திங்கள், 31 டிசம்பர், 2012

அதிர்ச்சி தரும் வெட்கக்கேடு?

                     
இதற்கு முன் எவ்வளவோ அக்கிரமமான, அருவருக்கத் தக்க "அழிப்பு" குற்றங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் விழித்துக் கொண்டு ஆட்சேபம் தெரிவிக்காத இந்திய சமூகம், தலைநகரில் நடந்த இந்த அதி அக்கிரம, ஆபாசக் குற்றம் பற்றி அறிந்தவுடன்,துயிலெழுந்து முழங்கிப் புறப்பட்டு ஆர்ப்பரிக்கிறது. பயனுள்ள ஒரு நடவடிக்கை வரும் வரை ஓயாது என்று நினைக்கத் தோன்றுகிறது. அதுவரை ஒரு முன்னேற்றம் தான். 
     
ஆனால் இதில் பாராளுமன்றம், அமைச்சர், உறுப்பினர் மற்றும் கட்சிப் பிரமுகர் அல்லது சமுதாய முன்னணி பிரமுகர்கள் செய்யக் கூடியது எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அருண் ஜெட்லி சொன்னது போல, கடும் தண்டனை தரக் கூடிய குற்றமாக அறிவித்தல் மிக எளிதான தீர்வு. அது விரும்பிய மாறுதலை உண்டாக்குமா என்பது மிகவும் சந்தேகப் படவேண்டிய விஷயம். ஒவ்வொரு அயோக்கியனுக்கும் பின்னால் ஒரு போலீஸ்காரர் சுற்ற முடியாது. வாய்ச் சொற்களோ என்ன பயனும் இல. பின் உண்மையான பயன் தரக் கூடியதாக யார் என்ன செய்ய முடியும்? 
            
தனியாக பெண் ஒருத்தி செல்லக் கூடாது என்று எண்ணி வந்தோம். இப்போது உடன் ஒரு ஆண் துணை இருந்தும் பயனின்றிப் போய்விட்டது. காரணம் அக்கிரமம் செய்வோர் ஐந்து ஆறு பேராக கூட்டணி அமைத்துக் கொண்டு வந்தது தான். ஐந்து ஆறு பேர் செய்யத் துணிந்த அக்கிரமத்துக்கு அவர்களில் ஓரிருவர் கூட மறுப்பு சொல்லவில்லை, அதைத் தடுக்க முயலவில்லை என்பது சோகத்தில் எல்லாம் பெரிய சோகம். 
            
இது பலமுனைத் தாக்குதல் செய்து சமாளிக்கப் பட வேண்டிய ராட்சச பிரச்னை. 
            
கண்முன் ஒரு அதி அக்கிரமம் நடக்கிறது என்று தெரிந்த பொழுது அதைத் தடுக்க வழிப்போக்கர்களும் கூட முன் வர வேண்டும். பெரிய இடத்து விரோதம் வந்து விடும் என்ற அச்சம் இதற்கு தடுப்பாக இருக்கிறது. போலிசுக்கு ஒரு வழக்கு எடுத்துச் செல்லப் படும் பொழுது "பெரிய மனிதர்" வீட்டுக்கு போன் செய்து வழக்கைப் பதிவு செய்யலாமா என்று கேட்கும் அளவுக்கு காவல் துறை இருப்பதாக ஒரு அபிப்பிராயம் நிலவி வருகிறது. இது உண்மையானால், அது உடனே நிறுத்தப் பட வேண்டும். எந்த சிபாரிசுக்கும் துணை போகாத உணர்வு காவல் துறைக்கு இருக்க வேண்டும். 
                
அமைச்சர்களும் மற்றைய செல்வாக்குள்ள பெரிய புள்ளிகளும் தவறுக்கு துணை போகக் கூடாது. அப்படி போகிறவர் அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெறாமல் செய்யப் பட வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
           
குடும்பத்தில் கட்டுக் கோப்பு இருக்க வேண்டும். ஒரு பையன் இந்த மாதிரி கேட்பார் இன்றித் தான்தோன்றியாகத் திரிகிறான் என்றால் அக்கம்பக்கத்தவராவது புகார் செய்து அவனிடம் ஓர் அச்ச உணர்வு தோன்றுமாறு செய்யவேண்டும். அந்த மாதிரி புகார் வரும்பொழுது அதனை நாணயமாக விசாரித்து ஆவன செய்ய வேண்டும். புகார் கொடுப்பவரை பிளாக் மெயில் செய்கிற மாதிரி நடந்து கொள்ளக் கூடாது. 
       
இள வயதிலேயே நியாய நேர்மை உணர்வு மிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். தரமான கல்வி நல்ல ஆசிரியர்களைக் கொண்டு எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். 
           
சொல்வது யார்க்கும் எளிது அவ்வண்ணம் செய்தல் அஃதொப்பதில்லை. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பதை மட்டுமாவது செய்யலாம் இல்லையா? 
            
நம் வட்டத்தில் வேறு யாருக்கும் என்ன தோன்றுகிறதோ சொல்லுங்கள். இந்த அவல நிலை மீண்டும் இவ்வளவு பயங்கரமாக தலை எடுக்காமல் செய்ய முடியுமா பார்க்கலாமே.      
                       
பின் குறிப்பு: இது இந்த வருடத்தின் இறுதிப் பதிவு. இந்த நிகழ்வு உலகில் எங்கும் இனி நிகழக் கூடாது என்பது எங்கள் பிரார்த்தனை. 
                   

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சனி, 29 டிசம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 23/12 முதல் 29/12/12



எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

=======================================================================


1) ஜெய்ப்பூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி ஹஃபீஸ் என்பவர் மகன் முகம்மது யூசுஃப் வயது ஆறே மாதம். பிறக்கும்போதே கல்லீரலைக் குடலுடன் இணைக்கும் நாளங்கள் இன்ல்லாது பிறந்த இந்தக் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்க, மருத்துவமனை தன் கட்டணத்தைக் குறைத்தும் கூட 6 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்ற நிலையில் அந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆறுதலளித்துப் பெருமளவு தொகையை அவர்களே (3 லட்சம் வரை) சேகரித்துக் கொடுத்து உதவியிருக்கும் செய்தி வெங்கட் நாகராஜ் பக்கங்களில் படிக்க முடிந்தது.

2) நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில், 'எனக்கு காது கேட்காது'  என்று எழுதி ஒட்டியுள்ளார். காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம், வயது 74. திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை. யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான். ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார். 

     
எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை. இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர். கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு. பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.
                                               கல்யாணசுந்தரத்திற்கு காதுதான் கேட்காது...- எல்.முருகராஜ்

நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர்.
அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார்.
பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.

திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.

யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது.
ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.
இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.

ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது.
அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.

எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.

இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.

கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.

பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்.
இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும். (தினமலர்)


3) கண் பார்வை இல்லாமல், பனைமரம் ஏறி, ஓலைகளை வெட்டி விற்கும் முருகாண்டி: சொந்த ஊர் வெள்ளரியோடை; ராமநாதபுரத்திலிருந்து, 70 கி.மீ., தொலைவில் உள்ளது. அப்பாவும், அம்மாவும், நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்ததால், பிறவியிலேயே, கண்பார்வை இல்லை. சிறிய வயதிலேயே, அப்பா இறந்து விட்டார்.அம்மா, பனை ஓலையில் பாய் முடைஞ்சு, அதை விற்று வரும் பணத்தில், என்னையும், தங்கச்சியையும், வளர்த்தார். என் குருட்டு தன்மையைக் காரணம் காட்டி, வீட்டிலேயே முடக்க நினைக்காமல், என்னை ஊக்கப்படுத்தினார். 10 வயதில், பனை மரம் ஏற்றி விட்டு, மரம் ஏற பழக்கினார்.அதனால், பனை மரங்களில் ஏறி, ஓலை வெட்டும் வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். தங்கைக்கும், நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தேன்.என் மனைவி கலாவதிக்கு, சரியாக நடக்க வராது. எந்த குறையுமின்றி, எங்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இருவரையும், பெரிய படிப்பு படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளில், துவக்க பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன்.அம்மாவின் மருத்துவ செலவும், பிள்ளைகளின் படிப்பு செலவும் அதிகரித்ததால், மிகவும் கஷ்டப்பட்டேன். ஊரில் உள்ளவர்கள், "இவ்வளவு கஷ்டத்தில், பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கணும்? படிப்பை நிறுத்திடு'ன்னு சொன்னாங்க. யார் சொன்னதையும் காதில் வாங்காமல், படிக்க வைக்க வேண்டும் என்று, வைராக்கியம்.பெரிய மகள் சிம்புரா ஷாலினி, 9ம்வகுப்பும்;
                              
                      
சின்ன மகள் லாவண்யா, 7ம் வகுப்பும் படிக்கின்றனர். கண்பார்வை இல்லாமல், மரம் ஏறுவதால், மரப் பட்டைகள், கை, கால்களை கிழித்து, புண்ணாகி வலிக்கும். நான் கஷ்டப்படுவதை, அவர்கள் பார்ப்பதால், படிப்பில் கவனம் செலுத்தி, நன்றாக படிக்கின்றனர். முதல் மூன்று ரேங்குகள் வாங்குகின்றனர்.ஷாலினி கலெக்டராகவும், லாவண்யா டாக்டராகவும் ஆக ஆசைப்படுகின்றனர். அவங்க லட்சியத்தை நிறைவேற்றவே, இவ்வளவு கஷ்டப்படுகிறேன்.
(தினமலர்)
           
4) காரை வேகமாக ஓட்டி, படுகாயமடைய வைத்த போதிலும், காரை ஓட்டிய பெண்ணை தண்டிக்க விரும்பாத நபர், "விபத்திற்கு இழப்பீடாக, 400 கம்பளிகளை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்' என்ற வினோத கோரிக்கையை முன்வைத்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  
   
டில்லியை சேர்ந்தவர் தேவேந்தர் குப்தா. ஜனவரி மாதம், அலுவலகம் சென்று, இரவில், "பைக்'கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், பைக்கை நிறுத்தி இருந்தார்.அப்போது, அசுர வேகத்தில் பின்னால் வந்த கார், தேவேந்தர் குப்தா பைக் மீது மோதி, அவரை தூக்கி வீசியது. அந்த காரை, ருச்சி அகுஜா என்ற, பெண் ஓட்டி வந்தார். உடல் முழுக்க பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிய குப்தாவை கண்டுகொள்ளாமல், அந்த பெண், காரை ஓட்டிச் சென்று விட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த குப்தா, படுகாயமடைய வைத்த ருச்சி அகுஜா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ருச்சி மீதான தண்டனை நிரூபிக்கப்படுமானால், அவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு இருந்தது.   
     
நேற்று முன்தினம், வழக்கு விசாரிக்கப்பட்டது."ருச்சி செய்த குற்றத்திற்கு என்ன இழப்பீடு கோருகிறீர்கள்?'' என, நீதிபதி, பாதிக்கப்பட்ட தேவேந்தர் குப்தாவிடம் கேட்டார். "என் மீது அவர் காரை மோதியது கூட தவறில்லை; நான் ரத்த வெள்ளத்தில் கிடந்த போது, கண்டுகொள்ளாமல் சென்றது தான் எனக்கு தவறாக படுகிறது. இதற்காக அவரிடம் இருந்து பணம் எதையும் பெற விரும்பவில்லை. செய்த தவறுக்கு தண்டனையாக, டில்லி குளிரில் அவதிப்படும் ஏழைகளில், 400 பேருக்கு, ருச்சி அகுஜா, கம்பளிகளை வழங்க வேண்டும்,'' என்றார்.
             
விசாரணைக்கு வந்திருந்த ருச்சி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த அனை வருக்கும், ஆச்சர்யமாக போனது. "இப்படியும் ஒரு நல்ல மனிதர் இருக்கிறாரே' என, பலரும் வியந்தனர்.தேவேந்தரின் கோரிக்கையை, ருச்சி ஏற்கிறாரா, இல்லையா என்பதை, பிப்ரவரி 16ம் தேதி தெரிவிக்குமாறு கூறி, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.   (முகநூல்).         
           

வியாழன், 27 டிசம்பர், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.
     
எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
====================================================================


1) ரொம்ப சுவாரஸ்யமான கேள்வி எது? சுவாரஸ்யமான பதில் எது?

2) கேட்கப்பட்ட கேள்வி (கேட்டபின்) யாருக்குச் சொந்தம்? கேட்டவருக்கா, கேட்கப்பட்டவருக்கா?
!

3) 2012ன் மிக நல்ல நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?  

                            

புதன், 26 டிசம்பர், 2012

அலுவலக அனுபவங்கள்


ஆடிட்டைச் சமாளிக்க 1000 வழிகள்.

கணேசனுக்கும் மோகனுக்கும் ரொம்பவே ஆச்சர்யம். மேனேஜர் தங்களைக் கூப்பிட்டு இப்படி உரையாடுவார், உரையாடலின் முடிவில் இப்படி ஒரு 'ஆஃபர்' வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.

வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அலுவலகம் முடிந்ததும் நேராக 'பாரு'க்குப் போகும் குழுவில் இவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் இப்படிப் போவது அலுவலகத்தில் ஓரளவு அனைவருக்கும் தெரியும். மேனேஜர் கூட அவ்வப்போது நக்கல் கமெண்ட்ஸ், கிண்டல்கள் செய்வதுண்டு.
 
ஆடிட் நடந்து கொண்டிருந்தது.


அன்று பன்னிரண்டு மணியளவில் மேனேஜர் அவர்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். முதலில் கணேசனை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தவர், அப்புறம் மோகனையும் அழைத்துக் கொண்டார்.
                                           

நான்கைந்து ஃபைல்களின் விவரங்கள் குறித்துத் தந்தவர் 'உடனே கிடைச்சாகணும். மூணு நாளா பிரச்னையா இருக்கு. ப்ளீஸ் உடனே தேடிக் கொடுங்கப்பா...' என்றார். சென்று தேடியபோது அதிகம் தேட விடாமல் ஓரளவு சீக்கிரமே கிடைத்தது. கொண்டுபோய் அவரிடம் கொடுத்தார்கள். மகிழ்ந்து போனார்.
                                             
"என்னமோன்னு நினைச்சேன்... ஃபாஸ்டுப்பா நீங்க... இதை இந்தப் பெயர்கள் வரிசையா, அதுல என்ன நம்பர்ல என்ன பேர் இருக்கோ அந்த ஆர்டர்ல அடுக்குங்க பார்ப்போம்" என்றார்.

ஆடிட்டுக்கு இவர்கள் சென்று பதில் சொல்ல வேண்டியதில்லை. அதெல்லாம் மேனேஜர் பார்த்துக் கொள்வார். ஆனால் அந்த ஒரு வாரமோ பதினைந்து நாளோ அலுவலகம் அல்ல கல்லோலப் படும்! யாரையும் லீவு போட விட மாட்டார்கள். இன்றோ நாளையோ கடைசி என்று ஞாபகம்.

அடுக்கி முடித்தபோது மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மேனேஜர் மறுபடி சந்தோஷப் பட்டுப் போனார்.


"சார்.... என்ன சார் இதுக்கெல்லாம் ஓவராப் பாராட்டுறீங்க.. நாங்க செய்யற வேலைதானே..? என்றான் மோகன் சிரிப்புடன்.

"உண்மைதாம்ப்பா... ஆனா நாம வேற வேலைல இருக்கும்போது, முடிய வேண்டிய வேலையை சட்டம் பேசாம உடனே செஞ்சு கொடுத்தா சந்தோஷம் வராதா...?"


"அப்போ மத்தியானம் பிரியாணிக்கு காசு கொடுத்துடுவீங்கன்னு சொல்லுங்க.."  மீண்டும் மோகன் . நட்பும், அசட்டுத் தனமும், பணிவும் கலந்த அதே சிரிப்புடன்.

"வொய் நாட்... இந்தாங்க... சாயங்காலம்தான் சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன்... அப்போதானே தேவை?" கண்ணடித்தார் மேனேஜர்.


"ஹிஹி... சார்... "

காசு எடுத்துக் கொடுத்த மேனேஜர் "அனேகமா ஆடிட்டை இன்னிக்கி முடிச்சி அனுப்பிடுவேன்... நீங்க இன்ன்று இங்கே செக்ஷனில் இருக்க வேணாம். O D  கொடுக்கறேன்... நாளைக்கு வாங்க.. நான் ஆடிட்டுல கொஞ்சம் சமாளிக்கணும்" என்றவர் இன்னும் கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்து மறுபடிக் கண்ணடித்தார்.

"ம்....'அதுவும்' என்ஜாய் பண்ணுங்க..."


ஆனந்த அதிர்ச்சியுடன், ஆனால் அதை வெளிக் காட்டாமல் பணிவுடன், பணத்துடன் வெளியில் வந்தார்கள் இருவரும்.

பிரியாணிக் கடை நோக்கிச் செல்லத் தொடங்கிய மோகனை "முதல்ல அங்க" என்று 'பாரு'க்கு   அழைத்துச் சென்றான் கணேசன்.

அங்கு முடித்து, வந்து பிரியாணி சாப்பிட்டு, மறுபடி 'அங்கேயே' சென்று தஞ்சம் அடைந்தனர் இருவரும். மேனேஜரின் திடீர் தாராளம் பற்றிப் பேசிப் பேசி அதிசயப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

                                                 
மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

"இதோ இருக்காங்கப்பா... இன்னும் வீட்டுக்குப் போகலையா... அங்க வீட்டுல போய் தேடிட்டு வர்றோம்... ஒரு நிமிஷம் ஆபீசுக்குக் கூப்பிடறார் மேனேஜர். அவங்க கிளம்பற வரைக்கும் ஆபீஸ்ல இருக்கறது நல்லதுன்னு தோணுதாம்..வாங்கப்பா உடனே"  பியூன் ராஜமாணிக்கம் மேனேஜரின் டிரைவருடன் வந்திருந்தான்.


குழப்பத்துடன் அலுவலகம் சென்றார்கள். சீட்டில் கலங்கலுடன் உட்கார்ந்து கொண்டார்கள்.


அவர்கள் வந்து விட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட மேனேஜர் அவர்களை ஆடிட் நடக்கும் இடத்துக்கு அழைத்தார்.

உள்ளே சென்று தள்ளி நின்று கொண்டார்கள் இருவரும்.

'விஷ்' பண்ணுங்க' கிசுகிசுத்தார் மேனேஜர்.


நிமிர்ந்து பார்த்த ஆடிட் மக்களில் இருவர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மேனேஜரையும் பார்த்துத் தலையசைத்தார்கள்.


"உங்க பேரு?"

சொன்னார்கள்.

"டிரெஷரி போயிட்டு வர்றீங்களா"

"அ..ஆமாம் சார்.."

ஓகே...சீட்டுக்குப் போங்க..."

மறுபடி விஷ் செய்து விட்டுத் திரும்பினார்கள். நடந்து கொண்டிருந்த கணேசனை கை பிடித்து நிறுத்தினான் மோகன். வாயில் விரலை வைத்து சைகை செய்தவன் சன்னமாக நடந்து அந்த அறைக் கதவின் பின்னே வந்து ஒளிந்து நின்றான்.
                                                   
ஆடிட்டர் சொல்லிக் கொண்டிருந்தார்.

"நீங்க சொன்னது சரிதான் சார்.... ஃபுல்லா இருக்காங்க... எப்படித்தான் சமாளிக்கறீங்களோ...  இந்த மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு இந்த அளவு வேலைகள் முடித்திருப்பதே பெரிசுதான்.."

'பாருங்க சார் என் நிலைமையை' என்பது போல மேனேஜர் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.


'அடப்பாவி'

"இரண்டு பேருக்கும் 'மெமோ' கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க..."


"ஓகே சார்..."


ஆடிட்டர்கள் சென்று விட்டனர். அப்புறம் வந்த நாட்களிலும் மேனஜர் மெமோ எல்லாம் தரவில்லை. அந்த ஆடிட்டை இப்படியாகத்தானே முடித்தார்கள்!



படங்கள் : நன்றி இணையம் 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

இசை விழா

இசை விழா உச்சத்தில் இருக்கிறோம். நித்யஸ்ரீ கணவர் குறித்த செய்தி நீங்கலாக மற்ற எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கின்றன பாவம் நித்யஸ்ரீ. 
                                       
அவரைப் பார்த்தால் நம்ம வீட்டு சொந்தக் காரர் மாதிரி ஒரு உணர்வு வரும். அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டாம் தான். அதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது.
                                                
இசைவிழாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நான் பார்த்த வரை வெகு சில நிகழ்ச்சிகள்  தவிர மற்ற அனைத்துக்கும் உட்கார இடம் அல்லது டிக்கெட் கிடைப்பதில் அதிக சிக்கல் இல்லை.

நிறைய இளம் வித்வான்கள் பாடுகிறார்கள். டெக்னிகலாக நன்றாகவே பாடுகிறார்கள். உள்ளத்தைத் தொடும் இசை அபூர்வமாகவே கிடைக்கிறது.  அவரவர் சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப இவர் பாடினால் மயிர்க்கூச்செறியும் அல்லது அவர் பாடினால் கண்களில் நீர் துளிர்க்கும் என்று சொல்லிக் கொள்ளலாம்.  ஓரிருவர் அப்படிப் பாடுவது என்னவோ உண்மை.

இசை விழா சமயத்தில் படே படே ஆசாமிகள் பஜ்ஜிக்கும் தோசைக்கும் பறக்கும் காட்சி ரொம்ப சகஜம். இந்த முறை பஜ்ஜி பக்கோடா, எதுவும் முப்பதுக்குக் குறைந்த விலையில் கிடைக்கவில்லை.  சாப்பாடு விலை விபரம்  தலையைச் சுற்ற வைக்கும்.  125, 150, 170 எல்லாம் சர்வ சாதாரணம். தரம் சுமாருக்குக் கொஞ்சம் மேலே. அவ்வளவுதான்.  உபசாரம் சில இடங்களில் பலம். சில இடங்களில் அன்ன தானம் செய்யும் சத்திரம் மாதிரி அவர்கள் கருணைக் கண் கொண்டு நோக்கி என்ன கொடுத்தாலும் சாப்பிட வேண்டியதுதான். 
                                                
இந்த ஆண்டு இளைய பாடகர்கள் பலருக்கு சீனியர் ஸ்லாட் கொடுத்து அவர்களின் ரசிக்கக் கூட்டத்தை இளைக்க வைத்துவிட்டார்கள்.  அம்ருதா முரளி மங்கையர் மலரில் சொன்னதை வைத்துப் பார்த்தால் இந்த இளம் மேதைகளுக்கு அவர்களுக்கு அளிக்கப் பட்ட உயர்வு மகிழ்ச்சியை அளித்திருப்பதாகத் தெரிகிறது. சன்மானம் என்ன கிடைக்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. நிறைய ஸ்பான்சர்கள் இருப்பதால் சன்மானம் பலமாக இருந்தால் நமக்கும் சந்தோஷமே.  கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நமது இசை மணிகள் லட்சம், எழுபத்தி ஐந்து ஆயிரம் என்றெல்லாம் கேட்பதாகத்தெரிகிறது. இவ்வளவு கொடுத்து  கூப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கும் சந்தோசம் தான்.  ஆனால் இசை மேல் கொண்ட பற்று காரணமாக அவ்வளவாக பசை இல்லாத அன்பர்கள் கூப்பிட்டால் அந்தக் காலத்தில் மதுரை மணி ஐயர் போன்ற மேதைகள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அற்புதமாகப் பாடுவார்கள் என்பது இவர்களுக்குத் தெரிந்தால் நல்லது.
702       
இசை விமரிசனம் எழுதும் அளவுக்கு எனக்கு ஞானம் பற்றாது என்றாலும் சஞ்சய் சுப்ரமணியம் வெளிப்படுத்தும் கற்பனை வளம், பம்பாய் ஜெயஸ்ரீயின் குரல் இனிமை, பற்பல வயலின் வித்வான்கள், மிருதங்க வித்வான்கள் செய்யும் சாகசம் இவற்றை வியந்து பாராட்டியாக வேண்டும்.  திருச்சி சங்கரன், மன்னார்குடி ஈஸ்வரன் போன்ற சீனியர்கள் தம் சுகமான வாசிப்பால் ரசிகர்களை குதூகலிக்க வைத்தார்கள்.  அக்கரை சுப்புலட்சுமி வாசிப்பு சொக்க வைக்கிறது.  கமல் கிரண் விஞ்சமூரி என்ற ஒரு மிக இளை ஞர்  அருமையாக வாசித்துக் கவர்ந்தார். நெய்வேலி சந்தான கோபாலன் காட்டும் அவை அடக்கம், அவர் பெண் ஸ்ரீரஞ்சனி காட்டும் இசைத்திறன் குறிப்பிடத் தக்கது.பாரத் சுந்தர் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். விஜய் சிவா பாடும் சமஸ்கிரு த சுலோகங்கள் கேட்க மெய் சிலிர்க்கும்.   நான் பார்த்த நிகழ்ச்சி அடிப்படையில் சொல்வதால் இவ்வளவுதானா , வேறு யாரும் நன்றாகப் படவில்லையா என்று திகைக்காதீர்கள் . 

--
K.G.Y.Raman

திங்கள், 24 டிசம்பர், 2012

உன்னை அறிந்தால்...


காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆருளர் களை கண்ணம்மா அரங்க மா நகருளானே...




மாபெரும் சபைகளில் நீ நடந்தால்...



 நீலக்கடலின் ஓரத்தில்....

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சனி, 22 டிசம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 16/12 முதல் 22/12/2012 வரை.


எங்கள் B+ செய்திகள்.
 
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
 
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
 
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

=======================================================================

1) கோவை கொங்குநாடு அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய அறிவியல் கழகத்தின் நூற்றாண்டு விழாவை, தென்பிராந்திய அளவில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும், இந்திய அறிவியல் கழக கோவைப்பிரிவும் இணைந்து நடத்திய மாணவர் அறிவியல் கண்காட்சி'யில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் கரூர் வெற்றி வினாயகா மெட்ரிக் பள்ளி மாணவர் பாரத். ரயில் விபத்து தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். "டிரைன் வே டிராக்கர்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரயில்கள் விபத்தின்றி தடுக்கப்படலாம் என்பது இவரது கண்டுபிடிப்பு.இதற்கு "வேவ் டிரான்ஸ்மிஷன் ஆன்டெனா' பொருத்தப்பட்ட ஒரு ரயில் பெட்டி போதும். ஆளில்லாத இந்த ரயில் பெட்டி, ஒரு "ரோபோ ரயில்' போல் செயல்பட்டு, பயணிகள் ரயிலின் முன்னால் சென்று கொண்டிருக்கும். பயணிகள் ரயிலுடன் "ரேடியோ பிரிக்குவன்சி வேவ்' தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, ரோபோ ரயில் குறிப்பிட்ட இடைவெளியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும்.ரயில் தண்டவாளத்தில் சேதம் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால், ரோபோ ரயில் தானாகவே நின்று, பின்னால் வரும் ரயிலுடன் தொடர்பு துண்டிக்கப்படும். அப்போது, அந்த ரயிலும் தானாகவே நின்று, விபத்தில் இருந்து காப்பாற்றப்படும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மாணவர் பாரத் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நியூட்டனின் புவியீர்ப்பு விசை குறித்த விதியை, புதிய கண்ணோட்டத்தில் கண்டுபிடித்துள்ளனர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முதுகலை இயற்பியல் (எம்.எஸ்.சி.,) மாணவர்கள். எந்த பொருளும் மேலிருந்து கீழே விழும் என்பது, புவியீர்ப்பு விசையின் அடிப்படை கோட்பாடு. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பில், கீழே இருக்கும் ஒரு பொருள் மேல்நோக்கி நகரும் விந்தையை காணலாம். இதற்கு தேவை இரண்டு புனல்கள்; இரண்டு பி.வி.சி.,குழாய்கள். வாய் பகுதியில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட புனல்கள், குழாய்களை தாங்குதளமாக கொண்டு மேல்நோக்கி நகருகின்றன. "புவிஈர்ப்பு விசைக்கு எதிராக, ஒரு பொருள் நகருவதை போன்ற உணர்வு ஏற்பட, கண்களின் "இடமாற்று தோற்றப்பிழை' என்ற இயற்பியல் தத்துவமும் ஒரு காரணம்,' என, இந்த அற்புத கண்டுபிடிப்பின் பின்னணியை விளக்கி, பார்வையாளர்களின் கண்களை விரிய வைக்கின்றனர், மாணவர்கள்.

தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்னையே மின் பற்றாக்குறை தீர, சாலை போக்குவரத்தில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்கிறார், சோபியா ஜென்னிபர் என்ற மாணவி. இவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், ஸ்பீடு பிரேக்கருக்கு பதிலாக காற்று செலுத்தப்பட்ட ரப்பர் குழாய்களை பதிக்க வேண்டும். இந்த "ஸ்பீடு பிரேக்கர்' வழியாக வாகனங்கள் செல்லும்போது, டயர் அழுத்தம் காரணமாக, அதிக விசையுடன் காற்று உள்ளே செல்கிறது. ஒவ்வொரு முறையும் அழுத்தப்படும் காற்று, சாலையோரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள, "ஸ்டோரேஜ் டேங்க்'ல் சேமிக்கப்பட்டு, அருகில் உள்ள காற்றாலையை இயங்க வைக்கிறது. இங்கு இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.தமிழக சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு சிறிது நேரம் கூட ஓய்வில்லாத நிலையில், இந்த தொழில்நுட்பத்தால் மின்சாரம் தயாரிப்பது, பெருமளவில் பலனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

2) பெண் குழந்தைகளுக்காக, "பாதை' என்ற காப்பகத்தை நடத்தும், அமல் - சுனிதா இருவரும் சென்னையைச் சேர்ந்த தம்பதிகள். பெற்றோரிடம் சேர முடியாத பெண் குழந்தைகளைப் பொறுப்பேற்று, பிறப்புச் சான்றிதழ் பெறுவதிலிருந்து அனைத்துக்கும் பொறுப்பேற்று அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர பாசிட்டிவ் அப்ரோச்சே காரணம் என்கிறார்கள். 

                             
                 



3) ரஞ்சனா என்ற, பார்வையற்ற பெண். தமிழக அரசு நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம், வலசையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஆசிரியையாகச் சேர்ந்துள்ளார்.
                                                  


"வேண்டாம் இந்த பிள்ளை' என, உறவுகள் கூறியபோது, "நானிருக்கிறேன்' என, அந்த குழந்தையை வளர்த்து, ஆசிரியை பணியில் அமர வைத்ததில், அவருடைய தாய்க்கு முக்கிய பங்கு உண்டு. பார்வையற்ற நிலையில், பி.எட்., வரை படித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளார், ரஞ்சனா.சேலம், அஸ்தம்பட்டி, மணக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம், புஷ்பலதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் ரஞ்சனா, 23. இரண்டரை வயது வரை, தலை தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, "இந்த குழந்தை தேறாது' என, உறவுகள் ஒதுக்கியபோது, "10 மாதம் சுமந்த மகளை, மண்ணுக்கு அனுப்ப மாட்டேன்' என, மருத்துவமனைக்கு அலைந்து மீட்டெடுத்தார் அவருடைய தாய். சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியில், ஆர்வமுடன் படித்த ரஞ்சனாவால், கல்வியை தொடர முடியாதவாறு, கண்ணில் ஏற்பட்ட வலி கொடுமைப்படுத்தியது. அதன்பின், செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் பள்ளியில், "பிரெய்லி' முறையில் தன்னுடைய படிப்பை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில், 338 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 954 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்று, அப்பள்ளியின் முதல் மாணவியாக வந்தார். சேலம் சாரதா கல்லூரியில், பி.ஏ., பட்டம் பெற்று, பின், குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கவுன்சிலிங்கில் வெற்றி பெற்று, சேர்ந்தார். ஆங்கிலப் பாடப் பிரிவு எடுத்து படித்து, பட்டத்தையும் வாங்கினார்.சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகடமியில், பயிற்சி பெற்றார். முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்த போதும், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வில், 150 மதிப்பெண்ணுக்கு, 95 மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றார். (தினமலர்)


4) பெயர் B M ராம்ப்ரசாத். வயது 64. ஊர் பெங்களுரு.
Mico ( now Bosch) கம்பெனியில் 39 வருடம் assistant finance manager ஆக வேலை பார்த்து விட்டு, தற்சமயம் நீங்கள் இவரை 5th main cross road of the AREKERE LAYOUT near Bannergatta Road, பெங்களுருவில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதைக் காணலாம் என்கிறது முக நூலில் படித்த ஒரு செய்தி. தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 முதல் 7.30 வரையும் இந்தச் சேவையைச் செய்கிறாராம் இவர். 9th cross main road டில் வசிக்கும் இவர் இந்த சேவைக்காக தினமும் இங்கு வருகிறாராம்.(முகநூல்)

                                


 
5) கமுதி:ராமநாதபுரம், கமுதி அருகே விக்கிரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சிலையழகு என்பவர், துபாய்க்கு சென்று, அங்கு இறந்தார். 
                                          
மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்.எல்.ஏ., உதவாத நிலையில், கிராமத்தினர் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் மூலம், அவரது உடல் சொந்த ஊர் வந்தது. அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி, உடலை பெற்றுக்கொள்ளுமாறு, டிச.,14 ல், கட்டுமான ஏஜன்சியினர், சிலையழகு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பணமின்றி தவித்தனர். சிலையழகு. அ.தி.மு.க., பிரதிநிதியாக இருந்தார்.  முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் (அ.தி.மு.க.,), அமைச்சர் சுந்தரராஜை சந்தித்து, உதவுமாறு கிராமத்தினர் முறையிட்டு, உதவி எதுவும் கிடைக்காத நிலையில், அந்த கிராமத்தினர், வீடு, வீடாக பணம் வசூலித்துக் கிடைத்த 50 ஆயிரம் ரூபாயை, நிறுவனத்திற்கு அனுப்பி, உடலை வரவழைத்து, கிராமத்தினர் செலவில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. சிலையழகிற்கு மனைவி காளிமுத்து, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். (தினமலர்)
                           


6) சிவகாசி: மழை வேண்டி "மரக்கன்றுகள் நடுங்கள், தற்கொலையை வெல்வோம்' என்ற கோஷத்துடன், மூன்று சக்கர சைக்கிளில்மாற்றுத்திறனாளி பிரசாரம் செய்கிறார். திருநெல்வேலி மாவட்டடம் இட்டாமொழியை சேர்ந்தவர் நெல்சன், 29. அஞ்சல் வழி மூலம், பி.காம்., முடித்துள்ள இவர் மூன்று சக்கரவண்டியில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்கிறார்.
                                              
தினமும் 15 முதல் 20 கி.மீ.,தூரம் பயணிக்கிறார். இவர் கூறுகையில், "" 2005ல் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, 2010ல் துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளேன். படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல. படிப்பு என்பது நமதுதிறமை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு என கருத வேண்டும். ஏதோ ஒரு காலண்டர் சொல்லும் கட்டு கதையை நம்பி ,உலகம் அழியும் என நம்புகின்றவர்கள், முதலில் வாழ்வதற்கு தேவையான மழை பெற, மரக்கன்றுகளை நடுங்கள், என்பதை வலியுறுத்துகிறேன்,'' என்றார். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது, பிரசார பயணத்தை துவக்கி வைக்க வரும் வி.ஐ.பி.,க்கு,ஒரு மரக்கன்று கொடுத்து விடைபெறுகிறார்.


7)
தமிழில் நாவல் எழுதி, இலக்கியத்திற்கான விருது பெற்றுள்ளார் முசிரியைச் சேர்ந்த திருநங்கை ப்ரியா பாபு. ஒவ்வொருவருக்கும் 15 வயதிற்கு மேற்பட்டுதான், பாலினம் பற்றிய சுய சிந்தனை ஏற்படும் என்ற நிலையில் இவரை அனைவரும், கேலிப் பொருளாகவே பார்த்ததில் மனம் வெதும்பி தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப் பட்டு, சமூகத்தில், விளிம்பு நிலையில் வாழும், இவரைப் போன்ற திருநங்கைகள் மத்தியில், விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, எழுத்தாளர் சு.சமுத்திரம், திருநங்கைகள் பற்றி எழுதிய, "வாடா மல்லி' என்ற நூல் படித்தவர் இவரும் எழுத்தாளராக முக்கியக் காரணமாக அமைய,  திருநங்கையாக மாறத் துடிக்கும் மகனுக்கும், அவனது தாய்க்கும் இடையே நடக்கும் மனப் போராட்டத்தை," மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலில், எழுதி விருது பெற்றுள்ளார். திருநங்கை எழுதிய முதல் தமிழ் நாவல் இது தான்.
                                                       

இந்நூலைப் பாராட்டி, சிறந்த இலக்கியத்திற்கான விருதை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கியது. "திருநங்கையர் வழக்காறுகள்' என்ற குறும்படத்தையும் இயக்கி, சென்னையில், "வானவில்' அமைப்புடன் இணைந்து, திருநங்கைகளுக்கு, எழுதுவதற்கு பயிற்சி அளிப்பது, கட்டுரை, சுயசரிதை, ஆய்வுக் கட்டுரை எழுதுவது தொடர்பாக, பயிற்சி தருவதில், ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது, இந்தியாவின் பட்டிதொட்டிகளில் பயணம் செய்து, "கண்ணாடி' கலைக் குழு மூலம், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி என்றும் திருநங்கைகளுக்கு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று தருவது, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவச திட்டங்களை பெறுவது தொடர்பான தகவல்கள் தருவது என, பல்வேறு பிரச்னைகளுக்கு குரலும் கொடுத்து, திருநங்கைகள் குறித்த ஆவணங்கள் திரட்டி, நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அந்நூலகத்தை திருநங்கைகள் தினமான, ஏப்ரல், 15 அன்று, திறக்க இருப்பதாகச் சொல்கிறார். 'இது, மறைவிற்கு பிறகும் என்னை நினைவுபடுத்த உதவும்' என்கிறார்.


8) ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் மழை நீரை சேகரித்து ஓராண்டு வரை பயன்படுத்தி வருகின்றனர். 100 ஆண்டுகளாக இப் பழக்கம் உள்ளது.

                                               
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது எஸ்.பி.பட்டினம். இதையொட்டி கடற்கரை என்பதால், கிணறுகளில் உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. குடிநீருக்காக ஏங்கும் மக்கள், மழைநீரை சேகரிக்க முடிவு செய்தனர். 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதியில், பெரும்பாலான வீடுகளில் குடிநீருக்காக தனி அறை கட்டி, அதில் 1,000 முதல் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைத்துள்ளனர். மழை பெய்யும் போது மாடியிலிருந்து கீழே குழாய் மூலம் தொட்டியில் தண்ணீர் சேகரிக்கின்றனர். தண்ணீர் கெட்டுப்போகாமல் இருக்க சுட்ட செங்கற்களை தொட்டியில் போட்டு வைக்கின்றனர். இந்த தண்ணீரை, அடுத்தாண்டு மழை பெய்யும் வரை பயன்படுத்துகின்றனர். அடுப்பு மூட்டி எழும்பும் புகை, மண்பானை வைத்து மூடப்படும். சில மணி நேரம் கழித்து மண்பானையில் மழை நீர் ஊற்றி ஆற வைத்து குடித்தால் சுவை அருமையாக இருக்குமாம்.

9) புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்ட பிரகதாம்பாள், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன் வழங்கும், கிராமப்புற சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். சோறு சாப்பிடக் கூடக் கஷ்டப்படும் வறுமை உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்து, விவசாயத்தில், ஆடுதுறை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தவரை மணந்து, (டிப்ளமோ முடித்தவர், 750 ரூபாய் சம்பளம்), வருமானம் போதாமல் கஷ்டப்பட்ட நிலையில், தையல் வேலை, கூடை பின்னுவது, கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது என, பணம் சம்பாதித்த்திருக்கிறார்.

                                               
நான்காண்டு களுக்கு பின், வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கே, கணவர், டிரான்ஸ்பர் செய்யப்பட, அங்கு, 16 பேர் சேர்ந்து, 10 ஆயிரம் சேமிப்போடு, மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பித்து, வம்பன் ஆராய்ச்சி நிலையத்தில், ஐந்து நாள் காளான் வளர்ப்பு பற்றி, பயிற்சி எடுத்துக் கொண்டவர், காளான் வளர்ப்புக்கு தேவையான அனைத்தையும் தெரிந்து கொண்டு, வங்கிக் கடன் வாங்கி, குழு உறுப்பினர்கள் சேர்ந்து, காளான் வளர்ப்பு தொழில் துவங்கியுள்ளவர், "இப்போது, இந்த தொழிலில், மாதம், 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. தினமும், நான்கு அல்லது மூன்று மணி நேரம் தான் வேலை செய்கிறோம். ஒவ்வொருத்தரின் பங்களிப்பை பொறுத்து, லாபத்தை பங்கிட்டு கொள்வோம்.உழைக்கிற நேரத் தை கூட்டினால், லாபமும் அதிகம் பெறலாம்.இதுவரை, 100 பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி கொடுத்திருக்கேன்" என்கிறார். (தினமலர் சொல்கிறார்கள் பகுதி)

புதன், 19 டிசம்பர், 2012

மச்சு பிச்சு


ராகவன் அலுவலகத்திலிருந்து திரும்பும் பொழுது மிகவும் களைத்திருந்தான். சாப்பாட்டுக்குப் பின்  அன்றைய  தினசரியை புரட்டிக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கியும் போனான்.

சற்று நேரத்தில் யாரோ அப்படியே இறுக்கிப் பிடிப்பது போல் உணர்ந்தான்.  கண்ணைத் திறந்து யார் என்று பார்க்க வேண்டும் என்ற முயற்சிகள் பலனளிக்கவில்லை.  

அப்பொழுது 'தட தட' என்று ஒரு இனம் கண்டு கொள்ள முடியாத சப்தம் கேட்டதும் பதட்டத்தில் எழுந்திருக்க, எங்கும் ஒரே கும்மிருட்டு.  பூமி அதிர்ச்சியா இன்னும் வேறு ஏதாவத என்று நிதானிக்கும் முன்னரே அறையின் ஒரு ஓரத்தில் போய் விழுந்தான்.

சரி, இது அதுவாகத்தான் இருக்க வேண்டும். இப்படி நம்மால் என்ன நடக்கிறது என்பதைக் கூட நிதானிக்க முடிய வில்லையே என்று ஒரு வருத்தத்துடன் மீண்டும் எழுந்துகொள்ள மனமின்றி அப்படியே கிடந்தான்.

"என்னங்க, உங்களுக்கு என்ன ஆயிற்று ?" என்று கமலாவின் குரல் கேட்டுக் கண் திறந்தவன் அப்படியே திகைத்துப போனான்.

"அப்போ அவ்வளவும் கனவா?" என்று கேட்டவனுக்கு, "எவ்வளவும் ?" என்ற பதில் கிடைக்க, குழப்பம் அதிகமானது.  சுற்று முற்றும் பார்த்துத் தான் ஹாலில் இருக்கும் சோபாவின் அருகில் படுத்திருப்பதை உணர்ந்து மீண்டும் "நான் எப்படி, இல்லை, நீ எப்படி, இல்லை நம்ம வீடு.." என்று ஏதோ கூற ஆரம்பித்தான்.
                                                            
பிறகு கமலா "முதலில் எழுந்து முகம் கழுவிக் கொண்டு வந்து கா!பி சாப்பிடுங்கள்.  என்ன ஆனது என்பதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்" எனவும், குளியலறைக்குள் நுழைந்தவன் எல்லாம் நேற்று மாலை இருந்த மாதிரியே இருந்ததை நிதானித்துப் பார்த்து விட்டுப் பின் போய் பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு, மேஜையில் இருந்த காப்பி டம்ப்ளரைக் கையில் எடுத்தவன் மீண்டும் "அவ்வளவுமா கனவு" என்று முணுமுணுத்துக் கொண்டே குடிக்க ஆரம்பித்தான்.

கமலா வந்து அருகில் உட்கார்ந்து கொண்டு "நேற்று நீங்கள் சோபாவிலேயே தூங்கிப் போனீங்க. ஆனால் ஏன்  கீழே இறங்கிப் படுத்துக் கொண்டீர்கள் ?"  என்று கேட்க, ராகவன் தான் விழித்துக் கொண்டது, சோபாவிலிருந்து கீழே விழுந்தது, கேட்ட சப்தங்கள் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே போக, கண்கள் அகல அதைக் கேட்ட கமலா,

"அப்போ நீங்க ராத்திரி எழுந்து அந்த கோரத்தைப் பார்க்கவே இல்லையா?" என்றாள் .

"என்ன, என்ன விஷயம் ?" என்று கேட்ட ராகவனிடம் "ராத்திரி நம்ம மருந்துக் கடைக்காரர் ஷட்டரைப் போட்டு விட்டுப் பூட்டுவதற்காக குனிந்தவரை  ஒரு லாரிக்காரர் இடித்து விட்டார். என்றதும் 'அடப் பாவமே" என்ற ராகவனை மேலும் பேசவிடாமல் " கேளுங்க முதல்லே!" என்று தொடர்ந்த கமலா "மருந்துக் கடைக்காரருக்கு சின்ன அடி தான். 
                                                 
திரும்பவும் கடையைத திறந்து மருந்து போட்டுக் கொள்ள உள்ளே போனவர் தன்னை இடித்த லாரிக்காரர் நிதானம் இழந்ததால் பக்கத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் கம்பத்தில் மோதி, அதனால் ஏற்பட்ட மின் சக்தி துண்டிப்பினால் சற்று நேரம் தடவி தடவி டார்ச் லைட் எடுத்து, பின் மருந்து எடுத்தவர், அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டே தூங்கிப் போனாரா இல்லை மயக்கமானாரானு தெரியவில்லை. காலையில் பால் வாங்கப் போன பாச்சா மாமா அவரை எழுப்பி விஷயத்தைக் கேட்டவர், "அப்படீன்னா ராத்திரி இங்கே நடந்த விவகாரங்கள் எதுவும் உங்களுக்குத் தெரியாதா [ இதென்னடா இது, அரபிக் கதைகளில் வருகிற ....கதை மாதிரி ?] என்று கேட்டு விட்டு அவரிடம் லாரி டிரான்ஸ்பார்மரில் மோதிய கதையை சொல்ல, அவர் அந்த லாரி தன்னைத் தான் முதலில் இடித்தது என்றதும், "அப்படியா சேதி" என்ற பாச்சா அதற்குப்பின் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரிப் ஆகியிருந்த டிரான்சஸ்ஃபார்மரை மீண்டும் உயிர்ப்பித்துவிட்டுப் போனதையும் லாரி டிரைவர் தானே முன் வந்து கம்பத்தை இடித்ததை ஒப்புக் கொண்டதையும் சொன்னாராம் என்று முடித்தாள் கமலா.
                                                     
"அது சரி" நீங்க என் கீழே இறங்கிப் படுத்துக் கொண்டீர்கள் ?"என்றவளிடம்,  ராகவன் தன்  அனுபவத்தை மீண்டும் விவரிக்க, சட்டையில் ஒரு மூலை கிழிந்திருந்ததைப் பார்த்த கமலா "நீங்கள் கீழே விழுந்தது எப்படி என்று தெரிந்து விட்டது" என்றாள்.

கண்டு பிடிக்க உங்களுக்கும் கொஞ்சம் க்ளூ.

டிசம்பர் 21, மச்சு பிச்சு, நிபுரு, மின் வெட்டு, .....மரத்துப் போன கால், சட்டையில் ஒட்டிக் கொண்ட ஃபோன் சார்ஜர், ராகவன்.

எதெல்லாம் கனவு, எதெல்லாம் உண்மை என்று நீங்களே முடிவு கட்டுங்கள்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

ஏமாற்றம்.


வீட்டில் சலசலவென பேச்சுக்கள். இரண்டு மூன்று உறவினர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். விஜி ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டே, அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். அல்லது உரையாடிக் கொண்டே வேலைகளை பம்பரமாகச் சுழன்று செய்து கொண்டிருந்தாள்.

ரவிக்கு தன் மனைவியின் கலகலப்பான சுபாவம் குறித்து எப்போதுமே மனசுக்குள் ஒரு பெருமை உண்டு. வெளியில் சொல்ல மாட்டான்.


சில விஷயங்களை மனதுக்குள்ளேயே ரசிக்க வேண்டும். வெளியில் சொன்னால் அதே விஷயம் அடுத்த முறை செய்யப் படும்போது அதில் ஒரு செயற்கைத் தன்மையும், இவர்கள் பாராட்டிய விஷயம் என்று செய்பவர்களிடம் ஒரு மறைமுக எதிர்பார்ப்பும் வந்து விடும் என்று நினைத்து, சொல்ல மாட்டான். தங்கள் பிள்ளைகள் குறித்தும் இதே அபிப்ராயத்தை விஜியிடம் சொன்னபோது, அவள் அபிப்ராயம் வேறு மாதிரி இருந்தது.

"உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, எதையுமே கவனிக்கறது இல்லை, பாராட்டறது இல்லைன்னு நினச்சுகிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்... அது மட்டுமில்லாமல் சொன்னா அவங்களும் சந்தோஷப் படுவாங்க இல்லே... அடுத்தவங்க மனசு நோகக் கூடாது, சந்தோஷம் முக்கியம்னு நீங்கதானே சொல்வீங்க..."


"மனசை நோகடிக்கலையே... என் ரசனையை என் தொடர்ந்த ரசனைக்காக மறைச்சு வச்சு ரசிக்கிறேன்.. அவ்வளவுதானே" என்று ரவி சொல்வதை ஒத்துக் கொள்ள மாட்டாள் விஜி.


அதே சமயம் 'என்னிடம் என்னென்ன இப்படி மனசுக்குள் ரசிக்கிறீர்கள்' என்று இதுவரை இவனிடம் அவள் கேட்காததும் ஆச்சர்யமாக இருக்கும் ரவிக்கு.

அதுதான் விஜி. நொடியில் சப்ஜெக்ட் மாறுவாள். விடாமல் பேசிக் கொண்டேயிருப்பாள். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமுன்னே அடுத்த சப்ஜெக்டுக்கு போய் விடுவாள்! இவன் பக்க உறவினர்களிடம் கூட இவனை விட அவள்தான் அதிகம் பேசுவாள்!


நடு நடுவே அலைபேசியில் வரும் வேறு அழைப்புகளிலும் அழைக்கும் ஆட்களுக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ கொஞ்சம் பெரிதாகவோ பேசிக் கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு அழைப்பு வந்தபோது பேசத் தொடங்கியவள் முகம் மாறத் தொடங்க, அலைபேசியுடன் விரைவாக ரவியை ஒரு முறை பார்த்து விட்டு வாசலுக்கு நடந்தாள். சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ரவி, ரிமோட் எடுத்து டிவியை மியூட் செய்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

 

'செல்'லை ஆஃப் செய்து விட்டு வாசலிலேயே நின்று  வாழை மரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விஜியை நெருங்கினான் ரவி.

"என்னம்மா..?"

திரும்பி ரவியைப் பார்த்த விஜியின் கண்கள் இன்னும் கலங்கின.

"சரஸ்வதி ஞாபகம் இருக்கு இல்லை?"

"யாரு... உன் கூட முன்னாடி வொர்க் பண்ணி இப்போ வேற ப்ரான்ச்சுல இருக்காங்களே அவங்களா?'

"ஆமாம்.. அவங்க வீட்டு பூஜைக்கு எல்லாம் நாம் போய் வந்திருக்கோம்.."

ரவிக்கும் லேசாக உதறல் கண்டது...'என்ன நியூசோ..'

"அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்... அடி பட்டிருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பங்கன்னு அதிர்ச்சியோட எதிர்பார்த்த எனக்கு ஹெட் இஞ்சூரி, சீரியஸா இருக்கா, அனேகமா பொழைக்க வாய்ப்பில்லை'னு சொன்னதும் ஒண்ணுமே ஓடலைங்க..."

அருகில் வந்த உறவினர்களிடம் விஷயம் சொன்னார்கள். அப்புறமும் வேலைகள் தொடர்ந்தாலும் விஜியிடம் பழைய உற்சாகம் இல்லை. அவ்வப்போது வெவ்வேறு தோழிகளுக்கு அலைபேசுவதும், ஆற்றாமைப் படுவதுமாக இருந்தாள்.

உறவினர்கள் கிளம்பிச் சென்றதும் விஜி கணவனைத் தொல்லை செய்து ரவியுடன் கிளம்பி அந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றாள். ஐ சி யூ வில் இருந்த அவள் தோழி முகத்தை என்ன, அந்த ஹால் பக்கமே யாரையும் விடவில்லை. மறுபடி கிளம்பி வீடு வந்தார்கள்.

உணவு செல்லவில்லை விஜிக்கு. இவனுக்கும் வருத்தமாக இருந்தாலும் விஜியை நினைத்து கவலை ஏற்பட்டது. சமீப காலங்களில் இளவயது மரணங்கள் விஜியை ரொம்பவே பாதிக்கின்றன. ஏனோ தன்னையும் அறியாமல் தன்னை அந்த இடத்தில் வைத்துப் பொருத்திப் பார்த்து, தன குழந்தைகள் கதியை நினைத்து பதட்டப் படுவது வாடிக்கையாகி விட்டது.

பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக அவ்வப்போது பேசிக் கொண்டே இருந்ததிலிருந்து அவள் மூட் அவுட் புரிந்தது. எப்போதும் ஆவலுடன் மல்லுக்கு நிற்கும் குழந்தைகளும் அவள் மன நிலை தெரிந்து ஒதுங்கியே இருந்தனர். ரவிக்கும் சரஸ்வதி பற்றி நினைத்து வருத்தமாகவே இருந்தது.

மிகவும் அப்பாவிப் பெண். வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டவள். கணவனால் ஏமாற்றப்பட்டவள். ஒரே ஒரு பையன் அவளுக்கு. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறான்.

அவ்வப்போது ஆஸ்பத்திரி சென்று வந்த மற்ற தோழிகள், சரஸ்வதியின் அக்கா என்று ஃபோன் பேசி நிலவரம் தெரிந்து கொண்டே இருந்தாள்.

"ஆஸ்பத்திரியில் சேர்க்கப் போகும்போதே வாந்தி எடுத்தாளாம்...நினைவே இல்லையாம்"


"தலைல நீர் சேர்ந்திருக்காம்...ஒரு சின்ன ஆபரேஷன் செய்யணுமாம்... இவ ஏற்கெனவே ஹை சுகர் பேஷன்ட்...20 பெர்சண்ட் கூட சான்ஸ் இல்லைங்கறாங்க..."


"வேற வண்டியோட மோதலையாம்...பின்னாடி உட்கார்ந்திருந்தவ ப்ரேக் போட்டதும் கீழ விழுந்திருக்கா..."


"வண்டில இருந்து கீழ கூட விழலையாம்... லேசா சரிஞ்சிருக்கா...  எங்கேயோ எதுலயோ தலைல மோதியிருக்கு போல...."


"அவ புருஷன் இன்னும் வந்து பார்க்கலையாம்..."


"புருஷன் போலீஸ் ஸ்டேஷன் சென்று எஃப் ஐ ஆர் போடறதுலயும் ஆபீஸ் ஸ்டாஃப் கிட்ட பணம் கிளைம் செய்யும் வழிகள் பற்றி பேசியும் சுற்றி வர்றானாம்..."


"பழைய ஆபீஸ் காரங்க எல்லாரும் வந்து வந்து போறாங்களாம்... ஆனால் உள்ளே போய் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லையாம்.."


இப்படியே அவ்வப்போது ரவியிடம் வந்து தகவல்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள் விஜி. சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ரவி, விஜி தன்அருகில் அமர்ந்திருந்தாலும் அவள் நினைவுகள் சரஸ்வதியைச் சுற்றியே இருந்தன என்பதை உணர்ந்திருந்தான்.

பேச்சை அவ்வப்போது மாற்றி அவளைச் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு, குழந்தைகளை சாப்பிட வைத்து தூங்கச் செய்தான்.


"ராத்திரி என்ன நியூஸ் வருமோ... முருகா... சரஸ்வதியைக் காப்பாற்று.." என்று விஜி தூங்கப் போனாள்.


காலை எழுந்ததுமே தொலைபேசத் துடித்தவளை அடக்கி, "கொஞ்சம் டைம் குடு... காலைல உன் வேலைகளை முதலில் முடி. குழந்தைகள் வேற ஸ்கூல் போகணும்" என்று வேலைகளை முடிக்க வைத்தான். விஜி அலுவலகத்து லீவ் சொன்னாள். ரவிக்கு அதில் உடன்பாடில்லை. 


"நீயோ ஆஸ்பத்திரி போகப் போறதில்லை. உள்ளேயே விட மாட்டாங்க... எதுக்கு அனாவசியமா லீவு?" தானும் அலுவலகம் சென்று இவள் இப்படிப் புலம்பல், பதைபதைப்புடன் வீட்டில் தனியாக இருப்பது ரவிக்குப் பிடிக்கவில்லை.


விஜி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சார்ஜரில் போட்டிருந்த த
ன் அலைபேசியை எடுத்தாள். சரஸ்வதியின் அக்காவுக்கு போட்டாள்.

"அக்கா.... நான்தான்கா விஜி....ம்....எப்படி இருக்கா சரசு...ம்.......ம்.... சரி...சரி... அட... வெரி குட்.... அப்புறம்.... அப்படியே ஆகட்டும்கா... கடவுள் இருக்கான்... நான் கூட ரூபாய் முடிந்து வைத்திருக்கிறேன்... நல்லது நடக்கட்டும்கா.. நீங்க சாப்பிட்டீங்களா... யாரு உங்க வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா..சரிக்கா.. உங்கம்மாவை பகல்ல கொஞ்சம் ஆஸ்பத்திரியில் விட்டுட்டு நீங்க வீட்டுக்குப் போயிட்டு சாயங்காலம் வாங்க... ஓகேக்கா....ஓகேக்கா... நான் அப்புறம் பேசறேன்.."

அலைபேசியைக் கட் செய்து விட்டு மறுபடி சார்ஜரில் போட்டவள் ரவியிடம் வந்தாள்.


"நைட்டு ஒரு ஆபரேஷன் செஞ்சு தலைலேருந்து கொஞ்சம் நீரை ட்ரைன் செய்தார்களாம். காலை வந்து பார்த்த டாக்டர் 'நல்ல முன்னேற்றம் தெரிகிறது...இன்னும் ஒரு 10 எம் எல் ட்ரைன் செய்யணும். காலைல செஞ்சுடலாம்' என்றாராம். சுகர் பேஷன்ட் வேற... நினைவில் இருப்பதை விட செடேஷன்ல இருக்கறது நல்லதுன்னு டாக்டர் சொன்னாராம்... கொஞ்சம் ஸ்லோ ரெகவரிதான் இருக்குமாம்... ஆனால் இனி உயிருக்கு பயமில்லையாம்.."


"கடவுளுக்கு நன்றி" என்று எழுந்து சென்று முருகன் படத்தைப் பார்த்தவள் மறுபடி அலைபேசியை எடுத்து அலுவலகத்துக்குச் சொன்ன லீவைக் கேன்சல் செய்தாள்.


மதியம் அவள் அலுவலகத்திலிருந்து இவனுக்கு தொலைபேசியவள், 'சரஸ்வதி ஒருமுறை காலை ஆட்ட முயற்சித்தாளாம், மடக்கி வைத்திருந்தாளாம்' என்று தகவல் சொன்னாள்.

ரவி மாலை அலுவலகத்திலிருந்து வந்தபோது விஜி சோஃபாவில் அமர்ந்து ஆதித்யா சேனல் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.



 

"சந்தானம் காமெடி வரவர நல்லா ரசிக்க முடியுது இல்ல?" என்று கேட்டவள் "காஃபி போடவா" என்று எழுந்து உள்ளே சென்றாள்.

காஃபியைக் கொண்டுவந்து ரவி கையில் கொடுத்தவள் சரஸ்வதி பற்றி ஏதோ சொல்லப் போகிறாள் என்று நிமிர்ந்து பார்த்தான்.


"முன்னல்லாம் வடிவேலு காமெடி பிடிக்கும்... இப்போ சந்தானம்... ஒவ்வொரு சீசன்ல ஒவ்வொருத்தர் இல்ல?"


காஃபியைக் குடித்துக் கொண்டே அவளைப் பார்த்தான் ரவி.


"ஏங்க... ஆபீஸ்ல இந்த வாரக் கடைசியில் ஒரு டூர் ப்ரோக்ராம் ஏற்பாடு பண்றாங்க... நாள் நாள் லீவு சேர்ந்தா மாதிரி வருதே... நாமளும் போகலாமா.. சொல்லிடவா? இப்போவே சொன்னா பெரிய வண்டியா, சின்ன வண்டியான்னு சொல்ல வசதியா இருக்கும்"


"ஓகே சொல்லிடு... சரஸ்வதி எப்படி இருக்காங்களாம்.."


"அதான் சொன்னேனே.. பயமில்லையாம். ரெகவரி கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் பிழைத்து விடுவாளாம்... பணம்தான் ரொம்பச் செலவாகும் போல இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியலைன்னு அவங்க அக்கா சொல்லிக்கிட்டு இருந்தாங்க..." என்ற படி மியூட் செய்திருந்த டீவியை உயிர்ப்பித்தாள் விஜி.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஞாயிறு 180:: சொல்லுங்க அண்ணே, சொல்லுங்க!


எந்த சபா காண்டீன் சாப்பாடு, டிஃபன் எல்லாம் நல்லா இருக்கு? 


சனி, 15 டிசம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 9/12 முதல் 15/12 வரை.


எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....


=======================================================================

1) தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு, 53 வயதிலும், சிட்டாக பறந்து உதவும் ரோசியம்மா: என் சொந்த ஊர் தாளவாடி. 10ம் வகுப்பு முடித்து, மங்களூரில், இரண்டாண்டு டெய்லரிங் கோர்ஸ் படித்தேன். திருமண வாழ்க்கை, கை கொடுக்கவில்லை.பின், "மைராடா' அமைப்பில் சேர்ந்து, ஒன்றரை ஆண்டு, 250 பேருக்கு டெய்லரிங் பயிற்சி கொடுத்தேன். அவர்களில், 100 பேருக்கு மேல், தனியாக தையல் கடை வைத்து, நல்ல வருமானத்துடன் இருக்கின்றனர்.  (தினமலர்)
சுய உதவிக்குழு அமைப்பது, பாமர மக்களுக்கு கால்நடைகளை வளர்ப்பதற்கு உதவுவது, சுகாதார நடவடிக்கை மேற்கொள்வது என, பலருக்கு உபயோகமாகவே இருந்தது, என் நாட்கள்.காடுபசுவன்மாளம் என்ற ஊரில், "மைராடா' மூலம், மினி ஹெல்த் சென்டர் அமைத்திருந்தனர். அடிப்படை வசதி எதுவும் இல்லாததால், நான் பார்த்த பிரசவங்கள், என்னை ரொம்ப பெருமிதமாக உணர வைத்தன. குறிப்பாக, இரட்டை குழந்தைகளையும், தாயையும், பிரசவ போராட்டத்தில் இருந்து, பத்திரமாக மீட்ட நேரம், என் வாழ்வின் பொக்கிஷ தருணம். 
மலைவாழ் மக்கள் மத்தியில் பணியாற்றிய போது, வீட்டில் மூலிகைத் தோட்டம் அமைக்க வைத்து, அதன் மூலம், அவர்களுக்கு ஆரோக்கியத்தை சொல்லிக் கொடுத்தேன். படிப்பறிவில்லாத பாமர மக்கள், அந்த எளிய மருத்துவத்தை, இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.மற்றவர்களுக்கு உதவுவதால் தான், இந்த வயதிலும், உடம்பு எனக்கு பாரம் இல்லாமல் இருக்கிறது.
                                                
எப்போதும், என்னை சுற்றி இருப்பவருக்கு, சிறு சிறு உதவிகள் செய்வதில் ஆரம்பித்த பயணம், 33 ஆண்டுகளாக, சமூக சேவகியாக சுவீகரித்துக் கொண்டுள்ளது.பண்களுக்கு தொழில் பயிற்சிகள் தருவது, வங்கிக் கடன் பெற வழிகாட்டுவது, அரசு உதவித் தொகை பெற்றுத் தருவது மட்டுமின்றி, கல்வி ஆரோக்கியம், வேளாண்மை, கால்நடை, சமூகநல மேம்பாடு என, எல்லா தளங்களிலும், என் சேவை பணி தொடரும். (தினமலர்)

2) பின் தங்கிய கிராமங்களை மேம்படுத்துவதில், தன்னை ஈடுபடுத்தியுள்ள, நெல்லை மாவட்டம், புளியரை, "டி.கேர் நர்சிங் கல்லூரி' முதல்வர், கணேசன்: என் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த புதுக்குடி. நான், விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே கஷ்டப்படும் பின்னணி.
கேரளாவில், இரண்டாண்டு வேலை செய்து, சம்பாதித்த பணத்தில் தான், கல்லூரியில் சேர்ந்தேன். பெட்டிக் கடை நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தில், கல்லூரி செலவுகளை சமாளித்தேன். இப்படி, கஷ்டப்பட்டு, பி.எஸ்சி., பட்டதாரி ஆனேன்.எனக்கு, சிறு வயதிலிருந்தே, சுற்றுப்புறச் சூழலில் ஆர்வமுண்டு. நாம் வசிக்கும் கிராமம், வசிப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையேல், வசிக்க ஏற்றதாக, அதை, நாமே மாற்ற வேண்டும் என்பது, என் கொள்கை.
வளர்ந்தோம், படித்தோம், வேலையில் சேர்ந்தோம் என்றில்லாமல், மக்களுக்காக, வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான், என் வாழ்க்கை என, முடிவெடுத்தேன்.விடுமுறை நாட்களில், கிராமம் தோறும் பயணிப்பேன். எந்த கிராமம், சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது என்று கவனிப்பேன். அங்கிருக்கும் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் பேசி, சுகாதாரக்கேட்டை சுட்டிக்காட்டி, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன்.
                                                        

நீர்நிலைகளை தூர் வாருவோம்; வேண்டாத குப்பையை செடி கொடிகளை அப்புறப்படுத்துவோம்; குப்பையை ஒழுங்காக, அதற்குரிய இடங்களில் போடுமாறு, வீடு வீடாகச் சென்று கேட்டுக் கொள்வோம். சாக்கடை, கழிவுநீர்ப் பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம், சரிசெய்யும் படி கேட்டுக் கொள்வேன். கிராம சுகாதாரத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவோம்.பாவூர்சத்திரம், சுரண்டை, செங்கோட்டை உட்பட, ஏறக்குறைய, 80 கிராமங்களில், இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுள்ளேன்.
(தினமலர்)

3) உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும், வெளிநாட்டவர்க்கும், இணைய தள அம்மாவாக இருந்து சமையல் கற்று தரும் கீதா: நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. என் கணவர், "இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தில், மேனேஜராக இருந்து, ஓய்வு பெற்றவர். நாங்கள் பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர். எங்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள். மகன், கனடா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். என் மகள், வேறு மதத்தை சேர்ந்தவரை திருமண செய்து கொண்டாள்.என் மகளுக்கு சமையல் தெரியாது. "இந்த குழம்பு எப்படி செய்றது; அந்த கூட்டு எப்படி செய்றது' என்று, அடிக்கடி போனில் கேட்டு சமைப்பாள். என் மருமகளும், இந்தியன் டிஷ் எப்படி செய்வது என்பதை வீடியோ எடுத்து, நெட்டில் அனுப்பச் சொன்னாள்.அதன்படி, வத்தக் குழம்பு வைப்பதை வீடியோ எடுத்து, "யூ டியூப்பில்' அப்லோட் செய்தோம். ஆனால், இதை உலகம் முழுவதும் பார்ப்பார்கள் என்று தெரியாது. ஒரு நாள், அமெரிக்க வாழ் தமிழ் பெண் ஒருவர், "வத்தக் குழம்பு நல்லா இருந்தது; ரொம்ப நன்றி மாமி' என, மெயில் அனுப்பி இருந்தார். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.இதை என் பிள்ளைகளிடம் சொன்னதற்கு, தொடர்ந்து, பலவிதமான ரெசிபிகளை வீடியோ எடுத்து, அப்லோட் செய்யும் படி கூறினர். அதன் படி செய்தேன். இதுவரை, 287 ரெசிபிகளை, 519 வீடியோக்களாக அப்லோட் செய்திருக்கிறேன்.மகன், மகளைப் பார்க்க வெளிநாடு போன போது, "யூ டியூப் மாமி!'னு ஆறு பேர், அடையாளம் கண்டுபிடிச்சு விசாரிச்சாங்க. அந்த தருணம், நெகிழ்ச்சியாக இருந்தது.யூ டியூபில், ஒரு நிறுவனம், விளம்பரத்துக்கு தொடர்புக் கொண்டாங்க. அதன் மூலம் கிடைக்கிற நிதியில், பல குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்கிறேன்.என் மாமியார் தான், எனக்கு, பல வகையான டிஷ்களை சொல்லித் தந்தாங்க; அதனால, "யூ டியூப்' புகழ் பரிசு, என் மாமியார் எனக்கு தந்த பரிசு! (தினமலர்)

4) "உலக அளவில் சாதிக்கும் புலம் பெயர்ந்த இந்தியத் தலைவர்கள்' எனும் நூலில், நான்காவது இடத்தை பிடித்துள்ள, தமிழர் டாக்டர் ராமதாஸ். மாயவரம் அருகிலுள்ள நல்லாடை
ஊரைச் சேர்ந்த, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் சகோதரிகள் சரியான மருத்துவம் கிடைக்காததால், தான் மருத்துவராக முடிவு செய்து, காமராஜர் கொண்டு வந்த, "மெட்ராஸ் எஜுகேஷன் ரூல்' மூலம் மருத்துவம் பயின்று, 1983ல், ஆப்பிரிக்கா கண்டத்தின் அருகில் இருக்கும், செஷல்ஸ் தீவுக்கு, மருத்துவ தொழில் செய்ய சென்றிருக்கிறார்.
                                                           
அங்கு அதிபராக இருந்த ஆல்பர்ட் ரெனே இவரை அந்நாட்டு ராணுவத்திற்கு, மருத்துவம் பார்க்கும் பணியில் அமர்த்த, அப்புறம் இவர் சேவையை பார்த்து, ராணுவத் தலைமை மருத்துவராக உயர்த்த, சீப் மெடிக்கல் ஆபீசரான பிறகு, "பீப்புள் பார்ட்டி' கட்சியின் பொருளாளர் பதவி கிடைத்தது.
(தினமலர்)

5) கடலில் ஒரு புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்து, கல்லூரி நாட்களில் இலவச சைக்கிள் கொடுத்த முதல்வருக்கு நன்றிக்கடன் போல போல அதற்கு 'அம்மா என்று பெயரிட்டுள்ளாராம் நீலகிரி மாவட்டம், கம்பட்டி அட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ். கிராமத்திலேயே படித்து, தமிழ் வழிக் கல்வியிலேயே முதுகலைக் கல்வி பயின்றதுடன், ஆராய்ச்சிப் படிப்பிற்காக கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம். இவரின் கிராமத்தில் இவர்தான் முதல் பட்டதாரி.
                                                        
எம்.எஸ்.சி., மைக்ரோபயாலஜி முடித்து, பிஎச்.டி., ஆய்விற்காக, கேரள பல்கலையில் சேர்ந்து, அங்கு இவருடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும், புதிய கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி, பல ஆய்வுகளை மேற்கொள்ள வந்திருக்க, அவர்கள் தந்த உற்சாகத்தில் அரபிக் கடலில் ஆய்வு மேற்கொண்டு, புதிய உயிரினத்தைக் கண்டறிந்தார். இதை, "ஐசி. ஜெட்' என்ற கமிட்டி அங்கீகரிக்க வேண்டும். அதற்காக, மிகவும் சிரமப்பட்டு, பிறகு பலவித ஆய்வுகளுக்குப் பின், வாஷிங்டனின், "ஜகீஸ்' அறிவியல் இதழ் ஏற்று, அங்கீகரித்துப் பாராட்டியது. இதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.இவர் கண்டுபிடித்திருக்கும் உயிரினம், பார்ப்பதற்கு மண்புழு போன்று இருக்கும். கடலில் உள்ள, "சல்பைடு' உயிரினத்தை அழித்து விடும். கடுமையான நோய்களையும் எதிர்க்கும், பாக்டீரியாக்களைக் கொண்டது.
(தினமலர்)

6) இந்தியா - பாகிஸ்தான் போரில், மருத்துவ பணியாற்றிய, சேவை மனப்பான்மை கொண்ட பிஸ்வ குமார், மருத்துவமனையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்களிடம் நெருங்கிப் பழகி வைத்தியம் பார்த்ததால், சேவை மனப்பான்மை,  ரத்தத்தில் ஊறி, ப்ரீமேசன்ஸ்' என்ற உலகளாவிய அமைப்பில் இணைந்து இந்தியா முழுவதும் சென்று, மனிதர் களைச் சந்திக்கவும் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் பெற்றதன மூலமாக 2011ல், இந்தியா முழுக்க, 58 குக்கிராமங்களை தத்துதெடுத்து, அந்த கிராம மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் பொறுப்பை ஏற்று,  "ஜோதிர்கமயா' என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம்,தமிழகத்தில் சத்திய மங்கலம், கொடைக்கானல், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள மலைவாழ் கிராமங்களுக்கும் மின் வசதி வழங்கி,  நக்சல் அமைப்பை சேர்ந்தவர்கள், முதலில் எங்களை பல கேள்வி கேட்டு துளைத்தெடுத்தபோது,  "இரவு நேரங்களிலும், உங்கள் குழந்தைகள் படித்து டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்பதற்காகத் தான், நாங்கள் இத்தனை கஷ்டப்பட்டு வந்து, வெளிச்சம் தருகிறோம்' என்றதும், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனராம். 

                                                 
"ஒவ்வொரு கிராமத்தின் மின்சாரத் தேவையை, தொடர்ந்து தடையின்றி வழங்க, எங்கள் அமைப்பை சேர்ந்த ஊழியர்கள், அடிக்கடி விசிட் செய்து, பாட்டரி உட்பட சோலார்கருவிகள் நன்றாக இயங்குகின்றனவா என்பதை கண்காணித்த படி இருப்பர்.சூரிய மின் சக்திக்காக அரசு வழங்க இருக்கும், மானியத் தொகையையும், இன்னும் பல கிராமங்களுக்கு பயன்படுத்த உள்ளோம்." என்கிறார் இவர். (தினமலர்) 

வெள்ளி, 14 டிசம்பர், 2012

(மடக்கி) மடக்கிப் போட்ட மன வரிகள்!




கருப்பு மேகத்தால்
வெண்மை தேகம்
கறையானதாக
வானம் விட்ட கண்ணீர்..

கண்டு இரங்கிய

காற்று வந்து
மேகம் துரத்தியவுடன்
கண்ணீர் நின்றது.  
******************************************************

கரியவானின்
நட்சத்திர பொத்தல்கள்
சுருட்டி முடித்து
தூர எறிந்து
வெண்மையாக்கிக் கொடுத்தது
வெளிச்ச வானம்.

********************************************************

 

தேக்கி வைத்த 
மௌன அணைக்கட்டு 
உடைந்தது....
பேச்சு வெள்ளம்.

தனியாய் இருந்த 
தாத்தா.
********************************************************



கனவுக் கற்களால்
மனக்குளத்தில்
கல்லெறிகிறேன்..
தெறிக்கிறது
சிறு திவலைகளாய்
உன்
நினைவுகள்!

**********************************************************

படங்கள் : நன்றி இணையம் 

செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாரதியார் பாடல்கள்


1) வீணையடி நீ எனக்கு



2) வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்...



3) சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா



4) மோகம் என்னும் தீயில்



5) மனதில் உறுதி வேண்டும்

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

சனி, 8 டிசம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 2/12 To

எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
+    +   +    +   +    +     +     +     +    +    +      +    +    +     +     +   +   +      +    +    +     +    +    +   +   +

1) சொந்தக்காரர்கள் இறந்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உடலை தகனம் செய்வதோ புதைப்பதோ செய்து விடுகிறோம். அனாதையாக உயிரை விடுபவர்களுக்கு அவர்கள் உடலை ஏற்று அதற்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்ய எந்த பிரதிபலனையும் எதிர்பாராது செய்யும் சமூக சேவகர்களில் ஒருவர் சென்னைப் பாலவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். 1985 முதல் இந்தத் தொண்டைச் செய்து வரும் இவர் பற்றி இந்த வார தினமணிக் கதிரில் விவரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.கலியுகத்தில் அஸ்வமேத யாகத்துக்குச் சமம் என்று பெரியவர்கள் சொல்லியிருப்பதைக் குறிப்பிடும் இவர், ஓரிரண்டு நெகிழ்ச்சியான சம்பவங்களையும் சொல்கிறார்.

விஸ்ராந்தியைச் சேர்ந்த சாவித்திரி வைத்தி உட்பட 9 பேர் ட்ரஸ்ட் நிர்வாகத்தில் உள்ளனராம். சவ அடக்கம் மட்டுமின்றி ஈமக்கிரியைகள் செய்யக் கஷ்டப்படுவோருக்கும் உதவி செய்யும் இவர்களுக்கு ஸ்டேட் பேங்க் இந்தப் பணியைச் செய்ய இவர்களுக்கு ஒரு இறுதி யாத்திரை வேன் ஒன்று தந்து உதவி இருக்கிறதாம். இந்தக் கைங்கர்யச் சேவை ஆரம்பிக்குமுன் விஸ்ராந்தி, ஆனந்தம், காக்கும் கரங்கள், சாய் சரண் போன்ற இல்லங்களுக்கு இந்தப் பணியில் உதவிக் கொண்டிருந்தாராம். 'பிரேமாலயா' என்ற மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான
இல்லமும் இவர்கள் தொடர்பில் இருப்பதாகக் கூறும் இவர் இதுமாதிரி சேவைக்கு அழைப்புகள் வரும்போது தடை செய்யாமல் உடனே அனுப்பும் நல்ல உள்ளங்கள் கொண்ட, தான் வேலை செய்யும் அலுவலகம் பற்றியும்   சொல்கிறார்.

2) சென்னை 28, தமிழ்படம் போன்ற படங்களில் நடித்த சிவா நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதற்கு   முன்பிருந்தே ஆத்மார்த்தமாகச் செய்யும் செயல் 'வித்யாசாகர்' மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிக் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது பற்றிய செய்தியை மங்கையர் மலரில் படித்தேன்.
எதிர்பார்ப்பு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் ரகசியத்தை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார். இரவு பகலாக அங்கேதான் இருப்பாராம். ஒருமுறை ஞானப்ரசன்னா என்ற 8 வயதுச் சிறுமியை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கேற்க அழைத்துச் சென்று, அதில் அந்தச் சிறுமி தங்கப்பதக்கம் வென்று நெகிழ வைத்ததைச் சொல்கிறார்.இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக DS என்று அறியப்படும் டவுன் சின்ட்ரோம் பற்றி மருத்துவர் ரேகா ராமச்சந்திரன் சில அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். டி  எஸ் உள்ளவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாதாம். அவர்கள் மகள் (என்று நினைக்கவைக்கும்) பப்ளி பாரத நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்திருப்பதையும் பெருமையாகச் சொல்கிறார். (சுப்பு தாத்தா... இது போன்ற கட்டுரைகளில் தொடர்பு கொள்ளும் எண்ணோ, முகவரியோ தருவதில்லைதான்)

3) அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார். தனது இரண்டாவது அரசின் முக்கிய பதவிகளில் திறமை வாய்ந்தவர்களை நியமிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான கட்டட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்து தடை சரிசெய்தல் போர்ட்டின் உறுப்பினராக பார்வையற்ற இந்தியரான சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை ஒபாமா நியமித்துள்ளார்.  இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சச்சின் தேவ், உடா மாகாண பல்கலைக்கழகத்தில் உடல் ஊனமுற்றோருக்கான மையத்தின் பொறுப்பாளராக கடந்த 2011ம் ஆண்டு முதல் பணியில் உள்ளார். இப்பதவிக்கு வருமுன் உடல் ஊனமுற்றோர் தொடர்பான பல்வேறு பணிகளில் பணி செய்த அனுபவம் சச்சின் தேவுக்கு உண்டு. (முகப்புத்தகம்)

                                      ஒபாமா அரசின் முக்கிய பதவியில் பார்வையற்ற இந்தியர் நியமனம்

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ளார் பராக் ஒபாமா. தனது இரண்டாவது அரசின் முக்கிய பதவிகளில் திறமை வாய்ந்தவர்களை நியமிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான கட்டட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்து தடை சரிசெய்தல் போர்ட்டின் உறுப்பினராக பார்வையற்ற இந்தியரான சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனங்கள் குறித்து ஒபாமா கூறுகையில், இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் நபர்கள், தற்போதைய புதிய பதவிகள் மூலம் அமெரிக்க அரசின் அனுபவங்களுக்கும் திறமைக்கும் சொத்தாக விளங்குகின்றனர். இப்புதிய பதவிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டவர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இனி வரும் காலங்களில் உங்களுடன் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் பணிபுரிய ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.

இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சச்சின் தேவ், உடா மாகாண பல்கலைக்கழகத்தில் உடல் ஊனமுற்றோருக்கான மையத்தின் பொறுப்பாளராக கடந்த 2011ம் ஆண்டு முதல் பணியில் உள்ளார். இப்பதவிக்கு வருமுன் உடல் ஊனமுற்றோர் தொடர்பான பல்வேறு பணிகளில் பணி செய்த அனுபவம் சச்சின் தேவுக்கு உண்டு.

4) நம்மில் பலர் பள்ளிக்குச் செல்வதற்காகப் பாலத்தைக் கடந்து இருப்போம். ஆனால், டெல்லியில் பாலத்துக்குக் கீழே ஒரு திறந்தவெளிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மெட்ரோ ரயில் பாலத்தையே கூரையாகக்கொண்ட அந்தப் பள்ளியை நடத்திவருகிறார், 40 வயது ராஜேஷ் குமார் ஷர்மா. கூலித் தொழிலாளி, விவசாயி, ஆட்டோ டிரைவர் போன்றவர்களின் குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள்.
ஷாகர்பூர் என்ற ஊரில் மளிகைக் கடை நடத்திவரும் ராஜேஷ் குமார், தனது வறுமைநிலை காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். தினமும் தனது கடைக்குச் செல்லும் வழியில் தெருவோரம் விளையாடும் சிறுவர்களைக் காணும்போது, 'இப்படி பள்ளிக்குச் செல்லாமல் எதிர்காலத்தைத் தொலைக்கிறார்களே’ என மனம் வருந்தினார்.
அவர்களின் பெற்றோரிடம், 'உங்கள் குழந்தைகளை என்னிடம் படிக்க அனுப்புங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அப்படித் திரட்டிய மாணவர்களைக்கொண்டு, இரண்டு வருடங்களாகப் பாலத்துக்குக் கீழே, வாரத்துக்கு ஐந்து நாட்கள் பள்ளியை நடத்துகிறார். மளிகைக் கடையில் வேலை இருக்கும்போது, இவரது தம்பி பள்ளியைப் பார்த்துக்கொள்வார்.

இப்போது இந்தப் பள்ளிக்குத் தினமும் 50 மாணவர்கள் தவறாமல் வருகிறார்கள். காலையில் தரையைச் சுத்தப்படுத்துவது, கரும்பலகையைத் துடைப்பது போன்ற எல்லா வேலைகளையும் மாணவர்களே செய்கிறார்கள். இந்தப் பள்ளியைப் பற்றி தகவல் அறிந்த தன்னார்வலர்கள் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கி உதவுகிறார்கள்.

''நம் நாட்டில் வறுமையால் எந்தக் குழந்தைக்கும் கல்வி கிடைக்காத நிலை இருக்கக் கூடாது. அதற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். இங்கே படித்த 140 மாணவர்களில் 70 பேர் இப்போது வழக்கமான பள்ளிகளில் சேர்ந்துவிட்டார்கள்'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் ராஜேஷ் குமார்.

5) புதுவை மாநிலம் கூடப்பாக்கம் ஊரைச் சேர்ந்த, 'பத்மஸ்ரீ' பட்டம் பெற்ற விவசாயி வேங்கடபதி பற்றி தினமலர் சொல்கிறார்கள் பகுதியில். 'கேசுரியா ஜிங்குனியானா' என்ற வகைச் சவுக்கை எடுத்து, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர் வீச்சு செய்து, புதியவகை ஹைபிரிட் சவுக்கை உருவாக்கினாராம். நன்கு பலன் கொடுத்த அந்த சவுக்கின் இலைகளில் இருந்து கன்றை உருவாக்க ஆரம்பித்தாராம்.
 மண் பரிசோதனை செய்தபின் நடப்படும் இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் தரக் கூடியதாம். சாதாரணச் சவுக்கு போலல்லாமல் புயல் மழையிலும் விழாமல் நிற்கும் இந்தச் சவுக்கு கடும் வறட்சியிலும் தரிசு நிலங்களிலும் வளர்ந்து நல்ல பலன் தரக் கூடியதாம். ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாய் செலவில் 200 டன் மகசூல் கிடைக்குமாம். 1 டன் 2,500 ரூபாய்க்குச் சந்தையில் விற்கப்படுகிறதாம். இதற்காக அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்துள்ளது. ஹைபிரிட் சவுக்குக் கன்றுகளை வளர்த்து ஒரு கன்று 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறாராம். தொடர்புக்கு 9443226611.

6) பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் 10 அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று 48 மணி நேரத்தில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. 'சைனர்ஜி க்ரூப்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தச் சாதனையைச் செய்துள்ளது. 3 மாதங்களாக தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இரும்புக் கட்டமைப்புகள் மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் மூலம் 25,000 ச.கிமீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த வியாழன் மாலை நிபுணர்கள் குழு 25 பேர், 200 பணியாளர்கள் 3 கிரேன்கள் உதவியுடன் பணியைத் தொடங்கி, 48 மணி நேரத்தில் முடித்துள்ளனராம். இது சுற்றுச் சூழல் பாதுகாப்பானது, குறைந்த அளவு மின்சாரத்தை நுகரக் கூடியது,  தாங்க வல்லது என்று சொல்லும் இவர்கள், தொழில் மற்றும்   மையம் இவர்கள் கட்டிடத்துக்குச் சாண்டளித்துள்ளத்தையும் சொல்கிறார்களாம். தினமலர்.

7) சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இயல் இசை வல்லபி, வானவன் மாதேவி. 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' என்னும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள். மனித உடலில் இறந்துகொண்டே இருக்கும் பல  செல்கள் புதிதாக உருவாகிக் கொண்டேயும் இருக்கும். ஆனால் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய செல்கள் உருவாகாது என்பதோடு  ஒவ்வொரு உறுப்பாக செயலாற்றுப் போகவும் ஆரம்பிக்கும். இவர்களுக்கு இந்நோய் இருப்பது இவர்களின் 10 வயதில்தான் தெரியத் தொடங்கியதாம். தனித் தனியாக டியூஷன் படித்து +2 முடித்து, தொலைதூரக்  டி சி ஏ  முடித்துள்ள இவர்களுக்கு ஐ ஏ எஸ், எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததாம். இதே போன்ற நோயால் பாதிக்கப் பட்டோருக்கு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று  ஆசைப் பட்டு, பெற்றோர் அனுமதியுடன், நன்கொடை தந்த சில நல்ல உள்ளங்கள் உதவியுடன், 2009 இல் 'ஆதவ்  ட்ரஸ்ட்' என்று தொடங்கி உள்ளனராம்.   ஏழைக்  இந்நோய் பாதித்த குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதோடு, இந்த ட்ரஸ்ட் மூலம் நோயாளிகளுக்கான விடுதியும் இந் நோய் குறித்த ஆராய்ச்சி மையமும்  கட்ட ஆசை என்று சொல்கிறார்கள்.ஆதரித்து நன்கொடை கொடுத்தவர்களின் ஆதரவில் ஒரு கம்பியூட்டர் சென்டரும், நூலகமும் வைத்துள்ளனராம். மொபைல் : 99763 99403

8) மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர். இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார். எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர். ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.  (முகநூல்)

உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.

                         கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்!

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.

இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.  பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை  தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.

இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். இந்த தினத்தில் உதயக்குமார் போன்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய உண்மையான திறனாளிகளை வாழ்த்துவோம்.

படத்தில் உதயகுமார்



9) கூடலூர் : கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் "சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்கள் வனப் பகுதியை ஒட்டிய குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதியின்றி குடிசைகளில் வசித்து வந்த இவர்களுக்கு, தற்போது, அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனால், பல கிராமங்களில் வனத்துறையின் விதிகள் காரணமாக, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், பல ஆதிவாசி கிராமங்களுக்கு, "சூரிய மின் சக்தி' மூலம் மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, கூடலூர் ஸ்ரீ மதுரை மேலம்பளம் மற்றும் மானிமூலா பனியர் காலனியில், தலா ஒரு யூனிட்டுக்கு ஒரு கிலோ வாட் சக்தி கொண்ட "சூரிய மின் சேமிப்பு நிலையம்' அமைத்து, அதிலிருந்து வீடுகளுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேலம்பளம் கிராமத்தில் 28 வீடுகளிலும், மானிமூலாவில் 16 வீடுகளிலும் பயன் அடைந்துள்ளன.
                                          
தெரு விளக்குகள் மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை மட்டும் எரிந்து அணையும் வகையில், "சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில், பொதுவான ஓர் இடத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்ட்டுள்ளது.

திட்டம் குறித்த ஆதிவாசி மக்கள் கூறுகையில், "இத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது; தொடர்ந்து பராமரிக்கவும், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் "டிவி' பயன்படுத்தும் வகையிலும், கூடுதல் மின் சப்ளை வழங்க வேண்டும்' என அப்பகுதியினர் தெரிவித்தனர். "இத்திட்டம் மின்சாரம் இல்லாத மற்ற ஆதிவாசி கிராமங்களிலும் விரிவு படுத்தப்படும்,' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

10) பஸ் டிரைவருக்கு கடும் நெஞ்சுவலி: சாலையோரம் நிறுத்திய பின் மரணம்: பண்ருட்டி அருகே பணியின் போது, தனியார் ஆம்னி பஸ் டிரைவர் நெஞ்சுவலியால் இறந்தார். சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு, தனியார் ஆம்னி பஸ் பண்ருட்டி வழியாக நேற்று அதிகாலை, 4:15 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. தஞ்சாவூர் அடுத்த பாபநாசத்தைச் சேர்ந்த ரஞ்சித், 38, என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பண்ருட்டி அடுத்த மாம்பட்டு அருகே வந்தபோது, டிரைவர் ரஞ்சித்துக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சமார்த்தியமாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி, "ஸ்டியரிங்' மீது சாய்ந்தார். அதிர்ச்சியடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள், "108' அவசர ஆம்புலன்ஸ் மூலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், ரஞ்சித் இறந்து விட்டதாக, தெரிவித்தனர். உயிர் போகும் நிலையிலும், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, தங்களைக் காப்பாற்றிய பஸ் டிரைவரைப் பார்த்து, பயணிகள் கண் கலங்கினர்.

11) விளக்கம், செய்தி தேவையில்லை....!

முதல் படம்....
 


இரண்டாவது..
                              
12) பேப்பர் கப் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றியைச் சந்தித்துள்ள தேவகி, முன்னதாக டிகிரி முடித்ததுமே திருமணம் ஆகி விட, வெட்டிப் பொழுது போக்க விரும்பாமல் கணவரின் உதவியுடன் முதலில் ஐஸ் க்ரீம் பார்லர் தொடங்கி, சரியாக வராத நிலையில் இவரின் பேச்சுத் திறமை பார்த்து நண்பர் சொன்ன யோசனையின் பேரில் எல் ஐ சி முகவராகி கணவரின் உதவியுடன், ஆதரவுடன் தேர்வெழுதி, வெற்றி பெற்று 5 வருடங்களில் மாதம் 40,000 ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினாலும், சுய தொழில் ஆசையில் மீண்டும் முயற்சி செய்து, பேப்பர் கப் தயாரிப்பில் இறங்க, கணவர் உதவ மறுத்து விட்ட நிலையிலும் வங்கியில் கடன் வாங்கி 7 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கி இன்று வெற்றிகரமான சிறு தொழிலதிபராகவும் வலம் வருகிறார் என்ற செய்தியைச் சொல்கிறது தினமலர்.
                                               

                                                         

13) மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

நேற்று வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகையை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால்
இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை. மாறாக அயோத்தி குப்பத்தில் உள்ள ஐந்து மீனவர்கள் இதை காப்பாற்ற முடிவெடுத்தனர். ஐந்து முறை இம்மீனை கடலில் ஆழப் பகுதியில் விட்டுவிட முயற்சித்தும் இம்மீன் மீண்டும் கரை ஒதுங்கியது. அதனால் வேறு வழி இன்றி ஒரு அபாயகரமான முடிவை எடுத்தனர் இந்த ஐந்து மீனவர்கள். ஆம் , கடல் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய படகில் இம்மீனை ஏற்றிக் கொண்டு கடலின் ஆழப் பகுதிக்கு துணிந்து சென்று இம்மீனை விட்டு விட்டு வந்தனர் . ஆழமான பகுதியை கண்டதும் இந்த டால்பின் மீன் கடலுக்குள் துள்ளிக் குதித்து சென்று மறைந்தது .

மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டுக் குரிய செயல். டென்மார்க் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த பாலூட்டி மீன்களுக்கு இறக்கம் காட்டுவதில்லை . மிகவும் அறிவு கூர்மையான இந்த மீனை அதிக அளவில் வேட்டை ஆடி வருகின்றனர் . ஆனால் தமிழக மீனவர்களோ இந்த மீனின் தன்மை அறிந்து அதனை காப்பற்றி உள்ளனர் . தமிழ் மீனவர்களுக்கு நம் வாழ்த்துகளை பகிருவோம்.
                  

படத்தில் - மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்.  (முகநூலிலிருந்து)

14) பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல் பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகிறது என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்ஸ்கி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில் ஹெச்ஐவி புரதம் அடங்கிய மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்றது. பசு கன்று ஈன்ற பிறகு சுரக்கும் கொலஸ்ட்ரம் என்ற பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது கன்றுகளை நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. பசும்பாலில் உள்ள கிரீமில் எய்ட்ஸ் வைரசை தாக்கி அழிக்கும் பக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதும், இவற்றால் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதும் உறுதியாகி உள்ளது என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது. எய்ட்ஸ் நோய் தாக்குதல் எந்த நிலையில் இருந்தால் பால் கிரீம் கட்டுப்படுத்துகிறது, எவ்வளவு கிரீம் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறினர். (முகநூலிலிருந்து)