21.10.09

வாழ்க்கையில் முன்னேற ...009


அரை நிமிடம் ப - இரண்டு நிமிடங்கள் யோ - உடன் கடை.
பாடம் ஒன்பது: நீங்க இந்த நிமிடம் - இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்க கணினிக்கு அருகில் நீங்க வந்து, அதை ஆன் செய்வதற்கு முந்தைய ஒரு நிமிட நேரத்தில் - என்ன செய்தீர்கள்; இந்த வலைப்பதிவை விட்டு அகன்ற பின் வருகின்ற ஒரு நிமிடம் என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில் எதுவும் எனக்குச் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சொன்னால்  - நான் கேட்டுக் கொள்வேன்.
நான் என்ன செய்தேன்? கணினிக்கு அருகில் இந்தப் பதிவை இட வருவதற்கு முன் - ஐந்து வயதுக்குட் பட்ட இரண்டு பையன்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன். 
என்ன செய்வேன்? இந்தப் பதிவை வலைக்கு அனுப்பியவுடன், அதை Tamilish பக்கத்திற்கு Submit செய்வேன். பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை - ஒரு நிமிட நேரம் - இந்தப் பதிவிற்கு எவ்வளவு வோட்டுகள் விழுந்துள்ளன, என்னென்ன பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை - முழு கவனத்துடன் படிப்பேன். ஏன் என்பதை, அடுத்த பதிவில் பார்ப்போம்.
(தொடரும்)

20.10.09

எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு

அக்டோபர் இருபத்தொன்று முதல் இருபத்தேழு வரை ...

மேஷம்: உங்க கடின உழைப்பும், கலங்காத் தன்மையும், பல வெற்றிகளை உங்க காலடியில் கொண்டு சேர்க்கும். யாரு வந்து என்ன சொன்னாலும் நம்பிடாதீங்க - நல்லா கவனமா பாத்து ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுங்க. வங்கி, இன்சூரன்ஸ் சட்ட வல்லுனர்களுக்கு சிறப்பான வாரம். பலரைக் கவர்ந்து இழுத்து, அவங்க நண்பர் பட்டியலில் முதல் ஆளாக இடம் பெறுவீங்க. குடும்பத்தில் இருக்கும் வயதான ஒருவரால் சொத்து சேரும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் : உங்க குழந்தைகளின் படிப்பு, மேல் படிப்பு விஷயங்கள இந்த வாரம் கொஞ்சம் கவனிங்க. எல்லோரையும் எல்லா காலங்களிலும் திருப்தி பண்ண முடியாது - ஆனா நெருக்கமான சிலரை ஏமாற்றாமல் - அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாகிலும் நிறைவேத்துங்க. உங்களுக்குப் பிடிக்காதவங்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி கண்டபடி பேசாதீங்க - பாவம் அவங்க - உங்களைப் போல் ஒருவர்! சொத்து எதுவும் இருந்தா - வீசி எறியாம - யோசிச்சி வெச்சிக்குங்க. ஆசிரியர்களும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்க்ளும் - இந்த வாரம் ரொம்பக் கஷ்டப் படுவாங்க.

மிதுனம் : நோக்கம் உயரியதாக இருந்தால் வெற்றி நிச்சயம். நிதி சமாச்சாரங்க - நீங்க கை வைக்கணும்னு வெய்ட் பண்ணுது. முதலீடு செஞ்சி லாபம் அடையுங்க. உங்களுடைய உற்சாகமான அணுகுமுறை உங்களுக்கு வெற்றிகளை வாரி வாரி வழங்கும். அரசியல்ல இருப்பவரா இருந்தா - கூட்டத்துல கோவிந்தா போடாம - துணிச்சலா மேடையேறி கருத்துங்கள சொல்லுங்க.இதமாகச் சொல்லுங்க.

கடகம் : அலுவலகத்தில் உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்களாலும், உங்க நட்பான நடவடிக்கைகளாலும், பல நன்மைகள் உண்டாகும். அதிகாரத்தில் உள்ள சிலரது நட்பால் செயற்கரிய செயலகள் செய்துமுடிப்பீர்கள். பிடித்த டூயட் பாடல் ஏதாவது இருந்தாக்க கொஞ்சம் பாடிப் பழகிக்குங்க - இந்த வாரம் பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். உடன் பிறப்புகளையும், ஒன்று விட்ட சொந்தங்களையும் ஐஸ் வெச்சி தாஜா பண்ணிக்குங்க - அவங்களால இந்த வாரம் உங்களுக்கு லாபம் வரும். ஆங்கில அறிவு / சொற்பொழிவு - உங்களுக்கு இந்த வாரம் உதவும்.

சிம்மம் : பெற்றோர்களால் - பேருதவி கிடைக்கும் - அவங்கள சந்தோசமா பாத்துக்குங்க. அலுவல் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எதையும் இந்த வாரம் எடுக்காமல் பத்து நாளைக்கு ஒத்திப் போடுங்க. கணினி சம்பந்தப்பட்ட சிலருக்கு, வெளி நாட்டில் அதிக சம்பளம் பெறும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சாப்பாட்டு விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க - சங்கடத்தைத் தவிர்க்கலாம். இசைபட / இசை பாட வாழ்பவர்கள் - சிறப்பு பெறுவீர்கள். எதிரணியரிடம் - பேச்சுவார்த்தை நடத்தும்போது ஜாக்கிரதையா இருங்க.

கன்னி : மனைவிக்குக் கணவராலும், கணவருக்கு மனைவியாலும் நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பேச்சுத் திறமையாலும், வள்ளல் தன்மையாலும் பல நல்ல காரியங்களை ஈடேற்றிக் கொள்வீர்கள். உங்க கொடைத் தன்மை, சுற்றி இருப்பவர்களால் புகழப் படும். மாமியார் தவிர மற்றவர்கள் உங்க புகழ் பாடுவார்கள். இந்த வாரம் முழுவதும், சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் துள்ளித் திரிவீர்கள்.

துலாம் : பழகுவதற்கு இனிமையானவர் நீங்க - உங்க உணர்ச்சிகளை உங்க கட்டுப்பாட்டில் வெச்சிருப்பீங்க. இதுவரை இருந்த இறுக்கமான சூழ் நிலை சற்றே தளரும். துணைவர் / துணைவி உங்கள 'பின்னோக்கி' இழுக்க முயற்சி செய்வார்கள் - மாட்டிக்காதீங்க - தைரியமா முன்னோக்கி நகருங்க! 'மறப்போம்; மன்னிப்போம் - இத மனசுல வையுங்க.

விருச்சிகம் : 'காசு' விஷயத்துல எச்சரிக்கையா நடந்துக்குங்க. விவரம் நிறைய அறிஞ்சவர் நீங்க; சுயக் கட்டுப்பாடோடு நடந்துகிட்டீங்கன்னா நல்லது. திருமணம் ஆகவேண்டியவர்களுக்கு, இனிமையான அழகான வாழ்க்கைத்துணை அமையும். இந்தவாரம் பிரயாணங்களை ஒத்திப் போட முடியும்னா - ஒத்திப் போடுங்க - சிறு விபத்துகள் ஏற்படலாம். சில்லரை வரவுகள் இருக்கும் - பெரிய செலவுகள் எதுவும் இந்த வாரம் வேண்டாம்.

தனுசு : கோழிப்பண்ணை அதிபர்கள் கொழிப்பார்கள். பேன்களால் - மன்னிச்சுக்குங்க - பெண்களால் தொல்லை ஏற்படும் - ஜாக்கிரதையா இருங்க. உங்கள்ள சில பேருங்க தர்மஸ்தாபனங்களுக்கு வாரி வழங்குவீர்கள். எழுத்தார்வம் உள்ளவங்க பயணம் செய்து, உங்க அனுபவங்களை எழுதிப் புகழ் பெறுவீர்கள். எங்கேயும் சட்ட மீறல் எதுவும் இல்லாமப் பாத்துக்குங்க - சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டும் வாய்ப்பு உள்ளது.

மகரம் : வீடு மாற்றம், வேலை மாற்றம் - உண்டு - ஏமாற்றம் கிடையாது. அடக்கமான பேச்சு - அளவிலா நலங்களைப் பெற்றுத் தரும். அலுவலகத் தோழர்களிடையே உங்க புகழ் ஓங்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லோரும் உங்களைப் புகழ்வார்கள். எதிரியுங்க உங்களைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடுவாங்க. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை ஒன்றுக்கு சுமுக முடிவு ஏற்படும். மருத்துவப் படிப்பு படிப்போருக்கு பரிட்சையில முதல் மார்க் கிடைக்கும்.

கும்பம் : மத்தவங்க யாரையும் குறை சொல்லாதீங்க. உங்க மன நிலையை - மற்றவர் மனம் புண்படாதபடி சொல்லுங்க. இல்லையேல் பிரச்னை ஏற்படும். உங்க பேர்ல வீண் பழி சுமத்த ஒருத்தர் தயாரா இருக்காரு - அதை சமாளிக்க நீங்க தயாரா இருங்க - இறுதி வெற்றி உங்களுக்கே! பல திறன் கொண்ட உங்களை பதவிகள் தேடி வரும். இனிமையாகப் பழகும் குணம் கொண்ட உங்களுக்குப் பாராட்டு மழைதான். புன்னகையுடன் புண்ணாக்கு வியாபாரம் செஞ்சாக் கூட லாபம் ஏற்படும்.

மீனம் : பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு போனஸ் கிடைக்கப் போகுது. எங்களுக்கும் ஏதாச்சும் பாத்துப் போட்டுக் கொடுங்க! இந்த வாரம் கொஞ்சம் மாத்தி யோசியுங்க. ஆக்க பூர்வமான யோசனைகள் ஊக்கத் தொகை பெற்றுத் தரும். வீடு மனை சம்பந்தமான வியாபாரங்க லாபம் தரும். சிலருக்கு புது வீடு, புது காரு கெடைக்கும். யாரையும் குறை கூறாமல் நிறை காணுங்கள்.

வாழ்க்கையில் முன்னேற ... 008

அரை + இரண்டு + கடை
பாடம் எட்டு: ஒரு நிமிடத்தில் நீங்க சம்பாதிப்பது எவ்வளவு என்று நேற்று கணக்கு பண்ணி வெச்சிட்டீங்க தானே? ஒ கே - யாரு கிட்டயும் சொல்லாதீங்க. ஆனா உங்க மனசுல நல்லா பதிஞ்சி வெச்சிக்குங்க.
இப்போ இதைப் படியுங்க: இந்தியாவில் உள்ள வருமானம் பெறுபவர்கள் எல்லோருடைய ஆண்டு வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கீடு செய்தால், சராசரி இந்தியனின் வருமானம் ஒரு நிமிடத்திற்கு, ஐந்து பைசா.
உலகத்திலேயே பணக்கார நாட்டில், சம்பளம் பெறுபவர் வரிசையில், முதல் இடத்தைப் பெற்றுள்ள வேலையில் உள்ள ஒருவரின் சராசரி ஆண்டு வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கையில், அவருடைய வருமானம் ஒரு நிமிடத்திற்கு பதினெட்டு ரூபாய், இருபது பைசா. அதாவது, ஆயிரத்து எண்ணூற்று இருபது பைசா.
(தொடரும்)

19.10.09

விஞ்ஞான உண்மைகளும் விபரீத வியாக்யானங்களும்...

ஆமை மூன்று வருடங்கள் வரை தூங்கும்.
அலார்ம் இல்லை போல இருக்கு!
எறும்புகள் தூங்குவதே இல்லை.
இது சரியான போட்டி!
போலார்க் கரடிகள் இடது கைப் பழக்கம் கொண்டவை.
அதற்காக இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் எல்லாம் போலார்க் கரடி அல்ல!
வண்ணத்துப் பூச்சிகள் கால்களால்தான் சுவையை உணர்கின்றன.
வர்ணபேதம் இங்கு இல்லை போலேருக்கு..
நாய்வகைகளில் German shepherd நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றன.
மற்ற நாய்கள் குரைப்பதோட சரியா?
கொசுவால்தான் அதிகபட்ச மரணங்கள் உலகில் நிகழ்கின்றன.
சின்ன Size... பெரிய Result...!
பாம்பிற்கு அதன் விஷம் அதை ஒன்றும் செய்யாது!
அப்போ தன் வினை தன்னை சுடாதா?
பூனைகள் நூறு வகையாகவும் நாய்கள் பத்துவகையாகவும் கத்தும் தன்மை கொண்டவை.
மனிதர்கள் எத்தனை வகையாக ...?
உடலமைப்பு வகையால் பன்றியால் ஆகாயத்தைப் பார்க்க முடியாது.
என்ன நஷ்டம்?
யானைகளால் குதிக்க முடியாது.
அப்போ யானையால் கிரிக்கெட் விளையாட முடியாது!
ஹைட்ரா என்ற நீர் உயிரி சாவதில்லை. அதன் செல்களை அது அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறது.
மனிதன் இப்போது கண்டுபிடித்துள்ள 'நானோ டெக்னாலாஜி'
Shrimp எனப்படும் உயிரினத்துக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
ரெண்டும் ஒண்ணா இருக்கறதால 'மனசுக்கு தெரியுது, புத்திக்கு தெரியலையே...; என்று வசனம் பேச முடியாது!
எலி மிக, மிக மிக, மிக மிக மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினம்.
சீக்கிரமே தனி நாடு கோரிக்கை எழலாம்..
உலகின் மிகப் பொதுவான பெயர் முஹம்மத்.
பொதுவான ஆசை..?
ஆல்பர்ட் ஈன்ஸ்டீன்க்கு கார் ஓட்டத் தெரியாது.
வீணாகப் பொழுதை ஓட்டவும்தான்...
குதிரை வீரன் சிலை தத்துவமும் : குதிரையின் முன் இரண்டு காலும் அந்தரத்தில் இருந்தால் அவன் போர்க்களத்தில் இறந்தான் எனவும், ஒருகால் நிலத்திலும், ஒருகால் அந்தரதிலும் இருந்தால் போரினால் ஏற்பட்ட காயத்தால் இறந்தான் எனவும், இரண்டு காலும் தரையில் இருந்தால் அந்த வீரன் சாதாரணமாக ஏதோ நோயுற்று இறந்தான் எனவும் கொள்ள வேண்டும்.
குதிரை உட்கார்ந்திருந்தால்...?
மா சே துங் தன் வாழ் நாளில் பல்லே தேய்ததில்லை!
---------------- --------- ------------- -------- (பின்னூட்டத்தில் பூர்த்தி செய்வீர்களா?)

வாழ்க்கையில் முன்னேற ... 007


அரை + இரண்டு + கடை.
பாடம் ஏழு : சுய மதிப்பீடு கணக்கு. நீங்க விலை மதிப்பிடமுடியாதவர். உங்களைப் போன்றே சிந்திப்பதற்கு, செயல் படுவதற்கு யாராலும் முடியாது. உங்களைப் போலவே சிந்திக்க, செயல்பட - ஒரு கம்பியூட்டர் உருவாக்க வேண்டும் என்றால் - அதற்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் தேவைப் படும். அப்பவும் - உங்க சிந்தனை + செயல் திறனில் அதற்கு, பாதி அளவு கூட இருக்காது.
இந்தக் கணக்கின் விடை உங்களுக்கு மட்டும்தான். உங்களுடைய கடந்த ஆண்டு வருமானம், (உங்க வருமான வரி படிவத்தில் உள்ள Gross salary - அந்த படிவத்தில் காணப் படும் பெரிய தொகை அதுவாகத்தான் இருக்கும்!) ஒரு வெள்ளைத் தாளில் மேலே எழுதிக் கொள்ளுங்கள். வேறு வகை வருமானம் - நில, புலன்களிலிருந்து வருவது உண்டு என்றால் அதையும் எழுதிக் கொள்ளுங்கள். உங்க எல்லா வருமானங்களையும் ஆண்டுக் கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள் (இந்திய ரூபாய் மதிப்பில்). இந்த ஆண்டு வருமானத்தை, 360 ஆல் வகுத்துக் கொள்ளவேண்டும். கஷ்டமா இருந்தா, பத்தால் வகுத்து, பிறகு நாலால் வகுத்து பிறகு ஒன்பதால் வகுத்துக் கொள்ளுங்க. இப்போ வர்ற விடையில் பாதியை, ஏழால் வகுங்கள் - கடைசியாக வருகின்ற விடை உங்கள் ஒரு நிமிட வருமானம் - பைசாவில். 
உதாரணம் : வலையாபதியின் வலை நண்பர் ஒருவர் (நேற்று சாட்டில் கூறிய தகவல் அடிப்படையில்) அவருடைய ஆண்டு வருமானம் - எல்லாவற்றையும் சேர்த்து, மூன்று இலட்சத்து அறுபத்தாறாயிரத்து எண்பது ரூபாய். 
3,66,080 / 10 = 36608
36,608 / 4 = 9152
9152 / 9 = 1017
1017 / 2 = 508
508 / 7 = 72. 
எனவே அந்த நண்பரின் ஒரு நிமிட வருமானம் எழுபத்து இரண்டு பைசாக்கள் (சென்ற ஆண்டு).
(தொடரும்)

18.10.09

வாழ்க்கையில் முன்னேற - இதுவரை

'எங்கள்' ரசிகப் பெருமக்களே!
ஒவ்வொரு வாரமும் - ஆறு அல்லது ஐந்து பதிவுகள், ஞாயிற்றுக் கிழமையில் - அந்த பதிவுகளின் மீள் பார்வை; சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அந்த சந்தேகங்களைப் போக்குதல்.
பாராட்டியவர்களுக்கும் (maximum india, senthil, நிகழ்காலத்தில்) - வோட்டுப் போட்டு - இந்தப் பதிவுகளை - Tamilish இன் முதன்மைப் பக்கங்களுக்கு முன்னேற்றியவர்களுக்கும், எங்கள் நன்றி.
ஒரே வரியில் வலையாபதி சொன்னவைகளை - இங்கே பட்டியலிடுகிறோம்:
ஒன்று : காலை ஆறு மணிக்கு படுக்கை விட்டு எழுந்திருங்கள். ஏற்கெனவே எழுந்திருச்சாச்சா - வெரி குட். 
இரண்டு : ஐந்து வார்த்தைகள் ' எனக்கு இன்று எல்லாமே நன்றாக நடக்கும்'  இதைக் குறைந்த பட்சம் ஐந்து தடவைகள் கூறுங்கள். இயன்றால் ஜதியோடும் ஸ்ருதியோடும் பாடுங்க - சொந்த இசை அமைப்பு? இன்னும் சூப்பர்.
மூன்று : FOOD நான்கெழுத்து - அளவு மூன்றெழுத்து - சுவை - இரண்டெழுத்து. !
நான்கு : நடங்க - நல்லது; சவாரி - ஊஹூம (நீங்க காங்கிரசா இருந்தா கூட!)
ஐந்து : நீர் , யார் -- நீர் குடியுங்க - யார் யாருக்கு - சிறப்பு தினம் - பிறந்தநாள் - மணநாள் - பட்டியல் போட்டுக் கொள்ளுங்க மனசுல.
ஆறு : வாழ்த்துப் பெறுங்கள், வாழ்த்துங்கள்.
சந்தேகங்களில் - முக்கியமானது - கெவின் மாதியுஸ் அவர்கள் எழுப்பிய ஒரு சந்தேகம் - வா மு(பகுதி ஒன்று) பின்னோட்டத்தில் - மாலையில் சூரிய அஸ்தமன நேரம் - அலாரம் வைத்துத் தூங்கிவிடலாமா? - இது நகைச் சுவைக்காக எழுப்பப் பட்ட கேள்வியாக இருந்த போதும் - இதைக் குறித்துச் சிந்தனை செய்தபோது - இரண்டு விஷயங்கள் தோன்றியது. உறக்கத்திலிருந்து விழிக்க - அலாரம் தேவை - அலாரம் அடித்தவுடன் டபக் என்று எழுந்துவிடலாம் - ஆனா அலாரம் அடித்தவுடன் டபக் என்று - தூங்கமுடியுமா ? ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ஆணுக்கு ஆறு - பெண்ணுக்கு ஏழு - முட்டாளுக்கு எட்டு -- அதாவது தூக்க நேரம் - மணிக் கணக்கில் - எனவே - நீங்க தூங்கப் போகுமுன் கணக்கு பண்ணி - அலாரம் வெச்சிக்குங்க - ! (நான் ஏழரை மணி நேரம் தூங்குவேன்:-) இரண்டாவது பாய்ண்ட்: உறங்கப் போவதற்கு அலாரம் வெச்சி உறங்கப் போயிட்டீங்கன்னா - விழித்துக் கொள்ள யாரு அலாரம் வெப்பாங்க? 
முதல் பாடத்தைவிட இரண்டாவது பாடம் சுலபமானதுன்னு ஹேமா சொல்லியிருக்காங்க. நன்றி. இதுவரை சொல்லப்பட்ட ஆறு பாடங்களுமே - இது இருந்தால்தான் அடுத்தது என்று ஒன்றுமே கிடையாது. எது எல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ அதை எல்லாம் - கடைபிடியுங்க. There are no hard and fast rules in these. 
தொடர்ந்து படியுங்க, சிந்தியுங்க - கடை பிடிங்க - இரண்டாயிரத்துப் பத்து - ஜனவரி ஒன்று அன்று நீங்க இப்போ இருப்பதைவிட முன்னேறிய மனிதர் -- அதுக்கு நான் கியாரண்டீ!
(தொடரும்) 

ஞாயிறு-14