16.10.25

ரேஷனில் மண்ணெண்ணெயும் சேட்டைக்காரர் அனுபவங்களும்

மறுபடியும் ஒரு சிறு தொடர்.  வாராவாரம் வியாழன் அன்று வெளிவரும். நண்பர் சேட்டைக்காரன் என்கிற வேணுகோபாலன் தனது அனுபவங்களில் சிலவற்றை பகிர வருகிறார்.  அவராக அலுத்துப்போய் நிறுத்தும் வரை இந்தத் தொடர் தொடரும்!  சேட்டைக்காரன் என்கிற வேணுகோபாலனா, வேணுகோபாலன் என்கிற சேட்டைக்காரரா என்பதில் எனக்கு ஒரு குழப்பம் உண்டு.  அவர் இயற்பெயர் வேணுகோபாலன்.  வலையுலகில் அவர் வைத்துக்கொண்ட பெயர் சேட்டைக்காரன்.  எனவே முதலில் வேணுகோபாலன் என்கிற பெயரைப் போடுவது முறை.  ஆனால் அவர் எனக்கு முதல் அறிமுகம் சேட்டைக்காரன் என்று.  எனவே அதை முதலில் போடுவதும் சரி!  

வேணுஜி தொடர்கிறார்.  

'தொடர்கிறார்' என்று சொல்ல வேண்டுமா, 'ஆரம்பிக்கிறார்' என்று சொல்ல வேண்டுமா?  நான் எப்பவுமே ஒரு குழப்ப ஆசாமி.  இந்த வியாதி எனக்கு பாஸிடமிருந்து வந்தது!

*******


கூரைக்கூச்சல் – 01

வேணுகோபாலன் 


இப்படியொரு தொடர் எழுதலாம் என்று பேசி ஒரு மினியுகமே முடிந்து விட்டது. ’சுயதம்பட்டம் அடிக்க வா,’வென்று களம் கொடுத்தும் இதுகாறும் எழுதாமலிருந்தது ஏன் என்பது எனக்கே விளங்கவிலை. அடியேன் ஒரு extrovert என்பது அகிலமறிந்தது என்பதும் எதிரே இருப்பவர் பேசி எச்சில் விழுங்குவதற்குள் என் சுயபுராணத்திலிருந்து ஒரு கண்ணியை எடுத்து விட்டு பொழிப்புரை செய்யத் தயங்குவதில்லை என்பதும் உண்மை. பல சந்தர்ப்பங்களில், உரிமையோடு சிலர் ‘Don’t shout from the roof top,’ என்று அடக்குமளவுக்கு அழிச்சாட்டியக்காரன் என்பதால், அதையே எளிமையாக கூரைக்கூச்சல் என்று தலைப்பிட்டு வழங்குகிறேன்.

ஓசூர் நாட்கள் – டீஸர்

முதலில் பார்த்த உருப்படியான வேலை என்பது ஓசூர் டி.வி.எஸ்ஸில் தான். அதற்கு முன்னர், என் அண்ணன் முகதாட்சண்யத்தால், ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வவுச்சர்களை ஃபைலில் கோர்த்தது, நரசுஸ் காப்பியில் பில் போட்டது, லெண்டிங் லைப்ரரி நடத்தியது என்று சில சாகசங்கள் செய்திருந்தபோதிலும், அப்பாயின்மெண்ட் ஆர்டர் என்று ஒன்று வாங்கி, சீருடை என்று ஒன்று போட்டுக்கொண்டு, டைம் ஆபீஸில் கார்டு பஞ்சடித்து, உறுமும் இயந்திரங்களுக்கு மத்தியில், ஒரு நாற்காலி மேஜையுடன் வேலை பார்க்கத் தொடங்கியது ஓசூர் டி.வி.எஸ்ஸில் தான். அந்த அளவுக்கு பி.காம் மதிப்பெண்கள் ஒன்றும் விண்ணை முட்டவில்லை. மூன்று வருடங்களுக்கு கூட ஒரு வருடம் இருக்கட்டும் என்று இருந்து படித்து ஒருவழியாக பாஸாகினேன்.

சபரிமலை ஐயப்பன் புண்ணியத்தில்தான் எனக்கு வேலை கிடைத்தது என்று சொன்னால், அதுவே சரி. ஒரு தடவை நானும் என் அப்பாவும் சபரிமலைக்குச் சென்றுவிட்டு, அபிஷேகத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, என் அப்பாவின் பால்ய நண்பரும், டிவிஎஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியை வகித்துக் கொண்டிருந்த ஒருவருமான ஒரு புண்ணியவான் அதே ‘விரி’க்கு வந்து சேர்ந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘புள்ளாண்டன் என்ன பண்றான்?’ என்று அவர் வினவ, ‘நெய்த்தேங்காய் உடைச்சிண்டிருக்கேன்,’ என்று நான் துடுக்குத்தனமாக பதில் சொல்வதற்குள், ‘பி.காம் முடிச்சுட்டு வேலை தேடிண்டிருக்கான்,’ என்று அப்பா சொல்ல, ‘அப்படியா? மெட்றாசுக்கு வந்து என்னைப் பாரு,’ என்று அவர் சொல்ல, அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை நான். ஆனால், அப்பாவுக்கு எப்படியாவது என்னை நாகர்கோவிலிலிருந்து துரத்தி விட்டால், ஆர்.எஸ்.எஸ் சகவாசம் தீருமே என்ற நப்பாசை. அதன்படியே ஒரு நாள், நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து மெட்றாஸ் வந்து, எழும்பூர் கென்னத் சந்தில் துர்காபிரசாத் லாட்ஜில் ரூம்போட்டு, இரவு தேவி பாரடைஸில் ஏதோ ஒரு டஞ்சன் படம் பார்த்துவிட்டு, மறுநாள் அபிராமபுரத்திலிருந்த அப்பாவின் நண்பர் வீட்டுக்குச் சென்றடைந்தபோது, அன்னார் கைவைத்த பனியன், வேட்டியுடன் பழைய பேப்பர், பிளாஸ்டிக் மற்றும் இதர தேறாத சாமான்களை எடைக்கு எடை போட்டு, பென்சிலால் ஒரு பேப்பரில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்.

’வாடா!’

காப்பி வந்தது. குடித்து முடித்ததும் நான் கொண்டுபோன பயோடேட்டாவை, ஒரு மாதிரி பார்த்துவிட்டு, ‘உங்க நாகர்கோவிலில் இதுக்குப்பேர்தான் பயோடேட்டாவா?’ என்று கேட்டுவிட்டு, ‘சரி, கூப்பிடுவாங்க. போய் இண்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணு,’ என்று சொல்லவும், ‘ஓஹோ, இதுக்கா இம்புட்டு பில்ட்-அப்?’ என்று அன்று மாலை மீண்டும் நெல்லை எக்ஸ்பிரஸ் (அப்போது நாகர்கோவிலுக்கு சென்னையிலிருந்து நேரடி ரயில் கிடையாத்..!)

ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் என்று கடக்க, ராணிமுத்து தினசரி காலண்டர் இளைக்கத் தொடங்கியபோது, ‘இது சரிப்படாது,’ என்று எண்ணிய என் அப்பா, காஸியாபாத்-ல் பணிபுரிந்துகொண்டிருந்த என் அண்ணனுடன் தொடர்பு கொண்டு, ‘ஜிடி எக்ஸ்பிரஸில் ஏற்றி அனுப்புகிறேன். டெல்லிக்கு வந்து கூட்டிக்கொண்டு போகவும்,’ என்று மீண்டும் மெட்றாஸ் கூட்டிக்கொண்டு வந்து, அனுப்பி வைத்தார்.

 நவம்பர் மாத இறுதி! ‘பயங்கரமா குளிரும்! ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வா,’ என்று அண்ணன் அக்கறையுடன் அறிவுரைத்ததை அலட்சியம் செய்துவிட்டு ‘அட போடா, அப்படியென்ன விறைச்சு செத்தா போயிருவோம்?’ என்று காலில் ரப்பர் செருப்புடன் ஜிடியில் புறப்பட்ட எனது முறைப்பு போபாலை நெருங்கும்போதே தேய்ந்து, உடம்பெல்லாம் கொன்னக்கோல் இசைக்கத் தொடங்கியது. புது தில்லி ரயில் நிலையத்தில் என்னை வரவேற்க (?!) வந்த என் இளைய அண்ணன் என்னை ஏற இறங்கப் பார்த்து, ‘ நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?’ என்ற மில்லியன் டாலர் கேள்வியுடன், ஒரு பட்-பட்டியில் ISBT அழைத்துக்கொண்டு போய், நேரு பிரதமராக இருந்தபோது கடைசியாக துடைக்கப்பட்ட ஒரு பஸ்ஸில் உட்காரவைத்து காஸியாபாத் இட்டுக்கினு போனான்.

காஸியாபாத்திலும் என்னையும் எனது பயோடேட்டாவையும் அனைவரும் வினோதமாகவே பார்த்தார்கள் என அறிக! ‘முதலில் ஹிந்தி கற்றுக்கொள்! பிறகு பார்க்கலாம்,’ என்று போன அனைத்து இண்டர்வியூவிலும் கண்டிசனாகச் சொன்னார்கள். நடுநடுவே பஸ் பிடித்து டெல்லிக்குப் போய் நேரு பிளேஸ், ஜனக்புரி, கல்கஜி என்று பல walk-in-interviewக்களை அட்டெண்ட் செய்கிற சாக்கில், சாணக்யாவிலும், ரீகலிலும் ஒரு மண்ணும் புரியாத சில ஆங்கிலப்படங்களைப் பார்த்தும், ஜன்பத்-திலும் பாலிகா பஜாரிலும் வண்ணமயமாக உலாவந்து கொண்டிருந்த வடபுலத்து வஞ்சியரை வாய்நீர் வழிந்தொழுக வகைதொகையின்றி ஸைட் அடித்தும் பொழுது போய்க் கொண்டிருந்தது. இதற்கிடையே…

ஓசூரில் நேர்முகத்தேர்வு! உடனே வரவும் – என்று டிவிஎஸ்ஸிலிருந்து ஊருக்குத் தந்தி போக, அப்பா டிரங்க் கால் அடித்து விஷயத்தைச் சொல்ல, நேர்முகத்தேர்வுக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கவே, இரண்டு மாத காஸியாபாத் வாசத்தை முடித்துக்கொண்டு, முன்பதிவுக்கு வழியில்லாமல் பொதுப்பெட்டியில் ஏறி மீண்டும் ஜிடி எக்ஸ்பிரஸில் மெட்றாஸ் திரும்பல்! அடுத்த நாள் பத்து மணிக்கு ஓசூரில் நேர்முகத்தேர்வு என்பதால், ஏற்காடு எக்ஸ்பிரஸ் பிடித்து, ஜோலார்பேட்டையில் இறங்கி, வாசலில் வா வாவென்று வரவேற்றுக் காத்திருந்த சுத்தமான தமிழ்நாட்டு பஸ்ஸில் ஏறி, ஓசூர் சென்றடைந்தேன்.

இண்டர்வியூவெல்லாம் சும்மா லுல்லுலாயிக்குத்தான்! அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை தொழிற்சாலைக்குள் இருந்த மருத்துவ மையத்திலேயே முடித்துக்கொண்டு, கண் பரிசோதனை, உளவியல் பரிசோதனை மற்றும் வேறு சில பரிசோதனைகளுக்காக பெங்களூருக்கு விரட்டினார்கள். அவ்வண்ணமே செயிண்ட் ஜான்ஸ் ஹாஸ்பிட்டலில் ரத்தப்பரிசோதனை, ரிச்மண்ட் ரோட்டில் கண்பரிசோதனை, சிவாஜி நகரில் அசப்பில் மாலா சின்ஹா மாதிரி இருந்த ஒரு மருத்துவரிடம் உளவியல் பரிசோதனை அனைத்தையும் முடித்துக் கொண்டு, ஓசூருக்குத் திரும்பியபோது, வாழ்க்கையில் முதல்முறையாக, என் பார்வை சரியில்லை என்பதை மருத்துவ ரீதியாக உணர்ந்து, கண்ணாடியுடன் வந்தடைந்தேன்.

வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாத்தின் பிள்ளையார்சுழி போடப்பட்டது. 

​==================================================================================

ரேஷனும் மண்ணெண்ணையும் 

seven O clock என்று ஒரு வாட்ஸாப் குழுமம்.  திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களால் தொடங்கப்பட்டது.  பெரிய பெரிய தலைகள் எல்லாம் அதில் அங்கத்தினர்கள்.  எனக்கும் இடம் கொடுத்திருக்கிறார்   ஆரண்யநிவாஸ்.  Strictly No Good Morning messages, No Forwards!

அட்ஜவ்;ல் மத்யமர் குழு போல தினம் ஒரு டாபிக் கொடுப்பார்கள்.  அதைப்பற்றி அன்று முழுவதும் கதைப்பார்கள்.  அதில் ஒருநாள் கொடுத்த தலைப்பு "ரேஷன் கடையில் க்யூவில் நின்று வாங்கிய அனுபவம் உண்டா?  அதுவும் சர்க்கரை!"

கடைசி வரி தேவை இல்லை என்று நினைத்தேன்.  ஏனென்றால் சர்க்கரை வாங்குவதெல்லாம் பெரிய விஷயமில்லை.  மண்ணெண்ணெய் வாங்குவதுதான் சிரமம்.  ஒருவேளை கேட்டவர் வீட்டில் அப்போது Gas Connection இருந்திருக்கலாம்.

எங்கள் வீட்டில் அது கிடையாது.  எனவே மண்ணெண்ணெயையே நம்பி இருந்தோம்.  ப்ளஸ் கரி அடுப்பு.  80 களின் இறுதி என்று நினைக்கிறேன்! 

எங்கள் வீட்டில் Gas Connection வாங்க அப்பாவும், பாட்டியும் எதிர்ப்பு!  வீட்டுக்கே வந்து இணைப்பு கொடுக்க இண்டேன் நிறுவன ஆட்கள் வந்தபோது நிர்தாட்சயன்யமாக மறுத்து விட்டார் அப்பா.

பின்னர் தல்லாகுளத்தில் இருந்த கார்த்திக் ஏஜென்சியில் ரேஷன் கார்டுடன் சென்று சத்தமில்லாமல் பதிந்து வந்தேன்.  பதிவு செய்ய 140 ரூபாய் கட்டணம்.  சிலிண்டர் விலை அப்போது 40 ரூபாய் என்று நினைவு.  இரண்டு நாட்களில் இணைப்பு கிடைக்க, அதையும் அப்பா வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  சிலிண்டர் எந்நேரமும் விடுத்து விடுமாம், எங்கள் வீட்டில் யாருக்கும் அதை சரியாக கையாளத் தெரியாது என்று காரணம் சொன்னார்.

Gas stove போலவே இருக்கும் என்று ராஜஸ்தானிலிருந்து அறிமுகமான ஒரு முறையை  வீட்டில் அமுல் செய்தார்.  சமையலறையில் அடுப்புக்கு அருகே பதினைந்தடி உயரத்தில் ஒரு ஸ்டாண்ட் அமைத்து, அதில் மண்ணெண்ணெய் டின் வைக்கவேண்டும்.  வாட்டர்கேன் போல அதிலிருந்து ஒரு டியூப் கீழே இறங்கும்.  அது அடுப்புடன் இணையும்!  அங்கிருந்து ஊசித்துளை போல மண்ணெண்ணெய் இறங்க, நீல நிற ஜ்வாலையுடன் அடுப்பு எரியும், மண்ணெண்ணெயும் சிக்கனமாக செலவாகும். அப்படிதான் அவர்கள் சொன்னார்கள்.  50% ஓகே.

அப்பா தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.  கடைசிவரை அவர் பெயரில் இணைப்பு வாங்கவே இல்லை.  அண்ணனுக்கு திருமணமாகி பின்னர் சிலகாலம் கழித்து 93 மார்ச்சில் தனிக்குடித்தனம் வைக்கும் நிலை வந்தபோது அண்ணி திருவனந்தபுரத்திலிருந்து தான் தன் பெயரில் அங்கு வைத்திருந்த இணைப்பை மதுரைக்கு கொண்டு வந்தார்.  அப்பாவும் அம்மாவும் அருகிலேயே ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் குடியிருந்தார்கள்.  அம்மா மண்ணெண்ணெய் ஸ்டவ்தான் வைத்திருந்தார்.  அண்ணன் வீட்டிலிருந்து உதவி வந்தாலும் தனக்கு தேவையான சிலவற்றை அம்மாவை வைத்துதான் செய்யச் சொல்வார்.

இப்போது மீண்டும் 80களின் இறுதிக்குச் செல்வோம்.

​=============================================================================================

இந்த தகவலை எபியில் பகிருங்கள் என்று சொன்ன ஜீவி ஸாருக்கு நன்றி.  கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே....




படம் கிடைத்தபடிபகிர்ந்திருக்கிறேன்.  இங்கு படிக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் இதை தரவிறக்கி தனியாக பெரிதாக்கி படிக்கலாம்.  நான் பெரிதாக்கி இமேஜ் எடுத்தால் சரியாக, முழுமையாக வராது.

================================================================================================

எப்படி இருந்த நான்...

இப்படி ஆயிட்டேன்....!

=============================================================================================

இணையத்தில் படித்தது...  



பெங்களுரு பார்பன அக்ரஹாரா ஜெயில் கைதி அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்...
வரதட்சனை கொடுமை வழக்கில் நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று உள்ளே வந்தவர்.செய்யாத குற்றத்திற்காக மனைவி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் தள்ளப்பட்டார்.
உண்மை தெரிந்த மனைவியே தனக்கு எதிராக மாறியபிறகு நமக்கு என்ன வெளியே வேலை உள்ளேயே இருந்துவிடுவோம் என்று சிறையில் இருந்து வருகிறார்.சிறிது நாள் கழி்த்து இனி ஆக வேணடியதை பார்ப்போம் என்ற மனநிலைக்கு வந்தபோதுதான் சிறைக்கைதிகள் தயாரிக்கும் பேக்கரி அயிட்டங்களை மார்கெட்டிங் செய்ய ஒரு ஆள் தேவைப்படுவதை அறிந்தார்.
சிறைக்கு வருவதற்கு முன் அசோக்ஜெயின் வியாபாரியாக இருந்ததால் தானே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதோ பத்து வருடங்களாகிறது இவரது விற்பனை திறன் மற்றும் தயாரிப்பின் தரம் காரணமாக இந்த சிறிய பேக்கரி கடையில் உள்ள சரக்குகளுக்கு எப்போதுமே டிமாண்ட் அதிகம்.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் மற்றும் கைதிகளை பார்க்கவருபவர்களும் இந்த கடையைத்தான் நம்பி வருவர்.
தரமான பொருள் விலை குறைவு காரணமாக எப்போதுமே சரக்குகளுக்கு டிமாண்ட்தான்.நிறைய பேர் மொத்தமாக வாங்கிச்சென்று சில்லரை வியாபாரத்திலும் ஈடுபடுகின்றர்.
பேக்கரி வியாபாரம் காரணமாக அதிகாரிகள் ஆதரவுடன் சிறைக்கு உள்ளேயே ஒரு கோடி ரூபாய்க்கு பேக்கரி மெஷின் வாங்கிப்போடப்பட்டுள்ளது.
பேக்கரியினால் வரும் லாபம் கைதிகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.விருப்பம் உள்ள கைதிகளுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
அவ்வப்போது புதுமையான சரக்குகளும் அறிமுகப்படுத்தப் படுகின்றது.சிறைத் தண்டனை முடிந்து வெளியே வரும் பேக்கரி தொழில் தெரிந்த கைதிகளுக்கு வேலை வாய்போ அல்லது சிறுதொழில் வாய்ப்போ காத்திருக்கிறது.
இவ்வளவ விஷயத்தையும் பகிர்ந்து கொண்ட கைதி அசோக்ஜெயின் அவ்வப்போது செய்த இனனோரு காரியமும் அவரது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது.
கையில் காசு இல்லாமல் வருபவர்களிடம் கூட இன்முகம் கொடுத்து பேசி இலவசமாகவே டீ பிஸ்கட் கொடுக்கிறார்.
இது நாட்டமில்லை எனக்கான லாபத்தில் சற்று குறைவு இவர்களுக்கு உதவியதால் என் மனதில் நிறைவு என்று சொல்லும் அசோக் ஜெயின் ஒரு ஆச்சர்யமான மனிதராகவே தென்பட்டார்.

லயன் ராமகிருஷ்ணன், அந்திபுரம் & வா ஸ்ரீ ந்ருசிம்மன்.

============================================================================

சில யோசனைகள்...


வயதான காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில வழிமுறைகள் கூறும், மருத்துவர், வி.எஸ்.நடராஜன்:
நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும்.
ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும்.
வயது ஆக ஆக, மனதளவில் பந்த பாசங்களை குறைத்து வாழ, முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது.
வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை.
எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.
சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.
குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும்.
உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது.மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர்.
தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.
முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்!
தினமலரிலிருந்து...
=======================================================================

கு ப ரா



"ராஜகோபாலன் நல்ல சிவப்பு; குள்ளம்; மெலிந்த பூஞ்சை உடல்; பூ மாதிரி இருப்பார். சாப்பாடு கூட கொறிப்புதான். பல பெரியவர்களுக்குக் கிட்டுகிற தனிப்பட்ட முக அமைப்பு அவருடையது. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்குத் தடிக் கண்ணாடி. சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். அவருடைய உடலில் பெரிதாக இருந்தது கண் ஒன்றுதான். உலகத்தைப் பார்ப்பது தான் பிழைப்பு என்று சொல்வது போல அந்தக் கண்ணாடியும் கண்களைப் பெரிதாக்கிக் காட்டும்."

-தி. ஜானகிராமன்*

- உத்தியோகம் என்பதில்லாமல் எழுத்துக்களை மட்டும் நம்பி உயிர் வாழ வேண்டி வந்த அவனுடைய நிலைமையைப் பார்த்து நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அவன் வேதனையைச் சொல்லத் தேவையா? ஆனாலும் அவன் எழுதுவதில் சளைக்கவில்லை. வறுமை ஏற ஏறப் பத்திரிகைகளில் அவன் எழுத்துக்கள் அதிகப் பட்டன. அம் மனநிலைதான் அவன் துறவையும் ஸக்ஷ்யத்தையும் சாதனையையும் காட்டும் திறவுகோல்” /அலைமகள், மே. 1944 293人

கு.ப.​ராவைப் போல் புதுமைப்பித்தனும் நிலையான பணி என ஒன்று இவ்வாமல், எழுத்தை மட்டுமே நம்பி உயிர் வாழ முற்பட்டார். அவருடைய வாழ்விலும் இது போள் அடுக்கடுக்கான சோதனைகளும் வேதனைகளுமே சூழ்ந்தன. அவர் தம் இறுதிக் காலத்தில் மரணப் படுக்கையில் கிடந்த நிலையில் - நண்பர் சிதம்பர பகுநாதனுக்குப் பின்வரும் ஓர் உருக்கமான அறிவுரையைக் கூறினா ராம்: 'சிதம்பரம், இலக்கிய ஆசை உளக்கு உண்டு. இருக்கட்டும். உன் முழு நேர உழைப்பையும் அதற்காகச் செலவழித்து விடாதே. அது உன்னைக் கொன்று விடும். இவக்கியம் வறுமையைத்தான் கொடுக்கும். அதைப் பொழுதுபோக்காகவே வைத்துக் கொள் (புதுமைப்பித்தன் வரலாறு, ப. 94).

என்னதான் வறுமையில் வாடினாலும், கு.ப.ரா இலக்கியத் திற்குத் தம் வளமான பங்களிப்பினைத் தந்தார்; இலக்கியமோ தன் பங்கிற்கு வறுமையையே அவருக்குத் தந்தது.

இறுதி நாட்கள்

1943ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அ.வெ.ர கிருஷ்ணசாமி ரெட்டியார் திருவோக சீதாராம் ஆகிய இருவரின் வேண்டுகோளை ஏற்று கு.ப.ரா. துறையூரிலிருந்து வெளிவரும் 'கிராம ஊழியன்' என்ற பத்திரிகையின் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். கும்ப கோணத்தில் இருந்து 'மறுமலர்ச்சி நிலைய'த்தைக் கவனித்தவாதே. 'கிராம ஊழியன் சிறப்பாசிரியர் பொறுப்பையும் அவர் திறம்பட மேற்கொண்டு வந்தார். இடையிடையே 'கலைமகள்' மோகினி முதலான பத்திரிகைகளுக்கும் அவர் எழுதி வந்தார்.

இந்நிலையில் 1944-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கு.ப.ரா., கிருஷ்ணசாமி ரெட்டியாரின் அறிவுரைப்படி துறையூருக்கே சென்று 'கிராம ஊழியனின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அப்போது 'காங்க்ரின்' (Gankrene) என்னும் கொடிய நோய் அவருடைய கால்களைத் தாக்கியது. காலின் சதைகள் உயிரற்றுப் போய், முழங் காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் உடனடியாக எடுத்து விட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையைக் கு.ப.ரா. எதிர் கொண்ட விதம் குறித்தும், அவரது இறுதி மணித் துளிகள் பற்றியும் கரிச்சான்குஞ்சு எழுதியிருப்பது பின்வருமாறு:

"ஆம்ப்யுடேஷன் செய்வதற்கு உரியவற்றை உடனே செய்யத் தொடங்கினார்கள். கு.ப.ரா. தடுத்து விட்டார். நனைந்த கண்க ளுடன், Let me die a peaceful death என்று சொல்லி விட்டு, 'காவேரி தீர்த்தம் ஒரு டம்ளர் வேண்டும்' என்றார். உடனே ஓடிப் போய் பக்கத்திலிருந்து பக்தபுரத் தெருவிலிருந்து வாங்கி வந்தோம். கை நடுங்க வாங்கிக் குடித்தார் ஒரு வாய். அவ்வளவுதான். துவள ஆரம்பித்தார். காரில் வீட்டுக்குக் கொண்டு வந்தோம். வீட்டிற்குள் போவதற்குள் உயிர் பிரிந்து விட்டது" (கு.ப.ரா.. ப.20).

எதற்கும் சரியான காலம் வர வேண்டும்" (அகலிகை, ப 20/ என எழுதிய கு.ப.ரா.வைச் சரியான காலம் வருவதற்கு முன்னமேயே காவு கொள்ளை கொண்டது. 27.04.1944 தமிழகம் அழுக நாட்களில் ஒன்றாயிற்று.

பாலுறவைக் கையாண்டுள்ள முறை

.கு.ப.ரா. தம் கதைகளில் பாலுறவைக் கையாண்டுள்ள முறை கூர்ந்து நோக்கத் தக்கதாகும். வெறும் உருவக் கவர்ச்சியையும் பருவக் கிளர்ர்சியையும் அடிப்படையாகக் கொண்டு, படிக்கும் மனங்களுக்குப் போதை ஊட்டும் வகையில் அவர் பாலுறவைச் சித்திரிக்கவில்லை. பண்பாட்டின் எல்லைக்குள் நின்று துணிவோடு அவர் ஆண்- பெண் இருவரின் பாலியல் பண்புகளை சித்திரித்துள்ளார். அங்ஙனம் சித்திரிக்கும் போது அவர் கவர்ச்சியும் கிளர்ச்சியும் ஊட்டும் ஆரவாரமான சொற்களைக் கையளவில்லை. பட்டுப்போன்ற மென்மையும் குறிப்பாற்றலும் பொருந்திய அமைதியான சொற்களையே தம் கதைகளில் கையாண்டார். எடுத்துக்காட்டுக்களாக, அவருடைய கதைகளிலிருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்.

'சிறிது வெளிச்சம்' என்னும் கதையில் தன் கணவனின் கொடுமைகளால் மனம் நொந்து போன - கணவனிடம் இன்ப நிறைவைக் காண முடியாத ஒரு பெண் தன் துன்பத்தைக் கண்டு அனுதாபமும் இரக்கமும் கொள்ளும் இவ்வொரு ஆணிடம் - ஓர் எழுத்தாளரிடம் -தன் உள்ளத்தைப் பறிகொடுக்கிறாள். இந்த நிகழ்ச்சியைக் கு.ப.ரா. பின்வருமாறு தீட்டியுள்ளார்:

நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள் போலிருந்த அவளிடம் நெருங்கி, என் மேல் சாய்த்துக் கொண்டேன்.

அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தான்.

திடீரென்று அம்மா!.. போதுமடி!' என்று கண்களை மூடியவண்ணமே முனகினாள்.

'சாவித்திரி, என்னம்மா?' என்று நான் குனிந்து அவன் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டேன்

போதும்!"

சாவித்திரி, விளக்கு..."

ஆமாம், விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொள்ளுங்கள், சற்று நேரம் இருந்த வெளிச்சம் போதும்!' என்று எழுந்து நின்றாள்."

(சிறிது வெளிசம்12-13/

மேலோட்டமாகப் படிக்கும் போது இப்பகுதியில் வெறும் பாலுறவே பச்சையாகக் காட்டப்பட்டிருப்பது போல தோன்றும். . ஆயின், ஆழ்ந்து நோக்கினால் இப்பகுதியில் ஆண் பென் இருவரின் பாலியல் பண்புகளையே ஆசிரியர் துணிவோடு காட்டியுள்ளமை புலனாகும். பலரும் கையாள மருளும் ஆண் -பெண் உறவு முறையின் வித்தியாசமான பக்கத்தினை அவர் அமைதியான குறிப்பு மொழியால் ஆழமாகப் புலப்படுத்தியுன்னமை விளங்கும். ஆண் - பெண் உறவையே முக்கியமான விஷயமாகக் கையாண்டதால் அவர் (கு.ப.ரா. / எழுத்தில் ஏதோ பச்சையாக இருப்பதாகர் சொல்கிறார்கள். பெண் மனம் இப்படியா இருக்கிறது என்று நினைக்க இஷ்டப்படாதவர்கள் உண்மையை பார்க்க, பேச பயந்தவர்கள் கூறும் பேச்சு இது. அவர்கள் மறுப்பதே அவன் எழுத்தின் உண்மைக்கு அத்தாட்சி. பச்சையாக இருந்தால்அது அவன் குற்றமன்று. ஆண்- பெண் உறவு இப்பொழுது நிலவி வரும் முறையின் குற்றம் "என்னும் . பிச்சமூர்த்தியின் கூற்று (கு ப ராஜ கோபாலன்", கலைமகள், மே, 1944. ப. 293/ இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

மோகினி மாயை என்னும் கதையில் ஒரு குறிப்பிட்நெருக்கடியான சூழவில் ஆண் பெண் இருவரின் உள்ளத்தில் எழும் சலனத்தையும் கிளர்ச்சியையும் ஆசிரியர் நுட்பமாகப் படைத்துக் காட்டியுள்ளார்.

"படத்திலிருந்து மோகினி நடந்து வருவது போலக் கமலம் வந்தாள்.

'என்ன அப்படிப் பார்க்கிறாய் பாலு? ரொம்ப இறுக்கமாக இருந்தது. குளித்து விட்டு வேறு புடவை உடுத்திக் கொண்டேன்" என்று சொல்லிக் கொண்டே முந்தானையைத் தொங்க விட்ட வண்ணம் தலை மயிரை ஆற்றிக் கொண்டு அவள் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

'நேற்று கொடியில் போட்ட புடவையை விரித்து விட மறந்து போய் விட்டேன உவரவே இல்லை; ரவிக்கை வெறும் ஈரம். வெயிலில் போட்டிருக்கிறேன். நெற்றிக்கு வைத்து கொண்டிருக்கிறேனா பார் *

பாலு பார்த்துக் கொண்டு இருந்தான்.

'இப்பொழுது என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது!" என்று கமலம் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"மோகினி போல இருக்கிறது"

"என்ன! மோகினி போலா?"

இருவருக்கும் மேலே வார்த்தையே ஓடவில்லை."

115-116/(சிறிது வெளிச்சம்

இப்பகுதியில் ஆசிரியர், பாலுணர்வு மனித மனத்தில் எழுப்பும் இயல்பான தூண்டுதலை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்: மனித உளவியலின் அடிப்படையில் பாலுறவில் ஈடுபடும் ஆண் -பெண் இருவசின் மன நிலைகளையும் செயல்களையும் வெளிப்படையாக எழுதியுள்ளார்

பார்வதியின் தவம்' என்னும் கதையில் சிவபெருமான் கைலாய மலையின் உச்சியில் தவம் செய்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறார்.அவருடைய தவக் கோலம் பார்வதியின் உள்ளத்தில் காதல் உணர்வை மலரச் செய்கிறது. அவளும் அவரை நோக்கித் தவம் இயற்றுகிறாள். சிவபெருமானின் கண்கள் திறக்கின்றன. அவருடைய தவம் கலைகின்றது. பார்வதியின் பாவையன்ன அழகு அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. உணர்ச்சி வயப்பட்டு இருவரும் இணைகின்றனர். இந்நிலையை ஆசிரியர் பின்வருமாறு படம்பிடித்துக் காட்டுகின்றார்:

"சிவபெருமான் -பார்வதியை நோக்கிக் கைகளை நீட்டினார் மெய்ம்மறந்த மகிழ்ச்சியுடன் பார்வதி சிவபிரான் மார்பில் சாய்ந்தாள்."

கு ப ரா பற்றிய ஒரு புத்தகத்திலிருந்து....
====================================================================

மாயோன் படம் பற்றி சென்ற வெள்ளிக்கிழமை குறிப்பு இருந்தது. ஓய்வு கிடைத்தபோது நான் முழுப் படத்தையும் பார்த்தேன். அந்த படத்துக்கான டைட்டில் கார்டில் இந்த வரிகள் காட்டப்பட்டன. அதுவே கீழே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள காட்டப்பட்டது. இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததது. படமும் மோசமில்லை.

THERRE ARE TWO WAYS TO LIVE YOUR LIFE

ONE IS, AS THOUGH NOTHING IS A MIRACLE

THE OTHER IS, AS THOUGH EVERYTHING IS A MIRACLE

====================================================================

ஜோக்ஸ். இந்த வாரம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட சில ஜோக்ஸ்....









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!