21.4.15

திரை - எஸ் எல் பைரப்பா



இவரது மூன்று நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான வம்சவிருக்ஷா உட்பட.



1931 ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்.


35 பதிப்புகள் கண்ட புத்தகம்.  வெளியான பத்து மாதங்களுக்குள் 14 பதிப்புகளைக் கண்டது இந்தப் புத்தகம். வெளியான ஆண்டு 2007. கன்னடம் தவிர, தமிழ் ஹிந்தி மராத்தி, குஜராத்தி ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

அடுத்து என்ன எழுதப் போகிறார் என்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்தாளர்.  எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எழுத்தாளர்.  'ஆவரணா' என்ற இந்த 'திரை'  எழுதியபின், பைரப்பா 'கவலு' (வெளியான 4 நாட்களுக்குள் 4 பதிப்புகள் கண்டு அத்தனையும் விற்றுத் தீர்ந்து விட்டதாம்) என்ற பெண்ணியத்தைத் தாக்கும் கதை ஒன்றையும்,  'யானா' என்கிற விண்வெளிப் பயணம் மற்றும் மனித ஒழுக்க நெறிகள் பற்றியும் சொல்லும் கதை ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.  மகாபாரதம் பற்றி 1979 ல் இவர் 'பருவா'  என்ற பெயரில் நாவல் எழுதியுள்ளார். (எந்தப் பதிப்பகம் என்றுதான் தெரியவில்லை. பாவண்ணன் மொழிபெயர்ப்பு என்று தெரிகிறது)

ஒரு க்ரைம் ஸ்டோரி என்ற அளவிலோ காதல் கதைகள் என்ற அளவிலோ இவர் படைப்புகளிருப்பதில்லை.  ஒவ்வொரு படைப்புக்கும்,  அதை எழுது முன் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆராய்வது, குறிப்பெடுப்பது அப்புறம் அதைப் பற்றி எழுதுவது என்று கொள்கை வைத்திருக்கிறார் இந்த ஓய்வு பெற்ற மனோதத்துவப் பேராசிரியர்.  எனவே இவரது படைப்புகளை ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்குக்காக வாசித்துத் தாண்டிவிட முடியாது என்று தோன்றுகிறது.




நான் 'திரை' மட்டுமே படித்திருக்கிறேன். சத்தியத்தை மறைக்கும் வேலைக்கு ஆவரணமென்று பெயர்.  (அசத்தியத்தை வெளிக்கொணரும் செயலுக்கு விக்ஷேபம் என்று பெயராம்)  சரித்திரம் கலந்து எழுதப் பட்டிருக்கும் சமூக நாவல். அதுவும் தமிழில்.  எதுவும் அந்தப் படைப்புகள் எழுதப் பட்ட அசல் மொழியிலேயே படிப்பதே சிறந்தது என்ற கருத்தை இவரே இந்தப் புத்தகத்தில் மறைமுகமாகச் சொல்லவும் செய்கிறார். (அக்பர் சக்கரவர்த்தியின் சமகாலத்தில் அவரோடு இருந்தவர்களால் எழுதப்பட்ட மாஸிர்-இ-ஆலம்கிரி என்ற பார்சி மொழியில் எழுதப்பட்ட படைப்பைப் பற்றிச் சொல்லும்போது)


ஏனென்றால் திரு ஜெயா வெங்கட்ராமன் மொழிபெயர்த்துள்ள இந்நூலில் நிறைய இடங்களில் கதையை விவரித்துக் கொண்டு வரும்போது தன்னிலை, மூன்றாம் நிலை விளக்கக் குழப்பங்கள் இருக்கின்றன.

உள்ளுக்குள்ளேயே நாயகி எழுதும் ஒரு கதையைச் சொல்லி வருவது தனி உத்தியாக நடுவில் திடீர் திடீரென வருகிறது. அந்தக் கதை பெரும்பாலும் அந்தப் பெண்ணின் தந்தை படித்துச் சேர்த்து வைத்த ஆதாரங்கள், விவரங்கள் என்ன என்பதைச் சொல்லவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது பாதியிலேயே முடிவு தெரியாமல் நின்று விடுவது மூலத்திலும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். நோக்கம் முடிந்து விடுகிறது அல்லவா...

இது போன்ற படைப்புகளில் ஒரு படைப்பாளி தான் சொல்லவரும் கருத்தைச் சொல்ல ஒரு பாத்திரத்தைத் தன் படைப்பில் உருவாக்கிக் கொள்கிறான். அந்த வகையில் இந்த நாவலில் பைரப்பா சொல்ல வரும் கருத்தை லக்ஷ்மி என்கிற ரசியா பேகம் என்கிற லக்ஷ்மி பேசுகிறாள்.

"உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தி, மாற்றித் தவறான சரித்திரத்தை எழுதி அதை மக்களிடையே வெகுஜன ஊடங்களின் வாயிலாக பிரசாரம் செய்து வருகின்றனர்.  உண்மையான சம்பவங்களைத் தொகுத்து தகுந்த வராற்று ஆதாரங்களுடன் எழுதப் பட்டுள்ள ஆராய்ச்சி நூல்களை எல்லாம் திட்டமிட்டு ஒதுக்கித் தள்ளி விட்டு,  குறுகிய அரசியல், பதவி மற்றும் பொருளாதார ஆதாயங்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்படுபவைகளே பாடப் புத்தகங்களிலும், நூலகங்களிலும் இடம் பிடித்து வருகின்றன" என்கிறது முதல் முன்னுரை.

"இது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை. சரித்திரத்தைத் தப்பும் தவறுமாக எழுதுபவர்களைத்தான் சாடியுள்ளார்"  என்கிறது சதாவதானி ஆர். கணேஷின் முன்னுரை. 

தனது முன்னுரையில் ஆசிரியர், "சரித்திரப் புள்ளி விவரங்களில் எனது சொந்தக் கற்பனை எதுவும் இல்லை" என்கிறார். 

"சரித்திரத்தின் உண்மையில் கலையின் பாவம் கலந்து வந்திருந்தால் அந்த மட்டத்தில் இது ஒரு வெற்றிகரமான இலக்கியம் ஆகிறது"

"இந்த நாவலின் ஒவ்வொரு விவரத்தையும் அல்லது அதன் நடைக்கும் இருக்கும் ஆதாரங்களில் இலக்கியத்தின் திறனை இந்த நாவலில் அதைத் தாங்கும் வகையில் ஒரு பகுதியாக அமைத்திருக்கிறேன்.   நாவலின் கையாளும் உத்தியில் அந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு இந்த நாவலின் அமைப்புக்குள்ளேயே வடிவமைத்திருக்கிறேன் என்கிற உண்மையை எல்லா ஆக்கபூர்வமான எழுத்தாளர்களும், ஆழ்ந்த சிந்தனை உள்ள வாசகர்களும் உணர்ந்து கொள்ளலாம்.   எஞ்சியுள்ள ஆதாரங்களை இந்த நாவலின் உள்ளே இருக்கும் பாத்திரங்கள் மூலம் தேவையானவைகள் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இவை எல்லாவற்றிற்கும் ஒரு வடிவம் கொடுத்திருப்பது மட்டுமே எனது சொந்த முயற்சி"

"சரித்திரத்தின் உண்மைகளைப் பற்றி ஒரு எழுத்தாளர் எழுதப் புகும்பொழுது அதன் முழுப்பொறுப்பும் அவருடையதாகிறது"

"நமது முன்னோர்களின் எந்தெந்தச் செயல்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்த சாதனைகளினால் கவரப்படவேண்டும் என்கிற விவேகம் இல்லாமல் இருந்தால் நாம் வளருவதில்லை. சரித்திரத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்வது போலவே, அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதும் ஒரு முதிர்ச்சியின் அறிகுறி. இது ஒவ்வொரு மதம், ஜாதி, குழுக்களுக்கும் பொருந்தும் ஒரு வாசகம்."

இதெல்லாம் ஆசிரியர் தனது முன்னுரையில் சொல்லியிருப்பவை.

கதை என்று எடுத்துக் கொண்டால், கலைத்துறையில் இருக்கும், காதல் மணம், கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதியர்.  கணவன் முஸ்லிம்.  மனைவி இந்துவாக இருந்து, கணவனின் வற்புறுத்தலுக்காக முஸ்லிமாக மாறியவள்.  ஆழ்ந்த இந்து நம்பிக்கைகளை உடைய பெண்ணின் தந்தை மகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்.  மகள் கணவன் வீட்டாரின் வற்புறுத்தலில் முஸ்லிம் சம்பிரதாயங்களைப் பின்பற்றத் தொடங்கி, (முஸ்லீம்களின் பழக்கவழக்கங்கள் ஆங்காங்கே சிறு சிறு விவரங்களாய் சொல்லப்படுகின்றன)  காலப்போக்கில் இந்துத் தெய்வங்களை அல்லது நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை இழக்கும் நிலையில் அவள் தந்தை ஊரில் சில நாட்களுக்கு முன்னால் காலமாகி விட்ட செய்தி வருகிறது.
பற்பல வருடங்களுக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பும் அவள், தந்தை தன்னை மறக்கவில்லை, தன் செயல் காரணமாக வருந்தியவர், பின்னர் முஸ்லீம் மதம், மன்னர்கள் பற்றி எல்லாம் ஒரு மிக விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தெரிந்து, அதைப் படிப்பதில் ஆர்வமாகி, படித்து, பிரமித்துப் போகிறாள்.

இப்போது அவள்,  முதலில் சில நிர்பந்தங்கள், தந்தை மேலுள்ள பாசம் காரணமாகவும், பின்னர் சொந்த விருப்பத்தின் பேரிலும் இந்துவாகவே வாழத் தொடங்குகிறாள்.  இந்தக் காலங்களில் கணவனை முற்றிலும் மறந்து, அவ்வப்போது சென்று பார்த்தாலும், திரும்ப சொந்த ஊர், தந்தை வீடு வந்து அங்கேயே வாசிக்கிறாள்.   இங்கு தன் ஊரிலேயே இருக்கும் இவளின் கணவன் இவளின் வீடு திரும்பாமையாலும், அவனின் தாய் தந்தையர், ஊர்ப் பெரியவர்கள் வற்புறுத்தலாலும் வேறு திருமணம் செய்கிறான்.

இவர்களுக்குத் திருமணம் செய்துவைத்த, இவர்கள் ஊர்க்காரரான 'சாஸ்த்ரி' என்பவர் ஒரு  அறிவுஜீவியாக அடையாளம் காணப்படுபவர்.  ("அவர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அவருக்குப் பணம் எங்கிருந்தோ வருகிறது") அந்தப் போலி கௌரவத்தாலேயே தன்னுடைய சொந்தத் தந்தை இறந்ததற்கான சம்பிரதாயங்களை, ஒரு மூத்த மகனாக செய்ய முடியாமல் போகிறது.  அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவர். அவரின் மனைவி மதம் மாறாமல் கிறித்துவ மதத்திலேயே இருப்பவர். மனசாட்சிக்குப் பயந்து யாருக்கும் தெரியாமல் தந்தையின் 'காரியங்'களை காசியில் ரகசியமாகச் செய்கிறார். 

அவர் கூட்டும் ஒரு சமூக நல்லிணக்க மாநாடு - அதில் போலி மதச் சார்பின்மை பேசும் அறிவுஜீவிகள் -  மறுத்து, உண்மையை ஆதாரங்களுடன் பேசும் இந்தப் பெண்ணை (கதாநாயகி) அடுத்த கூட்டத்தில் புறக்கணித்து அவர்கள் எழுத நினைத்த சரித்திரத்தை எழுதத் தொடங்குகிறார்கள்.

வெகுண்ட இந்தப் பெண், இத்தனை வருடங்களில் தன் அப்பா சேமித்து வைத்திருந்த ஆதாரங்களை (கேசவபெருமாள் கோவிலை நிர்மூலமாக்கி மதுராவை இஸ்லாமாபாத் ஆக்கியது, புனித க்ஷேத்திரமான பிரயாகையை இலாஹாபாத் ஆக்கியது, காசி விஸ்வநாதர் ஆலயத்தை அழித்து 'ஞானவாபி மசூதி' ஆக்கியது போன்ற நிறைய விவரங்கள்) வைத்து ஒரு நூல் வெளியிட....

இப்படிப் போகும் நாவலில் ஆசிரியர் தன்னுடைய நூலுக்கான ஆதாரங்களை எந்தெந்த நூல்களைப் படித்து எடுத்தார் என்பதை இந்தப் பெண், லக்ஷ்மியாக இருந்து பேகம் ரசியா குரைஷியாக மாறி, மறுபடியும்  லக்ஷ்மியாக மாறும் பெண் மூலமே 15 பக்கங்களுக்கு அடுக்குகிறார்.
புத்தகத்தில் அவரின் சில கருத்துகள் :

மதம் மாறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிறந்த மதத்தை விட்டாலும் அது போகாது. 

தத்துவத்தின் எந்த மட்டத்தில் இருக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் கடவுளையும் சிருஷ்டிக்கிறோம்.

தனது முன்னோர்கள் என்று கருதுபவர்களை சரி, தப்பு என்று பேதப்படுத்தித் தனது வாழ்க்கையின் பாதையை நிச்சயம் செய்துகொள்ள, சரித்திரத்தின் படிப்பு உதவ வேண்டும்.




திரை
கன்னட மூலம் : எஸ் எல் பைரப்பா
தமிழில் : ஜெயா வெங்கட்ராமன்
விஜயபாரதம் பதிப்பகம்
300 ரூபாய்.


20.4.15

'திங்க'க்கிழமை : சுண்டை வத்தல்



எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ( !!! ) காய்க்கும் சுண்டைக்காயைப் பறித்துப் பறித்து,  சாம்பாரும், அரைத்து விட்டோ, விடாமலோ, காரக்குழம்பும் செய்து செய்து அலுத்துப் போய், பாசிப்பருப்புக் கூட்டு செய்து,  அது பிடிக்காமல்...
 
 

 
நண்பர்களுக்கெல்லாம் அவ்வப்போது கொடுத்தும்,  காய்த்துக் கொண்டே இருந்த சுண்டைக்காயை இந்தமுறை வத்தல் போடுவது என்று தீர்மானித்தேன்.  பாஸுக்கு அதில் விருப்பமில்லை.  "சரியா வராது... அது வேற சுண்டக்காய்... மதுரச் சுண்டக்காய்.."
 
 

 
மதுரைச் சுண்டைக்காய்ப் போட்டுச் செய்யும் வத்தல் வேறு மாதிரி.  மோரில் ஊறிக்கொண்டிருக்கும் சுண்டைக்காயை அப்படியே எண்ணெயில் வதக்கி எடுத்து மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்வோம்!
 



 
வேறு சில நண்பர்களும் அப்படியே சொன்னாலும்,  விடாமல் சுண்டைக்காயைப் பறித்து, லேசாகக் கீறி,  உப்புப் போட்டு ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை தயிர் விட்டு குலுக்கி மூடி வைத்து விட்டு, அவ்வப்போது குலுக்கி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து வெயிலில் காய வைக்கத் தொடங்கி, நன்றாகக் காய வைத்து எடுத்து வைத்திருந்தோம்.
 
 

 
அதைப் போட்டு வத்தக்குழம்பு வைக்கச் சொல்லியும் அந்த நிகழ்ச்சியை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்த பாஸ், அதை இன்று செய்தார்.
 
 


வத்தக்குழம்பு செய்யத் தெரியும்தானே?


என்ன வாசனை, என்ன ருசி!  அருமை போங்க!






 
படங்கள் :  "சொந்தப் படங்கள்ங்கோ..."

18.4.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) "இந்த ஆயுளில் முழுப் பலனையும் அடைந்து விட்டதாக உணர்கிறேன்."   விருதுநகர் மாவட்டம், கீழ்உப்பிலிக்குண்டில் நுாலகத்தை நிறுவிய, முன்னாள் கைதி முருகன்
 


2) தாயம்மாளின் உயர்ந்த சேவை.
 


3) மின்சாரம் தேவை இல்லை, எரிபொருள் தேவையில்லை.  விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் மங்கள்சிங்கின் கண்டுபிடிப்பு.  (நம்ம பிரச்னை தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லையா?  ஆனால் அந்த அளவு தண்ணீர் வேண்டுமே!!!)
 



4) ஆயுஷின் லட்சியங்கள் நிறைவேறட்டும்.
 


5) அக்கை பத்மஷாலியின் போராட்ட வாழ்க்கையும், வெற்றியும்.
 


6) சூர்யகுமார்.


 

15.4.15

காக்கையும் நானும்



ஒரு வாரமாகக் கண்ணில் படாமல் இருந்த காக்கை இன்று மறுபடியும் வந்து விட்டது. அதைப் பார்த்ததும்தான் 'கொஞ்ச நாட்களாய்க் காணோமோ?' என்று எண்ணம் வந்தது.  நான் அதைத் தேடுகிறேனோ என்று சோதித்திருக்குமோ!



மதியங்களில் மூன்று மணி சுமாருக்கு அந்தக் காக்கை வாசல் பால்கனிச் சுவரில் அமர்ந்து என்னைக் கூப்பிடும்.  அதே காக்கையாகத்தான் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட நேரத்துக்கு வருகிறது.  ஒரே மாதிரி செயல்பாடுகள்.  எனவே அந்த அனுமானம்.



நான் கவனிக்கவில்லை என்றால் சற்றே நகர்ந்து வாசல் துணி காயப்போடும் கொடியில் அமர்ந்து குனிந்து உள்ளே நான் எங்கே கண்ணில் படுகிறேன் என்று தேடும்.  குரல் கொடுக்கும்.  அப்படியும் திரும்பிப் பார்க்கவில்லை என்றால் வாசல் கதவின் மீது வந்து அமர்ந்து குரல் கொடுக்கும்.  இன்னும்  வீட்டுக்குள்தான் வரவில்லை.

நான் உள்ளே பாஸுக்கு ஒரு குரல் கொடுப்பேன்.  உடனே உள்ளே திரும்பிப் பார்க்கும்.  காத்திருக்கும்.  அல்லது நானே எழுந்துபோய் உள்ளே டப்பாவைத் திறந்து ஏதாவது பிஸ்கட்டோ, ரஸ்க்கோ எடுத்துப் போடுவேன்.  சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும்.


கொஞ்சநாட்களாக காக்கைகள் சற்றே நட்பாகி விட்டன.  காக்கைகளை அடையாளம் காண முடியவில்லை.  சற்று மண்டை பெருத்த, கரிய காக்கை ஒன்றை மட்டும் தனியாகத் தெரியும்.  அதன் அசைவுகள் கொஞ்சம் பயமுறுத்துமே தவிர, அதுவும் முன்போல் எதுவும் செய்வதில்லை!  அது என்றால் அது இல்லை!   காக்கைகளின் பொதுவான குணம்!  கூடு கட்டியிருந்திருக்கலாம்.

முன்பெல்லாம் நான் மொட்டைமாடி பக்கம் போகமுடியாது.  இங்கும் அங்கும் தாழப் பறக்கத் தொடங்கும் காக்கைகள், பின்னர் மண்டையில் லொட்டென்று ஒன்று போட்டுப் பறக்கும்.  உட்கார்ந்து புத்தகம் படிக்க முடியாமல் தலைக்குமேல் போர் விமானங்களாய் சர் சர்ரெனத் தாண்டிப் பறக்கும்.  


இப்போதெல்லாம் மொட்டை மாடியில் புத்தகம் படிக்க அமர்ந்த உடனே காலுக்கு அருகில் துணிச்சலாக அமர்ந்து, குனிந்து ஓரப்பார்வையாய் என் கண்களைப் பார்த்து "கா...கா" என்று குரல் கொடுக்கிறது.  இதற்காகவே நான் மேரி பிஸ்கட், முறுக்கு, சீடை போன்றவற்றை வாங்கி வைத்து, மேலே எடுத்துச் செல்கிறேன்.


சுவரின்மேல் என் பக்கத்திலேயே வைத்தாலும், என் கை நீளும்போது பறந்து விடாமல், சற்றே தள்ளி மட்டும் அமர்ந்துக் காத்திருந்து, வைத்த உணவுப் பொருளைக் கொத்தி எடுத்துச் செல்லும். அது இவற்றைச் சாப்பிடும் முறை பற்றியும் நான் கவனித்தவற்றைச் சொல்ல வேண்டும்.


மேரி பிஸ்கட் சாப்பிடக் கஷ்டமிருக்காது என்று பெயர்.  கொஞ்சம் அப்படியே சாப்பிட்டாலும், கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு தத்தித் தத்தி நடந்துபோய் பறவைகளுக்கென்று மாடியில் வைத்திருக்கும் அகல பேசின் தண்ணீரில் போடும்.  சில நொடிகள் காத்திருந்து அவற்றைக் கொத்திச் சாப்பிடும்.   

பிஸ்கெட்டோ, முறுக்கோ, அவற்றை அவை தங்கள் கால்களில் இடுக்கிக் கொண்டு அலகால் மிகச் சிறிய துண்டுகளாக உடைத்துச் சாப்பிடும்.  நொடிக்கொருமுறை நாலு புறமும், என்னையும் பார்த்துக் கொள்ளும்!




முறுக்கு சீடைகளையும் தண்ணீரில் போட்டுச் சாப்பிடுவதுண்டு.  அதைவிட விநோதமாக இன்னொன்று செய்யும்.  முறுக்கு, சீடைகள் போன்றவற்றை மட்டும் கவ்விக் கொண்டு உயரமான இடத்துக்கோ, உயரமான கிளைக்கோ சென்று அமர்ந்து கொண்டு, இந்தப் பக்கம் ஒருமுறை, அந்தப்பக்கம் ஒருமுறை சாலையைக் கடக்கப் போகும் பாதசாரி போலப் பார்த்துக் கொண்டு, அங்கிருந்து அவற்றை 'பொத்' தென்று கீழே போடும்.  அவை துண்டு துண்டாய் உடைந்தவுடன் பொறுக்கிக் கொண்டு பறக்கும், சாப்பிடும்.  உடையாவிட்டால் மீண்டும் அதே முயற்சி!  இந்த  சுவாரஸ்யமான லிங்க்கைப் பாருங்கள்.

இதைவிட விநோதமாக இன்னொன்றும் செய்யும்.  இரண்டு துண்டு சாப்பிட்டால், மூன்றாவது நான்காவது துண்டுகளை கவ்விக்கொண்டு அங்கிருக்கும் இலைக் குப்பையில் கொண்டு போய்ச் சொருகி வைத்து,  அருகிலிருக்கும் இன்னும் கொஞ்சம் காய்ந்த இலைகளை எடுத்து அதன்மேல் போட்டு மூடும்.  சற்றே நடந்து சென்று சிறு குச்சிகளையும் கொண்டு வந்து போட்டு மூடும்.  சேமிப்பு!  அப்புறம் அதுதான் அவற்றை எடுத்துக் கொள்ளுமா, வேறு காக்கைகள் எடுத்துக் கொள்ளுமா?  
தெரியாது!


இந்தப் பிளாஸ்டிக் தொட்டியின் இந்த இடுக்கில் நுழைக்க முயற்சி செய்து விட்டு,
                                                                                          


அது பிஸ்கட் துண்டை "ஒளித்து" வைத்திருக்கும் இடம்!  சமயங்களில் கூடவே இன்னொரு காக்காய் வந்து உடனே உடனே அவற்றை எடுத்துச் சாப்பிட்டும் விடும்!
 

சில காக்கைகள் கூடவே வந்து சாப்பிடுவதை அனுமதிக்கும்.  சில காக்கைகளைத் துரத்தி விடும்.  தவிட்டுக் குருவி போன்ற சில குருவிகள் வரும்.  அவற்றையும் காக்காய் அண்டவிடாது,  அதே போல, மரங்களிலிருந்து மின்னல் வேகத்தில் வாலை உசத்திக்கொண்டு இறங்கி ஓடிவரும் அணில்களையும் அண்ட விடாது!

அதற்காக அவற்றுக்கு ஒற்றுமை உணர்வு இல்லையா, என்று யோசித்தால், இல்லை, அதற்கும் வேறு சில சம்பவங்கள் இருக்கின்றன.

கீழே நாய்க்கு ஏதாவது போட்டாலோ, அல்லது நாய்கள் ஏதாவது உணவுகளைக் கண்டு விட்டாலோ அவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, காக்கைகள் சற்றுத் தள்ளி அமர்ந்து குரல் கொடுக்கும்.  நாய் நிமிர்ந்து இவற்றைப் பார்க்கும்போது தலையைச் சாய்த்து இவைகளும் அவற்றைப் பார்த்து மறுபடி குரல் கொடுக்கும்.


நாய்கள் தொடர்ந்து சாப்பிடும்.  இவை உடனே பறக்கத் தொடங்கி, நாய்களைத் தாண்டும்போது கீழே இறங்கிப் பறந்து நாய்களின் முதுகைத் தொட்டுத் தாண்டிச் செல்லும்.  நாய்கள் நிமிர்ந்தும் பார்ப்பதில்லை, எதிர்ப்பும் காட்டுவதில்லை.  மறுபடியும் காக்கைகள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் மறுபடியும் முதுகைத் தொட்டுச் செல்லும்.  சிலமுறை இப்படி நடக்கும்.

இப்போது ஒரு ஆச்சர்யகரமான நிகழ்வு நடக்கும்!

சாப்பிட்டுக் கொண்டிருந்த நாய், முழுவதும் சாப்பிடாமல் கால் வாசிக்கும் குறைவாய்க் கொஞ்சம் மிச்சம் வைத்து விட்டு நகர்ந்து சென்று விடும்.  காக்கைகள் உடனே வந்து சாப்பிடத் தொடங்கும்.

இதே போன்று காக்கைகளும் பகிர்ந்துண்டுச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.   சுவரில் வைக்கப்பட்டிருக்கும் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இரண்டு மூன்று காக்கைகள்.  ஒரு அணில் மரத்திலிருந்து குதித்து மெல்ல, மெல்ல சாப்பாட்டின் அருகில் வரும்.  காக்கைக் கூட்டத்தில் ஒன்று அவற்றைத் திரும்பிப் பார்த்து, தத்தித் தத்திச் சென்று அவற்றை விரட்டும்.  அணில் ஓடி விடாது.  சற்று நகர்ந்து பின்சென்றாலும், மறுபடியும் அருகில் வரும்.  என்ன பாஷையோ, என்ன சொல்கின்றனவோ அவற்றுக்குள்!

இது போல இரண்டு மூன்றுமுறை நடந்தாலும், காக்கைகள் திடீரென சற்று நகர்ந்து அமர்ந்து வழி விடும்.  கொஞ்ச நேரம் அணில்கள் சாப்பிடும்.  அப்புறம் காக்கைகள், மறுபடி கொஞ்சநேரம் அணில்கள்...
ஆச்சர்யப்படுத்திய நிகழ்வு அது.  கையில் கேமிராவோடு டிஸ்கவரி சேனல் நிருபர் போலக் காத்திருந்தால் இவற்றை எல்லாம் வீடியோவோ, அட்லீஸ்ட் புகைப்படமாவது எடுத்துப் போட்டிருக்கலாம்.  நான் என் வேலையைக் கவனித்துக் கொண்டே இவற்றைக் கவனித்ததில் அதெல்லாம் முடியவில்லைதான்.

ஆனால் வீடியோ எடுத்த விஷயம் ஒன்றும் உண்டு.  எங்கள் தெருநாய் குட்டி போட்டிருந்தது.  அதுதான், முதுகில் காக்கைத் தொடல் வாங்கி, சமிக்ஞை பெறுமே, அந்த நாய்!  கொஞ்சம்  வளர்ந்த குட்டிகளுடன் தாய் நாய் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.  இந்தக் காக்கைகள் கோஷ்டியில் இரண்டு மூன்று குறும்புக் காக்கைகள் இருக்கின்றன.  அவை பறந்து வந்து இவைகளின் அருகில் சற்று தூரத்தில் அமரும்.  நாயக் குட்டிகள் மும்முரமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவைகளின் பின்னால் செல்லும் இந்தக் காக்கைகள் அதன் வாலைக் கொத்தி சட்டென்று இழுத்து விட்டு நகர்ந்து ஓடித் தொலைவில் அமர்ந்து அவை என்ன செய்கின்றன என்று பார்க்கும்.

குட்டிகள் திரும்பிப் பார்த்து விட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கும்போது கு.கா மீண்டும் அருகில் வந்து மீண்டும் வம்பிழுத்துச் செல்லும்.  அப்புறம் குட்டிகள் காக்கைகள் தத்தித் தத்தி அருகில் வரும்போதே லேசாகத் திரும்பி அவற்றைப் பார்க்கும், சிறு அழுகையுடன் துரத்தும்.  வாலைச் சுருட்டி கால்களுக்குள் மறைத்துக் கொள்ளும்!  அவற்றையும் கொத்தி வெளியில் இழுத்து விட்டுப் பறக்கும் காக்கைகள்.

ஓய்வான நேரங்களில் கீழே அமர்ந்திருக்கும் காக்கைகளைத் துரத்தும்.  அவை ஒரேயடியாகப் பறந்து விடாமல் இடம் மாற்றி மாற்றி அமர்ந்து விளையாட்டுக் காட்டும், விளையாடும்!


இரண்டு நாட்களுக்குமுன் வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.  மூன்று மணிக் காக்கை சற்றுத் தொலைவில் வந்து அமர்ந்து என்னைப் பார்த்துக் குரல் கொடுத்தது.  மனிதர்களிடம் பேசுவது போல வழக்கம் போல அதனிடம் பேசினேன்.  "இப்போது ஒன்றுமில்லை" என்றேன்.  அப்புறம் அருகில் வந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.  நான் குடித்து விட்டு வைத்திருந்த காபிக் கோப்பையின் விளிம்பைக் கவ்வ முயற்சித்தது.  

"ஏய்...  அதெல்லாம் எடுக்காதே" என்று டம்ளரை எடுத்து உள்ளே ஓரமாக வைத்தேன்.  மறுபடியும் அது குரல் கொடுத்து அருகில் வர, நானும் சும்மா பதிலுக்குப் பேசிக் கொண்டிருந்தேன்.

விடாமல் தொந்தரவு செய்யவும், வேறு ஏதுமில்லாததால் உள்ளேயிருந்து கார்ன்ஃப்ளேக்ஸ் எடுத்துப் போட்டேன்.  அதைக் கொத்திப் பார்த்த காக்கை, கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டுப் பறந்து போய் விட்டது.

கொஞ்ச நேரம் போயிருக்கும்.  வாயில் ஒரு வடகத் துண்டுடன் என் அருகில் வந்து அமர்ந்தது.  சற்றே பெரிய வடகம்.   யார் வீட்டில் போட்டிருந்தார்களோ!  அதைக் கொண்டு வந்து என் அருகில் அமர்ந்தது.  "ஏய்... எடுத்துக் கொண்டு மாடிக்குப் போ... அங்குதான் தண்ணீர் இருக்கும். அதில் போட்டுச் சாப்பிடு" என்றேன்.

ஏதோ புரிந்த மாதிரி மேல் ஷட்ஜத்திலும், கீழ் ஷட்ஜத்திலும் குரல் கொடுத்தது.  என்ன பேசுகிறதோ என்று யோசித்துக் கொண்டு படிப்பதைத் தொடர்ந்தேன்.  வடகத்தை கவ்விக் கொண்டு இன்னும் என் அருகில் வந்த அந்த நண்பன் அதை என் கையருகே போட்டு விட்டு, குனிந்து என் கண்களைப் பார்த்து "கா" என்றது!

உடைத்துத் தரச் சொல்கிறதோ என்று யோசித்து இடது கையால் அதை இரண்டு மூன்று துண்டுகளாய் உடைத்து விட்டேன்.  மறுபடி அருகில் வந்த நண்பன் இரண்டு துண்டுகளை அலகால் என் பக்கம் தள்ளி விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டான்.  என்ன சொல்ல வருகிறார் நண்பர்?  எனக்கும் ஒரு பங்கு தருகிறாரா?  பேசாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  

கொஞ்ச நேரம் பார்த்த காக்கை, அப்புறம் என் அருகிலேயே கைக்கெட்டும் தூரத்தில் அமர்ந்து அந்த வடகத்தை சிறு சிறு மைக்ரோ துண்டுகளாக்கி, கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டுப் பறந்தது!

என்ன சொல்ல வந்ததோ!  இன்னும் என்னென்ன நடக்குமோ!


13.4.15

'திங்க'க்கிழமை : அம்மிணிக் கொழுக்கட்டை


பிள்ளையார் சதுர்த்தி மற்றும் வரலக்ஷ்மி நோன்பு சமயங்களில் செய்யப்படுவது கொழுக்கட்டை.
 
    
           Image result for கொழுக்கட்டை images                          Image result for கொழுக்கட்டை images
 
செய்வது சற்றே கடினமான ஒன்றுதான்.   அரிசி மாவுப் பதம் ஒழுங்காய் வரவேண்டும்.  இல்லாவிட்டால் கிண்ணம் ஒழுங்காய் வராது.  உடைந்து உடைந்து போகும்.  ஆவியில் வைத்து எடுக்கும்போதும் விரிசல் விழும்.  தேங்காய், வெல்லம் ஏலக்காய் சேர்த்து இனிப்புப் பூரணம் வைத்துத் தித்திப்புக் கொழுக்கட்டையும்,  உளுந்து ஊறவைத்து அரைத்து, உதிர்த்து, காரம், பெருங்காயம் சேர்த்து பூரணம் சேர்த்து காரக் கொழுக்கட்டையும் செய்வோம்.  எனக்கு மிகவும் பிடித்த பண்டம் இந்த இரண்டும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.   சொல்லப் போனால் அ.கொ கூட எல்லோருக்கும் தெரிந்திருக்கும்!    
 

           Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images                       Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images
 
இது போலக் கொழுக்கட்டை செய்யும்போது பூரணம் தீர்ந்து மாவு மீந்து விடும்.  அப்போது செய்வதுதான் அம்மினிக் கொழுக்கட்டை.   சில சமயங்களில் இதற்கு டிமாண்ட் அதிகமாகி விடும்!
 
மீந்து போன (கிளறி வைத்த) கொழுக்கட்டை மாவில் தோசை மிளகாய்ப்பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்குப் பிசைந்து வித விதமான வடிவங்களில், ஆனால் சிறிய அளவுகளில் (சரியாக வேக வேண்டுமே) செய்து வேக வைத்து எடுத்து விடுவோம்.
 
                                                                   
                                                                  Image result for கொழுக்கட்டை images

இதில் பச்சை மிளகாய் அரைத்து விட்டு, கொத்து மல்லி அரைத்து விட்டு, லேசாக எலுமிச்சைச் சாறு பிழிந்து கூட (கூழ் வடகம் வாசனை, ருசி வரும்) வடிவங்கள் செய்து ஆவியில் வேகவைத்துச் சாப்பிடலாம்.






படங்கள்   :   இணையம்.