thuglak லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thuglak லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.3.12

படித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டை


                
சுகா எழுதிய 'மூங்கில் மூச்சு'த் தொடருக்குப் பின் விகடனில் தற்சமயம் ராஜு முருகன் எழுதும் தொடர் வட்டியும் முதலும் என்ற பெயரில் வருகிறது. சுகா அளவு சுகமில்லை. எனினும் ராஜு முருகன் தஞ்சைக்காரர் என்றதும் ஒரு சுவாரஸ்யம் வந்தது. தஞ்சையைப் பற்றிச் சொல்லும்போது சுகமாகப் படிக்கத் தோன்றியது.. தஞ்சையில் பதின்மப் பருவம் கடந்ததால் இந்த ஆர்வம்! கடைசி இதழில் 'ஞானம் வொயின்ஸ் கடையில் நின்று....' என்று படித்த போது அங்கிருந்த ஞானம் தியேட்டர் என்ன ஆனது என்ற கவலை வந்து விட்டது!  எத்தனை படம் பார்த்திருக்கிறேன் அங்கு... தஞ்சையை விட்டு வந்த பின் மீண்டும் அங்கு செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் இப்போது எப்படி இருக்கும் என்று சென்று பார்க்க ஆவல். யாகப்பா திரையரங்கம், மங்களாம்பிகா ஹோட்டல், சாந்தி ஸ்டோர்ஸ், ஆனந்த் பவன்.... எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 
                      
அதே இதழில் கீழே உள்ள வரிகளையும் எழுதி இருக்கிறார்.
    
"சிரிப்பு, அழுகை, பிறப்பு, இறப்பு எனப் பாடல்களாலேயே ஆகிவிட்டது இந்த வாழ்க்கை. அதுவும் நாலு தலைமுறைக் கண்ணீரையும் புன்னகையையும் இந்தப் படுபாவி இளையராஜா எடுத்துக் கொண்டார்"
                
எனக்கும் இளையராஜா பிடிக்கும். என்றாலும் முதல் முறை இந்த வரிகளைத் தாண்டிய உடன் தடுக்கி, மறுபடி படித்தேன். பிடிக்கிறது என்று சொல்லத்தான் அந்த வார்த்தைப் பிரயோகம் என்றாலும்.............. கொஞ்சம் நெருடுகிறது.
                       
சுகாவும் இளையராஜா பற்றி சிலாகித்து எழுதி இருக்கிறார். அவரை அவரின் இரண்டாம் வாத்தியார் என்னும் வகையில் அவரின் வயலின் ஆசான் சொல்வது போல, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரைக் கண்டதும் அங்கிருந்த அதிகாரி - ஜி ராமனாதனின் உறவினர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மரியாதை செய்ததோடு காலில் விழுந்து வணங்கியதாக எழுதி இருக்கிறார். 
-------------
    
சென்ற வாரம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் பற்றிப் படித்த போது, செய்திச் சேனல்களில் பார்த்த போது பதைத்தது.        
                    
ஒரு தனியார் நிறுவனத்தில் தீயணைப்புத் துறை நடத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒத்திகையில் நடந்த அசம்பாவிதம். ஆபத்து நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய ஒத்திகை என்று சொல்லி அந்த நிறுவனத்தின் ஒரு பெண் அதிகாரியை அவருக்கு விருப்பமில்லாத போதும் வற்புறுத்தி பலவந்தமாக மாடியிலிருந்து கயிறு வழியாக இறங்கச் சொல்லி ஒத்திகை தொடங்க, பலமில்லாத அந்தக் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்ட அந்த பெண் அதிகாரி அங்கேயே இறந்து போனார்.
                     
என்ன அநியாயம்.... என்ன பொறுப்பின்மை... இது பச்சைக் கொலை இல்லை...? இதை நடத்தியவர்களுக்கு தண்டனை ஏதும் உண்டா?   
-------------------      
                 
விகடன் பற்றி இன்னொரு தகவல். சென்னையில் மட்டும் வெளியாகும் விகடனின் இனிப்பான 'என் விகடன்' புத்தகத்தில் சென்னைப் பதிவர்களை (மட்டும்) அறிமுகப் படுத்தத் தொடங்கி உள்ளார்கள். கேபிள் சங்கர், ஆதிஷா, சென்ற வாரங்களில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தனர். இந்த வாரம் லக்கிலுக் யுவகிருஷ்ணா.
                  
நீங்கள் சென்னைப் பதிவராக் இருக்கும்பட்சத்தில் "வாரம் ஒரு வலைப் பதிவர்" நீங்களும் உங்கள் ப்ளாக்கும் இடம்பெற உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப் பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை chennai@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டச் சொல்கிறது விகடன்.
        
ரெடி...ஜூட்...    
====================
                
அரசியலிலேயே குளிக்கும் துக்ளக் பத்திரிகையில், சமீபத்தில் இரண்டு தொடர்கள்  ஆரம்பம். ஆன்மீகப் பிரியர்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணனின் 'ஸ்ரீமத் பாகவதம்', வாலி எழுதும், எம் ஜி ஆருடனான தன் அனுபவங்களைச் சொல்லும் தொடர் ஒன்று. 
     
துக்ளக்கில் வந்த கேள்வி பதிலில் ஒரு சுவாரஸ்யம்.
    
பெங்களூர் மல்லேஸ்வரம் மர்கொசா சாலையில் ராஜ்போக் என்ற ஹோட்டலில் தங்கம் கலந்த தோசை 1011 ரூபாய்க்கும் வெள்ளி கலந்த தோசை 151 ரூபாஈகும் விற்கப் படுவது குறித்து ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். 
    
எம் ஜி ஆர் தங்கபஸ்பம் சாப்பிடுவார் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கத்தை அப்படியே தோசையில் போட முடியுமா, அதையும் சாப்பிடுவார்களா, இவ்வளவு விலை கொடுத்து, என்ன பயன் என்றெல்லாம் தோன்றியது.

தகவல் உண்மையா பொய்யா என்று கே ஜி கௌதமன், ராமலக்ஷ்மி, ராம்வி போன்ற பெங்களூரு வாசிகள்தான் சொல்லவேண்டும்! (R. கோபியைக் கேட்கலாம். அவரும் பெங்களுருதான். ஆனால் அவர் இதையெல்லாம் படிப்பதில்லையே...!!)     
==========================================
        
கல்கியில் ஆறு வாரங்களாக நாகூர் ரூமி எழுதும் தியானம் பற்றிய தொடர் ஆரம்பித்திருக்கிறது. சுவையாகச் செல்கிறது. நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த வினாடி' யும், 'செலவைக் குறைங்க சார்' புத்தகமும் படித்திருக்கிறீர்களோ...    
==========================================
     
மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிடப் பட இருக்கும் 'டிஜிடல்' கர்ணனுக்கு ட்ரெயிலர் எல்லாம் வெளியிட்டு விளம்பரப் படுத்தப் படுவதை இட்லி வடை பதிவுகளில் பகிர்ந்திருந்தார்கள். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவாஜியின் நண்பர் திரு வி என் சிதம்பரம் பேசியதாக 'ஜூவி'யில் படித்ததன் பகிர்வு. 
      
புட்டபர்த்தி பாபா ஒரு முறை திரு வி என் சிதம்பரத்திடம் சிவாஜி கணேசனை தான் பார்க்க விரும்புவதாகக் கூறினாராம். இவரும் சிவாஜியிடம் அதைச் சொல்ல அவரும் சந்தோஷமாகச் சம்மதித்து, இருவரும் சந்திக்க ஏற்பாடானதாம். பாபாவைச் சந்திக்க வருபவர்கள் வர இரண்டு வழி உண்டாம்., முக்கியமானவர்களுக்கு குறுகிய நடைவழி. மற்றவர்களுக்கு நீண்ட நடை வழி.  வி என் சி யுடன் சென்ற சிவாஜியை பாபா நீண்ட நடை வழியில் வரச் சொன்னாராம். ஒரு மாதிரி உறுத்தினாலும் காட்டிக் கொள்ளாமல் அந்த வழியிலேயே நடந்து போய் பாபாவைச் சந்திக்க, அவர் சிவாஜியைத் தழுவிக் கொண்டு விட்டுச் சொன்னாராம்..."உங்கள் நடையைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான் நீண்ட வழியில் வரச் சொன்னேன்..!"  
=========================================
                       

20.6.11

வெட்டி அரட்டை...


கூகிள் போடுகின்ற கூக்ளி!
நாமொன்று நினைத்து அடிக்க தானொன்று தோன்ற வைக்கிறது கூகிள். பையா என்று அடித்தால் பாயா என்கிறது என்றால் /என்றாள், அழைத்தாள்/ அழைத்ததால், ஏன்/என், வேலை/வேளை எல்லாம் தவறாமல் மாற்றி அடிக்கிறது. காட்டிக் கொடுத்து என்றால் கட்டிக் கொடுத்து என்று தமாஷ் செய்கிறது. கவனிக்காமல் விட்டு விட்டால் விபரீத அர்த்தங்கள் வந்து விடுகிறது!

எல்லாவற்றையும்விட கேலிக் கூத்து, ஆங்கிலத்தில் vaal என்று அடித்தால், 'வாழ்' என்று தமிழில் வருவதுதான். பலர் உச்சரிப்பில் ழகரம் ளகரம் ஆகிவிடுகிறது என்றாலும் எழுதுபவர்கள் ழகரம் வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் zha என்று அடித்தால் போதுமே. தமிளன் என்று தவறாக உச்சரிப்பவர்கள் கூட, எழுதும்பொழுது தமிழன் என்று சரியாகத் தானே எழுதுகிறார்கள்? அப்படி இருக்கையில், எழுதும் பொழுது, ஆங்கில எழுத்தாகிய L என்பதை ழ் என்று கூகிள் மொழிமாற்றம் செய்வது தேவை இல்லை என்று தோன்றுகிறது.


*******************************************************

கேட்கிறார்கள் ...
'கலைஞர் ஆட்சிக்கு வரும்போது எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று எந்த ஊடகங்களும், எந்த பத்திரிகைகளும் வகுப்புகள் எடுப்பதில்லை. ஆனால் ஜெ வரும்போது மட்டும் எல்லோரும் வகுப்பெடுக்கிறார்கள்... ஏனோ?' என்று கேள்வி கேட்கிறார் சோ.

முதல்வரைப் பார்க்கும் நேரம் காலை பதினோரு மணி என்று முடிவான பின் முதல் நாள் இரவே வந்து ரெஸ்ட் எடுத்து நிதானமாக முதல்வரைப் பார்க்கக் கிளம்பாமல் காலை ஏன் திருச்சியிலிருந்து கிளம்பி அளவுக்கதிகமான வேகத்தில் அமைச்சர் கார்ப் பயணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார் சாரு நிவேதிதா.

*******************************************************

கண்டதும் நொந்ததும் ...
சமீபத்தில் ஒரு மருத்துவ செக் அப்பிற்கு மருத்துவமனை சென்ற போது கண்ட காட்சி.
ஒரு முதியவர் மனைவியுடன் வந்து மேசைக்கருகே எதிர் திசையில் பார்த்து விழித்துக் கொண்டிருக்க, மேசையின் பின்னே வீற்றிருந்த பெண்மணி 'அப்பா..இங்க வாங்க...' என்று அன்புடன் அழைத்தாள். 'இதோ இருக்கு என்கொயரி' என்று அந்த முதியவர் மனைவியுடன் அருகே சென்றார். நேரம் காலை எட்டரை மணி.

"என்னப்பா...யாருக்கு டெஸ்ட் எடுக்கணும்"

"என் வொய்ஃபுக்குதாமா..."

"Fasting ல இருக்காங்களா..."

"ஆம்மாம்மா... ஆமாம்மா... பாவம்மா... காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடலை..."

இந்த அன்பையும் கரிசனத்தையும் அந்த மேசைப் பெண்மணி பாராட்டியதாகத் தெரியவில்லை. அவள் கடமையில் கண்ணாக இருந்தாள்! டெஸ்ட்டுக்கு உள்ளே அழைக்கப் பட்ட போது கூடவே உள்ளே செல்ல எழுந்த அந்தப் பெரியவரை அந்த அம்மாள் முறைத்த முறை...!! ஒன்றும் பேசாமல் அவர் இருக்கையிலேயே அமர்ந்து விட்டார்.

***********************************************************

வரிசை வரிசையாய்

கிண்டியிலும், மாம்பலத்திலும் ஏன் இன்னும் நிறைய ஸ்டேஷன்களில் 'நான் பீக் அவர்ஸி'ல் கூட மெய்ன் ரோட் வரை டிக்கெட் வாங்க நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது இதற்கு விடிவே இல்லையா என்று தோன்றுகிறது. தானியங்கி டிக்கெட் மெஷின்கள் பாதி வேலை செய்வதில்லை. எல்லா ஸ்டேஷன்களிலும் அது இல்லை. குறையாத கூட்டம் கவுண்டர்களிலும் ட்ரெயின்களிலும்...போதாக் குறைக்கு வழி நெடுக பிச்சைக் காரர்கள் தொந்தரவு வேறு...

************************************************************

பாட்டுக்குப் பாட்டெடுத்து..

மறந்திருந்த ரூனா லைலாவின் சுபரினா (சுபர்னோ'வோ?) ஆல்பம் பற்றி நினைவூட்டியது விகடன் சுகா கட்டுரை. நெட்டில் தேட வேண்டும். நீண்ட நாள் கிடைக்காதிருந்த பி வி ராமன், பி வி லக்ஷ்மணனின் 'மன்னு புகழ் கோசலை தன்' பாடல் சமீபத்தில் கிடைத்தது என்றாலும் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாலமுரளியின் 'ஸ்ரீ நீலோத்பல நாயகி'யும் கிடைத்து விட்டால் சந்தோஷம். சிவானந்த விஜயலக்ஷ்மியின் 'அம்ப லலிதே...' வேண்டுமென்று கேட்ட ஒரு மாமிக்கு இன்னமும்தான் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

***********************************************************

அட ராமச்சந்திரா !

ராமச்சந்த்ரா மருத்துவ மனையில் யாராவது அட்மிட் ஆனால் ஓடிச் சென்று பார்த்து விடுவேன்! பார்த்து விட்டு கேண்டீனில் ஏதாவது சாப்பிடலாமே...அங்கு கேண்டீன் அவ்வளவு ஈர்க்கிறது! தரமும் பிரமாதம். விலையும் பெரிதாக ஒன்றுமில்லை. அங்கு கிடைக்கும் பரோட்டா (புரோட்டா?) போல ஸாஃப்ட் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. காபி குறிப்பிட்ட வேளைகளில் மிக நன்றாகவும் பெரும்பாலும் நன்றாகவும் இருக்கின்றது.

**********************************************************

காற்று வந்ததும் ... கரண்ட் போனதா?
நேற்று சென்னையில் மழை பெய்தது என்பது விசேஷமில்லை. நான் ஊரிலேயே இருந்தும் கூட எங்கள் ஏரியாவிலும் பெய்தது மாமழை. சும்மா சொட்டி விட்டு நில்லாமல் மணிக் கணக்கில் கொட்டியது. கொட்டிய தண்ணீர் நீண்ட நேரம் மண்ணில் நின்றது. அட, அதை விட விசேஷம், 'இதுதான் சாக்கு' என்று போய் விடும் கரண்ட் போகவில்லை. அது ரொம்பவே சந்தோஷம். ஆனாலும் சென்னையில் இன்னும் வெய்யில் பாக்கி இருக்கிறது.

**********************************************************

1/4 டாக்ஸி = முழு ஆட்டோ?
முகூர்த்த நாள் என்றால் சென்னையில் கால் டாக்ஸி ஒன்று கூடக் கிடைப்பதில்லை. எப்போது கேட்டாலும் இரண்டு மணிநேரம் கழித்து நேரம் கொடுக்கிறார்கள். அப்புறமும் ஸாரி கேட்டு விடுகிறார்கள் சில சமயம். ஆட்டோவை யாரும் நம்புவதில்லை போலும். இப்போதெல்லாம் ஆட்டோ சார்ஜும் கால் டாக்ஸி சார்ஜும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கின்றது. அப்புறம் ஏன் அவ்வளவு காசு கொடுத்து கஷ்டத்துடன் ஆட்டோவில் போக வேண்டும் என்று மக்கள் கால் டாக்ஸி மற்றும் ட்ராவல்ஸ் வண்டி வைத்து விடுகிறார்கள் போலும்!

*************************************************

எழுத்தாளர்கள் பிழைத்துப் போகட்டும்!

இரண்டு சிறுகதைப் போட்டிகள் நாட்கெடு முடிந்து விட்டது. (கல்கி மற்றும் தினமணி) தினமலர் இன்னும் பதினைந்து நாள் இருக்கிறது. மற்ற இரண்டில் எப்படி கலந்து கொள்ளவில்லையோ (கலந்து 'கொல்லவில்லையோ'...!) அதே போல அடுத்ததிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. எல்லோரும் பிழைத்துப் போகட்டும்! நம்மால் அனாவசியப் போட்டி வேண்டாம்...!

**********************************************************************

மறப்போம் மன்னிப்போம்.

கல்கி என்றதும் நினைவுக்கு வருகிறது... பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கிறார்கள் என்று மாய்ந்து மாய்ந்து இரண்டு முறை எழுதியிருக்கிறோமே....அந்த ப்ராஜெக்ட் டிராப் ஆகி விட்டது என்பதைச் சொல்லா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காதே....!

**********************************************************************

அஞ்சலி
கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரனின் துணைவியார் விஜயாம்மா காலமான வருத்தத்திற்குரிய செய்தியை வெள்ளிக் கிழமை பேப்பரில் பார்த்தேன். சனிக் கிழமை வெளியான கல்கி கடைசிப் பக்கத்தில் அவரைப் பற்றி கே.பாரதி அஞ்சலிக் கட்டுரை எழுதியிருந்தார். கல்கி சதாசிவத்தின் மகளான விஜயாம்மாவின் எளிமை பற்றி அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. எம் எஸ்ஸின் வளர்ப்புப் பெண். T K C, ராஜாஜி போன்றோரின் அன்பைப் பெற்றவர் விஜயாம்மா.

******************************************************

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...  

சென்னையிலும் சுற்றுப் புறங்களிலும் இன்று முதல் பத்து நாட்களுக்கு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மின் வெட்டு அமல், பொறுத்தருள்க... என்கிறது செய்தி. ஏற்கெனவே இருக்கும் வழக்கமான ஒரு மணி நேர மின் வெட்டும் உண்டாம். கேட்கும் போதே மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. அப்பாடா....இந்த முறை எனக்கு மின் கட்டணம் குறைவாகத்தான் இருக்கும்...!!   
*******************************************