Monday, November 24, 2014

'திங்க'க்கிழமை : சித்துண்டை!


ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு சுவை.

பதினைந்து வயது இருக்கும்போது என்று நினைவு.  வீட்டுக்கு வந்து செல்லும் உறவினர்கள் எல்லாம் 'ஊர்க்காசு' என்று தந்து செல்வார்கள். அதில் அவரவர்கள் பங்கை அவரவர்கள் தனித்தனியே வைத்து செலவு செய்வோம்.  அம்மா வாங்கி ஆளுக்கொரு பர்ஸ் போட்டு உள்ளே வைத்திருப்பார்கள்.

                                  
பெரும்பாலான சமயங்களில் இருபது தேதிக்குமேல் அப்பாவின் பற்றாக்குறை பட்ஜெட்டைச் சமாளிக்க அப்பா ஒருநாள் அம்மாவையும் வைத்துக்கொண்டு எல்லார் பர்சையும் எடுத்துச் சோதித்து, அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு கடன் வாங்கியது என்று குறிப்பிட்டு தொகையைக் குறிப்பிட்டு அதன் உள்ளே சீட்டு வைத்துவிட்டு எடுத்துக் கொள்வார். நாங்களும் பெருமையாகவும், பெருந்தன்மையாகவும் ("வேற வழி? அப்பாவுக்கே நாங்க பணம் தர்ரோம்ல...")  அருகில் அமர்ந்து அப்பா சேமிப்புப் பணத்தை எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்போம். நாங்கள்லாம் அப்பவே அப்படி.... அப்படிக்  குடும்பப் பொறுப்பைத் தோளில் தூக்கிச் சுமந்தவர்களாக்கும்!

                                             
அப்பா ரெகுலராக தினசரி செய்யும் செலவுகளை எழுதி வைக்கும் வழக்கம் உடையவர்.  யோசித்து யோசித்து, எங்களையும் கேட்டுக் கேட்டு காலைக் கடன்களில் ஒன்றாக எல்லா செலவுகளையும், இதற்கென வைத்திருக்கும் நோட்டில் எழுதி விடுவார். அந்த நோட்டில் சில சமயங்களில் க.தி.த என்று அவர் கணக்கில் எழுதி எங்கள் கடனைத் திருப்பித் தருவதும் உண்டு.
                            
                                                                                
                                                              

("என்ன, சம்பந்தமில்லாமப் பேசிகிட்டு.... சித்துண்டையைப் பற்றிச் சொல்லேம்பா..." என்று குரல் வருவது கேட்கிறது. இதோ இந்த அரட்டையை முடித்து விட்டு கடைசியில் அதைச் சொல்கிறேன்)


எங்கே விட்டேன்.... ஆங்...  க.தி த!
எப்படியோ அப்படி இப்படி பாக்கி இருக்கும் பணத்தை சத்தமில்லாமல் எடுத்து செலவு செய்வேன். அதில் உள்ள சீட்டில் எழுதியும் விடுவேன்.

அப்படி ஒருமுறை கடைத்தெரு சென்றபோது எல்லோரும் சாப்பிட வாழைப்பழம் வாங்கி வந்தேன். வீடு வந்த உடனேயே ஒன்றைச் சாப்பிட்டேன்.

                                    
அன்று ஏனோ அந்தப் பழத்தின் சுவை மிகவும் கவர்ந்து விட்டது. இன்னும் ஒன்று, இன்னும் ஒன்று என்று 12 வாழைப்பழங்களையும் நானே சாப்பிட்டு விட்டேன்.  மறுபடி கடைக்குச் சென்றேன்.   மறுபடி 12 பழங்கள்.  வீடு.  12 பழங்களையும் மறுபடி நானே... மறுபடி கடை.  மறுபடி 12 பழங்கள்.  இம்முறை 6 பழங்கள் மட்டும் சாப்பிட்டேன்! ( 'வயிறு என்ன ஆச்சு? வயிறா இல்லை...?'  என்று யாரும் கேட்க்கக் கூடாது! நடந்ததை அப்படியே சொல்கிறேன். அவ்வளவுதான்!) 

சமயங்களில் வாழைப்பழங்களைச் சிறு துண்டங்களாக்கி, ஒரு டபராவில் போட்டு கொஞ்சம் பால் சேர்த்து, சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்து இரண்டு பிஸ்கட்டுகளை அதில் பொடி செய்து தூவி, ஸ்பூனால் கலக்கி சாப்பிடும் பழக்கமும் உண்டு! அப்பா பால் பழம் மட்டும் அவ்வப்போது சாப்பிடுவார். நான் பிஸ்கட் போன்ற துணைப் பொருட்கள் அவ்வப்போது சேர்த்துக் கொள்வேன்!
 
இப்படியும் ஒருமுறை நடந்தது!!!   இப்போ சித்துண்டை!


=======================================================
சித்துண்டை :

தேங்காய்த் துருவல் ஒரு மூடி, ஒரு கரண்டி வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள், இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கிளறி, ஒரு ஸ்பூன் அரிசி மாவு தூவி, கிளறி இறக்கி வைக்கவும்.

   
அரை ஆழாக்கு மைதா மாவு, சிறிது அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி இவற்றைச் சேர்த்து பஜ்ஜி மாவு போல நீர் விட்டுக் கரைத்து, பூரணத்தை உருட்டி, மாவில் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்!

சித்துண்டை ரெடி!

==============================================================
குறிப்பு : 'சித்துண்டை' படங்கள் இணையத்தில் கிடைக்காததால், சுய்யன் படங்களை இணைத்திருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்!

படங்களுக்கு இணையத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!

27 comments:

Thulasidharan V Thillaiakathu said...

சித்துண்டை என்று பெயரிடாவிட்டாலும் இது செய்வதுண்டு சுய்யன் ?போல....பூரணம் கடலைப்பருப்பு வெல்லம் பூரணம் வைத்துசெய்வதுண்டு ..

பொரிக்கப்பட்ட மோதகம் என்றும் சொல்வதுண்டு இதை.....ஒரு சிலர் இதன் மேல் மாவு அரைத்த உளுந்து மாவை வைத்தும் செய்வதுண்டு....

நீங்கள் நிஜமாகவே எக்ஸ்பர்ட்தான்! நாவில் நீர் ஊறுகின்றது....

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்...!

Ramani S said...

முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன்
ஆயினும் மிக எளிதாக இருப்பதால்
செய்து பார்த்துவிடும் எண்ணம் இருக்கிறது

Chokkan Subramanian said...

ஏங்க இப்படியெல்லாம் படத்தை போட்டு எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புறீங்க.
வாழைப்பழத்தை படிக்கும்போது, கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி ஏதாவது சொல்ல போகிறீர்களோ என்று பார்த்தேன்.

ஹுஸைனம்மா said...

சித்து...ன்னு தலைப்பு வச்சுட்டு, சிறுசேமிப்பில் ஆரம்பிச்சு, வாழைப்பழம் வழி வந்து, ஒருவழியா சித்துண்டையில் முடிச்சிருக்கீங்க!!

ஒரே அடியில் 30 வாழைப்பழமா..... பச்சைப் பழமா, மொந்தம்பழமா கோழிக்கோடா?
(அந்தப் பாராவில் 12, 12, 12, 12, 12ன்னு ஏகப்பட்ட 12களா, அதைக் கவனமா கணக்கு பண்ணி மொத்தம் 30னு கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டமாப் போச்சு)

anitha shiva said...

கலக்கலான சித்துண்டைக்கு சபாஷ்ங்கோ....

Angelin said...

இந்த சித்துண்டைக்கு இன்னொரு பெயர் மூச்சுண்டை என்று நினைக்கிறேன் :)
எனக்கு சாப்பிட்ட நினைவு இருக்கு மைதா மாவு சேர்த்து நல்லா மென்மையா இருக்கும் ..btw thanks for the recipe :)

மனோ சாமிநாதன் said...

வாழைப்பழத்தை இப்படியும் மிக ருசியாக சாப்பிடலாமா? ஒரு வாழைப்பழ புட்டிங் குறிப்பை அழகாய் சொல்லி விட்டீர்கள். சித்துன்டை சுழியன் குறிப்பு போலத்தான் என்றாலும் சிறு சிறு வித்தியாசங்கள் உள்ளன. இதுவும் வித்தியாசமான பெயருடன் ஒரு சுவையான குறிப்பு தான்! குறிப்பு தருவதற்கு முன் தந்தையுடன் பகிர்ந்து கொண்ட நினைவலைகள், உணவு மீதான அனுபவங்கள் அதையும் விட சுவை!

Bagawanjee KA said...

என் பசங்களுக்கும் தீபாவளி காசு நிறைய சேருகிறது ,ஆனால் கடன் தரவே மாட்டார்கள் ,அதைவிடக் கொடுமை ,இப்போது ஆன்லைனில் வேண்டியதை வாங்கிக் கொள்ளும் அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் !

rajalakshmi paramasivam said...

நீங்கள் சொல்லியுல்லக் குறிப்பில் கடலைப்பருப்பு வேகவைத்து சேர்த்து நான் சுழியன் என்று செய்வோம்.

ஹுஸைனம்மா said...

//வாழைப்பழத்தை இப்படியும் மிக ருசியாக சாப்பிடலாமா? ஒரு வாழைப்பழ புட்டிங் குறிப்பை அழகாய் சொல்லி விட்டீர்கள்//

ஆனா, குறிப்புல வாழைப்பழமே சேர்க்கலையே? நான்கூட ஏன் இந்தப் பதிவுல சம்பந்தமே இல்லாம வாழப்பழ நியூஸ்னு குழம்பி, கேட்கலாமான்னு நெனச்சு வேண்டாம்னு விட்டேன்.

இதோ உங்க பதிவில் உள்ள குறிப்பு: மறுபடி மறுபடி மறுபடி மறுபடி வாசிச்சுப் பாத்துட்டேன்... :-(
//தேங்காய்த் துருவல் ஒரு மூடி, ஒரு கரண்டி வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள், இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடங்கள் கிளறி, ஒரு ஸ்பூன் அரிசி மாவு தூவி, கிளறி இறக்கி வைக்கவும்.

அரை ஆழாக்கு மைதா மாவு, சிறிது அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி இவற்றைச் சேர்த்து பஜ்ஜி மாவு போல நீர் விட்டுக் கரைத்து, பூரணத்தை உருட்டி, மாவில் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்!//

கீத மஞ்சரி said...

சித்துண்டை இப்போதுதான் கேள்விப்படறேன். கிட்டத்தட்ட சுகியன் மாதிரிதான் இருக்கும்போலும். சுகியன் பூரணத்துக்கு க.ப. வேகவைத்து சேர்ப்போம்.

எனக்கும் ஹூஸைனம்மா மாதிரியே சந்தேகம் வந்தது.. இந்த பலகார செய்முறைக்கும் வாழைப்பழத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?

ஸ்ரீராம். said...

துளசி ஸார்.. சென்ற வாரங்களில் சொல்லியிருப்பது போல இவற்றை ஒரு பழைய புத்தகத்திலிருந்துதான் எடுத்துப் போடுகிறேன். சித்துண்டை பெயர் நானே கேள்விப்படாதது!

நன்றி டிடி.

நன்றி ரமணி ஸார்.

நன்றி சொக்கன் சுப்பிரமணியம்.

நன்றி ஹுசைனம்மா. சித்துண்டை சமையல் குறிப்பு அநியாயத்துக்கு சிறியதாக இருந்தது. அதனால் 'திங்க'றதைப் பற்றிக் கொஞ்சம் வெட்டி அரட்டை! அப்புறம் ச. குறிப்பு!
முதல் வருகைக்கு(ம்) நன்றி அனிதா சிவா.

நன்றி ஏஞ்சலின். மூசுண்டை என்று சொல்வார்களோ! அப்படித்தான் ஒரு பெயர் கேள்விப்பட்ட நினைவு இருக்கிறது.

நன்றி பகவான்ஜி.

நன்றி மனோ சாமிநாதன் மேடம். .உங்களை ஹுசைனம்மா ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள்!

நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். நீங்கள் சொல்வது சரிதான்.

ஹுசைனம்மா.... வாழைப்பழம் பற்றி நான் சொல்லி இருப்பதில் அதைத் துண்டுகளாக்கி, பால், பிஸ்கட் சேர்த்து சாப்பிடும் வழக்கம் பற்றி சொல்லியிருக்கிறேனே, அதைக் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்!

நன்றி கீத மஞ்சரி. நீங்கள் சொல்வது சரி. வாழைப் பழத்துக்கும் சித்துண்டைக்கும் தொடர்பு இல்லை. சும்மா அரட்டைதான்!

கோமதி அரசு said...

இளமைக்கால நினைவுகள் மிக அருமை.
நாங்களும் இப்படி வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், நாள் கிழமைகளில் விபூதி பூசி கொடுக்கப்பட்ட காசுகளை சேமித்து வைத்து இருப்போம், அம்மா அதை கொடுங்கள் என்று வாங்கி நாங்கள் விரும்பிய விளையாட்டு பொருட்கள் வாங்கி தருவார்கள்.

வாழைப்பழ செய்தி வியக்க வைக்கிறது.

அவலை பாலில் ஊறவைத்து வாழைபழம், தேங்காய் துருவல், சர்க்கரை தூள் சேர்த்து உண்டு இருக்கிறேன்.

பிஸ்கட் போட்டு சாப்பிட்டது இல்லை.

சித்துண்டை இப்போது கணபதி ஹோமத்திற்கு முன்பே செய்து வைத்து கொண்டு வருகிறார்கள் .

அருமையான சித்துண்டை.
ஏஞ்சலின் சொல்வது போல் மூசுண்டை மூஷிகவாகனத்தில் வரும் விநாயகருக்கு செய்யும் பிரசாதம் என்பதாலும் அபபடி சொல்லலாம் போல!ராமலக்ஷ்மி said...

குறிப்பு அருமை. அனுபவக் குறிப்பு அதனினும் அருமை:)! இரசித்தேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

சின்ன உருண்டை சித்துண்டை என்று மறுவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்! சுவையான பழைய நினைவுகளுடன் சுவையான பலகாரப்பகிர்வு சிறப்பு! நன்றி!

G.M Balasubramaniam said...

அத்தனை பழங்களையும் சாப்பிட்டல் என்னாகிறது. வயிறா அது வண்ணான்சால் என்று யாரோசொல்வது கேட்கிறது. சிறு வயதில் கடைக்குப் போய் தித்திப்பு போண்டா என்று வாங்கி சாப்பிட்ட நினைவு வருகிறது.

மனோ சாமிநாதன் said...

ஹுஸைனம்மா! சித்துண்டை குறிப்பிற்கு முன்னால் தான் சிறு வயதில் வாழைப்பழம் சாப்பிட்ட விதம் பற்றி ஸ்ரீராம் எழுதியிருந்ததைத்தான் வாழைப்பழ புட்டிங் என்று குறிப்பிட்டேன். கோமதி கூட பிஸ்கட்டிற்கு பதில் அவலைச் சேக்கலாம் என்று சொல்லி இன்னொரு வாழைப்பழ புட்டிங் குறிப்பு கொடுத்தியிருக்கிறார்கள்!

ezhil said...

எளிதாய்தான் இருக்கு படிக்க... இதே போல் பாசிப்பயறில் செய்வதும் சுவையாய் இருக்கும்

ezhil said...

எளிதாய்தான் இருக்கு படிக்க... இதே போல் பாசிப்பயறில் செய்வதும் சுவையாய் இருக்கும்

Geetha M said...

படிக்கும் போதே சாப்பிட ஆசை வருதே சகோ...

Kamatchi said...

சித்துண்டை தேங்காய் ஸுய்யம். அல்லது ஸுகியன். தேங்காய்பூரணம்
மாவுக்கலவையில் தோய்த்துப் போட்டால் சித்துண்டை, அதாவது சின்ன உண்டை போலும்.
பழைய நாட்களில் பிள்ளைகளை நீ மூசுண்டை,சித்துண்டை சாப்பிடத்தான் லாயக்கு என்று கோபிப்பார்கள். ஒருவேளை இதுதான் இதுவோ? அன்புடன்

Ranjani Narayanan said...

துளசிதரன் சொன்னதுபோல உளுத்தம்பருப்பு அரைத்து அதில் இந்த பூரணத்தை வைத்து என் பெண் வீட்டில் செய்வார்கள்.

சித்துண்டை ஈசியான குறிப்பாக இருக்கிறது.
வாழைப்பழத்தை சின்னசின்ன துண்டகளாக நறுக்கி, அதில் வெல்லம், தேங்காய் போட்டு கலந்து இந்த ஊரில் ரசாயன என்று செய்வார்கள். இந்தக் கலவையில் பலாப்பழம், தேன் சேர்த்து செய்தால் கரடி ரசாயன! எங்கள் சம்மந்தி வீட்டில் இதெல்லாம் செய்வார்கள்.

எப்படியோ வாராவாரம் 'திங்க' சொல்லிக்கொடுக்கிறீங்க!

Geetha Sambasivam said...

கிட்டத்தட்ட நெய்க் கொழுக்கட்டையைத் தான் இங்கே சித்துண்டைங்கற பேரிலே கொடுத்திருக்கீங்க. நெய்க் கொழுக்கட்டைக்கு ரவையைக் கொஞ்சம் பால்விட்டு கால் டீஸ்பூன் உப்புச் சேர்த்துப் பிசைந்து ஊற வைத்துவிட்டுப் பின்னர் அதைச் சப்பாத்தி போல் இட்டுக் கொண்டு வட்டமாக வெட்டி நீங்க சொல்லி இருக்கும் தேங்காய், வெல்லம் சேர்த்த பூரணத்தை வைத்து மூடிப் பொரிப்போம். இவற்றை இப்போதும் நான் எங்க ஊர்க் குலதெய்வம் கோயிலுக்குப் போகையில் அங்கிருக்கும் பொய்யாப் பிள்ளையாருக்குச் செய்து எடுத்துப் போவேன். கணபதி ஹோமம் போன்ற விசேஷங்களுக்கும் இது தான் முதல் நாள் காலையிலேயே பண்ணி வைத்துக் கொள்வோம்.

Geetha Sambasivam said...

சிய்யம், சுய்யன், அல்லது சுகியன், சுழியன் என்பதற்கும் எங்க வீட்டில் தேங்காய்ப் பூரணம் தான் சேர்ப்போம். பருப்புச் சேர்ப்பதில்லை. தேங்காய்ப் பூரணம் செய்து வைத்துக் கொண்டு அரிசி மாவில் உளுந்தை ஊற வைத்துக் கொடகொடவென்று அரைத்துச் சேர்த்து உப்புப் போட்டுக் கலந்து கொண்டு. தேங்காய்ப் பூரணத்தை உருட்டி அதில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுப்போம்.

Geetha Sambasivam said...

அந்தக் காலத்திலேயே வாழைப்பழ புட்டிங்கைக் கண்டு பிடிச்சிருக்கீங்க! :)))) போன வாரம் திங்கக் கொடுத்ததுக்கு இன்னிக்குத் தான் வந்திருக்கேன். இதை எல்லாம் உடனே
"திங்க"ணும். :)))) வைச்சுச் சாப்பிட முடியாது.

Geetha Sambasivam said...

வாழைப்பழம் நிறைய இருந்தால் வட்ட, வட்டமாக நறுக்கிக் கொண்டு தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஊற வைத்த அவல் (அவல் இல்லாமலும் சாப்பிடலாம்) கலந்து சாப்பிடுவது உண்டு. பல சமயங்களில் மாலை நேர டிஃபனாகவும் இதுவும் சுட்ட அப்பளமும் தான்! :)))) எல்லாப் பழங்களையும் கூடப் போட்டுக்கலாம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!