புதன், 28 மார்ச், 2012

நாக்கு நாலு முழம்... த கு மி வ

                          
பத்ரகாளி பாட்டு நினைவில் இருக்கிறதா..."தஞ்சாவூர்க் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி.... தலை மேல வச்சுண்டு நின்னேனே ஏங்கி..." 
                   
அது மாதிரி,
                     
"தஞ்சாவூர்க் குடைமிளகாயைப் படி போட்டு வாங்கி...." என்று பாடாத குறையாய் தஞ்சாவூர்க் குடைமிளகாய், ஒரு கடையில் கிலோ எழுபது ரூபாய் என்றும் இன்னொரு கடையில் படி இருபத்தைந்து ரூபாய் என்றும் மாம்பலத்திலிருந்து வாங்கி வந்து, 
              
நன்றாக தண்ணீர் விட்டு அலசி, காம்பை அளவாக வெட்டி, ஒரு சின்னக் கீறல் போட்டு,     
               
                   
கல்லுப்பு வாங்கி அளவு பார்த்து, மிளகாய் / உப்பு என்று மாறி மாறி ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து,
                         
மிளகாய் முழுகும் அளவு தயிர் வேண்டுமென்பதால் பால் வாங்கி தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி, உறைகுத்தி வைத்து,
               
                   
பனிரெண்டு மணி நேரம் தாண்டிய பின் அல்லது அடுத்த நாள் அவ்வப்போது குலுக்கிக் குலுக்கி மூடிவைத்த மிளகாயை எடுத்து (தேவைப் பட்டால்) புளி மிளகாய்ப் போட கொஞ்சம் தனியே எடுத்து வைத்து,
                 


ஒரு பாகத்தில் உறைந்த தயிரை முக்காலோ அல்லது முழுதுமோ முழுகுமளவு ஊற்றி வைத்து விட்டு,
              
அப்புறம் இன்னொரு பாத்திரத்தில் புளி மிளகாய்ப் போட எடுத்து வைத்திருக்கும் மிளகாயில் மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி சற்று தூவி, அப்புறம் மிளக்காயக்குப் போட தேவைக்குத் தக்கபடி புளி எடுத்து கெட்டியாகக் கரைத்து (தோசை மாவு பதத்தில் கரைப்பது முக்கியம்!) அதை மிளகாயில் ஊற்றி மூடி வைத்து விட்டு,



அவ்வப்போது குலுக்கி விட்டுக் கொண்டு, அன்று இரவே சாப்பிடும்போது மிளகாய்ப் பாத்திரத்தைத் திறந்து,  வரும் வாசனையை வைத்து மோர் சாதம் ரெண்டு வாய் அதிகமாக உள்ளே தளளி...



அடுத்த நாள் முதல் மோர் சாதத்துக்கு,  ஊறிக் கொண்டு வரும் மிளகாய்த் தொட்டுக் கொண்டு சாப்பிடும் சுவை இருக்கிறதே... அதை எழுத்திலும், படத்திலும் கொண்டு வர முடியாது!


அடுத்தடுத்த நாள் முதல், மிளகாயை தாம்பாளத்தில் வைத்து வெய்யிலில் வைக்க ஆரம்பித்து விட வேண்டும். இல்லா விட்டால் புழு வர ஆரம்பித்து விடும். காயும் ஒவ்வொரு பதத்திலும் ஒவ்வொரு ருசி.... ஸ்.... ஸ்.... ஆ....



நன்றாகக் காய்ந்து மொட மொட என்று ஆனபின் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து விட்டால் தேவைப் படும்போதெல்லாம் எண்ணெயில் வறுத்து மோர் சாதத்துக்கோ, உப்புமாவுக்கோ, மோர்க்கூழுக்கோ தாளிதம் செய்யும்போது அதில் இந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொண்டு அவற்றைச் செய்து  சாப்பிடலாம். அரிசி மாவு மோர் உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ் போன்றவற்றில் இவற்றைப் போட செம டேஸ்ட்தான் போங்க...



ஜனவரி இறுதி முதல் மார்ச் வரைதான் இதற்கு சீசன்.... கிட்டத் தட்ட இதே நேரம் மாவடு சீசனும் தொடங்கி விடுகிறது....
       
என்ன... நீங்களும் மிளகாய் வாங்கக் கிளம்பிட்டீங்களா...!  

                         

25 கருத்துகள்:

  1. அந்த நாள் ஞாபகம்/சுவை நெஞ்சிலே(சேச்சே, வாயிலே) வந்ததே, நண்பரே, நண்பரே, நண்பரே

    என்னோட த.எ. சிவாஜி பாட்டைப்போய்ச் சொல்ல வேண்டி வந்திருக்கு. :P:P:P:P வேறே பாட்டே கிடைக்கலை.

    பதிலளிநீக்கு
  2. //ஜனவரி இறுதி முதல் மார்ச் வரைதான் இதற்கு சீசன்....//

    இவ்ளோ சீக்கிரம் சொன்னதுக்கு மிக்க நன்றி.. (நாள் : மார்ச் 28)

    பதிலளிநீக்கு
  3. தலைப்பு ரெம்ப சரியா இருக்கு. எதையும் நல்லா ரு(ர)சிப்பிங்க போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. //அதை எழுத்திலும், படத்திலும் கொண்டு வர முடியாது!//

    கொண்டு வந்துட்டீங்க:)!

    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. கீதா மேடம், நீங்கள் இதில் எக்ஸ்ட்ரா டிப்ஸ் தருவீர்கள் என்று எதிர்பார்த்தோம்....

    ஸாரி மாதவன்...இன்னும் கூடக் கடைகளில் கிடைக்கிறது....பதிவு சேமிப்பில் நீண்ட நாள் தூங்கி விட்டது...மன்னிக்கவும்! :))

    ரமேஷ் இந்த ஐட்டம் சாப்பிட்டிருக்கீங்களோ.... கடைகளில் கிடைப்பது நீள மிளகாய்தான் கிடைக்கும். அதுவும் ஒரே உப்பப்ப்பாக இருக்கும்!!

    ருசித்து, ரசித்ததற்கு நன்றி ராமலக்ஷ்மி...

    பதிலளிநீக்கு
  6. மோர் மிளகாயை வறுத்து, சுடச்சுட தொட்டுக்கொண்டு, தயிர் சாதம் சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது, படங்களையும் வர்ணனைகளையும் படிக்கும் போதே!

    நாக்கில் நீர் ஊற வைத்து விட்டீர்களே;)

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    [பத்ரகாளி பாட்டையும் அருமையாக கோர்த்து விட்டது தனிச்சிறப்பு தான்]

    பதிலளிநீக்கு
  7. ஆஹா.. மோர் மிளகாய். தஞ்சாவூருக்கு நேரிடையா ஃப்ளைட் சர்வீஸ் இல்லைங்கறதால இங்கியே மிளகாய் வாங்கியாரப்போறேன் :-)

    பதிலளிநீக்கு
  8. நன்றி வைகோ சார்...உங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    எல்லா ஊரிலும் தஞ்சாவூர்க் குடைமிளகாய் என்று கேட்டால் மார்க்கெட்டில் கிடைக்கும் என்றுதான் நினைக்கிறோம் அமைதிசசாரல்..ஆனால் நாங்க சொல்றது தமிழ்நாட்டுல! உங்க ஊர்ல எப்படின்னு நீங்கதான் சொல்லணும்!

    மிளகாய் வாசனை உங்களையும் இழுத்து வந்ததில் ரொம்பச் சந்தோஷம் வானம்பாடிகள் பாலா சார்... நன்றி.

    பதிலளிநீக்கு
  9. புளி மிளகாய் மட்டும் கொஞ்சம் வித்தியாசம். மத்தபடி மோர் மிளகாய் ஓகே. புளி மிளகாய் நாங்க இப்படிப் போட மாட்டோம். அப்போ வேறே வேலையா வந்ததிலே படிச்சுட்டு உடனே ஜூட் விட்டுட்டேன். :)))))

    பதிலளிநீக்கு
  10. தஞ்சாவூர்க் குடமிளகாய்னு கோயம்பேட்டிலே மட்டும் கிடைக்குதுனு நினைக்கிறேன். இங்கெல்லாம் கிடைக்கிறதில்லை. (அம்பத்தூரில்)

    பதிலளிநீக்கு
  11. அப்போவே கேட்க நினைச்சு விட்டுப் போச்சு, அதென்ன பத்ரகாளி பாட்டு?? காளியம்மன் மேலே மிளகாயைக் குறிச்சுப் பாட்டு ஏதேனும் இருக்கா என்ன??

    பதிலளிநீக்கு
  12. // புளி மிளகாய் நாங்க இப்படிப் போட மாட்டோம்.//

    அநியாயம்...எப்படின்னு சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லுனளேன்.. உங்கள் பதிவில்தான் சொல்லப் போறீங்களோ...! :))
    பத்ரகாளிப் பாட்டு தஞ்சாவூரை நினைவுபடுத்த அவ்வளவுதான் வேற சம்பந்தம் ஒண்ணுமில்லை! கதம்பத்துக்கு பதிலா குடைமிளகாய்!

    பதிலளிநீக்கு
  13. //// புளி மிளகாய் நாங்க இப்படிப் போட மாட்டோம்.//

    புளிக்காயச்சல் போல புளியைக் காய்ச்சி சுண்ட விட்டு மிளகாயை அதில் போட்டு செய்யும் வகை பற்றிச் சொல்கிறீர்களோ....அதுவும் செய்வதுண்டு...குறிப்பாய் பிஞ்சாய்ப் பொறுக்கி, நீள மிளகாய்!

    பதிலளிநீக்கு
  14. மோர்மிளகாய் பொரிச்சு வச்சுக்கொண்டு ஊறுகாய் போட்டுப் பிசைந்த பழைய சோறு....அச்சோ...வாயூறுது !

    பதிலளிநீக்கு
  15. நாங்கள் அந்தக் காலத்தில் தஞ்சாவூரிலேயே வாங்கின குடை மிளகாய் அடியில் சப்பையாய் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒருக்கால் நீங்கள் போட்டுள்ள படம் படி 25 கு வாங்கிய குண்டூர் மிளகாய் என்று நினைக்கறேன். மிளகாயை யாரும் பிஞ்சாகப் பறித்து வியாபாரம் செய்வதில்லை இன்னும் கொஞ்சம் நன்றாகத் தேடிப் பார்க்கலாம் என்றால் சீசன் முடிந்து விட்டது என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  16. பத்ரகாளிக்கும் தஞ்சாவூருக்கும் என்ன சம்பந்தம்னு புரியலை. ம.கு. அது தெரிய வந்தால் தான் புளிமிளகாய் பத்திச் சொல்வேன். யாரு அந்த பத்ரகாளி?? தஞ்சாவூரில் பத்ரகாளிக்குக் கோயில் இருக்கிறதாத் தெரியலை. பங்காரு காமாக்ஷியும், புன்னைநல்லூர் மாரியம்மனும் தான் பிரபலம்.ம்ம்ம்ம்ம்ம்????????

    பதிலளிநீக்கு
  17. குரோம்பேட்டை குறும்பன்28 மார்ச், 2012 அன்று PM 7:01

    பத்ரகாளி என்று ஒரு தமிழ்ப் படம். எழுபதுகளில் வந்தது. சிவகுமார், ராணி சந்திரா ஆகியோர் நடித்தது. படம் வெளியான பின், ராணி சந்திரா ஒரு விமான விபத்தில் காலமானார். (கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை என்ற நல்ல பாட்டும் இந்தப் படத்தில் உண்டு) பதிவாசிரியர் சொல்லியிருக்கும் பாட்டின் பல்லவி ஒத்தை ரூபா உனக்குத் தாரேன் என்று நினைக்கின்றேன். சரியா?

    பதிலளிநீக்கு
  18. நன்றி ஹேமா...

    //பத்ரகாளிக்கும் தஞ்சாவூருக்கும் என்ன சம்பந்தம்னு புரியலை//

    //பல்லவி ஒத்தை ரூபா உனக்குத் தாரேன் என்று நினைக்கின்றேன். சரியா?//


    படம் சரி..பாடல் "வாங்கோன்னா...அட வாங்கோன்னா...கேட்டேளே அங்கே அதைப் பார்த்தேளா இங்கே.." என்று ஆரம்பிக்கும் பாடல்! அதில் ஒரு சரணத்தில் வரும் வரிகள் அவை...!

    பதிலளிநீக்கு
  19. எனது நண்பர் மோர் மிளகாயை வாசனைக்காக எந்த உணவில் வேண்டுமானால் போட்டுவிடுவார். முட்டை கோஸ் செய்தாலும் மோர் மிளகாயை வறுத்துப் பொடித்துவிடுவார்.

    பதிலளிநீக்கு
  20. இதெல்லாம் சாப்பிட நாக்கு நாலு முழம் இல்லை, எட்டு முழம் நீளும். :)
    அட, அட, அட, அடா பதிவே பிரமாதமா ருசியா இருக்கே. போறாதுக்கு படத்தை வேற போட்டு ரொம்ப படுத்தறீங்க.
    சின்ன வயசுல நாங்க குடியிருந்த வீட்ல அத்தனை பேருமே கும்பகோணம், திருச்சிதான். இதுல எங்க பெரியம்மா, பாட்டி, அப்பாவோட மாமா, மாமி இப்படி எல்லாருமே ஒரே வீட்ல வேற வேற போர்ஷன்ல குடியிருந்தாங்க. எல்லாருமே ரொம்ப ரொம்ப நல்லா சமைப்பாங்க. அது ஒரு அக்ரஹாரம் மாதிரிதான் இருக்கும். மொட்டை மாடி போனாலே முறம் முறமா பலதும் வெயில்ல காஞ்சுண்டு இருக்கும். எப்பவுமே மோர்மிளகாய், ஆவக்கா, மிளகாய் தொக்கு, மாவடு, மாகாளி, கிடாரங்க இப்படி எல்லாமே வீட்ல இருந்துண்டே இருக்கும். அப்பறம் என்ன கேக்கணுமா! நல்லா சாப்பிடுவேன். ஆனா சுத்தமா சமைக்க
    தெரியாது, வரவும் வரல,இன்னி வரைக்கும். ;)

    இப்படி எல்லாம் பதிவை போட்டு ஜொள்ளு விட வைக்கறீங்களே!

    பதிலளிநீக்கு
  21. ரொம்ப லேட் நான்! எல்லாரும் எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டாங்க. அதனால பதிவைப் படிச்சதுலயும், படங்களைப் பாத்ததுலயும் விட்ட ப்ளச்... ப்ளச்..! சோட கழண்டுக்கறேன் நான்!

    பதிலளிநீக்கு
  22. இப்ப எல்லாம் பாக்கெட் அம்பிகா மோர் மிளகாய் தான்.
    மோரில் மிளகாயைப் போட்டு வைத்தால் தினம் பசங்க காலி பண்ணிடும். வெறும் மிளகாய்ப் பாவமாப் பார்த்துண்டு இருக்கும். இவர் அதையும் தொட்டுப்பார்.
    மோர்மிளகாய் இருந்தால் ஆயுசு பூரா தயிர்சாதம் சாப்பிட நான் ரெடி.
    என்ன ஒரு பதிவு. நாளுக்கு நாள் மெருகேறிவரும் எங்கள் ப்ளாகிற்கு ஜே:)

    பதிலளிநீக்கு
  23. மாவடு போட்டாச்சு. எங்க வீட்டு மாவடு. யாருக்காவது மாங்காய் வேணுமானால் வீட்டுக்கு வரவும். பறித்துத்தர ரெடி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோ !
    இன்றுதான் உங்கள் பக்கம் வரக்கிடைத்தது நீங்கள் இப்படி எங்கள் ஊர் மோர் மிளகாய் போட்டதை ஞாபகப் படுத்தும் பதிவு பார்த்து ஆட இனி எங்க போறது என்ற ஏக்கம் வருகின்றது.சரி ரங்கநாதன் தெரிவில் பிறகு பார்ப்போம்.குடைமிளகாய் பாட்டில்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!