நீண்ட நாட்களாக நாய் இல்லாமலிருந்தது எங்கள் தெரு. திடீரென ஒரு நாள் இது தலை காட்டியது.
எல்லோரிடமும் என்னமோ ஏற்கெனவே இரண்டு வருடமாக இங்கேயே பழகியது மாதிரி ஒரே நட்புணர்வு பாராட்டியது. எங்கள் வீட்டின் கதவின் மீது சற்றே ஏறி நின்று அது எங்களை அழைக்கும் அழகு இருக்கிறதே.... அருகிலிருந்தவர்கள் 'சரியான ஆளைத்தான் சப்போர்ட்டுக்குப் பிடிக்குது' என்று கிண்டல் செய்தார்கள். நானும் அது அனுப்பிய ரிக்வெஸ்ட்டை உடனே கன்ஃபர்ம் செய்தேன்!
அபபடி ஒரு அப்ரூவல் கிடைத்ததும் அது உடனே செயலில் இறங்கியது. முழுத் தெருவிலும் வளைய வந்து கொண்டிருந்த ஜிம்மி (உடனே பேர் வச்சுடுவோம்ல...) எங்கள் வீட்டுக்கெதிரே ஒரு குறுப்பிட்ட ஏரியாவை மானசீகமாகத் தேர்வு செய்து கொண்டது. ஆனால் உங்களுக்கும் அதன் ஏரியா எல்லைகள் தெரியும் -- இங்கு வந்து பார்த்தால்!
முதல் இரண்டு மூன்று நாள் கணக்கெடுப்பு.... யார் யார் அடிக்கடி வருபவர்கள், யார் யார் அவ்வப்போது வருபவர்கள்... யார் புதிதாக வருபவர்கள்.... இப்படிப் பார்த்து வைத்துக் கொள்கிறது என்று தெரிந்தது. இது வந்த நேரம் பனிக்காலமாய் இருந்ததால் வீட்டு வாசலில் ஒரு அட்டை போட்டு அதன் மேல் பழைய துணி விரித்து வைத்ததும் அதை உடனடியாக முகர்ந்து பார்த்து, அந்தச் சிறிய எல்லைக்குள் நடந்து உடம்பை வளைத்துப் படுத்துப் பார்த்து செக் செய்து கொண்டபின் 'ஓகே டேக்கன்' என்பது போல அப்புறம் அங்கேயே படுத்துக் கொள்ளத் தொடங்கியது!
பேப்பர் போடுபவரைக் கொஞ்ச நாள் பக்கத்திலேயே அண்ட விடவில்லை. . இது எங்களுக்குப் பல சிரமங்களைக் கொடுக்க, நாங்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்தபோது அவர் சொன்னதாவது : "போன வாரம் எங்க வீடு இருக்கற தெருவில்தான் இருந்தது. நாங்களும் பிஸ்கட் போடுவோம்... சோறு சாப்பிடாது சனியன்... இப்போ இங்கே வந்து இடம் பிடிச்சிட்டு என்னையே பார்த்துக் குலைக்குது"
"ஏற்கெனவே அங்கே வேற நாய் இருந்ததா..." என்றேன்.
"ஆமாம்... ரெண்டு வருஷமா வேற ரெண்டு நாய் ஏற்கெனவே அங்கே உண்டு" என்றார் செந்தில்.
"அப்புறம் எப்படி இது அங்க இருக்கும்... இங்கே பாருங்க... இதுதான் தனிக்காட்டு ராஜா.." என்றேன். என்னை விநோதமாகப் பார்த்து விட்டுச் சென்றார் செந்தில்.
அது சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லைதான்.. ஒன்லி ரஸ்க், பிஸ்கட், பன்...!
அவ்வப்போது வந்து சென்ற நாய்கள் சில உண்டு. அவை இந்த ஏரியாவைக் கிராஸ் செய்ய வரும்போது இதன் எல்லைக்குள் நுழைந்ததும், அது எவ்வளவு பெரிய சைஸாக இருந்தாலும் கவலைப் படாமல், இது எழுந்து நின்று, தலையைச் சாய்த்து மேல் பற்கள் மட்டும் வெளியே தெரியும்படி வாயை வைத்து அடிக்குரலில் உறுமி எச்சரிக்கை செய்யும். சில அவைகளுக்குள் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி விலகிப் போய் விடும். சில எதிர்த்து நிற்கும். கொஞ்ச நேர கலாட்டாவுக்குப் பின் இது, 'தன் ஏரியா இது' என்பதை ஸ்தாபிதம் செய்யும் - சத்தம் பொறுக்க முடியாமல் வெளியே வந்து, புதிய நாயைத் துரத்த முயற்சிக்கும் எங்கள் துணையோடு! மற்ற நாய்களுக்கு இது என் இடம், இது என் எல்லை என்று அது உணர்த்துவதை மனைவி, மகன்களுக்கு விளக்கினேன். "ரொம்பப் பெருமைதான் போங்க" என்று இடித்தாள் மனைவி.
ஜிம்மி மிகச் சோம்பலாகப் படுத்திருக்கும். அதன் ஏரியாவுக்குள் அடங்கும் எங்கள் ரெண்டு மூன்று வீட்டு மெம்பர்கள் யாராவது வேலையாக வெளியில் கிளம்பினால் துள்ளி எழுந்து அவர்களுக்கும் முன்னால் ஓடி அவரவர்கள் செல்ல வேண்டிய திசையில் ஓடும். அதெப்படி அவரவர்கள் செல்ல வேண்டிய திசைகளை அது சரியாக நினைவில் வைத்துக் கொண்டு முன்னே ஓடுகிறது என்பதும் ஆச்சர்யமாக இருக்கும்! முதலில் பிரதானச் சாலைக்கு வந்து போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தது. 'கிரீச்'சிட்டு ப்ரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் கூட இதைப் பார்த்ததும் கோபிக்க மனமில்லாமல் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள்! அதைப் பார்க்கும் யாருக்கும் அதன் மேல் கோபம் வருவதில்லை! ஆனால் அப்புறம் அப்புறம் தேவலாம்... தெரு முனையோடு திரும்பி விடும்!
கதவு திறந்திருந்தால் மேலே ஏறி மொட்டை மாடிக்குச் சென்று அந்த பாரபெட் சுவர் மீது பயமின்றி அது ஓடும்போது எனக்கு மயிர்க் கூச்செறியும்!
எல்லாம் நல்ல படிச் சென்று கொண்டிருந்தது..... இது வரும் வரை!
திடீரென ஒருநாள் இது இந்தத் தெருவில் புதிய அறிமுகம் ஆனது. அது கூட, "அவர் பார்வைல மாட்டறதுக்கு முன்னால துரத்தி விடு" என்ற வசனத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்த போது இது கண்ணில் சிக்கியது. முன்னங்கால்களை முன்னால் மடக்கி பாதி நமஸ்காரம் செய்து பணிவைக் காட்டியது. ஒன்றரை வருடத்துக்கு முன் எங்களை விட்டுச் சென்ற பிரவுனியை அப்படியே நினைவுக்குக் கொண்டு வந்த இதைப் பார்த்ததும் எனக்கு இதன் மீதும் பாசம் வந்து விட்டது. "அட, அதுக்குதான் சொன்னேன்" என்று அலுத்துக் கொண்டார்கள் மற்றவர்கள்.
ஏதோ அதன் வாரிசுதான் இது என்பது போல என்னை அடையாளம் கண்டு கொண்டது போல இதுவும் என்னை வைத்த ஐஸில் இதற்கும் பிரெண்ட்ஷிப் கன்ஃபர்ம் செய்தேன். என்னுடனே வீடு நோக்கி அதுவும் கூட ஓடி வந்தது.
அங்கு படுத்துக் கொண்டிருந்த ஜிம்மி புதிய வரவைக் கண்டு உஷாராக் எழுந்து நின்று எதிர்ப்பு காட்ட ரெடியாக, இது என் மேல் ஒருமுறை ஜம்ப் செய்து உறவை உறுதி செய்தது! ஆனாலும் உறுமலோடு பக்கம் வந்த ஜிம்மியை அடக்கி நான், "ஏய்... ஜிம்மி... கடிக்கக் கூடாது.." என்றேன்.
அங்கு நின்றிருந்த என் பையன் "அமாம்... அதுக்கு ரொம்பப் புரியும் பாரு.." என்றான்.
ஜிம்மி கொஞ்சம் தயங்கியது. என்னைப் பார்த்தது. ஒரு விடுபட்ட ஏக்கம் அதன் கண்களில் தெரிந்ததாக எனக்குப் பிரமை. சற்றே விலகி நின்றது. அப்புறம் வேறு திசை நோக்கி ஓடத் தொடங்கியது.
"ஏய்... ஜிம்மி... இங்கே வா... நீயும் இங்கதான் இருப்பே..." என்று நான் கூப்பிடக் கூப்பிட லட்சியம் செய்யாமல் ஓடி விட்டது.
என் பையன்கள் நம்ப முடியாமல் ஜிம்மியின் 'பொறாமையா, ஏமாறறமா' எது என்று புரியாத அந்த உணர்வை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
'இனிமே அது வராது பாரு' என்ற என் பையன்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, அது அப்புறமும் வந்தது. ஆனால் என் குரலுக்கு அது இதுகாறும் காட்டிவந்த அபார விஸ்வாசத்தில் ஓரிரு மாற்று குறைந்ததை நாங்கள் எல்லோரும் உணர்ந்தோம்!
புதிதாக வந்த பிரவுனிக்கும் (உடனே பேர் வச்சிடுவோம்ல...!) இந்த இடம் பிடித்து விட்டது போலும். இந்த இடத்தை விட மனமில்லாத அது, ஜிம்மியின் எதிர்ப்பை அன்பால் முறியடிக்கும் முயற்சியில் இறங்கியது.
வாலை விடாமல் ஆட்டியபடியே அது ஜிம்மியின் பக்கத்தில் நட்பு ரிக்வெஸ்ட் அனுப்ப, அது உறும, இது துள்ளிக் குதித்து அருகில் போவது போல் பாவ்லா காட்டி பயந்து விலகி ஓடுவது போலவும் பாவ்லா காட்டி அங்குமிங்கும் ஓடி 'விளையாட்டுக்கு வர்றியா... நானும் உன் ஃபிரெண்ட்தான்..' என்ற சமிக்ஞை காட்டும்! 'என்னால் உனக்கு ஆபத்தில்லை' என்ற செய்தி மட்டுமல்ல, இனி நானும் இங்குதான், என்னை ஏற்றுக் கொள்' பாவமும் அதில் இருக்கும்.
இதை 'பிரவுனி செமத்தியாகக் கடி வாங்கி ஓடப் போகிறது' என்று பேசிக் கொண்டிருந்த மனைவி மற்றும் பையன்களிடமும் சொன்னேன். என்னை கேலியாகப் பார்த்தார்கள்! இன்னும் சொன்னேன்..."பார்... கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு குறையும்... கொஞ்ச நாளில் ஜோடியாகி நெருங்கி விடும் (இரண்டுமே பெண் நாய்தான்!) " என்று நான் சொன்னதையும் அவர்கள் நம்பவில்லை.
திடீரென ஒரு நாள் பின் வீட்டிலிருந்து ஒரு பயங்கர அலறல் சத்தம். புதிய வரவை ஏற்றுக் கொள்ளாத ஒரு குடும்பத் தலைவர் அதை பெரிய கல்லால் தாக்கி விட, புதுவரவு வலி தாங்காமல் ரொம்ப நேரம் அலறிக் கொண்டிருக்க, என்னால் பொறுக்க முடியாமல் வெளியே சென்று அதன் காயத்தைப் பரிசோதிக்க, அடித்தவர் மகா பெருமையுடன், "கடிக்க வந்தது... ஒரே அடி..." என்றார். அது கடிக்க எல்லாம் போயிருக்காது என்று தெரியும். பொதுவாகவே நாயைக் கண்டால் கல் எடுப்பவர்களைக் கண்டால் எனக்குக் கோபம் வரும்! எனக்கு ஆத்திரத்தில் பேச்சே வரவில்லை. "இவ்வளவு நேரம் வலி தாங்க முடியாமல் அழுகிறதே... இதே அளவு உங்கள் காலில் பட்டிருந்தால் வலி எப்படி இருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?" என்றேன். ஏதோ சமாதானம் சொல்லி விட்டுப் போய் விட்டார் என்றாலும் இந்த சம்பவத்தினால் ப்ரவுனிக்கு வேறொரு நன்மை விளைந்தது.
அடிபட்டு அழுது கொண்டிருந்த பிரவுனியை ஜிம்மி நெருங்கி சுற்றி வந்து சோதித்தது. பெரிய ஆறுதல் இல்லையென்றாலும் எதிர்ப்பு குறைந்திருந்தது .
அப்புறம் கொஞ்ச நாள் ஒரே ஏரியா என்றாலும் இரண்டும் எதிர்ப்பு இல்லாமல் அது அது அதனதன் இடத்தின் வழியில் பிழைத்துக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நாள் போக, எப்போது ஏற்பட்டது என்று தெரியாமல் இப்போதெல்லாம் இரண்டும் நட்பாகி விட்டன. மகன்கள், மனைவிக்கு வியப்பு. 'எப்படி கரெக்டா சொன்னீங்க' என்றனர்.
நான் சொல்லாமல் பின்னே யார் சொல்வது..!
இதை எல்லாம் எழுதி எங்களை போரடிக்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு....
மன்னிக்கவும்.... நான் ஒரு நாய் நேசன்...!
ஒன்லி ரஸ்க், பிஸ்கட், பன்...!//
பதிலளிநீக்குRoyal!!!!:)))))
நாங்க நாய் வளர்த்த கதை நிறைய இருக்கு. கடைசியா மோதியோட சரி. மோதிக்கப்புறம் இன்னொண்ணைக் கொண்டு வர மனசில்லை. மோதிக்காக எங்க பையன் லீவுக்கு சென்னை வந்தப்போ கூட எங்களோட சுற்றுலா வராமல் வீட்டில் தங்கியதும், பெண் கல்யாணத்தின் போது மோதிக்காக அவன் அடிபட்டுக்கொண்டதும், அத்தனை அன்போடும் பாசத்தோடும் வளர்த்த மோதி திடீரென 98 டிசம்பர் 16 அதிகாலை எங்களை விட்டுப் பிரிந்ததும், கொஞ்ச நாட்கள் எனக்கும், என் கணவருக்கும் பித்துப் பிடித்தாற்போல் இருந்ததும், இப்போ நினைச்சால் கூட மனம் கனக்கிறது.
நாய் பொதுவாக ஒரே எஜமானனிடமே விசுவாசமாய் இருக்கும்; இன்னொருவரை ஏற்காது என்பார்கள். நாங்க மோதியின் நினைவுக்குக் காட்டிய மரியாதையும் அதுவே. மோதியின் நினைவில் இன்னொன்றிற்கு இடமில்லை. என்றாலும் தெருநாய்களுக்குச் சோறிடுவது, பிஸ்கட் சப்பாத்தி, தோசை, இட்லி கொடுப்ப்பது உண்டு. அதைத் தவிர்க்க முடியாது. தெருநாய்களெல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ஆஸ்பத்திரி.
பத்தியம் வடிச்சுப் போடாத குறைதான்.
என்னைப் போன்ற நாய் நேசர்களுக்குத்தான் இந்தப் பதிவின் அருமை புரியும் முதல் அறிமுகத்திற்குப் பின் அவன் இவன் எனவே சொல்லிப் போயிருந்தால் இன்னும் சிறபாபாக
பதிலளிநீக்குஇருந்திருக்குமோ ?
மனம் கவர்ந்த பதிவு
நாய் நேசன்..கல கல கல்ப்பான பகிர்வுகள்..
பதிலளிநீக்கு//சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லைதான்.. ஒன்லி ரஸ்க், பிஸ்கட், பன்//
பதிலளிநீக்குஅடுத்தாப்ல பிஸ்ஸா, பர்கரும் கேக்குமாயிருக்கும் :-)
கீதா மேடம்,
பதிலளிநீக்குஒரு ஒற்றுமை..நாங்களும் வீட்டுக்குள்ளேயே வளர்த்த நாயின் பெயர் மோதிதான். வெள்ளை ராஜபாளையம் கிராஸ். அப்புறம் அடுத்து வளாததற்கு இதன் நினைவாகவே ஸாத்தி என்றும் பெயரிட்டிருந்தோம். நீங்கள் சொல்வது போலவே அவற்றை தனியே விட்டு விட்டு செல்ல முடியாத பிரச்னைகள், மற்றும் அவை எங்கள் மடியிலேயே உயி நீத்த கடைசி தருணங்களைத் தாங்க முடியாமல் வீட்டுக்குள் நாய் வளர்ப்பதை நிறுத்தி விட்டோம். அதன் பிறகும் நீண்ட பல வருடங்களுக்குப் பின் மகன் ஆசைக்காக ஒரு நாய் வளர்த்து அதைக் கொண்டு விட்ட சோகத்தை 'எங்கள் ப்ளாக்'கிலேயே 'நாய் மனம்' என்ற பெயரில் கதையாக்கியிருந்தோம். இந்த இரண்டும் தெருவில் பொதுவாக வளைய வருபவைதான். ஆனாலும் செல்லங்கள்!
ரமணி சார்....
சேம் ப்ளட்! நன்றி நீங்கள் சொல்வதும் சரி. அப்புறம் அவன் இவன் என்று குறிப்பிட்டிருக்கலாம். (ஆனால் இவை இரண்டையும் அவள் இவள் என்றுதான் குறிப்பிட வேண்டும்!) .எங்களை ஊக்குவிக்க உங்களை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்.
நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.
அமைதிச்சாரல் said, //அடுத்தாப்ல பிஸ்ஸா, பர்கரும் கேக்குமாயிருக்கும் :-)//
கேட்டாலும் கொடுத்து விடுமளவு எங்கள் ஏரியாவில் ஜிம்மி ரொம்பச் செல்லம்! போதாக்குறைக்கு மாசமாக வேறு இருக்கிறது!! :))
போதாக்குறைக்கு மாசமாக வேறு இருக்கிறது!! :))//
பதிலளிநீக்குபின்னே என்ன, மசக்கைக்கு பிஸ்ஸாவும் பர்கரும் சாப்பிடட்டும்! எங்க ஏரியா பெண் நாய் ஒண்ணுக்குப் பிரசவம் சிக்கலாக, எஸ்பிசிஏவுக்குத் தொலைபேசி ஆம்புலன்ஸ் வரவழைத்து அவங்க கொண்டு போய்ப் பிரசவம் பார்த்துக் கொண்டு விட்டாங்க. இது பத்து வருடங்கள் முன்னாடி. இப்போல்லாம் கூப்பிட்டால் வரதில்லை. :((((
இப்போதைக்கு எலிகள் தான் எங்க வீட்டிலே பிரசவத்தை வைச்சுட்டு இருக்கு. :P:P:P
கிராமத்திலே படிக்கறச்சே என் கணவர் வளர்த்த நாயோட பெயர் ஜிம்மினு சொல்வார்,. அதுக்கப்புறமா ப்ளாக்கி, ப்ரவுனினு நிறையப் பேர் வந்துட்டு வந்துட்டுப் போனாங்க; ஆனால் குடும்பத்தையே கவர்ந்தவன் மோதி மட்டுமே. கம்பீரம்! நல்ல கறுப்பு! தெருவையே அலற அடிப்பான். ஃபோட்டோ இருக்கு, ஒரு நாள் எடுத்துப் போடறேன். எனக்காக அதை எடுத்து உள்ளே வைச்சிருக்காங்க; என்றாலும் வெளியே ஒண்ணு இருந்தது. இந்த வீட்டுக்கு வரச்சே அதையும் உள்ளே வைச்சாச்சு.
பதிலளிநீக்குகீதா மேடம்...எப்படி இவ்வளவு வேகமாக பதில்? கமெண்ட்ஸ் உங்கள் மெயிலுக்கு வருகிறதா என்ன?! ப்ளூ கிராஸ் காரர்களிடம் இரண்டு முறை இதே மாதிரி அனுபவம் உண்டு. திரும்பக் கொண்டு வந்து எல்லாம் விடுவதில்லை. முதலில் அவர்களை வர வைப்பதே பெரும்பாடு.
பதிலளிநீக்குநம் தமிழ் நாட்டில் நாய்களுக்கு ஒரு பொதுப் பெயர் உண்டு......மணி! :))
hihihi கமெண்ட்ஸ் எல்லாம் மெயிலுக்கு வரதே இல்லை; கூகிள் சதி பண்ணிட்டு இருக்கே! உங்கள் ப்ளாகில் தான் இருக்கேன்; கொஞ்ச நேரமா! :))))) அதான் உடனடி பதில்! :)))))
பதிலளிநீக்குஉண்மையில் உங்கள் பதிவுகளில் மிக மிக மிக மிகப் பிடித்த பதிவு.மனம் நெகிழ ஏதாவது ஆயிடுமோ என்று நினைத்தபடி பயந்துகொண்டு வாசித்தேன்.நல்லவேளை.சந்தோஷம்.இவர்களின் இழப்புக்கள் மனிதரைவிட வலிமிகுந்தது !
பதிலளிநீக்குஇனி யாரும் எப்பவும் மிருகங்களுக்கு ஒரு “ர்”சேர்த்துக்கொள்ளுகள் தயவு செய்து.நாயார் பூஸார் என்று !
ஸ்ரீராம்....ஏன் இங்கு வருபவர்கள் ஓட்டுப் பட்டையைக் கவனிப்பதில்லை.உங்கள் சார்பில் கேட்டு வைக்கிறேன்.
”எல்லாரும் ஓட்டுப் போட்டிட்டுப் போங்கோ.ஜிம்மியும்,பிரௌனியும் கோவமா இருக்காங்க” !
எங்க வீட்ல “தம்பி”ன்னு ஒருத்தன் இருந்தான்.அவன் ஞாபகம்.நான் ஊரை விட்டு இங்கு வந்தபின்னும் போனில் கதைப்பான்.உண்மையில் நான் கூப்பிட்டால் சந்தோஷமாகவோ துக்கமாகவோ அவன் குரல் வரும்.அம்மா சொல்லுவா சுத்திச் சுத்தி என்னவோ சொல்றான் என்று.17 வயதுவரை வாழ்ந்த சொந்தம் என் தம்பி !
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் said //உங்கள் ப்ளாகில் தான் இருக்கேன்; கொஞ்ச நேரமா! //
பதிலளிநீக்குபதிவுகள் உருளும் சத்தம் கேக்குதேன்னு நினைச்சோம்....நீங்கதானா...என்ன தேடினீங்க? என்ன கிடைச்சுது?!!
நன்றி ஹேமா....
உங்கள் நினைவுகளை மீட்டியதில் எங்களுக்கு சந்தோஷம்.ஏன் வோட்டுப் போட மாட்டேங்கறாங்கன்னு எங்களுக்கும் புரியலை ஹேமா...! :))
//பதிவுகள் உருளும் சத்தம் கேக்குதேன்னு நினைச்சோம்....நீங்கதானா...என்ன தேடினீங்க? என்ன கிடைச்சுது?!!//
பதிலளிநீக்குசரியாப் போச்சு போங்க; அந்த நேரம் தூங்கிட்டு இருப்பீங்க ஐந்து பேரும்; சத்தம் போடாம வந்துட்டுப் போகலாம்னு நினைச்சா! :))))))))))
அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். சீனியர் பிரவுனியைப் பற்றிய ‘நாய் மனம்’ பகிர்வு நெகிழ்வான ஒன்று. நான் மறக்காத பதிவுகளில் ஒன்றும்.
பதிலளிநீக்கு//”எல்லாரும் ஓட்டுப் போட்டிட்டுப் போங்கோ.ஜிம்மியும்,பிரௌனியும் கோவமா இருக்காங்க” !//
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை ரொம்ப காலம் கழித்தே சரியாக இயங்க ஆரம்பித்தது உங்கள் தளத்தில். .இன் மாற்றத்துக்குப் பின் ஓட்டுப்பட்டை தமிழ்மணத்தில் இணைய மாட்டேன்கிறதே:(.
நாய்க்கும் எனக்கும் வெகுதூரம்.
பதிலளிநீக்குஎல்லா தெருவிலும் நாய்கள் உள்ளன. ஆனால் யாருக்கும் எழுத தோன்றாததை அருமையாக எழுதி உள்ளீர்கள்.
//தமிழ் உதயம் said... நாய்க்கும் எனக்கும் வெகுதூரம். //
பதிலளிநீக்குநானும் தமிழ் உதயம் ரகம் தான்.
பெங்களூரில் டிசம்பர் மார்கழி குளிர் மட்டும் அல்லது எப்போதுமே "ஜல்பன்சாவாக" இருக்கும் நாய்கள் நாங்கள் இருந்த மாருதி சேவா நகர், லிங்கராஜபுரம் மற்றும் பணஷங்கரி மூன்றாம் ஸ்டேஜ் எல்லாம் இன்னும் அபரிமிதமாக சுற்றும். பாதி ராத்திரி (பெங்களூர் மக்கள் எங்கே போவார்கள்) எல்லாம் முடிந்து வீட்டுக்கு வரும்போது கைநெடிக் ஹோண்டாவில் காலை தூக்கி ஹாண்டில் பாரில் வைத்து சர்க்கஸ்க்காரன் மாதிரி வண்டி ஒட்டி உயிரை பிடித்துக்கொண்டு வீடு வந்து சேருவோம் !!
அது என்னமோ அவ்வளவு வருடம் அங்கும் இருந்தும் ஒரு நாயும் எங்களிடம் பழகி குறைத்து துரத்தாமல் இருந்ததில்லை !!
நாய் மனம் சுட்டி கொடுங்க. தேடினேன் கிடைக்கவில்லை; பதிவுகளை ஒழுங்கா அடுக்கி இருக்கீங்களா, கலைக்க மனம் வரலை! :))))அப்புறமாப் பதிவுகள் உருண்டனனு சொல்வீங்க. :P:P:P
பதிலளிநீக்குஇதோ சுட்டிகள்:
பதிலளிநீக்குநாய் மனம் 1
நாய் மனம் 2
இந்த ஜிம்மியும் ப்ரௌனியும் நன்றாக வளரட்டும். எங்கள் ஏரியாவில் கறுப்பு நாயார் இருக்கிறார். சரியாக இரண்டு மணிக்கு ஊளையிட ஆரம்பித்தாரனால் நான் நாலு மணிக்கு எழுந்ததும் நிறுத்திவிடுவார்;)
பதிலளிநீக்குஎனக்கு ஓமன்,பலவித சினிமா ஞாபகங்கள் இன்னும் விலகாததால் கொஞ்சம் பயம்.
மகள் வீட்டுப் பக்கத்துவீட்டு ரெக்ஸ் மற்றவர்கள் மேல் பாயவே பழ்ழகி இருக்கிறது. அதை வளர்க்கும் போலண்த் பாட்டியின் மனம் நோகாமல் இருக்க்வேண்டும் என்பதற்காக் இவர்கள் போலீசில் புகார் கொடுக்காமல் இருக்கிறார்கள்.
உங்கள் நண்பர்கள் மிகவும் நல்லவர்களாகத் தெரிகிறார்கள்.நன்றாக இருக்கட்டும்.
நன்றி ராமலக்ஷ்மி...நாய் மனம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தது எண்டு இங்கு மட்டும் இல்லாமல், வலைச் சாரத்திலும் அறிமிகப் படுத்தி, அங்கும் சொல்லியிருந்தீர்கள். நன்றி. வோட்டுப் பட்டை ஒரு வழியாய் வந்த நேரத்தில் மறுபடி காணாமல் போனது! எங்களுக்கும் அதற்கும் ராசியில்லை போலும்! :))
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்....
சாய்...ஸ்கூட்டியில் ஏறி அதை விட்டுப் பறந்து விட்டு, நாய்களுக்கும் எனக்கும் வெகு தூரம் என்று சொன்னால் எப்படி?! :)) ஆனால் ஒன்று நாய் பற்றிய நம் பயமே அதனிடம் நாம் காட்டும் ஜாக்கிரதை உணர்வாய் மாறி நம் செயல்களில் அது தெரிய, அது உஷாராகிறது...அவ்வளவுதான்! நடக்கும் நினைவுகளில் இந்த விவரம் வந்திருக்கும் பாருங்கள்!
நன்றி வல்லிசிம்ஹன்...நாய்களைப் பார்க்கும்போதே தெரிந்து விடும் அவை சாதுவா முரடா என்று...அதை வைத்து நம் நடவடிக்கையை வைத்துக் கொள்ளலாம்! :))))
உடனே உடனே பெயர் வைத்ததின் விளைவு - பிரவுன் நாயாருக்கு ஜிம்மி என்றும், பாதி பிரவுன் நாயாருக்கு பிரவுனி என்றும் பெயர் அமைந்துவிட்டது. தமிழ் உதயம், சாய், வள்ளி சிம்ஹன் போல அடியேனுக்கும் நாயென்றால் பயம். பேய்க்குக் கூட பயப்படமாட்டேன்..! இங்கிருக்கிற படங்களைப் பார்த்தாலே நமக்கு சிலிர்க்கிறது..! ஹேமா சொன்னதுபோல் நாயார் என்று மரியாதையாக எழுதியுள்ளேன்.. இப்போதாவது தெரு நாயார் என்னை முறைக்காமலும் மற்றும் குரைக்காமலும் இருக்கிறாரா பார்ப்போம்..!
பதிலளிநீக்குஇதெல்லாம் படிக்க பிடிக்காத நாய்களைப்பற்றி கவலைப் படாம இருங்க.
பதிலளிநீக்கு