பொருள் கூறிப் புரிந்து கொள்ளும் போது உண்மைகள் காணப் படுவதில்லை.
உண்மை ஒன்றைப் பற்றி அபிப்பிராயம் கொடுக்கும் மனம் குறுகியதும், அழிவைச் செய்யும் தன்மை கொண்டதுமாகும். உண்மையை நீங்கள் ஒரு மாதிரியாகவும் நான் வேறு மாதிரியாகவும் பொருள் சொல்லி விளக்கலாம். தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது. இதை ஒரு சாபக்கேடு என்றே சொல்லவேண்டும். உண்மையைக் குறித்து தத்தமது அபிப்பிராயங்களை நீங்களும் நானும் பரிமாறிக் கொள்ளும் போது உண்மையைக் குறித்த நடவடிக்கை ஏதும் எடுக்கப் படுவதில்லை. என் அபிப்பிராயம், உங்கள் அபிப்பிராயம், நமது பார்வைக் கோணங்கள் இப்படியாக பலவும் நம்மால் காணப்படும் என்பது சரிதான். உண்மையின் தாக்கம், விளைவு, உங்களுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எனக்கு அது அவ்வளவு முக்கியத்துவம் அற்றதாகவும் இருப்பது இம்மாதிரி பலவும் வெளிவரும். ஆனால் உண்மை விளங்க வைக்கப் படக் கூடியது அல்ல. உண்மையைப் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்ல முடியாது. அது உண்மை; அவ்வளவுதான். இதைப் புரிந்து கொள்வது மனதுக்குக் கடினமாக இருக்கிறது. நாம் எப்போதும் எதையும் விளக்கவே முற்படுகிறோம். வெவ்வேறான பொருள்களைச் சொல்ல முயல்கிறோம். இது நமது பழக்கவழக்க, கலாசார, நாகரிகங்களுக்கு, நம் அச்சங்களுக்கு, நம் நம்பிக்கைகளுக்கு, நம் விருப்பு வெறுப்புகளுக்கு, ஆசாபாசங்களுக்கு உட்பட்டது. அப்படியில்லாமல், நீங்களும் நானும் உண்மையை அபிப்பிராயங்களும் கருத்துக்களும் நாம் கொடுக்கும் முக்கியத்துவங்களும் இல்லாமல் -- இருப்பதை இருக்கும்படி பார்க்க முடிந்தால் உண்மை அங்கு தனித்து இருக்கிறது. வேறு எதுவும் முக்கியமில்லை. உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.