நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் ரன் மழை. சேவாக்கை விட தில்ஷான் அதிக ரன் எடுத்திருந்தும் வெற்றி பெற்ற அணி என்ற ஒரே காரணத்திற்காக சேவாக்குக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் தந்தது என்ன நியாயமோ? ஆனால் இந்த அளவு நானூறு ரன்களைத் துரத்தி வந்த சாதனை ஒரு புறம் என்றால் எனது மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் நெஹ்ராவுக்குதான்... கடைசி ஓவரில் பதினோரு ரன் தேவை என்ற நிலையில், இன்றைய T20 காலத்தில் எதுவும் சாத்தியம் என்ற நிலையில், பதட்டமில்லாமல் பந்து வீசி, நோ பால், வைட் பால் விட்டுத் தராமல், கடைசி பந்தில் நான்கு அடித்தால் கூட மேட்ச் 'டை' ஆகிவிடும் என்ற நிலையிலும் அழகாக வீசியதால்...தோனி Cool கேப்டன் பட்டம் பெற்றவர். ரவி சாஸ்திரி இப்போதும் அவர் அபபடி இருந்ததாகப் பாராட்டியது சரி என்று படவில்லை. சேஸ் செய்ய முடியாது என்று இறுமாந்திருந்த நானூத்தி பதினாலை அவர்கள் துரத்து துரத்து என்று துரத்தி மூன்று ரன்னில் கோட்டை விட்டார்கள் என்றாலும் அந்தக் கடைசி பத்து ஓவர்களிலும் கேட்ச்கள் மிஸ் ஆன போதும் தோனி முகத்தில் டென்ஷனை காண முடிந்தது. இவ்வளவு பெரிய இலக்கு எடுத்தும் மூன்றே ரன்னில்தான் ஜெயிக்க முடிந்தது என்பது ஒரு இறக்கம் (அதுதான் ஆட்டத்தின் விறுவிறுப்பு என்பார்கள்) என்றால், அதே நிலையில் அவ்வளவு பெரிய இலக்கை விரட்டி அதே மூன்று ரன்னில் வெற்றியைக் கோட்டை விட்ட இலங்கை அணிக்கு எப்படி இருந்திருக்கும்?
*** *** ***
நேற்று மாலை என்னால் ஒரு மரணம் நிகழ்ந்தது மனதை வெகுவாகப் பாதித்தது.
மழை விடாமல் பெய்துகொண்டிருக்க வெளியில் கிளம்பாத என்னை விதி டியூப் லைட் வாங்க வெளியில் கிளம்ப வைத்தது. குடையுடன் கிளம்பி சென்ற பாதி வழியில் சிறிதும் பெரிதுமான முனகல்களுடன் ஒரு அழகான நாய்க் குட்டி என் காலைத் தஞ்சம் அடைந்தது. சாதாரணமாக நம்மைக் கண்டு தயங்கித் தயங்கி ஓடி, பின் நெருங்கி வந்து விளையாட்டு காட்டும் நாய்க் குட்டி மழையில் நனைந்து குளிரின் காரணமாக நடுங்கிக் கொண்டு ஆதரவுக்காக என்னிடம் வந்து நின்றது.
வெள்ளையும் பிரௌனும் கலந்த அந்த அழகான கொழு கொழு நாய்க் குட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு மழையில் நனையாத இடமாக அதை விடலாம் என்று இடம் தேடினேன். என்னுடன் ஒண்டிக் கொண்ட அந்த நாய்க் குட்டி பாதுகாப்பான இடம் கிடைத்து விட்டதாக நம்பி முனகல்களை நிறுத்தி ஒண்டிக் கொண்டது. எங்கள் ஏரியாவில் ஏற்கெனவே இரண்டு மூன்று நாய்கள் உண்டு. ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடன் இருக்கக் கூடியவை. அதில் ஒன்று போட்ட குட்டிகளை இரண்டுமாய் மற்ற வெளி நாய்களிடமிருந்து ட்ராஃபிக் கான்ஸ்டபிள் போல பாதுகாத்து அழைத்துச் செல்லும். இந்த நம்பிக்கையில் இந்த நாய்க் குட்டியை இந்த ஏரியாவில் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் விடலாம் என்று பையனிடம் தந்து, கட்டிட ஓரமாக எங்காவது விடுமாறு சொல்லி விட்டு, கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது அந்த கோரம் நடந்து முடிந்திருந்தது.
பையன் கையில் நாய்க் குட்டியைப் பார்த்ததுமே அருகில் வந்து குலைத்து பயமுறுத்தத் தொடங்கின இரண்டு நாய்களும். இவன் எங்கே தன்னை இவை குதறி விடுமோ என்று பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து குட்டியைக் கீழே விட, அந்த இரண்டும் பிறந்து முப்பது, அல்லது நாற்பது நாட்களே ஆகியிருக்கக் கூடிய அந்தக் குட்டியை குதறி துவம்சம் செய்து போட்டு விட்டன. இதை நேரடியாகப் பார்த்த இரண்டு பையன்களும் மனைவியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என் மனமும் கனத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. என்ன விதியோ அது என் கையில் வந்து தஞ்சம் கேட்டது? ஒரு குழந்தையின் மரணம் போல அது என்னை படுத்துகிறது...

