9.12.15

அம்மாவும் ஐந்து லட்சமும்.



"அஞ்சு லட்சத்தையும் டிரா செஞ்சுடுவோம் லக்ஷ்மி...  அப்புறம் பார்த்துக்கலாம், அதை நாம மாப்பிள்ளை கிட்ட எப்போ கொடுக்கறதுன்னு.."
 
 
'லக்ஷ்மி' என்ற பெயர் கேட்டதுமே திரும்பிப் பார்த்தான் லக்ஷ்மிபதி.  அம்மா அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்.

தாண்டிச் சென்ற பெரியவர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டே சென்றது தனது காதில் விழுந்ததற்கு இறைவன் கருணையே காரணம் என்று தோன்றியது லக்ஷ்மிபதிக்கு.
 
 
லக்ஷ்மிபதி  -  கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவன்.   இப்போது அவனுக்குத் தேவை பணம்.  அதுவும் லட்சங்களில்.

தன்னுடைய பிரச்னைக்கு தான் இறைவனிடம் முறையிட்டதற்கு அந்த இறைவன்தான் குரல் கொடுக்கிறான் என்றும் தோன்றியது.

'எந்த பேங்க் என்று தெரியவில்லையே' என்று எண்ணமிட்டபடி பின்னால் தொடர நினைத்து நடக்க ஆரம்பித்தபோது அந்தப் பெரியவரே அதற்கும் வழி காட்டினார்.  அங்கே நின்றிருந்த ஒருவரிடம், "இங்கே இந்தியன் பேங்க் பிராஞ்ச் ஒண்ணு இருக்கு இல்லே..  எங்கேன்னு தெரியுமா?" என்று கேட்டார்.

 
கேட்கப்பட்டவர் சற்றே யோசித்து விட்டு, கைகாட்டி வழி சொன்னார்.

லக்ஷ்மிபதி திரும்பி பக்கத்திலிருந்த தெருவுக்குள் சென்றான்.  அந்த வழியாகச் சென்றால் பேங்க்குக்கு எளிதில் சென்று விடலாம்.
 
 
அவர்களுக்கு முன்னாலேயே பேங்க்கை அடைந்து விட்டான்.  அங்கு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்தபடி இருந்தான்.  நின்றிருந்த  கூட்டத்தைப்;பார்த்தால் இங்கிருந்து பணத்தைக் கவர முடியாது என்று தோன்றினாலும், சந்தர்ப்பத்துக்காக அவர்களைச் சுற்றியே நடமாடினான்.
 
 
கவனம் அவர்கள் மீதிருந்தாலும் மனம் முழுக்க அம்மாவே நிறைந்திருந்தாள்.




பக்கத்துக் கடையிலிருந்து காய்கறி போன்ற பொருட்கள் வாங்கிக் கொண்டு படி ஏறி  வந்த அம்மாவின் முகத்தில் பெரும் சிரமம் தெரிந்தது. 
 
 
முத்து முத்தாக வியர்த்திருந்தாள்.  மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள். 
 
 
ஓடிச் சென்று பையை வாங்கியவன் "என்னம்மா...  என்ன ஆச்சும்மா?"  என்று பதறினான்.
 
 
அம்மா அப்படியே சரிந்து உட்கார்ந்து விட்டாள்.  கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறையாம்.
 
 
மறைத்திருக்கிறாள்.
 
 
அம்மாவும் இவனும் மட்டும்தான் இந்த வீட்டில்.  அப்பா காலமானதும் அவர் வாங்கிக் கொண்டிருந்த ஓய்வூதியத்தில் பாதியை குடும்ப ஓய்வூதியமாக வாங்கி குடும்பத்தை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
 
 
அண்ணன் பசுபதி அதே ஊரில் தனிக் குடித்தனமிருந்தான்.  அவனிடம் விஷயத்தை உடனடியாக தொலைபேசியில் சொன்னான் லக்ஷ்மிபதி.
 
 
அவன் அலுவலகம் செல்லும்போது வந்து பார்ப்பதாய்ச் சொன்னானே தவிர, காலை வராமல் அலுவலகம் விட்டுச் செல்லும்போது இரவுதான் வந்தான்.  வந்தவனும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் பேசினான்.
 
 
"என்னடா பண்றே லக்ஷ்மி!  அம்மாவை ஜி ஹெச்ல காமிச்சிருக்கக் கூடாதோ... இதெல்லாம் லேட் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா உனக்கு?  ஏற்கெனவே அப்பா விஷயத்துல பட்டது ஞாபகமில்லையா?"
 
 
நன்றாய் நினைவில் இருந்தது லக்ஷ்மிபதிக்கு.  அதுதான் கவலையே.
பசுபதி அப்போதும் ஏதோ நண்பனைப் போல வந்து பார்த்தானே தவிர, பெரிய உதவி ஏதுமில்லை.  அவன் மனைவியிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்கவில்லை போலும்.  அவன் மனைவி கல்பனாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது பசுபதி அவர்களைக் கவனித்துக் கொண்டதைப் பார்த்து பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும்.
 
 
ஆனால் அப்பாவுக்கு சர்ஜரி என்று வந்தபோது ஜி ஹெச்சுக்கு அழைத்துச் சென்றான். 
 
 
அங்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னபோது இவர்கள் பதறி 'சரி' என்றுதான் சொன்னார்கள்.  ஆனால் ஜி ஹெச்சில் அதற்கு ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள்.
 
 
'முதலமைச்சர் ஹெல்த் இன்ஷியூரன்ஸ் கார்ட்' இருக்கிறதா என்று கேட்டார்கள்.  'ஸ்டார் ஹெல்த் கார்ட்' இருக்கிறதா என்று கேட்டார்கள்.

இவர்கள் அதெல்லாம் இல்லை என்று சொன்னதும் வி ஏ ஓ விடம் சென்று சில சான்றிதழ்கள் வாங்கி வரும்படி சொன்னார்கள்.
"தனியார் மருத்துவ மனை போலக் கேட்கிறீர்களே..  இது அரசாங்கப் பொது மருத்துவமனைதானே?"  என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லை.

அதையெல்லாம் லக்ஷ்மிபதியிடம் செய்யச் சொல்லி 'சூ காட்டி' விட்டுச் சென்றான் பசுபதி.
 
 
வி ஏ ஓ விடம் அலைந்த அனுபவங்கள் இவனுக்கு இந்தியன் படத்தை நினைவு படுத்தின. 
 
 
அப்பா வீட்டிலேயே மரணமடைந்தார்.  இதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்.

 
இப்போது மறுபடியும் அதே காட்சிகள். 


லக்ஷ்மிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  நேரத்தை வீண் செய்யாமல் வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருந்த தனியார் மருத்துவ மனைக்கு அம்மாவை அழைத்துச் சென்றான்.

பரிசோதனைகளை முடித்த மருத்துவர், அம்மாவுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார்.  
 
மருத்துவமனையில் தங்கும் செலவு உட்பட அதற்கு சுமார் ஐந்து லட்சம் ஆகும் என்றார்.  இங்கேயும் 'ஹெல்த் இன்ஷியூரன்ஸ் கார்ட்' ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்கள்.
இந்த இடைவெளியிலாவது ஏதாவது இன்ஷியூரன்ஸ் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.  எல்லாமே லேட்டாகத்தான் தோன்றுகிறது. 

கஷ்டப்படும்போதுதான் தெரிகிறது.  இனியாவது எடுக்கலாம்.  ஆனால் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. உடனே பணம் ஏற்பாடு செய்ய வேண்டும்.  பசுபதி எதிர்பார்த்தது போலவே கைவிரித்து விட்டான். 
 
 
உள்ளூரில் உறவு என்று யாரும் இல்லை.  இருந்தாலும் கொடுக்கப் போகிறார்களா என்ன!
 
 
இந்த யோசனையில் உட்கார்ந்திருந்த போதுதான் அந்தப் பெரியவர் இவன் பெயரைச் சொல்லி ஐந்து லட்சம் எடுக்கப் போவதாய்ச் சொல்லித் தாண்டிச் சென்றார்.
 
 
அவர் மனைவியின் பெயர் லக்ஷ்மி என்று இருந்ததே தெய்வம் தனக்குக் கொடுத்திருக்கும் சிக்னல் என்று நினைத்தான் லக்ஷ்மிபதி.
 
 
அவர்கள் பணத்துடன் வெளியில் செல்வதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தான்.  கவனமாகத் தொடர்ந்தான்.
 
 
மனைவியை வீட்டில் விட்டு விட்டு பெரியவர் உடனே வெளியில் கிளம்பினார்.  எல்லாம் தனக்குச் சாதகமாகவே நடப்பது போலத் தோன்றியது லக்ஷ்மிபதிக்கு.
 
 
அந்த வீட்டின்முன் பைக்கில் அமர்ந்து ஃபோன் பேசுவது போல நடித்தவன், பைக்கிலிருந்து பேலன்ஸ் தவறி விழுவது போலச் சாய்ந்தான்.  எழுந்து பைக்கை நிமிர்த்தித் துடைத்தவன், ஸ்டார்ட் செய்து 'செக்' செய்வது போல செய்து பார்த்தான்.  பிறகு தன் கை கால்களையும் தட்டி விட்டுக் கொண்டான்.  நம்பர் ப்ளேட் தெரியாமல் இருக்க அதில் கொஞ்சம் சேறு பூசினான்.
 
 
சுற்றுமுற்றும் பார்த்தவன் யதேச்சையாக பார்ப்பது போல அந்த வீட்டைப் பார்த்தவன், ஏதோ யோசித்து தயக்கத்துடன் அணுகுவது போல உள்ளே சென்றவன் "ஸாரிம்மா.. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"  என்று கேட்டவன் பார்வை வீட்டினுள்ளே அலைந்தது.   அவர்கள் கொண்டு வந்திருந்த 'அந்தப் பை' கண்ணெதிரே டிவி ஸ்டாண்டில் பாபா படத்தின்முன் இருப்பதைப் பார்த்துக் கொண்டான்.
 
 
அந்த வயதான மாது உள்ளே சென்று தண்ணீருடன் திரும்பியபோது அவன் அங்கு இல்லை.  பைக்கும் இல்லை.  சில நொடிகளில் பணமும் அங்கில்லை என்பதை உணர்ந்து அவள் மூர்ச்சையானாள்.
 
 
திரும்பி வந்த பெரியவர் நடந்ததை அறிந்து இடிந்து போனார்.  அவர்களுடைய சேமிப்பு முழுதும் காலி என்ற அதிர்ச்சி ஒரு புறம்.  இப்போது இதை வாங்க அவர் பெண்ணும் மாப்பிள்ளையும் வருவார்களே, அவர்களுக்கு என்ன சொல்வது என்கிற கவலை மறுபுறம்.
 
 
"என்ன லக்ஷ்மி இப்படி விட்டுட்டே?" என்பதற்கு மேல் அவராலும் பேச முடியவில்லை.  வந்தவன் முகத்தில் அவன் கைக்குட்டை கட்டி இருந்ததால் அடையாளமும் சொல்ல முடியவில்லை.
 
 
லக்ஷ்மியும் இடிந்து போயிருந்தாள்.  மாப்பிள்ளை தங்கள் பெண்ணை வார்த்தைகளால் காயப் படுத்தி இந்தப் பணத்தைப் பெற ஏற்பாடு செய்திருந்தார்.  அவருடைய தம்பி வெளிநாட்டுக்கு படிக்கச் செல்ல வேண்டி உடனே பணம் வேண்டும் என்று நெருக்கிக் கொண்டிருந்தார்கள்.  இது போதாது என்று மேலும் சிலரிடமும் கேட்டிருப்பதாகச் சொல்லி இருந்தார்கள்.
 
 
இப்போது பணம் இல்லை என்று சொன்னால் மாப்பிள்ளை ஆடப் போகும் ருத்ரதாண்டவத்தை நினைத்து கவலை ஏற்பட்டது அவர்களுக்கு.
போலீஸில் புகார் செய்தார்கள். 

மாப்பிள்ளை வந்து ஏமாந்தார்.  கடுகடுத்தார்.  ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.  மகள் இந்தப் பக்கமும் பேச முடியாமல், அந்தப் பக்கமும் பேச முடியாமல் கண்களில் நீருடன் அவருடன் கிளம்பிச் சென்றாள்.
 
 
ஒரே மகள்.  செல்லமாய் வளர்ந்தவள்.  புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் செல்லச் சீராடல்களை எதிர்பார்க்க முடியாதுதான்.  ஆனாலும் அவளை இன்னும் கொஞ்சம் அன்பாக, கௌரவமாக நடத்தலாம் என்னும் பெற்றோர்களின் வழக்கமான நெருடல் இவர்களிடம் இருந்தது.
 
 
போலீஸ் விசாரணையும் அதுவுமாக ஐந்து நாட்கள் கழிந்தன.
 
 
வாசலில் பைக் ஒன்று வந்து நின்றது.  இறங்கியவனை அடையாளம் தெரிந்தது லக்ஷ்மிக்கு.
 
 
வேகமாக எழுந்ததால் சற்றே தடுமாறி விழப் போனவள், சுவரைப் பிடித்துக் கொண்டாள்.  பெரியவர் கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தவர், திரும்பி வாசலைப் பார்த்தார்.
 
 
உள்ளே வந்த லக்ஷ்மிபதி அந்தப் பையை அவர்கள் காலடியில் வைத்தான்.  குனிந்து அவர்கள் காலைத் தொட்டான். 
 
 
"என் பெயர் லக்ஷ்மிபதி" என்றான்.



பணத்தை எடுத்துக் கொண்டு விரைந்து வீட்டை அடைந்தான் லக்ஷ்மிபதி.  வீட்டில் யாருமில்லை.  பூட்டியிருந்தது.
 
 
இவனைப் பார்த்த எதிர் வீட்டுக்காரர் இவனை நெருங்கி வீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு விவரம் சொன்னார்.
 
 
"அரைமணி முன்னாலே அம்மா மயக்கமா விழுந்துட்டாங்க தம்பி..  நம்ம வீட்டம்மாவும், கோடி வீட்டு சாந்தியக்காவும் அம்மாவ அழைச்சிகிட்டு ஆஸ்பத்திரி போயிருக்காங்க.."
 
 
"எந்த ஆஸ்பத்திரி அங்கிள்?"
 
 
"ஜி ஹெச்"
 
 
"ஐயோ...  அங்கே சர்ஜரி எல்லாம் உடனே செய்ய மாட்டாங்களே.. "  பைக்கைத் திருப்பிக் கொண்டு பறந்தான்.


அம்மாவை ஜி ஹெச்சிலிருந்து மாற்றி, ஏற்கெனவே பார்த்திருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அம்மா உயிரை விட்டு விட்டாள்.
 
 
பிரமித்து நின்றான் லக்ஷ்மிபதி.  வழி ஒன்றைக் காண்பிப்பது போலக் காட்டி கடவுள் தன்னை ஏமாற்றி விட்டதாகக் குமுறினான்.  இன்னும் ஒரு வருடம் முழுதாகப் படிக்கும் காலம் பாக்கி இருக்க,  தனது எதிர்காலம் பற்றிய கவலையும் அவனை வாட்டியது. 
 
 
தந்தையும் இல்லை.  தாயும் இல்லை.  அண்ணன் என்று ஒருவன் இருந்தும் பயனில்லை.  அவனிடம் உதவி கேட்கவே கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.  'கேட்டால் மட்டும் என்ன, உடனே உதவி செய்து விடப் போகிறானா என்ன?'
ஐந்து நாட்கள் கழிந்த நிலையில் அந்த பணப்பையின் நினைவு வந்தது.
அதை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.



நடந்ததை எல்லாம் சொல்லி முடித்து, கண்ணைத் துடைத்துக் கொண்டான் லக்ஷ்மிபதி. 
 
 
"இதோ..  இதில் நாலு லட்சத்து ஐம்பதாயிரம் இருக்கு ஸார்..  மிச்ச ஐம்பதாயிரம் ரூபாய்க்கு என் பைக்கை இங்கே விட்டுப் போகிறேன் ஸார்.  என்னால் அதுதான் செய்ய முடியும்.  தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்ல முடியாது.  நான் செஞ்ச தப்புக்குத்தான் ஆண்டவன் என் அம்மாவையும் எடுத்துக் கொண்டு விட்டான் போல..  எனக்கு பணத்து மேல ஆசை எல்லாம் கிடையாது ஸார்..  அப்படி இருந்திருந்தா நான் இதைத் திரும்பிக் கொண்டு வந்திருக்க மாட்டேன்..  என்னை மன்னிச்சுடுங்க.."
 
 
விசாரணைக்கு வந்த போலீஸ்காரரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.
 
 
பெரியவருக்கும், லக்ஷ்மிக்கும் ஏனோ இப்போது அவன் மேல் கோபம் வரவில்லை.  அவர்களின் மாப்பிள்ளை தான் கேட்ட பணத்துக்கு வேறு இடத்தில் ஏற்பாடு செய்து கொண்டதும் காரணமாக இருக்கலாம். 

 
 
அது மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திடீர் மாற்றமும் தெரிந்தது.  மகளிடம் இந்தச் சூழ்நிலையில் கோபப் படுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, "உன் அப்பா அம்மாவை கவலைப் பட வேண்டாம் என்று சொல்லு..  நாம வேறு இடத்தில் பணம் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.  நான் அவசரப் படுத்தி எடுக்கச் சொன்னதால்தான இந்த நிலைமை..?  அவரோட கையிருப்பெல்லாம் போச்சேன்னு கவலைல அவர்களுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாது..  நாங்கள் இருக்கோம்னு சொல்லு அவங்க கிட்ட" என்று சொல்லி அனுப்பியதோடு,  அவ்வப்போது வந்து அவரும் ஆறுதலாய்ப் பேசிச் சென்றிருந்தார். 



கேஸை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். 
 
 
"கண்ணைத் துடைச்சுக்கோ தம்பி.. உன் பேர் என்ன சொன்னே?"
 
 
"லக்ஷ்மிபதி"
 
 
"என்னென்னமோ நடந்துடுச்சு தம்பி..  உனக்கு நல்ல மனசு, பணத்தை திருப்பிக் கொடுத்துட்டே..  ஆனால் நீ பணத்தை எடுத்த நேரம் எங்களுக்கு ஒண்ணும் ஆகாமக் கடவுள் காப்பாற்றினாரே..   தப்புதான் நீ செஞ்சது..  ஆனால் அம்மாவோட மரணம் அதற்கானக் கடவுளின் தண்டனை என்று நினைக்காதே..   உங்க அம்மாவோட காலம் முடிஞ்சுது....  ரொம்பச் சிரமப் படாமப் போயிட்டாங்க.. எங்களை உன்னோட தாத்தா பாட்டி போல நினைச்சுக்கோ தம்பி..  என்ன உதவி வேணும்னாலும் கேளு..  உன் பேர்ல எவ்வளவோ கோபமாயிருந்தோம்..   இப்போ இல்லை...  நீ எப்போ நினைச்சாலும் வந்து எங்களைப் பாரு..   உன்னைப் போலவே நாங்களும் தனியாகத்தான் இருக்கோம்..   பைக்கை நீயே வைச்சுக்கோ..   நாங்க என்ன பண்ணப் போறோம் அதை வச்சுகிட்டு.. எங்கள் பேரன் போல உன்னை நினைச்சுக்கறோம்."
 
 
சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான் லக்ஷ்மிபதி.  இப்போது அம்மாவை நினைத்து அழவில்லை அவன்.
 
 
 
 
 
 
 
டிஸ்கி :: சென்ற மாதம் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியை மையமாய் வைத்து புனையப்பட்டது. 









8.12.15

சென்னை வெள்ளம் - சில கண்கலங்க வைக்கும் செய்திகள், சில பாடங்கள்.



பேரிடர் பாதித்தபோது, மற்ற மாநிலங்களை விட  தங்களுக்குள்ளேயே ஒன்று பட்டு, உதவிக்கரம் கோர்த்த உள்ளூர், மற்றும் வெளியூர் மக்களைப் பற்றி,  உதவ வந்த பேரிடர் உதவிக் குழு சொன்னதாக வந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
 
 
கவலைகள், பீதிகள், பயங்கள்.. எல்லாவற்றையும் மீறி எழுந்து நிற்கின்றது மனிதம்.   இந்தச் செய்தியைப் பாருங்கள்.
 
 
இந்து என்றும், முஸ்லீம் என்றும், கிறிஸ்துவர் என்றும் யாரும் பார்க்கவில்லை.  உன் ஜாதி என்ன, என் ஜாதி என்ன என்று யாரும் கேட்கவில்லை.  அவர்களை அப்படிக் கேட்க விடாமல் அடித்தது இயற்கை.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இயற்கைக் கற்றுக் கொடுத்த பயங்கரப் பாடம்.



1)  ஸ்டெபியை என்ன சொல்லிப் பாராட்ட? கண்கலங்க வைக்கும் முதல் செய்தி.
 

2)  செம்பரம்பாக்கம் ஏரி பற்றி எவ்வளவோ பயமுறுத்தல்கள்.. வதந்திகள்..  உண்மை நிலை பற்றி தி இந்து நிருபர் சொல்லும் செய்திகள் கண்கலங்க வைக்கும் இரண்டாம் செய்தி.  "அவங்க பயந்த மாதிரியே டிசம்பர் 1-ம் தேதி பேய் மழை பெஞ்சுது. சென்னையில எல்லாரும் வீடு வாசலை விட்டுட்டு ஓடிக்கிட்டு இருக்கும்போதும், இவங்க பொட்டுத் தூக்கம் இல்லாம மதகுப் பக்கமே நின்னுக்கிட்டு இருந்தாங்க. 
 
 
அந்த நேரத்துல அவங்க குடும்பமும் தண்ணீரில் தத்தளித்தது. அவங்க வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. வீட்டில் இருந்தவங்க எல்லாம் மேல் மாடிகளுக்கும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் இடம் பெயர்ந்திருக்காங்க. எல்லாம் தெரிஞ்சும் இந்தப் பணியாளர்கள் மட்டும் ஏரியை விட்டு அகலவில்லை” என்றார்கள் ஊர் மக்கள்.
 
 
 

 
 
3)  இது போன்ற சோகச் செய்திகளும் உண்டு.   நவம்பர் முப்பதாம் தேதி (?) மறைந்த பழம்பெரும் எழுத்தாளர் விக்ரமன் அவர்களின் பூத உடல் பட்ட பாடு ஒரு வலிதரும் செய்தி.

 




4)  ஆறுதல் தருவதற்கு .இப்படிப்பட்ட பதிவுகளும் உண்டு.  




"பிரிட்டன் வானிலை மையத்திலிருந்து கணிப்புகள் ஒவ்வொரு 12 மணி நேரங்களுக்கும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரு கணிப்பில் மழை பெய்யும் என்றும், அடுத்த கணிப்பில் மழை இல்லை என்றும் காண்பிக்கப்படுகிறது. ஒரு பதிவில் கனமழை என்பார்கள்; அடுத்த பதிவில் மிதமான மழை என்பார்கள். 



இப்படியாக வரும் புதன்கிழமை முதல் கனமழை (கடைசியாக சென்னையை அடித்து விளாசியதுபோல்) என்று காண்பித்தது; ஆனால் தற்போது மிதமான மழை என்றே காண்பிக்கிறது. எனவே நாம் ஏன் பீதி கிளப்பும் முடிவுகளுக்கு வர வேண்டும். இந்நிலையில் இவர்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் வானிலை எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அனுபவமற்ற இவர்கள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு நம் உள்ளூர் வானிலை நிலவரம், வெள்ளத்துக்குப் பிறகான மக்களின் மனநிலை என்று எதுவும் அறியாமல் வானிலை முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். 


அக்குவெதர் குறித்து நாம் பேசினால், அவர்கள் காட்டும் காரணங்கள் சரியானதே. ஆனால், அது சென்னைக்கு மட்டும் உரித்தான முன்னெச்சரிக்கை அல்ல. அவர்களால் மிதமான மழையை கணிக்க முடியவில்லை. 17மிமீ மழை என்று கூறுகின்றனர். ஆனால் இது அச்சுறுத்தும் மழையா? என்ற கேள்வி எழுகிறது. 


சென்னையைப் பொறுத்தவரை, மேலடுக்கு ஆதரவின்றி அதிக அளவில் வறண்ட காற்று நிலவி வருகிறது. எனவே மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்புள்ளது. 


நாம் மோசமானதைப் பார்த்துவிட்டோம், எனவே பிபிசி அல்லது அக்குவெதர் முன்னெச்சரிக்கைகள் பற்றி கவலைப்படாமல் நாம் நம் வேலையை கவனிப்போம். 


நம்மூர் ஊடகங்களும் இதற்கு பொறுப்பு. பிபிசி எச்சரிக்கைகளை இவர்கள் உடனடியாக வெளியிட்டு அப்பாவி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றனர்"



சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும்.



5.12.15

இந்த வார பாசிடிவ்.

   

சென்னை: சென்னையில் சனிக்கிழமை (5.12.2015) தொடங்கி நான்கு நாட்களுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களின் வசதிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை வெள்ள நீரில் சிக்கித் தவிப்போருக்கு, பலரும் உதவி செய்து வருகின்றனர். 


எந்த வகை உதவிகள் எங்கள் கண்ணுக்குப் பட்டவை என்பதை சுருக்கமாகக் கூறுகின்றோம். 

# சிலர், தங்களுடைய வீட்டில் எவ்வளவு பேர் தங்கலாம், என்ன விலாசம் என்பதுபோன்ற விவரங்களை முகநூலில் வெளியிட்டு உதவி வருகின்றனர். 

# வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கி, அலைபேசியில் டாக் டைம் இல்லாமல் இருந்தால், எஸ் எம் எஸ் மூலம் நம்பர் வாங்கி, நெட் மூலமாக ரீ சார்ஜ், டாப் அப் செய்து கொடுக்கின்றார்கள். 

# மாநிலத்தின் பல ஊர்களில், சப்பாத்தி செய்து அனுப்புகின்றார்கள். 

# உடை, போர்வை போன்ற விஷயங்களை பலரும் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு  வழங்குகிறார்கள். 

# (என்னைப் போன்ற) சிலர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பவர்களுக்கு, நெட் மூலம் பணம் அனுப்பி வருகின்றனர். 

# சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இடர் அகலவேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனைகள் செய்து வருகின்றார்கள். 

# சிலர் விலாசம் பெயர் போன்ற விவரங்கள் கொடுத்தால், அந்த நபர்களைத் தேடிப் போய் பார்த்து, அவர்களுக்கு வேண்டிய (உணவு / உடை / மருந்து) உதவிகள் செய்து, உறவினர்களுக்கு அவர்களின் நலம் குறித்து செய்திகள் அனுப்புகின்றனர். (சமூக வலைத்தளங்கள் மூலம்) .

# சிலர் பாதிக்கப்பட்டவர்களையும், உதவுபவர்களையும் இணைக்கின்ற பாலமாக, சமூக வலைத்தளங்கள் மூலமாக செய்திகளைப் பகிர்ந்து உதவி வருகின்றனர். 

பிரதிபலன் பாராமல் உதவும் உள்ளங்களுக்கு எங்கள் வணக்கம், வாழ்த்துகள்.  
     
 


2.12.15

சென்னை வெள்ளம் உதவி

   
                       
Rescue operations are on on a large scale and the Indian Navy and Army have been pressed into service. Here are some useful helpline numbers for anyone stranded in the floods or needing help.
This is the Indian Navy's helpline number in Chennai: +914425394240
The Indian Army's helpline: 9840295100
Helplines provided by Tamil Nadu government:
Chennai city: 1070
Districts: 1077
Chennai Corporation: 1913 and 044-4567 4567
    

1.12.15

'அந்த' மாலை



மாலை ஐந்து மணிக்கு மேல் அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருந்தார்.  'அவசரமில்லை, கொஞ்சம் மெதுவாகக் கூட வரலாம்' என்று சொல்லியிருந்தார். 



அப்போதுதான் அலுவலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஸ்வாமி என்னை அழைத்துக் கொண்டு அங்கு சென்றபோது அலுவலகக் கடிகாரம் 5. 10 லிருந்து 5.15 ஐ அடைய பாதி வழி முடித்திருந்தது.

 
ஜட்ஜ் அமர்ந்திருக்கும் உயரமான இடம் போல இருந்த இடத்தில், அதே போன்ற ஒரு பெரிய மேஜையின் பின்னே அவர் அமர்ந்திருந்தார்.  


சுற்றிலும் சில ஃபைல்கள் ஒரு ஒழுங்கான சிதறலில் வைக்கப் பட்டிருந்தன.  இரண்டு ஃபைல்கள் திறந்திருக்க, அவர் அதை மாறி மாறிப் பார்த்தபடி, பென்சிலால் ஆங்காங்கே குறித்துக் கொண்டு, தன் முன்னே இருந்த, நடுவில் நீல நிற கார்பனுடன் கிளிப் மாட்டப்பட்டிருந்த, ஒரு A4 வெள்ளைத் தாளில் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார்.


அந்தப் பெரிய ஹாலின் முடிவில் (அல்லது ஆரம்பமாகக் கூட அதை வைத்துக் கொள்ளலாம், ஏனென்றால் அந்த ஹாலின் தலைவர் அவர்தான்) நடுவாந்திரமாக அவர் இருக்கை அமைந்திருக்க,  மூன்று நுழைவு வாயில்கள் கொண்ட அந்த ஹாலின் கடைசி நுழைவு வாயில் வழியாகத்தான் நாங்கள் நுழைந்தோம்.


ஏனென்றால் அந்த வாயிலுக்கு நேராகத்தான் அவர் இருக்கை.  அவர் இருக்கையின் பின்னே ஒரு சிறிய கதவு,  அடுத்த அறைக்குச் செல்லும் வழியாய் (மேனேஜிங் டைரக்டர் அறை) இருந்த அந்த மூடித் திறக்கக் கூடிய பாதிக் கதவு அப்போதுதான் உள்ளேயோ வெளியேயோ  யாரோ சென்றிருக்கக்கவேண்டும் என்று நினைக்கத்தக்க வகையில் உள்ளேயும் வெளியேயுமாக ஆடிக்கொண்டிருந்தது.



நுழைந்தவுடன் வலப்புறம் அமைந்திருந்த வரிசை மேசைகளின் பின்னே பல ஃபைல்களுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் லேசான கேள்விக் குறியுடன் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.  அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த எங்கள் உருவம் அவர்களுக்கு மனதுக்குள் கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும்.  ஏராள அழுக்கும்,  தூசியும் நிரம்பிய, சரியும் நிலையில் அடுக்கப் பட்டிருந்த ஃபைல்கள் அடங்கிய அலமாரிகள், மற்றும் பீரோக்கள் அவர்கள் பின்னணியில் இருந்தன. 


அவர் மேஜையை நெருங்குமுன் கோர்ட் குமாஸ்தா போலவே, அந்தப் பெரிய மேஜையை ஒட்டி சிறிய மேஜைக்குப் பின் டைப்ரைட்டருடன் அமர்ந்திருந்த ஒரு கண்ணாடி அணிந்த, சிவந்த நிறத்தில் இருந்த லேடி டைப்பிஸ்ட் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு,  புருவத்தைச் சுருக்கிக் கேள்வியாக்கினாள்.  நாங்களும் புருவத்தை ஆட்டியே 'அவரை'க் காட்டினோம்.  அவள் தன் வேலையில் மறுபடி 'படபட படபடா' என்று மூழ்கினாள்.


இந்த அசைவில் எங்களை நிமிர்ந்து பார்த்த அவர்,  லேசான, மிக லேசான பதட்டத்துடன் கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தவர், எங்களுக்கு மட்டும் புரியும் வகையில் லேசான அதிருப்தியை முகத்தில் காட்டி, கண்களாலேயே எதிரிலிருந்த நாற்காலிகளைக் காட்டிவிட்டு மறுபடி எழுதுவதில் மும்முரமானார். 


'கொஞ்சம் கழித்து வந்திருக்கலாம்' என்ற அர்த்தம் தெரிந்தது, அந்த அதிருப்தியில்.

ஸ்வாமி நாற்காலியை 'டர்' ரென்று இழுத்து ஓசைப் படுத்தியதில் இன்னும் இருவர் திரும்பிப் பார்க்க,  இவர் நிமிர்ந்து முறைத்ததில் நான் எனக்கான நாற்காலியை இழுக்காமல் என்னை அட்ஜஸ்ட் செய்து இடுக்கில் நுழைந்து அதில் இருத்திக் கொண்டேன்.


உட்கார்ந்து கொஞ்ச நேரம் மௌனமாக நாற்காலியின் கால்கள், மேஜையின் மூடிய இந்தப் பக்க விளிம்புகள், எங்கள் நகங்கள் என்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மெதுவாகத் திரும்பி அந்த ஹாலை நோட்டமிட்டோம்.


நீள ஹாலின் வலது புறமும் இடது புறமும் நீளமான தாங்கிகளை உடைய ஃபேன்கள் லேசான 'கொடக் கொடக்' சத்தத்துடன்  சுற்றிக் கொண்டிருந்தன. 


திரும்ப டைப்பிஸ்டைப் பார்த்தேன்.  பென்சிலை வாயில் வைத்து பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தவளும் நான் பார்ப்பதை உணர்ந்து என்னைப் பார்த்தாள்.  நான் அவசரமாகப் பார்வையை விலக்கிக் கொண்டேன்.

ஒரு சிறிய சலசலப்பு அந்த ஹால் முழுவதும் நிரம்பியிருந்தது.  பேப்பர்கள் புரட்டப்படும் ஓசை,  சிறிய பேச்சுக் குரல்கள்...   இன்னொரு பத்துப் பதினைந்து  நிமிடம் கழிந்திருக்கும். மேஜை டிராயர்கள் திறக்கப்படும் சப்தம், 'ரைட்டிங் பேட்'கள் கீழே வைக்கப்படும் சப்தம், (டிஃபன்)பாத்திரங்கள் பைக்குள் வைக்கப்படும் சப்தம் என்று சலசலப்பு கிளம்பியது.  பேச்சுக் குரல்களும் சிரிப்புச் சத்தங்களும் சற்று உரக்கக் கேட்கத் தொடங்க, வீட்டுக்குக் கிளம்புகிறார்கள் என்று புரிந்தது.


இவரிடம் அனுமதி பெற்றோ,  அல்லது சொல்லிக் கொண்டோ கிளம்புவார்கள் என்று நினைத்தேன்.  இல்லை, யாரும் சொல்லிக் கொள்ளவில்லை.  கொஞ்ச நேரத்தில் பாதி ஹாலும், இன்னும் கொஞ்ச நேரத்தில் மொத்த ஹாலும் காலியானது. 


இவர் யாரையும் அல்லது எதையும் நிமிர்ந்து பார்க்காமல், மும்முரமாக எழுத்தில் ஆழ்ந்திருக்க, சிவந்த நிற டைப்பிஸ்டும் இன்னும் கிளம்பாமல் உருளையில் பேப்பரை வைத்து அட்ஜஸ்ட் செய்து சுழற்றி 'அலைன்' செய்து ஏதோ அடிக்கத் தொடங்க, அமைதியான அந்த ஹாலில் இப்போது இந்த டைப்ரைட்டரின் 'டபடப' ஒலி சற்றே அசாதாரணமாகக் கேட்டது.


திரும்பிப் பார்க்கும்போது சில மின் விசிறிகள் அணைக்கப் பட்டிருந்தன. சில மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருக்க,  பியூன் எல்லா சுவிட்ச்களையும் அணைத்து விட்டு இவர் எதிரே வந்து நின்றான். இவர் நிமிர்ந்து பார்த்தார். காலியான அந்த ஹாலை ஒரு பார்வை பார்த்தார். திரும்பி டைப்பிஸ்டைப் பார்த்தார். மீண்டும் பியூனைப் பார்க்க, பியூன் ஓரமாக இருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டான்.


பேப்பரை உருவி எடுத்த டைப்பிஸ்ட் அதை 'பின்' செய்து இவர் டேபிளில் வைத்தாள்.  வளையல்களை நெகிழ்த்திக் கொண்டவள், தன் இடத்துக்குத் திரும்பி தன் கைப்பையை சேகரம் செய்து அதில் பேனா, பென்சில் என்று அள்ளிப் போட்டு மூடினாள். அவள் டிஃபன் பாக்சைத் தேடினேன்.  கண்ணில் படவில்லை.


'மதியம் ஹோட்டலில் சாப்பிட்டிருப்பாளோ'



தலையை லேசாக ஒதுக்கிக் கொண்டு இவரைத் திரும்பிப் பார்த்து 'வரேன் ஸார்..' என்று சொல்லி அனுமதிக்குக் காத்திராமல் சற்றே அவசர நடையுடன் வெளியேறினாள்.


இப்போது பியூனும் எழுந்து கொண்டான். "ஸார்! உங்களுக்குக் காபி வாங்கியாரவா..." 


இவர் நிமிராமலேயே "வேணாம்... நீ போ... தனபால் வந்தாச்சா?" என்றார். 


"வாட்ச்மேனா ஸார்... அவர் கொஞ்சம் 'லேட்'டா வரேன்னு உங்க கிட்ட நேத்தே சொல்லிட்டேன்னு சொன்னாரே..." என்றவன், பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல் சற்றுத் தயங்கி, "நான் கிளம்பவா ஸார்?"   என்றான்.


நிமிர்ந்து அவனைப் பார்க்காமல் ஹாலைப் பார்த்தவர் சற்று யோசித்து "ம்... ' என்று ஒற்றை எழுத்தில் அனுமதி அளித்தார்.


இப்போது எங்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்படியும் ஐந்து நிமிடம் எழுதிக் கொண்டிருந்தவர் நடுவில் நிமிர்ந்து பார்த்து 'பெரியவர் இன்னும் கிளம்பலை' என்று கண்களால் பின் அறையைக் காட்டினார்.


அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவு சாத்தும் சத்தத்துடன் இடது பக்கம் ஹாலில் தொப்பையுடன் ஒருமனிதர் நடந்து செல்ல, பின்னே ஒரு மனிதன் கையில் ஒரு பெட்டியுடனும், இரண்டு ஃபைல்களுடனும் மரியாதையான தூரத்தில்  பின்தொடர்ந்து சென்றான்.

                                                                                               
                                                                                  Image result for old government office in chennai clip art images


இவர், அவர் திரும்பிப் பார்ப்பாரோ என்று பாதி எழுந்து நிற்க முயன்று அவர் பார்க்காமலேயே தாண்டிச் சென்றதில் சரியாக உட்கார்ந்து கொண்டார்.  சின்னப் பெருமூச்சு அவரிடமிருந்து புறப்பட்டது.


 திரும்பி ஹால் முழுக்கப் பார்த்தார்.  ஒரு திருப்தியான முகபாவம் தென்பட்டது அவரிடம்.  திரும்பி எங்களைப் பார்த்தார்.  லேசாகத் தலையசைத்தவர், எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்து, கழுத்தை இரண்டு முறை இங்கும் அங்கும் வேக வேகமாகத் திருப்பி சரி செய்து கொண்டார்.


'ஜக்'கிலிருந்து தண்ணீரைச் சரித்துக் குடித்தவர், வலது ஆள்காட்டி விரலை எங்களிடம் காண்பித்து விட்டு உள்ளே மறைந்தார்.
அந்த நிசப்தமான நீள ஹாலில் சிறிய சில சத்தங்களுக்குப் பின், குழாய் திறக்கும் ஒலி, தண்ணீர் வாளியில் நிறையும் ஒலியும், கவிழ்க்கப்படும் ஒலியும் கேட்டன.


கைகளைத் துடைத்துக் கொண்டு வெளிப்பட்டவர், ஸ்வாமியைப் பார்த்து 'நீ என்னுடன் வா' என்று சைகையில் கூறி நடந்தவர், 'சித்த இரு' என்று நிறுத்தி, வராண்டாவுக்குச் சென்று இருபுறமும் ஆராய்ந்தார்.  பின்னர் சுவாமியைப் பார்த்து வரும்படித் தலையசைத்தவர், என்னிடம், "நீ இங்கேயே உட்கார்ந்திரு.  எங்கேயும் எழுந்து போயிடாத.. (மேஜை மேலிருந்த டெலிபோனைக் காட்டி) அதுலயே கவனமா இரு.  அது அடிச்சதும் எடு" என்று கட்டளையிட்டவர்,  ஸ்வாமியுடன் திரும்பி நடந்தார்.


உடன் இருந்த இருவரும் சென்று விடுவதின் திடீர்த் தனிமை என்னைத் தாக்க, எழுந்து வெளியே வந்து அவர்கள் செல்வதைப் பார்த்தேன்.  நீள ஹாலில் நடந்து கொண்டிருந்தவர்களில் ஸ்வாமி திரும்பிப் பார்த்தவன், அவரிடம் ஏதோ சொல்ல, திரும்பிப் பார்த்தவர் என்னை உள்ளே போகும்படி வேகமாகக் கையாட்டினார்.


உள்ளே திரும்பியவன் கடிகாரத்தைப் பார்த்தேன்.  சின்ன முள் ஆறை நெருங்கிக் கொண்டிருக்க, பெரிய முள் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. 


நேரம் சென்று கொண்டிருந்தது.  'என்ன செய்கிறார்கள் இன்னமும்? உடனே முடிந்துவிடும் என்றார்களே...  வேண்டாம் என்று விட்டிருக்கலாமோ?'  எண்ணங்கள் ஓட, மணியைப் பார்த்தேன். சரியாக ஆறு.


      
                                                         Image result for ringing phone images

நகத்தைக் கடித்தேன்.  டிசம்பர் மாதத்தின் சூழும் இருள் சங்கடப் படுத்தியது.  டெலிபோன் ஒலித்தது.  தடுக்கி விழுந்து எழுந்தேன்.  நாராசமான நாற்காலியின் ஓசை ஹாலை நிறைத்தது. டெலிபோனை எடுத்தேன்.  காதில் வைத்துக் கொண்டு சொல்லிக் கொடுத்தபடியே இரண்டுமுறை 'ஹலோ..ஹலோ...' என்றேன்.  'கொர்ர்ர்...கொர்ர்ர்... டக்' என்று சத்தம் கேட்டது. வேறொன்றும் கேட்கவில்லை.  


                                                                  Image result for ringing phone images


பதட்டமாயிருந்தது.  என்ன செய்ய?  என்ன செய்யவேண்டும் இப்போது?

                                                                                 
                                                                                    Image result for ringing phone images

கொஞ்சம் யோசித்து விட்டு மறுபடி டெலிபோனை அதன் இடத்தில் வைத்த கணத்திலேயே மறுபடி அது அலறியது.  மூன்று நான்கு செகண்டுகள் அதையே வெறித்துப் பார்த்தேன். பின்னர் அதை எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்றேன்.  இப்போது எதிர்முனையும் "ஹலோ" என்றது.  இவர் குரல்தான்.  டெலிபோன் கைமாறி இப்போது ஸ்வாமி வசம் வந்தது போலும்.  அவன் குரல் கிசுகிசுப்பாய்க் கேட்டது.


"கொஞ்சம் சத்தமாப் பேசினாத்தான் அவனுக்குக் கேட்கும்" அவர் குரல் எனக்கேக் கேட்டது. 


ஆச்சர்யமாய் இருந்தது.  திரும்பிப் பார்த்தேன்.  இங்கேதான் எங்கோ பக்கத்திலேயே நிற்கிறார்களோ... காணோமே!


"மாடியிலயா இருக்கீங்க?" என்றேன்.


"ஆமாம்.  எக்ஸ்சேஞ்ச்ஜிலிருந்துதான் பேசறோம்.  மாடியில... கேட்குதா?  இங்க பேசினா அங்க எப்படிக் கேட்குது பார்த்தியா? அதான் டெலிபோன்" என்றார் அவர் -  என் அப்பா.


"ஐ... ஆச்சர்யமா இருக்குப்பா... ஆனா பயமா இருக்கு இங்க.. நீயும் அண்ணனும் சீக்கிரம் வாங்கப்பா" என்றேன்.


"சரி! ஃபோனை எடுத்த மாதிரியே வை!  நாங்கள் வர்றோம்"  என்ற அப்பா ஃபோனை வைத்தார்.


நம்ப முடியாத ஆச்சரியத்துடனேயே அந்த ஃபோன்  என்ற வஸ்துவை அதன் இடத்தில் பொருத்தி விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.   என்ன எல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்கள்!  மறுபடியும் எடுத்து காதில் வைத்துப் பார்த்தேன். 'ரிங்க்க்க்க்க்...' என்றது அது.


"அங்கிருந்து அல்லது எங்கிருந்தாவது டயல் செய்தால்தாண்டா பேச முடியும்" என்று பின்னாலிருந்து குரல் வந்தது.   அப்பாவுக்கு முன்னாலேயே ஓடிவந்த ஸ்வாமி!


அப்பாவுடனும், ஸ்வாமியுடனும் வீட்டுக்குக் கிளம்பியபோது மனம் முழுக்கப் பரவசமாக இருந்தது.

நான் டெலிஃபோனை முதன்முதலில் பார்த்த நாள் அது!   அறுபதுகளின் பிற்பகுதி! அப்போது எனக்கு ஆறு வயது இருக்கலாம்! சரியாக நினைவில்லை!