இந்த வார வியாழக்கிழமை பதிவு, நிலைய வித்வான்கள் தயாரிப்பு.
கோர்வையாக, ஒழுங்காக எல்லாம் இருக்காது!
எங்கே தொடங்கலாம்?
- - - - - - - - - - -
தொடங்குபவர் : KGG.
எப்போது டீ வி யில் நகைச்சுவை சானல் போட்டாலும் அடிக்கடி என் கண்ணில் படுவது காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 அல்லது கலகலப்பு 2 etc. அதில் வருகின்ற நகைச்சுவை காட்சிகள் கொஞ்சம் கூட சிரிப்பு வராது. இதை எல்லாம் நகைச்சுவை என்று எடுத்திருக்கிறார்களே என்று நினைத்தால் சிரிப்பாக இருக்கும்! சிறுபிள்ளைத் தனமான காட்சிகள்!
காஞ்சனா படம், The Conjuring ஆங்கிலப்பட வரிசைகளைப் போன்று (காப்பியடித்து?) தமிழில் எடுக்கப்பட்ட படங்கள். ஆனால், சொதப்பல் படங்கள்! விரைவில் காஞ்சனா 04 கூட வெளிவர உள்ளதாம்!
முதல் காஞ்சனா படம் வெளி வந்தது 2011 ஆம் ஆண்டு என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு சைபர் மார்க்.
இதோ காஞ்சனா முதல் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு : (1951 கல்கி தீபாவளி மலரில். )
படம் வெளியான தேதி : மே 1, 1952. (ஆனால் இது பயங்கரப் படமோ, நகைச்சுவைப் படமோ அல்ல! சமூகப் படம். லலிதா & பத்மினி நடித்தது)
= = = = = = = = = =
இது சரிதானோ?
======
அரசியல் வேசிகள்
யானைச் சின்னத்திற்கு
நிச்சயதார்த்தம் செய்தால்
கழுதைச் சின்னத்திற்குக்
கழுத்தை நீட்டிவிட்டு
முதலைச் சின்னத்தோடு
முதலிரவு கொண்டாடுபவர்கள்.
- ---எழிலன்
இது சம்பந்தமாக கூடுதல் தகவல்: (by மஞ்சள் கமெண்ட் மண்டு - அதாவது 'ம&' )
யானை : அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் (Republic Party )தேர்தல் சின்னம்.
கழுதை : அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party )தேர்தல் சின்னம்.
முதலை : உலகில் எந்தக் கட்சிக்கும் முதலை தேர்தல் சின்னம் கிடையாது!
- - - - - - -
புதுமைப் பழக்கம்
ஏ வி எம் தயாரிப்பாளர்ளில் ஒருவரான ஏ வி எம் சரவணனுக்குப் புதுமையான பழக்கம் உண்டாம். அவருடைய அறைக்குள் யார் நுழைந்தாலும் அவரைப் புகைப்படமெடுத்து வைத்துக் கொள்வாராம். இதற்காகவே கேமிரா ஒன்று எப்போதும் அவரது மேஜையின் வலப்புற இழுப்பறையில் தயாராயிருக்குமாம். கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் அடங்கிய ஆல்பமும் அதே மேஜை இழுப்பறையில் இருக்குமாம்.
- --குமார்.
(பழைய கல்கி பைண்டிங்கில் இருந்து)
- - - - - - - - -
கடுகு பதில்கள்.
படிக்க இயலவில்லை என்றால், zoom செய்து படிக்கவும்.
- - - -- - - - -
- - - - - - -
கவலை வேண்டாம் - கீழே இதன் எழுத்து வடிவத்தைக் கொடுத்துள்ளோம்.
கடைசி பக்கம் - கல்கி
வாழ்க்கையின் ஒரே தேவை.
கண்ணதாசன்.
சென்னை நகரம் முழுவதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து, 'ஏன் இப்படி ஓடுகிறீர்கள்?' என்று கேட்டுப் பாருங்கள். என்ன சொல்வார்கள்?
"வேலை பார்க்க வேண்டாமா?"
"எதற்காக வேலை பார்க்க வேண்டும்?"
"சம்பாதிக்க வேண்டாமா?"
''எதற்காகச் சம்பாதிக்க வேண்டும்?"
"நிம்மதியாக வாழ வேண்டாமா?"
விஷயம் இவ்வளவுதான். மனிதனுக்கு நிம்மதி தேவை. அதைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம்.
நிம்மதி எங்கே வருகிறது? மரத்தடிச் சாமியாருக்கு இருக்கும் நிம்மதி, மாளிகையிலுள்ள செட்டியாருக்கு இருக்கிறதா?
இல்லாதவருக்குத்தான் இல்லையே என்ற கவலை; இருப்பவனுக்குக் கவலையே இல்லை என்றுதான் பல பேர் கருதுகிறார்கள்.
உண்மையில் எவனுக்கு வசதிகள் அதிகமோ, அவனுக்கே கவலைகள் அதிகம்.
அடர்த்தியான காட்டுக்குள்ளேதான் பாம்புகள் ஆனந்தமாகக் குடியிருக்கின்றன.
வசதியான மனிதனைச் சுற்றிலும் நன்றி கெட்ட கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
உயிருள்ள மனிதனைப் பார்க்கும் போது கழுகு என்ன நினைக்கும்? 'இவன் எப்போது பிணமாவான், எப்போது சாப்பிடலாம்?' என்று தானே.
'பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க, நாய் நரிகள் பேய் கழுகு தம்மதென்று தாமிருக்கும்தான்' என்கிறார் பட்டினத்தடிகள்.
பசி எடுத்த நாய் செத்துப் போன சடலங்களை மட்டும் கவ்வுவதில்லை; உயிருள்ள கோழியையும் தான் கவ்வி விடுகிறது.
அந்த நாய்களுக்கும் பேய்களுக்கும் நடுவே. வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருக்கும் மனிதனைப் பார்த்து, நிம்மதியான மனிதன் என்று. உலகம் கணக்கிடுகிறது.
நிம்மதி, ஏழடுக்கு மாளிகையிலும், ஏர் கண்டிஷன் ரூமிலும் ஜனிப்பதல்ல. அது சிந்தனைகள் நிறைவேறுகிற இடத்தில் பூத்துக் குலுங்குவது ஆசைகளும் கனவுகளும் பலிக்கும் இடத்தில் உற்பத்தியானது.
குற்றாலத்தில் அருவி விழுவது தெரிகிறது. அது எங்கிருந்து வருகிறதென்பது எல்லோருக்கும் தெரியாது.
பகவான் ரமண மகரிஷிக்கு ஒரு கோவணத்தில் இருந்த நிம்மதி, பரூக் மன்னனுக்குப் பட்டுப் பீதாம்பரங்களில் கிடைக்கவில்லை.
காஞ்சிப் பெரியவருக்குக் கால் நடையிலே கிடைக்கும் நிம்மதி, கடன்காரன், சினிமாக்காரனுக்கு கார் சவாரியில் கிடைப்பதில்லை.
புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்களாகின்றன. எண்ணங்கள் பூர்த்தியடையும் போது, அதற்கு நிம்மதி என்று பெயர் வருகிறது.
என் வாழ்வில் சலனம், சபலம், சஞ்சலம் பலமுறை வந்திருக்கிறது. தற்கொலை நினைவும் தலைதூக்கியிருக்கிறது. ஒருநாள் ஆனந்தமாகக் கழிந்து விட்டால். வாழ்க்கையில் நம்பிக்கை; நிம்மதி.
பசி தாங்காமல் சாகலாம் என்று நினைப்பவனை அழைத்து. ஒருவேளை சுவையான சாப்பாடு போடுங்கள். 'ஏன் சாக வேண்டும் என்று உங்களையே கேட்பான்.
வாழ்க்கை, சட்டத்துக்குக் கட்டுப்படாத பலசரக்குக் கடை சாமானைப் போன்றது. எல்லாம் கலந்துதான் இருக்கும்!
வாழ்ந்தே தீரவேண்டிய திர்ப்பந்தத்தில் மன உளைச்சல் என்ன பயன் தரும்?
தண்ணீரில் விழுந்தவன் நீந்தித்தான் ஆக வேண்டும்.
ஒரேயடியாகத் தூக்கிப் போட்டுவிடுவது சுலபம்தான். அதற்கு இவ்வளவு காலம் வாழ்ந்திருக்க வேண்டாமே!
இந்தப் போதனை எனக்கும் கூடத்தான்:
கால் சுடும்போது கை தலையில் அடித்துக் கொள்கிறது. காரணம், காலும் தலையும் ஒரே உடம்பில் இருக்கின்றன.
தண்ணீர் தாகம் எடுப்பவனுக்குக் காப்பி ருசியாக இருக்காது.
எது தேவையோ அதைப் பெற்றுவிட முயற்சி செய்வோம். இல்லையேல் விட்டு விடத் தயாராவோம்.
காரணம், நமக்குத் தேவை நிம்மதி "கோடி ரூபாய்களையும் அழகான மகா ராணிகளையும் இரண்டு வருட காலம் அனுபவித்துவிட்டு, இருபது வருட காலம் நிம்மதி இல்லாமல் அலைகிறாயா, நிரந்தர திம்மதி வேண்டுமா?" என்று இறைவன் என்னைக் கேட்டால், தான் சொல்லக்கூடிய பதில் "எதையும் எடுத்துக் கொண்டு நிம்மதியைக் கொடு" என்பதே.
= = = = = = = = = = = = =
அடுத்து வரும் பகுதியைத் தயாரித்தவர், 'யார் தயாரித்தது என்ற விவரம் வெளியிடவேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மனப்பான்மை
நம்முடைய வரலாற்றைப் பார்த்தீங்கன்னா, பொதுவா இந்தியர்கள் அடுத்தவர்களுக்கு உழைத்து, அதில் வரும் வருமானத்தை வைத்தே வாழ்ந்திருக்கிறார்கள். தானாகவே ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்போம், அல்லது தொழிற்சாலையை ஆரம்பித்து உற்பத்தி செய்வோம் என்ற எண்ணம் இல்லை, நிறைய பணம் சேர்த்து பணக்காரராவோம் என்ற பெரிய கனவுகளைக் கொண்டிருந்திருக்கவில்லை. ஆனால் இத்தகைய கனவுகளைக் கொண்டிருந்தவர்கள்தாம் பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள், வியாபாரத் தலங்களின் அதிபர்களாகியிருக்கிறார்கள்.
நம்ம வரலாற்றில் சாம்ராஜ்யக் கனவுகளோடு பல்வேறு தோல்விகளைச் சந்தித்தும் பெரும் ஆட்சியை நிறுவியவர்கள் பலர். அதில் ஒரு இண்டெரெஸ்டிங் ஆள், பாபர். அதற்கு முன்பு, மௌரிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சந்திரகுப்த மௌரியர், பிறகு விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹரர் புக்கர். சரித்திரத்துக்கு என்று ஞாயிறைத் தத்தம் செய்துவிட்டதால் நாம் வியாழனில் சரித்திரத்தைத் தவிர்ப்போம். இது எதனால் என் நினைவுக்கு வந்தது என்பதைச் சொல்கிறேன்.
யூதர்களின் படிப்பின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு எப்படி வியாபாரம் செய்வது என்பது ஒரு பயிற்சியாகக் கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட பணத்தை அவர்கள் ஓரிரண்டு வருடங்களில் எப்படிப் பெருக்குகிறார்கள் என்று. இதனால்தான் பல வியாபாரக் குழுமங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலும், சிந்திக்கள், பஞ்சாபியர்கள் போன்ற பலரும் சிறு வயதிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் ரெட்டியார்கள், நாடார்கள் போன்றவர்களும் பெரும்பாலும் வியாபாரத்தில் இருக்கின்றனர். எதற்குச் சொல்கிறேன் என்றால், இன்னொருவருக்கு வேலை செய்தால் மாதச் சம்பளம் வருமே தவிர, வேலை நிரந்தரமில்லை. அந்த மனப்போக்கைத் தவிர்த்து பிஸினெஸில் ஈடுபட்ட அசிம் ப்ரேம்ஜி, ஷிவ் நாடார் போன்ற பலர் பெரும் செல்வம் ஈட்டியிருக்கிறார்கள்.
சமீபத்தில் கொல்கத்தா பயணம் செய்ய நேர்ந்தது. பொதுவாக கொல்கத்தாவை இந்தியாவின் அழுக்கு நகரம் என்று சொல்வார்கள். ஆனாலும் அங்கு இருந்த கட்டிடங்கள் நம் பழம் பெருமையைச் சொல்லின. உங்களுக்குத் தெரியும், கொல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக ஒரு காலத்தில் இருந்தது, கிழக்கிந்தியக் கம்பெனி இங்கிருந்துதான் இந்தியா முழுமையையும் ஆட்சி செய்தார்கள்.
கொல்கத்தாவின் சில கட்டிடங்களின் படங்கள்.
கிழக்கிந்தியக் கம்பெனி, சாதாரண வியாபார நிறுவனமாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இங்கிருந்து இங்கிலாந்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி அனுப்பும் நிறுவனமாக ஆரம்பித்தது. அதற்காக இங்கு வந்தவர்களில் பெரும்பகுதியினர், அங்கு உதவாக்கரைகளாக இருந்தவர்கள். மெதுவாக அவர்களுக்கு இந்தியர்களின் மனப்பான்மை நன்கு புரிந்துவிட்டது. அவர்கள் விசுவாசமான வேலைக்காரர்கள், மற்றபடி புத்திஜீவிகள் அல்லர் (அதாவது காசு சேர்க்கவேண்டும் என்ற எண்ணம்), அடிமை மனப்பான்மை உள்ளவர்கள், மொழி, ஜாதியினால் அவர்களிடம் பிரிவினை தோற்றுவித்து அவர்களை ஆளுவது மிகவும் சுலபம் என்பதைக் கண்டுகொண்டனர். இதனால்தான் அவர்களால் கொஞ்சம் கொஞ்சமாக நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்து நம்மை ஆள்வதற்கு முடிந்தது.
கொல்கத்தாவில் உள்ள அரசி விக்டோரியாவின் நினைவாக கட்டப்பட்ட விக்டோரியா நினைவகம், அரசி விக்டோரியா 1901ல் மறைந்தவுடன், அப்போது இந்தியாவின் கர்சன் பிரபுவின் முயற்சியால் கட்டப்பட்ட து. 1921ல் வேல்ஸ் இளவரசரால் திறக்கப்பட்டது.
தந்தத்தினால் ஆன ஆசனம். (வாரன் ஹேஸ்டிங் உபயோகித்தது).
அரசி விக்டோரியா. கட்டிடங்களையும் பெயர்த்து எடுத்துச் செல்ல முடிந்தது என்றால், ஒன்றையும் விட்டுவைத்திருக்கமாட்டார்களோ?
அரசி விக்டோரியா, 1858ல் அளித்த வாக்குறுதி. இதுதான் தேர்தல் வாக்குறுதிகள், கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்படை என்றால் மிகையில்லை. எவனெவனுக்கோ இங்க நினைவுச் சிலைகள் இருக்கிறது. எனக்கும் இருந்தால் என்ன? என்கிறாரோ இராபர்ட் கிளைவ்?
நீங்கள் கூகுளில் போய் ஒரு போனைப் பற்றித் தேடுகிறீர்கள். தகவல்களைப் பார்த்துவிட்டு விலை அதிகம் என்று விட்டுவிடுகிறீர்கள். அதன்பின் கவனித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் மொபைலில் அல்லது கணிணியில் எந்தச் செயலியைத் திறந்தாலும் அந்த மொபைல் போனின் விளம்பரம் வந்துகொண்டே இருக்கும். அதே போல யூடியூபில் ஒரு குறிப்பிட்ட ஷூவைப் பற்றிய வீடியோவை நீங்கள் பார்த்தால் போதும்… அடுத்து அந்த ஷூ பற்றிய விளம்பரங்கள் உங்களைச் சுற்றி வந்துகொண்டே இருக்கும்.
இதன் பின் இருப்பது ஓர் அடிப்படையான கணிணி அல்காரிதம்தான். நீங்கள் விரும்பும் பொருளைப் பற்றிய தகவலை எப்படியும் கண்டுபிடித்து அது தொடர்பான விளம்பரங்களை உங்களுக்குத் தொடர்ந்து காட்டிக்கொண்டே இருப்பதன் மூலம் உங்களை அந்தப் பொருளை வாங்கவைத்துவிடுவார்கள். இந்த அல்காரிதம் இப்படித்தான் செயல்படுகிறது; செயல்படும்.
இங்குதான் சிக்கல் தொடங்குகிறது.
இப்போது நீங்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவராக இருக்கலாம். உதாரணத்திற்கு முகநூல், எக்ஸ், யூடியூப். இப்படி எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? இதையெல்லாம் பயன்படுத்த நீங்கள் காசு எதுவும் கொடுப்பதில்லை. அனைத்தும் இலவசம்தான்.
அப்படியிருக்க இந்த சமூக வலைத்தளங்கள் எப்படி இயங்குகின்றன? எப்படி லாபம் சம்பாதிக்கின்றன? எப்படி இவர்களால் அனைத்தையும் இலவசமாகாத் தரமுடிகிறது?
நொடிக்கு பல ஆயிரம் புகைப்படங்கள், போஸ்டர்கள், வீடியோக்கள் அதில் பதிவேற்றப்படுகின்றன.
அவ்வளவு தகவல்களையும் சேமித்து வைக்கவேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இவ்வளவு செலவு செய்து உங்களுக்கு ஏன் அந்த சமூக வலைத்தளங்கள் இலவசமாகக் கொடுக்கவேண்டும்? அவர்களுக்கு எங்கிருந்து லாபம் வருகின்றது?
எளிமையாக இதனை விளக்கவேண்டும் என்றால் ஒரு சொல் போதும். அது கண்காணிப்பு.
ஆம். இணையத்தில், சமூக வலைத்ளங்களில் புழங்கும் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறார்கள்; கண்காணிக்கப்படுகிறீர்கள்; கண்காணிக்கப்-படுகிறோம்.
நீங்கள் இணையதளம் வந்தவுடன் என்ன பார்க்கிறீர்கள், என்ன தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், எந்த வீடியோவில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்..இப்படி உங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களைச் சேகரித்து அதன்மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட அல்காரிதங்களின் உதவியுடன் உங்களுக்கான விளம்பரங்களை அவர்கள் உருவாக்குகிறார்கள்.
அந்த விளம்பரங்களை உங்களுக்கு எப்படி எல்லாம் காட்டினால் நீங்கள் கண்டிப்பாக அந்தப் பொருளை வாங்குவீர்கள் என்பதையும் அவர்கள் கணிக்கிறார்கள்.
இப்படிச் சரியாக கணிக்க அவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறதோ, அந்த அளவு உங்களுக்கான சரியான விளம்பரத்தை அவர்களால் காட்டமுடியும். அதன் மூலம் உங்களை அந்தப் பொருட்களை வாங்கவைத்துவிட முடியும். இந்த தகவல் கண்காணிப்பும், அதற்குத் தகுந்த விளம்பரங்களைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களும் பெரிதும் உதவியாக இருக்கிறது. அதனால்தான் அந்த விளம்பர நிறுவங்கள் பெரும் தொகையை முகநூல், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட சமூக வலத்தளங்களுக்குத் தருகின்றன. இந்தப் பணத்தை வைத்துத்தான் சமூக வலைத்தளங்கள் லாபமும் சம்பாதிக்கின்றன.
அமெரிக்காவில்
நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றையும் அந்தக் கட்டுரை சுட்டிக்காண்பிக்கிறது. ஒரு
வீட்டிற்கு, ஒரு பெண் கர்பமானால் பயன்படுத்த வேண்டிய
பொருட்களின் கூப்பன்களை ஒரு சூப்பர்மார்க்கெட், ஒரு
வீட்டிற்கு தொடர்ச்சியாக அனுப்புகிறது. அந்த
கஸ்டமருக்கோ 16 வயதில் ஒரு பெண் இருக்கிறார். மனைவிக்கு
கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு இல்லை. அதனால்
கஸ்டமர்,
ஏன்
தொடர்ச்சியாக கர்ப்பம் தொடர்பான கூப்பன்கள் வருகின்றன என்று சூப்பர்
மார்க்கெட்டைக் கேட்க, அதற்கு
அந்த நிறுவனம், உங்கள் வீட்டில் வாங்கும் பொருட்கள்
அடிப்படையில் உங்கள் வீட்டில் உள்ள ஒருவர் விரைவில் கர்ப்பம் ஆகப்போகிறார் என்று
சொல்லியிருக்கிறது. கஸ்டமரின் பெண்
கர்ப்பமானதை அவர்கள் பெற்றோர் அறிவதற்கு முன்பு, செயற்கை
நுண்ணறிவு அறிந்திருக்கிறது.
அதிகாலை கண்விழிக்க என்ன செய்யவேண்டும்?
என்னடா இது.. எப்போதும் அதிகாலை கண்விழிக்க வேண்டும் என்று நினைத்து த்தானே படுத்துக்கொள்கிறோம். ஆனால் காலையில் அலார்ம் அடித்தாலும் எழுவதற்கு மனம் இல்லையே, மீண்டும் தூங்கிவிடுகிறோமே என்று நொந்துகொள்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்.
முதலில் தீர்மானமாக நம் மூளைக்கு அதிகாலையில் எழுந்துகொள்ளணும் என்று திடமாகச் சொல்லவேண்டும். நம் மூளையைவிட நல்ல அலார்ம் கிடையாது
அடிக்கடி எழுந்துகொள்ளும் நேரம் மாறக்கூடாது. ஒரே நேரத்தில் எழுந்துகொள்ளும் பழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.
படுக்கை அறையில் சூரிய வெளிச்சம் வரும்படியாக ஒளி ஊடுருவும்படியான திரைச்சீலைகள் இருக்கவேண்டும்.
இரவு அளவாக உண்ணவேண்டும். சாப்பிட்டு உடனே படுத்தால் உறக்கம் வராது. சீரணத்தைப் பாதிக்கும். பத்து நிமிடங்கள் நடக்கவேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து படுத்துக்கொள்ளவேண்டும்.
சீக்கிரம் தூங்குகிறவர்களே சீக்கிரம் எழுந்துகொள்ள முடியும். இரவு 9-10க்குள் தூங்கிவிட வேண்டும்.
அலாரம் வைத்தாலும், அது மெல்லிய ஒலி எழுப்பும்படியாக இருக்கவேண்டும்.
தூக்கம் கலைந்ததும் அடித்துப் பிடித்து எழக்கூடாது. உறங்கும்போது நம் உடலின் ரத்த ஓட்டத்தில் மாறுபாடு இருக்கும். அதனால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகுதான் மெதுவாக படுக்கையை விட்டு எழவேண்டும்.
இதெல்லாம் எங்களுக்குத் தெரியுமே… அப்படி இருந்தும் காலையில் சீக்கிரம் ஏன் எழுந்துகொள்ள முடிவதில்லை என்று யோசிக்கிறீர்களா? எழுந்து செய்யக்கூடிய வேலைகள் எதுவுமே உங்களுக்கு இல்லை என்று தெரிகிறது!
= = = = = = = =
கவிதைக்குப் பதில் நல்ல வரிகள்..
- - - - - - - - - -
நகைச்சுவை
சிரிப்பு வரும்படியாக ஏதாவது கிடைக்கக்கூடாதா?
= = = = = = = = = = =
இந்திய மனப்பான்மை - நெல்லை என்று நினைக்கிறேன்!
பதிலளிநீக்குபின்னர் வருகிறேன், கௌ அண்ணா.
கீதா
நன்றி. கடைசியில்(?) எழுதியவர் நெ த போல எழுத முயன்றிருக்கிறார். கே ஜி ஜி க்குப் பிறகு எழுதியிருக்கும் இரண்டாவது ஆள் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா?
நீக்குநெல்லையேதான்.
நீக்குகீதா
கல்கத்தா வரலாறு பகுதி நெல்லை.
நீக்குமற்றவற்றிற்கு வருகிறேன் வாசித்துவிட்டு, கௌ அண்ணா
கீதா
நகைச்சுவை இப்போதெல்லாம் ரசிக்கத் தகுந்தவகையில் இல்லை எனலாம். காஞ்சனா படம் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குநல்ல தரமான நகைச்சுவை என்பது மிகக் குறைவு.
கீதா
பழைய காஞ்சனாவும் பார்த்ததில்லை இப்போதைய காஞ்சனாவும் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குகீதா
கடுகு பதில்கள் பகுதி, ஶ்ரீராமைக் காப்பியடித்ததுபோல இருக்கிறது. அவர்தான், மத்தவங்களுக்குப் படிக்க முடியுதான்னு கவலைப்படாமல் மிகப் பழைய புத்தகங்களிலிருந்து போட்டோகாப்பி எடுத்து வெளியிடுவார்.
பதிலளிநீக்குநிம்மதி பற்றிய கட்டுரையைப் படித்து கண்ணதாசன் எழுத்து போல இருக்கிறதே என நினைத்தேன். எப்படி, உண்மையை அழகாக எழுதியிருக்கிறார். வாழ்க்கை என்பது பலதும் கலந்ததுதானே
பதிலளிநீக்குஒரு படம், 1, 2 , 3 என வந்தாலே, முதல் படம் பெரும் வெற்றிபெற்றது என்று புரிந்துகொள்ளலாம். காஞ்சனா டைப் படங்கள் கொஞ்சம் மலின நகைச்சுவையுடன் கூடியது. அதில் மனோபாலா பகுதியை எப்போதும் ரசிப்பேன்.
பதிலளிநீக்கு