Thursday, April 30, 2015

லிஃப்ட் : 'சில்லறை பொறுக்கினேன்' அனுபவம் தொடர்ச்சி.


"...அவர்களைப்  பார்த்து அன்று புன்னகைத்தவர்களில் மற்றவர்களுக்கு பிற்பகல் விளைந்ததா தெரியவில்லை.  ஒரு மாதத்துக்குப்பின் எனக்கு விளைந்தது!  அதை அப்புறம் சொல்கிறேன்!"   என்று சென்ற வாரம் முடித்திருந்தேன் அல்லவா....  அதன் தொடர்ச்சி!
 


நகரின் ஓரத்தில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.  அந்த மருத்துவமனையில் என் நண்பரின் மாமா சிகிச்சை பெற்று வந்தார்.  அவரைப் பார்க்க வந்திருந்த நண்பரைப் பார்க்க அங்கு சென்றேன்.

வரவேற்பறையில் கேட்டபோது B 2 க்குச் செல்லும்படி கூறினார்.

"எங்கிருக்கிறது?  எப்படிப் போக வேண்டும்?"

"செகண்ட் ஃப்ளோர்... லிஃப்டில் போங்க... ரைட்ல போய்த் திரும்பினீங்கன்னா லிஃப்ட்.."

சென்று திரும்பி, பொத்தானை அமுக்கிக் காத்திருந்து, கதவு திறந்ததும் உள்ளே சென்றேன்.  அவ்வளவு பெரிய லிஃப்ட் பார்ப்பது அதுதான் முதல் முறை.   ஒரு அறையைப் போல சற்றே பெரியதாயிருந்தது.

B2 வை   அமுக்கி விட்டுக் காத்திருந்தேன்.  கதவு மூடிக் கொண்டு மேலே போவதற்கு பதில் கீழே சென்றது.  


'என்னடா இது! பட்டன் தப்பா அமுக்கிட்டோமோ' என்று மறுபடி பார்த்தேன்.  அப்புறம்தான் தெரிந்தது அண்டர்கிரவுண்டில் கூட மக்கள் இருக்கிறார்கள், அங்கும் லிஃப்ட் செல்கிறது என்று.

பின்னர் மீண்டும் தரைத் தளத்துக்கு வந்தது.  அடுத்து B1 வந்து நின்றது.  இரண்டு மூன்று பேர்கள் ஏறினார்கள்.  அடுத்த தளத்தில் நான் இறங்க வேண்டும்.  அந்தத் தளமும் வந்து நின்றது.  கதவு திறக்கவில்லை.  அப்படியே கிளம்பி விட்டது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.  'என்னடா இழவு இது...ஒன்றும் புரியவில்லையே..' என்று எண்ணிக் கொண்டு B3, B4 எல்லாம் செல்வதையும் ஏறி, இறங்குபவர்களையும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

மறுபடியும் B2 வந்தபோது நான் மட்டுமே லிஃப்டில்.  இறங்கத் தயாராய் நிற்கிறேன்.  கதவு திறக்கவில்லை.  லேசான பதட்டம் கலந்த கடுப்பு வந்தது.  மறுபடி தரைத் தளம், அண்டர்கிரவுண்ட், மறுபடி தரைத் தளம், B1.  பேசாமல் இறங்கி படி ஏறிக் கூட B2 வுக்குச் சென்றிருக்கலாம் என்று மறுபடியும் கதவு திறக்காமல் கிளம்பியதும் தோன்றியது.  மறுபடி நான் மட்டும்தான் லிஃப்டில் (என்றுதான் நினைத்தேன்).  நான் மட்டும்தான் மேலும் கீழும் போய்வந்து கொண்டிருந்தேன்.

B3 சென்று நின்றதும் திடீரென என் பின்னாலிருந்து இரண்டு மூன்று பேர்கள் என்னைத் தாண்டிச் சென்று இறங்கினார்கள். "என்னடா இது?  மாயமாய் இருக்கிறது?  நாம் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், எங்கிருந்து வந்தார்கள் இவர்கள் என்று திரும்பிப் பின்னால் பார்த்தேன்.

அப்போதுதான் பின்னாலும் ஒரு கதவு இருப்பதைப் பார்த்தேன்.

'அட! பார்றா... இதுதானா மர்மம்!'

அசடு வழிய மறுபடி மேலே லிஃப்ட் சென்ற இடமெல்லாம் சென்று விட்டு, கீழே வரும்போது பின் கதவுக்கருகில் நின்று, காத்திருந்தேன். 


இந்தமுறை B2 வை நான் தவற விடவில்லை!  இறங்கி விட்டேன்.

23 comments:

Geetha Sambasivam said...

ஹாஹா, பல விமான நிலையங்களில் இந்த அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டது உண்டு. என்னதான் கவனமாக இருந்தாலும் சில சமயம் தடுமாறத்தான் செய்கிறது ஒரு முறை உங்களைப் போலத் தான் நாங்களும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த விமானநிலைய ஊழியர் அடுத்த முறை லிஃப்ட் நிற்கையில் உள்ளே வந்து எங்களைச் சரியான தளத்தில் இறக்கி விட்டுச் சென்றார். துபாய்லேனு நினைக்கிறேன். :))))))

நன்மனம் said...

I could visulalise your standing in front of the door in B2.

Nice presentation.

Sridhar

ஸ்ரீராம். said...

கீதா மேடம்....பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு ரொம்ப நேரம் சிரிப்பு சிரிப்பாய் வந்து கொண்டிருந்தது! முன்பு ஆஸ்பத்திரியில் பார்த்த கிராமத்து தம்பதியினரும் நினைவுக்கு வந்தார்கள்!

:))))))

நன்றி 'நன்மனம்' ஸ்ரீதர்.

துளசி கோபால் said...

இங்கே ஹாஸ்பிடலில் மட்டுமில்லாமல் பல பெரிய கடைகளிலும் ரெண்டு பக்கமும் திறக்கும் வகை இருப்பதால் சுவரில் சாய்ந்து நின்னால் எந்தப்பக்கம் திறக்குதுன்னு தெரிஞ்சுரும்:-)

திண்டுக்கல் தனபாலன் said...

சுகமான பயணம்... ஹிஹி...

ரூபன் said...

வணக்கம்
ஐயா
பயண அனுபவத்தை மிக சுவையாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
மறக்க இயலா அனுபவம்தான்

kg gouthaman said...

B++++

புலவர் இராமாநுசம் said...


இந்த அனுபவம் எனக்கும் உண்டு!

G.M Balasubramaniam said...

இரு புறம் திறக்கும் லிஃப்டில் போனதில்லை. ஒரு முறை லிஃப்டில் போகும் போது மின் தடை ஏற்பட்டு சில நிமிடங்கள் ஏதும் செய்ய முடியாமல் விழித்தது உண்டு,இப்போதும் தனியே லிஃப்டில்செல்ல ஒரு மெண்டல் ப்ளாக் உண்டு.

ADHI VENKAT said...

ஹா...ஹா...ஹா...நானும் இருவழி லிஃப்ட்டில் சென்றதில்லை. ஆனால் தனியே செல்ல எப்போதுமே பயம்....:))

படித்து விட்டு நானும் ரோஷ்ணியும் கற்பனை செய்து சிரித்தோம்...:)))

‘தளிர்’ சுரேஷ் said...

லிப்ட் என்றாலே எனக்கும் கொஞ்சம் அலர்ஜிதான்! படி ஏறி விடுவேன்! உடம்பும் இளைக்கும்! என்னே கொஞ்சம் மூச்சு வாங்கும்! ஹாஹாஹா!

கோவை ஆவி said...

hahaha.. எனக்கும் உண்டு இந்த அனுபவம்..!

KILLERGEE Devakottai said...


சாதாரண விசயத்தை அழகாக நகைச்சுவையுடன் முடித்த விதம் அருமை நண்பரே ரசித்தேன், சிரித்தேன்.

Paramasivam said...

இனி எப்போது லிப்ட்ல் சென்றாலும் இப்பதிவு என் நினைவுக்கு வந்து, நான் சிரிக்காமல் இருக்க வேண்டும்

Paramasivam said...

இனி எப்போது லிப்ட்ல் சென்றாலும் இப்பதிவு என் நினைவுக்கு வந்து, நான் சிரிக்காமல் இருக்க வேண்டும்

பழனி. கந்தசாமி said...

இப்படியும் லிப்ட் இருக்கா. நான் இதுவரை பார்த்ததில்லை.

Ranjani Narayanan said...

இரண்டு பக்கம் திறக்கும் லிப்ட்டா? ஆச்சர்யமாக இருக்கிறதே! நான் முதல் மாடி என்றால் ஏறி இறங்கி விடுவேன். எனக்கும் தனியாகப் போக பயம்! எங்கள் அடுக்குமாடி கட்டிடத்திலேயே படிகள் தான் முதல் சாய்ஸ். யாராவது கூட இருந்தால் போவேன். மாட்டிக்கொண்டால் இன்னொருவர் துணைக்கு இருக்கிறாரே!
உங்கள் அனுபவம் சுவாரஸ்யம்!

Bagawanjee KA said...

ஒரு வீடு இரு வாசல் ..கேள்வி பட்டிருக்கேன் ..ஒரு லிப்ட் இரு வாசலா :)

yathavan nambi said...

அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

Ha ha. sRIRAM. iNDIA VILEYUM IPPADI VANTHUVITTATHAA. PAZHAKI VITTATHU ENAKKU. But super comedy. ore sirippu.

வெங்கட் நாகராஜ் said...

தில்லி மெட்ரோ சில நிறுத்தங்களில் இப்படி இரண்டு பக்கமும் திறக்கும் லிஃப்ட் உண்டு. பக்கவாட்டில் நின்று கொண்டால் எந்தப் பக்கம் திறக்கும் என்பதை சுலபமாகப் பார்க்கலாம்! :)

தில்லி மெட்ரோவும் இப்படித் தான் - இரண்டு பக்கங்களிலும் கதவுகள் உண்டு - ஒரு சில நிறுத்தங்களில் இடது பக்கமும் சில நிறுத்தங்களில் வலப் பக்கமும் திறக்கும் - ஆனால் அதில் நிறுத்தம் வரும் முன்னரே எந்தப் பக்கம் திறக்கும் என்ற அறிவிப்பு வந்து விடும்!

சுவையான அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

இந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டதில்லை என்றாலும் இரண்டு பக்கமும் கதவுடைய லிஃப்டுகளில் சென்ற அனுபவம் உண்டு. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள் :).

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!