28.9.12

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 09


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...


மூன்றுமே சுஜாதா பதில் சொன்ன கேள்விகள். 
நீங்களும் படித்திருக்கக் கூடும்! 
படித்திருந்தாலும் உங்கள் பதில்கள் எங்களுக்கு முக்கியம். 
வாசக நண்பர்களின் பதில்கள் வந்தவுடன் இந்தக் கேள்விகளுக்கான சுஜாதா பதில்கள் தனிப்பதிவில் தரப்படும்!!


1) விதியை நம்புகிறீர்களா?

2) கடவுளா.... விஞ்ஞானமா?


3) நம்பிக்கைத் துரோகியை மன்னிக்க முடியுமா?

                      

27.9.12

உள் பெட்டியிலிருந்து 09 12


தத்துபித்துவங்கள் 

காலிப் பர்ஸ் பல கோடி அனுபவப் பாடங்களைத் தரலாம். பணம் நிரம்பிய பர்சோ பல கோடி வகைகளில் உருப்படாமல் அடிக்கலாம்/கெடுக்கலாம்!
உங்களுக்குள்ளேயே நீங்கள் செய்யும் பயணம்தான் உங்களுக்கு ஆழ்ந்த அமைதியைத் தரும்! 
எல்லா முயற்சிகளும் வெற்றியாக மாறுவதில்லைதான்...ஆனால் வெற்றிக்கான அஸ்திவாரமாக/படிக்கட்டாக அமையலாம்.
ஆணின் மௌனம் பெண்ணின் இதயத்தை உடைக்கும். பெண்ணின் மௌனம் ஆணின் இதயத்தை அமைதியாக்கும்.
கடவுள் நம் கையிலிருந்து எதையாவது பறித்து விட்டாரோ என்று கவலைப் படுவதை விட, அடுத்து ஒரு சிறந்த பொருள் கிடைக்க கையைக் காலி செய்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தப்பாயிடுமோ என்று பயந்து ஒண்ணும் செய்யாமலிருப்பதை விட முயற்சி செய்து தப்பானாலும் கத்துக்கறது பெட்டருங்க....
தோல்வி இதயத்துக்கு போகக் கூடாது. வெற்றி தலைக்கு போகக் கூடாது.
=============================
 
சத்தியமா ஜோக்குதாங்க.... (ஏற்கெனவே படிச்சதுதான்...)

அவன் : "சார், என் மனைவியை ரெண்டு நாளாக் காணோம்!"

போஸ்ட் மாஸ்டர் : "மிஸ்டர்...இது போஸ்ட் ஆபீஸ்...நீங்கள் இதை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லணும்..."

அவன் : "ஐயோ சந்தோஷத்துல எங்க போறதுதுன்னே தெரியலையே..."

--------------------------

தத்துபித்துவத்துல சேர்த்திருக்கணுமோ...!

கோபம் என்பது அடுத்தவர் தவறுகளுக்கு நம்மைத் தண்டித்துக் கொள்வது!

===================================

புத்தம்புதுக் காலை...
ஒரு புதிய தொடக்கம்...
புதிய ஆசீர்வாதங்கள்...
புதிய நம்பிக்கைகள்...
கண் விழிக்கும்
ஒவ்வொரு நாளும் 
இந்தப் புதிய காலைகள்
கடவுளின் கொடைகள்
===================================

இந்த உலகம் இருக்கே... உலகம்...
போராடும்வரை வீண் முயற்சி என்பார்கள்...வெற்றி பெற்றவுடன் விடா முயற்சி என்பார்கள்...(ஃபி. கேஸ்ட்ரோ)

=================================
கடவுள் மீது சந்தேகம்...!!
 
இதயத்தில் மட்டுமல்ல நாக்கிலும் கடினம் இருக்கக் கூடாது என்பதை உணர்த்தத்தான் கடவுள் இவ்விரண்டு அவயங்களையும் எலும்பில்லாமல் படைத்தாரோ...

================================
நம்பிக்கைங்க... நம்பிக்கை!
 
ஒரு சின்னக் குருவி/பறவை கிளையின் மீது உட்காருவது கிளையின் மீதுள்ள நம்பிக்கையால் அல்ல, தன் சிறகின் மீதுள்ள நம்பிக்கையால்...

=============================

 படங்கள் : நன்றி இணையம்!

25.9.12

P. சுசீலா


சுசீலாம்மாவின் குரலை, அவர் குரலில் பாடல்களை ரசிக்காதவர்கள் யார்? நிறைய நிறைய அவரின் பாடல்கள் பிடிக்கும் என்றாலும் இங்கே கொஞ்சம் பகிர்கிறேன். மனம் வராமல்தான் நிறுத்துவேன்! சமீபத்தில் ஜெயா டிவி எம் எஸ் விஸ்வநாதன் நிகழ்ச்சியில் அவர் பாடலை அவரே பாடியபோது பாவமாக இருந்தது. அவருக்கு வயதாகி விட்டது. அவர் பாடிய பாடல்களுக்கு இல்லை! நம்மால் அதை இப்போதும் தெரிவு செய்து கேட்க முடியும்...


1) "கங்கைக்கரைத் தோட்டம்..."
ஆரம்ப அறிமுக வரிகள் கேட்டு ஓடிவிடாதீர்கள்! ரெண்டு வரிகள்தான்... !!

"கண் திறந்து பார்த்தேன்... கண்ணன் அங்கு இல்லை... கண்ணீர் பெருகியதே...." ஆமாம் கேட்கும் நமக்கும்தான்!




2) "காவிரிக் கரையின் தோட்டத்திலே...."
என்ன ஒரு உற்சாகமான பாடல்...
 



3) "என்னை மறந்ததேன்...."
சோகம் சொல்லக் குரல் போதுமா, வரி போதுமா, டியூன் போதுமா... ஆஹா..



4) "உன்னை ஒன்று கேட்பேன்..."
வரிகள் பிரசித்தம். முதல் நாலு வரிகளில் தலைப்பாக வைத்து மணியன் தனிதனிக் கதைகளே எழுதியிருந்தார்!
"பேசாத பெண்மை பாடாது உண்மை... கண்ணை மெல்ல மூடும்... தன்னை எண்ணி வாடும்..."



5) "கண்ணன் வருவான்...."
"உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்... இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்.."


6) "காதல் சிறகைக் காற்றினில் விரித்து..."
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேச மறந்து சிலையாய் நின்றால்...."


7) "மாலைப் பொழுதின் மயக்கத்திலே...."
"இன்பம் கனவில் துன்பம் எதிரில்..."
"இளமையெல்லாம் வெறும் கனவு மயம்தான்... மயங்குது எதிர்காலம்..."

8) "கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..."
"அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்.... அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்..."




மீனாக்ஷி... !  சமீபத்தில் 'மூன்றாம் சுழி'யில் பின்னூட்டத்தில் 'எங்கள் ப்ளாக்கில் பாடல்கள் பகிர்ந்து நாட்களாகி விட்டன' என்று சொல்லியிருந்தீர்கள்... இப்போது திருப்தியா? எல்லா பாடல்களும் (மறுபடியும்) கேட்டீர்களா?

பாடல்கள் பகிரும்போது வழக்கமாகவே தோன்றுவது இதுதான். யார் 'க்ளிக்' செய்து கேட்கப் போகிறார்கள்? அவர்களிடம் இல்லாத பாடல்களா? அப்புறம் ஏன் பகிர்வு? இதெல்லாம் எனக்குப் பிடிக்கும்... இன்னும் கூடப் பிடிக்கும்... உங்களுக்கும் இந்தப் பாடல்கள் இப்போது நினைவுக்கு வருகிறதா என்று நினைவூட்டத்தான்!

24.9.12

இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 2

                                                                       [2]

 முன்கதைச் சு.....ட்டி!

அவர் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு அவர் கண்களைப் பார்த்தேன்.


"அப்பா.... உங்களைப் பார்த்ததும் பவானி எப்படி உங்களைத் தாத்தான்னு சொன்னா....?"

"ஆமாம்... எப்படிம்மா.... பழைய ஆல்பம் எதாவது கொண்டு வந்துட்டியா.... அப்படிக் கூட எதுவும் கொண்டு வந்த மாதிரித் தெரியவில்லையே...." 

திரும்பி பவானியைப் பார்த்தவர் அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியிலும் தலையிலும் உதடுகளை ஒற்றினார்.

ஏதோ நினைவு வந்தவராக திடீரென நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் "அவர் எங்கேம்மா..."

"யாருப்பா...." ஒன்றும் தெரியாதவள் போலக் கேட்டேன்.

"இவங்கப்பா...."

"எவங்கப்பா...." 

அவ்வளவு உடனே மாப்பிள்ளை என்று சொல்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் என் கேள்வியில் லேசான ஆர்வம் இருந்தது.

"உன் வீட்டுக்காரன்.... உன்னை இழுத்துகிட்டு வந்தானே.. அவனைத்தான்மா கேட்கிறேன்..."

தவிர்க்க நினைத்தும் என் முகம் லேசாக சிணுங்கியது.

  "அப்பா.... அப்படிச் சொல்லாதீங்கப்பா... அவர் மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்பா  ...."

"ம்...ஹூம்!" என்றார் வெறுப்புடன். "எங்கே..?" என்றார் மறுபடி ஒற்றை வார்த்தையில்.

"வெளியூர் ஷூட்டிங் போயிருக்கார்பா...ஒரு வாரம் ஆகும்!"

ஒரு நிம்மதி தெரிந்தது அவர் முகத்தில்.

"சாப்பிடலாம்பா...." தயக்கத்துடன் அவர் முகம் பார்த்தேன்.

"வேண்டாம்மா.... இதோ கிளம்பிடுவேன்.."

"அப்பா... அவள் ஸ்கூல் கிளம்ப...." 

அவர் நிமிர்ந்து பார்க்க, "வேண்டாம்பா.... யு கே ஜிதான.... இன்னிக்கி அவ ஸ்கூல் போக வேண்டாம்.... நீங்க நிதானமா போலாம் இல்லையாப்பா.... இருப்பீங்கதான....?" கேள்வியிலேயே ஏக்கத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தினேன்.

அவர் ஒன்றும் பேசவில்லை என்றாலும் டிரைவர் கொண்டுவந்து கொடுத்த பார்சலை எடுத்து பவானி கையில் கொடுத்தார்.

அங்கேயே அதைப் பிரித்த பவானி, "ஹை..... டெடிபேர்" என்று கத்தினாள். 




அவள் அதனுடன் விளையாடத் தொடங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்,

"கயல்.... டிரைவரைக் கூப்பிடு.." என்று தொடங்கியவர் தலையை ஆட்டி, தானே எழுந்தார்.

"இருங்கப்பா... நானே கூப்பிடறேன்.." என்று வாசலுக்கு வந்து டிரைவரைக் கூப்பிட்டேன்.

இவன் நான் அங்கு இருந்தபோது இருந்த டிரைவர் இல்லை. நான் வந்தபிறகு டிரைவர், வேலைக்காரர், சமையல்காரர் எல்லோரையும் மாற்றி விட்டார். தெரியும்!

என்னைக்கூப்பிட்டு வேலை ஏவி விட்டு, தானே கிளம்பியது உறுத்தலாக இருந்தாலும் என்னை பழைய மாதிரி 'கயல்' என்று அழைக்க வாய் வந்ததே சந்தோஷமாக இருந்தது.

பவானி அருகில் வந்து அவளிடம் என்ன வேண்டும் என்பது போல ஏதோ கேட்டார். டிரைவரிடம் ஏதோ சொல்லி பணம் கொடுத்து அனுப்பினார். அரை மணி நேரம் கழித்து டிரைவர் வந்து இன்னும் சில பார்சல்களைக் கொடுத்து வெளியில் சென்றான். அதில் சிலவற்றை எடுத்து பவானியிடம் கொடுத்தார். டிரைவர் வாங்கி வந்ததில் மிச்சம் இருந்த ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டேன். உள்ளே என்ன இருக்கும் என்று தெரியும்.

"நாம சேர்ந்து போய் வாங்கியிருக்கலாம்பா...." என்றேன். நிமிர்ந்து பார்த்தவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். நான் உள்ளே ஏதோ வேலை இருப்பது போல "இதோ வந்துடறேன்பா...." என்று சொல்லி உள்ளே வந்தேன். 

வேலை ஒன்றும் ஓடவில்லை. அவர் என்ன செய்கிறார் என்று உள்ளிருந்தே வேவு பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த இடைவெளி எங்கள் இருவருக்குமே தேவை என்று தோன்றியது. இப்போது கொடுத்துள்ள இந்த இடைவெளி எங்களுக்குள் இருக்கும் தற்போதைய தயக்க இடைவெளியை சற்று குறைக்கும். எங்களுக்குள் என்று சொல்லக் கூடாது. அவருக்கு இருக்கும் தயக்கத்தைக் குறைக்கும். அவர்தான் எங்களை நீண்ட நாள் கழித்துப் பார்க்கிறார். நாங்கள் அல்ல! விஷயங்கள் தெரியும்போது அவர் எப்படி நடந்து கொள்ளுவாரோ.... எப்போது எப்படிப் பேச வேண்டும் என்றும் தெரியவில்லை. சீக்கிரம் பேச மனதில் ஆர்வம் இருக்கிறது.



அப்பா எழுந்து ஹாலைச் சுற்றி வந்தார். புத்தகங்களைப் புரட்டினார்.  டிரஸ்ஸிங் டேபிள் மேலே இருந்த தன்னுடைய, மற்றும் பாட்டியின் புகைப் படத்தைப் பார்த்து விட்டு பாராதது போலத் திரும்பி நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டார்! பவானியை விட்டு நீண்ட தூரம் போகாமல் அவளைக் கூடக் கூட அழைத்துக் கொண்டார்.நல்லவேளை, அவளைப் பள்ளி செல்ல விடவில்லை நான்! இப்போது எங்களுக்குள் இருக்கும் நல்லெண்ணத் தூதர் அவள்தான்! அவளை வைத்துதான் இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.

'சட்'டென இயல்பு நிலைக்குத் திரும்புவதுதான் எங்கள் இருவருக்குமே நல்லது என்று தோன்றியதால் ஏதோ மனதில் திடீரென அந்த தைரியம் தோன்ற ஒரு தட்டில் சூடாக ஆப்பங்கள் எடுத்துப் போட்டு, ஒரு பீங்கான் கிண்ணத்தில் பாயாவைப் போட்டு எடுத்துக் கொண்டு இயல்பாக அப்பாவிடம் நடந்தேன். 



"ஏய் வாலு.... தள்ளுடி... தாத்தா சாப்பிடணும்.... அப்பா.... இந்தாங்கப்பா... இதைப் பிடிங்க...." அவர் மறுக்குமுன் அவர் கையை இழுத்து ஒரு 'மக்'கில் நீட்டி டம்ப்ளரில் இருந்த தண்ணீரை ஊற்றி கை கழுவ வைத்தேன். டீபாய் மேல் ஆப்பத் தட்டை வைத்து சேரை எடுத்து எதிரே போட்டேன்.

அந்த தைரியம் எப்படி வந்தது என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. காரணம் வீட்டை விட்டு வந்த அந்த நிகழ்வும், அதன்பின் அவரின் கோபமும்! யோசித்துப் பார்க்கும்போது வீட்டில் இருந்த நாட்களில் கூட இந்த வேலை நான் செய்தது இல்லை. பாட்டிதான் செய்வாள். குழந்தையாய், மகளாய் நான் எதிரே இருப்பேன். அவ்வளவுதான்!  

என்னதான் கோபமிருந்தாலும் அப்பாதானே என்ற சொந்தம் தந்த உணர்வு மட்டுமில்லை, அவரின் கோபம் நிறையவே கரைந்து போயிருந்தது என்பதும் தெரிந்துதானே அவர் கையில் இந்த முகவரி கிடைக்கச் செய்தார் அவர்!

எதுவும் சொல்லாமல் அவர் வந்து உட்கார்ந்தபோது மனம் நிம்மதியடைந்தது. கண்கள் கலங்க முயற்சிப்பதைக் கட்டுப் படுத்தினேன்.

"நானும்.... நானும்..... நானும் சாப்பிடணும்.....எனக்கு..." என்று பவானி அந்தத் தட்டிடம் ஓட, எனக்கு பதற்றம் கலந்த கோபம் வந்தது. 

'கெடுத்துடுவா போலேருக்கே... இவ கிட்டக் கொடுத்துட்டு ஒதுங்கிடப் போறார்....'  
                                                                                                                          
                                                                                                                                 (தொடரும்)  


படங்கள் உதவி : நன்றி இணையம்.
                    

22.9.12

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 16/09 To 22/09/12


திண்டுக்கல் மேட்டுப் பட்டியைச் சேர்ந்த மிக்கேல்-சந்தியாகு அம்மாள் புதல்வர் நீதியரசர் எம் லியோ இத்தாலி வாடிகன் கத்தோலிக்கத் திருச்சபை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். நல்லாசிரியர் விருது பெற்ற தந்தை. விடுமுறையில் தமிழகம் வந்திருக்கும் இவர் பற்றி தினமணி கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

=============================


சாலையில் அடிபட்டுக் கிடப்பவரையோ மயங்கிக் கிடப்பவரையோ பார்த்துக் கடந்து செல்லும் எண்ணிறந்த நபர்களில் நானும் ஒருவன்தான். அப்படிச் செல்லாத, உடனே அவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து, அப்புறமும் ஆன உதவிகள் செய்து இன்னும் பல உதவிகள் செய்யும் உன்னத மனிதர் ஆனைக்குட்டி ஆனந்தன். மிக ஆரம்ப காலங்களில் பிறருக்கு உதவ வேண்டும் என்பதாலேயே மிகக் குறைந்த விலையில் சாலையோர டிபன் கடை வைத்தவராம் இவர்.1977 ல் இவர் ஒட்டிய ஆட்டோவின் பின்புறத்தில் இவரால் எழுதப் பட்ட 'பிரசவத்துக்கு இலவசம்' தான் அநேகமாக அந்தவகை இலவசங்களுக்கு முதலாம். இவரைப் பற்றியும் தினமணியில்...

========================== 

 
ஒரு ரூபாய்க் கூடக் கட்டணம் வாங்காமல், அதே சமயம் மாணவர்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு லட்சம் இன்சுரன்ஸ் வங்கியில் போட்டும் ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் பள்ளி. தமிழகத்திலேயே முதல் முறையாக சூரிய ஒளியில் மின்சாரம் பெற்று இயங்கும் பள்ளி. இத்தனை பெருமையும் பெற்றுள்ள பள்ளி திருவண்ணாமலை வேடப்பநூர் கிராமத்தில் உள்ள 'அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்'.  (முகப்புத்தகத்திலிருந்து)

=======================


கேரளாவில் பள்ளியில் பயிலும் குழந்தைகளை வைத்துத் தொடங்கப்பட்ட 'ஸ்டூடன்ட் போலீஸ் கேடட் ஆப் கேரளா' ஆரம்பத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு இப்போது 16,000 மாணவர்களை வைத்து நடத்தப் படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, வனப் பாதுகாப்பு, விழாக்காலங்களில் பொது மக்கள் பாதுகாப்பு என்று வெற்றிகரமாக நடத்தப் படும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உடற்பயிற்சி, கராத்தே, குங்க்ஃபூ , வாள் சண்டை, கலரி, வர்மக் கலை, யோகா என்று சகலமும் கற்றுக் கொடுக்கப் பட்டு மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறது. தமிழ்நாட்டிலும் பின்பற்றக் கூடிய நல்லதொரு திட்டம். (ஆனந்த விகடன்)

=============================


8695959595 ....... சென்னைக்குப் புதிதாக வரும் பலருக்கும் அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு இடங்களுக்குப் போகும் வழியைக் கூறும் நம்பர். பெயர் 'ரூட்ஸ்'. சென்னையில் எங்கு போக வேண்டுமானாலும் ரூட் இந்த நம்பரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். (ஆனந்த விகடன்)

===========================


சென்னைப் பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராம மணிவண்ணன். வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கணியம்பாடிக்கு அருகில் குரும்பப்பாளையம் என்ற கிராமத்தில் அமைதிப் பூங்கா என்ற பெயரில் ஆரம்பப் பள்ளி அமைத்து, யாரிடமும் எந்தக் கட்டணமும் வாங்காமல், மத்திய உணவு, பாடப் புத்தகம் எல்லாம் இலவசமாகத் தந்து படிக்க வைக்கிறார். எல்லாச் செலவையும் தன் சொந்த சம்பாத்தியத்திலேயே நடத்தும் இவரைப் பற்றி விளக்கமாக பேட்டி கண்டு எழுதி இருக்கிறது விகடன்.

==============================
======

மூணாறில் முப்பதடி ஆழம் கொண்ட, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்து அழுத மகனின் குரல் கேட்டுத் தவித்த சிறுவனின் தாய் சுஜா நீச்சல் தெரியாவிடினும் துணிச்சலாகக் கிணற்றில் குதித்து மகனை மீட்டு, அங்கிருந்த குழாயைப் பிடித்துப் போராட, ஊர் மக்கள் அவர்களை மீட்டனர்.

==========


வேலூர் 'உதவும் உள்ளங்கள்' தொண்டு அமைப்பு,  தெருவில் சுற்றிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்ட ஒருவரை மீட்டு சிகிச்சை அளிக்க, மெல்ல நினைவு திரும்பிய அவர் 26 ஆண்டுகளுக்கு முன் மன நிலை பாதிக்கப் பட்டு வீட்டை விட்டு வெளியேறிய நினைவுகள் வந்து, தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல,  அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் படார். பெயர் ஹிரேமட். அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவராம்.


====================

 

20.9.12

அலேக் அனுபவங்கள் 10 :: லஞ்ச எதிர்ப்பு!

                 
இது அசோக் லேலண்டு அனுபவம் இல்லை என்றாலும், அசோக் லேலண்டில் சேருவதற்காக, எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ற வகையில் பகிர்கின்றேன். 
           
அசோக் லேலண்டு இண்டர்வியூ முடிந்து சில மாதங்கள் (!) கழித்து, என்னை, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன், டிசம்பர் இரண்டாம் தேதி (1971) வந்து பார்க்கும்படி, கடிதம் எழுதியிருந்தனர். 
 
ஒன்று: மார்புப் பகுதியின் எக்ஸ் ரே படம். 
இரண்டு : வாக்சினேஷன் சான்றிதழ். 
மூன்று : டிப்ளோமா சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட் ஒரிஜினல். 
                       
அண்ணனுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக, கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல், எக்ஸ் ரே (அதற்குரிய கட்டணத்துடன்தான்!)  எடுத்துக் கொண்டேன். நாங்கள் கேட்காமலேயே அதில் ஒரு ரிப்போர்ட் வேறு - கவர் மீது ஒட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதிலே பார்த்தால் - எனக்கு பிராங்கிடிஸ் இருப்பதாக கண்டுபிடித்து எழுதியிருந்தார் யாரோ ஒருவர். ('என்னை நீ முன்னே பின்னே பாத்துருக்கியா ஐயா? அப்புறம் ஏன் இந்தக் கொலை வெறி!') 
                  
நான் அந்த ரிப்போர்ட்டைப் பார்த்த பிறகு, என்னுடைய கனவில் அடிக்கடி வியட்நாம் வீடு சிவாஜி வந்து இரத்தம் கக்கியபடி " நா  ம ஒண்ணு நெனச்சா தெய்வம் வேறு நெனைக்குதே  .... நாம என்னப்பா பண்ணமுடியும், என்ன்ன்ன.......ப்ப்ப்பா பண்ண முடியும் ....." என்று வசனம் பேசி மார்பைப் பிடித்துக் கொண்டு 'லொக்கு லொக்கு ..' என்று இருமினார்! !   
                
சரி எப்படியோ போகட்டும் (எப்படிப் போனது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்!) - அடுத்த விஷயம் இன் தி அஜெண்டா ஈஸ் - வேக்சினேஷன் சான்றிதழ். 
                 
எனக்கு வேக்சினேஷன் செய்யப்பட்டது, கடலூரில் ரெட்டிச் சத்திரத் தெருவில், குடியிருந்த வீட்டில், நான் தவழ்ந்து முடிந்து, தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்திருந்த நாட்களில். அப்போ யாரோ வீட்டுக்கு வீடு வந்து, குழந்தைகள் எல்லோரையும் கட்டாயப் படுத்தி அம்மை ஊசி குத்தி சென்றார்கள் என்று அம்மா சொன்ன ஞாபகம். அது மட்டும் அல்ல, அம்மை ஊசி குத்தப்பட்ட இடம் கையில் (இரண்டு கைகளிலும்) புஜ பல பராக்கிரமன் போல வீங்கிக் கொண்டு, என்னுடைய அம்மா ரயில் ஓடு, மண்டை ஓடு என்று கிடைத்த ஓடுகளை எல்லாம் இழைத்து போட்டு அந்தக் காயங்களை ஆற்றினார்கள் என்பதும் வரலாறு. தினமும் நான் வலி பொறுக்காமல் அழும்போதெல்லாம், அம்மா அம்மை ஊசிக் குத்தியவர்களை அர்ச்சனை செய்துகொண்டே இருப்பார்கள். இப்போ போய் அவர்களைப் பார்த்து எனக்கு வேக்சினேஷன் சான்றிதழ் வேண்டும் என்று கேட்டால் - அவர்கள் என்னை துரத்தித் துரத்தி அடிக்க மாட்டார்களோ! 
           
புரசைவாக்கத்தில், எதிர் போர்ஷனில் குடியிருந்த எவர்சில்வர் கோபால் (பெரம்பூர் பாரக்ஸ் ரோடில் எவர்சில்வர் பாத்திரங்கள் செய்கின்ற சிறிய தொழிற்சாலை வைத்திருந்தார்) எளிய யோசனை ஒன்று கூறினார். 'கங்காதீஸ்வரர் டாங்க் பக்கத்தில் சென்னை கார்ப்பொரேஷன் ஹெல்த் செண்டர் ஒன்று இருக்கின்றது. அங்கே போய் சுலபமாக சான்றிதழ் பெற்று வரலாம்' என்றார். 
                   
நவம்பர் இருபத்தொன்பதாம் தேதி, திங்கட்கிழமை. காலை இராகு காலத்தில், அந்த அலுவலகம் சென்றேன். அங்கே ஒரு செவிலி உள்ளும் புறமும் வேகமாக நடந்துகொண்டே இருந்தார். எதையோ எடுத்து வருவார். அதை வைத்துவிட்டு வேறு எதையோ எடுத்துச் செல்வார். முகத்தில் ஒரு கடு கடு. என்னைப் பார்த்ததும், "என்ன வேண்டும்?" என்று கேட்டார், கடு கடு குறையாமல். 
            
நான் சற்றுத் தயக்கமாக, 'வேக்சினேஷன் சர்டிபிகேட்' என்றேன். 
"எப்போ அம்மை குத்திகிட்டே?"
"ரொம்ப நாள் (!) முன்னாடி."
"எங்கே?"
"கையில" 
"அத்த கேக்கல ... எந்த ஊருல?"
"க .. க ... கடலூருல ...."
"வெளையாடுறியா? இங்க குத்திகினாதான் நாங்க சர்டிபிகீட்டு அல்லாம் குடுப்போம்."
"சரி. குத்திக்கிறேன்."
" செத்த நேரம் குந்து. ஆபீசரு ஒம்பது மணிக்கு வருவாரு. அவரு சொன்னாதான் குத்துறது, சர்டிபிகேட்டு எல்லாம்...."
குந்தினேன். 
ஆபீசர் வந்தார். நீல பாண்ட் வெள்ளை சட்டை. நர்சிடம், என்னைக் காட்டி ஏதோ கேட்டார். நர்ஸ் ஏதோ ஜாடை காட்டி ரகசியமாக கூறினார். ஆபீசர் ஜாடை காட்டி என்னை தன் மேஜைக்கருகே அழைத்தார். சென்றேன். பேரு என்ன? எங்கேயிருந்து வாறீங்க? விலாசம்? போன்ற கேள்விகளுக்கு பதில் சுலபமாக சொல்லிவிட்டேன். 
"வேலை பாக்குறீங்களா?"
"இல்லை."
"எதுக்காக சர்டிபிகேட்டு?" 
(மாட்டிகிட்டேனோ? - அசோக் லேலண்டில் வேலையில் சேர என்று சொன்னால் - முதல் மாத சம்பளத்தை லஞ்சமாகக் கேட்பாரோ என்றெல்லாம் பயம் வந்துவிட்டது.) 
"வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றேன். இண்டர்வியூ செய்பவர்கள் என்னுடைய எல்லா சர்டிபிகேட்டுகளையும் பார்க்க ஆசைப் படுகின்றார்கள். வேக்சினேஷன் சர்டிபிகேட் மட்டும்தான் இல்லை; மீதி எல்லாம் இருக்கு. அதனாலத்தான் ..." என்றேன். அவர் நம்பியதாகத் தெரியவில்லை. 
"இங்கே யாரோடு தங்கி இருக்கின்றீர்கள்?" 
"அண்ணனோடு."
"அவர் எங்கே வேலை பார்க்கின்றார்?"
"கீழ்ப்பாக் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்."
"டாக்டரா?"
"இல்லை"
கொஞ்ச நேரம் என் முகத்தைப் பார்த்தார். நானும் பேசாமல் அவர் முகத்தைப் பார்த்தேன். சரி இந்த ஆளை வேறு விதத்தில் மடக்கலாம் என்று தீர்மானித்து விட்டார் போலிருந்தது. 
"இன்றைக்கு வேக்சினேஷன் போட்டுகிட்டா அடுத்த வாரம்தான் சர்டிபிகேட் கிடைக்கும்."
பதறிப் போய்விட்டேன். "இல்லை சார். எனக்கு இன்றைக்கே சர்டிபிகேட் வேண்டும்."
அவர் வெற்றிப் புன்னகையுடன், "அதற்கு பீஸ் கொடுக்கணும்" என்றார். 
"எவ்வளவு?" என்றேன். 
அவர் கண்களைத் தாழ்த்தி ... "ஏதோ நீங்க இஷ்டப்பட்ட அமௌண்ட்..." என்றார். 
அப்போதான் எனக்கு, 'இது சம்திங் விவகாரம்'  என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. சென்னை மாநகரத்திலே எனக்கு அறிமுகமான முதல் லஞ்ச லாவண்ய நிகழ்வு இதுதான். 
"ஓ கே" என்றேன். 
அவர் சந்தோஷமாக, "போய் வாக்சினேஷன் குத்திக்குங்க. நான் சர்டிபிகேட் தாறேன்." என்றார். 
என் சட்டைப் பையில் அப்பொழுது இருந்தது ஒரே ஒரு எட்டணா காசுதான். ஆனாலும் என்ன தைரியம்! 
நான் ஆறாம் கிளாஸ் படிக்கும் பொழுது கூட அம்மை ஊசி குத்திக் கொண்டது அப்போ ஞாபகம் வந்தது. கையில் முழங்கை பகுதி மடியும் இடத்தில், இரண்டு இடங்களில் ஓரங்குல இடைவெளியில் அம்மைப் பால் வைப்பார்கள். பிறகு சின்னச் சின்ன ஊசியாக கால் அங்குல வட்டத்தில் அமைந்த ஓர் ஊசியை அம்மைப் பால் புள்ளிகளுக்கு மேலே வைத்து, கொஞ்சம் அமுக்கி ஒரே ஒரு சுற்று சுற்றுவார்கள். லேசாக எறும்பு கடித்தது போல இருக்கும். அவ்வளவுதான். 
கடு கடு நர்சும் இப்படிச் செய்வார் என்று (நம்பி) கையை நீட்டினேன். 
இரண்டு சொட்டு அம்மைப் பால் வைக்கும் வரை எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தது. 
அப்புறம் ..... ஐயோ கொடுமை! கூரான கோணூசி (போன்ற) ஒன்றை எடுத்துக் கொண்டு, 'சைக்கோ' படத்தில் நடக்கின்ற கொலை போல, 'சதக், சதக், சதக்' என்று ஒவ்வொரு இடத்திலும் ஐந்து சதக்குகள் ... குத்திவிட்டார் கடு கடு. 
   
'ஹூம் முன்பாவது எட்டணா கொடுக்கலாம் என்று நினைத்தேன் - பாவிகளா - இந்த சைக்கோ கொலைக்கு நான் ஒன்றும் தரமாட்டேன்' என்று முடிவெடுத்தேன். 
நர்ஸ் சென்று, ஆபீசர் தயாராக வைத்திருந்த சர்டிபிகேட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். 
             
அதை நான்காக மடித்து, பாண்ட் பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு, "தாங்க்ஸ்" என்று கூறியபடி, வாயிலை நோக்கி வேகமாக நடந்தேன். 
ஆபீசர், நர்சிடம், 'என்ன சொல்லிவிட்டுப் போறாரு அந்த ஆளு?' என்று கேட்டது மங்கலாகக் காதில் கேட்டது.  
              
நர்ஸ் ஏதோ சொல்லிவிட்டு, 'துரத்திப் பிடிக்கட்டுமா' என்று கேட்டது போல இருந்தது.   
            
"வேண்டாம் - போகட்டும். விட்டுடுங்க...."