16.11.26

திங்கக்கிழமை  -- தாலிபீத் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி

  

தாலிபீத்

கீதா சாம்பசிவம்

ஒரு புது வித உணவு தயாரிப்பு.  மராத்திய உணவு. மங்கையர் மலர் மராத்திய உணவு சிறப்பிதழில் வெளிவந்தது. நம்ம ரங்க்ஸ் இருந்தப்போ எதானும் பண்ணுனு உத்தரவு பிறப்பிப்பார். [' உடனே சிரமேற்கொண்டு செய்பவர்களாச்சே நாமெல்லாம். தாலிபீத் என்னும் கலவை ரொட்டியைத் தேர்ந்தெடுத்தேன் காலை உணவுக்காக.

எனக்குத் தெரிஞ்சவரை தாலி பீத் தயாரிக்க கோதுமை மாவு, சோள மாவு அல்லது கம்பு மாவு அல்லது வெள்ளைச் சோள மாவு, அரிசி மாவு(தேவைப்பட்டால்) மற்றும் கட்டாயமாகக் கடலைமாவு போன்றவை தேவை! ஆனால் இதிலே கோதுமை மாவே குறிப்பிடவில்லை. அப்புறமாச் சோளம், கம்பு மாவுக்கெல்லாம் எங்கே போக! :) என்றாலும் இதில் சொன்னபடியே செய்துடலாம்னு ஒரு தீர்மானம் போட்டாச்சு! கோதுமை மாவெல்லாம் சேர்த்தால் சப்பாத்தி மாதிரிக்குழவியால் இட்டுக் கொள்ளலாம். ஆனால் இங்கே சொல்லி இருந்ததோ வெறும் அரிசி மாவும், கடலைமாவும் மட்டுமே! இனி மேலே பார்ப்போமா?

நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள். இது அந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கும் பொருட்கள். சாமான்கள் அளவில் சிறிய மாற்றம் இருக்கலாம்.

அரிசிமாவு இரண்டு கிண்ணம்

கடலை மாவு இரண்டு கிண்ணம்

உளுந்தம் மாவு அரைக்கிண்ணம்

அவல் கால் கிண்ணம் போல் எடுத்து நன்கு ஊற வைக்கவும்.

உப்பு தேவையான அளவு

சேர்க்கவேண்டிய மசாலா சாமான்கள்

தனியாப் பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

ஜீரகம்,ஓமம் வகைக்கு ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப 1 அல்லது 2 பொடியாக நறுக்கவும்

இஞ்சி ஒரு துண்டு துருவிக்கொள்ளவும் அல்லது பொடியாக நறுக்கவும்.

கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது 3 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது.

பிசையத் தேவையான நீர்

தோசைக்கல்லில் போட்டு எடுக்கத் தேவையான சமையல் எண்ணெய்/நெய்

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தேவையான நீர் விட்டுப் பிசையவும். சற்று நேரம் ஊற வைத்துவிட்டுப் பின்னர் ஒரு வாழை இலை அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டில் சாத்துக்குடி அளவு உருண்டையை எடுத்துக் கொண்டு நடுவில் வைத்து எண்ணெய் தொட்டுக் கொண்டு கைகளால் போளி தட்டுவது போல் தட்டவும். ஒரு சிலர் கைகளிலேயே தட்டுகிறார்கள். அடுப்பில் தோசைக்கல்லைக் காய வைத்துவிட்டுத் தட்டியதை அடுப்பில் போட்டு நடுவில் அடைக்கு ஓட்டை போடுவது போல் போட்டுச் சுற்றிலும் மற்றும் நடுவில் எண்ணெய்/நெய் ஊற்றவும். இரு பக்கமும் நன்கு வேக வேண்டும். வெந்ததும் ஊறுகாய்/தக்காளிச் சட்னி/தயிர் ஆகியவற்றுடன் சூடாகச் சாப்பிட வேண்டும்.

ஒன்று சாப்பிடும்போதே வயிறு நிறைந்து விடுகிறது. ஆகையால் குறைந்த பட்சமாக நான்கு பேராவது சாப்பிட இருந்தால் மட்டுமே இதைச் செய்யலாம் என்பது என் சொந்தக் கருத்து.  

இதுவும் ஓகே தான். ஆனாலும் இதில் கோதுமை மாவு சேர்த்துத்தான் மஹாராஷ்டிராவில் செய்வார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியை எட்டு மணி நேரம் ஊறவைத்து உருளைக்கிழங்கு, வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கொண்டு வெங்காயம் போடாமல் மற்றச் சாமான்களைப் போட்டுச் செய்வார்கள். பொதுவாக இது கொஞ்சம் வயிற்றில் கனமாகவே இருக்கும். ஆகவே காலை உணவுக்கென்று வைத்துக் கொண்டாலும் ஜீரணம் ஆகும்படியான வேலைகளை அன்று வைத்துக் கொண்டால் நல்லது! :)

இரவுக்கோ, மதிய உணவுக்கோ வேண்டவே வேண்டாம். தாலிபீத் செய்வதற்குக் கோதுமை மாவு, கம்பு அல்லது சோள மாவு சேர்த்துக் கடலைமாவோடு மற்றச் சாமான்களைப் போட்டுப் பிசைந்து ரொட்டி மாவு போல் வைத்துக் கொண்டு குழவியால் உருட்டிச் செய்யலாம். இதில் கொஞ்சம் மெலிதாக வரும். என்றாலும் வெங்காயம் ரொம்பப் பொடியாக இருந்தால் நல்லது. அல்லது ராஜ்கீர் எனப்படும் வட மாநிலங்களில் கிடைக்கும் கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றைப் போட்டும் செய்யலாம்.

பிசைந்த மாவை வாழை இலையில் வைத்துத் தட்டி இருக்கேன்.

அடுப்பில் வேக விடும்போது எடுத்த படம். வெந்தது படம் எடுக்க மறந்துட்டேன். :) ஹிஹிஹி, வழக்கம் போல் படம் எடுக்க நினைவில்லை. பின்னர் நினைவு வந்தபோது செல்லிலேயே எடுத்தேன்.

=======================================================================================

மனசாட்சியம் - 4​5
KGY Raman

"வசீகரிக்கும் வம்புகள்."

முதலில் ஒரு பொறுப்புத்  துறப்புடன் ஆரம்பிக்கிறேன்.  இங்கு நான் விவரிக்கும் சம்பவங்கள் சில, முன்பே கூட என்னால் இங்கு சொல்லப்பட்டிருக்கக்கூடும் . இப்போது மீண்டும் ஒரு முறை சொல்லுவதைச் சற்றுப்  பொறுமை காட்டிப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும்,  திருப்பி ஒரு முறை சொல்லும் போது அதில் மெருகூட்ட என்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் சரி பார்த்து,  அப்படி இருப்பதை எனக்குச் சொன்னால் நானும் அதைத் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.  ஏனென்றால்,  ஒரு சம்பவம் பற்றி நம் மனதில் என்ன பதிவானதோ அதேயே தான் ஒவ்வொரு முறையும் எழுத நினைக்கிறோம். ஆனால் நமது சுபாவம் என்னவென்றால், மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அந்த சம்பவத்திற்கு சற்று பாலிஷ் போட்டு சேமித்து வைப்பது. இதனால் ஒவ்வொரு முறையும் அதில் ஏதோ ஒன்று கூடி இருக்கும் அல்லது குறைக்கப்பட்டு இருக்கும். ஒரே சினிமாவை இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு என்று வெளியிடுகிறார்கள் அல்லவா ?  (ஜெயிலர்-2 இராமாயணம் - 4 !! ) அந்த மாதிரி தான். 

தலைப்பில் 'வசீகரம்' என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் சற்று விஷயத்திற்கு அன்னியமானது என்று உங்களுக்கு தோன்றினால் அது முற்றிலும் சரி.   வசீகரம் என்றால் , மனம் அந்த செய்தியால் வசீகரிக்கப்பட்டு,  அதை அழிக்காமல் சேர்த்து வைத்திருக்கிறது அல்லவா ? அந்தப் பொருளில் சொல்லி இருக்கிறேன் என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

முதல் மூன்று சம்பவங்களும் பழக்கப்படாத காட்டு யானையோடு தொடர்பு உடையவை. ஆனைமலைப் பகுதியில் நான் வேலை பார்த்த போது பக்கத்திலேயே அடர்ந்த காடு. யானைகள் உலவுகிற வனம். எங்கள் குடியிருப்புக்குள் யானைகள் வந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக காட்டுக்கும் குடியிருப்புக்கும் இணைப்பாக இருந்த காட்டுப்பாதையில் பெரிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு முழுதும் ஒளிவீசியவாறு இருக்கும். 

ஒரு நாள் காட்டாற்றில் ஒரு யானை விழுந்து இறந்து விட்டது என்று கேள்விப்பட்டு அதை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் மிகுதியால் சிற்றுண்டிகள், குடிக்கத் தண்ணீர் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்து நடந்து போனோம். யானை கிடந்த இடத்திற்கு அரை கிலோ மீட்டர் இருக்கும்போதே பலத்த துர்நாற்றம் காற்றில் பரவியிருந்தது. பார்க்காமல் திரும்பி போய் விடலாமா என்று அருவருப்பு ஒரு பக்கம், பார்க்கக் கிடைக்காத காட்சியாயிற்றே- எப்படி பார்க்காமல் போவது என்கிற ஆர்வம் ஒரு பக்கம். கடைசியில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காட்டில் ஆற்றின் நடுவே மல்லாந்து நான்கு கால்களும் மேலே இருந்தவாறு கிடந்த யானையைப் பார்த்துவிட்டு, மூக்கைப் பிடித்துக் கொண்டு பிளாஸ்க், சிற்றுண்டிப் பொட்டலம் எதையும் திறக்காமல் இரண்டு கிலோமீட்டர் நடந்து திரும்பி வந்தோம். இறந்த யானைக்குக் காவலாக காட்டிலாக்கா அலுவலர்கள் பொறுமையாக நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு நின்றிருந்தது எங்களுக்கு வியப்பை அளித்தது. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் அல்லவா !

அதே ஊரில் பிறிதொரு  சமயம்,  தோண்டி வைக்கப்பட்டிருந்த யானை பிடிக்கும் பள்ளத்தில் ஒரு யானைக் குட்டி விழுந்து விட்டது என்று தெரியவந்தது. அதைப் பார்க்க எங்கள் வழக்கம் போல் வாழைப்பழம் பிஸ்கட் காப்பி என்றெல்லாம் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் நடந்து போனோம். குட்டி யானை பள்ளத்தில் விழுந்திருந்தது உண்மைதான்.  அது படபடப்புடன் பள்ளத்திற்குள்ளேயே அங்கும் இங்கும் வேகவேகமாக அலைந்து கொண்டிருந்தது. சற்று நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த பின் நான் செய்தேன் பாருங்கள் ஒரு அசட்டுத்தனம் ! கையில்  இருந்த வாழைப்பழ சீப்பை அந்த யானைக் குட்டிக்குக் கொடுக்க முயற்சி செய்தேன். அது கோபமாக என் கையைப் பிடித்து உள்ளே இழுக்கிற மாதிரி செய்ததும் அதிர்ஷ்டவசமாக உள்ளே விழாமல் தப்பினேன். எல்லோரும் விதவிதமாக என்னைக் கண்டித்தார்கள். இந்த சம்பவத்தைக் கேட்ட ஓரிருவர் இது நான் சொல்லும் கட்டுக்கதை என்று எனக்கே சொன்னார்கள். அவர்களுடைய அவநம்பிக்கையின் அடிப்படை என்ன என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. 

அதே காட்டுப் பாதை வழியாக ஜீப்பில் சென்றால் பொள்ளாச்சியை குறுக்கு வழியில் சென்று அடையலாம். ஆபீஸ் செலவுகளுக்காக மாதம் மூன்று முறை பொள்ளாச்சிக்கு வங்கியில் இருந்து பணம் எடுக்கச் செல்வது வழக்கம்.‌ போகும்போது குறுக்கு வழியில் போய் திரும்ப வரும்போது ரிஸ்க் இல்லாத பொது வழியில் வருவது என்று ஒரு வழக்கம் வைத்திருந்தோம். மழை இல்லாத காலங்களில் சாலைகளில் தடங்கல்கள் எதுவும் இராது என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம். மேலும் சற்று சீக்கிரமாக பணத்துடன் திரும்பி வந்தால் அன்றே பணபட்டுவாடா செய்து முடித்து விடலாம் என்கிற சபலம் வேறு.‌ அப்படி பொள்ளாச்சிக்கு குறுக்கு வழியில் ஒரு முறை சென்றபோது என்னுடன் என் உயரதிகாரியும் வண்டியில் வந்தார். முற்றிலும் எதிர்பாராத விதமாக சாலையின் ஒரு வளைவில் ஒரு காட்டு யானை நின்றிருந்தது. வண்டியை நோக்கி அது கோபமாக பார்த்ததாக எங்களுக்குத் தோன்றியது. என்ன செய்யலாம் என்று திகைப்புடனும் பயத்துடனும் குழம்பி நின்றபோது இளம் வயது ட்ரைவர் " சார் ஸ்பீட் எடுத்து கிராஸ் பண்ணி போயிடலாம் சார் !  என்ன சொல்றீங்க " என்று கேட்டார்.  அதே இளம் வயது , அந்த வயதிற்கான அசட்டு தைரியம் மிகுந்திருந்த நானும் கூட,  " சரி . போயிடலாம் " என்று சொன்னேன். கூட வந்த உயரதிகாரி எங்கள் முரட்டு முட்டாள் தனத்தை வன்மையாகக் கண்டித்து வண்டியை மெதுவாகத் திருப்பச் சொன்னார். வண்டியை கிளப்பினால் யானை எங்களை நோக்கி இரண்டடி முன் வைத்த போது எங்கள் நெஞ்சம் உறைந்து போயிற்று.  எப்படியோ சமாளித்து மீண்டும் கேம்ப் திரும்பி சரியான வழியை எடுத்துக் கொண்டு பொள்ளாச்சி போய்ச் சேர்ந்தோம். அதன்பின் அந்த காட்டுப் பாதையில் பொள்ளாச்சி போவதற்கு முயற்சி செய்யவே இல்லை.  அதுவரை பலமுறை அந்த வழியில் பத்திரமாகப் போய் வந்ததை நினைவு படுத்தி ஆண்டவனுக்கு எங்கள் நன்றியைச் செலுத்திக்கொண்டோம்.

நீளம் அதிகம் ஆகி விட்டது.  இரண்டாம் பகுதி நாளை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!