செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சக்கனி ராஜமார்கமு

நாள் : ஆகஸ்ட் 16, 2010.
இடம் : ரங்கிரி :: டம்புள்ளா:: ஸ்ரீலங்கா 
போட்டி: இந்தியா இலங்கை இடையே நடந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி.

வெற்றி பெற ஐந்து ரன்கள் தேவை.  சாதாரண வெற்றிக்கு பதினாறு ஓவர் இருக்கிறது.  கூடுதல் புள்ளி பெற ஆறு ஓவர்கள்.  ஒரு ஓட்டம் எடுத்து தொண்ணூற்று ஒன்பதை அடைந்த சேவாக் ஒரு ஓட்டம் எடுத்து நூறை எட்ட வேண்டும் என்று தோனி Defence விளையாடி மூன்று பந்துகளைக் கடந்த நிலை.


அடுத்த ஓவர் தொடக்கம்.  ரன்திவ் பந்து வீச சேவாக் ஒரு ரன்னைப் பெறும் முயற்சியில் ஆடத் தொடங்க, ஒரு சாதாரண பந்தை சங்ககாரா பிடிக்க முயலாமல் நான்குக்கு அனுப்ப, (அது intentional என்றும் சொல்ல முடியாதுதான்..  ஆனாலும் சங்கக்காரா வின் விக்கெட் கீப்பிங் தரமும், இந்த ஆட்டத்திலேயே அவர் விராத் கொஹ்லியின் கேட்ச் பிடித்ததும் நினைவுக்கு வருகிறதே) இப்போது தேவை வெற்றிக்கு ஒரு ரன்.  வெற்றிக்கு ஏராளமான பந்துகளும் இந்தியாவின் கையில்  ஆறு விக்கெட்டுகளும் இருக்க வேறு மாதிரி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லாத நிலை. சேவாக்குக்குத் தேவை ஒரு ரன் இந்தியாவுக்குத் தேவை ஒரு ரன்.... நூறுக்கும் வெற்றிக்கும். 

அடுத்த பால் ரந்திவ் போடுகிறார்.  சேவாக் அடிக்கிறார்.  "சிக்ஸ்"...!  கையை உயர்த்தி பேட்டைத் தூக்கி கொண்டாடுகிறார்...ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப் பட்டு ஒரு ரன் உதிரிக் கணக்கில் மட்டுமே சேர சேவாக் தொண்ணூற்று ஒன்பதிலேயே...

வெற்றிக்குத் தேவையான ரன் வந்த பிறகு பந்து போட முடியாது.  முன்னாலேயே போட்ட பந்துதான்.  போடப் பட்ட பந்து செல்லாது என்றும் அறிவிக்க முடியாது.  ஆட்டக் காரர் அதை ஆடுவதை தடுக்கவும் முடியாது.  விளையாடினால் ஓட்டங்கள் கணக்கில் சேரத்தானே வேண்டும்...  என்ன இழவு ரூல் இது..முதலில் நோ பால் அதனால் வெற்றி பெற்றாயிற்று..எனவே அதற்குப் பின் வந்த எண்ணிக்கை கணக்கில் வராது..  இந்த சூழ்நிலையில் நோ பாலை விட்டு விட வேண்டியதுதானே..  ஆறை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே...

சேவாக் மறுபடி மறுபடி வெவ்வேறு வார்த்தைகளில் இது திட்டமிட்டு நடந்தது என்று வலியுறுத்துகிறார்.  எந்த பந்து வீச்சாளரும் தனது பாலில் எதிரணி ஆட்டக் காரர் நூறு அடிப்பதை விரும்புவதில்லை என்று சொல்லி, 'ரந்திவ் நோ பாலே போடாதவர், இந்த ஆட்டத்தில் அதுவும் இயற்கைக்கு மாறாக காலை வெகு வெளியே வைத்து போட்டது யதேச்சையானது அல்ல, ஆனாலும் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே' என்று சொல்ல,   குற்றச் சாட்டுக்கு கோபப் படாமல் சங்கக்காரா 'எனக்குத் தெரிந்து இல்லை,ரந்திவ் அபபடி இல்லை, வேறு யாராவது அப்படிச் சொல்லி இருக்கிறார்களா என்று விசாரிக்கிறேன்' என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.  இரண்டு நாள் முன்பு மைதானத்தை தோனி குறை சொன்னதும் நினைவில் இருக்கும்.

ஆட்டக் காரர்கள் என்னமோ செய்து விட்டுப் போகட்டும்.  முன்பெல்லாம் ஆடும் போது இந்த மாதிரி சூழ்நிலை வந்தால் ஏழு ரன்கள் கணக்கில் சேர்க்கப் பட்டு இருக்கும்.  பேட்ஸ்மேன் கணக்கில் ஆறு சேர்ந்திருக்கும்!  இந்த ரூல்,எப்போது திருத்தப் பட்டது,  அது ஏன் ஆட்டக் காரர்களுக்கே தெரியவில்லை?  சேவாக் கையை உயர்த்தி கொண்டாடுகிறார்,  சங்கக்காரா பரிசளிப்பு நிகழ்ச்சியில்,"ஓ..அப்படியா...அந்த ரூல் எனக்குத் தெரியாது...' என்கிறார். என்ன ரூலோ...யார் போட்டதோ...எப்படி இவ்வளவு நுணுக்கமாக யோசித்து பிரச்னை செய்கிறார்களோ...?!!

கொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் சதத்தின் மிக அருகில் இருக்கும்போது நம்மூரு தினேஷ் கார்த்திக் ஆறு அடித்து அவருக்கு அந்த வாய்ப்பை மறுத்தது நினைவுக்கு வருகிறது.

கட்டாக்கில் கொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் 99 இல் இருக்கும்போது இதே அணி ஒரு வைட் போட்டதையும் சேவாக் நினைவு கூர்ந்திருக்கிறார்..

இதை எல்லாம் பார்க்கும்போது இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஆட்டத்தின் இறுதிக் கட்டம்.  பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஆட்டம்...வெற்றிக்கு ஓரிரு ரன்களே தேவை.  பாகிஸ்தான் பேட்டிங்.  கடைசி விக்கெட்.  வால்ஷ் பௌலர்.  அவர் ஓடிவந்து பாலை போடுமுன்னரே பாகிஸ்தான் ஆட்டக்காரர் அப்துல் காதிர் ஓடத் தொடங்குவதைக் கவனித்து கொண்டிருந்த வால்ஷ்,  பால் போடுவதைக் கடைசி வினாடியில்  நிறுத்தி வெளியே ஓடி விட்ட அப்துல் காதிரை பார்த்து எச்சரிக்கிறார்.  ஆனால் ரன் அவுட் செய்யவில்லை.  அசட்டுச் சிரிப்புடன் காதிர் திரும்ப வந்து நின்று கொள்கிறார்.  வால்ஷுக்கு ஜென்டில்மேன் ஆஃப் கிரிக்கெட் என்று பெயர் கிடைத்தது...  ஜியா உல் ஹக் கூட அவரைப் பாராட்டியதாய் ஞாபகம். இந்தப் பட்டத்தால் என்ன பிரயோஜனம் என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!

கபில் தேவ் ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இதே போல சீனியர் கிரிஸ்டனை எச்சரித்தார்.  அவர் மறுபடி மறுபடி அதே போலச் செய்ய அவரை அடுத்த முறை அவுட் ஆக்கி விட்டார் கபில்.

அப்படியெல்லாம் ஆட்டங்களைப் பார்த்து விட்டு இப்படி ஆட்டம் பார்த்தால்...   அதுக்குதான் நான் இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்கிறீர்களா சாய்...  நானும் மதிப்பதில்லைதான்...ஆனால் அவ்வப்போது இம்மாதிரி ஜெம் இன்னிங்க்ஸ்களை ரசிப்பதுண்டு.

ஏற்கெனவே தோனியின் முன்னேற்பாடான மைதானம் பற்றிய டயலாக் கேட்டு ஆட்டத்தின் போக்கை வேறு மாதிரி கற்பனை செய்திருந்தேன்...!

என்னவோ போங்க....! 
(தலைப்புக்கும் கட்டுரைக்கும் உள்ள சம்பந்தத்தை யாரேனும் பின்னூட்டத்தில் எழுதவும்)

17 கருத்துகள்:

 1. that bye is not intentional because ball kept too low.. but no ball is intentional if you see the reply , his back leg(right leg) was in the place where normaly his leading leg(left leg) will be. and its not a marginal no ball.

  பதிலளிநீக்கு
 2. //(தலைப்புக்கும் கட்டுரைக்கும் உள்ள சம்பந்தத்தை யாரேனும் பின்னூட்டத்தில் எழுதவும்)//

  அருமையான ராஜபாட்டை (ராஜா செல்லும் வீதி) இருக்கும்போது யாராவது ஒரு குறுக்கு சந்தில் நுழைந்து செல்வார்களா? அதைப் போல் மனமே, ராம பக்தி என்னும் நல்வழியில் செல் என்று சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் சொல்கிறார். கரஹரப்ரியா ராகத்தில் அமைந்த மிகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடல் இது.

  அதைப் போல், நல்ல உள்ளம் படைத்த உண்மையான sportive mind உள்ள பல வீரார்களின் விளையாட்டைக் காண்பதை விட்டு ரண்டீவ் போன்ற கோணல் புத்தி உள்ள வீரர்களின் விளையாட்டை ஏன் காண வேண்டும் என்று கட்டுரையாளர் கேட்கிறார் என்று நான்நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. அந்த முழு பாடல் இதோ:

  சக்கனி ராஜ மார்க3முலுண்ட3க3
  1ஸந்து3ல தூ3ரனேல ஓ மனஸா

  அனுபல்லவி
  சிக்கனி 2பாலு மீக3ட3யுண்ட3க3
  3சீ2யனு 4க3ங்கா3-ஸாக3ரமேலே (ச)

  சரணம்
  கண்டிகி ஸுந்த3ர-தரமகு3 ரூபமே
  முக்கண்டி நோட செலகே3 நாமமே த்யாக3-
  ராஜிண்டனே 5நெலகோன்னாதி3 தை3வமே-
  யிடுவண்டி ஸ்ரீ ஸாகேத ராமுனி ப4க்தியனே (ச)

  பொருள் - சுருக்கம்

  ஓ மனமே! மேலான அரச பாட்டைகளிருக்க, சந்துகளில் நுழைவதேனோ?
  கெட்டியான பாலும், ஏடுமிருக்க, 'சீ' யெனும் கள்ளேனோ?

  கண்ணுக்கு எழில்மிகு உருவம், முக்கண்ணனின் நாவினிலிலங்கும் நாமம், தியாகராசனின் இல்லத்திலேயே நிலைபெற்ற முதற்கடவுள் - இப்படிப்பட்ட சாகேதராமனின் பக்தியெனும்
  மேலான அரச பாட்டையிருக்க, சந்துகளில் நுழைவதேனோ?


  Thanks to :
  http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/11/3-2-chakkani-raja-margamulu-raga.html

  பதிலளிநீக்கு
 4. //அருமையான ராஜபாட்டை (ராஜா செல்லும் வீதி) இருக்கும்போது யாராவது ஒரு குறுக்கு சந்தில் நுழைந்து செல்வார்களா? அதைப் போல் மனமே, ராம பக்தி என்னும் நல்வழியில் செல் என்று சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் சொல்கிறார். கரஹரப்ரியா ராகத்தில் அமைந்த மிகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடல் இது.
  //

  நேர்மையா பால் போட்டு, சேவாக்கை அவுட்டாக்கி அவர சென்சுரி போடாம தடுக்கத்தான், உண்மையான விளையாட்டு வீரர் முயலவேண்டும், அதை விட்டுட்டு, இந்த மாதிரியா ... கேவலம்.. (இப்படித்தான் எனக்குப் படுத்து.)

  பதிலளிநீக்கு
 5. //..'பாலு' மீகடயுண்டக..//

  பால்(ball not milk) பத்தி அவரு கூட பாடியிருக்காரா ?

  பதிலளிநீக்கு
 6. நானும் பார்த்து நொந்தேன். ஆனால் சேவாக் இதில் எந்த குறையும் கூறாமல்,ரொம்ப எதார்த்தமாக எடுத்து, `எதிர் அணியினர் அப்படித்தான் செய்வார்கள்,அணி வெற்றி பெற்றதே அது போதும் `` என்றது பெருமைக்குரிய விஷயமாக இருந்தது.

  வால்ஷின் அந்த மந்தகாசபுன்னகையொடு விட்டுக்கொடுத்தலை பார்த்தும் நொந்து இருக்கிறேன்.அநியாயத்திற்கு ஜெண்டில்மேன் த்தனம்.
  அப்போதய குமுதம் அரசு பதிலில் இது பற்றி `` சிபி சக்ரவர்த்தி ,புறாவிற்கு தன் சதையை அறுத்து தரலாம். அணியின் வெற்றியை இப்படி கோட்டைவிடலாமா?

  பதிலளிநீக்கு
 7. ஒரு பேச்சுக்கு... சிக்ஸ் அடிக்காமல் க்லீன்போல்ட் ஆகியிருந்தால்? நோ பால் கணக்கை ஏற்று குஷியாக ஆட வந்திருப்பாரே?

  பதிலளிநீக்கு
 8. மற்ற வலைகளில், டிவிட்டர், கூகிள பஸ் ஆகிய எழுத்து சந்திகளில், நாங்கள் படித்த வரையிலும், 'நடந்தது என்ன? குற்றம் அல்ல' என்கின்ற வகையில், கீழ்க்கண்ட விவாதங்களை வைக்கின்றார்கள்:

  1) இந்த சதத்தால் அல்லது சதம் இழப்பால் சேவாகுக்கு 100 கிடைக்காவிட்டால் ஒரு நஷ்டமும் இல்லை.

  2) இங்கே அப்பாதுரை :: சிக்ஸ் அடிக்காமல் க்லீன்போல்ட் ஆகியிருந்தால்? நோ பால் கணக்கை ஏற்று குஷியாக ஆட வந்திருப்பாரே?
  எங்கள் விவாதம் இது:

  1) இங்கே சேவாக் என்றோ ஸ்ரீக்காந்த் என்றோ பார்க்கக் கூடாது. எந்த அணியினர் / அணி ஆட்டக்காரர் ஆடினாலும், எதிரணி பந்து போடும்பொழுது மட்டை பிடிப்பவரின் தொண்ணூற்று ஒன்பது ரன்கள பெற்ற உழைப்பையும் வீணாக்கி, ஒரு சதம் அடிக்கவிடாமல், ஒரு, ரெகார்ட் ஏற்படுத்த இயலாமல், சூழ்ச்சி செய்வது சரி இல்லை; ஸ்போர்ட்ஸ்மேன ஸ்பிரிட் இல்லை என்பதுதான்.

  2) ஒரு ரன் வேண்டும் என்ற நிலையில், ஒரு நோ பாலில் க்ளீன் போல்ட் ஆனாலும், சேவாக் தொண்ணூற்றொன்பது நாட் அவுட்டுதான், ஆனால் ஏற்கெனவே போட்டியில் பாட்டிங் அணி வெற்றி பெற்றுவிட்டது - எனவே மேற்கொண்டு ஆட்டம் கிடையாது. அப்புறம் ஏன் சேவாக் மறுபடியும் ஆட வரப்போகிறார்?

  நாங்கள் சொல்லவந்தது எல்லாம், பவுலிங் செய்த அணியின் - அதையும்விட பவுலிங் செய்தவரின் குறுகிய மனப்பான்மையையும், அழுகுணி ஆட்டத்தையும்தான்.
  இதே விஷயம், இலங்கை பாட்டிங் செய்து, இந்திய பவுலர் ஒருவர் செய்திருந்தாலும், இதையேதான் சொல்லுவோம். அணியோ ஆட்டக்காரரோ முக்கியம் இல்லை, யார் செய்தாலும், போங்கு = போங்குதான்.

  பதிலளிநீக்கு
 9. பெ சொ வி அவர்களே! அருமையான, சரியான விளக்கம். அது மட்டும் அல்ல, தியாகராஜ வைபவம் வலைப்பூ விவரம் + சுட்டி கொடுத்ததற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. ஒரு பொக்கிஷத்திற்கு வழி சொல்லியதற்கு, உங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

  பதிலளிநீக்கு
 10. குரோம்பேட்டைக் குறும்பன்17 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:50

  // சக்கனி ராஜ மார்க3முலுண்ட3க3
  1ஸந்து3ல தூ3ரனேல ஓ மனஸா.....//
  // ஓ மனமே! மேலான அரச பாட்டைகளிருக்க, சந்துகளில் நுழைவதேனோ?//

  முன்காலத்தில், தியாகராஜ ராமாயணம் என்ற தலைப்பில் சங்கீத உபன்யாசம் செய்த திரு டி எஸ் பாலக்ருஷ்ண சாஸ்திரி அவர்கள், 'ஸ்ரீதியாகராஜர், மனசா, மனசா என்று பாடியதை எல்லாம் அவர், தன மனதைப் பார்த்துப் பாடியதாக நினைக்கக் கூடாது, மனுஷா மனுஷா என்று நம்மைப் பார்த்துப் பாடியதாகத்தான் கொள்ளவேண்டும்' என்று கூறினார். அது நினைவிற்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 11. //சிக்ஸ் அடிக்காமல் க்லீன்போல்ட் ஆகியிருந்தால்?//

  இந்த விவகாரம் வீதிக்கு வந்திருக்காதே!

  பதிலளிநீக்கு
 12. காதலிலும் யுத்தத்திலும் எல்லாமே நியாயம்தான் என்பார்கள். கிரிகெட் இப்போது ஒரு யுத்தமாகப் போய் விட்டது. எதோ ஒரு காலத்தில் இது ஜென்டில்மேன் ஸ்போர்ட் ஆக இருந்ததாம். காசு வாங்கிக் கொண்டு வேண்டும் என்றே தோற்றுப் போக ஆரம்பித்து சந்தி சிரித்த இந்த கோடிஸ்வரர்கள் / கேடிகள் ஆடுகின்ற ஆட்டத்தில் ஆங்காங்கு ஒரு ஜென்டில் மென் காணக் கிடைக்கிறார். அவர்கள் மேல் உள்ள அபிமானத்தால் நாம் ஏன் ஐம்பது / நூறு எடுக்க விடவில்லை என்று சண்டைக்குப் போகிறோம். இதே ரண்டிவ் சென்னை சூப்பர கிங் அணியில் ஆடி இதே போல் செய்திருந்தால் " வச்சான் பாருய்யா ஆப்பு " என்று அகமகிழ்வோமா இல்லையா என்று ஒளிவு மறைவு இன்றி யோசித்துப் பார்த்தால் நம் ஏக்கத்தில் உள்ள அபத்தம் புரியும்.

  பதிலளிநீக்கு
 13. i clearly head sanga telling randiv after he balled two tight balls,snaga said in sinhala(ovata lakunu hambenava)-THOSE RUNS ARE COUNTED.WHAT A BIG LOOSER.and he is acting like he wasnt aware of ti.SADIST SANGA!

  பதிலளிநீக்கு
 14. இதே விஷயம், இலங்கை பாட்டிங் செய்து, இந்திய பவுலர் ஒருவர் செய்திருந்தாலும், இதையேதான் சொல்லுவோம். அணியோ ஆட்டக்காரரோ முக்கியம் இல்லை, யார் செய்தாலும், போங்கு = போங்குதான்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் செய்தாலும், குற்றம் குற்றமே, போங்கு போங்கே!

  பதிலளிநீக்கு
 15. oru vishayam, 99 rungalil sewag out agi irunthalum avar athai periya visayamaaga karutha maattar. avarudaya type appadi.

  பதிலளிநீக்கு
 16. //ஒரு பேச்சுக்கு... சிக்ஸ் அடிக்காமல் க்லீன்போல்ட் ஆகியிருந்தால்? நோ பால் கணக்கை ஏற்று குஷியாக ஆட வந்திருப்பாரே? //

  சரி, போல்ட் ஆனால் நோ பாலில் அவுட் இல்லை. ஸ்டெம்பிங் ஆகி இருந்தால் அவர் அவுட். அப்போது என்ன செய்திறுப்பார்கள்? 99 அவுட்டா? நாட் அவுட்டா?

  பதிலளிநீக்கு
 17. இலங்கை பந்துவீச்சாளர் இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்துக்கிட்டதுக்கு அவருக்கு கண்டிப்பா தண்டனை கொடுத்திருக்கணும்..

  நம்ம ஆளுங்க வெளிநாடு போறப்ப அந்தந்த நாட்டுக்காரங்க ஏமாத்தறதே வேலையாப் போச்சு..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!