வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பணமும் மனமும்...

தொடர்பதிவில் ஒரு வசதி... என்ன தலைப்பு என்று யோசிக்கத் தேவை இல்லை. சப்ஜெக்ட் பற்றி குழம்ப வேண்டாம். ஆனால் என்ன, தொடர் அழைக்கும் பாதையில் பயணம், அல்லது நம் பாதைக்குத் தொடரைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.

கொஞ்ச நாள் முன்பு தமிழ் உதயம் இந்தப் பதிவை எழுதி இருந்தார். அதைப் பற்றிய சிந்தனையில் இருந்த பொழுது. 

சிறு வயதிலிருந்தே பாக்கெட் மணி போல காசு கிடைத்தால் செலவு செய்து பழக்கம் இல்லை. பாக்கெட் மணி கொடுக்கும் பழக்கம் குடும்பத்தில் இல்லை. ஆனால் 'ஊர்க்காசு' உண்டு. ஊரிலிருந்து வந்து செல்லும் உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது குழந்தைகளுக்கு ஐம்பது பைசா / ஒரு ரூபாய் என்று ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. அதனால் ஒரு சிறு கணிசமான சேமிப்பும் இருந்தது.

நண்பர்கள் இந்த மாதிரி காசை மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் உடனே செலவு செய்து விடுவார்கள். சிலர் என்னைப் போல சேமித்து வைத்திருப்பார்கள். அஞ்சு பைசா அம்மு போல உண்டியல் வைத்திருப்போம். செலவு செய்யாமல் சேர்த்து சும்மா வைத்திருப்பதற்கு பெற்றோரிடமே கொடுத்து விடலாமே என்று நண்பர்கள் கிண்டலடிப்பார்கள்.

பின்னர், பள்ளியில் சஞ்சாயிகா திட்டத்தில் சேர்த்து வைக்கப் பட்டு, சேர்த்ததுண்டு. ஆனால் அது பள்ளியின் கட்டாய திட்டம் என்பதால் அதிகம் சேர்க்க முடிந்ததில்லை! கட்டாயப் படுத்தும் போது சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது!

கடைக்கு போகும் வேலைகள் கொடுக்கப்பட்ட பொழுது, கமிஷனில் கொஞ்சம் காசு பார்த்ததுண்டு!  

அஞ்சலக சேமிப்பில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்கியது. நம் கையெழுத்தையே சந்தேகப் படத் தொடங்கி ஒருமுறை பணம் திரும்பி வாங்குவதில் தாமதமானது. அதில் சேர்த்த பணத்தில் முதல் முறை பெற்றோர், மற்றும் உடன் பிறந்தோருக்கு ஒரு தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. சேமிப்பேன். சந்தோஷமாகச் செலவு செய்ய! 
வேலைக்குப் போகத் தொடங்கிய பிறகு கணக்கு எழுதும் பழக்கம் அப்பாவினால் சொல்லிக் கொடுக்கப் பட்டது. வாங்கும் சம்பளத்துக்கு வரவு செலவு எழுதும் பழக்கம் வந்தது. நல்ல பழக்கம்தான். இதில் சில பல உதவிகள் உண்டு. ஒருசமயம், கேபிள்காரர் ஆறு மாதமாய் பணம் தரவில்லை என்றபோது கணக்கு நோட்டுப் புத்தகத்தை இன்ஸ்டன்ட்டாகக் காட்டி நிரூபித்திருக்கிறேன். கணக்கு எழுதும்போது , சில குறிப்புகளுடன் எழுதுவது வழக்கம். செல்லாத ஐம்பது ரூபாய் நோட்டு கொடுத்து பின்னர் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னது' என்று அடைப்புக் குறிக்குள் இருக்கும்..! இது போல வாசகங்களை நினைவு படுத்தி சொன்னதும் அவரும் ஒப்புக் கொண்டார்.

பணம் குறித்த பொதுவான மனநிலையை சொல்லலாம்.

சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது இருபது சதவிகிதமாவது சேமிக்க வேண்டும் என்று யாரோ சொன்னது. அதைக் கடை பிடிப்பதோடு சரி. ரொம்ப சேமித்து வைத்துக் கொள்வதெல்லாம் இல்லை. சாத்தியமும் இல்லை. 'கடனில்லாமல் வாழ்கிறோமா?' அது போதும் என்ற மனநிலைதான் இப்போது.

முக்கியமான இடங்களில் செலவு செய்யத் தயங்குவதும் இல்லை. நண்பர்களோடு கூடும் இடங்களிலும் கூட்டமாகச் செலவு செய்யும் இடங்களிலும் பணம் எடுத்துக் கொடுக்கத் தயங்கியது இல்லை. பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கும். பணத்தைச் சேர்த்து வைத்து ஒன்றும் ஆகப் போவது இல்லை. நாளை போகும்போது ஒன்றையும் எடுத்துக் கொண்டு போகப் போவது இல்லை. இன்றைய சந்தோஷத்துக்கு நம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் தயக்கம் இல்லை. பணத்தில் அல்ல, மனதில் பணக்காரன்! நம் குழந்தைகளை அவர்கள் நல்லபடியாய் (அவர்கள் காலிலேயே) நிற்க வழி செய்து கொடுத்து விட்டால் போதும் என்று நினைப்பவன்.

பணம் கையில் இருந்தும் எடுத்து செலவு செய்யத் தயங்குபவர்தான் வறுமையில் இருப்பவர் என்று எங்கோ படித்ததாய் ஞாபகம். 'பணம் என்னடா பணம் பணம்' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. 'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' என்று கூட ஒரு பாடல் உண்டு.

முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்கும்போது பேரம் பேசும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அதன் நியாயமான விலை விவரம் தெரிந்திருக்குமாயின் நியாயமாய் இருந்தால் வாங்கி விடுவது.

சிக்கனத்துக்கும் கருமித் தனத்துக்கும் என்ன வேறுபாடு என்று அடிக்கடி யோசித்ததுண்டு.

*எனக்குத் தெரிந்த வியாபாரி ஒருவர் அன்று வியாபாரம் சரியாக ஆகவில்லை என்றால் இரவு உணவைத் தியாகம் செய்து விடுவார். 

*ஊரிலிருந்து வந்திருந்த அவர் அப்பா மாலை நாளிதழ் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்த தம்பியைக் கடிந்து கொண்டார் இவர். "ஏண்டா? இதுல அப்பா என்ன படிக்கக் கேட்கிறார்? ஜோசியப் பகுதி.. பக்கத்துக் கடைல வாங்கறாங்க... ஒரு எட்டு அங்க போய் கேட்டால் கொடுத்திருக்கப் போறாங்க...காசை வேஸ்ட் செய்து விட்டாயே..." என்றார். நான் அவர் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன், வருத்தப் பட்டிருப்பாரோ என்று. பெருமையான புன்னகை. அவரும் வியாபாரிதான். மகன் முன்னுக்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கை தெரிந்தது அவர் முகத்தில்.

இதில் தவறு என்பதும் சரி என்பதும் அவரவர் பார்வையைப் பொறுத்ததுதான்.

ஆனால் காசு கையில் இருந்தும் அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொள்ளாமல் வாழ்வதும், எல்லாவற்றையும் சேமிப்பில் போட்டு விட்டு மிகச் சிக்கனமாக வாழ்ந்து வருவதுமாக இருக்கும் நண்பர்களைப் பார்க்கும்போது, 'பூதம் போல பணத்தைக் காத்து என்ன செய்யப் போகிறார்கள்?' என்று தோன்றும். எதிர்காலத்துக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தேவைதான். ஆனால் இது ரொம்ப ஓவராகப் படும் எனக்கு.

எல் ஐ சி பற்றி ஒரு ஜோக் உண்டு. செத்தபிறகு வரும் காசுக்காக நிகழ்காலத்தில் ஏழையாய் இருப்பது என்று. நேற்று என்பது போன கதை. நாளை என்பது நிச்சயமில்லாதது. இன்று என்ற இறைவன் கொடுத்த கொடையில் சந்தோஷமாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.

செலவு செய்கிறேன் என்றோ, சந்தோஷமாக இருக்கிறேன் என்றோ பார்க்கும் பொருளை எல்லாம் வாங்குவதும் இல்லை. எந்தப் பொருளை வாங்கினாலும் ஏதாவது ஒரு உபயோகம் இருக்கும்தான். ஆனால் இந்த உபயோகம் அவசியம், இது இல்லாமல் இருப்பது கடினம் என்ற, தேவைப் பட்ட பொருட்களை வாங்கத் தயங்கியதும் இல்லை.

மொத்தத்தில் பணம் மனதை அடிமை கொண்டதில்லை. அது இல்லாமல் கஷ்டப்படும் நிலையிலும் கடவுள் வைக்கவில்லை.

தலைப்பை ஒட்டி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. மனதில் வந்ததை எல்லாம் எழுதி விட்டேன். தவறு என்பதும் சரி என்பதும் அவரவர் வாழ்க்கை முறையில்.    

19 கருத்துகள்:

 1. அருமை. எல்லாமே என் கருத்தை ஒட்டியதாகவே உள்ளது:)! சின்ன வயதிலும் அதே அனுபவம். மண் உண்டியல் பார்த்திருக்கிறீர்களா? திறந்தெல்லாம் எடுக்க முடியாது:)!
  மொத்தத்தில் பதிவை வழிமொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கும்.


  .....இந்த எண்ணம் எல்லோருக்கும் வந்தால் - குறிப்பாக லஞ்சம் வாங்குபவர்களுக்கு வந்தால் - அக்கறையுள்ள சமூதாயம் உருவாகும். நல்ல பதிவுங்க.

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 4. கலைவாணரின் பாட்டு ஒன்று ஞாபகம் வருது, “பணமே நீ எங்கே இருக்கிறாய்?” ..

  என் எண்ணங்களை ஒட்டியே உங்கள் பதிவும்..

  பதிலளிநீக்கு
 5. நாய் தின்னாக் காசு என்பார்கள்.பேசத் தேரியாக் காசு பேசும் மனிதர்களின் பாசத்தையே தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்கிறது.

  உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.ஆனால் அந்த பலஹீனத்தாலேயே ஏமாற்றப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. ஊர்க்காசு, சஞ்ஜைகா, உண்டியல், கடை மீதி கமிஷன் ( சர்விஸ் சார்ஜ் 10பைசா தாண்டாது ) .சிறுவயது அனுபவம் எனக்கும் சரியாகவே பொருந்துகிறது.

  பணம் இல்லாமலும் சிரமபடுத்தும் இருந்தும் சிரம படுத்தும்.

  தேவைப்படும் இல்லார்க்கு உதவுதல் சிறப்பு ..

  தனக்கு மிஞ்சி தானம் என்பார்கள் ..அந்த தனக்கில் தான் பிணக்கே..

  எதார்த்தமான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. //பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கும். பணத்தைச் சேர்த்து வைத்து ஒன்றும் ஆகப் போவது இல்லை. நாளை போகும்போது ஒன்றையும் எடுத்துக் கொண்டு போகப் போவது இல்லை//

  ரொம்ப பிடித்த வரிகள்.. எனக்கும் அதே எண்ணம் தான்..
  இருக்கற வரை சந்தோசமா இருக்கணும்..
  அதுக்காக ஆடம்பரமும் கூடாது.. :-))

  //ஆனால் காசு கையில் இருந்தும் அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொள்ளாமல் வாழ்வதும், எல்லாவற்றையும் சேமிப்பில் போட்டு விட்டு மிகச் சிக்கனமாக வாழ்ந்து வருவதுமாக இருக்கும் நண்பர்களைப் பார்க்கும்போது, 'பூதம் போல பணத்தைக் காத்து என்ன செய்யப் போகிறார்கள்?' என்று தோன்றும்//

  அடடா... நானும் இப்படியே தான் நினைச்சிருக்கேன்.... :-)))

  பதிலளிநீக்கு
 8. "இன்று என்ற இறைவன் கொடுத்த கொடையில் சந்தோஷமாக இருப்பதையே நான் விரும்புகிறேன்"

  பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி

  வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

  விஜய்

  பதிலளிநீக்கு
 9. கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்க்கு எஜமானன், கழுத்து வரையில் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்... என்ன சரிதானே...

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை,
  நன்றி, ராமலக்ஷ்மி, மண் உண்டியல் ஸ்பெஷல். உடைத்தால்தான் எடுக்க முடியும். தெரிந்து விடும். ஆனாலும் ஈர்க்குச்சியால் எடுத்து விடுவோம்!
  நன்றி Chitra, விரட்ட முடியாத பிசாசு லஞ்சம்...
  நன்றி வானம்பாடிகள்,
  வாங்க ஹுசைனம்மா, அந்தப் பாடல் மறந்து விட்டது..
  நன்றி SENTHIL,
  வாங்க சை.கொ.பரோட்டா,, விடுமுறை முடிந்து திரும்பியதில் உங்களுக்கு சோகம் இருந்தாலும் 'எங்களுக்கு' சந்தோஷம்...!
  நன்றி ஹேமா, சீக்கிரம் உங்கள் அடுத்த கவிதையை எதிர்பார்க்கிறோம்..
  வருக பத்மநாபன், எண்ணங்கள் ஒத்துப் போவதில் சந்தோஷம் வருகிறது...
  நன்றி Selva,
  வாங்க Ananthi, ஆதரவுக்கு நன்றி.
  நன்றி விஜய்,
  உண்மை RVS, தலைவர் பாட்டு...முதல் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க...!

  பதிலளிநீக்கு
 11. கொஞ்சம் லேட்டா படிக்கிறேன் . அருமையான சிந்தனைகள்..பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்கள் இதையும் உணர வேண்டும் ..

  well done ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 12. பணம் என்பது பண்ட மாற்றத்தின் அடுத்த பரிணாமம் மட்டுமன்று.
  பணம் புத்தியையும் மாற்றிவிடத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 13. மிக மிக தாமதமாக வாசித்துள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து அழகாக எழுதி உள்ளீர்கள். ரெம்ப பிடித்து இருக்கிறது பதிவு.

  பதிலளிநீக்கு
 14. நன்றி பத்மா, மோ சி பாலன், தமிழ் உதயம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!