12.11.26

நிலவுதான் நான் நீயாவது நம்பு!

இந்த ஓய்வு பெறும் நிகழ்வு பற்றி மனசாட்சியத்தில் வந்தபோது எனக்கு இரண்டு  மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இடையில் சொல்லி இருக்கும் பழசையும் சேர்த்தால் நான்கு!

முதலாவது சம்பவம்.  

அன்று அலுவலகத்தில் ஒரு அதிகாரிக்கு மாறுதல் ஆணை வந்தது.  ஸ்டேஷன் சீனியரான  அவரை  உடனே  ரிலீவ் செய்து சென்னையிலேயே வேறோர் அலுவலகத்தில்  மாற்று இடத்தில் மதியத்துக்குள் அவர் பணியில் இணைந்து அப்படி அவர் இணைந்துவிட்ட அறிக்கையை அன்றே தலைமை அலுவலகத்துக்கு அனுப்பச் சொல்லி ஆணை.

இதை எழுதும்போது எனக்கு என் நெருங்கிய உறவொன்றுக்கு இதே மாதிரி அரசுப்பணியில்  நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

சில ஆணைகளுக்கோ சில சிபாரிசுகளுக்கோ அடிபணிய மறுத்தால் தலைமை அலுவலகத்துக்கு எவ்வளவு கோபம் வரும் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம்.  தலைமை அலுவலகம் ஒன்றும் முற்றிலும் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டதில்லை என்றாலும், அங்கு அவர்களுக்கு இருந்த சுமைகளும் அழுத்தங்களும் வேற லெவல்.  அங்கும் சில நியாயமான, நேர்மையான அதிகாரிகள் இருப்பார்கள்தான்.  ஆனால் பெரும்பாலும் அவர்கள் கைகள் கட்டப்பட்டிருக்கும்.

சில அரசியல்வாதிகளின் தலையீடு, அவர்கள் சொல்லும் வேலையை, செய்யும் சிபாரிசை ஏற்க வேண்டும். அதற்கு ஆணை அனுப்பினால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் இவர் போன்ற அதிகாரி நான் நேர்மையாக்கும் ஆவாக்கும் ஊவாக்கும் தஸ்ஸாக்கும் புஸ்ஸாக்கும் என்று முரண்டு பிடித்தால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களுக்கோ கோபம் வரும்.  அதை தலைமை அலுவலகத்தின் மீது காண்பிப்பார்கள்.  அந்தச் சூடு தாங்காமல் அவர்கள் இங்கே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியரை பந்தாடுவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் இவருக்கு நாகர்கோவிலுக்கு மாறுதல் செய்து ஆணை வந்தது.  உள்ளூரிலேயே இரண்டு மூன்று இடங்கள் இருந்தும், அருகிலேயே இருக்கும் ஊர்களிலும் வேகன்ஸிகள் இருந்தாலும் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு மாறுதல் செய்ததில் தலைமையின் கோபத்தின் வீச்சு தெரிந்தது.  மாலை வரை கூட இல்லாமல் உடனடியாக அவரை ரிலீவ் செய்யச் சொல்லி ஆணை.

அவர் இருந்த நாற்காலிக்கு மதிப்பு அதிகம்.  வருமானம் வரும்.  இவர் வாங்க மாட்டேன் என்று விட்டு விடுவதால் பயனடையும் மற்றவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  நீங்கள் பணம் வாங்குவது பற்றி கவலையில்லை.  என் பெயரைச் சொல்லி வாங்கக்கூடாது   என்று இவர் சொல்லி இருந்தார்.  வேறு எப்படி வாங்குவது?   இந்த விஷயமும் மேலிடத்தின் சில காதுகளுக்கு சென்றிருந்தது. 

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது என்றால் என்ன என்று தெரியுமா?

இவரை ரிலீவ் செய்யும் முன்னரே இவருக்கு பதிலாக அங்கே பணியில் இணையவேண்டிய K P சந்தானபாண்டியன் (பெயரை மாற்றுவதுதானே மரபு) பாலியஸ்டர் வேஷ்டி வெள்ளைச் சட்டையணிந்து முகத்தில் அரை இன்ச் பவுடருடன் வந்து விட்டார்.

விவரம் புரிந்திருந்தும் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் பீறிட்டது.  எங்காவது கொட்ட வேண்டுமே...

கடுப்பான இவர் அந்த அலுவலகத்தின் சுப்ரீம் அதிகாரியிடம் சென்று கன்னாபின்னா என்று கத்தி "என்னை இப்போதே ரிலீவ் செய்து விடுங்கள்.  இல்லா விட்டால் நான் இந்த இன்ஸ்டிடியூஷனை Rape செய்து விடுவேன்" என்று கத்தி விட்டு வந்தார்.  அந்த சுப்ரீமுக்கு இவரைத் தெரியும் என்பதால் இவர் கோபம் புரிந்தது.  அவர் அனுதாபம்தான் பட்டார்.  "  என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று இவரிடமே சொல்லி அனுப்பினார்.

இப்போது ஆரம்பித்த விஷயத்துக்கு வருகிறேன்.

=======================================================================================

மனசாட்சியம் 41
K G Y Raman 

" சாதாரணர் சாதனைகள் "

வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் யாரோ ஒருவரின் சாதனைகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. சாதனை என்றால் ஏதோ கின்னஸ் புக் சாதனை அல்லது ஒலிம்பிக் மெடல் வாங்கி சாதனை என்று அல்ல. ஏதோ ஒரு விஷயத்தில் மற்றவரைக் காட்டிலும் ஒரு விசேஷ தேர்ச்சி இருப்பவர்களை அவ்வப்போது பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

மற்றவருடைய திறமையைக் கவனிப்பது என்பது எனக்கு ரொம்பவும் லேட் ஆகத்தான் வந்தது‌  என்று இப்போது யோசிக்கும் போதுதெரிகிறது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான் முதல் சாதனையாளர் என் கண்ணில் பட்டார். பாலசுப்பிரமணியம் என் வகுப்பு மாணவன்.   அவனிடம் இரண்டு திறமைகள் இருந்தன. ஒன்று அப்போது பிரபலமாகத் தொடங்கி இருந்த பாரதியார் பாட்டுகளை கணீர் என்ற குரலில் பாடுவது . இதனால் அவனுக்கு காலை பள்ளி பிராத்தனை நேரத்தில் அடிக்கடி பாடும் வாய்ப்பு வரும்.  அவனுடைய இரண்டாவது திறமை நேதாஜி படம் வரைவது.  ஆம் !  நேதாஜி படம் வரைவது தான். அவன் வேறு படம் வரைந்து நான் பார்த்ததில்லை.  ஆனால் சிறிதும் பெரிதுமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்தை பல அளவுகளில் எல்லா நோட்டு புத்தகங்களிலும் போட்டு இருப்பான். கருப்பு பென்சிலால்  போடப்பட்ட அந்த படம் கிட்டத்தட்ட ஒரு போட்டோ போல இருக்கும். 

ஏழாவது எட்டாவது வகுப்புகளில் மாணவர் சாதனையாளர்கள் யாரும் இல்லை. மாறாக இரண்டு மணியான ஆசிரியர்கள் சாதித்துக் காட்டினார்கள். ஏழாம் வகுப்பில் ஆசிரியர் தங்கமான மனிதர். மாணவர்கள் பேரில் மாறாக அன்பு பூண்டவர். எங்களை அவர் வீட்டுக்கு அழைத்து போய் உட்கார வைத்து கதைகள் படித்து காட்டி தின்பண்டங்கள் கொடுத்து அவ்வப்போது உபசரிப்பது அவர் வழக்கம். எட்டாம் வகுப்பு ஆசிரியர் மனிதாபிமானம் மிக்கவர். தெருவில் போகிற பிச்சைக் காரர்களுக்கு மருந்து கொடுத்து உதவியவர். 

அந்த சமயம் என் தகப்பனார் போலீஸ்காரர்களுக்கு என்று பிரத்தியேகமாக இருந்த கூட்டுறவு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கு திருமலை அவன்தான் என்று ஒரு சேல்ஸ்மேன். புளி மிளகாய் வற்றல் ரவை எதுவானாலும் எவ்வளவு பொட்டலம் கட்ட வேண்டுமோ அதை மிகத் துல்லியமாக எடுத்து வேகமாக தராசில் போட்டு சரி பார்த்து பொட்டலம் கட்ட ஆரம்பித்து விடுவார். நிறுத்து சரி பார்ப்பது ஒரு சம்பிரதாயத்துக்காகத் தான் என்கிற மாதிரி அவர் எடுத்துப் போட்டது அவ்வளவு சரியாக இருக்கும்.  வேகம் வேகமாக அவர் நீளமான பில்லைப் பார்த்து சாமான்களை பொட்டலம்  கட்டிக் கொடுப்பது கண்கொள்ளாக் காட்சி. பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

இப்போது போல் கிரிக்கெட் 1951 சமயம் அவ்வளவு பிரசித்தம் அல்ல காரணம் தொலைக்காட்சி வருவதற்கு இன்னும் 20 வருஷங்களுக்கு மேல் பாக்கியிருந்தது. கிரிக்கெட் அபிமானிகள் ரேடியோ பக்கம் உட்கார்ந்து கொண்டு கமெண்டரி கேட்ட வண்ணம் இருப்பார்கள். அவர்களில் பலரும் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள் அல்ல. என் நண்பன் குமாரசாமி ரேடியோவில் வருவது போலவே ஆங்கிலத்தில் கிரிக்கெட் கமெண்டரியை அப்படியே சொல்வதில் சமர்த்தன். ஆட்டத்தின் போக்கு எல்லாம் அவனுடைய கற்பனை தான். பெரியவர்கள் பலரும் கூட அவனை " குமாரு கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்லுடா கேட்கலாம் " என்று கேட்டு ரசிப்பார்கள். 

பத்தாம் வகுப்பு ட்ராயிங் மாஸ்டர் ஒருபுறம் மஞ்சள் மற்றும் மறுபுறம் பிங்க் வண்ணம் கொண்ட ஆர்ட் பேப்பரில் பச்சை மை பயன்படுத்தி திருமண வாழ்த்து வரவேற்பு பத்திரம் இப்படியாக அச்சிட்டது போலவே எழுதிக் கொடுப்பார். விதவிதமான எழுத்துக்களை பயன்படுத்தி விதவிதமான சைஸ் பல வண்ணங்களில் அவர் தயாரிக்கும் ஆர்ட்  பேப்பர் பத்திரங்கள் பிரமாதமாக இருக்கும். அதைப்போட்டு எங்களுக்கு பெருமையோடு காண்பித்த பின் பத்திரப்படுத்தி வைப்பார்.  இன்னொரு டிராயிங் மாஸ்டர் இயற்கை காட்சிகளையும் பூ பழங்களையும் வரைவதில் சமர்த்தர். அந்த காலத்தில் சினிமா தியேட்டரில் ஸ்லைடு போட்டு விளம்பரங்கள் செய்வார்கள் அல்லவா அந்த ஸ்லைடுகளை எழுதி தரும் உப தொழிலையும் செய்து வந்தார்.  

ஆண்டு தோறும் மாணவர் கழகம் நடத்தும் தமிழ்க் கட்டுரை, தமிழ்க் கையெழுத்துப் போட்டிகளில் பரிசு பெறுவது பரசுராமன் என்ற எனது வகுப்பு மாணவனின் பொழுதுபோக்கு. 

அதே வருடம் பளிச் என்று திருமண் தரித்து முன் தலைமுடி மழித்து சடை  போட்டு எஸ் கட்டு கட்டிக் கொண்டு வரும் பட்டாப்பாவின் தைரியம் கூட ஒரு சாதனைதான். தோழர்கள் என்ன தான் கிண்டல் செய்தாலும் சடை பிடித்து இழுத்தாலும் கூட சட்டை செய்ய மாட்டான். 

என் இன்னொரு கிளாஸ்மேட் தமிழ் கணக்கு இந்த இரண்டு பாடங்களில் மட்டும் எந்தப் பரீட்சை ஆனாலும் முதலாவதாக வருவான். வேறு பாடங்களில் சராசரி மார்க்கு தான். 

பள்ளி படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்தாயிற்று இங்கே வந்து பார்த்த சாதனையாளர்களை இன்னொரு சமயம் விவரிக்கிறேன்.


===================================================================================

முள்ளும் மலரும் கிளைமேக்ஸ்.  காதல் வந்ததும் உறவுகள் மறந்து போகும் என்பது போல ஷோபா அண்ணனை கைவிட்டு ஊராரின் மற்றும் அண்ணியின் ஆதரவுடன் காதலன் சரத்பாபுவை மணம் செய்ய நடக்கிறார்.   நான் ரசித்த காட்சி.
 

===========================================================================================


நிலா கவிதைகள் 


சென்று வருகிறேன் மலரே 
தகிக்கும் சூரியனிடமிருந்து 
தற்காத்து உள்ளே இரு 
மாலை சந்திப்போம் மறுபடி 

உள்ளே போய்விடு 
யார் நிலவென 
சந்தேகம் வருகிறது 
இவர்களுக்கு 

வெளிச்சம் வரும் முன்னே 
வேகமாக 
சென்றிருக்க வேண்டும் நான் 
மதியிழந்து மயங்கி நின்றதால்
ஒளியிழந்து நிற்கிறேன்.
நிலவுதான் நான் 
நீயாவது நம்பு!

====================================================================================

ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் 1980 ல் எடுக்கப்பட்ட படம் காளி.  ரஜினியுடன் தமிழில் விஜயகுமாரும்,தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்தார்கள்.  படம் 50 நாட்கள் கூட ஓடவில்லை.  

படப்பிடிப்பின்போது தீவிபத்தொன்று ஏற்பட்டு சில சண்டைக் கலைஞர்களும் குதிரைகளும் உயிரிழந்தது செய்தியானது.  மகேந்திரனின் கதையை ஐ வி சசி படமாக்கினார்.  ஒளிப்பதிவு அசோக்குமார். 

இன்று பகிரப்படும் இரண்டு பாடல்களும் கண்ணதாசன் பாடல்கள்.  இசை இளையராஜா. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இதில் குழந்தைகளாக நடித்த இரண்டு பேர் ஒன்று ஹாஜா ஷெரீப்.  இன்னொருவர் பாடகி அனுராதா ஸ்ரீராம்.

முதல் பாடல் மலேஷியா வாசுதேவன் குரலில் அடி ஆடு பூங்கொடியே..


======================================================================================



ராசையா படத் தயாரிப்பாளர் சிவா பேட்டியிலிருந்து..

ராசய்யா பாடல்களை பாம்பேயில் ரெகார்ட் பண்ணலாம்னு சொல்லிட்டார் இளையராஜா.  ஐ நெவர் செட் நோ டு இளையராஜா.  இங்கே பண்ணினா அஞ்சு ஸாங்குக்கு அஞ்சு லட்சம் ஆகும்.  அங்க பண்ணினா ஏற்கனவே சொன்ன மாதிரி அஞ்சு ஸாங்குக்கு 75 லட்சம் ஆகும்.  ஓகேன்னுட்டேன். 

பாம்பேல அப்போ ரொம்பபேமஸா இருந்த லீலா பேலஸ்ல ராஜா சாருக்கு ரூம் போட்டேன்.  மற்ற மியூசியன்ஸுக்கேல்லாம் சாதாரண ஹோட்டல்.   ஸான்ஸ் மாதிரி 3500 ரூபாய்க்கு ரூம் போட்டேன்.  பாலு சாருக்கு ரூம் போடலாம்னா பேசிக் ரூமே போடுங்கன்னு சொன்னார் அவர்.   நான்போய் எவ்வளவுன்னு கேட்டா 10,000 னாங்க..  பத்தாயிரமா,  ஏழு நாளுக்கு  70,000...  நம்ம ஊர்ல ஸ்டார் ஹோட்டல்ல 5000 ரூபாய்.  சரின்னு போட்டேன்.  

ரெக்கார்டிங்குக்கு முதல் நாள் ராஜா சார் வந்துட்டார்.  எனக்கு மலபார்ல புக் பண்ணுன்னுட்டார்.  எனக்கு ஷாக்.  அங்க ஒரு நாளைக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய்.  என்ன இப்படிக் பண்ணிட்டாரேன்னு மனசுக்குள்ள வருத்தம், அதிர்ச்சி..  வெளில காட்டிக்கல...   சரின்னுட்டேன்.  

மறுநாள் இவர் இருந்த மலபார் சூட் போனேன்.  திறந்தா ப்ரம்மாண்டமா இருக்கு.  பெரிய ஹால், உள்ளேயே இரண்டு மூன்று ரூம், டைனிங் ஹால், கிச்சன்..  அலமாரி பூரா பழங்கள், ட்ரை ப்ரூட்ஸ்..  ஆர்ப்பாட்டமான இருக்கு.  இவர் எங்கேன்னு தேடினா நான் இங்க இருக்கேன்னு குரல்  வருது.  நிமிர்ந்து பார்த்தா மாடில பால்கனில் இருக்கார்.  போய்ப் பார்க்கிறேன், பால்கனில ஒரு ஓரமா ஆர்மோனியப்பெட்டியோட தரைல உட்கார்த்திருக்கார்.  அவிச்ச கடலை சாப்பிட்டுக்கிட்டிருக்கார்.  அலமாரி முழுக்க ட்ரை ப்ரூட்ஸா அடுக்கி இருக்கான்..  இவர் ரோடோரத்தில் விக்கற அவிச்ச கடலை வாங்கி ஒவ்வொண்ணா எடுத்து தரைல தட்டித்தட்டி உடைச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்கார்.

"என்ன பார்க்கறே?  எப்படி இருக்கு?" ன்னார்.

"நல்லா இருக்கு ஸார்... ப்ரம்மாண்டமா இருக்கு"ன்னேன்.

"எவளோ இதுக்கு ரென்ட் தெரியுமா?"

"கேட்டேன் ஸார்..  கீழே ரிஸப்ஷன்ல கேட்டேன்.  ஒரு நாளைக்கு 35,000 ரூவா ப்ளஸ் டாக்ஸ்.."

"பயப்படாதய்ய்யா..  நீ அவ்வளவு தரவேணாம்..  அங்க போட்டிருந்த 10,000 ரூபாய் கொடு போதும்"னார்.  எனக்கு மூச்சு வந்தது.  அப்புறம் தெரிகிறது அந்த மலபார் ஹோட்டல் ஓனர் ஒரு மலையாளி.  முதல் நாள் இளையராஜா வந்தததும் யானையெல்லாம் வைத்து, செண்டை மேளம் அடித்து வரவேற்று, 'அதெப்படி இளையராஜா என் ஹோட்டலில் ரூம் எடுக்கலாம்?"னு கேட்டு இந்த சூட் கொடுத்திருந்திருக்கார்.  காசு வாங்கக் கூடாதுன்னும் சொல்லி இருந்தார்னு கேள்விப்பட்டேன்.

ராசய்யா படத்தில் எஸ் பி  பி தான் பாடவேண்டுமென்று பிடிவாதமாக இருந்தோம்.  அவருக்கு அப்போது தொண்டை சரியில்லாமல்போய் மாதக் கணக்கில் ஓய்வில் இருந்தார்.  எப்படியோ அவரை பெங்களூர் வரவைத்து ஒரு ஹோட்டலில் தங்க வைத்தோம்.  

பாலு சார் மாடிப்படியில் இறங்கி வர்றார்.  பெரிய படிக்கட்டு.  ராஜமஹால் மாதிரி பெரிய படிக்கட்டு.  ரொம்ப இருந்தது.  திடீரென்று பாலு சாருக்கு ஸ்லிப் ஆயிடுச்சு.  உருண்டு வர்றார்.  

நான் ஓடிப்போய் பிடிக்கறதுக்குள்ள கடைசிப் படிக்கே வந்து விட்டார்.  பெரிய உருவம்.  ரொம்ப குண்டு.  பயமாப்போச்சு.  ஒரு ரசிகனா மட்டுமில்ல..  எங்கள் படத்துக்கு பாட வந்திருக்கிறார்..  ஏதாவது ஆச்சுன்னா..  

அவர் எழுந்து ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு தோளைத் தட்டிகிட்டு கிளம்பிட்டார்.  எவ்வளவு  வலி இருக்கும்?  அவ்வளவு வலியோட எப்படி பாடுவார்னு கவலை எங்களுக்கு.  ஆனால் அழகா பாடி கொடுத்துட்டார்.  

காதல் வானிலே காதல் வானிலேன்னு பாட்டு கேட்டிருப்பீங்க..  அப்புறம் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாட்டு.  இன்னொரு பாட்டு பாடச் சொன்னதும் 'அந்தப் பாட்டு வேற குரல்ல என் காதுல ஒலிக்குதே'ன்னார்.   ஆமாம் சார் மனோ பாடி  இருக்கார். நீங்க பாடணும்னு எங்களுக்கு ஆசைன்னோம்.  

உங்களுக்கு ஆசை இருக்கலாம்.  எனக்கு இல்லை.  மனோ சுருதி சுத்தமா அழகா பாடி இருக்கான்..  அதுவே இருக்கட்டும் வளர்ந்து வர்ற பையன்னார்.  அதுதான் எஸ் பி பி.  யாரையும் கெடுக்க மாட்டார், புண்படுத்த மாட்டார்.  ஊரு விட்டு ஊர் வந்து பாடினா டபுள் பேமெண்ட்.  காசுக்கெல்லாம் ஆசைப்பட மாட்டார்.  கச்சேரில கூட பாதிக்கு பணம் கொடுத்து மீதி பணம் தராம ஏமாத்துவாங்க.. கேட்கவே மாட்டார்.  திரை வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த மரணம் என்றால் பாலு சார் மரணம்தான்.  கண்ணதாசன் சொன்னது போல கடவுளை தண்டிக்க என்ன வழின்னுதான் தோணும்.  பாலு ஸார் பத்தி யாரும் குறை சொல்லி கேட்டதில்லை.  குறை சொல்லா முடியாத - குறைகள் இல்லாத மாமனிதர் அவர்.

=======================================================================================

வல்லிம்மாவின் ஒரு பழைய பேஸ்புக் பதிவு..  அவர் தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் ஒன்றை எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

#Sriram thank you.பணியிலிருந்து ஒய்வு பெறும்போது நிறையப் பேர்களுக்கு 'தான் யாருக்கும் இனி உபயோகமில்லையோ' என்று தோன்றும். தன்னுடைய முக்கியத்துவம் சற்றுக் குறைவதாகத் தோன்றும். சில சமயம் உண்மையாகவும் இருக்கலாம்.
சில வருடங்கள் முன்பு வரை நான் வீட்டில் என்ன பிரச்னை வந்தாலும் என் அப்பாவிடம் யோசனை கேட்பது போல அவரிடம் சொல்வேன். சில சமயம் அவருக்கு அது அவசியமில்லை, சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரையும் அதில் சேர்த்துக் கொண்டு அவருடைய அனுபவ அறிவின் யோசனையைக் கேட்பேன். இதை வைத்துதான் நான் எங்கள் ப்ளாக்கில் 'சாயங்காலங்கள்”என்கிற கதையையும் எழுதி இருந்தேன்.
தான் யாருக்கும் தேவை இல்லாதவன் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றி விடக் கூடாது என்கிற எண்ணம் காரணமாகவே அப்படிச் செய்வதுண்டு. இப்போது அவர் யார் பேச்சையும் கிரகித்துக் கொள்ளும் நிலையில் இல்லை என்பது ஒருபுறம் வேதனை. இப்போது அவருக்கு 84 வயதாகிறது.
நீங்கள் சொல்வது போல வீட்டின் நிர்வாகமே தன் கையில் இருந்த காலம் போய், எல்லாவற்றுக்கும் தான் முடிவெடுக்கும் நிலையிலிருந்து நடப்பவற்றை ஒரு பார்வையாளராகப் பார்ப்பது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. எனக்கும் நாளை அப்படி ஒரு நேரம் வரலாம். இந்த நிலையில் உங்கள் அம்மா, மாமியார் அப்போது இருந்திருக்கக் கூடும். இல்லை, நீங்கள் அவர்களைக் கேட்டுக் கேட்டே அந்தக் காலத்தில் முடிவுகளை எடுத்திருக்கக் கூடும். உங்கள் அனுபவங்கள் எனக்குப் பாடம். நான் தயாராக இருந்து கொள்கிறேன்!

===========================================================================================\
\
வைதரணி கோ தானம் 

தமிழ்வேதா.com 

கருடபுராணத்தின்படி, மரணத்திற்குப் பிறகு பாவம் செய்த ஆன்மாக்கள் கடக்க வேண்டிய பயங்கரமான நதி வைதரணி (Vaitarani River) ஆகும். இது எமலோகத்தில் உள்ளது. ரத்தம், சீழ், எலும்புக் கூடுகள் நிறைந்த இந்த நதியை கடப்பது மிகவும் கஷ்டமானது, ஆனால் புண்ணியம் செய்தவர்கள் எளிதாக கடப்பார்கள் 

வைதரணி நதி பற்றிய முக்கிய விவரங்கள்:

பயங்கரமான தன்மை: பாவம் செய்த ஆன்மாக்கள் (கொலை, கொள்ளை, துரோகம் செய்தவர்கள்) இந்த நதியின் அசுத்த நீரில் மூழ்கித் துன்புறுவார்கள். எம கிங்கரர்கள் பாபிகளை இதில் வீசுவார்கள்.

பாவத்தின் பலன்: நதி முழுவதும் மலம், மூத்திரம், ரத்தம் மற்றும் சீழ் நிறைந்து, கொடிய கிருமிகளுடன் காணப்படும்.

கஷ்டங்கள்: நதியில் தீயில் வெந்த நிலையில் ஆத்மாக்கள் தவிக்க, அலைகள் அவர்களைத் தாக்கும்.

எளிதாக கடப்பது எப்படி?

பூமியில் வாழ்நாளில் பசு தானம் (கோதானம்) செய்தவர்கள் இந்த நதியை எளிதாகக் கடப்பார்கள்.

பாவங்கள் செய்யாத, நல்ல ஆத்மாக்களுக்கு இந்த நதி புனித நதியாகத் தோன்றும்.

தான தர்மங்கள், நற்காரியங்கள் செய்த ஆன்மாக்கள் எமதூதர்களால் படகில் பத்திரமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் 

வைதரணி நதி பாவத்தின் தண்டனையையும், கர்ம வினைகளையும் உணர்த்தும் ஒரு குறியீடாக கருடபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

========================================================================================

கண்ணதாசன் பற்றி சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை...

அதிகாலை நேரம். அம்மா ஒருத்தி பெண்ணிடம், ‘அடியே! பொழுது விடிஞ்சாச்சி. கண்ணைத் திறடி’ என்கிறாள்.

கைகளால் கண்களை மூடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணோ, ‘ம்ஹூம். உயிரே போனாலும் கைகளைத் திறந்து காட்ட மாட்டேன். நேற்றிரவு என் காதலன் (பாண்டிய மன்னன்) கண்ணுக்குள் புகுந்துவிட்டான். கைகளைத் திறந்தால் அவன் ஓடிவிடுவான். எப்படி கண்ணைத் திறப்பதாம்?’ என்கிறாள்.

முத்தொள்ளாயிரத்தில் இப்படி ஒரு முத்தான பாடல் இருக்கிறது.

‘தளையவிழும் பூங்கோதை தாயரே ஆவி /களையினும் என் கைதிறந்து காட்டேன்- வளைகொடுபோம் / வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் / தென்கண் புகுந்தான் இரா’ என்பது அந்தப் பாடல்.

நம் திருவள்ளுவர் வேறு சும்மா இருக்கவில்லை.

அவர் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? அதனால், ‘என் காதலர் கண்ணை விட்டு போக மாட்டார். கண்ணுக்குள்ளேயே இருப்பார். கண்களை இமைத்தால் அவருக்கு எந்த துன்பமும் ஏற்படாது. அவர் அந்த அளவுக்கு நுட்பமானவர்’ என்று ஓர் இளம்பெண் கூறுவதுபோல குறள் எழுதிவிட்டார்.

‘கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் / நுண்ணியர்எங் காதலவர்’ என்பது அந்தக் குறள்.

கம்பர் வேறு. கம்பராமாயணத்தில் ராமன் திருவீதியுலா வரும்போது, ராமனின் அழகைக் கண்ட பெண்ணொருத்தி, ராமன் தன் நெஞ்சுக்குள் வந்து புகுந்ததால், அவன் தப்பித்துப் போகாத வண்ணம் கப்பென அவனைப் பிடித்துக் கண்ணுக்குள் போட்டுக் கொண்டதாகச் சொல்கிறாள்.

அந்த கம்பராமாயணப் பாடல்…

‘பைங் கருங்கூந்தல், செவ்வாய், வாள்நுதல், ஒருத்தி உள்ளம்

நெக்கனள் உருகுகின்றாள், நெஞ்சிடை வஞ்சன் வந்து

புக்கனன், போகா வண்ணம் கண் எனும் புலங்கொள் வாயில்

சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்’

இது போதாதா? காதலனைக் கண்ணுக்குள் அடைக்கும் இந்த இனிமையான இலக்கியக்கூறு ஏராளமான தமிழ்த் திரைப்பாடல்களில் இடம்பிடித்துள்ளது.

நமது கவியரசர் முத்தொள்ளாயிரப் பாடலையும், குறளையும், கம்ப ராமாயணத்தையும் அடியொற்றி மூன்றெழுத்து (1968) என்ற திரைப்படத்தில் அற்புதமான ஒரு பாடலை வரைந்திருப்பார்.

அந்தப் பாடல், ‘காதலன் வந்தான் கண்வழி சென்றான். கண்களை மூடு பைங்கிளியே’ என்ற பாடல்.

கவியரசர் அதோடு விடவில்லை.

கைராசி (1960) என்ற படத்திலும் கவியரசர் இதே இலக்கிய நுட்பத்தைக் கையாண்டிருப்பார்.

அந்தப் படத்தில், ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்’ என்ற ஒரு திரைப்பாடலிலும் கவியரசரின் கைவண்ணம் மின்னும். மிளிரும்.

அதில், ‘கண்திறந்து காத்திருந்தேன் கட்டழகர் குடி புகுந்தார். கண் திறந்தால் போய்விடுவார். கண் மூடிக் காத்திருப்பேன்’ என கவியரசர் கலகலக்க வைத்திருப்பார்.

======================================================================


நீங்கள் கிரிக்கெட்டில் சூரப்புலியா? அப்படியானால் இதற்கு விடை கூறுங்கள் பார்க்கலாம். ஒரு முறை பாட்டினால் பந்தை அடித்து விட்டு அதிகபட்சம் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியும்? (குறிப்பு : பத்து பவுண்டரி யைத் தாண்டவில்லை.)

விடை: 46 ரன்கள். 

எப்படி?

Gar ஆப்பிரிக்காலில் ஒரு சர்க்கஸ் சிங்கம் தப்பி வந்து கிரிக்கெட் பவுண்டரி அருகே உட்கார்ந்து விட்டது.

பந்தடிப்பவர் இதைக் கவனிக்காமல் ஒரு முறை பாட்டைச் சுழற்றவும். பந்து சிங்கத்தின் அருகே போய் விழுந்தது. அது பவுண்டரியைத் தாண்டாததால், ரன் எடுப்பவர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர். சிங்கத்தருகே சென்று யார் பந்தை எடுப்பது?

நல்லவேளை, சர்க்கஸ் பயிற்சயாளர் வந்து சிங்கத்தை ஓட்டிச் சென்றார். அதுவரை ஓடிக் கொண்டே எடுத்த ரன்கள் மொத்தம் நாற்பத்தாறு!

- தினமணி கதிரில் வந்த துணுக்கு.

==========================================================================

காளி படத்திலிருந்து இன்னொரு பாடல்.  S P பாலசுப்ரமணியம் குரலில் கண்ணதாசன் பாடல்.  அனாவசிய சேஷ்டைகளுடன் காட்சியில் விஜயகுமார்.  நீங்கள் தலைவர் குரலை மட்டும் கேளுங்கள்!

===========================================================================




தமாஷ்!

விதி கொடிது!

'விதி கொடிது' என்ற படத்தை நாங்கள் எடுப்பதைக் கைவிடுகி றோம். சகோதரப் படக் கம்பெனி ஒன்று அதை எடுப்பதே காரணம், யார் நஷ்டமடைந்தால் என்ன?

நாட்டப் பெண்

"அம்மா! தாத்தாவுக்கு எண்பது வயதாகிறது. எதற்குத் தினமும் இப் படி நாலுமைல் தூரம் நடக்கிறார்? 

"சாப்பிடுவது ஜீரணமாகத்தான். சரியாக அரைப்படி சாப்பிடுகிறாரல்லவா?"

வெண்ணெயெலி

....ஹலோ! டாக்டர் வீடா? நீங்கள் சொன்னபடி குழந்தையின் உதட்டு வெடிப்புக்கு நேற்று ராத்திரி வெண்ணெய் தடவித் தொலைத்தேன். தயவு செய்து எலிக் கடிக்கு ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டு உடனே வாருங்கள்!

கிரகாதகன்!

ஓர் அமெரிக்க ஒருவ விஞ்ஞானி, ரஷிய விஞ்ஞானி ஒருவரைச் சந்தித்தார். நெடுநேரம் இருவரும் பேசிக்கொண் இருந்துவிட்டுப் பிரிந்தார்கள். அடுத்த வாரம் மறுபடி சந்திப்போமா?" என்றார் அமெரிக்க விஞ்ஞானி.

"சந்திக்க நேரம் இருக்காது என்று நினைக்கிறேன். நாளைக்குச் சந்திரனுக்குப் போகிறேன். நாளை மறுநாள். அங்கிருந்து செவ்வாய் கிரகம்.  செவ்வாயில் சாயந்திரம் கிளம்பி சனி கிரகத்துக்குப் போய்விட்டு...  முடிந்தால் வெள்ளியையும் எட்டிப் பார்த்து விட்டு...  ம்ம்ம்..  எங்கே இருக்கப் போகிறது நேரம்?" என்பது பதில்.  

மாவ்மாவ்

ரயில்வே மந்திரி அவர்களுக்குத் தங்கள் இலாகாவால் பாதிக்கப்பட்ட ஓர் நல்ல ஆத்மா
புதிதாகப் போடப்படும் ரயில்பாதை எங்கள் ஊர் வழியாக செல்லப் போவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது சர்க்கார் எனக்குத் தனிபட்ட முறையில் இழைக்கும் அநியாயம். சரியான பிரயாண வசதி இல்லாதிருக்கும்போதே என் மாமனார் குடும்பத்தினர் மாதத்தில் நாலு நாள் இங்கே 'காம்ப்' அடிக்க வந்துவிடுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவன்.

அசாத்தியக் கூறு

அசாத்திய அவநம்பிக்கை பிடித்க காதலியிடம் காதலன் உறுதிகூறினான்: "உன்னைத் தவிர வேறு பெண்ணையோ ஆணையோநான் மணக்கமாட்டேன்."

லட்சியக் கனவு

சாப்பிட வருபவர் ஓட் டல்காரரிடம் சொன்னார்"நேற்று ஒரு கனவு கண் டேன் பாருங்கள்." 

"என்ன கனவு?"

"நீங்கள் அடுக்கி வைத்திருக்கிற இவ்வளவு ஸ்வீட்டுகளும் விற்றுப் போய்விடுகின்றன. நீங்கள் புதிய ஸ்வீட் தயார் செய்கிறீர்கள்."

புதிர் விகாரம்

மனைவியிடம் பயமுள்ள கணவன் கேட்டான் "பெட்டியிலிருந்து பணம் குறைகிறது.  நமக்கோ குழந்தைகள் இல்லை.  நானோ செலவு செய்யவில்லை.  எப்படிப் போயிருக்குமென்று கண்டுபிடித்துச் சொல்லேன்.  ஜம்மென்று புதுப்புடவை கட்டிக் கொண்டிருக்கிறாயே!"




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!