நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 39
சென்றவாரம் திருவரங்கம் கோயில் தெப்பக்குளத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதனைச் சமைத்தவர் கூரநாராயண ஜீயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
திருவரங்கம் கோயிலில் சுமார் 21 கோபுரங்கள் உள்ளன (ஏழு பிராகாரங்கள்). அதில் முதன்மையானது தெற்குப் பகுதியில் இருக்கும் பெரிய கோபுரம்தான். இந்த கோபுரம் அமைந்த திருவீதி அடையவளைந்தான் திருவீதி என்று அழைக்கப்படுகிறது (தெற்கு அடையவளஞ்சான், மேற்கு அடையவளஞ்சான்..)
விஜயநகர மன்னர் அச்சுதராயர் (அவருடைய காலம் கிபி 1530-1542) திருவரங்கத்தில் ஆறுமாத காலம் தங்கியிருந்தார். அப்போது தெற்குப் பகுதியில் பெரிய கோபுரம் கட்ட முனைந்தார். 1565ல் விஜயநகர அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தக் கோபுரம் மொட்டைக்கோபுரமாகவே நிலைத்து நின்றுவிட்டது. இதனை இராயர் கோபுரம் என்றே அழைப்பர். (இது போல பல கோயில்களில் கோபுரத் திருப்பணிகள் பாதியில் நின்றிருக்கின்றன). இன்னொரு இட த்தில், கிருஷ்ணதேவராயர், ஏறத்தாழ 90 கோயில்களுக்கும் மேல் இராஜகோபுரம் கட்ட ஆரம்பித்ததாகவும், அனைத்துமே பாதி முடிந்த நிலையில் நின்றுவிட்டதாகவும் கூறுகின்றனர். (திருவெள்ளறையிலும் மொட்டைக் கோபுரமாகவே இருகிறது தற்போது திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன)
திருஷ்டி வராமல் இருக்க, இந்த மொட்டைக் கோபுரத்தில் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு சன்னிதியும், கோட்டைக் காவலராக முனியப்பனுக்கு ஒரு சன்னிதியும் உள்ளது (இப்போதும் பார்க்கலாம்). அதனால் இதனை முனியப்பன் கோட்டை என்று வழங்கும் வழக்கமும் இருந்தது.
1979ல் இந்தக் கோபுரத்தை முழுமையாகக் கட்டவேண்டும் என்று எண்ணிய அஹோபிலமடம் ஜீயர் 8 வருடங்களில் பலரின் துணை கொண்டு கட்டிமுடித்தார். அதுவே நாம் இப்போது பார்க்கும் 236அடி உயரத்தில் நிற்கும் ஆசியாவிலேயே பெரிய கோபுரம்.
1979க்கு முன் இருந்த இராயர் கோபுரம் அல்லது மொட்டைக் கோபுரம்
மொட்டைக் கோபுரம், முனியப்பன் கோட்டை வாசல்
அஹோபில மடம் ஜீயர் முன்னெடுத்துச் செய்த புதிய கோபுரம்
ஏழாம் பிராகாரத்தில் உள்ள கோபுரங்கள் சித்திரை வீதி அல்லது கலியுகராமன் திருவீதி கோபுரங்கள் எனப்படுகின்றன. இதில் நான்கு கோபுரங்கள் உள்ளன. இந்த வீதி, கலியுகராமன் என்ற பட்டம் பெற்ற மாறவர்மன் வீரபாண்டியன் பெயரில் அமைக்கப்பட்ட வீதி. சித்திரைத் தேரோட்டம் இந்தத் திருவீதியில் நடைபெறுவதால் சித்திரைத் திருவீதி.
ஆறாம் பிராகாரம் உள்ள கோபுரங்கள் உத்தர வீதி அல்லது திருவிக்கிரமன் திருவீதி கோபுரங்கள் எனப்படுகின்றன. இதில் நான்கு கோபுரங்கள் உள்ளன. சோழ நாட்டை ஆண்ட விக்கிரமச் சோழன் பெயரால் அமைந்த திருவீதி. விக்கிரமச் சோழன் காலம் கிபி 1118-1135. இராமானுஜர் காலத்தில் இந்த வீதியில் கோயிலின் உள் பணி செய்பவர்களுக்கான வீடுகள் அமைந்திருந்ததால் இதனை உள்துறை வீதி என்று அழைத்தனர் (பிறகு உத்தர வீதி என்று மருவிவிட்டது)
ஐந்தாம் பிராகாரத்தில் உள்ள கோபுரங்கள் அகளங்கன் திருவீதி கோபுரங்கள் எனப்படுகின்றன. விக்கிரம சோழனின் ‘அகளங்கன் – களங்கமில்லாதவன்’ என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டது. இவனது தந்தை முதலாம் குலோத்துங்கச் சோழனுக்கும் அகளங்கன் என்ற பட்டப்பெயர் இருந்தது என்கிறார்கள். தெற்குப் பகுதியில் இருப்பது நான்முகன் கோபுரம் என்றும், வடக்குப் பகுதியில் இருப்பது தாயார் வடக்கு வாசல் கோபுரம் என்றும், கிழக்குப் பகுதியில் இருப்பது அகளங்கன் கோபுரம் அல்லது வெள்ளைக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. புதிய தெற்குக் கோபுரம் கட்டுவதற்கு முன்பு, இந்த வெள்ளைக் கோபுரமே மிக உயரமான கோபுரமாக இருந்தது.
நான்காம் பிராகாரம், ஆலிநாடன் திருவீதி என்று அழைக்கப்படுகிறது. (திருமங்கை ஆழ்வாருக்கு ஆலிநாடன் என்ற பெயர் உண்டு, திருவாலி நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்) இதில் தெற்கில் உள்ள கோபுரம் ஆலிநாடன் திருவீதிக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் இந்தக் கோபுரம் முன்புதான் சொக்கப்பனை கொளுத்துவதால், இதனை கார்த்திகை கோபுரம் என்றும் அழைக்கின்றனர். இந்த கோபுரத்தின் இரு புறமும் யமுனை, கங்கை என்று இரு துவாரபாலகிகள் சிலைகள் உள்ளன. இந்தப் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோபுரம் ஐந்து குழி மூன்று வாசல் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கு வாயில் அடைபட்டுள்ளது. கிழக்கில் உள்ள கோபுரத்தின் பெயர் தவுட்டரவாசல் கோபுரம். முன்பு, கோயிலிலிருந்து இந்த வாசல் வழியாக நெல்மூட்டைகளை எடுத்துச் சென்று, அதனை அரைத்து அரிசியாக்கி, அரிசியையும் தவிட்டையும் கோயிலுக்குள் எடுத்து வரும் வழக்கம் இருந்தது. அதனால் தத்ராத்ரேய வாசல் என்று இருந்த இதன் பெயர் தவிட்டு-அரை-வாசல் – தவிட்டரைவாசல் என்றாகிவிட்டது.
மூன்றாம் பிராகாரம் குலசேகரன் திருவீதி என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் பிராகாரத்தில், தெற்கில் இருக்கும் கோபுரம் ஆரியபட்டாள்/ஆரியபடாள் வாசல் என்று அழைக்கப்படுகிறது. வங்காளத்திலிருந்து வந்த மன்னர் ஒருவர், இந்த வாசலில் பெரும் செல்வத்தை வைத்துச், சிலரை விட்டுச் சென்றதாகவும், அக்காவலர்கள் அந்தச் செல்வத்தை அரங்கன் வழிபாட்டுக்கு உபயோகப்படுத்தினார்கள் என்றும் சொல்லப் படுகிறது. அதனால் இதன் பெயர் ஆரியபட்டாள் வாசல். இந்தப் பிராகாரத்தின் வடக்குப் பகுதி கோபுரம், பரமபதவாசல் கோபுரம். இந்தப் பிராகாரத்தின் திருமதிலையும், வடக்குப் பகுதி கோபுரத்தையும் திருமங்கையாழ்வார் கட்டினார்.
இரண்டாம் பிராகாரம் இராஜமகேந்திரன் திருவீதி என்று அழைக்கப்படுவதை முன்பே பார்த்தோம். இவர் இராஜேந்திர சோழனின் மூன்றாம் மகனான “இரண்டாம் இராஜேந்திர சோழனின்’ புதல்வர். இரண்டாம் இராஜேந்திர சோழன், இரண்டாம் ராஜேந்திர சோழன் அரசனாக இருந்தபோது தன் புதல்வனாகிய இராஜமகேந்திரனை இளவரசனாக்கினான். (கிபி 1060-1063). தந்தைக்கு முன்னாலேயே வீர மரணம் அடைந்ததால், இவனால் சோழ அரசனாக ஆகமுடியவில்லை.
இராஜமகேந்திரன் பெயரால் அமைந்த திருவீதி இது. இதில் தெற்குப் பக்கம் உள்ள கோபுரத்தின் பெயர் நாழி கேட்டான் கோபுரம். கோயில் பூஜைக்காக இங்கு ஒலிக்கும் வித வித மணிகளின் ஒலிகளைக் கொண்டு, எந்த நாழிகை, என்ன பூஜை என்று தெரிந்துகொள்ளமுடியும் என்பதால் இதனை நாழிகை கேட்டான் வாசல் என்கிறார்கள். இந்த வாசலில் ஐந்து படிகள் உண்டு. வாயிலுக்கு பத்ரன், சுபத்ரன் ஆகிய இருவர் துவாரபாலகர்கள். (கொடிமரத்தை தாண்டியவுடன் இந்த வாசல் வரும்)
ஐந்தாம் பிராகாரத்தின் நான்முகன் கோபுரத்தைக் கடந்து சென்றால் நான்கு தூண்களைக் கொண்ட சிறிய மண்டபம் உள்ளது. இதன் பெயர் திருவந்திக்காப்பு மண்டபம். (தெய்வத் திருவுருவங்கள் மீது கண்ணேறு படாமல் இருக்க இங்கு சடங்குகள் செய்வர்). இதைத் தாண்டியதும் உள்ள பெரிய மண்டபம் (இதன் கிழக்குப் புறம் வரிசையாக கடைகள் உண்டு) அரங்கவிலாச மண்டபம் எனப்படுகிறது. இதனைக் கட்டியவர் திருமலை நாயக்கர் (1623-1659) (இவருடைய தலைநகர் முதலில் திருச்சிராப்பள்ளியாக இருந்தது. பிறகு மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டார்)
ஐந்தாம் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது ஆயிரங்கால் மண்டபம் (953தான் இருக்கிறது). இதில் தெற்குப் பகுதி கனு மண்டபம் என்றும் நடுவில் இருக்கும் சிறிய பகுதி (சுமார் 28 தூண்கள் உடையது) திருமாமணி மண்டபம் என்றும் வடக்குப் பகுதி சங்கராந்தி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹொய்சாள மன்னர்கள் ஆட்சியில் (மூன்றாம் நரசிம்மன் 1251-1293) தண்டநாயக்கர்கள் என்ற படைத்தலைவர்கள், அமைச்சர்கள் ஒவ்வொரு பகுதியையும் நிர்வாகம் செய்தனர். தமிழகம், கர்நாடகப் பகுதிகள் 13 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்த தண்டநாயக்கர்கள் நிர்வாகத்தை நடத்தினர். பெருமாள் தண்டநாயக்கன், மாதப்பன், கம்பைய வீரையன் போன்றோர்களால் இந்தப் பகுதி நிர்வாகம் செய்யப்பட்டு வந்தபோது ஆயிரங்கால் மண்டபம் தொடங்கப்பட்டது. இதனைக் கட்டி முடித்தவன் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியன் என்கிறார்கள்.
இந்த சடையவர்ம சுந்தரபாண்டியன் கனு மண்டபப் பகுதிகளைக் கட்டினான் என்கின்றனர். இவனே திருவரங்கம் கோயிலில் பொன் வேய்ந்தான். (எவ்வளவு பொன் என்றால், அவன் ஆனை மீதேறி, ஆனை படகின் மீதேறி தண்ணீரில் இருக்க, பக்கத்திலேயே இன்னொரு படகை வைத்து அதில் தங்கம், நகைகள் போன்றவற்றைக் கொட்டி, இரண்டு படகுகளும் சம உயரத்தில் தண்ணீரில் நிற்கும்படியாகச் செய்து அத்தனை பொன்னையும் திருவரங்கம் கோயிலுக்குச் செய்தானாம்)
சந்தனு மண்டபத்தில் மூன்று அறைகளில் நடுவில் தற்போது மூலவரைப் பார்த்த மாதிரி கல்கருடன் உள்ளது. சுந்தரபாண்டியன் காலத்தில் தங்கக் கருடனைச் செய்து வைத்திருந்தானாம். அதுபோல மூன்றாவது சிறிய அறையில் (மேற்குப் பகுதி) தன்னுடைய தங்க விக்ரஹத்தை வைக்க முயன்றானாம். அதனை கோயிலில் பிரதிஷ்டை செய்ய மறுத்த தால், ஹேம சந்தன ஹரி என்று பெயர் மாற்றி பிரதிஷ்டை செய்தானாம் (இவன் காலம் 1251-1271)
கோயிலுக்காக 18 லட்சம் பொன் செலவழித்து பொன்னால் செய்த விக்ரஹம், பாத்திரங்கள், மதில்களை பொன்னால் வேய்ந்தது என்று செய்த தால், இவனுக்கு ‘கோயிலில் பொன் வேய்ந்த பெருமான்’ என்ற பட்டம் ஏற்பட்டது. இந்த மாதிரி அரங்கன் கோயிலில் பொன் வேய்ந்து பளீரிட வைத்தது முஸ்லீம் படையெடுப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆயிரங்கால் மண்டபத்துக்கு வெகுதூரத்தில் எதிரே தெற்குப் பகுதியில் சேஷராயம் மண்டபம் உள்ளது. இது விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது. (1500களில், கிருஷ்ணதேவராயர் காலம்). அதில் உள்ள சிற்பங்கள் மனதைக் கொள்ளைகொள்ளும்.
சேஷராயர் மண்டப முகப்பில் உள்ள அசரடிக்கும் சிற்பங்கள். (இந்த ஸ்ரீராம்தான் எங்கள் பிளாக் பல வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருந்த இந்த நாளுக்கு இந்த பதிவு என்பதை மாற்றி, அன்றைய பதிவைப் பார்த்து இன்று எந்த நாள் என்று தெரிந்துகொள்வதை மாற்றிவிட்டாரோ அதுபோல இன்று சனிக்கிழமையா இல்லை ஞாயிறா என்று சந்தேகப்பட வைக்கவில்லை. திருவரங்கம் என்பதால் படங்கள் கோர்த்தேன்)
ஓரளவு திருவரங்கம் கோயில் பற்றி இரண்டு மூன்று வாரங்கள் வந்த பதிவுகளிலிருந்து தெரிந்துகொண்டிருப்பீர்கள். ஞாயிறு பகுதியில் ஒரு நாள் முக்கியமான படங்கள் பகிர்கிறேன். இனி இன்றைய பாசுரம் பார்த்துவிடுவோமா?
இன்றைக்கு திருப்பாணாழ்வார் பாசுரம். இது ‘அமலனாதிபிரான்’ என்ற தலைப்பில் வரும் பிரபந்தத்தில் கடைசி பாசுரம். மொத்தம் பதினோரு பாசுரங்கள் கொண்டது. திருப்பாணாழ்வார், அரங்கநாதனை பாதாதி கேசமாக வர்ணித்துவிட்டு கடைசியில் உன்னைக் கண்ட கண்கள் வேறு ஒன்றையும் காணாது என்று முடித்து அந்த அரங்கனோடேயே ஐக்கியமாகிவிடுகிறார். இனி பாசுரத்தைப் பார்ப்போம்.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
பொருள்: மழைமேகம் போன்ற நிறத்தில் திருமேனி உடையவன். கண்ணனாக அவதரித்து யசோதையின் இல்லத்தில் வெண்ணெய் திருடி உண்ட வாயை உடையவன். தன்னுடைய குணத்தினால் என் மனதை முழுமையாக க் கொள்ளை கொண்டவன். தேவர்களுக்கெல்லாம் தலைவன். அழகாக விளங்கும் திருவரங்கத்தில் அறிதுயிலமர்ந்திருக்கும் அரங்கநாதன். எனக்கு இன்பம் தரும் அமுதம் போன்றவன். அப்படிப்பட்டவனைக் கண்ட என் கண்கள் வேறு எந்தப் பொருளையும் காண விரும்பாது.
விளக்கம்: கொண்டல் வண்ணன் – மழை மேகம் போல கரிய நிறம் உடையவன். கோவலன் – ஆயர் சிறுவன், ஆநிரை மேய்த்தவன்
பிரயோகச் சக்கரம் கொண்டுள்ள அந்த பரவாசுதேவன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!