'அப்பாவின் காசை மகன் செலவு செய்யுமளவு சுதந்திரம் மகன் காசை அப்பாவால் செலவு செய்ய முடியுமா' என்ற ஒரு கேள்வியை சமீபத்தில் படித்தேன்.
உண்மைதான். அப்பா சட்டைப் பையில் கைவிட்டு 'அப்பா! 10 ரூபாய் எடுத்துக்கறேன்' என்று சொல்லும் சுவாதீனம், அப்பாக்களுக்கு மகன் பணத்தை எடுக்கும் உரிமையில் இருப்பதில்லைதான். மிகச் சில விதிவிலக்குகள் தவிர!
குழந்தைகளை வளர்க்கும் தந்தை அல்லது பெற்றோர் அந்த மகன் பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலா படிக்க வைப்பதும், ஆளாக்குவதும்?
எதிர்பார்ப்பு தவறாகுமா? பெற்றது உங்கள் சுகத்துக்காக, வளர்த்தது உங்கள்
கடமை என்று பிள்ளைகள் போவதும் நியாயமா? இரு கருத்துகளும் உண்டு. கேட்டால்
எதிர்பார்ப்பு இருக்கக் கூடா து என்பார்கள் சிலர். பாசம் என்பதெல்லாம்
சும்மா என்பார்கள் சிலர்.
சமீபத்தில் இந்துவில் சொத்து பிரிப்பது எப்படி என்ற சட்ட ஆலோசனை சொல்லும் கட்டுரை வந்திருந்தது. சொத்து வாங்கும்போது இருக்கும் சூழ்நிலை பிற்காலத்தில் எப்படி இல்லாமல் போகிறது என்பதைச் சொல்லும் கட்டுரை. சொந்தச் சகோதரர்களாய் ஒரு வீட்டில் வளர்பவர்கள் திருமணத்துக்குப் பின் இருமனமாய் மாறும் விந்தையைச் சொல்லும் கட்டுரை.
இதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா?
நேற்று 'பக்பான்' என்ற ஹிந்திப் படம் தொலைக் காட்ச்சியில் பார்த்தேன். அரைமணி நேரப் படம் ஓடியிருக்கலாம். அதனால் நஷ்டமில்லை. இடை இடையே வரும் விளம்பரத் தொந்தரவுகள் இல்லாமல் பார்த்த படம்.
'பக்பான்' என்றால் தோட்டக்காரர் என்று பொருள் கொள்ளலாம். படத்தின்படி குடும்பமாகிய தோட்டத்தை உருவாக்கும் குடும்பத் தலைவர்.

வளர்ந்து ஆளான நான்கு மகன்களும் தந்தை தாயைப் பந்தாடும் கதை. ஏற்கெனவே நிறையப் பார்த்த கதைதான். தந்தையை ஒரு மகனும், தாயை ஒரு மகனும் வைத்துக் கொள்வதால் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழும் தம்பதியராய் அமிதாப், ஹேமாமாலினி.
இன்றைய
நவீன ஐ டி கலாச்சாரத்தில் ப்ராஜெக்ட்டுக்கு ரெடி செய்யும் மகனிடம் தான்
உதவவா என்று கேட்கும் தந்தையிடம் சிரித்தவாறே மறுக்கும் மகன், அவர்
காலத்தில் போட்டி இல்லை என்றும், இந்தக் காலத்தில் இருக்கும் போட்டி, வேகம்
ஆகியவற்றைச் சொல்கிறான். அந்தக் காலத்திலும் தனது வேலையில் ஸ்ட்ரெஸ்
இருந்தது என்னும் தந்தையிடம் மகன் சொல்வது ; "எப்படியோ வேலை செய்து,
வீட்டைக் கட்டி, எங்களைப் படிக்க வைத்து நல்ல வேளையில் அமர்த்தியதன் காரணம்
உங்கள் வருங்காலப் பாதுகாப்பை முன்னிட்டுதான்'' என்று சொல்லும்போது
திகைத்து நின்று விடுகிறார் தந்தை.
இது மட்டுமல்ல, சாப்பாடு மேஜையில் குடும்பத் தலைவனாய் அமர்ந்த இடத்திலிருந்து மருமகள் தன்னை எழுப்பி விட்டு மகனை உட்காரவைப்பது முதல், உடைந்த மூக்குக் கண்ணாடியைச் சரி செய்ய (அதுவும் பேரன் உடைப்பதுதான்) மகனை அணுகும்போது (கொஞ்சம் நாடகத்தனமான காட்சி) மகன் அடுத்த மாதம் என்று தவணை வாங்குவது, காலை பேப்பர் வந்ததும் எடுத்துப் படிக்கும் அவரிடமிருந்து 'அவர்' பேப்பர் கேட்கிறார், உங்களுக்கு என்ன அவசரம்? வீட்டில் சும்மாதானே இருக்கிறீர்கள்?' என்று மருமகள் அந்தப் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போவது, இரவில் தூக்கம் வராமல் தனது அறையில் தனது கதையை பழைய டைப்ரைட்டரில் அடிக்கும் தந்தையை மருமகள் தூண்டலின் பேரில் மகன் வந்து 'இந்தக் குடும்பத்துக்காக காலையிலேயே எழுந்து, நீங்களெல்லாம் சாப்பிட சாப்பாடு செய்வது முதல் வேலை வேலை என்று மிகவும் கஷ்டப்படும் தன் மனைவிக்குத் தூக்கம் வராமல் செய்கிறீர்கள்' என்று சொல்வது வரை தந்தையின் வருத்தங்கள்...
அந்த வீட்டில் பேரன் மட்டும் தாத்தா பக்கம். "இந்த வீட்டுக்கு மறுபடி வராதே தாத்தா" என்கிறான்.
நேரம் கெட்ட நேரத்தில் கவர்ச்சியான உடையணிந்து வெளியில் செல்லும் பேத்தியைப் பார்த்துக் கவலைப்படும் தாய் அதுபற்றித் தன் மகனிடம் சொல்ல முற்படும்போது அந்த மகன் தாங்கள் தங்கள் தந்தையால் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட கொடுமை போல தனது மகளுக்குச் செய்ய விருப்பமில்லை என்று சொல்வதோடு 6 மாதம் விருந்தினராய் வந்திருக்கிறாய்... அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்' என்கிறான். அப்புறம் சினிமாத் தனமான ஒரு காட்சியில் அந்தப் பேத்தி மனம் திருந்துகிறாள்.
6 மாதங்கள் கழித்து தம்பதியர் வீடு மாறும் கட்டத்தில் அவர்கள் திருமணநாள் வர, அதைக் கொண்டாட நினைக்கும் நாயகன் மனைவியை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே அழைத்துச் சென்று சுற்றுகிறான். ஒரு குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் இருவருக்கும் தாங்கள் பிரிந்து வெவ்வேறு மகன்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டிய கடமை அழுத்துகிறது. நாயகன் இனி நாம் அப்படிச் செல்ல வேண்டாம் என்கிறான்.
அப்புறம் 'வாழ்க்கை' பாண்டியன் மாதிரி, 'படிக்காத மேதை' ரங்கன் மாதிரி ஒரு வளர்ப்புமகன். சல்மான்கான். உணர்ச்சிகரமான நடிப்பு என்று ஹஸ்கி வாய்சிலேயே பேசிக் கொல்கிறார். அவர் வந்து இவரது சொந்த மகன்கள் காட்டாத பாசத்தையும், மரியாதையையும் இருவருக்கும் காட்டுகிறார்.
தன் காதல் மனைவி பற்றியும் தன் வாழ்க்கை பற்றியும் 'பக்பன்' என்ற பெயரில் நாயகன் டைப் செய்யும் பக்கங்கள் நண்பர்கள் மூலம் புத்தகமாக, பல பதிப்புகள் கண்டு இவர்களை அந்தப் புத்தகம் கோடீஸ்வரனாக்குவதும், பரிசு மேடையில் நாயகனின் உணர்ச்சிகரமான உரையுடனும் நிறைவு பெறுகிறது படம்.
மன்னிப்புக் கேட்கும் மகன்களிடம் தாய், 'ஒரு தாயாக என் ரத்தங்களான உங்களை நான் மன்னிப்பேன். ஆனால் என் கணவரின் கண்ணீருக்குக் காரணமான உங்களை அவரின் மனைவியாக மன்னிக்க மாட்டேன்' என்று பேசிச் செல்கிறார்.
இப்படி ஒரு படம் பார்த்ததனால்தான் மேலே எழுதியிருப்பவை...!
வயதானபின்னும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்த அன்பு படத்தின் ப்ளஸ் பாயிண்ட். திருமணத்துக்குப் பின் கணவனின் பெற்றோர் தங்களுடன் இருக்கக் கூடாது என்றுதான் இந்தக் காலப் பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் இப்படி ஒரு கண்டிஷனைப் போடுகிறார்களா என்று (நானறிந்தவரையில்) தெரியவில்லை! இதற்குத்தான் 80 களிலேயே விசு லக்ஷ்மியை வைத்து 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் ஒரு தீர்வைச் சொல்லி விட்டார் போலும்! எப்படியாயினும் வயதான காலத்தில் கடமையைக் காரணம் காட்டி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கக் கூடாது என்பது என் கட்சி. அந்த வகையில் படம் நன்றாக இருந்தது!







