செவ்வாய், 20 அக்டோபர், 2009

எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு

அக்டோபர் இருபத்தொன்று முதல் இருபத்தேழு வரை ...

மேஷம்: உங்க கடின உழைப்பும், கலங்காத் தன்மையும், பல வெற்றிகளை உங்க காலடியில் கொண்டு சேர்க்கும். யாரு வந்து என்ன சொன்னாலும் நம்பிடாதீங்க - நல்லா கவனமா பாத்து ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுங்க. வங்கி, இன்சூரன்ஸ் சட்ட வல்லுனர்களுக்கு சிறப்பான வாரம். பலரைக் கவர்ந்து இழுத்து, அவங்க நண்பர் பட்டியலில் முதல் ஆளாக இடம் பெறுவீங்க. குடும்பத்தில் இருக்கும் வயதான ஒருவரால் சொத்து சேரும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் : உங்க குழந்தைகளின் படிப்பு, மேல் படிப்பு விஷயங்கள இந்த வாரம் கொஞ்சம் கவனிங்க. எல்லோரையும் எல்லா காலங்களிலும் திருப்தி பண்ண முடியாது - ஆனா நெருக்கமான சிலரை ஏமாற்றாமல் - அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாகிலும் நிறைவேத்துங்க. உங்களுக்குப் பிடிக்காதவங்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி கண்டபடி பேசாதீங்க - பாவம் அவங்க - உங்களைப் போல் ஒருவர்! சொத்து எதுவும் இருந்தா - வீசி எறியாம - யோசிச்சி வெச்சிக்குங்க. ஆசிரியர்களும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்க்ளும் - இந்த வாரம் ரொம்பக் கஷ்டப் படுவாங்க.

மிதுனம் : நோக்கம் உயரியதாக இருந்தால் வெற்றி நிச்சயம். நிதி சமாச்சாரங்க - நீங்க கை வைக்கணும்னு வெய்ட் பண்ணுது. முதலீடு செஞ்சி லாபம் அடையுங்க. உங்களுடைய உற்சாகமான அணுகுமுறை உங்களுக்கு வெற்றிகளை வாரி வாரி வழங்கும். அரசியல்ல இருப்பவரா இருந்தா - கூட்டத்துல கோவிந்தா போடாம - துணிச்சலா மேடையேறி கருத்துங்கள சொல்லுங்க.இதமாகச் சொல்லுங்க.

கடகம் : அலுவலகத்தில் உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்களாலும், உங்க நட்பான நடவடிக்கைகளாலும், பல நன்மைகள் உண்டாகும். அதிகாரத்தில் உள்ள சிலரது நட்பால் செயற்கரிய செயலகள் செய்துமுடிப்பீர்கள். பிடித்த டூயட் பாடல் ஏதாவது இருந்தாக்க கொஞ்சம் பாடிப் பழகிக்குங்க - இந்த வாரம் பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். உடன் பிறப்புகளையும், ஒன்று விட்ட சொந்தங்களையும் ஐஸ் வெச்சி தாஜா பண்ணிக்குங்க - அவங்களால இந்த வாரம் உங்களுக்கு லாபம் வரும். ஆங்கில அறிவு / சொற்பொழிவு - உங்களுக்கு இந்த வாரம் உதவும்.

சிம்மம் : பெற்றோர்களால் - பேருதவி கிடைக்கும் - அவங்கள சந்தோசமா பாத்துக்குங்க. அலுவல் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எதையும் இந்த வாரம் எடுக்காமல் பத்து நாளைக்கு ஒத்திப் போடுங்க. கணினி சம்பந்தப்பட்ட சிலருக்கு, வெளி நாட்டில் அதிக சம்பளம் பெறும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சாப்பாட்டு விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க - சங்கடத்தைத் தவிர்க்கலாம். இசைபட / இசை பாட வாழ்பவர்கள் - சிறப்பு பெறுவீர்கள். எதிரணியரிடம் - பேச்சுவார்த்தை நடத்தும்போது ஜாக்கிரதையா இருங்க.

கன்னி : மனைவிக்குக் கணவராலும், கணவருக்கு மனைவியாலும் நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பேச்சுத் திறமையாலும், வள்ளல் தன்மையாலும் பல நல்ல காரியங்களை ஈடேற்றிக் கொள்வீர்கள். உங்க கொடைத் தன்மை, சுற்றி இருப்பவர்களால் புகழப் படும். மாமியார் தவிர மற்றவர்கள் உங்க புகழ் பாடுவார்கள். இந்த வாரம் முழுவதும், சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் துள்ளித் திரிவீர்கள்.

துலாம் : பழகுவதற்கு இனிமையானவர் நீங்க - உங்க உணர்ச்சிகளை உங்க கட்டுப்பாட்டில் வெச்சிருப்பீங்க. இதுவரை இருந்த இறுக்கமான சூழ் நிலை சற்றே தளரும். துணைவர் / துணைவி உங்கள 'பின்னோக்கி' இழுக்க முயற்சி செய்வார்கள் - மாட்டிக்காதீங்க - தைரியமா முன்னோக்கி நகருங்க! 'மறப்போம்; மன்னிப்போம் - இத மனசுல வையுங்க.

விருச்சிகம் : 'காசு' விஷயத்துல எச்சரிக்கையா நடந்துக்குங்க. விவரம் நிறைய அறிஞ்சவர் நீங்க; சுயக் கட்டுப்பாடோடு நடந்துகிட்டீங்கன்னா நல்லது. திருமணம் ஆகவேண்டியவர்களுக்கு, இனிமையான அழகான வாழ்க்கைத்துணை அமையும். இந்தவாரம் பிரயாணங்களை ஒத்திப் போட முடியும்னா - ஒத்திப் போடுங்க - சிறு விபத்துகள் ஏற்படலாம். சில்லரை வரவுகள் இருக்கும் - பெரிய செலவுகள் எதுவும் இந்த வாரம் வேண்டாம்.

தனுசு : கோழிப்பண்ணை அதிபர்கள் கொழிப்பார்கள். பேன்களால் - மன்னிச்சுக்குங்க - பெண்களால் தொல்லை ஏற்படும் - ஜாக்கிரதையா இருங்க. உங்கள்ள சில பேருங்க தர்மஸ்தாபனங்களுக்கு வாரி வழங்குவீர்கள். எழுத்தார்வம் உள்ளவங்க பயணம் செய்து, உங்க அனுபவங்களை எழுதிப் புகழ் பெறுவீர்கள். எங்கேயும் சட்ட மீறல் எதுவும் இல்லாமப் பாத்துக்குங்க - சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டும் வாய்ப்பு உள்ளது.

மகரம் : வீடு மாற்றம், வேலை மாற்றம் - உண்டு - ஏமாற்றம் கிடையாது. அடக்கமான பேச்சு - அளவிலா நலங்களைப் பெற்றுத் தரும். அலுவலகத் தோழர்களிடையே உங்க புகழ் ஓங்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லோரும் உங்களைப் புகழ்வார்கள். எதிரியுங்க உங்களைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடுவாங்க. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை ஒன்றுக்கு சுமுக முடிவு ஏற்படும். மருத்துவப் படிப்பு படிப்போருக்கு பரிட்சையில முதல் மார்க் கிடைக்கும்.

கும்பம் : மத்தவங்க யாரையும் குறை சொல்லாதீங்க. உங்க மன நிலையை - மற்றவர் மனம் புண்படாதபடி சொல்லுங்க. இல்லையேல் பிரச்னை ஏற்படும். உங்க பேர்ல வீண் பழி சுமத்த ஒருத்தர் தயாரா இருக்காரு - அதை சமாளிக்க நீங்க தயாரா இருங்க - இறுதி வெற்றி உங்களுக்கே! பல திறன் கொண்ட உங்களை பதவிகள் தேடி வரும். இனிமையாகப் பழகும் குணம் கொண்ட உங்களுக்குப் பாராட்டு மழைதான். புன்னகையுடன் புண்ணாக்கு வியாபாரம் செஞ்சாக் கூட லாபம் ஏற்படும்.

மீனம் : பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு போனஸ் கிடைக்கப் போகுது. எங்களுக்கும் ஏதாச்சும் பாத்துப் போட்டுக் கொடுங்க! இந்த வாரம் கொஞ்சம் மாத்தி யோசியுங்க. ஆக்க பூர்வமான யோசனைகள் ஊக்கத் தொகை பெற்றுத் தரும். வீடு மனை சம்பந்தமான வியாபாரங்க லாபம் தரும். சிலருக்கு புது வீடு, புது காரு கெடைக்கும். யாரையும் குறை கூறாமல் நிறை காணுங்கள்.

1 கருத்து:

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!