திங்கள், 25 ஆகஸ்ட், 2014

'திங்க'க்கிழமை : சரவணபவன் சாம்பார்.                                                             

சென்ற வாரங்களில் தோசைப் பதிவுக்கு ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள். 

இந்தப் பதிவில் 'சரவணபவன் சாம்பார்' என்று நான் எங்கிருந்தோ எடுத்து வைத்திருக்கும் குறிப்பைத் தருகிறேன். கட்டாயம் இணையத்திலிருந்துதான் எடுத்திருக்கிறேன்.  எங்கிருந்து எடுத்தேன் என்றும் குறித்து வைத்திருந்திருக்கலாம். அவர்களுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம். யாரென்று தெரியாததால், கொஞ்சம் குற்ற உணர்வுடனேயே பதிவிடுகிறேன். 

                                                                         

                                                                           
சரவணபவன் சாம்பாரை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். பத்தோடு பதினொன்றுதான் அது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ரசிப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். ரசிக்காதவர்களும் முயற்சித்துப் பார்த்து உங்கள் சுவைக்கேற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம். 
இனி செய்முறை :

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1 கப்

வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை :

தக்காளி – 1
பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி

கடைசியில் தாளித்துச் சேர்க்க : 

எண்ணெய் – 2 தே.கரண்டி
கடுகு – 1/4 தே.கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
சீரகம் – 1/2 தே.கரண்டி *
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
வெங்காயம் – 1
கருவேப்பில்லை – 4 இலை
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2

கடைசியில் தூவ :  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்

செய்முறை :

                                                      

வெங்காயம், தக்காளியைப் பொடியாக வெட்டி கொள்ளவும். முதலில் கொடுத்துள்ள துவரம் பருப்பு + 3 கப் தண்ணீர் + வெங்காயம் + தக்காளியை பிரஷர் குக்கரில் போட்டு 3 – 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

                                                           

விசில் அடங்கியதும் பிரஷர் குக்கரைத் திறந்து வெந்த பருப்பு +வெங்காயம், தக்காளியை நன்றாக மசித்து கொள்ளவும். அத்துடன் அரைத்த கலவை + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

                                                             

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் + சீரகம் +உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் + கருவேப்பிலை + பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

இப்பொழுது வதக்கிய பொருட்களை, கொதிக்கின்ற சாம்பாரில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி கிளறிவிடவும். இந்த சாம்பாரை இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிஃபன் ஐட்டம்ஸுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.


                                                                   
டிஸ்கி : சாம்பார் ரெஸிப்பி ஒரிஜினலாய்ப் போட்டவர் யாராயிருந்தாலும் அவருக்கு எங்கள் நன்றிகள். 


நன்றி அப்பாதுரைஜி..


படங்கள் : நன்றி இணையம்.

27 கருத்துகள்:

 1. // தேவையான பொருட்கள் : //

  Money, காசு, துட்டு,டப்பு , பணம், ரூபா..

  இடம் :
  சரவணபவன் Hotel

  பதிலளிநீக்கு
 2. நான் செய்யும் ரெஸ்ட்ரான்ட் சாம்பாரிலேயே இது புளி சேர்க்காத வகை. செய்து பார்த்துட்டுப் படங்களோடு விளக்கம் அளிக்கப்படும்.

  பி.கு. சரவணபவன் சாம்பார் சகிக்காது வகையைச் சேர்ந்தது. இருந்தாலும் விதி யாரை விட்டது? (அதாவது ரங்க்ஸைச் சொல்றேன். அவர் தானே சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லணும். ) :)))))))

  பதிலளிநீக்கு
 3. அப்புறமா ஒரு விஷயம், சாம்பாருக்கு உ.பருப்பு, ஜீரகம் தாளிப்பதில்லை. அதனால் அதைப் போட மாட்டேன். இப்போவே சொல்லிட்டேன். அதுக்குப் பொற்கிழியிலே குறைக்கறதுனா குறைச்சுடுங்க. :)

  பதிலளிநீக்கு
 4. சரவண பவன் சாம்பார் புளி இல்லாமலா? நாங்களும் சாப்டுருக்கமே புளி இருக்கறா மாதிரிதானே இருக்கு....சார் சரவண பவன்....HASB லோகோ உள்ளதுதானே!? ஹாஹஹா...பாத்துட்டாப் போச்சு....

  பதிலளிநீக்கு
 5. சார் நீங்களும் அது யாரு கொடுத்துருந்தாங்கனு தெரியலைனு சொல்லிருந்தீங்களா...நாங்களும் கூகுள் ஆண்டவரிடம் கேட்டோம். அவர் நிறைய பேரைக் கை காட்டுகின்றார். ம்ம்ம்ம் எது சரியென்று சரவண பவன் செஃப் சொன்னால் நன்றாக இருக்கும்...ஹாஹாஹ்

  பதிலளிநீக்கு
 6. அதெப்படி இந்த ஹோட்டல் சாம்பார் எப்பவும் ஒரே சுவையுடன் (அல்லது இல்லாமல்) இருக்கிறது.?

  பதிலளிநீக்கு
 7. இது 'திங்க' கிழமையா ,குடிக்க கிழமையா ?

  பதிலளிநீக்கு
 8. இணையத்தில் பார்த்து இந்த சாம்பாரை செய்து சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் கொஞ்சம் புளி சேர்த்து செய்வேன். மற்றதெல்லாம் அப்படியே

  பதிலளிநீக்கு
 9. சாம்பார் குறிப்புக்கு நன்றி! சரவண பவன் சாம்பார் நன்றாக இருக்கும் என்று இப்போது தான் கேள்விப்படுகிறேன். துபாயிலும் ஷார்ஜாவிலும் நன்றாக இருக்காது. சரவண பவனில் [துபாய்] நான் ரசித்த விஷயம் முருங்கைக்காய் சூப் தான். வியாழன் தோறும் கிடைக்கும். அதற்கு யாராவது குறிப்பு போட்டால் தேவலாம்!!

  பதிலளிநீக்கு
 10. இந்த ரெசிபி எங்கிட்டயும் இருக்கு - வருஷக்கணக்கா இதை யூஸ் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன். அட்டகாசமா வரும் சாம்பார் (கீதா சாம்பசிவம் அவர்கள் என்ன சொன்னாலும் சரி :-).

  இந்த ரெசிபிக்கு சொந்தக்காரர் கீதா ஆச்சல். இணையத்தின் சிறந்த சமையல் குறிப்புத் தளங்களில் ஒன்று கீதா ஆச்சலின் 'என் சமையல் அறையில்'.

  இந்த ரெசிபி என்னோட புக்மார்க்லந்து: http://geethaachalrecipe.blogspot.com/2009/06/blog-post_05.html.

  பதிலளிநீக்கு
 11. //அட்டகாசமா வரும் சாம்பார் (கீதா சாம்பசிவம் அவர்கள் என்ன சொன்னாலும் சரி :-).//

  இப்போதைக்கு "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ரிட்டுப் போறேன். மிச்சம் அப்புறமா வைச்சுக்கலாம். என்ன ஆனாலும் அந்த உளுத்தம்பருப்பும், சீரகமும் சேர்க்கிறதை ஒத்துக்க முடியலை. சாம்பாரா, சப்பாத்திக்குத் தொட்டுக்கிற தாலா? இல்லாட்டி ர்சமா? ஜீரகம் போட? :)))))))))

  பதிலளிநீக்கு
 12. சாம்பாருக்கு உபருப்பு ஜீரகம் தாளிப்பதில்லையா? ஏன்?
  ஒரு வேளை வட்டார வழக்கமா?

  பதிலளிநீக்கு
 13. அதான் காரணத்தைக் கருத்திலேயே சொல்லிட்டேனே அப்பாதுரை! ஜீரகம் போட்டால் சப்பாத்தி தால் மாதிரி மசாலா வாசனை வரும். ரசத்துக்கு ஜீரகம் தாளிப்பதுண்டு. வத்தக்குழம்புக்கு மட்டும் கால் டீஸ்பூன் உ.பருப்பு, து.பருப்பு, க;பருப்பு போடுவதுண்டு. உளுத்தம்பருப்பு, ஜீரகம் சாம்பாரில் தாளிக்காமல் ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்க! தாளித்தும் பாருங்க. சுவையில் வேறுபாடு தெரியும். :)))) எங்களுக்கு நாக்கு நானூறு மைலாக்கும். :)))))

  பதிலளிநீக்கு
 14. // அப்பாதுரை said...

  Madhavan comment அட்டகாசம். //

  தங்களின் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி, அப்பாதுரை சார்.

  பதிலளிநீக்கு
 15. மாதவன் நன்றி. எந்த ஹோட்டலும் காசு பிடுங்குவதில் விதி விலக்கல்ல! தோசைப் பதிவில் அதைப் பற்றியும் எழுதி இருந்தேன்! :)))

  கீதா மேடம்... ரங்க்ஸ் என்ன கருத்துச் சொன்னார் என்று எழுதவும். ஒரு ரகசியம் உங்களுக்கு மட்டும் சொல்றேன். ரொம்ப நாட்களா என்னிடம் இந்த சமையல் குறிப்பு இருந்தாலும் நான் இதுவரை முயற்சித்தது இல்லை. அப்பாதுரையின் பின்னூட்டம் படித்ததும், செய்து பார்க்கலாமா என்று தோன்றுகிறது!

  சாம்பாருக்கு உ.ப சரி, சில சமயம் சீரகம் தாளிப்பதுண்டு... அதுவும் இட்லிக்கென்று வெங்காய சாம்பார் செய்யும்போது!

  நன்றி துளசிதரன்ஜி.. அப்பாஜி கண்டுபிடிச்சு சொல்லிட்டார் பாருங்க... இனிமேல் ஏதாவது காபி பண்ணி வைச்சா அதோட லின்க்கும் சேர்த்து காப்பாற்றி வைக்க வேண்டும் என்று பாடமானது.

  நன்றி 'தளிர்' சுரேஷ்,

  நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

  ஜி எம் பி ஸார்... எனக்கும் அந்தச் சந்தேகம் உண்டு! ரெஸிப்பி ஒரே மாதிரி வைத்திருந்தாலும், கைப்பக்குவம் மாறாதோ!

  நன்றி பகவான்ஜி... இட்லி, தோசையோடு சாம்பார் சேர்த்து 'திங்க'க்கிழமைதான்!

  நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். புளி சேர்த்தால் சாதம் கலந்து சாப்பிடும் குழம்பு போலாகி விடுமோ என்று எனக்குச் சந்தேகம்.

  நன்றி மனோ சாமிநாதன் மேடம். உங்கள் கோரிக்கை சீக்கிரம் நிறைவேறட்டும்! :))))

  நன்றி அப்பாதுரை. என் குற்ற உணர்வு நீங்கியது. பதிவிலும் இணைப்பு கொடுத்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 16. சாம்பார் ரெசிபிக்கு நன்றி. நானும் இது கீதா ஆச்சல் அவர்களோடது தான்னு நினைக்கிறேன். அவங்க சரவணபவன் சாம்பார்னு பதிவு போட்டிருந்தாங்க.

  நான் செய்யும் ”புளியில்லா சாம்பார்” தான் எனக்கு இட்லி, தோசைக்கு பிடித்த காம்பினேஷன்.

  கோவையில் சாம்பாரின் மேல் பச்சை வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டு குடுப்பாங்க. ஆஹா! ஆனந்தம் தான்.

  பதிலளிநீக்கு
 17. உங்க செய்முறையையும் சொல்லுங்க ஆதி. அதையும் விட மாட்டோமுல்ல! :)

  பதிலளிநீக்கு
 18. கீதா மாமி - புளியில்லா சாம்பார் இது என் ஆரம்பகால பதிவு.இணைப்பு இதோ... http://kovai2delhi.blogspot.in/2010/09/blog-post.html

  தோசை புராணம் மூன்று பகுதிகளுக்கும் போட்ட என்னுடைய பின்னூட்டம் காணோமே????

  பதிலளிநீக்கு
 19. நன்றி திருமதி ஆதி வெங்கட். கீதா ஆச்சல் மேடம் பதிவுதான் என்று நிச்சயமாகவே தெரிந்து விட்டது! அப்பாதுரை உபயம்.

  தோசை புராணம் பதிவுக்கான உங்கள் கமெண்ட்ஸ் வெளியாகி விட்டன. பதிவிட்டு இரண்டு நாட்களுக்கு மேலான பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் இட்டால் மாடரேஷனில் இருக்கும். அப்புறம் சென்று பப்ளிஷ் செய்ய வேண்டும். பப்ளிஷியாகி விட்டது! :)))

  பதிலளிநீக்கு
 20. இந்த ரெசிபியை எத்தனையோ தடவை பயன்படுத்தினதாலே படிக்கும் போதே தெரிஞ்சு போச்சு.. அதான். சில வருடங்களுக்கு முன்னால் என் மகன் இட்லி சாப்பிடக் காரணமாயிருந்தது இந்த சாம்பார். இப்ப அவனும் இந்திய உணவு எதுவும் சாப்பிடறதில்லே அதிகமா.. வேறே ஏதாவது ரெசிபி இருக்குதா பாக்கணும் to bring him back.

  பதிலளிநீக்கு
 21. ஒரு சில மாற்றங்களுடன் இன்னிக்கு இட்லிக்கு இந்த சாம்பார் பண்ணியாச்சு! :))) படங்கள் எடுத்திருக்கேன். நாளை பகிர்கிறேன். இப்போ வேலை இருக்கு. :)

  பதிலளிநீக்கு
 22. புளிக்கு பதிலாய் தான் தக்காளி.. இரண்டில் ஒன்று இருந்தால் போதும்.

  வீட்டு சாம்பாருக்கு எந்த உணவகத்து சாம்பாரும் ஈடில்லை என்பது எனது
  ஆழ்ந்த அபிப்ராயம். :))

  இந்த வீட்டு சாம்பார் என்கிற இடத்தில்அவரவர் வீட்டு சாம்பார் என்று எடுத்துக் கொண்டாலும் ஆட்சேபணை இல்லை!

  உணவகத்து சாம்பார் போன்ற ஐட்டங்கள் எதுவுமே 'மாஸ் அப்பீலுக்காக்'த் தயாராபவை.
  வீடு அப்படியில்லை தானே? சாப்பிட்டு சாப்பிட்டு பழக்கப்பட்ட நாக்கு வேறே! (ஒரு மாறுதலுக்காக என்றாலும் அவற்றின் தேவை ஓரிரண்டு நாட்களீல் சலித்துப்போகும்.)

  பதிலளிநீக்கு
 23. சரவண பவன் சாம்பார் செய்முறை அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!