Sirkazhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sirkazhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.6.12

அண்ணன் பெருமாள் கோவில்



தஞ்சை மாவட்டம் - சோழ நாடு- சீர்காழியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீர்காழி-ஆக்கூர், சீர்காழி-நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ளது.


சோழ நாட்டில் அமைந்துள்ள நாற்பது திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. மொத்தத்தில் முப்பத்தெட்டாவது திவ்யதேசம்.  




இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள அண்ணன் பெருமாள் திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்று அறியப் படுவதால் அண்ணன் பெருமாள் என்றே அழைக்கப் படுகிறார்.  




கோவிலின் முன்புறம் திருவெள்ளக்குளம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது. இது சுவேத புஷ்கரணி என்றழைக்கப் படுகிறது. இக்குளத்தில் மலரும் குமுதமலர்களைக் கொய்து நீராட வரும் தேவமாதர்களில் ஒருவர் ஒருமுறை மானிடர் ஒருவர் கண்ணில் தென்பட்டு விட்டதால் தேவலோகம் திரும்ப முடியாமல் போக, அங்கேயே தங்கும் அந்த தேவமங்கையைத் திருமங்கை மன்னன் வந்து மணம் புரிய, அரங்கர் அருளில் அவர் திருமங்கை ஆழ்வாராக மாறியது வரலாறு.
நாகபுரி தேசத்தின் தலைவாசலாக அறியப்படும் இங்குதான் மருத்த முனிவரின் ஆசிரமம் இருந்ததாகவும் வரலாறு. சூரியகுல அரசன் துந்துமாரன் என்ற அரசனின் மகன் சுவேதனுக்கு ஒன்பதாவது வயதில் அகால மரணம் ஏற்படும் என்றறிந்த அரசன், வசிஷ்ட முனிவர் அறிவுரைப்படி திருநாங்கூர்ப் பொய்கையில் தினமும் நீராடி வசிஷ்டரால் உபதேசிக்கப் பட்ட நரசிம்ம ம்ருத்யுஞ்சய மந்திரத்தை சங்கல்பம் செய்ய ஸ்ரீநிவாசப் பெருமாள் அவன்முன் தோன்றி அவனை சிரஞ்சீவியாக்கியதாக வரலாறு.  



திருக்கடையூர் செல்லும் வழியில் மத்திய உணவு இங்குதான் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர். போகும் வழியிலேயே திருபார்த்தன்பள்ளி, திருச்சித்திரக் கூடம் என்று சிதம்பரம் தாண்டும் வழியில் இன்னுமிரண்டு திவ்யதேசங்களைத் தாண்டிச் சென்றாலும் அங்கெல்லாம் செல்லவில்லை. மயிலாடுதுறையை அடைந்த போதே சற்றே வழி மாறி விட்டதால் கொஞ்சம் சுற்றிதான் இந்தக் கோவிலை அடைந்தோம். போகும் வழியில் யாரைக் கேட்டாலும் வழி சொல்கிறார்கள். ஒற்றையடிப் பாதை போன்று வசதிக் குறைவான குறுகிய வழி!  கோவில் பழமையைச் சொல்கிறது.  





திருக்குளம் என்று சொல்லப்படும் திருவெள்ளக்குளமாம் சுவேத புஷ்கரணி சுத்தம் செய்யப் படாமல், தூர்வாரப்படாமல் பாசி படர்ந்து காணப் படுகிறது. கோவில் காரியங்களில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகளின்  கைங்கர்யம் காணப்படுகிறது.

உள்ளிருந்து வெளியே...


பெருமாள் இரண்டு உப நாச்சியார்களுடன் காட்சியளிக்கிறார். வலதுபுறம் தாயார் சன்னதி. திருமலையில் தாயார் இல்லாத குறை நீங்க இங்கு அலர்மேல்வள்ளித்  தாயாருக்குத் தனிச் சன்னதி. உள்ளேயே வலதுபுறத்தில் குமுதவல்லி நாச்சியார் சன்னதி. இவர்தான் திருமங்கை மன்னனை திருமங்கை ஆழ்வாராகத் திருத்திய நாச்சியார்.

108 திவ்யதேச விவரப் படங்கள் அணிவகுப்பு....


தாயார் சன்னதிக்கு முன்புறம், உள்ளே நுழைந்ததும் இடப் பக்கம் மடைப்பள்ளி. அங்கிருந்து கோவில் பிரகாரத்தைச் சுற்றி நூற்றியெட்டு திவ்ய தேசம் பற்றிய விவரங்களுடன் படங்கள் பிரதட்சணமாக வைக்கப் பட்டுள்ளன.




அழுக்கான குளத்தைச் சுற்றி மேடான கரையில் சுற்றிலும் வீடுகள். எதிர்முனையில் பக்தர்கள் வசதிக்காக நான்கைந்து கழிப்பறைகள்.

எதிர்புறத்திலிருந்து கோவில்...


சாப்பாடு பரிமாறப்படும் நேரத்தில், சமைக்கப் பட்ட பிரசாதங்களை பட்டர் வெளியில் கொண்டுவந்து வைத்து, "எங்களிடம் பரிமாற ஆள் இல்லை" என்று அறிவித்து நகர, நாங்களே பரிமாறிக் கொண்டோம். இலை நூறு ரூபாய்க் கணக்கு. ஜவ்வரிசி கல்கண்டு சாதம் கூடுதல் இனிப்புடன் இருக்க,கதம்ப சாம்பார் சாதம், சாத்தமுது (ரசம்)  புளியோதரை ஆகியவை 'திவ்யமாய்' இருந்தன.



தாயார் சன்னதியிலிருந்து வெளிப் புறம் நோக்கி...  


கேமிரா ஒத்துழைக்காததால் செல்லில் எடுத்த (அரைகுறைப்) புகைப்படங்கள் மட்டும். என் உடன் வந்தவர் இந்த புகைப் படங்கள் எடுத்ததற்கு மிகக் கடுமையாக ஆட்ச்பித்தார். என் செல்போன்  பேட்டரி தீர்ந்ததற்கும், பஸ் ரிவர்ஸ் எடுக்கும்வரை வெயிலில் நடந்ததற்கும் (செருப்புகள் பஸ்ஸில் மாட்டிக் கொள்ள, வெறும் காலில்) இந்தக் குற்றத்தைக் காரணமாக்கினார் அவர்!  




பெரிய விசேஷ தினம் ஒன்றும் இல்லையென்றாலும் நாங்கள் கிளம்புமுன்னரே இன்னொரு பஸ் வந்து நின்றது. சித்திரை, வைகாசி,என்று எல்லா மாதங்களிலும் விசேஷ தினங்கள் இருக்கின்றன. அப்போது கூட்டம் நிறைய வருமென்று பட்டர் சொன்னார்.  




(படங்கள் தெளிவின்மைக்கு மன்னிக்கவும். அவசரத்துக்கு 'சாதா செல்'லில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்!)  
                

15.9.11

பாடல்கள் - பாடகர்கள் ஆராய்ச்சி - வெட்டி அரட்டை


                      
சந்திரபாபு அடிப்படையில் நடிகர். பாடல்களும் பாடுவார். ஒரு படத்தில் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) ஒரு பாடலுக்கு சிவாஜி கணேசனுக்குக் குரல் கொடுத்திருப்பார்.

  
கமலஹாசன் நடிகர். பாடுவார். அவர் வேறு நடிகர்கள் இரண்டு பேருக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். (யார், யார் தெரியுமோ?)
    


இந்தக் காலத்தில் நிறைய பாடகர்கள் வந்து விட்டார்கள். பிரசன்னா,கார்த்திக், திப்பு, நரேஷ் ஐயர், ஆலாப் ராஜு (இந்தப் பெயர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...இவர் பாடிய - எனக்குத் தெரிந்து - இரண்டு பாடல்களும் ஹிட்) இன்னும் என்னென்னவோ பெயர்களில்... எந்தப் பாடலை யார் பாடியது என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஹரிஹரன் விதிவிலக்கு. (அவரை 'இந்தக்கால' லிஸ்ட்டில் சேர்க்க முடியாது). பெண் பாடகிகள் கொஞ்சம் விதிவிலக்கு. ஸ்ரேயா கோஷல் குரலை எளிதாக அடையாளம் காண முடிகிறது. ஹரிணி கஷ்டம். பிரசாந்தினி, சங்கீதா  மோகன் என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள். ஊ.... ஹூம்...!
  
முந்தைய கால கட்டங்களில் இந்தப் பாடல் mkt பாகவதர் பாடியது, இது பி யு சின்னப்பா பாடியது என்றோ டி எம் எஸ், எஸ் பி பி பாடியது என்றோ எளிதாகக் கண்டு பிடிக்கலாம். அப்போதும் கூட சில இரட்டைக் குரல்கள் உண்டு... டி எம் எஸ் க்கு போலியாக ஒரு கோவை சௌந்தரராஜன். மனோ பாடியதையும் எஸ் பி பி பாடியதையும் குழப்பிக் கொள்கிறவர்கள் உண்டு. எஸ் பி பிக்கும் மலேசியா வாசுதேவனுக்குமே வித்தியாசம் தெரியாமல் குழம்புபவர்கள் உண்டு. அடுத்த குழப்பம் கே ஜே யேசுதாஸ் - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள். (எனக்குக் குழப்பம் இருந்ததில்லை!). இந்த இரட்டைக் குழப்பம் பெண் குரலில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்!

   
மதுரை சோமுவும் பித்துக்குளி முருகதாசும் ஒரே ஒரு திரைப் பாடல்தான் பாடியிருக்கிறார்கள், தெய்வம் படத்தில்.   
ஜி ராமநாதன், கே வி மஹாதேவன் காலத்துக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு பாடலாவது பாடியிருக்கிறார்கள். மிகச்சில விதிவிலக்குகள்.  

   
தமிழ் பாடகர்கள் முழுநீள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். டி எம் எஸ், எஸ் பி பி, சீர்காழி கோவிந்தராஜன், மனோ.
     
சில பாடல்கள் முதலில் வரும் வரிகள் ஓரிரண்டு மாற்றப் பட்டு பின்னர் வேறு வரிகளுடன் பாடப் படுவதைக் கேட்டிருக்கிறீர்களா... கொஞ்ச நாள் முன்பு இந்தப் பதிவில் பகிர்ந்த நாளை நமதே பாடல், 'என்னை விட்டால் யாருமில்லை'பாடலையே எடுத்துக் கொள்வோம். சரணத்தில் ஓரிடத்தில் "ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற்போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு...அரச மரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றார்போல் ஒரு நினைப்பு" என்பது ஒரிஜினலாக பல வருடங்கள் இருந்த வரி. பின்னர் இந்த வரியில் மாற்றம் செய்யப் பட்டு அரசமரத்தின் இலை 'அழகர் மலையின் இலைகளில் ஒன்றா'க மாறியது!

'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...' இது ஒரிஜினல் பாடல். இன்னும் சில கேசட்களில் கூட ஒரிஜினல் வடிவம் இருக்கலாம். பருவம் என்பதில் என்ன தவறு கண்டார்களோ... சில வருடங்களுக்குப் பிறகே லேட்டாக பருவம் என்பதை பார்வையாக மாற்றி விட்டார்கள்...! 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா....ராதா...' 
  

ஆனால் இதே பருவம் என்ற வரிகளைக் கொண்ட வேறு பல பாடல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மாற்றப் படவில்லை. மலர்கின்ற பருவத்திலே, பருவத்தின் வாசலிலே, கன்னிப் பருவத்திலே என்றெல்லாம் படங்களே வந்தன. இங்கெல்லாம் பார்வையை சப்ஸ்டிடியூட் செய்தால் எப்படி இருக்கும். பருவ காலம் என்றொரு படம். பழைய படம். அப்போதே வந்ததுதான். அதையும் மாற்ற வேண்டாமா...! அந்தப் படத்தில் மாதுரி (என்று ஞாபகம்) பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. "வெள்ளி ரதங்கள் அழகு மேகம்.. செல்லும் வீதி சிவந்த வானம்... பாவை நெஞ்சின் இளைய ராகம் பாட வந்தது பருவ காலம்.." ரசிக்கக் கூடிய பாடல்.

'நான் ஆணையிட்டால்...' இது 'எங்க வீட்டுப் பிள்ளை' எம் ஜி ஆர் படப்பாடல். அதில் ஒரு வரி. "எதிர்காலம் வரும் என் கடமை வரும்.. இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.." என்பது ஒரிஜினல். மாற்றப்பட்ட வரி 'இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்'
  

ஏன்? என்ன சாதித்தார்கள் இந்த வரிகளை மாற்றி? அதை விட சில வருடம் கழித்து மாற்றினாலும் குரலின் தன்மை, ஸ்ருதி மாறாமல் பாடகர்களை மாற்றிப் பாட வைத்து இந்த வரிகளை மட்டும் எப்படி மாற்றி சேர்க்க முடிந்தது?  
                    
பாடல் வரிகள் அல்லது வார்த்தைகள் மாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரு படத்தின் ஒரு பாடல் - இசைத்தட்டில் சூப்பரான பின்னணி இசை. ஆனால் படத்தில் கேட்கும்பொழுது, பாடலின் பின்னணி இசை மாற்றப்பட்டு,கலரை எடுத்துவிட்டு கரி பூசினாற்போல செய்யப்பட்டது. எந்தப் படம், என்ன பாடல்? (ஏன்?) யாருக்காவது தெரியுமா?