சனி, 6 ஏப்ரல், 2013

பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 31, 2013 முதல் ஏப்ரல் 6,2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

1) "அபெக்ஷா' என்ற அமைப்பின் மூலம், ஏழைகளுக்கு உதவி செய்யும் கல்லூரி மாணவன், ஜோதி பிரகாஷ்: நான், திருச்சி, என்.ஐ.டி., பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். இன்றைய கல்லூரி மாணவர்கள் என்றாலே கேலி, கூத்து என, ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள் என்ற எண்ணமே, அனைவரிடத்திலும் உள்ளது.இந்த எண்ணத்தை மாற்ற, கல்லூரி மாணவர்களுக்கும் சமூக கடமைகள் உள்ளதை உணர்ந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன், எங்கள் கல்லூரியின் மூத்த மாணவர்கள், "அபெக்ஷா' எனும், தன்னார்வ தொண்டு அமைப்பை ஆரம்பித்தனர்.
                                                   

அபெக்ஷா என்ற இந்தி வார்த்தைக்கு, "தேவை' என்று பொருள். ஏழைகளின் தேவைக்கு, உதவ வேண்டும் என்ற நோக் கில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.சீனியர் மாணவர்கள், கல்லூரியை விட்டு சென்றாலும், ஜூனியர் மாணவர்களாகிய நாங்கள், இப்பணியை தொடர்கிறோம். எங்களுக்கு பிறகும் கல்லூரிக்கு வரும் புதிய மாணவர்கள், இதை தொடர்வர்.

2) ஆதரவற்ற முதியோர்கள் 60 வயதை கடந்திருந்தால் ஆதரிக்க நாங்கள் இருக்கிறோம்...


இந்தியாவின் எந்த மூலை முடுக்கிலும் பிள்ளைகள் இருந்தும் ஆதரவில்லாமல் இருக்கும் முதியோர்கள், தொற்று நோய்கள் இல்லாமல், ரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவைகள் இருந்து, தங்கள் பணியைத் தானே செய்து கொள்ளும் நிலையில் இருந்தால், அவர்கள் வாழ் நாள் முழுதும் உணவு, உடை, தங்குமிடம் என அனைத்து வசதிகளும் அளித்து பாதுகாக்க தயாராக உள்ளோம். தற்போதைக்கு 13 நபர்களை எதிர்பார்க்கிறோம். அவர்களை அழைத்து வரும் போது இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வயது சான்றிதழ் (மருத்துவ சான்றிதழ்) ஆகியவற்றை எடுத்து வரவும்.
உடனடித் தொடர்பிற்கு,
ராஜ்குமார்.
9094477367 / 9566129592.
                                                            
ஏற்கனவே 13 முதியோர்களை வைத்து பராமரித்து வரும் எங்களுக்கு மாத மளிகை சாமான்களுக்கு 5000 ரூபாயும், ஒரு நாள் உணவிற்கு 1000 ரூபாயும், காலை மற்றும் இரவு உணவிற்கு தலா 300 ரூபாயும், மதிய உணவிற்கு மட்டும் 500 ரூபாயும் தேவைப்படுகிறது. விரும்பும் ஆர்வலர்கள் தங்கள் நல்ல நாட்கள் மற்றும் மறைந்தவர்களின் நினைவு நாட்களில் இவர்களுக்கு உதவ முன்வருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.  

தற்போதைய வெப்ப நாட்களில் அவர்களுக்கு கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற தானிய வகைகள் வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்படி அளித்து உதவலாம். முதியவர்கள் அணியும் உடைகளில் வேட்டி, சட்டை மற்றும் சேலை போன்றவைகளையும் கொடுத்து உதவலாம்...
மகிழ்வித்து மகிழும் ஆனந்தத்தை ஒரு முறை அனுபவித்துப் பாருங்கள்...நல்ல மனிதர்களையே நல்ல வாய்ப்புகள் தேடி வரும்..எதற்காகவும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.......

இதனால், மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் உருவாகிறது.கல்லூரி வளாகத்தில் உள்ள, அரசு உதவி பெறும் இடைநிலைப் பள்ளிக்கு தினமும் சென்று, மதியம் முதல் மாலை வரை, சிறப்பு வகுப்புகள் எடுக்கிறோம். பள்ளியில், கணினி வசதிகள் செய்திருந்தாலும், பயன்படாத நிலையில் இருந்தது. இந்நிலையை மாற்றி, கணினி இயக்கும் முறை மற்றும் பல வித, "சாஃப்ட்வேர்'களை சொல்லி தருகிறோம்.மாதம் ஒரு முறை, ஏதேனும் ஒரு மனநல காப்பகம், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று, அவர்களுக்கு தேவையான, அன்பு கலந்த ஆறுதல் வார்த்தைகள் பேசி, சந்தோஷப்பட வைத்து, தேவையான பொருட்களை வாங்கி தருவோம்.

அந்த நாளுக்கான உணவுச் செலவை, நாங்களே ஏற்போம்.காபி ஷாப், தியேட்டர்கள் தரும் சந்தோஷத்தை விட, இது போன்ற இல்லங்களுக்கு செல்லும் போது கிடைக்கும், ஆத்ம சந்தோஷத்தை, அனுபவ பூர்வமாக உணர்ந்தோம்.பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடும் போது, இது போன்ற இல்லங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களிடம் நம் அன்பளிப்பை பகிர்வதால், எங்கும் கிடைக்காத ஆத்ம சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். 
(முகநூலில் பார்த்தது)

3) முன்னாள் தமிழக அமைச்சர் செ. மாதவனின் மகள் வெற்றிச்செல்வி 'கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' நிறுவி புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், ஆர்வமுள்ள வெளிநாட்டினருக்கும் தமி
ழ் சொல்லித் தருவதைச் சொல்கிறது தினமணி ஞாயிறு மலர் (31மார்ச், 2013)
                                             

1998 ஆம் ஆண்டு 13 மாணவர்களுடன் தொடங்கப் பட்டு, தற்போது 3,000 மேற்பட்ட மாணவர்கள், 400 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் இயங்கி வருகிறதாம். முதன் முதலில் கூப்பட்டினோவில் தொடங்கி, தற்போது அமெரிக்காவில் மட்டுமே 6 கிளைகள், 13 இணைக் கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. தமிழ் மொழி, தமிழ்க் கலை தமிழ்ப் பண்பாடு முதலானவற்றை அமெரிக்கவாழ் தமிழ்ப் பிஞ்சு நெஞ்சங்களில் பதிவு செய்வது, குழந்தைகள் தமிழ் கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் மதிப்பெண்களைப் பெரிதாக எண்ணாமல் மொழியைப் புரிந்து கொள்ளவும், நேசிக்க வைக்கவும் பழக்குகிறார்களாம்.

                                                  


ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றரை மணிநேரம் மட்டுமே வகுப்புகள். ஆண்டுக்கு 29 வகுப்புகள் மட்டுமே. ஒவ்வொரு வகுப்பிலும் 8:1 மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம். 1) அறிமுக நிலையில் உரையாடல் மூலம் கற்பித்தல் 2) உடன் நிகழ்வாகவே பொதுவான கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கவும், எழுதவும் தூண்டுதல், 3) தமிழ்நாட்டுக்கே உரித்தான கலையையும் பாரம்பர்யத்தையும் அறிமுகப் படுத்தல், 4) மொழிவளம், கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தல் என்ற முறையில் கற்பிக்கப் படுகிறதாம்.


இணையத்தில் இந்தப் பக்கத்தின் சுட்டி இங்கே. 
California Tamil Academy.

4) வானம் பார்த்த பூமி, நிலத்தடி நீர் குறைந்து போதல், விவசாயக் கடனுக்கு வட்டி கட்டி மாளாதது, என்று குடும்பமே ஊரை விட்டு மாறி, மற்றும் விவசாயிகளின் தற்கொலை என்று மகாராஷ்டிராவின் பல கிராமங்களில் இருந்த நிலையேதான் ஹைவாரே பஜார் என்ற கிராமத்திலும். அந்த அவலங்களைத் தனி நபராகத் தடுத்து நிறுத்தி தன் அறிவின் மூலம், தன் உழைப்பின் மூலம் ரத்சித்திருக்கிறார் போப்பட் ராவ் பவார்.
                                 

                      
முதற்கட்டமாக மக்களின் குடிப் பழக்கத்தை நிறுத்தி, புகையிலை, குட்கா, பான் பராக் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிப்பதையும் நிறுத்த வைத்து, மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்போடு கிராமம் முழுவதும் சிறுசிறு குளங்கள் வெட்டி, மழைக்காலத்தில் பெய்யும் மழையைச் சேமித்து, நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்து, (52 மண் அணைகள், 2 நீர்த் தொட்டிகள், 9 சின்ன வாய்க்கால்களை அரசாங்கப் பணத்திலேயே கட வைத்தார்) 1995 களில் 80-125 அடிகளில் கிடைத்த தண்ணீரை, தற்சமயம் 15 அடி தோண்டினாலே கிடைக்கச் செய்திருக்கிறார்.


கறவை மாடுகளின் எண்ணிக்கையையும் அதிகப் படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிலும் வெற்றி கண்டிருக்கிறார். அந்த வகையில் 95 களில் 150 லிட்டர் கிடைத்த பால் அளவு தற்சமயம் 4,000 லிட்டர் கிடைக்கிறதாம்.


ஊரைவிட்டுச் சென்ற மக்களில் பலர் ஊர் திரும்பியுள்ளனராம். சராசரியாக 1,250 க்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட ஊரில் 60க்கு மேற்பட்ட மக்கள் 10 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனராம்.

5) தேசிய அளவிலான த்ரோபால் போட்டிகளில் முத்திரை பதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வி.ஐரோப்பாவில் தோன்றிய ஃபிஸ்ட் போட்டியிலும் ஜொலித்து வருகிறாராம். தமிழக அணியில் இடம் பெற்று பல்வேறு பதக்கங்கள் வென்றிருக்கும் இவர் அண்ணா ஆதர்ஷில் பி காம் படித்து வருகிறாராம்.

                                             


6) தமிழ்நாடு அரசின் இளம் விஞ்ஞானி விருது வாங்கிய ஆறு பெண்களில் ஒருவர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவன்மனையில் உளவியல் துறையில் இணைப் பேராசிரியையாகப் பனி புரியும் விதுபாலா. 

                                                 


புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஐவரும் இவர் துறையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தன் செயல்பாடுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் தினமணி மார்ச் 31, ஞாயிறு மலரில்.

7) புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வரும் இந்நாளில் கிராமங்கள் தோறும் நூலகங்கள் ஏற்படுத்தி மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகப் படுத்தி வருகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கே. சுந்தரராஜ்.

                                                         

98 இல் தொடங்கப் பட்ட இந்த அருள்பணி இயக்கத்தின் மூலம் இதுவரை 150 நூலகங்கள் கிராமப் புறங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளனவாம். மாணவச் செல்வங்களின் பேச்சுத் திறமையை வளர்க்கவும் பயிற்சிகள் கொடுக்கப் பட்டு வருவதாகச் சொல்கிறார், திரு கே. சுந்தரராஜ்.

8) அமிஷ் திரிபாதி. குழந்தை போல முகம் கொண்ட இவர் சேடன் பகத் போல இன்னொரு நாவலாசிரியராக மாறி வருகிறார். முதலில் நாத்திகராக இருந்தவர். மும்பை குண்டுவெடிப்புக்குப் பிறகு பல்வேறு வித யோசனைகளை வர, கீதை முதல் பல ஆன்மீக நூல்களும் படித்திருக்கிறார். இவர் நாவல்களின் கதாநாயகர் சிவபெருமான். ("ஏன் அவர் கதாநாயகர்?" - "அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்தான்") இதுவரை எழுதியுள்ள மூன்று நாவல்களிலும் சிவபெருமான்தான் ஹீரோ. விற்பனையில்
சாதனை படைத்துள்ளனவாம். இளைஞர்கள் விரும்பி வாங்கிப் படிக்கின்றனாறாம்.
                                           


இவரின் அடுத்த படைப்புக்கு என்ன தலைப்பு என்ன கதை என்று கேட்காமல் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் முன்தொகையாக வழங்கப் பட்டிருக்கிறதாம். இவரின் நாவலொன்று கரன் ஜோகரால் திரைப்படமும் எடுக்கப் பட உள்ளதாம்.


9) குறட்டை விடுவதைத் தடுக்கும் கருவி பற்றிய கட்டுரையும் அதே தினமணி ஞாயிறு மலரில். சுவாசப் பாதை அடைப்பைச் சரி செய்து போதுமான அழுத்தத்தில் ஆக்சிஜனை உள்ளேற்றும் கருவி பற்றி விவரிக்கிறார் டாக்டர் ஜெயராமன். 

                                                  


குறட்டை, உடன் தூங்குபவர்களுக்குத் தொல்லை மட்டுமல்ல, குறட்டை விடுபவர்களுக்கே நல்ல தூக்கமின்மை, ஆக்சிஜனின் குறைந்த பகிர்வால் புற்றுநோய் வரும் அபாயம், மாரடைப்பு வரும் அபாயம் என்றெல்லாம் இருக்கும் நிலையில் இக்கருவி ஒரு வரப்ரசாதமாக இருக்கக் கூடும். (விலை போடவில்லை!)

10) ஒரு கனவு கிராமத்தின் கதை இது. ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று நூறு வரிகளில் ஒரு கட்டுரை எழுதுங்களேன். நிச்சய
ம், உங்கள் கட்டுரையில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தையும் கொண்டிருப்பதோடு, உங்கள் கற்பனையைத் தாண்டிய அம்சங்களுடன் அழகுற விளங்கும் அந்தக் கிராமம்.
                                                 

ஆந்திராவின் தலைநகர் ஹைதரபாத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, கங்காதேவிபள்ளி என்ற அந்த உன்னத கிராமம்.

தடையில்லா மின்சாரம், அறிவியல் தொழில்நுட்பரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உள்ளூருக்குச் சொந்தமான கேபிள் டிவி சேவை, மிகச் சிறந்த சாலை வசதிகள்... இப்படி அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் கொண்டிருக்கிறது அந்தக் கிராமம்.

கிராம மக்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு, உறுதியான நடவடிக்கைகள், சிறப்பான நிர்வாகம் ஆகியவற்ற்றால்தான் இது சாத்தியமாயிற்று.

சுமார் 1,300 பேர் மக்கள்தொகையைக் கொண்ட இந்தக் கிராமத்தில் 100 சதவீத கல்வி அறிவு காணப்படுகிறது. கடந்த 2000-ல் இருந்து இந்த ஊரில் உள்ள பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை - பூஜ்ஜியம்.

தங்கள் கிராமத்துக்கென சுகாதாரம், தண்ணீர், கேபிள் வசதி, கல்வி என பல்வேறு தேவைகளுக்கும் 24 சமூக அமைப்புகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு அமைப்பில் உள்ளவர்களும் தங்களது துறை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது, தொடர்ந்து நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வர்.

மதுவின் வாடைத் தெரியாத ஊர் இது. மது உள்ளே நுழைவதைத் தடுப்பதற்கென்றே ஒரு பாதுகாப்புப் படை உள்ளதாம். "சமூக முன்னேற்றத்தின் தேவையை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவதுதான் இந்தச் சாதனைகளுக்கான அடித்தளம்.

11) வேதனையை சாதனையாக மாற்றிய கிருஷ்ணவேணி பற்றி குங்குமத்தில் வெ. நீலகண்டன் எழுதியுள்ள கட்டுரை படிக்கும் வாய்ப்பு இட்லிவடை மூலம்.

அனாதைப் பிணங்களைத் தூக்கிப் போடும் மனிதருக்கு வாழ்க்கைப் பட்டு அவர் அகாலமாக இறந்து விட்டதில் திகைத்து நின்று, தற்கொலைக்கு முயன்று, நட்பால் நிறுத்தப் பட்டு, அதே முனிசிபாலிட்டியில் வேலை கேட்டு, அதே பிணம் தூக்கும் வேலையை வேறு யாரும் ஒத்துக் கொள்ளாத நிலையில் இவருக்குக் கொடுத்ததை முதலில் மறுத்தாலும், வேறு வேலை கிடைக்காத நிலையில் பிள்ளைகளை ஆளாக்க அதே வேலையையே ஒத்துக் கொண்டு 15 வருடங்களாக வாழ்க்கையுடன் போராடி வரும் புதுவைப் பெண்.

ஊர் ஏற்றுக் கொண்டாலும் உறவுகள் ஏற்கவில்லை என்கிறார். ஊரும் ஆண்கள் ஆதிக்கத்தால் ஏற்கவைக்கப் போராட வேண்டியிருந்ததையும், தொழிலில் இருக்கும் கஷ்டங்களையும் சொகிறார். பிணங்களை வண்டியிலேற்றி, அதை பொதுச் சாலை வழியாக தன்னந்தனியாய் தானே தள்ளிச் சென்று, தானே குழி வெட்டி, அதில் அந்தப் பிணத்தைப் புதைப்பாராம் ஒரு பிணத்துக்கு முன்பு 15 ரூபாய், இப்போது 100 ரூபாய், அதுவும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை எழுதிக் கொடுத்துப் பெற வேண்டுமாம்.

யாருக்காக உழைத்தாரோ அந்த ஜீவன்களில் முதலிரண்டு மகன்களும் இவரை மதிக்காமல் காதல் கல்யாணம் செய்துகொண்டு வீட்டை விட்டுச் சென்று, இவரைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்பதையும் சொல்கிறார். கடைசி மகன் இப்போது உதவியாயிருந்தாலும் அவர் மனதில் என்ன இருக்கோ என்கிறாராம் புன்னகையுடன். வலு இருக்கும் வரை உழைப்பு, அப்புறம் தனக்கும் அதே சுடுகாட்டிலேயே ஒரு குழி தயாராய் இருக்கிறது என்கிறாராம்.

12) மரிக்கவில்லை மனிதாபிமானம் : சென்னை தி.நகர் பேருந்து நிலையம் செல்ல, மார்க்கெட் வழியாக, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு நடந்து சென்றார். வெயில் சுட்டெரித்ததால், நடக்க முடியாமல் தள்ளாடிய அவர், திடீரென, நடைபாதையில் மயங்கி விழுந்தார். அவரது சட்டை பையில் இருந்த, 100 ரூபாய் தாள்கள், கீழே விழுந்து சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பலரும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. நடைபாதையில் பிச்சை எடுத்தவர், முதியவரை பார்த்ததும், பதறிபோய், தட்டில் கிடந்த காசை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி வந்து, முதியவர் முகத்தில் தெளித்தார். காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிதறிய ரூபாய் தாள்களை, முதியவரின் சட்டைப் பையில் வைத்து, உட்கார வைத்தார்.

அண்ணன் எண்னடா...: பிச்சைக்காரர் உதவவே, கூட்டத்தில் இருந்த சிலர், முதலுதவி செய்ய முன் வந்தனர். பின், ஆம்புலன்சுக்கு போன் செய்து, முதியவரின் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர். முதியவருக்கு பலரும் உதவியதால், கூட்டத்தில் இருந்து விலகி சென்ற பிச்சைக்காரர், "அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...' என, முணுமுணுத்து கொண்டே, தட்டை ஏந்தியபடி, தம் கடமையை செய்ய தயாரானார்.
                                                          
வேண்டாம் ரூபாய்: முதியவரின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, உதவிய பிச்சைக்காரருக்கு, 100 ரூபாய் கொடுத்தனர். உடனே அவர், "எனக்கு நோட்டு கொடுத்தா, மாத்த தெரியாதுங்க. சில்லரை இருந்தா போடுங்க' என்றதும், நெகிழ்ந்து போன உறவினர்கள், பிச்சைக்காரருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். எவ்வளவு எடுத்து கூறியும், பணம் வாங்காததால், சில்லரைகளை தட்டில் போட்டு, நன்றி கூறிவிட்டு சென்றனர். கூட்டத்தில் இருந்த பலரும், பிச்சைக்காரரை புகழ்ந்து பேசியபோதும், எதையும் சட்டை பண்ணாமல், தட்டை ஏந்தியபடி, பாடல் வரிகளை முணுமுணுத்து கொண்டிருந்தார் அவர்.(தினமலர் ஏப்ரல் 2)

13) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, குறைந்த மின்சாரத்தில் இயங்கும், "ஏசி' யை கண்டுபிடித்த, நம்பு பிரியதர்ஷிணி: நான், சிவகங்கையில் உள்ள, பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில், மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியலில், இறுதியாண்டு படிக்கிறேன். "ஏசி'யிலிருந்து வெளியேறும், "குளோரோ - புளோரோ கார்பன், நியான்' போன்ற நச்சுவாயுக்கள், ஓசோனில் ஓட்டையை ஏற்படுத்தி, புவி வெப்பமடைவதை அதிகரிக்கின்றன.எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், இயற்கை முறையிலான "ஏசி'யை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். வெப்ப மாறுபாட்டால், வெயில் காலங்களில் பூமிக்கு அடியில் குளிர்ச்சியாகவும், குளிர் காலங்களில் வெப்பமாகவும் இருக்கும் அறிவியல் உண்மையை, நண்பர்கள் மூலம் அறிந்தேன்.எனவே, ஓர் அறையில் உள்ள, 30 டிகிரி செல்சியஸ் வெப்பக் காற்றை, "எக்சாஸ்டர்' மின்விசிறி மூலம் உறிஞ்சி, தாமிர உலோகத்திலான குழாய் வழியாக, பூமிக்கு அடியில் குளிர்ச்சியான பகுதிக்கு அனுப்பினால், வெப்பத்தின் அளவு,25 டிகிரி செல்சியசாக குறைக்கப்பட்டு,மீண்டும் அறைக்கே திருப்பி விடப்படுகிறது. 

                                                                
                                                           
இச்சுழற்சி பல முறை நடைபெற்ற பின், வெப்பம் படிப்படியாக குறைந்து, குளிர்ந்த காற்றாக மாறிவிடும்.வர்த்தக ரீதியிலான, "ஏசி'யை இயக்க, 1.49 கிலோ வாட்மின்சாரம் தேவை. ஆனால் இதற்கு, 0.2 கி.வா., மின்சாரம்மட்டுமே தேவை.இதனால், மின்சாரம் சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகள் உதவியுடன், "டேனிஷ் பண்பாட்டு மையம்' நடத்திய, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத, "எதிர்காலத்திற்கான நிரந்தரத் தீர்வுகள்' என்ற போட்டியில், என் கண்டுபிடிப்பு முதல் இடம் பிடித்தது. கடந்த, பிப்ரவரி 1ம் தேதி, இந்திய பிரதமர் தலைமையில், டில்லியில் நடைப்பெற்றவிழாவில், முதல்பரிசுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 80569 44989.

14) ஆதரவற்ற ஒரு பெண்ணும், சுமார் 30 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட உடைகூட இல்லாமல் இன்னொரு பெண்ணும் கோவை சுங்கம் பகுதியில் பலமாதங்களாகச் சுற்றித் திரிவதை கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் பார்த்து , நமது ஈரநெஞ்சம் அமைப்புக்குத் தகவல் வழங்க, ஈரநெஞ்சம் அமைப்பு கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரசன்னா மற்றும் சமீர் உதவியுடன் அந்த இரண்டு பெண்களையும் 04/04/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தோம்.
                                           


மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் சமுதாயம் மேன்பட போதாது. அதற்கு மேலும் கடமை இருப்பதைக் கல்லூரி பேராசிரியர் பிரின்ஸ் மாணவர்களுக்குப் புரியவைக்க, மாணவர்கள் பிரசனா மற்றும் சமீர் அதைப் புரிந்து கொண்டு ஈரநெஞ்சம் அமைபிற்கும், பாதிக்கப்பட்ட அந்த இருபெண்களின் பாதுகாப்புக்கும் உதவியதை ஈரநெஞ்சம் மனதார பாராட்டுகிறது.

15) உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய ஏரோஜெல்கள், செமி சாலிட் ஜெல்லை காயவைத்து உருவாக்கப்படுகின்றன. இதன்காரணமாக இவற்றின் உட்பகுதிகள் காற்றால் நிரம்பியிருப்பதால், இவை மிகவும் எடை குறைந்ததாக உள்ளன.
                                                         

கார்பன் ஏரோஜெல்கள் மிகவும் நீட்சித்தன்மை கொண்டவை. கார்பன் ஏரோஜெல்லை அழுத்தும் போது அதற்கு மீளும் தன்மை உண்டு. எண்ணெய் உறிஞ்சும் தன்மை மிக அதிகம் கொண்ட பொருள் கார்பன் ஏரோஜெல். தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் கொண்ட பொருட்கள் தனது எடையில் 10 மடங்கு அளவு உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆனால் கார்பன் ஏரோஜெல் தனது எடையில் 900 மடங்கு அதிக அளவு எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பண்பு காரணமாக, மாசு கட்டுப்பாட்டில் இந்த பொருள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16)
உங்களால் நம்ப முடியுமா? 

ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் பள்ளிக்கு வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் தன் முகங்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாக தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர்.

இப்போது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி…


11 கனிணிகள் கொண்ட ஆய்வகத்துடன், இரண்டு வகுப்பறைகள்

குளிர்சாதனம் பொருத்தப்பட்ட (A/c) வகுப்பறை

டைல்ஸ் / கிரானைட் தரை
தரமான பச்சை வண்ணப்பலகை

வகுப்பறைக்குள் குடிநீர் குழாய்
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
வெந்நீர், சாதா நீருக்கு என தனித்தனி குழாய்கள்

தெர்மோகூல் கூரை

மின்விசிறிகள்

உயர்தர நவீன விளக்குகள்

கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்

மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,

வேதியியல் உபகரணங்கள்

கணித ஆய்வக உபகரணங்கள்

முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்

மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்

அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி

மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை

அனைவருக்கும் தரமான சீருடை

காலுறைகளுடன் கூடிய காலணி

முதலுதவிப்பெட்டி

தீயணைப்புக்கருவி

காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்

LCD புரஜெக்ட்டர் ………………………..

ஆகியவற்றோடு உலகத்திற்கே ஒரு முன்மாதிரி அரசுப்பள்ளியாக நிமிர்ந்து நிற்கின்றது
------------------------------
-------------------------
---------------------

இதையெல்லாம் செய்ய வைத்தது ஒற்றை மனிதனின் ஓங்கிய கனவு. ஒரே ஒரு மனிதன், தன்சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவினாலும், சரஸ்வதி டீச்சரின் ஒத்துழைப்பினாலும் மட்டுமே சாத்தியமானது.
                                                    


திரு ஈரோடு கதிர் எழுதியிருக்கும் இந்த விஷயம் முகநூலில் 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' பகுதியில் பகிர்ந்துகொள்ளப் பட்டிருக்கிறது.
இன்னும் நிறைய விவரங்கள் எழுதியிருக்கும்  இந்தப்பதிவை முழுவதும் படிக்க  இந்த லிங்க்கில் முயற்சிக்கலாம்.

12 கருத்துகள்:

  1. தடையில்லா மின்சாரம், அறிவியல் தொழில்நுட்பரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உள்ளூருக்குச் சொந்தமான கேபிள் டிவி சேவை, மிகச் சிறந்த சாலை வசதிகள்... இப்படி அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் கொண்டிருக்கிறது அந்தக் கிராமம்.

    கிராம மக்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு, உறுதியான நடவடிக்கைகள், சிறப்பான நிர்வாகம் ஆகியவற்ற்றால்தான் இது சாத்தியமாயிற்று.

    very very informative..!

    பதிலளிநீக்கு
  2. தடையில்லா மின்சாரம், அறிவியல் தொழில்நுட்பரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உள்ளூருக்குச் சொந்தமான கேபிள் டிவி சேவை, மிகச் சிறந்த சாலை வசதிகள்... இப்படி அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் கொண்டிருக்கிறது அந்தக் கிராமம்.

    கிராம மக்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு, உறுதியான நடவடிக்கைகள், சிறப்பான நிர்வாகம் ஆகியவற்ற்றால்தான் இது சாத்தியமாயிற்று.

    very very informative..!

    பதிலளிநீக்கு
  3. ஜோதி பிரகாஷ், பிரியதர்ஷிணி இருவருக்கும் வாழ்த்துக்கள்...

    கங்காதேவிபள்ளி கிராமத்திற்கு ஒருமுறை சென்று வர வேண்டும்...

    பல தகவல்களுக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  4. பாசிடிவ் செய்திகளை படிக்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. அபெக்ஷா அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு உதவிசெய்யும் கல்லூரி மாணவர் ஜோதி பிரகாஷ் மற்றும் அவர்கள் நண்பர்கள் பாராட்டபட வேண்டியவர்.
    வாழ்த்துக்கள்.

    அயல் நாட்டில் தமிழ்பணி செய்யும் வெற்றி செல்விக்கு வாழ்த்துக்கள்.

    ஹைவாரோ பஜார் என்ற கிராம மக்களின் குணம், மனம், வாழ்க்கை தரத்தை உயர்த்திய போப்பட் ராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    கலைச்செல்வி மேலும் மேலும் த்ரோபால் போட்டியில் புகழ்பெற வாழ்த்துக்கள்.

    இளம்விஞ்ஞானி இணைப்பேராசிரியர் விதுபாலாவுக்கு வாழ்த்துக்கள்.

    கிராமங்களில் நூலகம் அமைத்து குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை வளர்த்த ஆசிரியர் கே.சுந்தரராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    குறட்டைவிடுவதை தடுக்கும்கருவி கண்டுபிடித்த டாகடர் ஜெயராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    கங்காதேவிபள்ளி மக்கள் ஒற்றுமை வாழ்க.

    சுற்றுச்சூழல் பாதிக்காத ஏசியை கண்டுபிடித்த பிரியதர்ஷிணிக்கு வாழ்த்துக்கள்.
    உதவும் மனம் கொண்ட கல்லூரி பேராசிரியர்,பிரின்ஸ், மற்றும் பிரசன்னா, சமீருக்கு வாழ்த்துக்கள்.

    கார்பன் ஏரோஜெல் மாசு கட்டுப்பாட்டுக்கு அவசியம் தான்.
    அரசு பள்ளியை உயர்த்திய திரு பிராங்கிளின் மற்றும் அவர்களுக்கு உதவிய் சரஸ்வதி டீச்சருக்கும் வாழ்த்துக்கள்.
    இவர்களைபற்றி முன்பே படித்து வியந்து இருக்கிறேன்.
    இன்றைய பாசிட்டிவ் செய்திகள் தொகுத்து அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.





    பதிலளிநீக்கு
  6. சிங்காரச் சென்னையில்
    சிதறிக்கிடக்கும் சாக்கடை, குப்பைகளிடையே
    தவிக்கின்றவருக்கு தண்ணீர் என்ற பெயரிலே
    உலகத்தில் இருக்கும் எல்லாக்கிருமிகளையும் உள்ளடக்கி
    ப்ரொடெக்டட் வாட்டர் என்று சொல்லி வரும் சூழ் நிலையில்

    அன்றாடம் செயின் ஸ்னாட்ச் நிகழ்வுகள் கண்டிப்பாக 3ம் பக்கத்தில்
    பெயர் , இடம் மட்டும் மாத்தி ஹிந்துவில் வெளியிடப்படும் வேளையில்

    எங்கள் ப்ளாக் ஒரு பாலைவனச் சோலை.

    அது சரி. அபேக்ஷா என்பதற்கு தேவை என்றா அர்த்தம் ?
    in comparison with, expectations, relatively

    ஒரு வேளை எதிர்பார்ப்புகள் என்ற பொருளில் அந்த நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறதோ ?

    எதுவாக இருந்தாலும் நல்லது செய்கிறார்கள்.

    இந்த ஏ.ஸி. சமாசாரம் கமர்சியல் ப்ரொடக்ஷன் வந்து விட்டதா ?
    எங்கு கிடைக்கும் ? என்ன விலை. ? என்ன மாடல் ?
    காரண்டி உண்டா, வாரண்டி உண்டா. ?
    சீனியர் சிடிசனுக்கு பத்து பர்சென்ட் டிஸ்கௌன்ட் உண்டா ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  7. //இந்த ஏ.ஸி. சமாசாரம் கமர்சியல் ப்ரொடக்ஷன் வந்து விட்டதா ?
    எங்கு கிடைக்கும் ? என்ன விலை. ? என்ன மாடல் ?
    காரண்டி உண்டா, வாரண்டி உண்டா. ?
    சீனியர் சிடிசனுக்கு பத்து பர்சென்ட் டிஸ்கௌன்ட் உண்டா ?//

    சுப்பு தாத்தா நீங்க அப்பார்ட்மெண்டில் பத்தாவது மாடியில் குடியிருப்பதால் இந்த ஏசி வேலை செய்யாதாம் 30 டிகிரி காற்றை செலுத்தினால் 40 டிகிரி காற்று கிடைக்குமாம் சும்மா சூடா இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. இந்தமுறை பாசிடிவ் செய்திகளின் எண்ணிக்கை கூடியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

    மாதிரி கிராமம், மாதிரி பள்ளிக்கூடம், கிராமங்களில் நூலகம் அமைத்து வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கும் ஆசிரியர் - மனதில் நம்பிக்கையை உண்டு பண்ணுகின்றன.

    பதிலளிநீக்கு
  9. பாஸிடிவ் செய்திகள் கூடியிருப்பது பாஸிடிவான விஷயம்! வாழ்க!

    பதிலளிநீக்கு
  10. குடியில்லாக் கிராமம்,
    முதியோருக்கு உதவி,
    மாதிரிப் பள்ளிக்கூடம், செலவில்லாத ஏசி

    ,பெரியவரை மீட்ட பிச்சைக்கரர்
    அப்பா !!படிக்கப் படிக்க மகிழ்ச்சி.
    15 எண்கள்.நல்லெண்ணங்கள்.வாரம் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்க இது போதும். தினம் படிக்கப் போகிறேன். நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  11. நம்ப முடியுமா, மட்டும் அறிந்திருந்தேன்.

    பாராட்ட, வியக்க, பிரமிக்க வைக்கிற நல்ல செய்திகள் அனைத்தும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வெள்ளிக்கிழமை வீடியோ போட்டியில் என் கேள்விகளுக்கு சரியான விடை கூறிய கௌதமனுக்கும், கீதாவுக்கும், பொற்கிழியில் பாதி பாதி!

    அங்கு இந்த காமென்ட் போட்டால் - கூகுளாருக்கு காதில் புகை! -ஊஊப்ஸ்! என்று சொல்லிவிட்டார்! அதனால் இங்கே பரிசு பகிர்ந்து அளிக்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!