வியாழன், 15 செப்டம்பர், 2011

பாடல்கள் - பாடகர்கள் ஆராய்ச்சி - வெட்டி அரட்டை


                      
சந்திரபாபு அடிப்படையில் நடிகர். பாடல்களும் பாடுவார். ஒரு படத்தில் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) ஒரு பாடலுக்கு சிவாஜி கணேசனுக்குக் குரல் கொடுத்திருப்பார்.

  
கமலஹாசன் நடிகர். பாடுவார். அவர் வேறு நடிகர்கள் இரண்டு பேருக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். (யார், யார் தெரியுமோ?)
    


இந்தக் காலத்தில் நிறைய பாடகர்கள் வந்து விட்டார்கள். பிரசன்னா,கார்த்திக், திப்பு, நரேஷ் ஐயர், ஆலாப் ராஜு (இந்தப் பெயர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...இவர் பாடிய - எனக்குத் தெரிந்து - இரண்டு பாடல்களும் ஹிட்) இன்னும் என்னென்னவோ பெயர்களில்... எந்தப் பாடலை யார் பாடியது என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஹரிஹரன் விதிவிலக்கு. (அவரை 'இந்தக்கால' லிஸ்ட்டில் சேர்க்க முடியாது). பெண் பாடகிகள் கொஞ்சம் விதிவிலக்கு. ஸ்ரேயா கோஷல் குரலை எளிதாக அடையாளம் காண முடிகிறது. ஹரிணி கஷ்டம். பிரசாந்தினி, சங்கீதா  மோகன் என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள். ஊ.... ஹூம்...!
  
முந்தைய கால கட்டங்களில் இந்தப் பாடல் mkt பாகவதர் பாடியது, இது பி யு சின்னப்பா பாடியது என்றோ டி எம் எஸ், எஸ் பி பி பாடியது என்றோ எளிதாகக் கண்டு பிடிக்கலாம். அப்போதும் கூட சில இரட்டைக் குரல்கள் உண்டு... டி எம் எஸ் க்கு போலியாக ஒரு கோவை சௌந்தரராஜன். மனோ பாடியதையும் எஸ் பி பி பாடியதையும் குழப்பிக் கொள்கிறவர்கள் உண்டு. எஸ் பி பிக்கும் மலேசியா வாசுதேவனுக்குமே வித்தியாசம் தெரியாமல் குழம்புபவர்கள் உண்டு. அடுத்த குழப்பம் கே ஜே யேசுதாஸ் - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள். (எனக்குக் குழப்பம் இருந்ததில்லை!). இந்த இரட்டைக் குழப்பம் பெண் குரலில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்!

   
மதுரை சோமுவும் பித்துக்குளி முருகதாசும் ஒரே ஒரு திரைப் பாடல்தான் பாடியிருக்கிறார்கள், தெய்வம் படத்தில்.   
ஜி ராமநாதன், கே வி மஹாதேவன் காலத்துக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு பாடலாவது பாடியிருக்கிறார்கள். மிகச்சில விதிவிலக்குகள்.  

   
தமிழ் பாடகர்கள் முழுநீள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். டி எம் எஸ், எஸ் பி பி, சீர்காழி கோவிந்தராஜன், மனோ.
     
சில பாடல்கள் முதலில் வரும் வரிகள் ஓரிரண்டு மாற்றப் பட்டு பின்னர் வேறு வரிகளுடன் பாடப் படுவதைக் கேட்டிருக்கிறீர்களா... கொஞ்ச நாள் முன்பு இந்தப் பதிவில் பகிர்ந்த நாளை நமதே பாடல், 'என்னை விட்டால் யாருமில்லை'பாடலையே எடுத்துக் கொள்வோம். சரணத்தில் ஓரிடத்தில் "ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற்போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு...அரச மரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றார்போல் ஒரு நினைப்பு" என்பது ஒரிஜினலாக பல வருடங்கள் இருந்த வரி. பின்னர் இந்த வரியில் மாற்றம் செய்யப் பட்டு அரசமரத்தின் இலை 'அழகர் மலையின் இலைகளில் ஒன்றா'க மாறியது!

'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...' இது ஒரிஜினல் பாடல். இன்னும் சில கேசட்களில் கூட ஒரிஜினல் வடிவம் இருக்கலாம். பருவம் என்பதில் என்ன தவறு கண்டார்களோ... சில வருடங்களுக்குப் பிறகே லேட்டாக பருவம் என்பதை பார்வையாக மாற்றி விட்டார்கள்...! 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா....ராதா...' 
  

ஆனால் இதே பருவம் என்ற வரிகளைக் கொண்ட வேறு பல பாடல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மாற்றப் படவில்லை. மலர்கின்ற பருவத்திலே, பருவத்தின் வாசலிலே, கன்னிப் பருவத்திலே என்றெல்லாம் படங்களே வந்தன. இங்கெல்லாம் பார்வையை சப்ஸ்டிடியூட் செய்தால் எப்படி இருக்கும். பருவ காலம் என்றொரு படம். பழைய படம். அப்போதே வந்ததுதான். அதையும் மாற்ற வேண்டாமா...! அந்தப் படத்தில் மாதுரி (என்று ஞாபகம்) பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. "வெள்ளி ரதங்கள் அழகு மேகம்.. செல்லும் வீதி சிவந்த வானம்... பாவை நெஞ்சின் இளைய ராகம் பாட வந்தது பருவ காலம்.." ரசிக்கக் கூடிய பாடல்.

'நான் ஆணையிட்டால்...' இது 'எங்க வீட்டுப் பிள்ளை' எம் ஜி ஆர் படப்பாடல். அதில் ஒரு வரி. "எதிர்காலம் வரும் என் கடமை வரும்.. இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.." என்பது ஒரிஜினல். மாற்றப்பட்ட வரி 'இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்'
  

ஏன்? என்ன சாதித்தார்கள் இந்த வரிகளை மாற்றி? அதை விட சில வருடம் கழித்து மாற்றினாலும் குரலின் தன்மை, ஸ்ருதி மாறாமல் பாடகர்களை மாற்றிப் பாட வைத்து இந்த வரிகளை மட்டும் எப்படி மாற்றி சேர்க்க முடிந்தது?  
                    
பாடல் வரிகள் அல்லது வார்த்தைகள் மாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரு படத்தின் ஒரு பாடல் - இசைத்தட்டில் சூப்பரான பின்னணி இசை. ஆனால் படத்தில் கேட்கும்பொழுது, பாடலின் பின்னணி இசை மாற்றப்பட்டு,கலரை எடுத்துவிட்டு கரி பூசினாற்போல செய்யப்பட்டது. எந்தப் படம், என்ன பாடல்? (ஏன்?) யாருக்காவது தெரியுமா? 
         

25 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
  இருட்டினில் நீதி மறையட்டுமே..
  தன்னாலே வெளிவரும் தயங்காதே
  ஒரு கலைஞன் இருக்கிறான் மயங்காதே..

  என முதலில் வந்ததாகவும்..
  பின்னர் 'ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே' என மாற்றப் பட்டதாகவும் கேள்விப் பட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. தெரியல சாமி.. ஆனா கமல் குரல் கொடுத்த நடிகரில் ஒருவர் அஜீத்

  பதிலளிநீக்கு
 4. மோகனுக்காக, கமல் ஒரு பாடல் பாடினார். "ஓ மானே மானே" திரைப்படத்திற்காக.

  பதிலளிநீக்கு
 5. தெரியாத பல தகவல்கள். கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை:)! சுவாரஸ்யமான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 6. மிகவும் சுவாரஸ்யமான பதிவு!

  மறந்து போன ஒரு நல்ல பாடலை [வெள்ளி ர‌த‌ங்க‌ள்‍ மாதுரி ] நினைவு ப‌டுத்திய‌த‌ற்கு மிக‌வும் ந‌ன்றி!

  பாவ‌ ம‌ன்னிப்பு ப‌ட‌த்தில் ' பாலிருக்கும் ப‌ழ‌மிருக்கும் ' பாட‌லில்

  காத‌லுக்கு ஜாதியில்லை, ம‌த‌முமில்லையே
  க‌ண்க‌ள் பேசும் வார்த்தையிலே பேத‌மில்லையே
  வேத‌மெல்லாம் காத‌லையே ம‌றுப்ப‌தில்லையே ‍அது
  வேதம் செய்த குருவைக்கூட விடுவதில்லையே
  என்று முதலில் வந்த பாடல் மறுபடியும் நாலாவது வ‌ரியை மட்டும்
  'வேத‌ம் செய்த‌ உருவ‌ம் போல‌ ம‌றைவ‌தில்லையே' என்று மாற்றி வெளி வந்த‌‌து!

  பதிலளிநீக்கு
 7. சந்திரபாபு சிவாஜிக்கு குரல் கொடுத்த பாடல் 'jolly life'

  கமலஹாசன் மோகனுக்கு பாடியது ஒ மானே மானே படத்தில் வரும் 'பொன்மானே தேடுதே, என் வீணை பாடுதே'. அஜீத்துக்காக பாடியது உல்லாசம் படத்தில் 'முத்தே முத்தம்மா'.

  பதிலளிநீக்கு
 8. //ஒரு படத்தின் ஒரு பாடல் - இசைத்தட்டில் சூப்பரான பின்னணி இசை. ஆனால் படத்தில் கேட்கும்பொழுது, பாடலின் பின்னணி இசை மாற்றப்பட்டு,கலரை எடுத்துவிட்டு கரி பூசினாற்போல செய்யப்பட்டது. //
  இது குரு படத்தில் வரும் 'ஏ மாண்புறு மன்னவா நில்லாயோ' என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நான் கேள்விப்பட்டிராத சில விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 10. பாடலின் வரிகள் மாற்றப்பட்டு, வேறு வரிகளோடு பாடப் பட்ட பாடல் நிறைய இருக்கிறது. இது சில பாடல்களில் அதன் அழகையே கெடுத்திருக்கிறது.
  'சந்தோரதயம் ஒரு பெண்ணானதோ' பாடலில் 'இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ, இருக்கின்ற சுகம் வாங்க தடை போடவோ, மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ, முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ' என்பது 'எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ, எனக்கென்று சுகம் வாங்க துணை தேடவோ, மலர் மேனி தனை கண்டு மகிழ்ந்தாடவோ, மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ' என்று ஆனது.

  'முத்துப்பல் சிரிப்பென்னவோ' என்ற பாடலில் 'கண்ணா உன் கால் தொட்டு, கதை சொன்ன நாள் தொட்டு' என்பது 'கண்ணா உன் தோள் தொட்டு, கதை சொன்ன நாள் தொட்டு' என்று ஆனது.

  'வந்த நாள் முதல் இந்த நாள் வரை' என்ற பாடலில் 'மதம்' என்ற வார்த்தைக்கு பதில் 'பணம்' என்று மாறியது.

  'இன்று வந்த இந்த மயக்கம்' என்ற பாடலில் 'எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்' என்பது 'எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக' என்று மாறியது.

  எஸ்.பீ.பீ. அவர்கள் 'காதல் விளையாட கட்டில் இடு கண்ணே' என்ற பாடலில் 'நீராட்டு தீராமல் தேரோட்டும் புழ்பங்கள் பாராட்டி பேசட்டுமே' என்பதற்கு 'போராட்டி பேசட்டுமே' என்று பாடி இருப்பார். பின்பு இதை மாற்றி 'பாராட்டி பேசட்டுமே' என்று பாடி இருப்பது பாடலோடு ஒட்டாமல் மிகவும் தனித்து நிற்கும்.
  இப்படி இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. எழுதி கொண்டே போனால் பின்னூட்டம் நீண்டு கொண்டே போய்விடும். :)

  பதிலளிநீக்கு
 11. ஒரு பின்னணி பாடகி படத்தில் பாடகியாக நடிக்க அவருக்கு இன்னொரு பின்னணி பாடகி பின்னணியில் பாடியது....
  பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் 'மணியோசை கேட்டு எழுந்து' என்ற பாடலில் ஜென்சி நடிக்க பாடலை பாடியது ஜானகி.

  பதிலளிநீக்கு
 12. meenakshiயின் அடுத்த கமென்டை எதிர்பார்க்கிறோம்

  பதிலளிநீக்கு
 13. //அப்பாதுரை said... meenakshiயின் அடுத்த கமென்டை எதிர்பார்க்கிறோம்//

  அதே அதே சபாபதே

  பாடப்புத்தகத்தை எம்.எஸ்.வி. இசையில் பாட்டை கொடுத்து இருந்தால் - மீனாக்ஷி தான் ஸ்கூல், கல்லுரி, மாநிலம், நாடு, பூமி, அண்டம், பேரண்டம் என்று எல்லாவற்றிலும் முதல் மார்க் எடுத்து பிண்ணி பெடலேடுத்து இருப்பார்கள் போலிருக்கு !!

  பதிலளிநீக்கு
 14. ஆஹா…. பாடல் ஆராய்ச்சின்னா இது தான்….நிறைய மலரும் நினைவுகளின் கிளறல்…
  மீனாக்ஷி அவர்கள் தகவல் திலகமா இருக்காங்களே….
  அப்பாதுரை , சாய் அவர்களோடு திண்ணையில் இடம் பிடித்துள்ளேன் – அவர்களின் அடுத்த சுவாரசிய தூவலுக்காக…..

  பதிலளிநீக்கு
 15. அருமையான பதிவு. மலேஷியா வாசுதேவன் குரலையும் SPB குரலையும் குழப்பிக்கொள்வார்களா?!!!! ஆச்சர்யம்.
  மீனாக்ஷி, சினிமா பாடல்களில் பிஹெச்டி வாங்குவிட்டீர்களா? தகவல் களஞ்சியமாக இருக்கீங்களே. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. ஹாட்ஸ் ஆஃப் மீனாக்ஷி.
  பழைய பாடல்களின் முழு ஆராய்ச்சியாளர் நீங்கள். உங்களைப் பார்த்துப் பேச ஆசை.
  ஏகப்பட்ட பாடல்களில் பருவம் என்பதற்கு வேறு அர்த்தம் இருந்ததால் பிறகு மாற்றப்பட்டது என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 17. கமலகாசன் தனக்காகப் பாடியதையே கேட்க... இதுல அடுத்தவங்களுக்கு வேறயா? ஆமா.. மோகனுக்கு மார்கெட் போயிடுச்சு போலிருக்கே? ஆளக்காணோமே? ஏன்னு கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 18. இந்தப்பதிவில் தெரியாத சில தகவல்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது

  பதிலளிநீக்கு
 19. மாதவன்....கலைஞன்-தலைவன் கேள்விப்பட்டதில்லை. புதிய தகவல்.

  தெரியலை என்று சொல்லி கரெக்டாத்தான் சொல்லியிருக்கீங்க suryajeeva.

  ஆமாம் தமிழ் உதயம்...'பொன்மானே' என்ற பாடல். meenakshi சொல்லியிருக்காங்க பாருங்க..

  நன்றி ராமலக்ஷ்மி...

  நன்றி மனோ சாமிநாதன். பருவகாலம் பாடல் உங்களுக்கும் பிடிக்குமா? பாவ மன்னிப்புப் பாடல் தகவல் புதிது.

  meenakshi....அசத்திட்டீங்க...இன்னும் பின்னூட்ட மழை தொடரும்னு எதிர்பார்த்தோம்.

  நன்றி HVL.

  அப்பாதுரை, சாய்ராம்...வருக...அப்பாதுரை கமல் மீது இன்னும் கோபம் போகவில்லையா...!

  நன்றி பத்மநாபன், geetha santhanam, வல்லிசிம்ஹன், Lakshmi.

  பதிலளிநீக்கு
 20. மிக்க நன்றி எல்லோருக்கும். தகவல் திலகம்! தகவல் களஞ்சியம்! ஹை, பட்டங்கள் எல்லாம் நல்லா இருக்கே! நன்றி! நன்றி!
  பத்மநாபன், திண்ணையில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிப்பதே ஒரு சுகம். அதிலும் அது பாடல்களை பற்றிய அரட்டை என்றால் சுகமோ, சுகம்தான்.
  வல்லிசிம்ஹன், பழைய பாடல்களின் முழு ஆராய்ச்சியாளர் நானா! :) நிச்சயம் இல்லை. பழைய பாடல்களை எப்போதுமே கேட்டுக் கொண்டிருப்பேன். அதனால் கொஞ்சம் தெரியும். அவ்வளவுதான். நான் சென்னை வரும்போது சந்திப்போம், பேசுவோம். மிகவும் சந்தோஷம்.

  என்ன, பின்னூட்ட மழை தொடரணுமா! சரிதான்! :) இப்பொழுது என் நினைவுக்குவந்த இந்த இரண்டையும் எழுதுகிறேன்.
  அன்பே வா படத்தில், 'புதிய வானம், புதிய பூமி' என்ற பாடலில் 'உதய சூரியனின் பார்வையிலே' என்று இருந்தது 'புதிய சூரியனின் பார்வையிலே' என்று மாற்றப்பட்டது. ஏன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.
  பூக்களை பறிக்காதீர்கள் என்ற படத்தில் வரும் 'பூக்களைத்தான் பறிக்காதீங்க' பாடலை மேடையில் இசையமைத்து பாடுவது போல் நடித்தவர் சங்கர்-கணேஷ். ஆனால் இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் டி.ஆர்.

  பதிலளிநீக்கு
 21. லுக்ஸ் இல்லாமல் திரையில் இசையால் புகழ் பெற்றவர்கள் வசந்த கோகிலம், தண்டபாணி தேசிகர், ஜீவரத்தினம் போன்றோர். இசை திறனை நம்பி திரைக்கு வந்து புட்டுக்கிட்டு போனது திருவாடுதுறை ராஜா ரத்தினம், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர ஆகியோர். தண்டபாணி தேசிகர் ஜி ஏன் பி போன்றோர் ஓரளவு வெற்றி அடைந்தார்கள். இசை மட்டும் போதாது என்பதால் பாகவதர் கடைசி காலத்தில் கஷ்டப் பட்டார்.

  இப்போது பேச ஒரு குரல், பாட பல குரல், காலுக்கு ஒரு நபர, தலை முடிக்கு வேறு ஒருவர் என்று டூப்புகள் ஆட்சி நடக்கிறது.

  பதிலளிநீக்கு
 22. ஜாலி லைஃப் பாட்டு, பெண் படத்தில்
  வரும் வேணை பாலச்சந்தருகாகப் பாடின பாட்டுன்னு எனக்கு சந்தேகம்:)

  பதிலளிநீக்கு
 23. தற்போதைய பாடல் அந்திமழை பொழிகிரதிலும் இதுபோல சில வரிகள் மாற்றப்பட்டதாக கேளிவிப்பட்டிருக்கேன். வைரமுத்து ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

  பதிலளிநீக்கு
 24. கட்டுரையின் கடைசி பாரா கேள்விக்கு இதுவரையிலும் யாரும் சரியான பதில் பதியவில்லை. கே ஜி விசுவேச்வரன் எங்கு இருந்தாலும் மேடைக்கு அழைக்கப் படுகிறார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!