செவ்வாய், 1 டிசம்பர், 2015

'அந்த' மாலை



மாலை ஐந்து மணிக்கு மேல் அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருந்தார்.  'அவசரமில்லை, கொஞ்சம் மெதுவாகக் கூட வரலாம்' என்று சொல்லியிருந்தார். 



அப்போதுதான் அலுவலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஸ்வாமி என்னை அழைத்துக் கொண்டு அங்கு சென்றபோது அலுவலகக் கடிகாரம் 5. 10 லிருந்து 5.15 ஐ அடைய பாதி வழி முடித்திருந்தது.

 
ஜட்ஜ் அமர்ந்திருக்கும் உயரமான இடம் போல இருந்த இடத்தில், அதே போன்ற ஒரு பெரிய மேஜையின் பின்னே அவர் அமர்ந்திருந்தார்.  


சுற்றிலும் சில ஃபைல்கள் ஒரு ஒழுங்கான சிதறலில் வைக்கப் பட்டிருந்தன.  இரண்டு ஃபைல்கள் திறந்திருக்க, அவர் அதை மாறி மாறிப் பார்த்தபடி, பென்சிலால் ஆங்காங்கே குறித்துக் கொண்டு, தன் முன்னே இருந்த, நடுவில் நீல நிற கார்பனுடன் கிளிப் மாட்டப்பட்டிருந்த, ஒரு A4 வெள்ளைத் தாளில் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார்.


அந்தப் பெரிய ஹாலின் முடிவில் (அல்லது ஆரம்பமாகக் கூட அதை வைத்துக் கொள்ளலாம், ஏனென்றால் அந்த ஹாலின் தலைவர் அவர்தான்) நடுவாந்திரமாக அவர் இருக்கை அமைந்திருக்க,  மூன்று நுழைவு வாயில்கள் கொண்ட அந்த ஹாலின் கடைசி நுழைவு வாயில் வழியாகத்தான் நாங்கள் நுழைந்தோம்.


ஏனென்றால் அந்த வாயிலுக்கு நேராகத்தான் அவர் இருக்கை.  அவர் இருக்கையின் பின்னே ஒரு சிறிய கதவு,  அடுத்த அறைக்குச் செல்லும் வழியாய் (மேனேஜிங் டைரக்டர் அறை) இருந்த அந்த மூடித் திறக்கக் கூடிய பாதிக் கதவு அப்போதுதான் உள்ளேயோ வெளியேயோ  யாரோ சென்றிருக்கக்கவேண்டும் என்று நினைக்கத்தக்க வகையில் உள்ளேயும் வெளியேயுமாக ஆடிக்கொண்டிருந்தது.



நுழைந்தவுடன் வலப்புறம் அமைந்திருந்த வரிசை மேசைகளின் பின்னே பல ஃபைல்களுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் லேசான கேள்விக் குறியுடன் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.  அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த எங்கள் உருவம் அவர்களுக்கு மனதுக்குள் கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும்.  ஏராள அழுக்கும்,  தூசியும் நிரம்பிய, சரியும் நிலையில் அடுக்கப் பட்டிருந்த ஃபைல்கள் அடங்கிய அலமாரிகள், மற்றும் பீரோக்கள் அவர்கள் பின்னணியில் இருந்தன. 


அவர் மேஜையை நெருங்குமுன் கோர்ட் குமாஸ்தா போலவே, அந்தப் பெரிய மேஜையை ஒட்டி சிறிய மேஜைக்குப் பின் டைப்ரைட்டருடன் அமர்ந்திருந்த ஒரு கண்ணாடி அணிந்த, சிவந்த நிறத்தில் இருந்த லேடி டைப்பிஸ்ட் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு,  புருவத்தைச் சுருக்கிக் கேள்வியாக்கினாள்.  நாங்களும் புருவத்தை ஆட்டியே 'அவரை'க் காட்டினோம்.  அவள் தன் வேலையில் மறுபடி 'படபட படபடா' என்று மூழ்கினாள்.


இந்த அசைவில் எங்களை நிமிர்ந்து பார்த்த அவர்,  லேசான, மிக லேசான பதட்டத்துடன் கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தவர், எங்களுக்கு மட்டும் புரியும் வகையில் லேசான அதிருப்தியை முகத்தில் காட்டி, கண்களாலேயே எதிரிலிருந்த நாற்காலிகளைக் காட்டிவிட்டு மறுபடி எழுதுவதில் மும்முரமானார். 


'கொஞ்சம் கழித்து வந்திருக்கலாம்' என்ற அர்த்தம் தெரிந்தது, அந்த அதிருப்தியில்.

ஸ்வாமி நாற்காலியை 'டர்' ரென்று இழுத்து ஓசைப் படுத்தியதில் இன்னும் இருவர் திரும்பிப் பார்க்க,  இவர் நிமிர்ந்து முறைத்ததில் நான் எனக்கான நாற்காலியை இழுக்காமல் என்னை அட்ஜஸ்ட் செய்து இடுக்கில் நுழைந்து அதில் இருத்திக் கொண்டேன்.


உட்கார்ந்து கொஞ்ச நேரம் மௌனமாக நாற்காலியின் கால்கள், மேஜையின் மூடிய இந்தப் பக்க விளிம்புகள், எங்கள் நகங்கள் என்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மெதுவாகத் திரும்பி அந்த ஹாலை நோட்டமிட்டோம்.


நீள ஹாலின் வலது புறமும் இடது புறமும் நீளமான தாங்கிகளை உடைய ஃபேன்கள் லேசான 'கொடக் கொடக்' சத்தத்துடன்  சுற்றிக் கொண்டிருந்தன. 


திரும்ப டைப்பிஸ்டைப் பார்த்தேன்.  பென்சிலை வாயில் வைத்து பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தவளும் நான் பார்ப்பதை உணர்ந்து என்னைப் பார்த்தாள்.  நான் அவசரமாகப் பார்வையை விலக்கிக் கொண்டேன்.

ஒரு சிறிய சலசலப்பு அந்த ஹால் முழுவதும் நிரம்பியிருந்தது.  பேப்பர்கள் புரட்டப்படும் ஓசை,  சிறிய பேச்சுக் குரல்கள்...   இன்னொரு பத்துப் பதினைந்து  நிமிடம் கழிந்திருக்கும். மேஜை டிராயர்கள் திறக்கப்படும் சப்தம், 'ரைட்டிங் பேட்'கள் கீழே வைக்கப்படும் சப்தம், (டிஃபன்)பாத்திரங்கள் பைக்குள் வைக்கப்படும் சப்தம் என்று சலசலப்பு கிளம்பியது.  பேச்சுக் குரல்களும் சிரிப்புச் சத்தங்களும் சற்று உரக்கக் கேட்கத் தொடங்க, வீட்டுக்குக் கிளம்புகிறார்கள் என்று புரிந்தது.


இவரிடம் அனுமதி பெற்றோ,  அல்லது சொல்லிக் கொண்டோ கிளம்புவார்கள் என்று நினைத்தேன்.  இல்லை, யாரும் சொல்லிக் கொள்ளவில்லை.  கொஞ்ச நேரத்தில் பாதி ஹாலும், இன்னும் கொஞ்ச நேரத்தில் மொத்த ஹாலும் காலியானது. 


இவர் யாரையும் அல்லது எதையும் நிமிர்ந்து பார்க்காமல், மும்முரமாக எழுத்தில் ஆழ்ந்திருக்க, சிவந்த நிற டைப்பிஸ்டும் இன்னும் கிளம்பாமல் உருளையில் பேப்பரை வைத்து அட்ஜஸ்ட் செய்து சுழற்றி 'அலைன்' செய்து ஏதோ அடிக்கத் தொடங்க, அமைதியான அந்த ஹாலில் இப்போது இந்த டைப்ரைட்டரின் 'டபடப' ஒலி சற்றே அசாதாரணமாகக் கேட்டது.


திரும்பிப் பார்க்கும்போது சில மின் விசிறிகள் அணைக்கப் பட்டிருந்தன. சில மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருக்க,  பியூன் எல்லா சுவிட்ச்களையும் அணைத்து விட்டு இவர் எதிரே வந்து நின்றான். இவர் நிமிர்ந்து பார்த்தார். காலியான அந்த ஹாலை ஒரு பார்வை பார்த்தார். திரும்பி டைப்பிஸ்டைப் பார்த்தார். மீண்டும் பியூனைப் பார்க்க, பியூன் ஓரமாக இருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டான்.


பேப்பரை உருவி எடுத்த டைப்பிஸ்ட் அதை 'பின்' செய்து இவர் டேபிளில் வைத்தாள்.  வளையல்களை நெகிழ்த்திக் கொண்டவள், தன் இடத்துக்குத் திரும்பி தன் கைப்பையை சேகரம் செய்து அதில் பேனா, பென்சில் என்று அள்ளிப் போட்டு மூடினாள். அவள் டிஃபன் பாக்சைத் தேடினேன்.  கண்ணில் படவில்லை.


'மதியம் ஹோட்டலில் சாப்பிட்டிருப்பாளோ'



தலையை லேசாக ஒதுக்கிக் கொண்டு இவரைத் திரும்பிப் பார்த்து 'வரேன் ஸார்..' என்று சொல்லி அனுமதிக்குக் காத்திராமல் சற்றே அவசர நடையுடன் வெளியேறினாள்.


இப்போது பியூனும் எழுந்து கொண்டான். "ஸார்! உங்களுக்குக் காபி வாங்கியாரவா..." 


இவர் நிமிராமலேயே "வேணாம்... நீ போ... தனபால் வந்தாச்சா?" என்றார். 


"வாட்ச்மேனா ஸார்... அவர் கொஞ்சம் 'லேட்'டா வரேன்னு உங்க கிட்ட நேத்தே சொல்லிட்டேன்னு சொன்னாரே..." என்றவன், பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல் சற்றுத் தயங்கி, "நான் கிளம்பவா ஸார்?"   என்றான்.


நிமிர்ந்து அவனைப் பார்க்காமல் ஹாலைப் பார்த்தவர் சற்று யோசித்து "ம்... ' என்று ஒற்றை எழுத்தில் அனுமதி அளித்தார்.


இப்போது எங்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்படியும் ஐந்து நிமிடம் எழுதிக் கொண்டிருந்தவர் நடுவில் நிமிர்ந்து பார்த்து 'பெரியவர் இன்னும் கிளம்பலை' என்று கண்களால் பின் அறையைக் காட்டினார்.


அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவு சாத்தும் சத்தத்துடன் இடது பக்கம் ஹாலில் தொப்பையுடன் ஒருமனிதர் நடந்து செல்ல, பின்னே ஒரு மனிதன் கையில் ஒரு பெட்டியுடனும், இரண்டு ஃபைல்களுடனும் மரியாதையான தூரத்தில்  பின்தொடர்ந்து சென்றான்.

                                                                                               
                                                                                  Image result for old government office in chennai clip art images


இவர், அவர் திரும்பிப் பார்ப்பாரோ என்று பாதி எழுந்து நிற்க முயன்று அவர் பார்க்காமலேயே தாண்டிச் சென்றதில் சரியாக உட்கார்ந்து கொண்டார்.  சின்னப் பெருமூச்சு அவரிடமிருந்து புறப்பட்டது.


 திரும்பி ஹால் முழுக்கப் பார்த்தார்.  ஒரு திருப்தியான முகபாவம் தென்பட்டது அவரிடம்.  திரும்பி எங்களைப் பார்த்தார்.  லேசாகத் தலையசைத்தவர், எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்து, கழுத்தை இரண்டு முறை இங்கும் அங்கும் வேக வேகமாகத் திருப்பி சரி செய்து கொண்டார்.


'ஜக்'கிலிருந்து தண்ணீரைச் சரித்துக் குடித்தவர், வலது ஆள்காட்டி விரலை எங்களிடம் காண்பித்து விட்டு உள்ளே மறைந்தார்.
அந்த நிசப்தமான நீள ஹாலில் சிறிய சில சத்தங்களுக்குப் பின், குழாய் திறக்கும் ஒலி, தண்ணீர் வாளியில் நிறையும் ஒலியும், கவிழ்க்கப்படும் ஒலியும் கேட்டன.


கைகளைத் துடைத்துக் கொண்டு வெளிப்பட்டவர், ஸ்வாமியைப் பார்த்து 'நீ என்னுடன் வா' என்று சைகையில் கூறி நடந்தவர், 'சித்த இரு' என்று நிறுத்தி, வராண்டாவுக்குச் சென்று இருபுறமும் ஆராய்ந்தார்.  பின்னர் சுவாமியைப் பார்த்து வரும்படித் தலையசைத்தவர், என்னிடம், "நீ இங்கேயே உட்கார்ந்திரு.  எங்கேயும் எழுந்து போயிடாத.. (மேஜை மேலிருந்த டெலிபோனைக் காட்டி) அதுலயே கவனமா இரு.  அது அடிச்சதும் எடு" என்று கட்டளையிட்டவர்,  ஸ்வாமியுடன் திரும்பி நடந்தார்.


உடன் இருந்த இருவரும் சென்று விடுவதின் திடீர்த் தனிமை என்னைத் தாக்க, எழுந்து வெளியே வந்து அவர்கள் செல்வதைப் பார்த்தேன்.  நீள ஹாலில் நடந்து கொண்டிருந்தவர்களில் ஸ்வாமி திரும்பிப் பார்த்தவன், அவரிடம் ஏதோ சொல்ல, திரும்பிப் பார்த்தவர் என்னை உள்ளே போகும்படி வேகமாகக் கையாட்டினார்.


உள்ளே திரும்பியவன் கடிகாரத்தைப் பார்த்தேன்.  சின்ன முள் ஆறை நெருங்கிக் கொண்டிருக்க, பெரிய முள் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. 


நேரம் சென்று கொண்டிருந்தது.  'என்ன செய்கிறார்கள் இன்னமும்? உடனே முடிந்துவிடும் என்றார்களே...  வேண்டாம் என்று விட்டிருக்கலாமோ?'  எண்ணங்கள் ஓட, மணியைப் பார்த்தேன். சரியாக ஆறு.


      
                                                         Image result for ringing phone images

நகத்தைக் கடித்தேன்.  டிசம்பர் மாதத்தின் சூழும் இருள் சங்கடப் படுத்தியது.  டெலிபோன் ஒலித்தது.  தடுக்கி விழுந்து எழுந்தேன்.  நாராசமான நாற்காலியின் ஓசை ஹாலை நிறைத்தது. டெலிபோனை எடுத்தேன்.  காதில் வைத்துக் கொண்டு சொல்லிக் கொடுத்தபடியே இரண்டுமுறை 'ஹலோ..ஹலோ...' என்றேன்.  'கொர்ர்ர்...கொர்ர்ர்... டக்' என்று சத்தம் கேட்டது. வேறொன்றும் கேட்கவில்லை.  


                                                                  Image result for ringing phone images


பதட்டமாயிருந்தது.  என்ன செய்ய?  என்ன செய்யவேண்டும் இப்போது?

                                                                                 
                                                                                    Image result for ringing phone images

கொஞ்சம் யோசித்து விட்டு மறுபடி டெலிபோனை அதன் இடத்தில் வைத்த கணத்திலேயே மறுபடி அது அலறியது.  மூன்று நான்கு செகண்டுகள் அதையே வெறித்துப் பார்த்தேன். பின்னர் அதை எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்றேன்.  இப்போது எதிர்முனையும் "ஹலோ" என்றது.  இவர் குரல்தான்.  டெலிபோன் கைமாறி இப்போது ஸ்வாமி வசம் வந்தது போலும்.  அவன் குரல் கிசுகிசுப்பாய்க் கேட்டது.


"கொஞ்சம் சத்தமாப் பேசினாத்தான் அவனுக்குக் கேட்கும்" அவர் குரல் எனக்கேக் கேட்டது. 


ஆச்சர்யமாய் இருந்தது.  திரும்பிப் பார்த்தேன்.  இங்கேதான் எங்கோ பக்கத்திலேயே நிற்கிறார்களோ... காணோமே!


"மாடியிலயா இருக்கீங்க?" என்றேன்.


"ஆமாம்.  எக்ஸ்சேஞ்ச்ஜிலிருந்துதான் பேசறோம்.  மாடியில... கேட்குதா?  இங்க பேசினா அங்க எப்படிக் கேட்குது பார்த்தியா? அதான் டெலிபோன்" என்றார் அவர் -  என் அப்பா.


"ஐ... ஆச்சர்யமா இருக்குப்பா... ஆனா பயமா இருக்கு இங்க.. நீயும் அண்ணனும் சீக்கிரம் வாங்கப்பா" என்றேன்.


"சரி! ஃபோனை எடுத்த மாதிரியே வை!  நாங்கள் வர்றோம்"  என்ற அப்பா ஃபோனை வைத்தார்.


நம்ப முடியாத ஆச்சரியத்துடனேயே அந்த ஃபோன்  என்ற வஸ்துவை அதன் இடத்தில் பொருத்தி விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.   என்ன எல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்கள்!  மறுபடியும் எடுத்து காதில் வைத்துப் பார்த்தேன். 'ரிங்க்க்க்க்க்...' என்றது அது.


"அங்கிருந்து அல்லது எங்கிருந்தாவது டயல் செய்தால்தாண்டா பேச முடியும்" என்று பின்னாலிருந்து குரல் வந்தது.   அப்பாவுக்கு முன்னாலேயே ஓடிவந்த ஸ்வாமி!


அப்பாவுடனும், ஸ்வாமியுடனும் வீட்டுக்குக் கிளம்பியபோது மனம் முழுக்கப் பரவசமாக இருந்தது.

நான் டெலிஃபோனை முதன்முதலில் பார்த்த நாள் அது!   அறுபதுகளின் பிற்பகுதி! அப்போது எனக்கு ஆறு வயது இருக்கலாம்! சரியாக நினைவில்லை!



38 கருத்துகள்:

  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
  2. ஆறு வயதில் சூழ்நிலையக் கவனித்து வர்ணித்திருந்தது ஆச்சரியம் முதன் முதல் டெலி போனில் பேசுவதும் அனுபவம்தான் என் நினைவு சரியென்றால் யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் முதலில் எக்ஸ்சேஞ்சுக்கு டயல் செய்து அவர்கள் மூலம் தான் நாம் பேச நினைப்பவரிடம் பேசமுடியும்

    பதிலளிநீக்கு
  3. மர்ம கதை போல் அழகாய் கொண்டு சென்றீர்கள்

    பதிலளிநீக்கு
  4. என்னவோ என்று நினைத்தேன் நண்பரே
    அருமை
    அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    கதை அற்புதம் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. கடைசியில் இப்படியா....... செய்வது....... ?

    பதிலளிநீக்கு
  7. அட! எப்படி ஸ்ரீராம் அந்தச் சிறு வயதில் இத்தனையும் கவனித்தீர்களா? கவனித்ததை இவ்வளவு நாள் நினைவு வைத்திருந்து வர்ணித்து எழுதும் அளவு உங்கள் மனதில் பதிந்திருக்கின்றது போலும் உங்கள் முதல் டெலிஃபோன் ஸ்பரிசமும் அனுபவமும்......ஆனால் அதுவரை நீங்கள் 6 வயது என்பதோ, அது உங்கள் முதல் டெலிஃபோன் அனுபவம் என்பதோ தெரியவே இல்லை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா...ஹா...

      கீதா.. நான் தவழ்ந்த நாட்களே எனக்கு நினைவில் இருக்காக்கும்!!!!!!!!!

      நீக்கு
  8. 'அந்த ' என்றதும் நானும் ஏதேதோ நினைத்து பல்பு வாங்கிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  9. 'அந்த ' என்றதும் நானும் ஏதேதோ நினைத்து பல்பு வாங்கிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  10. அலுவலகம் குறித்த சித்தரிப்பு அருமை.
    படித்துத் தொடர்ந்து முடிவு காணும் வரை கதையென்றே நினைத்தேன்.
    தொடர்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. அந்த மாலையின் நிகழ்வுகளை அழகாகச் சொல்லிச் சென்று..... அருமையாக முடித்துள்ளீர்கள் :)!

    பதிலளிநீக்கு
  12. சின்னப் பையங்களிடம் அலுவலுகத்தில் யாரும் பேசவில்லையா?!! ஆச்சரியம் தான்!! நல்ல 'அலுவலக அனுபவம்'!! :-)))

    பதிலளிநீக்கு
  13. நினைவுகளின் சேகரம் அற்புதம். கோர்வையான ஆற்றோட்ட விவரிப்பில் அந்த 'பட பட பட படா' மனத்தில் தேங்கி புன்னகைக்க வைத்தது. 'மதியம் ஹோட்டலில் சாப்பிட்டிருப்பாளோ' என்று அலைபாய்ந்த நினைவின் நீட்சி வியக்க வைத்தது. 'டிசம்பர் மாதத்தின் சூழும் இருள் சங்கடப்படுத்தியது' என்று சமீபத்திய அவஸ்தை அங்கு வந்து படிந்தது அர்த்தபூர்வமாய் இருந்து, எழுத்து என்பது எப்படியெல்லாம் நெகிழ்ந்து நம்மை வசப்படுத்துகிறது என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தது.

    உங்களுடன் பழகியதாலோ என்னவோ, உங்களின் அப்பா என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. அவரின் அர்ப்பணிப்பு உணர்வு அந்தக்கால மனிதர்களின் இயல்பான செய்யும் வேலையில் தன்னை மறந்த ஈடுபாட்டுடன் கூடிய பக்தியாய் மனசில் நிழலாடியது. அச்சு அசலாய் அவரையேப் போன்ற எனக்குத் தெரிந்த சிலரையும் நினைவு கொள்ள வைத்தது.

    வாசிக்க இதமாய் இருந்த இந்த எழுத்துச் சிறப்பு உங்களில் வளரட்டும் என்று மனசும் வாழ்த்தியது.

    பதிலளிநீக்கு
  14. //என் நினைவு சரியென்றால் யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் முதலில் எக்ஸ்சேஞ்சுக்கு டயல் செய்து...//

    ஜி.எம்.பீ சாரின் நினைவுகள் சரியே. ஆனால் 60-களில் டயலிங் வசதியே கிடையாது. யாருடனாவது பேசவேண்டுமென்றால் டெலிபோன் ரிஸிவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டால், எக்ஸ்சேஞ்சிலிருந்து "நம்பர் ப்ளீஸ்.." என்று கேட்பார்கள். நாம் வேண்டும் டெலிபோன் நம்பரைச் சொன்னால் அவர்கள் கனெஷ்னன் கொடுப்பார்கள். எப்படி கனெக்ஷன் கொடுப்பார்கள் என்பதை இது பற்றி ஒரு பதிவு எழுதினால் தான் விவரமாகச் சொல்ல முடியும். இந்த முறை லோக்கல் கால்களுக்கு மட்டுமே.

    வெளியூர் கால்களுக்கு டிரங்க் கால் புக் செய்ய வேண்டும்.. நாம் கேட்கும் வெளியூர் நம்பர்களுடன் எக்ஸ்சேஞ்சில் தொடர்பு கொண்டு நமக்கு கனெக்ஷன் கொடுப்பார்கள். வெளியூர் கால்களில் நாம் குறிப்பிடும் நபர்களுடன் கூட பேசக்கூட வசதி உண்டு. அதற்கு PP (Particular Person) Calls என்று பெயர். கால்களில் (அழைப்புகளில்) ordinary calls, urgent calls, lightening calls, fixed time calls என்று நமது அவசரத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப விதவிதமான வசதிகள் கூட இருந்தன.

    தொலைபேசித் துறையின் இன்றைய அசுர வளர்ச்சி வியக்கத்தக்க ஒன்று.

    பதிலளிநீக்கு
  15. @ ஜீவி
    எக்ஸ்சேஞ்சுக்கு டயல் செய்ய வேண்டாம் / ரிசீவரைக் காதில் வைத்த உடன் நம்பர் ப்ளீஸ் என்று கேட்பார்கள் என்பதுதான் சரி. நாம் பேச வேண்டிய எண்ணைச் சொல்லும் முறை கூடத் தெளிவாக இருந்தது. உ-ம் 2155 என்றால் டூ ஒன் டபிள் ஃபைவ் என்று சொல்ல வேண்டும் இரண்டிரண்டு எண்களாகத்தான் சொல்ல வேண்டும் மேலதிக செய்திகளுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஜீவி ஸார். உங்கள் பின்னூட்டத்தைக் காணோமே என்று காத்துக் கொண்டிருந்தேன்! நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மீள் வருகைகளுக்கும் நன்றி ஜீவி ஸார், ஜி எம் பி ஸார்!

    பதிலளிநீக்கு
  18. // நம்ப முடியாத ஆச்சரியத்துடனேயே அந்த ஃபோன் என்ற வஸ்துவை அதன் இடத்தில் பொருத்தி விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன எல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்கள்! மறுபடியும் எடுத்து காதில் வைத்துப் பார்த்தேன். 'ரிங்க்க்க்க்க்...' என்றது அது.

    //நான் டெலிஃபோனை முதன்முதலில் பார்த்த நாள் அது! அறுபதுகளின் பிற்பகுதி! அப்போது எனக்கு ஆறு வயது இருக்கலாம்! சரியாக நினைவில்லை!//

    படித்தேன், ரஸித்தேன், அருமையான அனுபவம்தான். பகிர்வுக்கு நன்றிகள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  19. பதிவைப் பற்றிக் குறிப்பிட்ட உடனேயே வந்து கருத்திட்டமைக்கு நன்றி வைகோ ஸார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!