மணல்வெளிக்கும், கடல் நீர்ப் பெருக்கிற்கும்
நடுவே மிக நளினமாய் மினுக்கிக் கொண்டிருந்த நீல மின் விளக்குகள் கூட அணைக்கப்பட்டாகிவிட்டது.
ஒரு சீராய் அருகில் ஒலிக்கிறார் போல் பெரிதாக நெருங்கி வந்து அப்படி வந்த விரைவிலேயே
தொலைவில் ஓடிப் போய்ப் பின் தங்கி ஒடுங்கும் அலை ஓசை மெரினா சாலைக்கே தனியானதொரு களையை
உண்டாக்கிக் கொண்டிருந்தது. வீட்டு விடுதலையாகிச் சுதந்திரமாகத் திரியும் ஒரு கவியின்
கட்டுக்கடங்காத மனநிலையோடு இந்த ஓசையைக் கேட்கும் போது தான் எத்தனை பேரின்பமாக இருக்கிறது!
இத்தனை புகழுக்கு அப்பால், இவ்வளவு பெருமைக்கும்
ஆளாகி விட்ட பிறகு இனிமேல் உயிருடனிருந்து வாழ்வதற்கும் அவசியமில்லை என்பது போல் எல்லையற்ற
திருப்தியான ஒரு மனநிலையோடு, 'இந்த உலகம் போதும் போதும்' என்று நினைத்துக் கொண்டு அந்தக்
கடல் ஓசையை அனுபவிப்பது மனத்துக்கு மிக மிக ரம்மியமாக இருப்பதுபோல் உணர்ந்தான் அவன்.
கடலும் மணல்வெளிக்கு அப்பால் நேர் கிழக்கே
இருட்குளியலாய் மங்கி விட்ட அதன் முடிவே தெரியாத நீர்ப்பரப்பும், காற்றில் ஆடும் சிறு
சிறு மரங்களும், சாலையில் இரவு நேரம் அதிகமாகி விட்டதன் காரணமாக எப்போதாவது சற்றைக்கொருதரம்
சீறிப் பாய்ந்து ஓடும் ஏதாவதொரு காரின் ஹெட்லைட் விளக்கொளியும், ஐஸ்ஹவுஸ் அருகே எங்கோ
சாக்கடைத் தண்ணீரைப் 'பம்ப்' செய்யும் ஒரு பம்பிங் ஸ்டேஷனின் வழக்கமான ஓசையும் நிறைந்த
அர்த்தங்களும், அர்த்தத்துள் நிறைந்த உள்ளர்த்தங்களுமாக ஜனசஞ்சாரமற்ற அந்த நள்ளிரவு
நேரத்துக் கடற்கரை எப்படி விளக்கிச் சொல்லுவதென்று தெரியாத ஏதோ ஓர் அழகோடு அல்லது எப்படி
எப்படி விளக்கிச் சொன்னாலும் அந்தச் சொல்லளவு நிறைவடையாத ஏதோ ஓர் அழகுடன் தனியாகவும்
கம்பீரமாகவும் இருந்தது.
கடற்கரையை ஒட்டினாற்போல் பன்னிரண்டு மணி நேரம்
தங்கிப் போக மட்டும் நூறு ரூபாய்க்கு மேலும் வாடகை வாங்கும் அந்த அதிநவநாகரிக ஹோட்டலில்
நான்கு நாட்களாக அவனைத் தங்க வைத்து உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார் படத்தயாரிப்பாளர்.
ஒரே மாதிரிப் பழக்கமாகிவிட்ட வசதிகளும், 'காலிங் பெல்'லை அமுக்கினால் ஏனென்று ஓடி வந்து
கேட்கும் ஆட்களும் சௌகரியங்களும் - தன்னை மந்தமாக்கி ஜீவ களை இல்லாமற் செய்து விட்டாற்போல்
அவனுக்கே தோன்றியது.
கவி நவ பாரதிக்கோ விநோதமான பழக்க வழக்கங்களும்
ஆசை அபிலாஷைகளும் உண்டு. எல்லையற்ற பல வசதிகளுக்கும், சௌகரியங்களுக்கும் நடுவே வைத்து
ஒரு பாடலை உருவாக்கி வாங்கிவிட வேண்டுமென்று நினைக்கும் பணக்காரப் படாதிபதியின் மனப்பான்மையை
அவன் வியந்தான்.
தூக்கமும் வராமல், அந்த ஹோட்டல் அறைக்குள்
இருப்பும் கொள்ளாமல் நள்ளிரவு ஒன்றரை மணிக்குமேல் நடந்து வெளியேறிக் கடற்கரைக்குச்
சென்றான் அவன். கார் இல்லாத - சொந்தக் கார் இல்லாத அந்தஸ்துக் குறைவான மனிதர்கள் யாரும்
அந்த ஹோட்டலில் வந்து தங்குவதில்லையாதலால் அர்த்தராத்திரிக்கு மேல் அங்கவஸ்திரத்தை
இழுத்துப் போர்த்தியபடியே வெறுங்காலோடு நடந்து வெளியேறும் கவி நவ பாரதியை விநோதமாகப்
பார்த்தான் வாசலில் காவல் நின்ற கூர்க்கா. கவி தவபாரதியின் உபயோகத்துக்காகவும் ஒரு
பெரிய காரை டிரைவரோடு அந்த ஹோட்டலுக்குள் நிறுத்தி வைத்திருந்தார் படத்தயாரிப்பாளர்.
ஆனாலும் என்ன? நடந்து போய் உலகத்தை அனுபவிக்கிறவன் அடைகிற சௌகரியங்களையும், இன்பங்களையும்
காரில் போகிறவன் அடைந்துவிட முடியாதே! சௌகரியங்கள் மனிதனைத் திருப்தி செய்து விடுகின்றன.
திருப்தியின் எல்லையில் எதை உருவாக்க வேண்டும் என்ற துடிப்பும் இல்லையே! அதிருப்தியில்
தானே கலை பிறக்கிறது?
ஏர்கண்டிஷன் குளுமை, ஆளுயர நிலைக் கண்ணாடி,
பூப்போட்ட நைலான் உறையில் ஒளித்தாரைகள் பூத்தாற்போல மங்கலான மேஜை விளக்கு, டெலிபோன்,
ரேடியோ, இதமான மெத்தையோடு கூடிய கட்டில், சொகுசான பாத்ரூம், விதம் விதமான சோபாக்கள்
- எல்லாம் அடங்கிய அந்த ஹோட்டல் அறையில் நான்கு
நாட்களாக இருந்து இருந்து சலித்து முடங்கிச் சுறுசுறுப்பின்றிப் போய் விட்டது போல்
உணர்ந்த மனங்கொள்ளாத தவிப்புடன், இன்னொருவர் குறுக்கிடாத தனிமையில் தன்னிச்சையாகப்
புறப்பட்டிருந்தான் அவன்.
முதல் நாள் மாலையில் நடந்த பாராட்டு விழாவின்
ஞாபகம் அவனுக்கு வந்தது. பார்த்துப் பார்த்து அலுத்துப் போன முகங்கள் - புகழ்ந்து புகழ்ந்து
பழக்கமாகிப் போன வழக்கமான புகழ்க் குரல்கள் - சொல்லில் பெருமையும் அதைச் சொல்கிற தொனியில்
பொறாமையுயுமாக எதிர்வந்து நின்று பேசுகிறவர்கள் - எல்லாரையும் அந்தப் பாராட்டுக் கூட்டத்தில்
சந்தித்திருந்தான் அவன்.
தனிமையில் அபிப்பிராயத்தையும் அதன் அசல் தன்மையையும்
முழுமையாக மறைத்துக் கொள்ள முடியாதவர்கள் கூடப் பலர் கூடிய கூட்டத்தினிடையே தன்னையும்
தன் அசல் மனோபாவத்தையும் முழுமையாக மறைத்துக் கொண்டு பழகுவதைப் பல சமயங்களில் அவன்
கண்டிருக்கிறான். தனித்தனியான மனோபாவங்களை உடையவர் ஒரு கூட்டத்தில் இரண்டு மணி நேரமோ,
மூன்று மணி நேரமோ ஒரே மனோபாவமுள்ளவர்களைப் போல் பழகுவதற்குச் சமூக வாழ்க்கை அவர்களுக்குக்
கற்றுக் கொடுத்திருக்கிறது. விட்டுக்கொடுக்காமல் பழகிவிடுகிற இந்தச் சில மணி நேர ஒற்றுமைதான்
நாகரிக வாழ்வின் தற்காலிக வெற்றி அல்லது நிரந்தரத் தோல்வி என்று அவன் நினைத்தான்.
ஆயிரம் கவிதைகள் - அதாவது கடந்த பத்தாண்டுகளில்
அவன் இயற்றி அவ்வப்போது வெளிவந்த ஓராயிரம் கவிதைகள் ஒன்றாகத் தொகுக்கப்பெற்று வெளிவந்த
புத்தகத்தின் பாராட்டு விழாதான் அது. "இத்தனை இளம் வயதிலேயே கவிஞர் நவபாரதி புகழ்
ஏணியின் உச்சியில் ஏறிவிட்டார்" என்று ஒருவர் புகழ்ந்ததும் - "இத்தனை இளமையிலேயே
இவ்வளவு புகழ் இவருக்கு வந்திருக்கக் கூடாது" என்று அவர் சொல்வது போலவும் - இனி மேலே ஏறுவதற்கு இடமில்லையாதலால் புகழ் ஏணியின்
உச்சியிலிருந்து கீழே தலைக்குப்புற விழ வேண்டுமென்று அவர் கருதுவது போலவும் அந்தப்
புகழின் தொனி இருந்தது.
புகழே ஓர் அளவுக்கு அதிகமாகக் காதில் விழும்போது
வசைபாடுவது போல் அசிங்கமாக இருக்கிற அபூர்வ இரகசியம் இப்போது இந்த நள்ளிரவில் பாமரனாக,
எந்தத் துணையுமில்லை தீரமான தீவிரமான - தனிமையோடும், சிந்தனையோடும் இப்படி மெரினா சாலையில்
நடக்கிற இந்த வேளையில் அவனுக்குத் தோன்றியது.
மார்பளவுக்கு இரண்டு கைகளையும் உயர்த்திக்
கூப்பி வணங்குவது போல் கரங்குவித்தால் மரியாதையாகவும், தலைக்கு மேல் ரொம்ப உயரத் தூக்கிக்
கரங்குவித்தால் கேலியாகவும் தோன்றுவது போல், புகழும் ஓர் எல்லைக்கு மேல் கேலியாகி விடுவதை
எண்ணிக் கூசினான் அவன். "இதோ அமைதியான இந்தக் கடற்கரை நள்ளிரவை மேலே இருந்து பார்க்கும்
சிறு நட்சத்திரங்களையும், ஆகாயத்தையும் கடலையும், பாற்குடமாய் மிதந்துவரும் பன்னீர் நிலாவையும் பொருளாக வைத்து ஏதோ பாட்டு எழுத
வேண்டும் என்று மனக்கருக்கொண்டு ஒன்றும் சொல்லுருவில் பிறக்காத பிரசவ வேதனையோடு அவன்
மனம் தவிக்கிறது.
கடற்கரைச் சாலையில் கால்களில் செருப்புமின்றி
நோக நோக நடந்து கொண்டிருக்கிறான் அவன். மார்பில் பனியனோ சட்டையோ இல்லாமலே வெறும் அங்கவஸ்திரத்தைச்
சுற்றிப் போர்த்திக் கொண்டு நடப்பதால் கடற்கரை இரவில் குளிர் காற்று மயிர் கால்களைக்
குத்திட்டு நிற்கச் செய்தது. இந்த மெல்லிய இருட்டும் குளிர் காற்றும், கடல் அலைகளின்
ஓசையும், நட்சத்திரங்களும் மரங்களின் அசைவும், அப்படி அப்படியே தோற்றமாகவும், சொல்லாகவும்
விளங்கிட ஏற்றதொடு கவிதை பிறக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் இந்தக் கேட்பாரற்ற தனிமையில்
ஒரு பாட்டு எழுத வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. எழுதத் தோன்றுகிறது என்பதைவிட
எழுதுவதற்குத் தாபமாக இருக்கிறது என்பது பொருத்தமான வார்த்தையாக இருக்கும். நினைவைக்
கருக்கொண்டாயிற்று. ஆனால் கவிதைதான் இன்னும் பிறக்கவில்லை.
சங்கீத சாஸ்திரங்கள் ஏட்டளவில் இலட்சணம் சொல்லிவிட்ட
ராகங்களுக்கு யாரோ ஒருவருடைய குரலின் இனிமையிலே சரியான வடிவம் பிறப்பது போல், அகராதியிலே
நிரம்பிக் கிடக்கும் பல அபூர்வமான சொற்களுக்கு அவனுடைய வாக்கிலிருந்துதான் சம்பூர்ணமான
அர்த்தம் பிறக்க வேண்டும். நினைவுகளைச் சுமந்து பிரசவிப்பதில் உள்ள சிரமங்களை இந்த
நள்ளிரவில் அவன் நன்றாக உணர்ந்தான். செருப்பில்லாமல் ஏதோ வெளியே புறப்பட்டுவிட வேண்டும்
என்ற அவசரத்தில் புறப்பட்டு விட்டதாலும், 'தரையைத் தொட்டு நடப்போம்' என்று ஒவ்வொரு
கணமும் கால்கள் உறுத்த உறுத்த நடந்து கொண்டிருந்தான் அவன். இப்படி வலிக்க வலிக்க நடப்பதும்
வாழ்க்கையைக் கற்றுக் கொள்வதற்கு ஓர் அனுபவம்தானே?
நடந்து நடந்து சோர்வடைந்தாற்போல் இருக்கவே,
அரை வேட்டியை இழுத்து மடித்துக் கட்டிக் கொண்டு, பாக்கெட்டிலிருந்த சிகரெட் பாக்கெட்டையும்
தீப்பெட்டியையும் எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அரை வேட்டியின்
மடிப்பையும் பக்கத்து மேல் துணியைச் சட்டைப் பை போல் மடித்துக் கட்டிச் சொருகிக் கொண்டு
அதில் வெற்றிலை, பாக்கு, சிகரெட், தீப்பெட்டி, சில்லறைப் பணம், பேனா, துண்டுக்காயிதம்
எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளும் பாமரத்தன்மை நிறைந்த ஒரு நாட்டுப்புறத்துப் பழக்கம்
ஆயிரமாயிரமாகச் சம்பாதிக்கும் திரையுலக மன்னனாகிய பின்பும் இன்னமும்கூட அவனிடமிருந்து
போகவில்லை.
பல பேருடைய உள்ளங்களில் நவபாரதியின் கவிதைகளும்
கீதங்களும் ஒரு நளினமான ஞாபகமாகத் தங்கிவிட்ட காலம் இது. எல்லாருடைய ஞாபகத்திலும் அவன்
ஒரு புதுமையாக நிறைந்திருந்த போதிலும், "நான் இத்தனை விரைவில் பழமையாகி விட்டேனே"
என்ற பயமும் எச்சரிக்கையும் அவனுக்கு தோன்றும். நினைத்தபடி ஓர் அழகிய கவிதையை இயற்றி
முடிக்க இயலாத இந்த நள்ளிரவிலும் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது. ஒவ்வொரு காட்சியையும்
தன்னிச்சையாகப் பார்த்து, தன்னிச்சையாகச் சிந்தித்துக் கொண்டு சுதந்திரமாக நடக்க முடிந்த
தனிமையான இந்த இரவில் துண்டு துண்டாக எத்தனையோ கவிதைத் தோற்றங்கள் அவன் கண்ணில் தெரிகின்றனவே!
அதோ கடற்கரைச் சாலையின் ஓரத்தில் அந்த மர நிழலில்
தலை தாங்காமல் பூ வைத்துக்கொண்டு ஒரு பெண் ஒதுங்குகிறாள். அவள் இதழ்களில் அளவுக்கு
அதிகமாக வெற்றிலைச் சாயம். தெரு விளக்கொளியில் தேவைக்கதிகமாக மின்னும் நகையலங்காரங்கள்.
நகையலங்காரங்கள் மட்டுமல்ல, எல்லாமே தேவைக்கதிகமாகத்தான் இருந்தன. அடக்கமின்றி ஒலிக்கும்
அதிகப்படியான கொலுசின் ஒலி, அதே மாதிரிச் சிரிப்பொலி. சற்று நேரம் நின்று பேசியபின்
யாரோ ஓர் ஏஜெண்ட் போன்ற மனிதனோடு புதரில் மறைந்து விடுகிறாள் அவள். கவி நவ பாரதியின்
முகத்தில் இந்தக் காட்சியைக் கண்டு புன்னகை மலர்கிறது.
வலது கை மணிக்கட்டில் கட்டம் போட்ட கைக்குட்டை
ஒன்றை இறுக்கி முடிந்து கொண்டு, காலர் வைத்த பனியனும் இடுப்பில் சுங்குடிப் புடைவை
போல் தோன்றும் ஒரு சிங்கப்பூர்க் கைலியுமாக, "என்ன வாத்தியாரே! இந்நேரத்துக்கு
எங்கே வந்தே? கிராக்கியா!" என்று உலகத்தின் ஆதிகாரியத்துக்குத் தரகு வேலை பார்க்கும்
ஒரு கடற்கரை மைனர் ஏஜண்டும், நிலா வெளிச்சத்தில் ஒரு கட்டுமரத்தையும், வலையையும் சரி
பார்த்துக் கொண்டிருந்த இரண்டு செம்படவர்களுமாக கடற்கரை செயற்கைக் கலப்பில்லாத அசல்
பச்சைத் தன்மையோடு அப்படி அப்படியே இருந்தது அந்த நேரத்தில் 'இதிலிருந்து - இதைப் பார்த்து,
இதை உணர்ந்து அனுபவித்ததிலிருந்து எதையாவது பாட வேண்டும்' என்று நினைத்தபோதுதான் இப்படி
ஒரு பிரசவ வேதனையை மனம் அனுபவிக்கிறது. 'ஒன்றும் நினைக்காமல் - பார்த்ததை, நினைத்ததை,
உணர்ந்ததை - அனுபவித்ததை என்று அப்படியே விட்டுவிடுகிற அப்பாவி வாழ்வு நிம்மதியானது?'
என்று ஒரு கணம் சோம்பலின் காரணமாக வார்த்தைகளையும் அர்த்தத்தையும் தேடிப் பாட்டு எழுதுகின்ற
தொழில் மேலேயே வெறுப்புத் தோன்றியது கவி நவ பாரதிக்கு.
அப்பப்பா நினைத்ததை எழுத வார்த்தை வராமல் இந்த
மனம்தான் எப்படிக் கிடந்து தவிக்கிறது? பிரசவ வேதனை எப்படியிருக்கும் என்பதை ஓர் ஆண்பிள்ளை
அனுபவபூர்வமாக உணர முடியாது. ஆனால் நினைப்பில் கருக்கொண்ட ஓர் எண்ணத்தை வெளியிட வனப்புமிக்க
வார்த்தைகளையும் அர்த்தத்தையும் தேடி உருகுகிற ஒரு கவியின் வேதனையைப் போலத்தான் பிரசவ
வேதனையும் இருக்க வேண்டும் என்று பல வேளைகளில் சுயமாக அவனால் அனுமானிக்க முடிந்திருக்கிறது.
நடப்பது அலுத்துப் போய்விட்டதனால், சாலையோரம்
ஒரு மரமும் இடுப்பு உயரத்துக்குக் கத்தரித்து விட்டிருந்த பசுமையான செடிவேலியுமாக இருந்த
ஓரிடத்தில் கடலைப் பார்த்தவாறு கிழக்கு முகமாக அமர்ந்தான் கவி நவ பாரதி. பக்கத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலை
அந்த இருட்டிலும் எங்கோ அவசரமாகவும் அவசியமாகவும் வடக்கு நோக்கி விரைவாக நடந்து போய்க்
கொண்டிருப்பது போல் ஒரு பிரமை தட்டியது. அந்தச் சிலையைப்பார்த்து முடித்த கண்கள் அப்படியே
மேலே ஆகாயத்தையும் விண்மீன்களையும், நிலாவையும் பார்த்தன. உடனே மின்னல் வெட்டினாற்போல்
மனத்தில் இரண்டு வரிகள் தோன்றின:
ஆயிரம் விண்மீன் அலங்காரம்
ஆழி மழைக்கடல் நிலத்தோரம்
தன்னுடைய இதய வீணையில் சுருதி சேர்வது போல்
இந்த ஆரம்பம் தோன்றியது அவனுக்கு. தோன்றிய வரிகள் மறந்து போய்விடாமல் இருப்பதற்காக
எதிலாவது குறித்துக் கொள்ளலாமென்றால் அப்போது கையில் காகிதமில்லை, பேனா மட்டும்தான்
இருந்தது. தோன்றியது மறந்துவிடாமல் எழுதிக் கொண்டுவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் சிகரெட்
பாக்கெட்டைப் பிரித்து உலைத்து அதன் நான்கு மடிப்பான அட்டையை விரித்துக் கவிதை வெறியோடு
அதில் தோன்றியதை எழுதலானான் கவி நவ பாரதி. சிகரெட் அட்டைப் பெட்டியின் பின்புறமாகிய
அந்த ஏட்டில் மை ஊறியது. வெளிச்சமும் சரியாகத்
தெரியவில்லை. எழுத்தே மறைந்து குப்பல் குப்பலாக மை குவிகிற அளவு நன்றாக ஊறும் மட்டரகக்
காகிதமாயிருந்தது அது.
ஆயிரம் விண்மீன் அலங்காரம்
ஆழி மழைக்கடல் நிலத்தோரம்
பூமியில் இன்னும் விடியவில்லை
பொய்யிருள் இன்னும் மடியவில்லை
காம நிலாக்கதிர் சாயவில்லை
கடற்கரை அலைகள் ஓயவில்லை
முன்பு தோன்றிய இரண்டு வரிகளோடு மேலும் இப்படிப்
புதிதாக நான்கு வரிகள் தோன்றிவிட்டன. முகம், கழுத்து, மார்பு என்று படிப்படியாக உருத்
தெரியக் கர்ப்பத்திலிருந்து பிஞ்சுக் கைகால்களை உதைத்துக்கொண்டு வெளிப்படும் குழந்தையைப்
போல் பாட்டும் மெல்ல மெல்லப் பிறந்து கொண்டிருந்தது.
'முன்னிக் கவிதை வெறி மூண்டெழுந்து' என்று
பாரதி பாடியிருக்கிறாரே, அப்படிக் கவிதை வெறி மூண்டெழும் மனத்தோடு புதிதாக ஒரு வரி
தோன்றும் வரை அது நன்றாகவும் நயமாகவும் அமைய வேண்டுமே என்ற கவலையும் தோன்றியபின், அது
நயமாக இருக்கிறதா அல்லது இன்னும் எப்படி எப்படி எப்படி நயமாக இருந்திருக்க முடியும்?'
என்ற கவலையுமாகப் பாட்டு அவன் கற்பனையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிறந்து கொண்டிருந்தது.
'காம நிலாக்கதிர்' என்ற மூன்றாம் அடியின் ஆரம்ப
எதுகைக்குப் பதிலாக 'சேம நிலாக்கதிர்' என்று மாற்றினால் நன்றாக இருக்குமோ? என்பதாக
நடுவிலேயே ஒரு சந்தேகமும் அவனுள் தனக்குத்தானே ஏற்பட்டது. அடுத்த கணமே 'காம நிலாக்கதிர்'
என்பதிலுள்ள அழகும் அழுத்தமும் 'சேம நிலாக்கதிர்' என்பதில் வரவே வராது, காமம் என்றால்
பேராசை. 'காம நிலாக்கதிர்' என்னும் நிலவை அனுபவிக்கிறவர்களுக்கு இன்னும் இன்னும் அனுபவிக்க
வேண்டும், விட்டுவிடக்கூடாது என்ற பேராசையை உண்டாக்கும்படியான சோபை நிறைந்த நிலவு என்னும்
பொருள் விரியும். 'சேமநிலாக்கதிர்' என்பதில் இவ்வளவு பொருள் விரித்துச் சொல்வதற்கு
இடமில்லை. 'அனுபவிக்கிறவர்களுக்குச் சேமத்தை உண்டாக்கும் நிலாக்கதிர்' என்று மட்டுமே
சாதரணமாக அர்த்தம் விளங்குவதில் அவ்வளவாக நயமிருக்க முடியாது.
ஒரு புதிய கவிதையை இயற்றும் வேளையில் அப்படி
இயற்றிக் கொண்டிருக்கும்போதே வரிகளை இயற்றிய வரையில் திரும்பத் திரும்பச் சொல்லிப்
பார்த்து அனுபவித்துக்கொண்டு மேலே பாடுவது ஒரு சுவாரசியமான வழக்கம்.
இப்போதும் நவ பாரதி, ஆறாவட்து முறையாகவோ, ஏழாவது
முறையாகவோ முதலில் இயற்றிய வரிகளைத் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொண்டான். இயற்றிய
வரை சொல்லிப் பார்த்துச் சொல்லிப் பார்த்து அந்த வேகத்திலேயே இயற்ற வேண்டிய மீதப் பகுதியை
அபரிதமாக வரவழைத்து முடிப்பது பழக்கம். இதுவரை பாடிய பகுதியை முனகிப் பார்த்து இனிமேல்
பாட வேண்டிய பகுதியைத் தேடும் இந்த வழக்கத்தை எண்ணும்போது ஹைஸ்கூல் நாட்களில் 'லாங்
ஜம்ப்' தாண்டுவதை நினைத்துக் கொள்வான் நவபாரதி. பின்னால் எவ்வளவு தூரத்திலிருந்து வேகமாக
ஓடி வருகிறோமோ, அவ்வளவு தூரம் அதிக வேகமாக முன்னால் தாண்டிக் குதிக்க முடியும். எழுதி
நிறுத்தியிருந்த இடம் வரைச் சொல்லிப் பார்த்துச் சொல்லிப் பார்த்து எழுத வேண்டிய எல்லைக்குத்
தாவும் அனுபவமும் 'லாங் ஜம்ப்' தாண்டுவதைப் போலத்தான். ஆனால் இப்போது கவிதையில் 'லாங்
ஜம்ப்' தாவவும் அவனால் முடியவில்லை.
ஆயிரம் விண்மீன் அலங்காரம்
ஆழி மழைக்கடல் நிலத்தோரம்
பூமியில் இன்னும் விடியவில்லை
பொய்யிருள் இன்னும் மடியவில்லை
காம நிலாக்கதிர் சாயவில்லை
கடற்கரை அலைகள் ஓயவில்லை...
என்று சொல்லிச் சொல்லி ஜபம் செய்தும் கவிதை
மேலே நகராமல் சண்டித்தனம் செய்தது. 'கொஞ்ச நேரம் விட்டுப் பிடிக்கலாம்' என்ற எண்ணத்தோடு
மீண்டும் சிகரெட்டைப் பற்றவைத்துக் எழுந்து சிறிது தொலைவு கடற்கரையில் நடந்தான்.
வேறு இடமும் வசதியும் இல்லாத காரணத்தால் கடற்கரைச்
சாலை மின்விளக்கின் அடியில் நாடக ரிஹர்சல் செய்து வசனங்களை உரக்கப் பேசிக் கொண்டிருந்தது
நாலைந்து இளைஞர்கள் அடங்கிய ஒரு ஏழை அமெச்சூர் கோஷ்டி. "அடே! சமூகத் துரோகி! இதோ
உன்னை என்ன செய்கிறேன் பார்!" என்று இருந்தாற்போலிருந்து கடற்கரையில் யாரோ கூச்சலிடுவதைப்
போல் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோதுதான், விளக்குக்கம்பத்தடியில் இந்த
நாடகக் கோஷ்டி 'டயலாக்' மனப்பாடம் பண்ணி ஒத்திகை நடத்திக் கொண்டிருப்பதை அவனே கண்டான்.
"என்ன விநோதமான கடற்கரை இது?" என்று நினைத்துச் சிரித்துக் கொண்டே அவன் மேலே
நடக்க வேண்டியதாயிற்று.
நடந்து நடந்து தொலைவும் நேரமும் தெரியாமலே
உழைப்பாளிகள் சிலை அருகே வந்தாயிற்று. எதிரே பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கட்டிடங்களும்,
வேறு பல கட்டிடங்களும் நிலா ஒளியில் மிக மிக பொலிவுடன் தோன்றுகின்றன. உழைப்பாளிகள்
சிலையருகே விளக்கு வெளிச்சத்தில் பருத்த தோற்றத்தையுடைய ஒரு முரட்டுச் செம்படவப் பெண்
கிழிந்த புடைவையைத் தைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவளருகே இரண்டு
பரட்டைத் தலைக் குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த இடத்தில் போட்டிருந்த
பிரகாசமான மின்சார விளக்கின் ஒளியில் ஊசி நூல் கோத்துப் புடைவையின் கிழிசல்களைத் தைப்பதென்பது
அவளுக்கு மிக சுலபமான காரியமாயிருக்கும். 'வேறு எதை விடச் சுலபமோ சுலபமில்லையோ, பாட்டு
எழுதுவதை விடக் கிழிந்த புடைவையைத் தைப்பது இந்த வேளையில் நிச்சயம் சுலபமான காரியமாகத்தான்
இருக்க முடியும்' என்று நினைத்தபின் - இந்தப் பொருத்தமில்லாத உவமைக்காக வெட்கப்பட்டு,
"சே! சே! பாட்டு எழுதுவது எங்கே? கிழிசல் புடைவை தைப்பது எங்கே?" என்று இரண்டையும்
சேர்த்துத் தானே அப்படி ஒப்பிட்டதற்காக மனங்கூசிவிட்டு மேலே நடந்தான் அவன்.
உழைப்பாளிகள் சிலைக்கு நேரே பின்புறம் கடற்கரையின்
உள்பக்கத்துச் சாலைக்கு இறங்கும் படிகளின் வழியே இறங்கி வடக்குப் பக்கமாகச் சிறுது
தொலைவு சென்றபின் மரங்களும், புதருமாக அந்த ஓரிடம் வந்தது. அந்த அடர்த்தியின் இடையே
தரையில் பொன் சிதறினாற் போலத் துணுக்குத் துணுக்காகக் கிழிந்த நிலாக்கற்றையின் சாயல்கள்
சிதறியிருந்தன. சிள் வண்டு ஓசையும், புதர், காற்றில் சலசலப்பதுமாக அந்த இடம் அந்த வேளையில்
ஆங்கிலத் துப்பறியும் படங்களில் வருகிற பயங்கரக் கொலைப் பிரதேசங்களைப் போல் இருந்தது.
தொலைவில் கடல் ஓசை வேறு அந்தப் பயங்கரத்துக்கும் பின்னணி கூட்டிக் கொண்டிருந்தது.
இருட்டில் அங்கு ஒரு மூலையில் கிடந்த சிமெண்ட்
பெஞ்சில் உட்கார்ந்தான் நவ பாரதி. சுற்றுப் புறத்தைப் போலவே அவனது சிந்தனையும் தெளிவில்லாமல்
இருந்தது. இயற்றத் தொடங்கிய பாட்டு மேலே வரவில்லை. சிகரெட் தான் ஒவ்வொன்றாகத் தீர்ந்து
கொண்டிருந்தது. விடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாகக் காற்றில்
குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடற்கரை ஓசையும் செவியில் ஓயாமல் பழகிவிட்ட ஒரு பெரிய
ராகமாக ஒலிக்கத் தொடங்கியிருந்தது. நீண்ட நேரம் சிந்தித்த பிறகு அரைகுறையாக நின்று
போயிருந்த கவிதையில் இப்போது இன்னும் ஒரு வரி புதிதாகச் சேர்ந்தது. அத்தனை தூரம் ஓடிவந்து
அவனால் தாவ முடிந்த 'லாங் ஜம்ப்'பின் தூரம் அந்த ஒரே ஒரு வரிதான்:
ஆயிரம் விண்மீன் அலங்காரம்
ஆழி மழைக்கடல் நிலத்தோரம்
பூமியில் இன்னும் விடியவில்லை
பொய்யிருள் இன்னும் மடியவில்லை
காம நிலாக்கதிர் சாயவில்லை
கடற்கரை அலைகள் ஓயவில்லை
சாமக்கோழியும் கூவவில்லை
புதிதாகத் தோன்றிய இந்த ஒரு வரியை எழுதுவதற்காக
வெளிச்சத்துக்காக வந்து அரையில் மடித்து வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டின் காகிதத்தில்
ஏழாவது வரியாக மை ஊற ஊற இதைக் கிறுக்கிக் கொண்டபின் மறுபடியும் புதரருகே சிமெண்ட் பெஞ்சில்
போய் உட்கார்ந்தான் கவி நவபாரதி. மீதமிருந்த கடைசி சிகரெட்டையும் பற்றவைத்து இழுக்கத்
தொடங்கினான்.
அப்போது பின்புறம் புதரில் யாரோ தீனஸ்வரத்தில்
முனகுவது போல் ஒரு பிரமை தட்டியது. 'அந்த இடத்திற்கே உரிய துப்பறியும் கதைக் களையினால்தான்
இப்படி யாரோ முனகுவது போல் பொய்யாகத் தனக்குத் தோன்றுகிறதோ?' என்ற சந்தேகத்தினால் ஓரிரு
கணங்கள் ஒன்றும் செய்யத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் அவன்.
மறுபடியும் அதே முனகல் ஒலி - யாரோ வலியெடுத்துப் பதறுவது போன்ற தீனக்குரல். பயம், திகைப்பு, வியப்பு எல்லாம் ஒருங்கிணைந்து அவனை உந்தின. 'கடற்கரையின் அழகைத் தனியாக அனுபவித்து இரசிக்க வேண்டுமென்று புறப்பட்டு வந்தால், வந்த இடத்தில் நமக்கு என்னென்னவோ சம்பவங்கள் காத்திருக்கின்றனவே!' என்ற நினைப்போடு வெளிச்சத்துக்காக ஒரு தீக்குச்சியை உரசி எரிய வைத்துக்கொண்டு புதரில் எட்டிப் பார்த்த நவபாரதி, உடனே பார்க்கக் கூடாததைப் பார்த்துவிட்டக் கூச்சத்தோடு தலையைத் திருப்பிக் கொள்ள நேரிட்டது. பரிதாபமும் பரிவும் கொள்ளவேண்டிய ஒரு காட்சி அங்கே தென்பட்டது.
தெருமுனைகளிலும் சேரிக்
குடிசைகளிலும், பஜார்ப்பக்கங்களிலும் சர்வசாதாரணமாகச் சந்திக்க முடிகிற பஞ்சைப் பெண்கஜளில்
ஒருத்தியைப் போல் தோன்றும் அனாதை ஒருத்தி அந்த இருளில் அந்த மரத்தடியில் பிரசவ வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் வயிறு உப்பி உப்பித் தணிவதையும் முழங்கால்களை உதைப்பதையும் பார்த்து ஒரு கணம்
அழுக்குப் படாமல் நாசுக்காக வாழ்ந்துப் பழகிவிட்ட நவபாரதிக்கு அருவருப்பாக இருந்தது.
அருகில் சென்று விசாரிப்பதற்குக் கூச்சமாகவும் இருந்தது. இந்த நள்ளிரவில் இத்தனை பயங்கரமான
ஓர் இடத்தில் இவ்வளவு நிர்க்கதியாக ஓர் அனாதைப் பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ
தனக்கு வந்து சேர்ந்துவிட்ட தாய் ஸ்தானத்தை அடைய முயன்று கொண்டிருப்பதைப் பார்த்து
அவன் நெஞ்சை ஏதோ சில உணர்வுகள் பிசைந்தன.
அவ்வளவில் தீக்குச்சி நுனி வரையில் எரிந்து
கைவிரலைச் சுட்டது. மறுபடியும் ஒரு தீக்குச்சியை உரசி ஒளி உண்டாக்கி அவள் பக்கமாகப்
பார்த்தபோது, முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பி, தலைஅவிழ்ந்து நெற்றியில் காலணா
அகலக் குங்குமப்பொட்டு வியர்வையில் சேறாகி வழிந்தோட, வலது கையை மெல்லத் தூக்கிக் கட்டைவிரலை
வாய் உதட்டின் மேல் வைத்து, "குடிப்பதற்கு நீர் வேண்டும், ரொம்பத் தாகமாயிருக்கிறது"
என்பது போல் ஜாடை காட்டினாள் அவள்.
அந்த நள்ளிரவு நேரத்தில் குடிப்பதற்கு ஒரு
சொட்டு நீரும் பயன்படாத உப்புக்கடலருகே அவளுடைய தாகத்தைத் தீர்ப்பதற்கு எங்கே போவதென்று
புரியாமல் தவித்தான் கவி நவபாரதி. சற்று முன் உழைப்பாளிகள் சிலை விளக்கடியிலே பார்த்த
அந்த முரட்டுச் செம்படவப் பெண்ணின் ஞாபகம் வரவே அவள் இருந்த இடத்தை நோக்கித் தலைதெறிக்க
ஓடினான் அவன்.
நல்லவேளை! கிழிசல் புடைவையைத் தைத்து முடித்துவிட்டு
அவள் அப்போதுதான் எழுந்திருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அவன் அவளெதிரே ஓடிப்போய்ச்
சேதியைக்கூறியவுடன் முதலில் அவள் அதை நம்பவில்லை. அப்புறம் சொல்ல வந்திருக்கிற அந்த
ஆள், அந்த ஆளின் நாகரிகமான பாஷை, முகம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டுத்தான்
அவன் வந்து சொல்கிற சேதி நிஜமாயிருக்கலாமென்று நம்பினாள்.
"தண்ணி இங்கே எங்கியும் கிடைக்காது. முடிஞ்சா
எங்கியாவது தில்லக்கேணிப் பக்கமாய் போயிச் சோடா வாங்கிட்டு வரலாம், நீங்க போயி சோடா
வாங்கிட்டு வாங்க. நா வேணா அந்தப் புதரண்டை போயி அவளைப் பார்த்துக்கிறேன்" என்று
ஒப்புக்கொண்டாள் அந்தச் செம்படவப் பெண்.
கவி நவபாரதி பைக்கிராஃப்ட்ஸ் ரோடுக்கு ஓடி
அந்த அகாலத்திலும் தப்பித்தவறித் திறந்திருந்த ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் பாட்டிலுக்கும்
சேர்த்து அட்வான்ஸ் கொடுத்து ஒரு சோடாவையும் திறப்பதற்கு ஒரு கட்டையையும் வாங்கிக்
கொண்டபின், முன்யோசனையாக அங்கிருந்த ஒரு பொது டெலிபோனில் ஆம்புலன்ஸையும் கூப்பிட்டுத்
தகவலும் தெரிவித்துவிட்டு அப்புறம் கடற்கரைக்கு ஓடினான்.
அவன் அங்கு போய்ச் சேர்ந்தபோது அந்தப் பெண்ணுக்குக்
குழந்தை பிறந்திருந்தது. செம்படவப் பெண்ணிடம் சோடாவை உடைத்து அதை அந்தப் பெண்ணின் வாயில்
ஊற்றுமாறு வேண்டிக் கொண்டான் கவி நவபாரதி. தான் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணியிருப்பதையும்
இன்னும் சிறிது நேரத்திலே கார் வந்து அவளை அழைத்துப்போகும் என்பதையும் கூறியபோது அந்தப்
பெண்ணின் முகம் சுருங்கி இருண்டது. ஆம்புலன்ஸ் வருவதை அவள் விரும்பவில்லை என்று இதிலிருந்து
தெரிந்தது கவி நவபாரதிக்கு.
"வயிறும் பிள்ளையுமாச் சமுத்திரத்திலே
விழுந்து போயிடணும்னுதான் வந்தேன். கடைசி நேரத்திலே மனசு கேக்கலை. வலி தாங்காம இந்தப்புதர்லே
வந்து சாஞ்சதுதான் எனக்குத் தெரியும். அப்புறம் பிரக்ஞையே இல்லை. இந்த ஐயா வந்து அந்தப்
பெஞ்சியிலே உட்கார்ந்து சிகரெட் பிடிச்சப்பத்தான் மறுபடியும் நினைப்பு வந்துச்சு..."
என்றாள் அந்தப் புதிய தாய்.
"அந்தப் பெண் யார்? எதற்காக வயிறும் பிள்ளையுமாகத்
தற்கொலை செய்து கொள்ள வந்தாள்?" என்று கேட்க நினைத்தும் அந்தக் கேள்விகளுக்கெல்லாம்
அவள் உற்சாகமாகப் பதில் கூறுகிற நிலையில் இல்லை என்று தானாகவே அனுமானித்துக் கொண்டு,
பேசாமல் இருந்துவிட்டான் கவி நவபாரதி. ஆம்புலன்ஸ் வந்ததும் வேண்டாவெறுப்பாகவும் தவிர்க்க
முடியாமலும் அவள் அதில் ஏறிக்கொண்டு போனதாகவே அவனுக்குத் தோன்றியது. போகிறபோது அவனை
அவள் கண்கள் நன்றியோடு நோக்கி வணங்கத் தவறவில்லை.
"சமயத்துலே வந்து ஒத்தாசை பண்ணியிருக்கே!
இந்தா, இதை நீ வச்சுக்க" என்று செம்படவப் பெண்ணிடம் ஓர் ஐந்து ரூபாயை நீட்டினான்
கவி நவபாரதி.
"ஐயே! இதென்னா சாமி... ஒரு பொம்பிளைக்கு
இன்னோரு பொம்பிளை இந்த மாதிரி நேரத்திலே செய்யறதைத் தானே நான் செஞ்சிருக்கேன்... இதுக்குப்
போயிக் காசு குடுக்கிறியே" என்று மறுத்துவிட்டாள் அவள்.
"என்னாத்தைச் சொல்றது அவ பண்ணின புண்ணியத்திலே
சொகமா பெத்துப்பிட்டா..." என்று போகிற போக்கில் அந்தச் செம்படவப் பெண் சொல்லிக்கொண்டு
போனாள்.=
கவி நவபாரதி சிந்தனையில் ஆழ்ந்தான். கிழக்கே
வானம் வெளுத்துக்கொண்டு வந்தது.
அவளுடைய பிரசவ வேதனையும் கூடத் தீர்ந்துவிட்டது.
அவனுடைய மனத்தின் பிரசவ வேதனைதான் இன்னும் தீரவில்லை! கடற்கரையில் எல்லா விளக்குகளையும்
அணைத்துவிட்டார்கள். இரவின் முடிவு நேரமும் நெருங்கிவிட்டது. அவன் எழுதத் தொடங்கிய
கவிதைக்குத்தான் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. அதற்குக் கடவுளருளால் ஒரு நல்ல முடிவு
பிறக்க வேண்டும்.
ஆயிரம் விண்மீன் அலங்காரம்
ஆழி மழைக்கடல் நிலத்தோரம்
பூமியில் இன்னும் விடியவில்லை
பொய்யிருள் இன்னும் மடியவில்லை
காம நிலாக்கதிர் சாயவில்லை
கடற்கரை அலைகள் ஓயவில்லை
சாமக்கோழியும் கூவவில்லை...
இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டேயிருந்தான்
அவன். மேலே ஒரு வரி கூட ஆகவில்லை. அந்த அனாதைப் பெண் நிர்கதியாகப் பிரசவிக்க எவ்வளவு
வேதனையடைந்தாளோ அதைவிட அதிக வேதனையை இப்போது அவன் மனம் அடைந்தது. 'ஆஸ்பத்திரிக் கட்டிலில்
சகல சௌகரியங்களுடன் பிரசவிக்கிறவளானாலும் சரி, மெரினாக் கடற்கரைப் புதரில் நள்ளிரவில்
நிர்க்கதியாகத் துணையின்றிப் பிரசவிக்கிறவளானாலும் சரி, பிரசவ வேதனை இருவருக்கும் ஒன்றுதான்.
வலியும் இருவருக்கும் ஒன்றுதான்.'
இப்போது தன்னை ஒரு தாயாகப் பாவித்துக்கொண்டு
ஒரு நிமிடம் தனக்குத்தானே சிந்தித்தான் கவி நவபாரதி. தான் தன்னுடைய கருத்தைப் பிரசவிப்பதற்கு
வசதி நிறைந்த அதிநவீனப் படத்தயாரிப்பாளர் தனக்கு ஏற்பாடு பண்ணியிருந்த ஹோட்டல் அறையின்
நறுமணம் நிறைந்த சௌகரியச் சூழலில் பிறக்காத ஒரு கவிதை, மீன் நாற்றமும் முடை நாற்றமும்
நிறைந்த கடற்கரையில் வந்து பிறந்ததை நினைத்தபோது, அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. "நானும்
அவளும் ஒரே இடத்தில் ஒரே விதமான சூழ்நிலையில்தான் பிரசவித்திருக்கிறோம். அவளுக்குச்
சுகப் பிரசவம் ஆகிவிட்டது, எனக்கு ஆகவில்லை... இதுதான் வித்தியாசம்..." என்று
நினைத்தபடியே அதே ஆவேசத்தோடு வாய் திறந்து,
ஆயிரம் விண்மீன் அலங்காரம்
ஆழி மழைக்கடல் நிலத்தோரம்
பூமியில் இன்னும் விடியவில்லை
பொய்யிருள் இன்னும் மடியவில்லை
காம நிலாக்கதிர் சாயவில்லை
கடற்கரை அலைகள் ஓயவில்லை
சாமக்கோழியும் கூவவில்லை...
என்று தன்னம்பிக்கையோடு இரைந்து பாடத் தொடங்கினான்
கவி நவபாரதி.
சாமக்கோழியும் கூவவில்லை
---------------------------------------
சாமக்கோழியும் கூவவில்லை
சாயை நாயகன் வானிலில்லை
தூமப் புகையிருள் அகலவில்லை
சுடர்மணித் தேரும் நகரவில்லை
என்று மேலும் சிலவரிகள் கற்பனையில் உருவாகித்
தோன்றின.
சாமக்கோழியும் கூவவில்லை
-----------------------------------------------------------
சாயை நாயகன் வரவில்லை
தூய புகையிருள் அகலவில்லை
சுடர்மணித் தேரும் நகரவில்லை
நாமும் இருளில் தவிக்கின்றோம்
நாளை விடிவை நினைக்கின்றோம்
என்று அரை குறை இருளில் எழுதும் இடத்தை அடையாளமாகக்
கொண்டு, சிகரெட் பாக்கெட் அட்டையில் பேனாவில் ஓடவிட்ட வரிகளை ஹோட்டல் அறைக்குப் போய்
ஒன்று சேர்த்துத் திருத்திச் செப்பம் செய்து கீழ்க்கண்டவாறு எழுதி
ஆயிரம் விண்மீன் அலங்காரம் - கீழே
ஆழிமழைக்கடல் நிலத்தோரம்
பூமியில் இன்னும் விடியவில்லை - மூடும்
பொய்யிருள் இன்னும் மடியவில்லை
காம நிலாக்கதிர் சாயவில்லை - அந்தக்
கடற்கரை அலைகள் ஓயவில்லை
சாமக்கோழியும் கூவவில்லை - நிழற்
சாயை நாயகன் வானிலில்லை
தூமப் புகையிருள் அகலவில்லை - அந்தச்
சுடர்மணித் தேரினும் நகரவில்லை
நாமும் இருளில் தவிக்கின்றோம் - இனி
நாளை விடிவென நினைக்கின்றோம்.
என்று தெளிவாக எழுதி வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்த
போது, எதிரே கழுகுக்கு மூக்கில் வேர்த்தாற்போல் வேர்த்தோ என்னவோ படத்தயாரிப்பாளர் வந்து
நின்றார்.
"என்ன, ஒரு பாட்டாவது முடிஞ்சுதா, இல்லையா?"
"முடிந்துவிட்டது, இதோ எடுத்துக்கொண்டு
போகலாம்..." என்று எழுதி வைத்ததை எடுத்து அவரிடம் நீட்டினார் கவி நவபாரதி.
மகிழ்ச்சியோடு அதைக் கையில் வாங்கிக்கொண்ட
படத்தயாரிப்பாளர், "இந்த ஹோட்டல் அறைக்கு எப்போதுமே ஒரு நல்ல ராசி உண்டு. நான்
அப்பவே சொன்னேனா இல்லையா? இங்கே தங்கினால் பத்து நாளிலே எழுதற ஒரு பாட்டை நாலு நாளிலேயே
எழுதிட முடியும்னு... என் யோசனையைக் கேட்டது எவ்வளவு நல்லதாயிற்றுப் பார்த்தீர்களா?"
என்று கவிஞரிடம் பெருமையடித்துக் கொண்டார்.
"இந்தப் பாட்டில் ஓர் அட்சரம்கூட நீர்
ஏற்பாடு செய்து கொடுத்த இந்த ஹோட்டல் அறையில் பிறக்கவில்லை. காலில் செருப்பில்லாமல்,
மேலே சட்டையில்லாமல், எழுதச் சரியான காகிதமில்லாமல் - மெரினா சாலையில் பாமரனாக அலைந்த
போது நள்ளிரவில் உழைப்பாளர் சிலைக்கு அப்பால் முடைநாற்றமும், உப்பு நீர் வாடையும் ஊறிய
புதர் ஒன்றிலேதான் இந்தப் பாட்டும் ஓர் அனாதைப் பெண்ணின் குழந்தையும் சுகப்பிரசவமாயிற்று...
தெரிந்து கொள்ளும்..." என்று அவருக்குப் பதில் சொல்ல நினைத்து, அந்தப் பதிலைப்
பொறுமையாகக் கேட்கக்கூட அவகாசமில்லாத அவரது நிலை நினைவு வந்ததன் காரணமாய் பேசாமல் விட்டுவிட்டான்
நவபாரதி.
பாட்டை முடித்து அவரிடம் கொடுத்த வேளையில்,
"என்னாத்தைச் சொல்றது? அவ பண்ணின புண்ணியத்திலே கஷ்டப்படாமச் சொகமா பெத்துப்பிட்டா"
என்று மெரினாவில் அந்தச் செம்படவப் பெண் சிரித்துக்கொண்டே கூறிய சொற்கள்தான் நவபாரதிக்கு
நினைவு வந்தன. ஒரு தாயின் பரிபூரணமான சந்தோஷம், சுகமாகப் பிரசவித்த ஒரு தாயின் களிப்பு
- நன்றாகக் கவி எழுதிமுடித்த ஒரு கவிஞனுக்கும் இருக்கிறது என்ற ஆத்மானுபவமாகிய தன்
சொந்தப் பெருமையை அவன் நினைத்து நினைத்து அனுபவித்து மகிழ்ந்துகொண்டிருந்தான்.
இந்த அபூர்வமான அனுபவத்துக்கு விலைதான் ஏது? மற்றொன்று இணைதான் ஏது?
====================================================================================




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!