நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 38
நாம் நான்காம் பிராகாரத்தைப் பார்த்துமுடித்துவிட்டோம். இனி மூன்றாம் பிராகாரத்தில் என்ன இருக்கின்றது என்று பார்க்கலாம். நான்காம் பிராகாரம் திருமங்கையாழ்வார் திருச்சுற்ற (அதாவது நான்காம் பிராகாரத்தின் வெளிப்பக்கச் சுற்றுச்சுவர் திருமங்கை மன்னனால் கட்டப்பட்ட மதிள்சுவர்). மூன்றாம் பிராகாரம் குலசேகர ஆழ்வார் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது. இங்கு நுழைந்தவுடன் கம்பத்தடி ஆஞ்சநேயர் சன்னிதியைக் காணலாம். தங்கக் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ள சன்னிதி இது. அரங்கனைச் சேவித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்கள் இந்த ஆஞ்சநேயர் சன்னிதியை பிரதக்ஷணம் செய்வதைப் பார்க்கலாம்.. மூன்றாம் பிராகார வாசல் ஆரியபடாள் வாசல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மூன்றாம் பிராகாரத்தில்தான் சொர்க்கவாசல் அமைந்துள்ளது. வெளியிலிருந்து எடுத்த படத்தை இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன்.
இந்த மூன்றாம் பிராகாரத்தில், தசமூர்த்திகள் (பெருமாள் புறப்பாட்டுக்கு முன்பு பலி கொடுக்கும் பீடங்கள்), ஹயக்ரீவர், சரஸ்வதி (காஷ்மீரில் இராமானுஜருக்குக் கொடுக்கப்பட்ட விக்ரஹம்) ஆகியவை உள்ளன. இந்தப் பிராகாரத்தில் கொடிமரத்துக்கு வலது புறம்தான் ஸ்பெஷல் டிக்கெட் கவுண்டர் மற்றும் வரிசை அமைந்துள்ளது. வரிசையில் நுழைவதற்கு முன் (கூட்டம் அதிகமாக இருந்தால் வலது பக்க – அதாவது கிழக்குப் பக்கத்தில் அன்னமூர்த்தி சன்னிதி வழியாகச் சென்று வரிசையில் நுழைவோம்) வலப்பக்கத்தில் சோழர் காலக் கல்வெட்டு சிதைவடையாமல் இருப்பதைக் காணலாம். இந்த மூன்றாம் பிராகாரத்தில்தான் கோயில் மடப்பள்ளி அமைந்துள்ளது.
இதற்கு அடுத்ததாக அமைந்துள்ளது இரண்டாம் பிராகாரம். பொதுவாக நாம் இந்தப் பிராகாரத்தின் நுழைவாயிலில் துவாரபாலகர் போல உள்ள சங்கநிதி மற்றும் பதுமநிதியைக் காண்பதில்லை (அவசர அவசரமாக தரிசனத்திற்கு நுழைவதால்). இந்த நுழைவாயில் நாழிகை கேட்டான் வாசல் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் பிராகாரம், ராஜமகேந்திரன் திருவீதி என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பிரகாரத்தில் வலப்புறம் சென்று, சாய்வான படிகளில் ஏறி நாம் சந்தனு மண்டபத்தை (பெரிய மஹா மண்டபம்) அடைவோம். இந்த சந்தனு மண்டபத்தில்தான் விஸ்வரூப தரிசனத்தின்போது யானையும், காமதேனுவும் ஏறி நிற்கும். அந்த இடத்தில்தான் காலையில் வீணை வாசிப்பார்கள். இங்கிருந்து கருவறைக்கு முன் உள்ள் சிறிய மண்டபத்திற்கு (அதன் பெயர் காயத்ரீ மண்டபம்) நுழையும் வாசலின் பெயர் அணுக்கன் திருவாசல்.
இந்த மண்டபத்தில் மரத்தாலான மூன்றடுக்குள்ள தேர் போன்ற அமைப்பைப் பார்த்திருப்பீர்கள். இந்த் தேர் அமைப்பு விஜயநகரப் பேரரசு காலத்தில், அதன் முக்கியஸ்தரான வாலாதிராயரால் அமைக்கப்பட்டது. இதனைச் செய்த தச்சர் பெயர் பரமன். அவருடைய பெயரால் இது பரமன் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. (அதாவது தேர் போன்ற அமைப்பு. கீழே படத்தில் பார்க்கலாம்.)
இந்த மண்டபத்தில் மூன்று சிறிய அறைகள் உண்டு. மூலவரைத் தரிசிக்க மண்டபத்தில் நிற்கும்போது முதலில் இருக்கும் சிறிய அறையில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன்வேய்ந்த பெருமாள் சிலை, முகலாயர் படையெடுப்பில் எடுத்துச் செல்லப்பட்ட து. இரண்டாவது அறையில் சன்னிதி கருடர், முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு அமைக்கப்பட்டது. மூன்றாவது அறை (தென்மேற்கு) கண்ணாடி அறை.
இந்த பரமன் மண்டபத்தில்தான் நம்பெருமாள் முன்னிருக்க, ஸ்வாமி மணவாள மாமுனிகள் சுமார் ஒரு வருடம் திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் செய்தார். (கிபி 1432-1433ல்)
இராஜமகேந்திரன் திருவீதி எனப்படும் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளவை, துலுக்க நாச்சியார் சன்னிதி (இதில் பட வடிவில் நாச்சியார் உள்ளார். சந்துனு மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ரேவதி மண்டபத்தின் பின்புறம் உள்ளது), சேரகுலவல்லி நாச்சியார், தென் கிழக்கு மூலையில் கிருஷ்ணர் சன்னிதி உள்ளது (கம்பத்தடி ஆஞ்சநேயர் அருகில் உள்ள படிக்கட்டுகள் மூலமாக இந்தச் சன்னிதிக்குச் செல்லலாம்). இந்தச் சன்னிதியில் நவநீத கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா மற்றும் பரவாசுதேவர், தேவகி, ரோகிணி திருவுருவங்கள் உள்ளன.
மூலவரைச் சேவித்துவிட்டு வெளியே வந்து, துவாரபாலகர்களைத் தாண்டி படியில் கீழிறங்கி சேனை முதலியார் கோயிலுக்குச் செல்வீர்கள். அங்கிருந்துதான் கருவறை மேல் உள்ள விமானத்தைப் பார்க்க முடியும். சேனை முதலியார் கோயிலுக்கு கிழக்கில் உள்ளது அர்ச்சுன மண்டபம். (72 தூண்கள் கொண்டது). அதனை அடுத்து தெற்கில் ரேவதி மண்டபம். அதனை அடுத்து தெற்கில் கிளி மண்டபம். கிளி மண்டபத்திலிருந்துதான் கீழே அடையாளம் இடப்பட்ட இடத்திலிருந்து விமானத்தின் பரவாசுதேவரைச் சேவிக்கலாம்.
இராஜமகேந்திரன் திருவீதியால் சூழப்பட்ட சதுர வடிவப் பரப்பில், தங்க விமானத்துடன் கூடிய வட்ட வடிவ கருவறை, அதைச் சுற்றியுள்ள திருவுண்ணாழியையும் கருவறையையும் கொண்டுள்ள சதுரப் பிரகாரம். இதனை தருமவர்மர் திருவீதி என்பர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கருவறைக்கு முன்பு 24 தூண்கள் உடைய காயத்ரி மண்டபம். அதற்கு முன்பாக, கருடன் சன்னிதியைக் கொண்டுள்ள பெரிய திருமண்டபம் (அல்லது சந்துனு மண்டபம்)
அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள கருவறையின் முன்பு மிகச் சிறிய சதுர மண்டபத்தைக் காணலாம். இதில் நுழைந்தால்தான் பெருமாளை தரிசிக்க முடியும். மண்டபத்திற்கு அப்பால் கருவறையில் இரண்டு தூண்கள் இருக்கும். இவையே சிகரத்தில் உள்ள பரவாசுதேவரின் திருவடிகளைத் தாங்கிக்கொண்டு நிற்கின்றன. இந்தத் தூண்களை திருமணத் தூண்கள் என்பர்.
அரவணைப் பள்ளியில் அறிதுயிலமர்ந்துள்ள அரங்கநாதர்
திருவரங்கம் கோயில் பிராகாரங்களையும், அவற்றில் உள்ள சன்னிதி விவரங்களையும், தெற்கு கோபுர வாசலில் ஆரம்பித்து இரண்டு வாரங்களாகப் பார்த்தோம். என்ன என்ன சன்னிதிகள் உள்ளன என்பதைக் குறிப்பிடத்தான் இவற்றைப் பகிர்ந்தேன். கோயில் வரலாறுக்காக அல்ல. அதனால்தான் வெள்ளைக் கோபுரம் மற்றும் பல பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அதற்கு கோயில் உலா இருக்கவே இருக்கிறது.
இராமானுஜர் காலத்தில் பல்வேறு சன்னிதிகள் கிடையாது. கோயிலும் இப்போது இருப்பதைப் போல மண்டபங்கள் பிராகாரங்களையெல்லாம் சேர்த்து கூரை போட்டது போல இல்லை.
இந்தப் பகுதிகள், அடுத்த முறை திருவரங்கம் கோயிலுக்குச் செல்லும்போது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் இன்னும் ஒரு வாரத்தில் (16 ஜூலையில் இதனை எழுதுகிறேன்) திருவரங்கம் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தடவை நல்ல தரிசனம் கிடைக்கணும். அதுபோல நான் குறிப்பிட்டுள்ள எல்லா சன்னிதிகளையும் பார்க்கும் அளவு தெம்பு இருக்கணும் (வெயில் அதிகமாக இருந்தால் நடக்க இயலாது)
திருமணத் தூண்களைப் பற்றி எழுதியதால் இந்த வார பாசுரம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியிலிருந்துதான். இந்த த் திருமணத் தூண்கள் என்றால் என்ன? அரங்கநாதனைச் சேவிக்கும்போது அந்த சிறுவாயிலின் இருபுறமும் (உட்புறம்) பித்தளை (தங்கம்?) கவசத்தால் மூடப்பட்ட இரண்டு தூண்கள் உண்டு. அவை பரவாசுதேவரின் திருப்பாதங்களைத் தாங்கிப்பிடிப்பதாக ஐதீகம். (விமானத்தில் உள்ள பரவாசுதேவர்). சம்பிரதாயத்திலும் இது முக்கியமான இரு தூண்கள். காரணம் ஆச்சார்யார் வரலாற்றில் இந்தத் தூண்களின் இடையே தூளி கட்டியிருந்த நிகழ்வு வரும்.
##வாயோர் ஈரைஞ்நூறு துதங்கள் ஆர்ந்த*
வளையுடம்பின் அழல்நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச்சென்னி விதானமே போல்*
மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்*
காயாம்பூ மலர்ப்பிறங்கல் அன்ன மாலைக்*
கடியரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்*
மாயோனை மனத்தூணே பற்றி நின்று* என்-
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே?
பொருள்: ஆயிரம் வாய்களையும், அதில் துதிக்கும் நாக்குகளையும் உள்ள, வளைந்த உடலினைக் கொண்ட, நஞ்சை உமிழும் நெருப்புப் போன்ற ஆதிசேஷன் உமிழ்கின்ற சிவந்த நெருப்பானது அணையாமல், அவனது மலர்ந்த தலைகளின் (படமெடுத்திருக்கின்ற தலைகள்) கூட்டம் பெருமாளுக்கு மேல் விரித்த ஒரு பந்தலைப் போல எங்கும் பரந்து விரிந்திருக்க, அந்தப் பந்தலின் கீழே காயாம்பூ மலர்களைக் குவித்து வைத்த மலைபோன்ற கரிய நிறமுடைய பெருமை மிக்கவனும், காவலுடன் கூடிய திருவரங்கத்தின் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்கின்ற மாயக் கண்ணனுமாகிய அரங்கநாதனை, அங்குள்ள திருமணத் தூண்களைக் கட்டிக்கொண்டு நின்று, என்னுடைய வாய் குளிரும்படியாக எந்நாளில் வாழ்த்திப் பாடப் போகிறேன் என்கிறார் ஆழ்வார்.
விளக்கம்: வாயோர் ஈரைஞ்ஞூறு – 2 X 500 – ஆயிரம் வாய்கள். துதங்கள் – நாக்குகள், அழல் நாகம் – நெருப்பை உமிழும் நாகம் (அல்லது நஞ்சைக் கக்கும் நாகம்) , கடியரங்கம் – காவலுடன் கூடிய திருவரங்கம், மணத்தூண் – திருமணத்தூண். ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டுள்ள திருவரங்கனின் பேரழகைக் கண்டால் தன்னுடைய மனம் அதிலேயே மூழ்கித் தத்தளித்துவிடும் என்பதால், அவனது வடிவத்தைத் தனது மனமாகிய தூணில் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆழ்வார் எண்ணுகிறார்.
திருநாவுக்கரசர் (அவர் எங்க இங்க வந்தார்னு கேட்காதீங்க) ஆறாம் திருமுறையில், (6.85, முண்டீஸ்வர தலப் பதிகம்)
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட்கு அன்பன் காண் ஆனைத் தோலைப்
போர்த்தான் காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண்
காத்தான் காண் உலகேழும் கலங்கா வண்ணம்
கனைகடல் வாய் நஞ்சதனைக் கண்ட த்துள்ளே
சேர்த்தான் காண் திருமுண்டீச்சரத்து மேய
சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே
பொருள்: சிவன், கோபமுடைய நாகத்தை இடுப்பில் கட்டியிருக்கிறார். அடியவர்பால் மிக அன்பு கொண்டவர். ஆனையைக் கொன்று அதன் தோலினைத் தன் உடலின் மீது போர்வையாகப் போர்த்தியிருக்கிறார். தன்னுடைய முறுக்கிய சடையின்மேல் கங்கை நதியை ஏற்றவன் அவன். சுடுகாட்டில் நடம் புரிபவனும் அவனே. ஏழு உலகங்களும் கலக்கமடையா இருக்கும் வண்ணம், அலைகடலைக் கடைந்தபோது வந்த நஞ்சை உண்டு, அதனைத் தன் தொண்டையில் ஏற்றவன் அவன். அப்படிப்பட்டவன், முண்டீச்வரம் என்ற தலத்தில் சிவலோகனாக உறைகிறான். என்னுடைய நெஞ்சின் உள்ளே நீக்கமற நிறைந்துள்ளான்.
ஆயிரம் தலை கொண்ட அழல் நாகத்தில் படுத்துக்கிடக்கிறான் திருவரங்கத்தினுள்ளான். சிவனோ அழல்நாகத்தைத் தன் இடுப்பில் கயிறாகக் கட்டியுள்ளான். “அழல்நாகம்” என்ற பதத்திற்காக இந்தப் பதிகத்தை இங்கு கொண்டுவந்தேன்.
இப்போது திருவரங்கம் கோயில் மீது நம் கவனத்தைச் செலுத்துவோம். உள்ளங்கை கொணர்ந்த நாயனாரை பெரிய திருமலை நம்பி மூலம் இராமானுஜர் திருத்திப் பணிகொண்டு, அவருக்கு எம்பார் எனப் பெயரிடப்போகிறார். (இந்த எம்பார், இராமானுஜரின் சித்தியின் புதல்வர். அதாவது ஒன்று விட்ட தம்பி. இவர்தான் இராமானுஜருக்கு யாதவப் பிரகாசரால் கங்கைக் கரையில் ஏற்படப்போகும் ஆபத்தைச் சொன்னது) அவருடைய தம்பியின் பெயர் சிறிய கோவிந்த பெருமாள். அவருடைய புதல்வர் கூர நாராயண ஜீயர் (இது சன்னியாசம் வாங்கிக்கொண்ட பிறகான பெயர். பிறந்தபோது என்ன பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை).
கூரநாராயண ஜீயர், கூரத்தாழ்வானின் சிஷ்யர். பிறகு பட்டரின் சிஷ்யரானார். கூரநாராயண ஜீயர், சுதர்சன உபாசகர். கூரத்தாழ்வான் ஒரு முறை, நாம் ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லவா? நமக்கு நாராயணன் இருக்க, எதற்கு நாம் சுதர்சனரை உபாசிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கு கூரநாராயண ஜீயர், நமக்காக எதுவுமே வேண்டுவதில்லை, எம்பெருமானுக்கும் அவனது அடியாருக்கும் நல்லது வேண்டுவோம் என்று பதில் கூறினார்.
திருவரங்கத்தில், நம்பெருமாளுக்கு தெப்போத்ஸவம் முன்பு காவிரியில் நடைபெற்றது. அப்படி ஒரு முறை நடைபெற்றபோது, ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தெப்பம் சாய, கூர நாராயண ஜீயர், தன்னுடைய சுதர்ஸன உபாசக சக்தியால் தெப்பத்தை பத்திரமாக கரைக்குக் கொண்டுவந்தார். பிறகு இனி காவிரியில் தெப்போத்ஸவம் நட த்துவது சரியாக வராது என்று எண்ணி, 7ம் பிராகாரத்திற்கு மேற்குப் பகுதியில் ஒரு திருக்குளம் வெட்டுவித்தார். அதன் நடுவில் ஒரு நீராழி மண்டபமும் அமைத்தார்.
இவர் கூரத்தாழ்வான் சிஷ்யர் என்பதால், நஞ்சீயருக்கு மூத்தவர். அதனால் பிற்காலத்தில் ஸ்வாமி வேதாந்த தேசிகர், தம்முடைய வியாக்கியான நூல்களில் இவரை ‘பெரிய ஜீயர்’ என்று குறிப்பிடுகிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் இவரை ‘சுத்த சம்ப்ரதாய நிஷ்டர்’ என்று குறிக்கிறார். தென்கலையாருக்கு பெரிய ஜீயர் என்றால் ஸ்வாமி மணவாள மாமுனிகள்தாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
கூர நாராயண ஜீயரே, திருவரங்கம் கோயிலில் பார்த்தசாரதி சன்னிதியும், கருட சன்னிதியும் கட்டுவித்தவர். எம்பெருமானார் (இராமானுஜர்) காலத்திற்குப் பிறகு இராமானுஜர் இருந்த மடத்தின் பொறுப்பு இவருக்குத் தரப்பட்டது. இன்றளவும் அந்த மடம் ‘கூர நாராயண ஜீயர் மடம்’ என்றே அழைக்கப்பட்டுவருகிறது.
அடுத்த முறை நம்பெருமாள் தெப்போத்ஸவம் சேவிக்கும்போது, இந்தத் திருக்குளத்தை அமைத்தவர் கூர நாராயண ஜீயர் என்பதை நினைவில் வையுங்கள்.
நம்பெருமாள் மற்றும் அழகிய மணவாளன்
அடுத்த வாரம் தொடர்வோமா??...
=============================================================================
சிலிக்கான் ஷெல்ப் பக்கத்திலிருந்து திருடி எடுத்துப் போடுகிறேன். திருடி என்றுதான் சொல்ல வேண்டும்! அங்கு கமெண்ட் போட்டால் என்ன ஆகிறது என்றே தெரியவில்லை. எனவே ஷேர் செய்வதை அவரிடம் - RV இடம் - சொல்ல மெயிலை உபயோகித்து அனுமதி பெற்றுக் கொண்டேன்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் முன்பு இந்த சனிக்கிழமைக்கு இது.
இந்த விமர்சனம் படிப்பதற்கு முன்னாலேயே இந்தப் புத்தகம் இறக்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை. இப்போதைக்கு ஜீவி சார் கொடுத்துள்ள ஆதித்தன் கொலை வழக்கு படிக்க வேண்டும். - ஸ்ரீராம்.
***********************
கிருஷ்ணப்பருந்து நாவலின் பேசுபொருள் காமம் என்றாலும், எனக்கு இதன் முக்கிய அம்சம் பிம்பம் என்று அவர் சொல்வது மிகச்சரி.


புரட்டாசி சனியன்று(இங்கு வெள்ளிதான்) அரங்கனின் அற்புத தரிசனம். உங்கள் விவரிப்பில் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று தரிசித்த நினைவுகள் புரண்டு வருகின்றன __/\__ __/\__.
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் தெப்பம் பெரிய மாடி வீடு போல அழகாக இருக்கும்.
வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். இன்று இப்போது ஒப்பிலியப்பன் கோயில் தரிசன வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன். பயங்கரமான கூட்டம்
நீக்குபெருமாள் அருள் பூரணமாக... ஒப்பிலியப்பன் கோவில் எங்கள் திருமணம் நடந்த கோவில். வயதானால் கோவில் கோவிலாக சுற்ற ஆரம்பித்து விடுகிறோம்.. இதற்கு மனோரீதியாக ஏதாவது காரணம் உண்டா?
நீக்குஹா ஹா. ஸ்ரீராம்.. நான் எத்தனையோ வருடங்களாக கோயில்களில் தரிசனம் செய்துகொண்டிருக்கிறேன்
நீக்குஅவ்வப்போது போவது வேறு.. விடாமல் சென்று வருவது வேறு.. நல்ல விஷயம்தான். நான் குறை சொல்லவில்லை.
நீக்குஇதன் காரணத்தைப் பிறகு எழுதறேன். புரட்டாசி முதல் சனிக்கிழமை அதுவாக அமைந்துவிட்டது. ஒரு மாதம் எங்கும் செல்லாமல் பெங்களூரில் இருப்பது அபூர்வம். பயணம் எனக்கு கஷ்டம்தான். இன்று கூட மூன்று மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி முடித்தேன். எவ்வளவு காலம் பயணிக்க இயலுமோ தெரியாது.
நீக்குடக்குனு பார்த்தீங்கன்னா பல வாரங்கள் கீதா ரங்கன் இணையத்துக்கே வர முடியாது பிசியாயிட்டாங்க. அதனால் எது எப்போ வரும்னு தெரியாது. முடிந்தபோது பயணிப்பது நல்லதல்லவா?
'கிருஷ்ணப் பருந்து' என்றதும் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நாவலோ என்று நினைத்தேன். இது வேறு. அதைப்போல விமர்சன நடையும் ஸ்ரீராமினுடையது போல இல்லையே? என்று யோசித்தேன். ஆர்வியினுடையது என்பது புரிந்தது. ஹிஹி!
பதிலளிநீக்குஇதே தலைப்பில் இன்னும் யாரோ ஒருவர் எழுதிய நாவலும் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
நீக்குநர்சிம் எழுதிய சார்மினார் எக்ஸ்பிரஸ் -- டவுன்லோட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். நான் வாசித்து விட்டேன். சாப்ட்வேர் உலகம். நல்ல எழுத்து நடை. படித்துப் பாருங்கள்
பதிலளிநீக்குபார்க்கிறேன் ஜீவி ஸார்... ப்ரீயாக இருக்கிறீர்கள். பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது!!!
நீக்குஅமெரிக்காவில் இருந்து கொண்டு ஃப்ரீயா? இங்கும் வழக்கம் போலவே ஸ்ரீராம். சார்மினார் எக்ஸ்பிரஸ் -- நான் ஏற்கனவே படித்தது. ஆகவே அந்த பரிந்துரை.
நீக்குபார்க்கிறேன்..
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். புரட்டாசி சனிக்கிழமை ஶ்ரீ ரங்க நாதன் தரிசனம் . மிக மிக நன்றி.சனிக்கிழமை மீண்டும் தரிசனம் பெறுகிறேன். நன்றி மா.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா. அதிசய வருகை. இப்போதான் ஒபிபிலியப்பன் தரிசனம் கிடைத்தது. இன்னும் கோயிலில்தான் இருக்கிறேன்
நீக்குவைஷ்ண சம்பிரதாயங்கள், அங்கங்கே உபயோகப்படுத்தும் வார்த்தை கோர்வைகள் --- இவற்றைப் புரிந்து கொள்ளவே தனிப்பட்ட. வாசிப்பு பயிற்சி வேண்டும் போலிருக்கு. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. இது நான் உணர்ந்தது.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார். நீங்கள் அந்த அந்த வார்த்தைகளைக் குறிப்பிட்டால் விளக்க உபயோகமாக இருக்கும்
நீக்குதிருவாய்மொழி ஈடு காலஷேபம்
நீக்கு-- என்றால் என்ன நெல்லை? சிறுகுறிப்பு போல சொன்னால் போதும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கிருஷ்ணப்பருந்து வெகு நாட்களுக்கு முன் படித்துக் குழம்பி இருக்கிறேன். எனக்குப் புரியாத நாவல்களில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குஅப்படியா? கதைச் சுருக்கம்
நீக்குபடித்தால் எளிமையாக இருக்கிறதே...
அரங்கனின் கோவிலை ஒரு ஐந்து நாட்களாவது தொடர்ந்து தரிசனம் செய்தால் தான் சிறிதாவது மனதில் படியும். இனிமேல் எப்போதோ:( உடலில் வலிமை இருக்கும் போதே கோவில் யாத்திரைகளைச் செய்யுங்கள் ஶ்ரீராம்.
பதிலளிநீக்கு__/\__
நீக்குஉண்மை வல்லிம்மா. வலு இருக்கும்போதே கோயில்களை தரிசனம் செய்தால்தான் நல்லது. நமக்கு இயலாமை வந்தால் மிகவும் கஷ்டம்
நீக்குநகுலனைப்போல், திருவனந்தபுரத்தில் வாழ்ந்த இன்னுமொரு தமிழ்ப் படைப்பாளி. ’ஆ. மாதவன் - கடைத்தெருக் கதைசொல்லி’ என்கிற தலைப்பில் 2015-லேயே எனது பக்கத்தில் எழுதியிருக்கிறேன் என்பது.. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.
பதிலளிநீக்குகிருஷ்ணப்பருந்து போன்ற வித்தியாசமான படைப்புகளை, தமிழின் தீவிர வாசகர்கள் வாசிக்காதிருக்கக்கூடாது.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குபுரட்டாசி முதல் சனிக்கிழமையன்று அரங்கன் தரிசனம் மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. பக்தியுடன் இங்கிருந்தபடியே "அவனை" தரிசித்துக் கொண்டேன். கோவிலைப் பற்றி நல்ல விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். ஸ்ரீரங்கத்திற்கு மற்றொரு முறை செல்ல வேண்டுமென்ற ஆசையை படங்களும், விபரங்களும் உண்டாக்குகிறது. "அவன்" அழைக்க காத்திருக்கிறேன்.
தங்களின் இப்போதைய கோவில் தரிசனங்கள் நல்லபடியாக கிடைத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். யதேச்சையாக புரட்டாசி முதல் சனிக்கிழமை இந்தப் பதிவு அமைந்துள்ளது
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார வாசிப்பனுபவமாக கிருஷ்ணபருந்து கதை விமர்சனம் நன்றாக உள்ளது. இதை முன்பே நானும் படித்ததாக நினைவு. (முன்பு நூலகத்திலிருந்து படிக்க கொண்டு வந்த புத்தகங்களில்) ஆனால் கதை முழுதாக நினைவுக்குள் வரவில்லை. இப்போதும் கிடைத்தால் படிக்கலாம். எங்கள் பகுதியில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பது அரிது.
உங்கள் விமர்சனத்தில் கதையை ஓரளவு யூகித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.