இனி ரிப்பீட் ஆகாது!

24 கருத்துகள்:

  1. எப்படித்தான் பயணம் செய்தீர்களோ... பனிரண்டு மணி நேரம் காரில்... நினைக்கவே கஷ்டம்.

    ஆனால் இதைச் சாக்கிட்டு வயதான உறவினர்களைச் சந்தித்துவிட்டீர்கள். அதுவே தனி மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  பயணம் சிரமம்தான்.  இதில் சிறிய அரசியலும் இருக்கிறது.  எனவே பயணம் தவிர்க்க முடியாது!

      உறவுகளை இந்த சாக்கில் சந்தித்தது மகிழ்ச்சி.  இதுவரை சென்றே இராத உறவுகளின் வீடுகளுக்கும் சென்று வந்தோமே..

      நீக்கு
  2. நீங்க பெர்சனலா உறவினர்களிடமும் மற்றவர்களிடமும் கேட்டீங்கன்னா, என்ன இது கால்ல வெந்நீர் கொட்டிக்கிட்டதுபோலக் கிளம்பிட்டீங்க... ஒரு சில மணி நேரம்கூட இருக்கலையே என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பத்திரிகை வைக்கும் எல்லோருக்கும் இந்த அபிப்ராயம் பொருந்தும். நின்று நிதானித்து பத்திரிக்கை கொடுத்தால் திருமணம் தாண்டியும் பத்திரிகை கொடுக்கும் நிலை வரும்!!! :))

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம். நலம்தானே?

      நீக்கு
    2. நலமாக உள்ளேன். ஊருக்கெல்லாம் சென்று வந்த அலைச்சலில், நிறைய வேலைகள், சேர்ந்து விட்டதால் உடல் அலுப்பு.. இன்னும் கொஞ்சம் பலமாகி விட்டது வேறு ஒன்றுமில்லை. விசாரித்தமைக்கு நன்றி சகோதரரே.

      நீக்கு
    3. இப்போ ஓகே தானே?

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    சகோதரர் ஸ்ரீராம் சொன்னதால் வியாழனன்று வரவில்லை. இன்று கொஞ்சம் வேலைகள் அவ்வளவாக இல்லாத நிலையில் உள்ளேன். நேற்றைய புதன் கேள்வி பதில் பகுதியையும் கருத்துக்களையும் இப்போதுதான் படித்தேன். நேற்றைய பகுதியும் அருமை அதில் சகோதரர் நெல்லைத் தமிழர், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் இவர்களிருவரின் தொடரும் பங்களிப்பு நன்றாக உள்ளது. சகோதரர் கௌதமன் அவர்களின் பகுதி சென்ற வார தொடர்ச்சி போலும். அதையும் சேர்த்துப் படிக்க வேண்டும். எத்தனை பேரின் பதிவுகளை நானும் இந்த ஒரு மாதத்தில் மிஸ் செய்துள்ளேன் என்ற வருத்தம் வருகிறது. அனைவரும் மன்னிக்கவும். இருப்பினும், என்னையும் நினைவு வைத்திருக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று கீதா அக்காவும் உங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

      நீக்கு
    2. ஆம் பார்த்தேன். அவருக்கும் சேர்த்துதான் என் நன்றிகள்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    உங்களின் பெங்களூர் விஜயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். திருமணநாள் நெருங்கி வரும் நேரத்தில் அலைச்சல்கள் கஸ்டமாக இருந்தாலும், அதில் கிடைக்கும் மனநிறைவே தனி. இங்கு உங்களை உபசரித்து உணவும், பரிசுகளும் தந்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகளும். வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  உங்கள் முகவரி தெரிந்திருந்தால் உங்களையும் நாங்கள் (நானும் பாஸும்) சந்தித்திருக்கக் கூடும்!

      நீக்கு
    2. சொல்லமுடியாது. நீங்கள் பயணத்தில் வழியில் அவரைப் பார்த்திருக்கக்கூடும். புல் டெம்பிள் கோயில் வழியாகச் செல்லும்போது கஹ மேடத்தை நினைத்துக்கொள்வேன்.

      நீக்கு
    3. :))

      புல் டெம்பிள் கோயில் என்றால்? அங்குதான் அவர் வீடா?

      நீக்கு
  6. ஶ்ரீராமை, லஞ்ச், டின்னர் டயத்துக்கு வாங்க என்று சொல்லியிருந்தாலும் இந்த மாதிரி பயணங்களில் நேரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அடுத்த பெங்களூர் பயணத்தில் வீட்டில் தங்குவதுபோல இருவரும் வரணும் என்று சொல்லியிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  7. ராசிபலன்களில் குறைந்தது முப்பது சதவிகிதமாவது ஒவ்வொருவருக்கும் பொருந்துவது போல இருக்கும்.

    தேர்தல் ராசி பலன்கள் சொன்னவர் கழுத்தில் துண்டைப் போட்டுக் கேட்கவா இயலும்? ஏண்டா ஒண்ணும் தெரியாம உளறுகிறாய் என்று.... ஆனால் எனக்கு ஒரு ஜோசியம் தெரியும். வை.கோபாலசாமி மதிமுக யாரைச் சென்று பார்த்தாலும் அந்த அரசியல்வாதி விஸ்க்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ அந்த லிஸ்ட்ல பிரகாஷ்ராஜும் சேர்ந்திருக்கார் போலவே...

      நீக்கு
  8. எனக்கு மத்தூர் வடை பிடிப்பதில்லை. ரொம்பவே எண்ணெய் குடித்திருக்கும்.

    இப்போதெல்லாம் எண்ணெய் அதிகமாக இருந்தால் அந்த உணவு பிடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எண்ணெய் குடித்தது போல தெரியவில்லை. ஆனால் சுவையாக இருந்தது.

      நீக்கு
    2. // இப்போதெல்லாம் எண்ணெய் அதிகமாக இருந்தால் அந்த உணவு பிடிப்பதில்லை. //

      இரண்டு நாட்களுக்கு முன் நாக்கு நமநமவென இருக்க, வடகம் அதுவும் ஜவ்வரிசி வடகம் பொறித்துத் தரச்சொல்லி சாப்பிட்டேன்!

      நீக்கு
  9. ரங்கன் சார் நல்லா பழகும் டைப். அவரது சில பிரின்சிபிள்கள் (உணவுக்கு காசு வாங்கக்கூடாது என்பதால் அந்தத் தொழில் கூடாது, ஏமாற்றுப் பணம் கூடாது என்பது போன்று) என்னை வியக்க வைக்கும். கீதா ரங்கனின் திறமையும் உழைப்பும் நாம் அறிந்ததுதான்.

    அது சரி.. எனக்கு சொதி பிடிக்காதே. எனக்கு சேவைக்கு புளிசேரி அல்லது மோர்குழம்புதான். இப்கோ அது அதீத கார்ப் என்று தோன்றுவதால் சாப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடியாப்பத்துக்கு மோர்க்குழம்பா...   வேணாம்.  சொதி மிக மிக நன்றாய் இருந்தது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!