புதன், 9 டிசம்பர், 2015

அம்மாவும் ஐந்து லட்சமும்.



"அஞ்சு லட்சத்தையும் டிரா செஞ்சுடுவோம் லக்ஷ்மி...  அப்புறம் பார்த்துக்கலாம், அதை நாம மாப்பிள்ளை கிட்ட எப்போ கொடுக்கறதுன்னு.."
 
 
'லக்ஷ்மி' என்ற பெயர் கேட்டதுமே திரும்பிப் பார்த்தான் லக்ஷ்மிபதி.  அம்மா அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்.

தாண்டிச் சென்ற பெரியவர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டே சென்றது தனது காதில் விழுந்ததற்கு இறைவன் கருணையே காரணம் என்று தோன்றியது லக்ஷ்மிபதிக்கு.
 
 
லக்ஷ்மிபதி  -  கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவன்.   இப்போது அவனுக்குத் தேவை பணம்.  அதுவும் லட்சங்களில்.

தன்னுடைய பிரச்னைக்கு தான் இறைவனிடம் முறையிட்டதற்கு அந்த இறைவன்தான் குரல் கொடுக்கிறான் என்றும் தோன்றியது.

'எந்த பேங்க் என்று தெரியவில்லையே' என்று எண்ணமிட்டபடி பின்னால் தொடர நினைத்து நடக்க ஆரம்பித்தபோது அந்தப் பெரியவரே அதற்கும் வழி காட்டினார்.  அங்கே நின்றிருந்த ஒருவரிடம், "இங்கே இந்தியன் பேங்க் பிராஞ்ச் ஒண்ணு இருக்கு இல்லே..  எங்கேன்னு தெரியுமா?" என்று கேட்டார்.

 
கேட்கப்பட்டவர் சற்றே யோசித்து விட்டு, கைகாட்டி வழி சொன்னார்.

லக்ஷ்மிபதி திரும்பி பக்கத்திலிருந்த தெருவுக்குள் சென்றான்.  அந்த வழியாகச் சென்றால் பேங்க்குக்கு எளிதில் சென்று விடலாம்.
 
 
அவர்களுக்கு முன்னாலேயே பேங்க்கை அடைந்து விட்டான்.  அங்கு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்தபடி இருந்தான்.  நின்றிருந்த  கூட்டத்தைப்;பார்த்தால் இங்கிருந்து பணத்தைக் கவர முடியாது என்று தோன்றினாலும், சந்தர்ப்பத்துக்காக அவர்களைச் சுற்றியே நடமாடினான்.
 
 
கவனம் அவர்கள் மீதிருந்தாலும் மனம் முழுக்க அம்மாவே நிறைந்திருந்தாள்.




க்கத்துக் கடையிலிருந்து காய்கறி போன்ற பொருட்கள் வாங்கிக் கொண்டு படி ஏறி  வந்த அம்மாவின் முகத்தில் பெரும் சிரமம் தெரிந்தது. 
 
 
முத்து முத்தாக வியர்த்திருந்தாள்.  மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள். 
 
 
ஓடிச் சென்று பையை வாங்கியவன் "என்னம்மா...  என்ன ஆச்சும்மா?"  என்று பதறினான்.
 
 
அம்மா அப்படியே சரிந்து உட்கார்ந்து விட்டாள்.  கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறையாம்.
 
 
மறைத்திருக்கிறாள்.
 
 
அம்மாவும் இவனும் மட்டும்தான் இந்த வீட்டில்.  அப்பா காலமானதும் அவர் வாங்கிக் கொண்டிருந்த ஓய்வூதியத்தில் பாதியை குடும்ப ஓய்வூதியமாக வாங்கி குடும்பத்தை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
 
 
அண்ணன் பசுபதி அதே ஊரில் தனிக் குடித்தனமிருந்தான்.  அவனிடம் விஷயத்தை உடனடியாக தொலைபேசியில் சொன்னான் லக்ஷ்மிபதி.
 
 
அவன் அலுவலகம் செல்லும்போது வந்து பார்ப்பதாய்ச் சொன்னானே தவிர, காலை வராமல் அலுவலகம் விட்டுச் செல்லும்போது இரவுதான் வந்தான்.  வந்தவனும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் பேசினான்.
 
 
"என்னடா பண்றே லக்ஷ்மி!  அம்மாவை ஜி ஹெச்ல காமிச்சிருக்கக் கூடாதோ... இதெல்லாம் லேட் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா உனக்கு?  ஏற்கெனவே அப்பா விஷயத்துல பட்டது ஞாபகமில்லையா?"
 
 
நன்றாய் நினைவில் இருந்தது லக்ஷ்மிபதிக்கு.  அதுதான் கவலையே.
பசுபதி அப்போதும் ஏதோ நண்பனைப் போல வந்து பார்த்தானே தவிர, பெரிய உதவி ஏதுமில்லை.  அவன் மனைவியிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்கவில்லை போலும்.  அவன் மனைவி கல்பனாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது பசுபதி அவர்களைக் கவனித்துக் கொண்டதைப் பார்த்து பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும்.
 
 
ஆனால் அப்பாவுக்கு சர்ஜரி என்று வந்தபோது ஜி ஹெச்சுக்கு அழைத்துச் சென்றான். 
 
 
அங்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னபோது இவர்கள் பதறி 'சரி' என்றுதான் சொன்னார்கள்.  ஆனால் ஜி ஹெச்சில் அதற்கு ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள்.
 
 
'முதலமைச்சர் ஹெல்த் இன்ஷியூரன்ஸ் கார்ட்' இருக்கிறதா என்று கேட்டார்கள்.  'ஸ்டார் ஹெல்த் கார்ட்' இருக்கிறதா என்று கேட்டார்கள்.

இவர்கள் அதெல்லாம் இல்லை என்று சொன்னதும் வி ஏ ஓ விடம் சென்று சில சான்றிதழ்கள் வாங்கி வரும்படி சொன்னார்கள்.
"தனியார் மருத்துவ மனை போலக் கேட்கிறீர்களே..  இது அரசாங்கப் பொது மருத்துவமனைதானே?"  என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லை.

அதையெல்லாம் லக்ஷ்மிபதியிடம் செய்யச் சொல்லி 'சூ காட்டி' விட்டுச் சென்றான் பசுபதி.
 
 
வி ஏ ஓ விடம் அலைந்த அனுபவங்கள் இவனுக்கு இந்தியன் படத்தை நினைவு படுத்தின. 
 
 
அப்பா வீட்டிலேயே மரணமடைந்தார்.  இதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்.

 
இப்போது மறுபடியும் அதே காட்சிகள். 


லக்ஷ்மிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  நேரத்தை வீண் செய்யாமல் வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருந்த தனியார் மருத்துவ மனைக்கு அம்மாவை அழைத்துச் சென்றான்.

பரிசோதனைகளை முடித்த மருத்துவர், அம்மாவுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார்.  
 
மருத்துவமனையில் தங்கும் செலவு உட்பட அதற்கு சுமார் ஐந்து லட்சம் ஆகும் என்றார்.  இங்கேயும் 'ஹெல்த் இன்ஷியூரன்ஸ் கார்ட்' ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்கள்.
இந்த இடைவெளியிலாவது ஏதாவது இன்ஷியூரன்ஸ் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.  எல்லாமே லேட்டாகத்தான் தோன்றுகிறது. 

கஷ்டப்படும்போதுதான் தெரிகிறது.  இனியாவது எடுக்கலாம்.  ஆனால் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. உடனே பணம் ஏற்பாடு செய்ய வேண்டும்.  பசுபதி எதிர்பார்த்தது போலவே கைவிரித்து விட்டான். 
 
 
உள்ளூரில் உறவு என்று யாரும் இல்லை.  இருந்தாலும் கொடுக்கப் போகிறார்களா என்ன!
 
 
இந்த யோசனையில் உட்கார்ந்திருந்த போதுதான் அந்தப் பெரியவர் இவன் பெயரைச் சொல்லி ஐந்து லட்சம் எடுக்கப் போவதாய்ச் சொல்லித் தாண்டிச் சென்றார்.
 
 
அவர் மனைவியின் பெயர் லக்ஷ்மி என்று இருந்ததே தெய்வம் தனக்குக் கொடுத்திருக்கும் சிக்னல் என்று நினைத்தான் லக்ஷ்மிபதி.
 
 
அவர்கள் பணத்துடன் வெளியில் செல்வதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தான்.  கவனமாகத் தொடர்ந்தான்.
 
 
மனைவியை வீட்டில் விட்டு விட்டு பெரியவர் உடனே வெளியில் கிளம்பினார்.  எல்லாம் தனக்குச் சாதகமாகவே நடப்பது போலத் தோன்றியது லக்ஷ்மிபதிக்கு.
 
 
அந்த வீட்டின்முன் பைக்கில் அமர்ந்து ஃபோன் பேசுவது போல நடித்தவன், பைக்கிலிருந்து பேலன்ஸ் தவறி விழுவது போலச் சாய்ந்தான்.  எழுந்து பைக்கை நிமிர்த்தித் துடைத்தவன், ஸ்டார்ட் செய்து 'செக்' செய்வது போல செய்து பார்த்தான்.  பிறகு தன் கை கால்களையும் தட்டி விட்டுக் கொண்டான்.  நம்பர் ப்ளேட் தெரியாமல் இருக்க அதில் கொஞ்சம் சேறு பூசினான்.
 
 
சுற்றுமுற்றும் பார்த்தவன் யதேச்சையாக பார்ப்பது போல அந்த வீட்டைப் பார்த்தவன், ஏதோ யோசித்து தயக்கத்துடன் அணுகுவது போல உள்ளே சென்றவன் "ஸாரிம்மா.. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"  என்று கேட்டவன் பார்வை வீட்டினுள்ளே அலைந்தது.   அவர்கள் கொண்டு வந்திருந்த 'அந்தப் பை' கண்ணெதிரே டிவி ஸ்டாண்டில் பாபா படத்தின்முன் இருப்பதைப் பார்த்துக் கொண்டான்.
 
 
ந்த வயதான மாது உள்ளே சென்று தண்ணீருடன் திரும்பியபோது அவன் அங்கு இல்லை.  பைக்கும் இல்லை.  சில நொடிகளில் பணமும் அங்கில்லை என்பதை உணர்ந்து அவள் மூர்ச்சையானாள்.
 
 
திரும்பி வந்த பெரியவர் நடந்ததை அறிந்து இடிந்து போனார்.  அவர்களுடைய சேமிப்பு முழுதும் காலி என்ற அதிர்ச்சி ஒரு புறம்.  இப்போது இதை வாங்க அவர் பெண்ணும் மாப்பிள்ளையும் வருவார்களே, அவர்களுக்கு என்ன சொல்வது என்கிற கவலை மறுபுறம்.
 
 
"என்ன லக்ஷ்மி இப்படி விட்டுட்டே?" என்பதற்கு மேல் அவராலும் பேச முடியவில்லை.  வந்தவன் முகத்தில் அவன் கைக்குட்டை கட்டி இருந்ததால் அடையாளமும் சொல்ல முடியவில்லை.
 
 
லக்ஷ்மியும் இடிந்து போயிருந்தாள்.  மாப்பிள்ளை தங்கள் பெண்ணை வார்த்தைகளால் காயப் படுத்தி இந்தப் பணத்தைப் பெற ஏற்பாடு செய்திருந்தார்.  அவருடைய தம்பி வெளிநாட்டுக்கு படிக்கச் செல்ல வேண்டி உடனே பணம் வேண்டும் என்று நெருக்கிக் கொண்டிருந்தார்கள்.  இது போதாது என்று மேலும் சிலரிடமும் கேட்டிருப்பதாகச் சொல்லி இருந்தார்கள்.
 
 
இப்போது பணம் இல்லை என்று சொன்னால் மாப்பிள்ளை ஆடப் போகும் ருத்ரதாண்டவத்தை நினைத்து கவலை ஏற்பட்டது அவர்களுக்கு.
போலீஸில் புகார் செய்தார்கள். 

மாப்பிள்ளை வந்து ஏமாந்தார்.  கடுகடுத்தார்.  ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.  மகள் இந்தப் பக்கமும் பேச முடியாமல், அந்தப் பக்கமும் பேச முடியாமல் கண்களில் நீருடன் அவருடன் கிளம்பிச் சென்றாள்.
 
 
ஒரே மகள்.  செல்லமாய் வளர்ந்தவள்.  புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் செல்லச் சீராடல்களை எதிர்பார்க்க முடியாதுதான்.  ஆனாலும் அவளை இன்னும் கொஞ்சம் அன்பாக, கௌரவமாக நடத்தலாம் என்னும் பெற்றோர்களின் வழக்கமான நெருடல் இவர்களிடம் இருந்தது.
 
 
போலீஸ் விசாரணையும் அதுவுமாக ஐந்து நாட்கள் கழிந்தன.
 
 
வாசலில் பைக் ஒன்று வந்து நின்றது.  இறங்கியவனை அடையாளம் தெரிந்தது லக்ஷ்மிக்கு.
 
 
வேகமாக எழுந்ததால் சற்றே தடுமாறி விழப் போனவள், சுவரைப் பிடித்துக் கொண்டாள்.  பெரியவர் கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தவர், திரும்பி வாசலைப் பார்த்தார்.
 
 
உள்ளே வந்த லக்ஷ்மிபதி அந்தப் பையை அவர்கள் காலடியில் வைத்தான்.  குனிந்து அவர்கள் காலைத் தொட்டான். 
 
 
"என் பெயர் லக்ஷ்மிபதி" என்றான்.



ணத்தை எடுத்துக் கொண்டு விரைந்து வீட்டை அடைந்தான் லக்ஷ்மிபதி.  வீட்டில் யாருமில்லை.  பூட்டியிருந்தது.
 
 
இவனைப் பார்த்த எதிர் வீட்டுக்காரர் இவனை நெருங்கி வீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு விவரம் சொன்னார்.
 
 
"அரைமணி முன்னாலே அம்மா மயக்கமா விழுந்துட்டாங்க தம்பி..  நம்ம வீட்டம்மாவும், கோடி வீட்டு சாந்தியக்காவும் அம்மாவ அழைச்சிகிட்டு ஆஸ்பத்திரி போயிருக்காங்க.."
 
 
"எந்த ஆஸ்பத்திரி அங்கிள்?"
 
 
"ஜி ஹெச்"
 
 
"ஐயோ...  அங்கே சர்ஜரி எல்லாம் உடனே செய்ய மாட்டாங்களே.. "  பைக்கைத் திருப்பிக் கொண்டு பறந்தான்.


ம்மாவை ஜி ஹெச்சிலிருந்து மாற்றி, ஏற்கெனவே பார்த்திருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அம்மா உயிரை விட்டு விட்டாள்.
 
 
பிரமித்து நின்றான் லக்ஷ்மிபதி.  வழி ஒன்றைக் காண்பிப்பது போலக் காட்டி கடவுள் தன்னை ஏமாற்றி விட்டதாகக் குமுறினான்.  இன்னும் ஒரு வருடம் முழுதாகப் படிக்கும் காலம் பாக்கி இருக்க,  தனது எதிர்காலம் பற்றிய கவலையும் அவனை வாட்டியது. 
 
 
தந்தையும் இல்லை.  தாயும் இல்லை.  அண்ணன் என்று ஒருவன் இருந்தும் பயனில்லை.  அவனிடம் உதவி கேட்கவே கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.  'கேட்டால் மட்டும் என்ன, உடனே உதவி செய்து விடப் போகிறானா என்ன?'
ஐந்து நாட்கள் கழிந்த நிலையில் அந்த பணப்பையின் நினைவு வந்தது.
அதை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.



டந்ததை எல்லாம் சொல்லி முடித்து, கண்ணைத் துடைத்துக் கொண்டான் லக்ஷ்மிபதி. 
 
 
"இதோ..  இதில் நாலு லட்சத்து ஐம்பதாயிரம் இருக்கு ஸார்..  மிச்ச ஐம்பதாயிரம் ரூபாய்க்கு என் பைக்கை இங்கே விட்டுப் போகிறேன் ஸார்.  என்னால் அதுதான் செய்ய முடியும்.  தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்ல முடியாது.  நான் செஞ்ச தப்புக்குத்தான் ஆண்டவன் என் அம்மாவையும் எடுத்துக் கொண்டு விட்டான் போல..  எனக்கு பணத்து மேல ஆசை எல்லாம் கிடையாது ஸார்..  அப்படி இருந்திருந்தா நான் இதைத் திரும்பிக் கொண்டு வந்திருக்க மாட்டேன்..  என்னை மன்னிச்சுடுங்க.."
 
 
விசாரணைக்கு வந்த போலீஸ்காரரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.
 
 
பெரியவருக்கும், லக்ஷ்மிக்கும் ஏனோ இப்போது அவன் மேல் கோபம் வரவில்லை.  அவர்களின் மாப்பிள்ளை தான் கேட்ட பணத்துக்கு வேறு இடத்தில் ஏற்பாடு செய்து கொண்டதும் காரணமாக இருக்கலாம். 

 
 
அது மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திடீர் மாற்றமும் தெரிந்தது.  மகளிடம் இந்தச் சூழ்நிலையில் கோபப் படுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, "உன் அப்பா அம்மாவை கவலைப் பட வேண்டாம் என்று சொல்லு..  நாம வேறு இடத்தில் பணம் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.  நான் அவசரப் படுத்தி எடுக்கச் சொன்னதால்தான இந்த நிலைமை..?  அவரோட கையிருப்பெல்லாம் போச்சேன்னு கவலைல அவர்களுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாது..  நாங்கள் இருக்கோம்னு சொல்லு அவங்க கிட்ட" என்று சொல்லி அனுப்பியதோடு,  அவ்வப்போது வந்து அவரும் ஆறுதலாய்ப் பேசிச் சென்றிருந்தார். 



கேஸை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். 
 
 
"கண்ணைத் துடைச்சுக்கோ தம்பி.. உன் பேர் என்ன சொன்னே?"
 
 
"லக்ஷ்மிபதி"
 
 
"என்னென்னமோ நடந்துடுச்சு தம்பி..  உனக்கு நல்ல மனசு, பணத்தை திருப்பிக் கொடுத்துட்டே..  ஆனால் நீ பணத்தை எடுத்த நேரம் எங்களுக்கு ஒண்ணும் ஆகாமக் கடவுள் காப்பாற்றினாரே..   தப்புதான் நீ செஞ்சது..  ஆனால் அம்மாவோட மரணம் அதற்கானக் கடவுளின் தண்டனை என்று நினைக்காதே..   உங்க அம்மாவோட காலம் முடிஞ்சுது....  ரொம்பச் சிரமப் படாமப் போயிட்டாங்க.. எங்களை உன்னோட தாத்தா பாட்டி போல நினைச்சுக்கோ தம்பி..  என்ன உதவி வேணும்னாலும் கேளு..  உன் பேர்ல எவ்வளவோ கோபமாயிருந்தோம்..   இப்போ இல்லை...  நீ எப்போ நினைச்சாலும் வந்து எங்களைப் பாரு..   உன்னைப் போலவே நாங்களும் தனியாகத்தான் இருக்கோம்..   பைக்கை நீயே வைச்சுக்கோ..   நாங்க என்ன பண்ணப் போறோம் அதை வச்சுகிட்டு.. எங்கள் பேரன் போல உன்னை நினைச்சுக்கறோம்."
 
 
சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான் லக்ஷ்மிபதி.  இப்போது அம்மாவை நினைத்து அழவில்லை அவன்.
 
 
 
 
 
 
 
டிஸ்கி :: சென்ற மாதம் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியை மையமாய் வைத்து புனையப்பட்டது. 









46 கருத்துகள்:

  1. அருமை நண்பரே உண்மைச் சம்பவத்தை அழகாக திரைப்படம் போலவே கொண்டு சென்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆங்காங்கே கேள்விப்படும் மிகவும் யதார்த்தமான கதை. பாஸிடிவ்வான முடிவுடன் சொன்ன கதை நடை அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை.
    //நாம வேறு இடத்தில் பணம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் அவசரப் படுத்தி எடுக்கச் சொன்னதால்தான இந்த நிலைமை..? அவரோட கையிருப்பெல்லாம் போச்சேன்னு கவலைல அவர்களுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாது.. நாங்கள் இருக்கோம்னு சொல்லு அவங்க கிட்ட"//

    பெரியவரின் மருமகன் பேசியது அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஹ்ம்ம் இலவச மருத்துவ உதவி கிடைத்தால் அதற்காக நடக்கும் திருட்டுகள் குறையும் அல்லவா?
    பாவம் அந்த இளைஞன்..

    பதிலளிநீக்கு
  5. நடந்ததை கதையாகச் சொன்ன விதம் நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. கதையின் கரு மிக அருமை . அந்த வயதானோரின் மன்னிப்பு குணம் வெகுவாய் பாராட்டப்பட வேண்டியது.
    நிஜமான நிகழ்ச்சியை படிப்பது போலவே இருந்தது. அதனாலேயே வயதான தம்பதியை என்னையுமறியாமல் பாராட்டினேன்.

    பதிலளிநீக்கு
  7. எப்படி இவ்வளவு அழகாக ஒரு செய்தியை வைத்துக் கதை சொல்லுகின்றீர்கள்! அருமை! பாராட்டாமல் இருக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  8. பத்து லட்சம் கொடுத்துவிட்டதும் அதைப் பத்துக் கோடி கொடுத்த தாக எழுதியது போல...


    இல்லாமல் அமைத்த கதை அருமை ஸ்ரீராம் ஜி.

    பதிலளிநீக்கு
  9. அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    த ம 8

    பதிலளிநீக்கு
  10. சில சம்பவங்கள் இப்படியும் நடக்குமா என்று நம்ப முடியாமல் இருக்கிறதல்லவா? அருமையான புனைவு.
    "இந்த ஆண்டில்
    எங்கள் குறிக்கோள்:
    குறைந்த பட்சம் 280 பதிவுகள்!"
    அடைந்ததற்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  11. உண்மையான நிகழ்வு ,உருக்கமான கதை ,அருமை :)

    பதிலளிநீக்கு
  12. உண்மையான நிகழ்வு ,உருக்கமான கதை ,அருமை :)

    பதிலளிநீக்கு
  13. ஒரு தலைப்புச்செய்தியை வைத்து என்னவொரு அருமையான கதையை உருவாக்கிவிட்டீர்கள். வாழ்க்கைச்சூழலே ஒருவனை குற்றச்செய்யத்தூண்டுவதாகவும் திருத்துவதாகவும் உள்ளது. உண்மை.

    பதிலளிநீக்கு
  14. //உள்ளே வந்த லக்ஷ்மிபதி அந்தப் பையை அவர்கள் காலடியில் வைத்தான். குனிந்து அவர்கள் காலைத் தொட்டான்.

    "என் பெயர் லக்ஷ்மிபதி" என்றான். //

    இதற்கு அடுத்து வரும் பகுதிகளை லேசாக எடிட் செய்து இதற்கு முன் தள்ளி, மேலே குறிப்பிட்ட இரு வரிகளை கதையின் கதையின் கடைசி வரிகளாய் ஆக்கி, 'நறுக்'கென்று முடித்திருந்தால் கதை நறுவிசாக 'பளிச்'சென்ற தோற்றம் கொடுத்திருக்குமோ என்று ஒரு எண்ணம்.

    அப்போ? விவரணையான போலிஸ் விசாரணை பகுதி, பெரியவர்- லஷ்மி குடும்ப மன நெகிழ்ச்சி இதற்கெல்லாம் கத்திரிக்கோல் போட்டிருக்கலாம். இல்லையென்றால் முன் பகுதியில் நாசூக்காக சாமர்த்தியமாக ஓரிரு வரிகளில் சொல்லிச் சென்றிருக்கலாம்.

    கதை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இன்னொருவர் சொல்லக் கூடாது தான். ஆனால் 'விறுவிறு' என்று நகர்ந்த கதை மேற்கொண்டு லேசாக தயங்கித் தயங்கி ஊர்ந்ததால் நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நானே எடுத்துக் கொண்ட உரிமையில் சொல்லத் தோன்றியது.

    சிறுகதைக்கு லட்சணம், பல கதைகளும் சாங்கோபாங்கமான நீண்ட விவரணைகளும் அதில் வராமல் பார்த்துக் கொள்வது என்பதும் உங்களுக்கே தெரிந்த ஒன்று தான்.

    பத்திரிகை செய்தி கற்பனையை மீட்ட ஒரு பொறி தான்; அந்தளவிற்கே அதன் உபயோகமும்.

    பதிலளிநீக்கு
  15. நல்லா சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. கதையும் செம.. தலைப்பு அதவிட செம. ! :)

    பதிலளிநீக்கு
  17. உண்மைச் சம்பவத்தை வைத்து மிக அழகான ஒரு கதையை சொல்லியிருக்கிறீர்கள். கதை மியா அருமை.

    பதிலளிநீக்கு
  18. நிஜம் என்று படித்துக்கொண்டே போனேன். அம்மா போய்ட்டா ஸரி. மீதியை இருக்கிறவர்கள் நடக்க விடுவார்களா. எப்படிபட்ட பிள்ளைகள். இரண்டு துருவம். வாழ்க்கையில் இதே ஆங்காங்கே சிற்சில மாறுதல்களுடன் அறங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதெல்லாம் முடிவு கட்டி வயதானவர்களுக்கு வசதி கொடுத்து ஆதரிக்க காலம் மாறுமா? நடந்தகதை. நடக்கும் கதை. பாசம்,துரோகம் ,பரிவு கலந்த கதை. மனதைவிட்டு அகல மறுக்கிறத அன்புடன்

    பதிலளிநீக்கு
  19. நன்றி சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி துளசிஜி. (கீதா என்று சிக்னேச்சர் இல்லை!)

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி நண்பர் செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  24. பதிவுகளின் இலக்கு எண்ணிக்கையை அடைந்ததை கவனித்துப் பாராட்டியதற்கும் நன்றிகள் சகோதரி மிடில்கிலாஸ்மாதவி.

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஜீவி ஸார். எடிட் செய்திருக்கலாம் என்று நீங்கள் சொன்ன பிறகு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  26. நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.

    பதிலளிநீக்கு
  28. அருமையான படைப்பாக்கம்
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  29. நெஞ்சம் நெகிழ்ந்தேன் கதைதான் என்றாலும் கண்ணீர் வடிந்ததே தங்கள் திறமைக்கு சான்று!

    பதிலளிநீக்கு
  30. இதுக்கு நான் கொடுத்த கருத்து எங்கே? எங்கே? எங்கே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  31. ஒரு சின்ன சம்பவத்தை வைத்து அழகான கதையைப் பின்னி விட்டீர்கள்! கதையைக் கொண்டு போன விதம் மிக அருமை! (நேத்து என்ன எழுதினேன்னு மறந்து போச்சு) என்னென்னமோ சொல்லி இருந்தேன். :) ஜீவி சார் சொன்ன மாதிரி கடைசியில் வந்திருக்கணுமோ, "என் பெயர் லக்ஷ்மிபதி!" என்பது? :) இது இப்போத் தான் தோணிச்சு! நேத்துத் தோணலை!

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  34. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!