கட்சிகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் கூட்டு பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். சிலர் தனியாகக் குழம்(ப்)பிக் கொண்டிருப்பார்கள்.
நாம் அப்பளக் கூட்டு பற்றி சற்றுச் சிந்திப்போம்!
அப்பளக் கூட்டு செய்ய என்னென்ன பொருட்கள் தேவை?
உருளைக்கிழங்கு நூறு கிராம்.
கடலைப்பருப்பு ஐம்பது கிராம்.
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை.
மிளகாய் வற்றல் : மூன்று.
உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்.
மிளகு : பத்து.
கறிவேப்பிலை பன்னிரண்டு இலைகள்.
துருவிய தேங்காய் இரண்டு டீஸ்பூன் அளவு.
உளுந்து அப்பளம் : ஐந்து. / ஆறு.
தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம்பருப்பு, இரண்டு துண்டு மிளகாய் வற்றல்.
=================
செய்முறை:
# உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, பொடிப்பொடியாய் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
# கால் லிட்டர் தண்ணீரில், கடலைப்பருப்பைப் போட்டு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை போட்டு, வேகவிடவும். கடலைப்பருப்பு வெந்ததும், நறுக்கிய உருளைக்கிழங்கு போட்டு, தேவையான உப்புப் போட்டுக் கிளறவும்.
# மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை, ஒரு வாணலியில் சிறிது நெய்யூற்றி, அதில் இவைகளை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
# வறுத்து எடுத்தவைகளை, ஒரு மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
# அரைத்த இந்தக் கலவையை, ஐம்பது மில்லி தண்ணீரில் நன்கு கரைத்து, உருளைக்கிழங்கு + பருப்பு கூட்டில் இட்டு, நன்றாகக் கிளறவும்.
# கூட்டு பக்குவத்திற்கு வந்ததும், அதில் தேங்காய்த் துருவலை இட்டுக் கிளறவும்.
# கூட்டு உள்ள அடுப்பை அணைத்துவிடலாம்.
# வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும், ஒவ்வொரு அப்பளத்தையும் எட்டு செக்டார் ஆகக் கிழித்து, எண்ணையில் தனித் தனியாகப் பொரிக்கவும்.
# ஒரு கரண்டியில் கொஞ்சம் நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டு, இரண்டு சிட்டிகை கடுகு போட்டு, கடுகு வெடித்தவுடன், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, இரண்டு துண்டு மிளகாய் வற்றல் இட்டு, உளுத்தம்பருப்பு பொன்னிறம் வந்தவுடன் தாளிப்புப் பொருட்களை கூட்டில் போடவும்.
# பொரித்து வைத்திருக்கும் அப்பளத் துண்டுகளையும் கூட்டில் போட்டு, நன்கு கிளறவும்.
+ அப்பளக் கூட்டு தயார்.



