27.9.26

நான் சென்ற அலுவலகப் பயணங்களில் கண்டவை - 01 பாலக்காடு:: நெல்லைத்தமிழன்

 

நான் பஹ்ரைனில் ஒரு பெரிய கம்பெனியின் கணிணித் துறைக்குத் தலைவனாக வேலை பார்த்தேன். எங்கள் கம்பெனி ஒரு ரீடெயில் க்ரூப். முதலில் பஹ்ரைனில் சாதாரண சூப்பர் மார்கெட்டாகத் தொடங்கப்பட்டு, பிறகு படிப்படியாக முன்னேறி, கல்ஃப் தேசங்கள் எல்லாவற்றிலும் கிளை விட்டு, பிறகு இந்தியாவிலும் கிளைகளை ஆரம்பித்து என்று ரொம்பவே விரிவடைந்தது. அந்தக் கம்பெனியில் நான் சேர்ந்தபோது அது சூப்பர்மார்க்கெட் குழுமமாகவே அறியப்பட்டிருந்தது. பத்து ஃபேஷன் ரீடெயில் அவுட்லெட்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நான் அந்தக் கம்பெனியில் சேர்ந்ததே என் வாழ்வில் சுவாரசியமான திருப்பம். எல்லாவற்றையும் தமிழில் எழுதுவதும் (தமிழ்ப்படுத்தி எழுதுவது) கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதனால் ஆங்காங்கு நான் ஆங்கிலச் சொற்களையும் உபயோகிக்கிறேன். நான் எழுதுவது படிக்கும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்குமோ என்னவோ, எனக்கு வாழ்வை திரும்ப நினைத்துப் பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.

நான் பஹ்ரைன் வந்ததும், அங்கு ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ததும் இப்போது நினைக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் துபாயில் ஒன்றரை வருடங்களுக்கு மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பணத்திற்குக் குறைவில்லை என்றாலும் நான் ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால், கம்பெனிக்கு நிறைய வருமானம் வந்தால்தான் எனக்கு வேலை செய்த திருப்தி இருந்திருக்கும். நான் எப்போதுமே சம்பளத்தையும், நான் எவ்வளவு உழைக்கிறேன் என்பதையும், என்னால் கம்பெனிக்கு லாபமாக இருக்கிறதா என்பதையும் வேலை பார்க்க ஆரம்பித்தபோதிலிருந்து கவனித்துவருவேன். இயற்கையாக, அதிகமாக பெறக்கூடாது, பெற்றால் அது கடனாக ஆகிவிடும் என்ற என் நம்பிக்கையின் காரணமாக இருக்கலாம். இதை எழுதும்போது என் எண்ணத்தை முடிந்த அளவு உண்மையாக எழுதுகிறேன். ஒருவனின் செய்கை அவனது எண்ணத்தால் விளைகிறது. ஆனால் அருகிலிருப்பவர்கள் அவனது செய்கையைத்தான், அதனால் ஏற்படும் விளைவுகளைத்தான் கவனிப்பார்கள். அதனால் ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்வதற்கும், பிறர் அவனை எடைபோடுவதற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கும். இந்த எடை போடுதல், ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். காரணம் ஒருவன் செய்கை, வெவ்வேறு மனிதர்களை வெவ்வேறாக பாதித்து எடைபோடுவதில் வித்தியாசத்தை உண்டாக்கும். அதனால் நான் எழுதுவதை நீங்கள், என்னைப் பற்றிய என் அனுமானமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

என்னுடைய பெரியம்மா, என் சிறிய வயதில் (பதின்ம) ஒரு பாடலைப் பாடுவார்கள். அது என் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது.

 எவன் எதைச் செய்தாலும் அவன் அதை அறிவான்

அந்த எண்ணத்தின் தரம் கொண்டு பலன் பெறுவான்.

கண்ணன் சொன்னதென்ன கீதையிலே அதைக்

கருத்தில் கொள்வாய் உந்தன் வாழ்க்கையிலே

அண்ணன் தம்பி சுற்றமெல்லாம் உந்தன்

அறிவில் குழப்பம் தரும் – பாசமெனும் மாயையாலே….

நான் எழுதியிருக்கும் பாடல் வரிகளில் தவறு இருக்கலாம், ஆனால் இப்படித்தான் என் மனதில் அந்தப் பாடல் பதிந்திருக்கிறது. ஒருவன் செய்யும் செயலை, அவன் என்ன நினைத்துச் செய்திருக்கிறான் என்பதை வைத்துத்தான் இறைவன் எடைபோடுகிறான்.

துபாயில் நான் கம்ப்யூட்டர் பாயிண்ட் என்ற கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்தேன். (என்னுடைய பொசிஷன் மேனேஜர். ஆனால் அதற்குரிய வேலை அல்ல) துபாயில் வேலை திருப்தி இல்லை. என்னை அழைத்து வந்தவர், கம்பெனியின் பொது மேலாளராக என்னுடனே அந்தக் கம்பெனியில் சேர்ந்தவர். அவர்தான் என் கணினி வாழ்க்கையின் காரணகர்த்தா. அப்படி இருந்தபோது, அவருக்குத் தெரியாமலேயே நான் நம்மூர் பி.எஸ்.என்.எல் போன்ற எடிசலாட் கம்பெனிக்கு வேலைக்கு அப்ளை செய்தேன். எனக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. நான் வேலை பார்த்த கம்பெனியில், பல கஸ்டமர் கம்பெனிகளில் எங்கள் சாஃப்ட்வேர் உண்டு. அதில் ஒரு கம்பெனியை விஸிட் செய்கிறேன் என்ற சாக்கில் நான் அபுதாபிக்குச் சென்று அந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டேன். அப்போதுதான், அரசு அலுவலகங்கள், அதிலும் எடிசலாட் போன்ற அலுவலகங்களின் தரம் தெரிந்தது.  கணினி நிபுணர் ஒருவருக்கான மேசையே மிக மிகப் பெரியது. வேலை செய்யும் சூழல் அவ்வளவு அருமையான எண்ணத்தை மனதில் விளைவித்தது.  நேர்முகத் தேர்வை நன்றாகச் செய்தேன் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டது. ஆரம்ப கட்ட நிலைக்கு அடுத்தபடியாக 7-8 பேர் கொண்ட குழு ஒன்று என்னை நேர்முகமாக ஒரு பெரிய அறையில் இண்டர்வியூ செய்தார்கள். அவர்களில் ஒருவர், எப்படி கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இவனால் பதில் சொல்ல முடியும்? அதற்குரிய அனுபவம் இருக்குமா என்று யோசித்தார். அதனால், அந்தக் கம்பெனியில் சேர்ந்தால் எனக்கு பாஸாகப் போகிறவரிடம் என்னை இன்னொரு டெக்னிகல் இண்டர்வியூவிற்கு ஆட்படுத்தும்படிச் சொன்னார். அதையும் முடித்தேன், இருந்தாலும் எனக்கு மனதில் நெருடல் இருந்தது. என்னை இண்டர்வியூ செய்த அந்த இந்தியர், என்னைக் குறைத்து மதிப்பிட முயல்கிறாரோ என்று தோன்றியது.

என்னுடைய பாஸ் (பொது மேலாளர், துபாயில் நான் வேலை பார்த்த கம்பெனி) சாயிபாபாவின் பக்தர். அதிலும் புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தர். அவர் என்னிடம் ஷீரடி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைக் கொடுத்திருந்தார். அப்படிக் கொடுக்கும்போது, பாபாவிடம் வேண்டிக்கொண்டு ஏழு நாட்கள் தொடர்ச்சியாக அந்தப் புத்தகத்தை பக்தியுடன் படித்து முடித்தால், நாம் வேண்டிக்கொண்டது நடக்கும் என்றார். இது என் நினைவுக்கு வந்ததால், இண்டர்வியூ சென்றுவிட்டு வந்த அன்றிலிருந்து நான் ஷீரடி சாய்பாபா படத்தின்முன்பு, வேண்டிக்கொண்டு ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து கடைசி நாளில் பிரசாதம் செய்து வணங்கி முடித்தேன். ஓரிரு நாட்களில் எனக்கு எடிசலாட்டில் வேலை கிடைத்து அதற்கான ஆர்டர் வந்தது.

மெதுவாக என் பாஸிடம் எனக்கு வேலை கிடைத்த விவரத்தைச் சொன்னேன். அவர் அதனை ரசிக்கவில்லை. உன்னை நம்பி இந்த வேலைக்கு நான் கூட்டி வந்திருக்கிறேன். இடையில் நீ புது வேலைக்குச் செல்வது சரியா என்றார். இருந்தாலும் அவருடைய மனதில் இன்னொருவரின் முன்னேற்றத்திற்கு இடைஞ்சலாக இருந்துவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. கம்பெனியின் எம்.டியிடம் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் அதற்கு அனுமதி தரவில்லை.

அப்போதெல்லாம் துபாயில் (ஐக்கிய எமிரேட்ஸ் என்ற தேசத்தில்) ஒருவர், தனக்கு விசா வழங்கிய கம்பெனியிலிருந்து வேறு வேலைக்குச் செல்லவேண்டும் என்றால், விசா வழங்கிய கம்பெனி, ‘எங்களுக்கு ஆட்சேபணை இல்லை’ என்ற கடிதத்தைத் தரவேண்டும். அப்படி இல்லாமல் வேறு வழியில் கம்பெனியை விட்டுச் செல்ல வாய்ப்புகள் மிகக் குறைவு. அதற்கு ஏதேனும் பொய் சொல்லி, நாட்டை விட்டுச் சென்றுவிடவேண்டும் (என் பெற்றோருக்கு உடம்பு சரியில்லை, நான் அவர்களைப் பார்த்துக்கொள்ளணும், அதனால் கம்பெனியைவிட்டு விலகுகிறேன் என்பது போல). பிறகு நம்மைத் தேர்ந்தெடுத்த கம்பெனி, நமக்கு விசா அனுப்பி, பிறகு துபாய்/எமிரேட்ஸ் சென்று அந்தப் புதிய கம்பெனியில் சேர்ந்துகொள்ளலாம். இப்படி ஒரு குறுக்கு வழி இருப்பது, முதலில் நமக்கு விசா கொடுத்த கம்பெனிக்கு இடைஞ்சல் என்பதால் (என்ன இடைஞ்சல்? எங்கோ ஊரில் இருப்பவனுக்கு வெளிநாட்டில் தன் கம்பெனியில் வேலை வாய்ப்பு கொடுத்து, அதற்காக விசா, விமான டிக்கெட் என்று பல்வேறு பணிகள் செய்து, புதிதாக வேலைக்கு வந்தவன், இடையில் வேறு கம்பெனிக்குப் போனால், அவனுக்காக கஷ்டப்பட்டு வெளிநாட்டு வேலையை அறிமுகம் செய்த கம்பெனிக்கு அது நஷ்டத்தைத் தரும் என்பதாலும், வேறு டெக்னிகல் பிரச்சனைகள் என்பதாலும்-இதனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் வெகுவாக நீண்டுவிடும். பணிபுரிபவர் பல்வேறு ஃப்ராடுகளைச் செய்யலாம், அந்தக் கம்பெனி அந்த முயற்சியை நிறுத்துவதற்குத்தான் முயலும்) அவனது பாஸ்போர்ட்டில் மீண்டும் எமிரேட்ஸுக்கு வருவதற்கு, ஆறு மாத அல்லது ஒரு வருடத் தடை  என்று இமிக்ரேஷன் வாயிலாக ஸ்டாம்ப் பண்ணிவிடும். அப்படிச் செய்தால், புதிய வேலையில் சேருவது கஷ்டம். காரணம், புதிய கம்பெனி ஆறு மாதமோ இல்லை ஒரு வருடமோ ஒருவன் வருவான் என்று காத்திருக்காது.

எனக்கு என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம். இன்றைய படத்தொகுதி, நான் அலுவலக விஷயமாக பாலக்காடு சென்றிருந்தபோது எடுத்த படங்கள். இது சில பல வாரங்களுக்குத் தொடரும்.

அப்போதெல்லாம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உள்ளூர் விமானம் புக் பண்ணும்போது ஜெட் ஏர்வேஸ் மாத்திரம்தான் புக் செய்வார்கள். அதுதான் மெஜெஸ்டிக்காகவும் நல்லா வசதியாகவும் இருக்கும். அவங்க கொடுக்கும் உணவும் ரொம்பவே சூப்பராக இருக்கும்.

முதல் தடவை சென்றபோது கோவை வரை விமானம், பிறகு டாக்சி சர்வீஸ், பாலக்காடு வரை. அதனால் புகழ்பெற்ற கௌரிசங்கர் ஹோட்டலுக்குச் சென்று காலை உணவு சாப்பிட்டேன். அப்போதெல்லாம் ஒரு இடத்திற்குச் சென்றால் அங்கு உள்ள புகழ்பெற்ற உணவகத்திலோ அல்லது அந்த இடத்திற்குச் சிறப்பான உணவையோ ருசிக்காமல் இருக்கமாட்டேன்.

இரண்டாவது தடவை சென்றபோது பாலக்காடு வரை இரயில் பிரயாணம். பாலக்காடு ஜங்க்‌ஷனில் நான்.

அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு பாலக்காடு சுற்றிப்பார்க்கலாம் என்று அந்த கம்பெனியின் கோ ஆர்டினேட்டர் என்னிடம் சொன்னார். முதலில் சென்றது ராக் கார்டன் என்ற இடம்.

அங்கு நிறைய உடைந்த பொருட்களால் சிற்பங்கள் செய்துவைத்திருந்தனர். ஆஹா ஓஹோ என்று இல்லை. வீணாகப்போகும் பொருட்களை வைத்துச் செய்திருந்த சிற்பங்கள்.

பல நாடுகளுக்கும் சென்றதால், இந்த கார்டன் என் மனதைக் கவரவில்லை. இருந்தாலும் பல்வேறு சிற்பங்கள் அழகாகவே இருந்தன

 

 

 

சுவரையே வீணான எலெக்டிரிகல் பொருட்களை வைத்துச் செய்திருந்தார்கள்.

கேரளாவின் புகழ்பெற்ற ஓடங்கள்

 

 

 

நாட்டியப் பெண்கள் கவர்கிறார்களா? (யோகாசன ஸ்பெஷலிஸ்டாக இருந்தால் ஒருவேளை ஸ்ரீராமைக் கவர்ந்திருப்பாள்)

பறவைகள் கூட்டம்

 

இடையில் உண்மையான பறவை இருந்தாலும் கண்டுபிடிக்கமுடியுமா?

 

 

பெங்க்குயின் என்று அனுமானம் செய்யும்படியாகவே இருந்தது சிற்பங்கள்

 

 

ரொம்ப ஆட்டம் காட்டவேண்டாம்… அடக்குவதற்கு இறைவன் ஆளனுப்பிவிடுவார் என்கிறதோ எந்தச் சிற்பங்கள்?

இந்தச் சிற்பங்களை நாம் எடைபோடும் விதமாகப் பார்க்கக்கூடாது. அவை அனைத்தும் உபயோகமில்லாத பொருட்களை வைத்துச் செய்யபட்டவை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அவற்றின் சிறப்பு புரியும்.  உலகில் வீணான பொருள் என்று ஒன்று இல்லை.

ஞாயிறு படப்பதிவு என்பதால் ரொம்பவே ராக் கார்டன் பற்றி விளக்கங்கள் கொடுக்கவில்லை. இன்றைக்கு அதிகப் படங்களாகிவிட்டதோ? அடுத்த வாரம் தொடரலாமா?

 (தொடரும்) 

2 கருத்துகள்:

  1. இந்த விவரங்கள் எல்லாம் ஏற்கனவே படித்தது மாதிரி இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். ஏழெட்டு மாதங்களுக்கு முன் இதனை எழுதி முடித்து உங்களிடம் அனுப்பியிருந்தேன், இதனை ஞாயிறு பதிவுக்கு அனுப்பலாமா என்று. உங்களிடமிருந்து பதில் வரவில்லை. பிறகு கௌதமன் சாருக்கு அனுப்பி அவர் ஓக்கே சொன்னபிறகு அவருக்கு சில மாதங்கள் முன்பு அனுப்பினேன். கோயில் உலா போரடிக்கிறதோ என நினைத்து

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!