செவ்வாய், 23 செப்டம்பர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 04 பணத்திமிர்.

                      
முந்தைய பகுதி சுட்டி : இங்கே :: கோலமயில் 
               
மங்கா மாமியின் குழுவினர் பணிபுரிந்த திருமணங்கள் அதிகமாக, அதிகமாக, கும்பகோணத்தில் அலமேலுமங்கா கல்யாண சேவை நிலையம் மங்கா புகழ் அடைந்திருந்தது. இப்போ கல்யாணியும் வந்து சேர்ந்துகொண்டவுடன், கும்பகோணம் முழுவதும் அவர்களின் கல்யாண சேவை மையம் கொடி கட்டிப் பறந்தது. 
                 
கல்யாணப் பெண் வீட்டார் எல்லோரும் மங்கா மாமியையும் கல்யாணியையும் அவரவர்கள் வீட்டில் நிகழ்கின்ற மங்கள காரியங்களுக்கு அழைப்பு விடுவார்கள். 

அப்படி வந்த ஒரு அழைப்புதான், மங்கா மாமிக்கு, அவளுடைய தோழி ஒருவர் விடுத்த அழைப்பு. 
                 
"மங்கா மாமி - இந்த நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று, வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை கொண்டாட உள்ளோம். உங்களுக்கும் உங்க பெண்ணுக்கும் மற்றும் வருகின்ற சுமங்கலிக்கும் கொடுக்க, பட்டுப்புடவைகள் செலெக்ட் செய்யவேண்டும். நீங்க உங்க பெண்ணை அழச்சுண்டு திருபுவனம் வரேளா? பட்டுப்புடவைகள் செலெக்ட் செய்ய எங்களுக்கும் ஹெல்ப் வேணும். நீங்களும் உங்களுக்கு வேண்டிய நிறத்தில் புடவை செலெக்ட் செய்துகொள்ளலாம்."
                  
மங்கா மாமி ஒப்புக்கொண்டாள். 
              
திருபுவனம் கிளம்ப வேண்டிய நாளில், கல்யாணியைக் கூப்பிட்டால், கல்யாணி உற்சாகமின்றி இருந்தாள். 
                    
"என்னம்மா கல்யாணி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? கடைக்குப் போகலாம் என்றால் உற்சாகமாக வருவாயே?" 
                  
"நான் வரவில்லை அம்மா. அவரிடமிருந்து வழக்கமாக வருகின்ற கடிதம் எதுவும் இந்த வாரம் வரவில்லை. நான் இன்று மீண்டும் தோழி வீட்டுக்குப் போய் நேற்று, இன்று, ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டு வருகின்றேன். நீங்க போயிட்டு வாங்கோ. எனக்கு எது பிடிக்கும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியுமே!"
                  
திருபுவனம் செல்வதற்கு, காரில், தோழி வீட்டாருடன் சேர்ந்து கிளம்பினாள் மங்கா. 
                 
திருபுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பட்டு மாளிகை. கடை மிகவும் பெரியதாக இருந்தது. கடையில் நிறைய பேர். கல்யாணப்பட்டு, விஷேஷங்களுக்காகப் பட்டு, நடன அரங்கேற்றத்திற்காக பட்டு வாங்குவோர் என்று கூட்டம். 
                  
மங்கா மாமியும், உடன் வந்திருந்தோரும் பட்டுப் புடவைகள் செலெக்ட் செய்து கொண்டிருந்தபோது, பக்கத்தில், விலை ரொம்ப அதிகமான பட்டுப்புடவைகள் இருக்கின்ற, (அதனாலேயே அதிகம் கூட்டம் இல்லாத) ஒரு இடத்திலிருந்து, ஒரு மாமி உரத்த குரலில், " இந்த நாலஞ்சு பட்டுகளில் இரண்டு மூன்று செலெக்ட் செய்யணும், எல்லாத்தையும் வெளியில சூரிய வெளிச்சம் இருக்கற எடத்துக்குக் கொண்டு வாங்கோ. நல்லா பார்த்து செலெக்ட் செய்யணும்" என்றாள். 
               
எல்லோர் கவனமும் அந்தப்பக்கம் சென்றது. பொன் ஃபிரேம் மூக்குக் கண்ணாடி, மஞ்சள் பட்டுப்புடவை, ஸ்டிக்கர் பொட்டு, தலையைப் பின்னலிடாமல், உதிரி முடிகள் பூந்தொடப்பம் போன்று காட்சியளிக்க, தலையில் சாயம் பூசிய ஒரு மாமிதான், அப்படிக் கட்டளை இட்டுவிட்டு, கடையின் வாயிலை நோக்கி திம் திம்மென்று நடந்து சென்றாள். 
                 
(ஆமாம் மாதவன்! இது மங்களா மாமி இல்லை. நியர் இகுவேலண்ட்!) 


"யாரு அது?" மங்கா மாமி கேட்டாள். 
             
மங்கா மாமியின் அருகில் இருந்த ஒரு மாமி, "இவங்கதான் உமாமகேஸ்வரபுரம் பண்ணையார் பொண்டாட்டி, மங்களாம்பாள். சுற்றுப்புறத்தில் இவங்களுக்கு பண்ணையாரினி என்ற பெயரும் உண்டு. பண்ணையார் எந்த அளவுக்கு நல்லவரோ அதற்கெதிராக பலமடங்கு திமிர், அகம்பாவம், ஆணவம் எல்லாம் உண்டு, இவங்களுக்கு. பண்ணை சொத்து எல்லாம் இவங்க தாத்தா மூலமாக வந்தவை. வீட்டில் மீனாக்ஷி ராஜ்யம்தான்!"
                    
மங்கா மாமி இந்த விவரங்களைக் கேட்டு அதிர்ந்து போனாள்.
                 
கடைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மங்களாம்பிகாவிடம் சென்று, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் என்று தயக்கத்துடன், பட்டுகளுக்கு நடுவே இருந்த பகட்டை நோக்கி நடந்தாள். 
                
" இதோ இந்தப் பட்டை நிச்சயம் செலெக்ட் செய்யலாம்! கொழந்தைக்கு ரொம்ப நன்னா இருக்கும்" என்று ஒரு அரக்கு நிறப் பட்டைக் காண்பித்து, பெரிய குரலில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாள் பண்ணையாரினி. 
                  
மங்கா மாமி சற்று அருகே சென்று மங்களாம்பிகா கண்களில் படும்படி நின்றாள். மங்களாவோ - மங்கா மாமி போன்று ஒருத்தி அருகே நிற்பதை லட்சியம் செய்யவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பட்டுகளை செலெக்ட் செய்வதிலேயே மும்முரமாக இருந்தாள். 
                
"இதோ இதுகூட கொழந்தைக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்!"
                  
அப்பொழுது இந்தக் கூட்டத்தை வேடிக்கை பர்ர்க்க வந்த, சாதாரண சேலையணிந்த ஒருத்தி, "இது என்ன விலைம்மா?" என்று கேட்டாள். 
                 
மங்களம் மாமி உடனே, " ஓ இதுவா? ஒரு மீட்டர் ஐயாயிரம் ரூபாய்தான்! உள்ளே போயி எவ்வளவு மீட்டர் வேணுமோ அவ்வளவு மீட்டர் வாங்கிக்க!" என்றாள் எகத்தாளமாக. அப்படியே கடை சிப்பந்தி ஒருவரிடம், பெரிய குரலில், "இதோ இந்த அம்மா வாங்கிகிட்டுப் போன அப்புறம் ஏதாவது பாக்கி இருந்தா எனக்குச் சொல்லியனுப்புங்க. அடுத்தது என்னுடைய பொண்ணு கல்யாணமும், புள்ள கல்யாணமும் வரப்போறது, அதுக்கு புடவை எடுக்க வரும்பொழுது, மிஞ்சியத நான் வாங்கிக்கறேன்" என்றாள். 
                 
எல்லாவற்றையும் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்த மங்காவுக்கு தலை சுற்றி, மயக்கம் வந்துவிட்டது. 
             
(தொடரும்) 
                  

23 கருத்துகள்:

 1. இந்த மங்களாம்பிகா தான் கல்யாணியின் எதிர்கால மாமியாரா? எங்களுக்கும் தலை சுற்றுகிறதே!

  பதிலளிநீக்கு
 2. எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருந்த 'எங்கள்' வாசகர்களுக்கு தலை சுற்றி, மயக்கம் வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 3. எனக்கு அந்தப் படத்தை அதான் மங்களாம்பிகாவின் ஃபோட்டோவுக்குச் சமம்னு போட்டிருக்கிற படத்தைப் பார்த்துத் தான் தலை சுத்தல். கடைசியிலே கதையில் வில்லன் யாரும் இல்லை. வில்லி தான். ஓகே! :))))

  பதிலளிநீக்கு
 4. டி.வி சீரியல் மாதிரி வில்லி அமர்க்களாமாக அறிமுகமாயிட்டாங்க.!

  பதிலளிநீக்கு
 5. மங்கா மாமி, மங்களா பெயர் கன்ஃப்யூஷன் ஆகிறதால் இருமுறை படிக்க வேண்டி இருந்தது. இதுவும் ஒரு உத்தியோ?

  பதிலளிநீக்கு
 6. நல்ல திருப்பம்தான்! மங்கா மாமி, மங்களம் மாமி என்னை கொஞ்சம் குழப்பிடுச்சு! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 7. தலை சுற்றுவது போல் இருந்தாலும் கதை நன்றாக இருக்கிறது தொடருங்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 8. ஒரு கதையைப் படித்த நினைவில் இன்னொரு கதையைத் தொடர்வது
  எனக்கும் பிடித்த ஒன்று தான்.(அப்பாதுரை சார் பாணி..)
  ஆனால் காட்சி அமைப்பு (இந்த பட்டு மாளிகை காட்சி போல) அப்படியே அமையாமல் பார்த்துக் கொள்வேன்.திருச்சிக்காரரை எங்கே காணோம்?..

  //வீட்டில் மீனாக்ஷி ராஜ்யம்தான்!"//

  ஹ! கும்பகோணக்காரர்களின் கீர்த்தியே கீர்த்தி! ஆனால் இந்த ராஜ்ய விவகாரம் தான் இடிக்கிறது.

  மங்களாம்பிகாவை மதுரைக் காரராக்கி மீனாஷி என்று பெயர்கொடுத்து மங்கா மாமிக்கும்
  மங்களாம்பிகாவுக்கும் பெயர் வித்தியாசம் காட்டி...

  (கவனிக்க: ஜிஎம்பீ சாரின் நோட். காணும் இடங்களிலெல்லாம் உத்தியாகக் காண்கிற அவர் குழப்பத்தைக் களைந்திருக்கலாம்.)

  பதிலளிநீக்கு
 9. ஜீவி said..

  //திருச்சிக்காரரை எங்கே காணோம்?..//

  திருச்சிக்காரர் ஆஜர் !

  >>>>>

  பதிலளிநீக்கு
 10. ஜீவி சார், நான் இதை மத்யானமே பார்த்துட்டேன் ... படிச்சுட்டேன்.

  அடடா, என்ன ஒரு உயரம்ன்னு நினைச்சு பெருமூச்சும் விட்டுக்கொண்டேன்.

  படத்தையே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்ததால் பின்னூட்டம் கொடுக்க நான் வழக்கம்போல மறந்துட்டேன்.

  இப்போ மீண்டும் ஒரு முறை படிச்சேன்.

  தொடரும் போட்டிருக்கு ..... தொரடட்டும் .... பிறகு சேர்த்து கருத்துச்சொன்னால் போச்சு !

  கல்யாணி ஏன் சிரித்தாள்ன்னு தெரியாம என் மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.

  அதனால் தான் நான் தொடர்கதைகள் பக்கமே அதிகமாகப் போவதும் இல்லை.

  பதிலளிநீக்கு
 11. ஆச்சரியமாக இருக்கிறது! ஒருத்தருக்கு ஆரம்பித்த தலைசுத்தல் எத்தனை பேருக்குத் தொடர்ந்திருக்கிறது!.. நல்ல வேளை. இந்த அத்தியாயத்திற்கு தலைசுத்தல என்று நீங்கள் தலைப்பிடவில்லை.:))

  பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காததும் நல்லதுக்குத் தான்; அளிக்க வேண்டியிருந்தால் எத்தனை தலைசுத்தலுக்கு, இன்னும் வர இருக்கின்ற தலைசுத்தல்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று மலைப்பாய் தான் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 12. பின்னூட்டம் ஒவ்வொன்றையும் கவனமாகப் படித்து வருகின்றேன். பதில்கள் பெரும்பாலும் என் மனதுக்குள்ளேயே சொல்லிக்கொள்வேன்! வாசிப்பவர்களின் எண்ணங்கள் அநேகமாக நான் நினைத்த திசையிலேயே இருக்கின்றது என்று தோன்றுகிறது. வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கதையைத் திருப்பிவிடுவேனோ என்கிற அச்சமும் அடிக்கடி எழாமல் போவதில்லை. ஆனாலும் நான் சொல்லவந்தது என்னவென்றால் ..... ..............

  பதிலளிநீக்கு
 13. //பதில்கள் பெரும்பாலும் என் மனதுக்குள்ளேயே சொல்லிக்கொள்வேன்! //

  அட? இப்படி ஒரு வழி இருக்கா? இனிமேலே நானும் பதிவுக்குக் கருத்துச் சொல்றச்சே மனசுக்குள்ளே சொல்லிக்கறேன். செரியா? :)))))

  பதிலளிநீக்கு
 14. பெரிய ஆளுங்க எல்லாம் இந்தக் கதையைப் படிக்கிறாங்க என்று தெரிந்ததும் மேலும் ஓர் உதறல்.... + பயம்!

  பதிலளிநீக்கு
 15. மனசுக்குள்ளே பதில் சொல்லிக்கொள்வதற்குக் காரணம் - கதைப்போக்கு, நான் நினைத்தபடியே கொண்டுசெல்ல வேண்டுமே என்கிற கவலைதான். சில பதில்களை பதிந்துவிட்டால் அது கதையைக் கோடி காட்டிவிடும் என்று தோன்றிற்று. கதையில் சஸ்பென்ஸ் மிகவும் முக்கியம்! கல்யாணி ஏன் சிரித்தாள்?

  பதிலளிநீக்கு
 16. ஒரு மாதிரிக் கண்டு பிடிச்சுட்டேன், கல்யாணி ஏன் சிரித்தாள் னு. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்யாணி ஏன் 'ஒரு' மாதிரியா சிரித்தாள் என்றா கேட்டேன் !

   நீக்கு
 17. 'கல்யாணி ஏன் அழுதாள்?' என்றால் தான் விசனமாக இருந்திருக்கும்.

  சிரிக்கத்தானே சிரித்தாள்?.. சந்தோஷமே!

  இல்லை, அதுவும் 'ஏன்?' சிரித்தாள் என்றால்--

  எத்தனையோ சிரிப்பு வகைகளைச் சிரித்துக் காட்டி நடித்தும் இருக்கிறார்
  என்.எஸ்.கே. இந்த ஏனுக்கான காரணமும் அதில் ஒன்றாகத் தான் இருக்கும்! இருந்தாலும் அதையும்
  அர்த்தபூர்வமாக சொல்வது தான்
  கதை ரூபமாகிறது.

  எழுத்து வெகு நேர்த்தியாய் அமையும் பொழுது அதில் கவனம் செல்கிறதே தவிர கல்யாணி எதற்கு வேண்டுமானாலும் சிரித்துக் கொண்டு போகட்டும் என்று மனசு உள்ளுக்கு உள்ளே முணுமுணுப்பதும் உணருதலுக்கு உள்ளாகிறது.

  பதிலளிநீக்கு
 18. கதையில் வில்லி வந்தாச்சு!

  ஏன் சிரித்தாள்.....

  தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!