திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நான் அவர் இல்லை!


அப்பாவி தங்கமணி அழைத்த தொடர்பதிவு தொங்கலில் இருப்பதால் கற்பனைக் குதிரையை தட்டி விடலாம் என்று கிளம்பினேன். மூன்று காலில் சோர்வுடன் நின்றிருந்தது. ஒரு காலை யாரோ உடைத்து விட்டார்கள் போலும்! 

"என்ன.." என்றது சிக்கனமாக.

"புறப்படணும்..." அதை விட சிக்கனமாக நான்.

"ஸாரி...ஒரு கால் உடைந்திருக்கு, இன்னொரு காலும் ரிப்பேர். இப்போ என்ன அவசரம்?"

"அவசரமா..? ஏற்கெனவே லேட்.. அப்பாவி தங்கமணி ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காக..."

"அவங்க எப்பவுமே அவங்களை அழைத்த தொடர்பதிவுக்கு ஒண்ணரை மாசம் கழிச்சுதானே எழுதுவாங்க....உனக்கு மட்டும் என்ன அவசரம்?"

"ஆயிடிச்சி...அவ்வளவு நாள் ஆயிடிச்சி..." பொய்.

"சரி..சரி.. வந்து தொலை... ஒரு கால் உடைஞ்சிருக்குங்கறேன்...."

"விடு... அதான் நல்லது... பதிவு சரியா வரல்லைன்னா கற்பனைக் குதிரை கால் உடைஞ்சிருந்தது என்று சொல்லி விடலாம்..."

ஒரு குதிரை உடம்பிலேயே புகுந்தால் என்ன...?

"ரேசில சரியா ஓடலைன்னா உடனே துப்பாக்கியைத் தூக்கி சுட்டுடுவீங்க...எங்க உடம்புல புகுந்து சொல்லணும்னா உங்களை மாதிரி மனிதர்களுக்குதான் நிறைய திட்டு விழும்..மாடு ட்ரை செய்யலாமா...அதோ ஒரு பசு மேயுது பாரு...போ,,"

வயதான பசுவாகத் தெரிந்தது. மெல்ல அருகில் சென்றேன். "என்ன என் உடம்பில் புகப் போகிறாயா...வேண்டாமப்பா...அதுக்கு என் உடம்புல தெம்பில்லை .."

"நான் எதுக்கு வரேன்னு எப்படித் தெரிஞ்சுது? நீ கத்தறது...ஸாரி! பேசறது எப்படி எனக்குப் புரியுது?"

"அதுக்கு உன் கற்பனைக் குதிரைதான் காரணம்...விடு உனக்கு என்ன தெரியணும் சொல்லு..."

"ஏன் இவ்வளவு விரக்தியாப் பேசறே..?"

"ஆமாமப்பா.. பால் வேணும்கற வரைக்கும் கறந்துப்பீங்க... வத்திப் போச்சு என்று தெரிஞ்சதும் வெட்டறதுக்கு அனுப்பிடுவீங்க...தப்பிக்கறது எங்க சாமர்த்தியம்... உங்களைச் சொல்லிக் குத்தமில்லே.. நீங்க உங்க அப்பா அம்மாவையே முதியோர் இல்லத்துல சேர்க்கறவங்க ... போப்பா...போ..பொழைப்பைப் பாரு..." மேய்ச்சலைத் தொடர்ந்தது கிழப் பசு.

சங்கடத்துடன் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை நெருங்கினேன். நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தது. ஆட்சேபம் ஏதும் இல்லாததால் மெல்ல உள்ளே புகுந்தேன்.    

........................................................

வெளியே வந்தேன். ஆடு நிச்சலனமாக நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தது. ஏதாவது பேசினேனா... தெரியவில்லை. வேண்டாம்... ஆடு வேண்டாம்.

எறும்புக் கூட்டம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. வழி தவறிய எறும்பு ஒன்று எனது அலைவரிசையுடன் ஒத்துப் போனது போலும்... சிரித்து விட்டு "வா.." என்றது.

சூபர்வைசர் எறும்பு ஒன்று வேகமாக அருகில் வந்து இதன் தலையில் தட்டி வரிசையில் சேர்த்தது. ஓடிய எறும்புக் கூட்டத்தில் என்னைப் புரிந்த எறும்பைத் தேடி கூடவே ஓடினேன். எதனிடமிருந்து வருகிறது என்று தெரியாமல் எறும்பு சைசில் குரல் மட்டும் வந்தது..."அண்ணே... நேரமில்லைண்ணே ...'அவங்களுக்குதான் வேலை இல்லை.. உனக்குமா...போ, வேலையைப் பாரு'ன்னு திட்டறாங்கண்ணே ... மீறினா தலையைக் கிள்ளிடுவாங்க. போயிட்டு வாங்கண்ணே.."

நம்ம வீட்டு நாயாய் மாறினால்...

வீட்டுக்குத் திரும்பி...

அட... பின்னாலேதான் வந்து கொண்டு இருக்கிறது.

வாலை ஆட்டியது.

"நீங்கள் தின்று போடும் மிச்சங்களைக் கொடுத்து எங்கள் நன்றியை வாங்கிக் கொள்கிறீர்கள்' என்று குத்திக் காட்டுமோ.... நன்றியுள்ள பிராணி. எஜமானைப் பாராட்டுகிறேன் என்று என்னையே புகழ ஆரம்பித்து விடும். எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது. கூச்ச சுபாவம்..

புலி, சிறுத்தை கண்ணில் கண்ணில் பட்டாலும் நான் அருகில் சென்றால் அது என்னை தின்னும். நான் உள்ளே புகுந்தாலும் நானே என்னைத் தின்றாலும் தின்று விடுவேன். வேண்டாம் ரிஸ்க்கு...

புலி சிறுத்தை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது...

ஒரே வழி...எனது அதிகாரியாய் மாறுவதுதான். தொல்லை இல்லாத வேலை. ஒரு நாள் முழுதும் கீழே வேலை செய்பவர்களை விரட்டிக் கொண்டே சும்மா இருக்கலாம்! ஆனால் அது போரடிக்குமே...

பேசாமல் சுஜாதா, சாண்டில்யன் என்று மாறி ஒரு நாள் முழுக்க ஏதாவது எழுதி சேமித்து வைத்து விட்டால் என்ன? பாவம் அவர்கள் பேரைக் கெடுக்க வேண்டாம்...

சும்மா சரித்திரக் கதா பாத்திரங்களாய் மாறி பிரிந்தவர்களைச் சேர்த்தும், சேர்ந்தவர்களைப் பிரித்தும் பார்த்தால் என்ன..? வேண்டாமா...சரி விடுங்க...

செத்துப் போன என் அம்மாவாய் மாறினால் என்ன?

"கொஞ்சம் இந்த வேலையை எல்லாம் விட்டுட்டு சாப்பிட வாடா கண்ணா...உடம்பு என்னத்துக்காகும்..."

ஐயோடா... வேண்டாம்...

தாய்க்குப் பின்....

நான் என் மனைவியாய் மாறினேன்.

அப்புறம் எனக்குப் பேசவோ சிந்திக்கவோ நேரமில்லை. தொடர்ந்து கணவருக்கு என்ன செய்ய, குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசனை ஓடிக் கொண்டே இருக்க, துணிகள் துவைத்துக் கொண்டே அரிசி, பருப்பை ஊற வைத்து விட்டு மகன் ஆஃபீசுக்குக் கிளம்ப உடைகள் எடுத்து வைத்து விட்டு "என்னங்க... அவனுக்கு நெட்டுல ஒரு வரன் பார்த்தீங்களே...என்ன ஆச்சு?" வேலைக்காரியிடம் துலக்க வேண்டிய பாத்திரங்களைக் காட்டிவிட்டு காய்கறி வாங்கக் கடைக்குக் கிளம்புமுன் இவருக்கு ஒரு ரவா உப்புமாவாவது கிண்டி கொடுத்து விட்டுப் போகலாமா, அப்புறம் காஃபி வேறு கேட்பாரே என்ற சிந்தனையுடன் ஃபிரிஜ்ஜைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு திரும்பி, 'ஐயையோ காலைப் பாலை உறை குத்தினோமோ...' ஆஹா...கால்ல என்ன வழ வழாங்குது.... என்னவோ கொட்டி இருக்கு. இதைக் கிளீன் செய்யணுமே...இந்தாம்மா...(வேலைக்காரியை) இதைக் கொஞ்சம் துடை...'

கம்ப்யூட்டரையும் கீ போர்டையும் விட்டு எழுந்தேன்...

"அந்தப் பையை இப்படிக் குடும்மா... நான் காய்கறி வாங்கி வர்றேன்... அப்படியே கடையில் ரெண்டு இட்லி சாப்பிட்டுடறேன்... நீ அலட்டிக்காதே.. உனக்கும் வாங்கி வரவா..."

அதிசயத்துடன் என்னைப் பார்த்த மனைவி, "வேண்டாம்.. நான் கோவிலுக்குப் போகணும்..என்னாச்சு உங்களுக்கு.." என் கண்களில் புதிதாய்த் தெரிந்த வாஞ்சையை பார்த்து பீதியானாள்.

பையை வாங்கிக் கொண்டு நடந்தேன்...

கத்தரிக்காயாய் மாறினால் என்ன...

கிழங்கெல்லாம் வேணாம்... மண்ணுக்குள் போக வேண்டியதிருக்கும்....! 
    

16 கருத்துகள்:

  1. //நானே என்னைத் தின்றாலும் தின்றுவிடுவேன்..

    ஹஹ்ஹா..செம நல்லா எழுதி இருக்கீங்க...வித்தியாசமான கற்பனை..

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம்..... வித்தியாசமான இடுகை...

    பதிலளிநீக்கு
  3. கற்பனைக் குதிரையை நல்லாவே தட்டி விட்டிருக்கிறீர்கள். சுவாரஸ்யம். ரசித்தேன்:)!

    பதிலளிநீக்கு
  4. //அவங்க எப்பவுமே அவங்களை அழைத்த தொடர்பதிவுக்கு ஒண்ணரை மாசம் கழிச்சுதானே எழுதுவாங்க....உனக்கு மட்டும் என்ன அவசரம்//
    அந்த சலுகை எல்லாம் எனக்கு மட்டும் தான் சார்... நீங்க bloggers headlines பாக்கலையா... ஹா ஹா ஹா

    ரெம்ப அழகான பதிவுங்க... அட்டகாசமான கற்பனை... நகைச்சுவையும் கலந்து... உங்க மனைவி படிச்சா ரெம்ப சந்தோசபடுவாங்க... உங்களுக்கு எங்கள் அப்பாவி தங்கமணிகள் சங்கம் சார்பா "பெண் பெருமை காத்த பிளாக்கர்" பட்டம் அளிக்கிறோம்... ஹா ஹா ஹா

    என்னோட அழைப்பை ஏற்று எழுதியமைக்கு ரெம்ப நன்றிங்க

    பதிலளிநீக்கு
  5. நல்ல கற்பனை. நல்லா எழுதி இருக்கீங்க. சுவாரசியமா இருந்துது.
    இந்த பசுமாடு படத்தையும் வரையலாம் போல இருக்கு. இந்த பதிவுக்கு ஏத்த மாதிரி அது பாக்கறதும் கிண்டலா துறுதுறுன்னு அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. ரசித்துப்படித்தேன் கற்பனைதான் எவ்வளவு ரசனையானது !

    பதிலளிநீக்கு
  7. கற்பனைக்குதிரையோடு நானும் பறப்பதாய் இருக்கிறது பதிவு.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. கற்பனை அருமை சார்!

    (லேட்டா கமெண்ட் போடறேன்னு பாக்கறீங்களா?...........அதான் மத்தவங்க மனசுல புகுந்து ஏற்கெனவே 11 கமெண்ட் போட்டுட்டேனே? ஹிஹி.!)

    பதிலளிநீக்கு
  10. I can probably fit into a Cow's body.(Bufalo will be more preferable !) Horse with some difficulty. No chance with a Goat or Dog.

    Well leave alone becoming another person. It is so difficult to walk into others shoes. I mean- my wife's sandals will be too small for me. And I can't even imagine a Horse Shoe. My mouth is foaming.(Nurai thalludhu!) God please spare me from "Laadam".

    பதிலளிநீக்கு
  11. Horse difficult because you know - I am supposed to run if I am a horse.

    பதிலளிநீக்கு
  12. யானையாய் மாறலாம் ஆனால் சட்டை கிழிஞ்சுடும்!!

    பதிலளிநீக்கு
  13. ரசனைக்கு நன்றி ரமேஷ்...
    நன்றி
    LK,
    Chitra,
    மறந்தது எதை துரை?
    நன்றி ராமலக்ஷ்மி,
    சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி அப்பாவி தங்கமணி,
    மீனாக்ஷி, பசுமாடு படம் வரைந்தால் இ.ந.ஏ வில் போடலாமே...!
    நன்றி வசந்த்,
    நன்றி
    ஹேமா,
    அஹமது இர்ஷாத்,
    பெ.சொ.வி.,
    அனானி,
    ரசிகன்,

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!