10.6.11

குமரன் குன்றத்திலே !

                              
"குன்றத்திலே பதிவாசிரியருக்குத் திண்டாட்டம்!
அங்கே குவிந்தனர் அம்மா வாசகர் எல்லாம் செண்டாட்டம், செண்டாட்டம்! " என்று பாடியபடி, அவ்வையார் வருகிறார்.
                 
(கே யைத் தேடி) பதிவாசிரியரைப் பார்க்கிறார்.

"டேய் பதிவாசிரியா... "

பதி: "ஏய் கிழவீ ... மரியாத, மரியாத!"

அவ்: "அப்பனே, நான் என் அப்பன் முருகனையே அவன் இவன் என்றுதான் கூப்பிடுவேன். நீ ஏ பி நாகராஜன் படம் எதுவும் பார்த்ததில்லையா? உனக்கு எல்லாம் என்ன மரியாதை?"

பதி: "அப்பவே நெனச்சேன் - கொடுமுடிக் கோகிலம் போல இருக்கியே, நீ ஒருவேளை அவ்வையாரோ என்று. ஆனாலும் நீதான் அவ்வையா என்று நான் சோதித்துப் பார்த்துவிடுகிறேன்."

அவ்: "அப்புறம் ஏன் தயக்கம்? கேள்விகளைக் கேள்"

பதி: இரு பாட்டீ - நான் சின்ன வயசுல சாயிஸ் ல விட்ட செய்யுள் எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வரணும் இல்லே?"

அவ்: "அது சரி. கேள்வியில ஏதேனும் தப்பு இருந்தது என்றால், உன்னை இங்கேயே சரபேஸ்வரர் சந்நிதியில் முட்டிக் கால் போட்டு நில்லு என்று சொல்லிவிடுவேன்."

பதி: "ஒன்னாரைத்...."

அவ்: "தேறேல்."

பதி: "ஓரம்..."

அவ்: சொல்லேல்."

பதி: "அட - டஃப் கேள்விக்குக் கூட சரியா பதில் சொல்றீங்களே! நீங்க அவ்வைதான்! ஹூம், இதை, நான் ஆரம்பப் பள்ளியில் படித்த நாட்களிலேயே நீங்க சொல்லியிருந்தால், நான் அனாவசியமா பெஞ்சு மேலே ஒரு பீரியட் முழுவதும் நிற்காமல் இருந்திருப்பேன்."

அவ்: "போடா மரமண்டை - நீ அந்த ரெண்டு செய்யுளுக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாமல் முழிச்சதாலத்தான் உன்னை பெஞ்சு மேலே நிக்க வெச்சாங்க உன்னுடைய தமிழ் டீச்சர்."

பதி: "அட முக்காலமும் உணர்ந்த மூதாட்டி!"

அவ்: "அது போகட்டும்; நீ ஏன் வாசகர்களிடம் கோபித்துக் கொண்டு, இந்த குமரன் குன்றத்திற்கு வந்தாய்? திரிசூலத்திலிருந்து இங்கே டைரெக்ட் பஸ் இருக்குதா?"

பதி: "மற்ற மொக்கைப் பதிவுகளுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஓட்டும், கமெண்டும் போடும் வாசகர்கள் என்னுடைய கே யைத் தேடி பதிவுகளுக்கு மட்டும் அதிக அளவில் போடுவதில்லை. ஓட்டும் கமெண்டும் வாசகர்களிடமிருந்து பெற அருகதை இல்லையா எனக்கு?"

அவ்: (பாடுகிறார்)
"பதிவு நீ அப்பா!
மொக்கைப் பதிவு நீ அப்பா!
தமிழ் வலை உலக பதிவு நீ அப்பா!
ப்ளாக் தன்னில்,
எங்கள் ப்ளாக் தன்னில் -
வலை மேய்ந்து சுவைப்போர்க்கு
ப்ளேட் போடும் பதிவு நீ அப்பா ஆ ஆ !
பதி: "ஒளவையே நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நான் அந்தப் பதிவைத் தொடருவதாக இல்லை!"

அவ்: "சரி நீ இங்கே இருந்து ஒரு நாடகம் நடத்த விரும்பினால் அதைத் தடுக்க யாரால் இயலும்? அப்படி ஏதாவது நாடகம் நடத்துவதாக இருந்தால், கேட் கலெக்ஷன் காண்டிராக்டை எனக்குக் கொடு."

பதி: "அப்படியே ஆகட்டும் ஒளவையே! ஞாயிற்றுக் கிழமை, இங்கே குரோம்பேட்டைக் குறும்பன் வருவதாகக் கூறியுள்ளார். அவர் சொல்லும் சமாதானம் ஏதாவது என் மனசுக்குப் பிடிச்சிருந்தா, நான் வந்து, பதிவைத் தொடர்கின்றேன்."

அவ்: "சரி போ! ஆனால் அந்தக் 'கே' யாரு என்பதை மட்டும் நீ எனக்குக் காதோடு சொல்லிவிடு."

பதி: "நீங்கதான் முக்காலமும் உணர்ந்த மூதாட்டி ஆயிற்றே? கண்டுபிடிங்க பார்ப்போம்!"

அவ்: பதிவாசிரியரின் காதில் இரகசியமாக (.... ----- .....) என்று சொல்லி, "என்ன சரியா?"

பதிவாசிரியரின் முகம் வலைப்பூவாக மலருகிறதுபதி: ஒளவையே! நன்றி, நன்றி. யாரு 'கே' என்பது பற்றி எனக்கே குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்து வைத்த ஒளவையே! உன்னை உளமாரப் புகழ்கின்றேன்! எங்கள் ப்ளாகைப் புகழ்ந்து ஏதேனும் பாடு!"

அவ்: (பாடுகிறார்)
" பாதி பாதி என பாதித்த பதிவின்று, ஊ ஊ ...
ஷோபனா, ஷோபனா என சுற்ற விடுகின்றதே! ஏ ஏ ...
சாமியாரும் சோணகிரியும் ரங்கனும் சேர்ந்து
கே யைத் தேடிக் கொணருவரே! "
இந்தப் பாடலை, நீலாம்பரி ராகத்தில் அவ்வை பாடியதால், பதிவாசிரியர் கண்கள் சொக்கி, அப்படியே குமரன் குன்றம் மரத்தடியில், படுத்து உறங்கிவிட்டார்!
    

7.6.11

கே யைத்தேடி 08

                    
அத்தியாயம் 08: "யாரும்  இல்லை"

(அய்யா / அம்மா பதிவாசிரியரே - ரொம்ப இழுக்காம சுருக்கமா ஒரு அத்தியாயம் எழுதுங்க!)

கார்த்திக்கின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. வீட்டை, கார்த்திக் தன்னுடைய சாவிக்கொத்திலிருந்து சாவியை எடுத்துத் திறந்தார்.

சோபனா: "போன பதிவுல, செல்லுல உங்க மனைவியோட பேசினீங்களா?"

கார்த்திக்: "அட எப்படித் தெரியும்?"

சோபனா: "நீங்க பேசினது எல்லாமே ஒரு வார்த்தையில் பதில் சொன்னீங்க. ஆமாம், இல்லை,  உம்,   ஊஹூம்.  இதெல்லாம்தான் அதிகமாக சொன்னீங்க. செல் ஃபோனை அவசரம் அவசரமாக - நான் எடுப்பதற்குள் எடுத்துப் பேசியதால், என் குரலை மறுமுனையில் இருப்பவர் கேட்டால் உங்களுக்குப் பிரச்னை ஆகிவிடும் என்று நீங்கள் பயந்தது போலத் தெரிந்தது. மேலும் ....."

கார்த்திக்: "மேலும் என்ன? சொல்லுங்க."

சோபனா: "அதில் H.A calling  என்று வந்ததால், அநேகமாக நீங்க 'Head ache' என்று நினைப்பது உங்கள் மனைவியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்."

கார்த்திக் உண்மையிலேயே திகைத்துப் போனார். "நீங்க என் மனைவியை சந்திக்கும் சந்தர்ப்பம் எதுவும் வாய்த்துவிடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளப் போகின்றேன். மேடம் எப்பிடி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க! என் மனைவி பெயர் அர்ச்சனா. அவங்க ஹைதராபாத்ல என் பையன் கூட இருக்காங்க. நான் H.A என்பதற்கு விளக்கமாக ஹைதராபாத் அர்ச்சனா என்று கூட சொல்லலாம் இல்லியா?"

எ சா : "உம்ம்... சொல்லலாம். ஆனால் எந்த ஊரில் இருந்தாலும் உங்க மனைவி அர்ச்சனாதான். ஹைதராபாத் அர்ச்சனா என்று ஸ்பெஷலா ஏன் போட்டுக்கணும்?"

கார்த்திக்: "சார் நம்ப வேற சப்ஜெக்ட் பேசலாமா?"

எ சா : "சரி, சரி! நீங்க என்னை மன்னிக்கவேண்டும். நீங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சமயத்தில், உங்க விலாசத்தை ரங்கன் சாரிடம் ஃபோனில் தெரிந்துகொண்டு , நான் முன்பே இங்கே வந்து,  உங்கள் வீட்டுப் பக்கம் வந்த மனிதர்களை, என் செல் காமிராவால் படம் எடுத்துள்ளேன். அந்தப் படங்களை உங்களுக்கு இப்போ காட்டுகின்றேன், அவர்கள் எல்லோரையும் உங்களுக்குத் தெரியுமா என்றும், அதில் உங்கள் காரை வாங்கிய இருவர் போல யாராவது இருக்கின்றார்களா என்பதைக் கூறுங்கள்."

கார்த்திக், எ சா காட்டிய படங்களைப் பார்த்தார். அடையாளம் தெரிந்த சிறு வியாபாரிகள், கார் துடைப்பவர், காய்கறிக்காரர், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரை அடையாளம் காட்டினார். "இந்தப் படங்களில், கார் வாங்கிச் சென்ற இருவரில் யாரும் இல்லை." என்றார்.
   
(வர வர, 'கே யைத் தேடி' பதிவுக்கு, வோட்டும் விழமாட்டேங்குது, கமெண்ட்ஸ் எண்ணிக்கையும் குறைகிறது. எனவே இது, இனிமேல் ...

தொடருமா? )
                

6.6.11

கே யைத்தேடி 07


அத்தியாயம் 07: "யார், யார், யார் அவர் யாரோ?"

சோபனா எலெக்ட்ரானிக் சாமியாரை, அலைபேசியில் அழைத்து, உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குக் காரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு, தானும் ஒரு ஆட்டோ பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வாசலில் எ சா வரும்வரைக் காத்திருந்தார்.

எ சா வந்தவுடன், "என்ன சாமீ ஏதாவது ஃபோட்டோ எடுத்தீங்களா?" என்று கேட்டார்.

"எடுத்தேன் சோபனா - வீதியை, வீட்டை, வீட்டுப் பக்கம் வந்தவர்களை, கார்த்திக்கின் வீட்டுப் பக்கம் பார்த்தபடி வீதியில் நடந்து போனவர்களை எல்லோரையும் படம் பிடித்துள்ளேன். எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டுக் கொடுக்கின்றேன். உள்ளே போகலாமா?"
 
**************

கார்த்திக்கின் உடல் நிலையைப் பரிசோதிக்க, மற்றும் மயக்கம் தெளிவிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இருந்த டாக்டர் வரவழைக்கப்பட்டார். டாக்டர் கார்த்திக்கின் உடல் நிலையை நன்றாகப் பரிசோதித்துவிட்டு, 'அதிர்ச்சியினால் வந்த மயக்கம்தான். வேறு பயப்படும்படி ஒன்றும் இல்லை. ஓரிரு நாட்கள் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.' என்றார்.

கார்த்திக் மயக்கம் தெளிந்து சுய நினைவு திரும்பும் நேரத்தில் சோபனாவும், எலெக்ட்ரானிக் சாமியாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்தனர். அவர்களை கார்த்திக்குக்கு அறிமுகப் படுத்தினார் இன்ஸ்பெக்டர் ரங்கன். சோபனாவிடமும், சாமியாரிடமும், "இவர் பெயர் கார்த்திக். வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பில் சேதமானது இவருடைய கார்தான். பாவம் - அந்த விவரம் தெரிய வந்ததும், அதிர்ச்சியில் மயக்கமாகிவிட்டார்" என்றார். சோபனாவும் சாமியாரும், தங்கள் காரிலேயே கார்த்திக்கை அவர் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுவதாகக் கூறினர்.

எலெக்ட்ரானிக் சாமியார், ரங்கனைத் தனியே அழைத்துப் போய், மிகவும் ரகசியமான குரலில், "ரங்கன் சார் - கார்த்திக் ஏன் மயக்கமானார்? அவரை முட்டிக்கு முட்டி தட்டி விட்டீர்களா?" என்று கேட்டார். ரங்கன் லேசாக சிரித்து, "அட ஏன் சாமீ நீங்க வேறே! அவரு ஏற்கெனவே காரை இழந்த சோகத்தில் இருக்கிறார்" என்றார்.

அதற்கு சாமியார், "காரை இழப்பதாவது? அவர்தான் ஏற்கெனவே முள்ளங்கிப் பத்தை மாதிரி தொண்ணூறு ஆயிரம் ரூபாய் வாங்கி பைக்குள்ளே போட்டுக்கிட்டாரே!" என்றார்.

ரங்கன், "சாமீ - என்னதான் பணம் வாங்கி இருந்தாலும், தன்னுடைய கார் எங்கேயோ சௌக்கியமாக இருக்கிறது என்று தெரிந்தால் மனதுக்கு ஒரு நிறைவாக இருக்கும். ஆனால், கண்ணாடியும் கதவுமாக, பளப்பள என்று பார்த்த தன்னுடைய கார் பீஸ் பீஸாகி விட்டது என்று தெரிந்தால், அதுவும் ஒரு குண்டு வெடிப்பில், ஒருவருடைய மரணமும் அதில் புதைந்திருக்கிறது என்றால், நிச்சயம் மனது ரொம்பவும் கஷ்டப்படும்" என்றார், ரங்கன்.

"நீங்கள் சொல்வதிலும் ஓர் உண்மை இருக்கிறது" என்று சொல்லிவிட்டு, காரை நோக்கி நடந்தார், சாமியார். ஏற்கெனவே கார்த்திக்கும் சோபனாவும் காரில் ஏறியமர்ந்து சாமியாரின் வருகைக்காகக் காத்திருந்தனர். "சாமீ காரை நீங்க ஓட்டுங்க. கார்த்திக் சார் நீங்க உங்க வீட்டுக்குப் போகும் வழியைச் சொல்லுங்க. நான் கார்த்திக் சாருடன் பேசிக்கொண்டே வருகிறேன்" என்றார் சோபனா.

"சரி" என்று சொல்லி, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, காரைக் கிளப்பினார், எலெக்ட்ரானிக் சாமியார். அப்பொழுது கார்த்திக்கின் அலைபேசி ஒலித்தது. சோபனா உடனே, "நீங்க ரெஸ்ட் எடுங்க சார். அலைபேசியில் யார் அழைத்தாலும் நான் பதில் சொல்கிறேன்" என்றார். மறுபேச்சு கூறாமல், தன அலைபேசியை சோபனாவிடம் கொடுத்தார், கார்த்திக்.

சோபனா, அலைபேசியைத் தன காதில் வைத்துக்கொண்டு, "ஹல்லோ" என்றார். மறுமுனையில் பேசியவர் "கா .. கார்த்திக் சார் இல்லையா?" என்று கேட்டார்.

"இருக்காரு. ஓய்வு எடுத்துகிட்டு இருக்காரு. நீங்க யாரு? என்ன வேணும்?"

"அவருடைய கார் விற்பனைக்கு உள்ளது என்று போன வாரம் விளம்பரம் கொடுத்திருந்தார். அதைப் பார்க்க வரலாமா என்றுதான்..."

"ஓ எஸ் - காரைப் பார்க்க நீங்க வரலாம். கார் மாருதி வொர்க் ஷாப்பில் இருக்கிறது. காரைப் பார்க்க நீங்க எப்போ வரீங்கன்னு சொல்லுங்க. அவருடைய உதவியாளர் உங்களுக்குக் காரைக் காட்டுவார்."

கார்த்திக் அதிர்ந்து போய், ஏதோ சொல்ல முற்படுவதற்கு முன்பு அவரிடம் சைகையிலேயே, பேசாமல் இருக்கும்படி சொன்னார் சோபனா. மறுமுனையில் பேசியவர் கூறிய நேரத்தை தன்னுடைய சிறு குறிப்புகள் எழுதும் நோட்டில் குறித்துக் கொண்டு, நன்றி கூறி, அலைபேசியின் சிவப்புப் பொத்தானை அமுக்கி பேச்சைத் துண்டித்தார், சோபனா. அதன் பின் கால் லாக் பார்த்து, அது எந்த ஃபோனிலிருந்து வந்த அழைப்பு என்பதையும் குறித்துக் கொண்டார் சோபனா.

"என்னங்க இது? என்னுடைய கார்தான் பூந்தி ஆயிடுச்சே? எதுக்கு இப்போ காரைப் பார்க்க யாரையாவது வரச் சொல்லுறீங்க?"

"கார்த்திக் சார், கார் 'பூந்தி' ஆயிடுச்சுன்னு சொல்லி 'காந்தி' வழியில் சத்தியம் பேசிக் கொண்டிருந்தால், இந்த சதிக் கூட்டத்தால் உயிர் இழந்தவர்களின் ஆன்மா 'சாந்தி' பெறாது!

"ஹூம் - டி ஆர் படம் ரொம்பப் பார்க்காதே என்று நான் தலை தலையாய் அடிச்சுகிட்டேன். கேட்டால்தானே!" என்றார் எ சா.

"சாமீ - கொஞ்சம் சும்மா இருக்குறீங்களா? கார்த்திக் சார், இனிமேல் காரைப் பற்றி யார் கேட்டாலும், உங்க உதவியாளர்களைத் தொடர்பு கொள்ளும்படி சொல்லுங்க. எங்கள் இருவரின் அலைபேசி எண்களும் இதோ இந்த பேப்பரில் உள்ளது. உங்கள் கார் வெடிகுண்டினால் சேதம் அடைந்தது என்பது போலீசுக்கும், உங்களுக்கும், குண்டு வைக்க ஏற்பாடு செய்தவருக்கும்தான் தெரியும். அவர் யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்க இந்த உதவியை, போலீசுக்கும் எங்களுக்கும் செய்யவேண்டும். அப்பொழுதுதான் பிரச்னைகளிலிருந்து உங்களை மீட்க முடியும்" என்றார் சோபனா.

அப்பொழுது சோபனாவின் அலைபேசி, 'டுண்டுண்டுண்டுன் டும் டும் ... பேசுவது கிளியா இல்லை, பெண்ணரசி மொழியா?' என்று வினவியது.

சோணகிரியிடமிருந்து அழைப்பு. "பாஸ், காரை ரமேஷ் சாரிடம் ஒப்படைத்துவிட்டேன். நான் கிளம்பலாமா?"

"அலைபேசியை ரமேஷிடம் கொடுங்கள்"

"இதோ கொடுக்கிறேன்."

"ரமேஷ் சார் நீங்க செய்த உதவி ரொம்பப் பெரியது. உங்களுக்கு நன்றி. இன்னும் ஓர் உதவி வேண்டும்."

"சொல்லுங்க மேடம்"

"இப்போ கொண்டு வந்து கொடுத்த காரில், (கார்த்திக் உங்க கார் நம்பர் சொல்லுங்க!) இந்த நம்பர் கொண்ட நம்பர் ப்ளேட்களைப் பொருத்துங்கள். பிறகு, அதை வொர்க் ஷாப்பின் ஓர் ஓரத்தில் நிறுத்தி வையுங்கள். அந்தக் காரினுடைய சொந்தக்காரர் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறினீர்கள். சரிதானே?"

"ஆமாம்"

"எப்பொழுது திரும்பி வருவார்?"

" இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்."

"அவர் கேட்டிருந்த மாற்றங்கள், பழுது பார்த்தல் எல்லாம் செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?"

"ஒரு வாரம் போதும். அவர் வெளிநாடு செல்லும் சமயங்களில் எல்லாம், இந்த வொர்க் ஷாப்பில், அவருடைய காரைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டுச் சென்று விடுவார். கார் துருப்பிடிக்காமல் பார்த்துக் கொண்டு, மெயிண்டினன்ஸ் செய்து, துடைத்து வைத்து, அவர் கூறும் சிறிய ரிப்பேர் வேலைகளை நாங்க பண்ணி தயாரா வெச்சிருப்போம்."

"நல்லது. இன்னும் ஒரு உதவி தேவை. இந்தக் காரைப் போன்றே இருக்கின்ற, ஆனால் கருப்பு நிறக் கார் ஒன்று தேவை. கிடைக்குமா?"

"கொஞ்சம் லைன்ல வெயிட் பண்ணுங்க - வொர்க் ஷாப்பில் ஒரு ரவுண்ட் அடித்துப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்."

"சரி. அதுவரை செல் ஃபோனை, சோணகிரியிடம் கொடுங்கள்."

"இதோ கொடுக்கின்றேன்."

"சோணகிரி சார், இன்னும் ஒரு வாரத்திற்கு உங்களுக்கு அந்த மாருதி வொர்க் ஷாப்பில்தான் டூட்டி. நீங்கள் ஓட்டிக் கொண்டு போன அந்தக் கார் விற்பனைக்கு என்று விளம்பரப் படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் செய்யவேண்டியது இப்போதைக்கு என்ன என்றால், யார் வந்து அந்தக் காரைப் பார்க்கவேண்டும் என்று கூறினாலும், நீங்கள் ரமேஷிடம் சாவி வாங்கி, அந்தக் காரைத் திறந்து, அவர் அதன் உள்ளும் புறமும் பார்க்க அனுமதி கொடுங்கள். அதே நேரத்தில், அவர்களை இரகசியமாக, உங்கள் செல் காமிராவால் படம் எடுங்கள். அவர்களுடைய தொடர்பு எண், விலாசம் போன்ற விவரங்களை உங்கள் செல்லிலோ அல்லது குறிப்புப் புத்தகத்திலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சரியாக, குழப்பமில்லாமல் செய்யவேண்டும். நீங்கள் கொடுக்கின்ற ஏ டி ஆர் (A T R = Action taken report) எவ்வளவு தூரம் உதவியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுக்கு போனஸ் கொடுப்பேன்."

"சரிங்க பாஸ். ரமேஷ் சார் வந்துவிட்டார்."

"ஹலோ மேடம் நீங்க கேட்ட மாதிரி வண்டி எதுவும் இப்பொழுது வொர்க் ஷாப்பில் இல்லை. வந்தால் உடனே உங்களுக்குச் சொல்கிறேன். அப்படி ஒரு வண்டி கிடைத்தால் உங்களுக்காக அதை எவ்வளவு நேரம் நிறுத்தி வைப்பது?"

"மூன்று மணி நேரம் இருந்தால் போதும். ஆனால் காரின் சொந்தக்காரர் அப்பொழுது பக்கத்தில் இல்லாமல் இருப்பது நல்லது."

"சரி. அந்த வகையில் ஏதாவது ஒரு வண்டி கிடைத்தால், உடனே உங்களுக்குச் சொல்கிறேன்."

"நன்றி. ஆனால் வண்டி நாளைக்குள் கிடைத்தால் நன்றாக இருக்கும்."

"பார்க்கிறேன்."

"உங்க வொர்க் ஷாப்பில் சோணகிரி சாருக்கு ஒரு வாரத்திற்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்க. அவருக்கு நாங்க சம்பளம் கொடுக்கிறோம். உங்க வேலை போக, மீதி நேரத்தில் அவர் என்ன செய்யவேண்டும் என்று அவருக்குச் சொல்லி இருக்கின்றேன். அது என்ன என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?"

"ஓ கே மேடம்."
               
செல் ஃபோன் இணைப்பைத் துண்டித்தார், சோபனா.
************

அப்பொழுது கார்த்திக்கின் அலைபேசிக்கு, ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பார்த்த கார்த்திக், "இப்போ நானே பேசறேன், நான் பேசுவது சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்க." என்று சொல்லி, அலைபேசியில் "ஹலோ?" என்றார்.

"............"

"ஆமாம் இருக்கு. நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். காரை மாருதி வொர்க் ஷாப்பில் விட்டிருக்கின்றேன். அங்கே என்னுடைய செக்ரட்டரி இருப்பார். அவருடைய செல் நம்பர் தருகின்றேன், அவரைக் காண்டாக்ட் செய்து, அவரோடு பேசி, காரைப் போய்ப் பார்க்கின்ற நேரத்தை சொல்லிவிட்டு, போய்ப் பாருங்க. பிடித்திருந்தால், விலை விவரங்களை, என்னோடு பேசுங்க, நாம முடிவு செய்துகொள்வோம். என்னுடைய செக்ரட்டரியின் செல் நம்பர் .............. என்று சோபனா கொடுத்த பேப்பரில் இருந்த எண்களில் ஒன்றைப் பார்த்துக் கூறி, "சரியா?" என்று ஃபோனில் சொன்னவாறு, சோபனாவைப் பார்த்தார்.

"ரொம்ப சரி. இதையே எல்லோருக்கும் மெயின்டைன் பண்ணுங்க." என்றார் சோபனா.

மீண்டும் கார்த்திக்கின் அலைபேசியில் ஒரு அழைப்பு. 'H.A Calling' என்று செல் ஃபோனின் சின்னத் திரையில் ஒளிர்ந்தது. அதை சோபனாவும் பார்த்தார்.
 
அவசரமாக செல் ஃபோனை எடுத்து, பேசத் தொடங்கினார் கார்த்திக்.
(தொடரும்)
              

3.6.11

கே யைத் தேடி 06


அத்தியாயம் 06 "என்னுடைய கார் : 'கா' !"
           
தினசரிச் செய்தியைப் படித்ததும், 'கா' விற்குப் போன உயிர் திரும்ப வந்தது. சென்ற ஞாயிறு பேப்பரில் தான் கொடுத்திருந்த விளம்பரமும் அதற்குப் பின் நடந்தவைகளும் அவருக்குப்  பல வகைகளில் ஆச்சரியத்தையும், திகைப்பையும் பயத்தையும் மாறி மாறி ஐந்தாறு நாட்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தது. 
             
ஆச்சரியம்: ஐம்பதாயிரம் கூடப் பெறாது - அப்பாவோட ஓட்டைக் கார் என்று ஐதராபாதில் இருக்கும் மகனும் மனைவியும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கேலி செய்துகொண்டு இருந்த சமயத்தில், தன்னுடைய காரை யாரும் எதிர்பார்க்காத அளவு அதிக விலைக்கு வாங்குவதற்கு ஆட்கள் இருக்கின்றார்களே என்ற ஆச்சரியம்.
                 
திகைப்பு: காரை வாங்கி சென்ற இருவர், காரை வாங்கிக் கொண்டார்களா - அல்லது எந்த நேரமும் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து - வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ? என்ற திகைப்பு. 
                     
பயம்: 
# காரை ஓட்டிச் சென்றவர்கள், வழியிலோ அல்லது ஷூட்டிங்கிலோ அதை சேதப்படுத்தி, அதை ஒரு தகர டப்பாவாக ஆக்கித் திரும்பக் கொண்டு வந்து தள்ளிவிட்டு, கொடுத்த் பணத்தைத் திரும்பக் கேட்பார்களோ? 
                    
# காரை ஓட்டிச் சென்றவர்கள் இன்னும் காரின் ஒரிஜினல் பத்திரங்களைப் பெற்றுச் செல்லவில்லை. ஏதேனும் கடத்தல் / கொலை / கொள்ளையில் காரைப் பயன்படுத்தி - அவர்கள் தப்பித்து, காரின் தற்போதைய சொந்தக்காரராகிய தம்மை மாட்டிவிட்டுவிடுவார்களோ? 
                  
# வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்துச் சிதறிய கார் தன்னுடையதுதானோ? ஒருவர் கார் தீப்பற்றி எரிந்ததில் இறந்துபோனார் என்று பேப்பரில் படித்தோமே, இன்னொருவர் எங்கே? 
                       
இந்தக் கடைசி விஷயம்தான் அவருக்கு ரொம்பவும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஞாயிற்றுக் கிழமை காலை, பேப்பரில் வெளியாகியிருந்த திகில் கார், மற்றும் கார் மர்மம் பற்றிய செய்தி, படம் ஆகியவை அவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. அது நிச்சயம் தன்னுடைய கார்தான் என்று அவர் நினைத்தார்.  தன்னுடைய கார் வேறு எந்த வில்லங்கமான விஷயத்திலும் மாட்டிவிடவில்லை என்ற எண்ணம் அவருக்குத் தெம்பை அளித்தது. 
                            
'கா' உடனே கிளம்பி, ஓர் ஆட்டோ பிடித்து, பேப்பரில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றார். காரைச் சுற்றி சிறு கூட்டம். சிலர் காரின் பின் ஜன்னல் வழியாக உள்ளே இருந்தவைகளை பார்த்துச் சென்றனர். சந்தேகமே இல்லை; இது தன்னுடைய கார்தான்! நம்பர் ப்ளேட் மட்டும் காணவில்லை. அந்த இரண்டு திருட்டு தடியர்கள் தன்னுடைய காரை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பிறகு எங்கேயாவது ஓடியிருக்கவேண்டும் என்று எண்ணமிட்டவாறு, வேறொரு ஆட்டோ பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார் 'கா'.
*** *** *** *** *** 
போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரங்கனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போயிற்று. காலை மணி ஒன்பதரை ஆன பொழுது, ஒருவர் உள்ளே நுழைந்து, நகரின் பிரதான வீதியில் நிறுத்தப் பட்டிருப்பது, தன்னுடைய கார்தான் என்றவுடன் சோபனாவை மனதிற்குள் பாராட்டினார். தன்னுடைய லாப் டாப்பில் வீடியோ சாட் ஆன் செய்து, வெப் காமில் வந்தவரின் முழு உருவமும் பதியும்படி அமைத்தார். லாப் டாப்பின் ஸ்க்ரீன் மட்டும், வந்து பேசுபவரின் பார்வையில் படாதவாறு திருப்பி வைத்துக்கொண்டார். 
                  
"வாங்க மிஸ்டர் .......?"
                   
"கார்த்திக். சார் - என் பெயர் கார்த்திக். கடை வீதியில் நிறுத்தப் பட்டிருக்கும் கார் என்னுடையதுதான். அதன் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என்னிடம் உள்ளது. அதை, சென்ற ஞாயிறு அன்று இருவர் என்னிடமிருந்து வாங்கிச் சென்றனர்.  பிறகு அந்தக் காரை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். கடவுளுக்கு நன்றி - என்னைப் பிடித்த குழப்பங்கள் எல்லாம் விலகிவிட்டன!"
                          
"உட்காருங்க மிஸ்டர் கார்த்திக். ரிலாக்ஸ். உங்கள் காரை எப்படி விற்றீர்கள்? வாங்கியவர்கள் யார்? எப்படி இருந்தார்கள், என்றைக்கு, எப்படி காரை உங்களிடமிருந்து வாங்கி சென்றார்கள்? டாக்குமெண்ட்ஸ் ஏன் இன்னும் உங்களிடம் இருக்கின்றன? எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள். முதலில் உங்கள் விலாசம் சொல்லுங்கள்?"
          
சோபனா தன்னுடைய மைக்கை மியூட் செய்து வைத்திருந்தார். ஸ்பீக்கர் மட்டும் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கின்ற பேச்சுக்களை இங்கே ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. காதில் கேட்கின்ற முக்கிய விவரங்களை ஒலிப்பதிவு செய்துகொண்டும், ஆங்காங்கே சில நோட்ஸ் எழுதிக் கொள்வதுமாக பிசியாக இருந்தார் அவர். 
                
கார்த்திக் தன விலாசம் சொன்னார். 
                  
பார்த்துக் கொண்டிருந்த + கேட்டுக் கொண்டிருந்த சோபனா உடனடியாக எலெக்டிரானிக் சாமியாரை - அந்த விலாசத்திற்குப் போய்ப் பார்க்கும்படியும், அந்த விலாசத்திற்கு வருகின்ற எல்லோரையும் எ சா வினுடைய செல் காமிராவில் ஃபோட்டோ எடுத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளும்படி கூறி அனுப்பினார். 
                     
சோணகிரியிடம் தன கைப்பையில் இருந்த கார் சாவியைக் கொடுத்து - உடனே ஒரு ஆட்டோ பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ஒரு போலீஸ்காரரையும் அழைத்துக் கொண்டு போய், நிறுத்தப்பட்டிருக்கும் காரை எடுத்துக் கொண்டு போய் அதை மாருதி வொர்க் ஷாப்பில் திருப்பிக் கொடுத்து, ரமேஷுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்துவிடவும் என்றும் சொன்னார். 
                         
'காரை ரமேஷின் வொர்க் ஷாப்பில் திருப்பிக் கொடுக்க, ஒரு போலீஸ்காரரை சோணகிரியுடன் தயவு செய்து அனுப்பிவைக்கவும்' என்று ஸ்க்ரீனில் டைப் செய்தார். படித்த ரங்கன் சரி என்று தலை ஆட்டினார். 
                 
சோணகிரி, "போலீஸ்காரர் எதுக்கு பாஸ்? - எனக்கு ஒன்றும் பயமில்லை. யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது." என்றார். 
                
சோபனா, "சோணகிரி - நீங்க நான் சொன்னதை மட்டும் செய்யுங்க. தான்தோன்றித் தனமா எதையாவது செஞ்சி வெக்காதீங்க. இன்னொருவாட்டி ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா சீட்டைக் கிழிச்சுடுவேன்!" 
                   
சோணகிரி பின் பக்கமாகத் திரும்பி "வெவ்வேவ்வேவ்வேவ்வே" என்றார். 
                    
சோபனா, "சார் அந்தப் பக்கமும் ஒரு வெப் காம் இருக்கு. அழகுக் காட்டினது போதும் - போய் வேலையைப் பாருங்க" என்றார், குரலை உயர்த்தி. 
                   
சோணகிரி, ' ஆமாம் இந்த ஓட்ட அதிகாரத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை' என்று முணுமுணுத்தார். 
                   
"என்ன சொல்றீங்க?"
                   
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னேன் பாஸ்!" 
             
"உம் - அந்த பயம் இருக்கட்டும்!" 
                  
"அழகாய் இருக்கிறாய் - பயமாய் இருக்கிறது" என்று கூறிய சோணகிரி, "பாஸ் போலீஸ்காரர் எதுக்கு என்பதை மட்டும் சொல்லிடுங்க பாஸ் ... ப்ளீஸ் ..." என்றார். 
          
சோபனா புன்னகையுடன், "அப்படிக் கேளுங்க. நம்ப நிறுத்திவிட்டு வந்த காரை, திரும்பக் கொண்டுபோய் கொடுப்பது என்பது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு சுலபம் இல்லை. இப்பொழுது தினசரிகளில் இடம் பெற்றுவிட்ட அந்தக் காரைச் சுற்றிலும் பெரும் கூட்டம் இருக்கும். யாராவது முன் பின் தெரியாத ஆசாமி போய் காரை எடுக்கின்றேன் என்று சொன்னால், மக்கள் எல்லோரும் போலீசாக மாறி, கேள்வி மேல கேள்வி கேட்டு, திட்டி, முடிந்தால் தட்டினாலும் தட்டிவிடுவார்கள். போலீஸ் உடன் வந்து, இவர் காரை எடுப்பது எங்கள் அனுமதியோடுதான் என்பது போல முக பாவனை காட்டினாலே பெரும்பாலானவர்கள் சமாதானமாகி சென்றுவிடுவார்கள். போதுமா?" என்று கேட்டார். 
                
"ஓ இதுதானா மேட்டர்!" என்று வியந்தவாறே புறப்பட்டார் சோணகிரி.
******************
கார்த்திக் நாம் ஏற்கெனவே 'எப்படியாவது தப்பிக்கவேண்டும்' முதல் பகுதியில் படித்திருந்த விவரங்களை ரங்கனிடம் விவரமாகக் கூறினார். கேட்டுக் கொண்டிருந்த சோபனா, 'வந்திருந்த இருவர் உருவ அமைப்பு?' என்று டைப் செய்து கேட்டார். 
             
ரங்கன், "கார்த்திக் அவர்கள் இருவரும் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்கள் என்று விவரியுங்கள்?" என்று கேட்டார். 
                   
கார்த்திக், "நாகரீக உடை அணிந்தவர் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். நீலக கலர் பாண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பெயர் செல்வப் பெருமாள் என்றார். உடன் வந்தவர், அவருடைய உதவியாளர் போலக் காணப்பட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பெயர் கணேசன் என்று சொன்னார்." 
            
"உடல் அமைப்பு?"
             
"இருவருமே குண்டாகத்தான் இருந்தனர்."  
                   
இந்த விவரம் ரங்கன், சோபனா இருவரையுமே சற்று சிந்திக்க வைத்தது. தீனதயாள் எப்படி இருந்தார் என்ற கேள்விக்கு பொன்னுசாமி, இறந்துபோன தீனதயாள் - ஒல்லியாக, சோளக்கொல்லை பொம்மை போல இருந்தார் என்றும், அதனால்தான் அவரால் சுலபமாக காருக்கு அடியில் சென்று ரிப்பேர் செய்யமுடிந்தது என்று தான் நினைத்ததையும் கூறியிருந்தார். 
                      
"அவர்களை மீண்டும் பார்த்தால், உங்களால் அடையாளம் காட்டமுடியுமா?"
           
"முடியும்" 
             
"அவர்கள் இருவரும் கொடுத்திருந்த அலைபேசி எண்களில் பிறகு அவர்களைத் தொடர்பு கொண்டீர்களா?"
                        
"புதன் கிழமை தொடர்பு கொண்டேன். இருவருமே என்னை யார் என்றே தெரியாது என்றும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் கார் ஒன்றையும் வாங்கவில்லை என்றும் கூறுகிறார்கள்!" 
            
"அந்த நம்பர்களை எனக்குக் கொடுங்கள்."
                 
கார்த்திக் தன அலைபேசியின் நினைவகத்திலிருந்து அவைகளைப் பார்த்துச் சொல்ல, அந்த எண்களை எழுதிக்கொண்டனர் ரங்கனும் சோபனாவும். 
                                  
"சென்ற ஞாயிற்றுக் கிழமை, உங்கள் காரை வாங்குவதற்காக உங்களைத் தொடர்புகொண்டவர்களின் தொலைபேசி / அலைபேசி எண்கள் உங்களிடம் உள்ளனவா?" 
                     
"இருக்கிறது. இதோ இந்த அலைபேசியிலேயே PCB 1, PCB 2 என்று ஏழெட்டு எண்களை சேமித்து வைத்துள்ளேன். அவைகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன்." அவர் சொல்லச் சொல்ல, ரங்கனும் சோபனாவும் எல்லாவற்றையும் எழுதிக்கொண்டனர். 
                   
" PCB என்றால் என்ன?" 
               
"Prospective Car Buyer" 
                    
'அவரை அவர் வீட்டுக்கு சென்று சில கேள்விகள் கேட்க அனுமதி வேண்டும். அவரிடம் கார் பற்றிய உண்மைகளைக் கூறிவிடலாம்' என்று டைப் செய்தார் சோபனா. 
                  
ரங்கன் கார்த்திக்கிடம் கூறினார், "இன்றோ அல்லது நாளையோ உங்களை வீட்டில் வந்து என்னுடைய நண்பர்கள் இருவர் பார்த்துப் பேசுவார்கள். வீட்டையும் கார் இருந்த இடத்தையும், மற்ற விவரங்களையும் காட்டி அவர்களுக்கு உதவுங்கள். கார்த்திக் நீங்க யாரோ விரித்த ஒரு பெரிய சதி வலையில், உங்களையறியாமல் மாட்டிவிட்டீர்கள். உங்களை இந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க எங்களால் முடிந்தவரை உங்களுக்கு உதவுகின்றோம். கடைவீதியில் நீங்கள் பார்த்தது, உங்களுடைய கார் இல்லை. உங்கள் காரைப் போன்றே ஒன்றை நாங்கள்தான் நிறுத்தியிருந்தோம். உங்கள் கார், வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது.  வெரி சாரி டு சே திஸ்..." 
                           
கார்த்திக் திக்பிரமைப் பிடித்து, இன்ஸ்பெக்டரைப் பார்த்தபடியே மயக்கமடைந்தார். 
(தொடரும்) 
                    

1.6.11

கே யைத் தேடி 05


அத்தியாயம் ௦05: "தூண்டில் கார்!"

"ஹல்லோ "

"So - பொன்னுசாமி என்ன சொன்னார்?"
   
சோபனா காரில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டை இன்னும் சற்று சத்தமாக வைத்துவிட்டு, மெல்லிய குரலில் "அது இந்தக் கேசுக்கு சம்பந்தம் இல்லாதது சார். அதையும் தவிர சம்பந்தப்பட்டவர் இப்போ எங்களுக்கு இடத்தைக் காட்ட உடன் வந்து கொண்டு உள்ளார். அவரை இந்த நேரத்தில் ஏதேனும் சொல்லி அப்செட் செய்தால் - அப்புறம் நமக்கு வேண்டிய விஷயங்களை விட்டுவிட்டு, வேண்டாதவைகளைத் துரத்தவேண்டி வரும்." என்றார். 

"சரி அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பொன்னுசாமியை முட்டிக்கு முட்டி தட்டி - அது என்ன என்று தெரிந்து கொள்கிறேன்" என்றார் ரங்கன். பிறகு சொன்னார்," ஃபோரென்சிக் லாப் இண்டரிம் ரிப்போர்ட் வந்துடிச்சு. குண்டு வெடிப்பில் முழுவதும் சேதமடைந்த கார் கருப்பு நிறம் என்று பொன்னுசாமி கூறியிருந்தார். அது சமீப காலத்தில், ஸ்டீல் கிரே நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மேம்போக்காக நிறம் மாற்றப் பெற்ற  கார் என்று லாப் ரிப்போர்ட் சொல்லுது."  

சோபனா ஒரு வினாடி யோசித்துவிட்டு, "அப்படியா? சரி - நாளைக் காலை பத்தரை மணிக்குள், குண்டு வெடிப்பில் சேதமடைந்த காரின் சொந்தக்காரரை நீங்கள் கைது செய்து விசாரிக்கலாம்." என்றார். 
    
"எங்கே? எப்படி?"   
               
"நாளைக்குக் காலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கே வருவார். வந்து நகரின் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் தன்னுடையதுதான் என்றும், அந்தக் காரைத் தன்னிடமே ஒப்புவிக்கும்படியும் கேட்பார். அந்த நேரத்தில், உங்க வெப் காம் ஆன் செய்து வைத்திருங்கள்; நாங்களும் எங்கள் அலுவலகத்திலிருந்து பார்க்கின்றோம்; எங்களுக்குத் தோன்றுகிற சந்தேகங்களை வீடியோ சாட்டில் ஓசைப்படாமல் டைப் செய்து காட்டுகின்றோம்." 

"சரி So, அப்படியே செய்கிறேன். வேறு ஏதாவது வேண்டுமா?

"ஆமாம் சார் - லோகல் மாருதி வொர்க் ஷாப்பில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா?" 

"மாருதி வொர்க் ஷாப்பா.... ம்ம்ம் தெரியும். அதன் மேனேஜர் ரமேஷ் எந்த நேரத்திலும், எந்த உதவியும் எனக்கு செய்வார். அவருடைய செல் நம்பரைத் தருகின்றேன்; என் பெயரைச் சொன்னாலே போதும் - அவுட் ஆஃப தி வே - சென்று கூட உதவி செய்வார்" 
     
"ஓ கே. நாளைக் காலை போலீஸ் ஸ்டேஷனில் தயாராக இருங்கள். பை." 
          
"பை" 
*******************************
'கெம்பா' வில், சோபனா, எ சாமியார், சோணகிரி மூவரும், பொன்னுசாமியிடம், தீனதயாள் பற்றி, கார் நின்றிருந்த இடத்தைப் பற்றி, எந்த திசையைப் பார்த்து நின்றிருந்தது, தீனதயாளின் குரல் எப்படி இருந்தது, உருவம் எப்படி இருந்தது போன்ற எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர். தீனதயாளின் அடையாள அட்டை என்ன நிறம், அதில் மேலும் என்ன விவரங்கள் அவருக்கு ஞாபகம் இருந்தன போன்ற விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். பொன்னுசாமியின் பீட் ஸ்டாண்ட் இருந்த இடத்திற்கு அருகே உள்ள கடையின் தொலை பேசி எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.  
                       
அதன் பிறகு, எ சாமியார், பொன்னுசாமியிடம், "நீங்க எங்க கூட ஒரு வொர்க் ஷாப் வரைக்கும் வாங்க; இங்கே நின்றிருந்த கார் பார்ப்பதற்கு எந்த மாதிரி இருந்தது என்று அங்கே கொஞ்சம் அடையாளம் காட்டுங்க. உங்களை எங்கள் காரிலேயே திரும்பக் கொண்டுவந்து விட்டுவிடுகிறோம்." என்றார். 
                  
அதற்கு இசைந்த பொன்னுசாமி அவர்களுடன் மாருதி வொர்க் ஷாப் சென்று, குண்டு வெடிப்பில் சேதமடைந்த கார் மாதிரியே இருந்த சில கார்களை அடையாளம் காட்டினார். சோபனாவும், சோணகிரியும் , வொர்க் ஷாப்பின் மேனேஜரைப் பார்க்கச் சென்றனர். எலெக்ட்ரானிக் சாமியார், பொன்னுசாமியை அவருடைய டூட்டி ஸ்பாட்டில் இறக்கிவிட்டு, எ சா & கா சோ டிடெக்டிவ் ஏஜென்சிக்கு சென்றார். வழியில் சோபனாவிடமிருந்து அவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. 
              
"சாமி - உடனே இரண்டு ஐநூறு ரூபாய்க் கட்டுகள் தயார் செய்யுங்கள். மேலும் கீழும் மட்டும் நல்ல நோட்டுகள். மீதி எல்லாம் வெள்ளைத் தாள்கள் இருந்தால் போதும். நம்முடைய அலுவலக அலமாரியில் ஐநூறு ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்ட காகிதங்கள் ஏராளமாக இருக்கும். கூடவே எங்கள் பேங்க் ரப்பர் ஸ்டாம்ப் இருக்கும். எல்லாவற்றையும் தயார் செய்துகொண்டு, பொன்னுசாமி பீட் இடத்திற்கு சற்று முன்பாக நம்ப கார்ல வெயிட் பண்ணுங்க. நாங்க நம்பர் ப்ளேட் இல்லாத, ஸ்டீல் கிரே நிறக் கார் ஒன்றை அந்தப் பக்கம் ஓட்டி வருவோம். நீங்க தயார் பண்ணிய அந்த இரண்டு நோட்டுக் கட்டுகளையும் அந்தக் காரின் பின் கதவு ஜன்னல் வழியாக உள்ளே போட்டு விடுங்கள். பிறகு எங்கள் கார் சென்ற இரண்டு மூன்று நிமிடங்களுக்குள், பொன்னுசாமியையும் நம்ம காரில் அழைத்துக் கொண்டு, எங்கள் கார் சென்ற திசையில் எங்களைப் பின் தொடருங்கள். இந்த முறையாவது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும், சட்டத்திற்குப் புறம்பாக நம்பர் ப்ளேட் இல்லாமல் ஓடிய ஒரு காரை உடனடியாக பொன்னுசாமி தன்னுடைய மேலிடத்திற்கும், போலீசுக்கும் - முடிந்தால் பத்திரிக்கைகளுக்கும் தெரியப் படுத்தட்டும். சரியா?"  
     
"சரி புரிந்தது."  
             
எல்லாம் திட்டப் படி நடந்தது. மாருதி வொர்க் ஷாப் ரமேஷ், ரங்கன் சார் ஏற்கெனவே அழைத்து கா சோ வுக்கு உதவி செய்யச்சொல்லி கேட்டுக் கொண்டதால். கா சோ கேட்டுக் கொண்டபடியே, ஸ்டீல் கிரே நிறக் காரை, நம்பர் பிளேட்டுகளை கழற்றி வைத்துகொண்ட பின் சோபனா மற்றும் சோணகிரியுடன் அனுப்பினார். கார் மறுநாள் மதியம் திரும்ப வொர்க் ஷாப்புக்கு கொண்டுவந்து விடப்படும் என்று உறுதி கூறி, காரை ஓட்ட ஆரம்பித்தார் சோபனா. பின்னால் இருக்கையில் சோணகிரி அமர்ந்திருந்தார். 
                 
பொன்னுசாமி பீட் ஸ்பாட்டுக்கு முன்பாக இருட்டான ஓரிடத்தில், எ சா - நோட்டுக் கட்டுகளுடன் சாலையோரத்தில் நின்றுகொண்டு இருந்தார். சோபனா எ சா இருந்த இடம் அருகே வண்டியை சற்று நிறுத்தினார். நொடியில் தன கையிலிருந்த பணக்கட்டுகளை திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே வீசிவிட்டு, பொன்னுசாமியை நோக்கி நடந்தார், எ சாமியார். 
                 
எ சாமியார் பொன்னுசாமி அருகே சென்ற பின், சற்று தாமதித்து, பொன்னுசாமி இருந்த இடத்தை நிதானமாக காரில் கடந்தார் சோபனா. இரவு ஆகிவிட்டதால், அந்த இடத்தில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. கார் கடந்து சற்று நேரத்திற்குள், எ சாமியார் - இந்தக் காரை சுட்டிக் காட்டி ஏதோ சொல்வதும், பொன்னுசாமியும் அதற்குத் தலை ஆட்டியபடி, எ சா வுடன் சென்று காரில் ஏறுவதும் தெரிந்தது. 
                     
சோபனா காரை ஓட்டியபடியே, சோணகிரியிடம் பின் இருக்கையில், இரண்டு பணக்கட்டுகளையும் எப்படி வைக்கவேண்டும் என்பதைக் கூறி, எந்த நேரமும் காரை நிறுத்தி, இருவரும் இறங்கி சென்றுவிடவேண்டும் எனவே தயாராக இருக்கும்படி கூறியவாறு பாதையின் இரண்டு பக்கங்களையும் பார்த்தவாறு ஓட்டி வந்தார்.கார் ஊருக்குள் நுழைந்து சிறிது தொலைவு சென்றவுடனேயே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை ஒன்று அவர் கண்ணில் பட்டது. காரை இடது பக்கம் திருப்பி, கொஞ்சதூரம் மெதுவாக ஓட்டி, கூட்டத்தில் யார் மீதும் மோதிவிடாமல் சர்வ ஜாக்கிரதையாக, ஒரு மரத்திற்கு அருகே நிறுத்தினார். பார்க்கிங் ப்ரேக் போட்டு, காரின் கண்ணாடி ஜன்னல்கள் எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு, கதவுகளை பூட்டி, காரிலிருந்து இருவரும் இறங்கியவுடன், காரின் கதவைப் பூட்டி, சாவியைக் கைப்பையில் போட்டுக் கொண்டு, சோபனா சோணகிரி இருவரும் ஒரு ஆட்டோ பிடித்தனர். ஆட்டோவில் சென்றுகொண்டு இருக்கும் பொழுது, எ சாமியாரை அலை பேசியில் அழைத்து, கார் நிற்குமிடத்தை சுருக்கமாக அடையாளம் கூறி, பொன்னுசாமி புகார் கொடுக்க எல்லா உதவியும் செய்யும்படி கூறினார். 
                  
மறுநாள் காலை தினசரியில் முதல் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் பெரிய எழுத்துகளில் வந்திருந்தது அந்த செய்தி: 
              
"நகரின் சந்தைக்கு அருகே அடையாளம் காணப்படாத திகில் கார். பின் இருக்கையில் ஏராளமாகப் பணம்.!   

கடத்தல்காரா? தொடரும் கார் மர்மங்கள்!!" 

(தொடரும்)