வெள்ளி, 29 ஜூன், 2012

அலேக் அனுபவங்கள் 06:: சிபாரிசு தேவையா, இல்லையா?

             
ஒரு வேலையில் சேரவேண்டும் என்று நமக்கு ஆர்வம் இருக்கின்றது. அந்த வேலையில் சேர, சிபாரிசு என்கிற ஒன்று தேவையா இல்லையா என்று என்னைக் கேட்டால், 'சிபாரிசு நிச்சயம் தேவை' என்று (அடித்துக்) கூறுவேன். 
    
சில 'ஆட்கள் தேவை' விளம்பரங்களில், 'சிபாரிசு கூடாது; எந்த வகையிலாவது சிபாரிசு செய்ய முயற்சி செய்பவர்களின் விண்ணப்பங்கள் தயவு தாட்சண்யம் இன்றி நிராகரிக்கப்படும்.' என்பது போன்ற எச்சரிக்கைகளை முன் காலத்தில் நிறைய கண்டது உண்டு. 
           
ஆனால், ஒரு கம்பெனியில் சேர்ந்த பிறகு, அதன் உள்ளே என்ன நடக்கின்றது என்று தெரிந்த பின்னால், அதுவும் அசோக் லேலண்ட் போன்ற ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் உள்ள ஒரு நிறுவனத்தில், முன்னே பின்னே தெரியாத ஆட்களை, வேலைக்கு எடுத்துக் கொள்வது (மேனேஜர் & மேலே உள்ள லெவல் தவிர) மிகவும் அபூர்வம் என்பதைத் தெரிந்துகொண்டேன். 
                 
எழுத்துத் தேர்வு நிலை வரை, கல்லூரியில் நல்ல மதிப்பெண் எடுத்த எல்லோருக்கும் அழைப்பு வரும். அதில் தேறியவர்கள், நேர்முக தேர்வில் வடிகட்டப் படுவார்கள். இந்த நிலை வரும்பொழுதே, சிபாரிசு செய்யக் கூடியவர்களை அணுகி, அவர் மூலமாக நேர்முகத் தேர்வு செய்பவர்களிடமோ அல்லது எந்தப் பகுதிக்காக நடக்கின்ற நேர்முகமோ, அந்தப் பகுதியின் தலைமை ஆட்களிடமோ நம்மைப் பற்றிச் சொல்லுபவர்கள் கிடைத்தால், மிகவும் நல்லது. (நன்கு கவனிக்கவும் - நான் சொல்வது சிபாரிசுக் கடிதம் யாரிடமிருந்தாவது பெற்று,- To whomsoever it may concern - type அதை இன்டர்வியூ செய்பவரிடம்  கொடுப்பது அல்ல.) இதை நான் என்னுடைய அந்தக் கால அனுபவத்திலிருந்து சொல்கின்றேன். இந்தக் காலத்திற்கும் இது சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். 
                     
நான் அசோக் லேலண்ட் எழுத்துத் தேர்வுக்காக வந்திருக்கின்றேன் என்று தெரிந்தவுடனேயே அண்ணன் குடியிருந்த போர்ஷனுக்குப் பக்கத்தில் குடியிருந்தவர்களும், அண்ணனுடைய அலுவலகத் தோழர்களும், அண்ணியுடன் பணி புரிந்த சக ஆசிரியைகளும், மற்றும் என்னுடைய அண்ணன் வீட்டுக்கு விசிட் செய்த நண்பர்களும், உறவினர்களும் கூறிய சில கருத்துகள்: 
               
# அங்கே நல்ல சம்பளம் கொடுப்பார்கள்.
# நல்ல பெர்சனாலிட்டி இருக்கின்ற ஆட்களைத்தான் அங்கு வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். 
# அங்கே யாராவது தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலையில் சேர முடியும். 
# அங்கே காண்டீன் உணவு நன்றாக இருக்கும். 
# காலங்காத்தால எழுந்து வேலைக்குப் போகத் தயாராயிருக்கணும். நைன் டு பைவ் எல்லாம் அங்கே சரிப்பட்டு வராது! 
              
என்னைப் பொறுத்தவரை, அதிகாலை எழும் பழக்கம் எனக்கு பதின்ம வயதிலேயே தொடங்கிவிட்டது. ஆமாம் - வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற தொழிற்பள்ளிக்கூடம் - காலை எட்டு மணிக்கு வகுப்புகள் ஆரம்பம். ஏழே முக்காலுக்குள் பள்ளிக்கூடம் சென்றுவிடுவேன். ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவேன். 
                      (படத்தில் இருக்கும் கண்கள் யாருடையது? )
சிபாரிசுகள் பிடித்த அனுபவங்கள் பலப்பல. எழுத்துத் தேர்வு எழுதி முடித்தவுடன், அந்த எழுத்துத் தேர்வு நடந்த இடம் (சென்னை - புரசைவாக்கம் - சி என் டி இன்ஸ்டிடியூட் - ஜுபிலி ஹால்.) நடந்த தேதி (ஆகஸ்ட் 29 - 1971 என்று ஞாபகம்). என் பெயர், ஊர், பாலிடெக்னிக், எழுத்துத் தேர்வில் என்னுடைய விடைத் தாளில் நான் எழுதிய சுய விவரங்கள் எல்லாவற்றையும், விரல் நுனியில் வைத்திருந்தேன். அந்தக் கால கட்டத்தில், யாருடன் பேசினாலும், அவர்களிடம் அறிமுகப் படலம் முடிந்தவுடன், நான் கேட்கும் முதல் கேள்வி, 'உங்களுக்கு அசோக் லேலண்டில் யாரையாவது தெரியுமா? அல்லது உங்கள் நண்பர்களில், உறவினர்களில் யாருக்காவது அ லே வில் தெரிந்தவர்கள் யாராவது உண்டா?' அவர்களிடமிருந்து 'ஆம்' என்று பதில் வந்தால், நான் கேட்கும் அடுத்த கேள்வி, 'அவரை எனக்கு அறிமுகம் செய்து வைப்பீர்களா? எப்பொழுது அவரை சந்திக்கப் போகலாம்?' 
     
இந்த வகையில் நான் (தெரிந்தவர்கள் மூலம்) வலைவிரித்துப் பிடித்தவர்கள்: 
                   
# அசோக் லேலண்டில் - உதவி ட்ரைனிங் ஆபீசர் ஆக இருந்த ஒருவர். 
# அசோக் லேலண்டில் வெல்ஃபேர் ஆபீசராக இருந்த ஒருவர். (இவர் இப்பொழுதைய அரசியல் பெரும் புள்ளி ஒருவரின் காட் ஃபாதர் லெவலுக்கு இருந்தவர் என்பது பிறகு தெரிந்துகொண்ட விஷயம்) 
#  அசோக் லேலண்டில்  இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ் ஆக இருந்த ஒருவர். 
# அசோக் லேலண்ட் காண்டீனுக்குக் காய்கறி சப்ளை செய்பவர் ஒருவர். 
                       
இதில், முதலில் சொல்லப்பட்ட மூவரின் காதுகளுக்கும், என்னைப் பற்றிய விவரங்கள் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. 
****************************************************   
             
அசோக் லேலண்டில் நான் வாங்கிய முதல் பணக் கவரில் இருந்த தொகை எவ்வளவு தெரியுமா? ஏழு ரூபாய்கள்! ஆம். நான் அப்ரெண்டீசாக வேலையில் சேர்ந்தது டிசம்பர் ஒன்பதாம் தேதி, 1971. 
 
           
ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் வாரத்தில், அதற்கு முந்தைய ஆண்டில் எடுக்கப்படாத லீவு நாட்களுக்கு என்காஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்களாம். முதல் மாத சம்பளம் வருவதற்கு முன்பே, லீவ் என்காஷ்மெண்ட் ஆக, ஒருநாள் சம்பளம் கைக்கு வந்து சேர்ந்தது. பேஸிக் நூறு ரூபாய், டி ஏ நூற்றுப் பத்து ரூபாய். மொத்தம் இருநூற்றுப் பத்து ரூபாய். ஒரு நாள் சம்பளம் ஏழு ரூபாய். அந்த சம்பளக் கவரையும், ஐந்து + இரண்டு ரூபாயையும் பல வருடங்கள் அப்படியே வைத்திருந்தேன். 
      

வியாழன், 28 ஜூன், 2012

என்ன தவம் செய்தோமோ!

                       
எங்கள் ப்ளாக் வலைப்பதிவு, இன்று மூன்று (வயது) ஆண்டுகள் முடித்து, நான்காவது ஆண்டில் (வயதில்) நுழைகிறது.

    
நர்சரி வகுப்பில் சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். ஆசிரியர் குழுவில் உள்ள kg எல்லோரும், LKG, UKG, Junior KG, Senior KG, என்று வசதிக்குத் தகுந்தாற்போல், பக்கத்தில் உள்ள பள்ளிகளில் அப்ளிகேஷன் போட்டு, இண்டர்வியூ, ரிட்டன் டெஸ்ட் எல்லாம் செய்து அட்மிசன் கிடைத்ததும், அந்த நல்ல செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுவார்கள்! 
            
தமாஷ்கள் இருக்கட்டும், சீரியசாகவே யோசனை செய்யும் நேரத்தில், 'என்ன தவம் செய்தேனோ, என்னவென்று சொல்வேனோ' என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. நாங்க ஒரு வலைப்பதிவு ஆரம்பித்ததும், அதில் நாங்கள் போட்ட பதிவுகள் வாசகர்களை ஈர்த்ததும், எங்கள் ரசிகர் மன்றத்தில், சற்றேறக் குறைய மூன்று நாட்களுக்கு ஒரு ரசிகர் சேருவதும், ஒவ்வொரு பதிவுக்கும், வாசகர்கள் தங்கள் கருத்துகளை கூறுவதும், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான, பிடித்த சமாச்சாரம். உங்கள் ஆதரவைத் தொடருங்கள் நண்பர்களே!
               
இன்றளவில், எங்கள் சொத்து மதிப்பு விவரம்:

இது எங்களுடைய ஆயிரத்துப் பதினான்காவதுப் பதிவு! 
              
ரசிகர் மன்றத்தில் முன்னூற்று அறுபது கோடிகள்! (கேடிகள் இல்லைங்கோ!)
                
கருத்துரைகள் பதின்மூன்றாயிரத்து இருநூறு லட்சம் (சாரி லட்சணமான கருத்துரைகள்!!) 
               
ட்விட்டரில் எங்களை பொறுமையுடன் பின் தொடர்பவர்கள் நூற்று முப்பத்து ஆறு பேர்! 
              
மூஞ்சிப் புத்தகத்தில் எங்கள் நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்து எண்ணூறுக்கும் மேல்! 
  
               
இன்னும் சில புள்ளி விவரங்கள் - படங்களாக! 


    
எங்களிடம் ஏதேனும் கேள்வி கேட்க நினைப்பவர்கள், பின்னூட்டமாகப் பதியுங்கள். பதில் தெரிந்தால், உடனே பதிலுகிறோம். இல்லையேல் கடன் வாங்கி, சொல்கிறோம். பெரிய, நீளமான பதிலாக இருந்தால், தனிப் பதிவாக வெளியிடுகிறோம். கஷ்டமான கேள்விகளை சாய்சில் விட்டுவிடுகிறோம்! 
              
வாழ்த்தப் போகும் அனைவருக்கும் எங்கள் நன்றி. 
             

செவ்வாய், 26 ஜூன், 2012

எட்டெட்டு பகுதி 21 :: பல்பு சாமியார்!

      
              
எ சா : "ஆக மொத்தம், கோக்க கோலாவைக் குடித்த பிங்கி இறந்து போனாள் என்றும், அதில் கொடிய விஷம் இருந்தது என்றும், அந்த விஷத்தை ஓ ஏ கலந்திருக்கலாம் என்று சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைந்துவிட்டதால், இந்தூர் சிறையில், ஓ ஏ இருகின்றார். அவரை கோவிந்தராஜன் அன்றாடம் சென்று சந்தித்து, ஓ ஏ பெயருக்கு வந்த கடிதங்களைக் கொடுத்து, அவர் சொல்லுகின்ற பணிகளை செய்து வருகிறார் என்றும் நேற்று (நண்பருடன் போனில் பேசியதால்) உங்களுக்குத் தெரிய வந்தது. சரியா?" 
               
 கே வி: "ஆமாம்."
                        
எ சா: "என்னை வந்து பார்க்கத் தூண்டியது எது?" 
                 
கே வி: "என்னுடைய பையன் அரவிந்துக்கு, நேற்று மாலை லேசான ஜுரம் அடிக்க ஆரம்பித்தது. வீட்டுப் பக்கத்தில் இருக்கின்ற டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றேன். அவர் கொடுத்த மாத்திரைகளை இரவு உணவுக்குப் பிறகு அவனுக்குக் கொடுத்தேன். ஜுரம் குறையாமலே இருந்தது. இரவு பத்து மணி சுமாருக்கு அர்விந்த் கண் விழித்து எழுந்து, என்னிடம், "அப்பா, லைட் ஏன் மங்கலா எரியுது?" என்று கேட்டான்.
                     
நான் அவனிடம், "மங்கலாக எரியவில்லையே! எப்பொழுதும்போல நல்லாதானே எரியுது!" என்றேன்.
                    
அதற்கு அவன், "அப்பா பொய் சொல்லாதே. காவி கலர் மாத்திரையை நீ எனக்குக் கொடுத்தியா இல்லை பல்புக்குக் கொடுத்தியா?" என்று கேட்டான்.
                      
நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். பிறகு அவனிடம், "நான் உனக்குக் கொடுத்தது வெள்ளைக் கலர் மாத்திரைதானே! பல்பு எல்லாம் மாத்திரை சாப்பிடாதடா" என்றேன்.
                
சற்று நேரம் கண்களை மூடியிருந்த அவன், மீண்டும் கண்களைத் திறந்து, என் கண்களை வெறித்துப் பார்த்தபடி, " அந்தக் காவி கலர் மாத்திரையை கொண்டுபோய் பல்பு சாமியாரிடம் கொடுத்துடு" என்றான்.
                  
அதைக் கேட்டவுடன், எனக்கு மாயா (ஆவி) கூறிய ஜோதிட வைத்தியர், அவருடைய சிஷ்யர் எலெக்டிரானிக் சாமியார் ஞாபகமும், மீதியுள்ள ஒரு காவி கலர் மாத்திரையை என்னிடமே வைத்துக் கொள்ளும்படியும், அதை என்ன செய்வது என்று சந்தர்ப்பம் வாய்த்தால் பிறகு சொல்கின்றேன் என்று சொல்லியிருந்ததும் ஞாபகம் வந்தது. 

                   
"சரி அர்விந்த் - நான் காவி கலர் மாத்திரையை, பல்பு சாமியாரிடம், நாளை கொடுத்துவிடுகின்றேன்" என்றேன். என்ன ஆச்சரியம்! அடுத்த அரைமணி நேரத்திற்குள், ஜுரம் இறங்கி, அவனுடைய டெம்பரேச்சர் நார்மலுக்கு வந்து விட்டது."  
                
எ சா: "என்னது? பல்பு சாமியாரா! எனக்கு வேண்டியதுதான்! ஏற்கெனவே அப்பாஜி என்று ஒருவர் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்போ இதுவும் சேர்ந்துகிட்டா நான் எங்கே போவேன்!"  
                
கே வி: "ஆமாம் சார். சின்னப் பையன் இல்லியா - எலெக்டிரானிக் என்கிற வார்த்தை அவன் வாயில நுழையல போலிருக்கு அதனால பல்பு சாமியார்னு சொல்லியிருக்கான்.  போனாப் போகுது மன்னிச்சுடுங்க. இன்று காலையில் எழுந்தவுடன், நம்ம ஊரு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, 'எலெக்டிரானிக் சாமியார் என்று யாரையாவது தெரியுமா?' என்று கேட்டேன். இப்போ எல்லாம் ஊரில் உள்ள சாமியார்கள் எல்லோரையும் போலீசுக்கு நன்கு தெரிந்திருக்கு! அதனால். அவங்க கிட்ட கேட்டேன். இன்ஸ்பெக்டர் ரங்கன் என்பவர், உங்கள் விலாசம் எனக்குக் கொடுத்தார்."  
               
எ சா: "ஆமாம் அவர் என் நண்பர்தான்! அந்த நீல நிற மாத்திரை பாட்டிலையும், காவிக் கலர் மாத்திரையையும் கொண்டுவந்திருக்கீங்களா?" 
             
கே வி: "ஆமாம்."
                 
எ சா: "அதை என்னிடம் கொடுங்க."
             
கே வி நீலநிற பாட்டிலை, எடுத்துக் கொடுத்தார். 
             
எ சா: "இதுல இருக்கற மாத்திரை கொடிய விஷம் கொண்ட மாத்திரை என்று உங்களுக்கு சந்தேகமா இருக்கா?" 
               
கே வி: "ஆமாம்" 
       
எ சா பாட்டிலைத் திறந்து, அதில் இருக்கும் காவி நிற மாத்திரையை, ஒரு காகிதத்தில் வைத்தார். அதை டீப்பாயின் மேலே வைத்தபடி, கே வியிடம், "உங்கள் நாற்காலிக்கு அருகேயுள்ள அந்த மேஜையின் இழுப்பறைக்குள் ஒரு பிளாஸ்டிக் டப்பா இருக்கும் அதை எடுங்கள்" என்றார். 
   
கே வி திரும்பி,அந்த மேஜை இழுப்பறையைத் திறந்து ..... 
               
(தொடரும்) 
              

திங்கள், 25 ஜூன், 2012

அட்சய பாத்திரம் --- சிறுகதை

               
எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டு எல்லாப் பாத்திரங்களையும் கழுவி வைத்தாயிற்று. படுக்க வேண்டியதுதான்.
                   
காலிங் பெல் ஓசை கேட்டது.
             
கதவைத் திறந்தாள்.
                 
தாத்தா பெரிய தாத்தா அவரின் சகோதரர் இன்னுமிரு தெரியாத முகங்கள்....
 
                 
"வாங்க.... வாங்க...." கதவைத் திறந்து விட்டு உள்ளே அழைத்தாள்.
                 
"தீர்க்க சுமங்கலியாய் இரம்மா.... அவர் எங்கே.... "
                 
"வெளில போயிருக்கார் தாத்தா.... உட்காருங்க... நல்லாயிருக்கீங்களா...." (அவர் டாஸ்மாக் போயிருக்கார் என்றா சொல்ல முடியும்?) 
               
"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கோம்.... இவங்க எங்களுக்குத் தெரிஞ்சவங்க.... ஒரு முக்கிய வேலையா இந்தப் பக்கம் வந்தோம். போய் நீராடி விட்டு வருகிறோம்.... (நீங்களுமா...?)   எங்களுக்கு சாப்பாடு எடுத்து வைம்மா....."     
                 
பைகளைக் கீழே வைத்து விட்டுக் கிளம்பி விட்டார்கள்.
                   
ஐயோ... என்ன சோதனை இது... உள்ளே ஓடிப் போய்ப் பார்த்தாள். ஒரு டப்பாவிலும் ஒன்றுமில்லை. எதை வைத்து என்னத்தைச் சமைக்க.... இந்த அகாலத்தில் யாரிடம் போய் என்ன கேட்க? கேட்டால்தான் என்ன தருவார்கள்? எத்தனை முறைதான் கேட்பது?
                 
தாத்தாக்கள் வேறு ரொம்ப கோபக்காரர்கள். இவர்களின் திருமணத்துக்கு வராதவர்கள். ஒரு வருடம் கழித்து இன்றுதான் இவர்களைப் பார்க்க வருகிறார்கள்.
                   
கையைப் பிசைந்தாள்....  என்ன செய்ய... இவர்கள் கோபத்திலிருந்தும் இந்த தர்ம சங்கடத்திளிருந்தும் எப்படித் தப்புவது?
                 
பாதி போதையில் வந்த கணவனிடம் இதைச் சொன்ன போது அவனும் கைகளைப் பிசையத் தொடங்கினான்.
                                   
போக்கற்றவர்களுக்கு பகவானே கதி என்று பூஜையறைக்குச் சென்றாள். "கிருஷ்ணா.... என்ன செய்ய...? உதவ மாட்டாயா?"   
***************************************  
         
பறவைக் காய்ச்சல் பற்றி விலாவரியாகக் கூறி பயமுறுத்திக் கொண்டிருந்த டிவியை அணைத்தான் மதுசூதனன்.
             
எழுந்து வெளியே வந்தான். மூன்று வீடு தளளி அர்ஜுன் வீட்டில் விளகெரிவதையும் அவர்கள் இருவரும் வாசலில் தவிப்பாய் நின்று கொண்டிருப்பதையும் பார்த்து பக்கத்தில் சென்றான்.
                     
"என்ன ஆச்சு மேடம்..."
                       
கோபக்காரப் பெரியவர்கள் பற்றியும் தன் வீட்டின் தற்போதய நிலைமை பற்றியும் சொன்னார்கள்.
                     
தன் பையைத் தடவிப் பார்த்தான் மது. அவனுக்கும் மாதக் கடைசிதான். சற்றுமுன் பார்த்த டிவி நியூஸ் நினைவுக்கு வந்தது.

'என்ன செய்வது..... என்ன செய்வது..... ம்..... ஐடியா.... ஆனா எனக்குத் தானாக வராதே....! நேரமாகிறதே... அவர்கள் வரும் நேரமாகிறதே...'

"நீங்க சாப்பிட்ட பாத்திரத்தைக் காட்டுங்கள்... அதைக் கொஞ்சம் எடுங்கள்..."

"இல்லீங்க.... கொஞ்சம் கூட மிச்சம் இல்லை... எல்லாத்தையும் கழுவி வச்சிட்டோம்...." என்றாள் அவள்.

"நீங்க எடுத்துட்டு வாங்க...."

உள்ளே சென்று எடுத்து வந்தாள்.

'அதானே... நீங்கல்லாம் கழுவற லட்சணம் எனக்குத் தெரியாதா...'
     
ஒரு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறு கீரைப் பகுதியையும், இன்னொரு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறு சதைப் பகுதியையும் எடுத்து முகர்ந்து பார்த்தான்.

அவள் லேசாக வெட்கப் பட்டு மற்ற பாத்திரங்களையும் காட்டினாள்.
   
முகர்ந்தது போதவில்லை என்று தோன்றவே, எல்லாப்பாத்திரங்களின் ஓரத்திலும் அடியிலும் ஒட்டியிருந்தவைகளை எடுத்து நாக்கில் இட்டுக் கொண்டான்.

'ம்.... வேலை செய்கிறது...'

"நீங்க உள்ள போங்க அண்ணி.... நான் இதோ வர்றேன்..."

விரைந்து நடந்தான்.

அவர்கள் திரும்பி வரும் வழியில் நின்று கொண்டான்.   
***********************************************

'நீராடி' திரும்பி வந்து கொண்டிருந்த அந்த நால்வரும் வழியில் ஒருவன் நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நின்றார்கள்.
   
"என்ன ஆச்சு..."

பதில் சொல்லாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த மது, தன் கைகளை நீட்டி "சுடுதா பாருங்க.." என்றான்.

ஒரு பெரியவர் தொட்டுப் பார்த்து விட்டு "இல்லையே.." என்றார்.

"அப்பாடா... வாந்தி எடுத்ததும் ஜுரம் குறைஞ்சிடிச்சு போல... மறுபடி ஜுரம் வந்தா வாந்தியும் வரும்... இந்தப் புது வகைக் காய்ச்சல்ல இது ஒருவகைக் கஷ்டம்..."
                  
"ஏன் தம்பி.,... என்ன ஆச்சு?"
               
"இந்தத் தெருவில, என் ஃபிரண்டு அர்ஜுன் வீட்டுல சாயங்காலம் சாப்பிட்டேன். சாப்பிடும்போது கோழி, கீரைன்னு எல்லாம் அமர்க்களமா நல்லாத்தான் இருந்தது... என்ன ஆச்சோ தெரியல.... ஒரே வாந்தி... அர்ஜுனும் இப்போதான் வாந்தி எடுத்துட்டுப் போனான்...."
              
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  
**************************************************
      
'செல்' அடிக்கவும் எடுத்துப் பேசியவள் முகம் மலர்ந்தது. அர்ஜுனைக் கூப்பிட்டாள்.
                 
"என்னங்க... அவங்க வீட்டுக்கு வரலையாம். வேறொரு முக்கிய ஜோலி வந்துடுச்சாம். பைகளை எடுத்துக் கொண்டு வந்து தெருமுனைல தரச் சொல்றாங்க...."
           
அர்ஜுன் சொன்னான், "மதுசூதனா.... என்னடா செஞ்சே.... எல்லாம் உன் செயல்!" 
       

ஞாயிறு, 24 ஜூன், 2012

ஞாயிறு 155 :: வேலி ஏன்?



காட்சிக்குக் கவிதை எழுதுவோர் எழுதலாம். 

வெள்ளி, 22 ஜூன், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்::06

                     
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
                      
இங்கு ஒரு மாறுதல்.  
               
இங்கு எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்.......!  
 
 1) கல்கி, தேவன், சுஜாதா போன்றோரிடம் அப்போது இருந்த நகைச்சுவை இன்றைய எழுத்தாளர்கள் யாரிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?  உங்களைப் பொறுத்தவரையில், இந்தக் காலத்தில், மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் என்று யார் யாரை வரிசைப் படுத்துவீர்கள்?
  
2) தாய்ப் பாசம், மனைவி நேசம் எது முதலிடம் பெற்று ஜெயிக்கிறது? மனைவியாக இருக்கும்போது கணவன் தனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று நினைப்பவ(ர்க)ள்,  தாயானதும் பிள்ளையிடம் அதை எதிர்பார்க்கிறா(ர்க)ளா..?    
 
3) லைப்ரரியில் புத்தகம் சுட்ட அனுபம் உண்டா... ஆம் என்றால் என்ன புத்தகம், எங்கு, எப்படி?   
                      

புதன், 20 ஜூன், 2012

உள் பெட்டியிலிருந்து - 06 2012


இன்னொரு யானை - எலிக் கதை


எலியும் யானையும் காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்டனர். அடுத்த நாளே யானை இறந்து விட்டது. 

எலி சொன்னது, " என் அன்பே....ஒரு நாள் காதலுக்காக ஆயுசு பூரா என்னைக் குழி தோண்ட வச்சுட்டியே..."  
================================

ரொம்பப் பழசுங்க...


மிஸ்டர் எக்ஸ் : "நீதான் பில் கேட்ஸா ?" 
    
பில் கேட்ஸ் : "எஸ்.. வாட் டு யூ வான்ட்?"
    
மிஸ்டர் எக்ஸ் : என்ன கம்பியூட்டர் வச்சிருக்கே நீ...? My pictures னு இருக்கு திறந்தால் என் போட்டோ ஒண்ணு கூட இல்லை. Windows னு இருக்கு திறந்தா காத்தே வரலை. My Documents னு இருக்கு அதுல பார்த்தா என் வீட்டுப் பத்திரம் இல்லை...!
    
பில் கேட்ஸ் : "!!*#@*&..."
===============================
தமிழில் அவ்வளவு சரியா வரலையோ...

நான் எதாவது தவறு செய்திருந்தால் மறந்து விடுங்கள் ஆனால் தவறியும் கூட என்னை மறந்து விடாதீர்கள்...

==========================

கடவுளே...!

என்னிடம் யாராவது உன் வாழ்க்கை முழுவதும் யாரோடு கழிக்க விரும்புகிறாய் என்று கேட்டால் யாருக்கு நான் முழுதும் யோகியமானவன் இல்லை என்று தெரியுமோ அவர்களுடன்தான் என்று சொல்வேன்!

=============================

மாத்தி நேசி...சீ.... யோசி...

மற்றவர்களை நேசிப்பதை விட உங்களை அதிகம் நேசியுங்கள். ஏனெனில் வாழ்வில் பெரும்பகுதி நீங்கள் உங்களுடன்தான் செலவிடப் போகிறீர்கள். 

===========================

இது கேள்வி...
மகன் : "எகிப்துக்கு எப்போ அப்பா போனே..."
அப்பா : "ஏண்டா மகனே..?"
மகன் : "'மம்மி'யை எங்கேருந்து வாங்கினே..?"

============================

போக்குவரத்துத் துறையின் 'ந(கை)ச்'சுவை!


இரத்த தானம் செய்யுங்கள்... ஆனால் சாலையில் அல்ல!

===========================

மறக்க முடியாத சிறுவயது ஞாபகம்...

   

இரவு ஸோஃபாவில் படுத்துத் தூங்கி, காலை 'பெட்'டிலிருந்து எழும் அதிசயம்!

==========================
"அது"
         
ஒரு பறவை தேனியிடம் கேட்டது, "அரும்பாடு பட்டு, கடுமையாக உழைத்து, பறந்து பறந்து நீ சேகரிக்கும் தேனை மனிதன் களவாடிச் செல்வது உனக்கு வருத்தமாயில்லையா"

தேனீ சொன்னது, "மனிதன் நான் சேகரிக்கும் தேனைக் களவாடலாம். ஆனால் தேன் தயாரிக்கும் கலையை அவன் எந்நாளும் என்னிடமிருந்து திருட முடியாது"

=============================
சிக்கனம் சின்னு! 
    
காதல் மனைவி " என்னங்க என் செல்லுல உங்களோட ஒரு மிஸ்ட் கால் இருக்கு?"

காதல் கணவன் : " நீதானே உன் பிறந்த நாளுக்கு ஒரு ரிங் வேணும்னு கேட்டே.."

==========================

ஆங்கிலத்தில் மட்டுமே ரசிக்க...


Your nature is your future!

===========================

பழைய அர்த்தம் புதிய வரிகள்

அருகிலிருக்கும்போது அன்பு புரிவதில்லை. விலகிப் போகும்போது துன்பம் தாங்குவதில்லை.

=============================
கடவுள்...

கேட்கும்போது தரவில்லை என்றாலும் தேவைப் படும்போது தருவான்

வாழ்வின் விடைகளை கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கும்போது கேள்வித்தாளை மாற்றி விடுகிறான்.

=================================

ஊசி நட்பு ஊசா நட்பு










ஊசியும் நண்பனும் ஒன்று.
குத்தும்போது வலித்தாலும்
குணமாகத்தானே...

=======================
அட, ஆமாங்க...

மனதில் அமைதி இருந்தால்தான் எண்ணங்களில் தெளிவு இருக்கும்!
              
உங்களை நீங்களே கையாள மூளையை உபயோகியுங்கள். அடுத்தவர்களைக் கையாள இதயத்தைக் கையாளுங்கள்!
               
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை (கலாம்)
     
படங்கள் நெட்டிலிருந்து எடுத்தவை.