சேமியா, 'பாத்' செய்யும்பொழுது பார்க்கலாம். அதாவது, சேமியா பாத் செய்து பார்க்கலாம். பிறகு சாப்பிடலாம்!
ஒரு லிட்டர் பால் எடுத்துக்குங்க.
பால் பொங்கும் வரைக் காய்ச்சுங்கள்.
பால் பொங்கும் பருவத்தில் அடுப்பை அணைத்து, பால் ஆறி ரூம் டெம்பரேச்சருக்கு ஐந்து டிகிரி மட்டுமே அதிகம் இருக்கின்ற நிலையில், அந்த வெது வெதுப்பான பாலில், பத்து கிராம் தயிர் இட்டு, ஒரு ஸ்பூனால் கலக்கி அப்படியே இருபத்துநான்கு மணி நேரம் அதை தொந்தரவு செய்யாமல் விட்டு விடவும். இப்போ ஒரு லிட்டர் புளித்த தயிர் தயார்.
அரை கிலோ சேமியாவை எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், நான்கு கரண்டி நெய் விட்டு, அதில் சேமியாவை ஒவ்வொரு பீசும் ஒரு சென்டிமீட்டர் அல்லது இரண்டு சென்டிமீட்டர் நீளம் இருக்கின்ற அளவில் நொறுக்கிப் போட்டு, பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும்.
பன்னிரண்டு முந்திரி பருப்புகள் எடுத்து, அதை வறுத்த சேமியாவுடன் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போதிய அளவு தண்ணீர் விட்டு, சேமியாவையும் மு பருப்பையும் வேகவைத்து, பிறகு தண்ணீரை வடித்து விடவும்.
மீண்டும் பால், கால் லிட்டர் எடுத்துக் கொள்ளவும். நன்றாகக் காய்ச்சி, ஆற விடவும். ரூம் டெம்பெரேச்சருக்கு பால் வந்துவிடட்டும்.
ஏற்கெனவே செய்து வைத்த ஒரு லிட்டர் புளித்த தயிரில், இந்தக் கால் லிட்டர் பாலைக் கலந்து, சேமியாவையும் முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறி விடவும்.
சிறிதளவு பெருங்காயப் பொடி அல்லது கட்டிப் பெருங்காயத்தை ஐந்து மில்லி நீரில் கரைத்து அதை சேமியா தயிரில் சேர்க்கவும்.
ஒரு கன சென்டிமீட்டர் இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கி சேமியா பாத்தில் சேர்க்கவும்.
இரண்டு கரண்டி நெய்யை வாணலியில் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல், பன்னிரண்டு கறிவேப்பிலை இலைகள் இவற்றைப் போட்டு, தாளித்து சேமியா பாத்தில் கொட்டி, கிளறி, மூடி வைக்கவும்.
இப்போ போயி, இரண்டு மணி நேரம், தொலைக்காட்சியில் மாமியார் கொடுமை, மருமகள் பொறுமை, நாத்தனார் பொறாமை, கள்ளக்காதல், பழிக்குப்பழி, வெட்டுக்குத்து இல்லாத நிகழ்ச்சிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைப் பார்த்து இரசித்துவிட்டு வாருங்கள். நிகழ்ச்சி முக்கியமில்லை, நேரம் முக்கியம்.
சேமியா பாத் நீங்கள் சாப்பிட ரெடி!