Tuesday, September 2, 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 01

             
மங்கா மாமி எப்பவும் பிசி. 
                
மங்கா மாமிக்குக் குடும்பமே கிடையாது. குளித்தலைப் பக்கத்தில் ரயிலில் சிறுமியாக அழுதுகொண்டிருந்த மங்காவை (அப்பொழுது அந்தப் பெயரும் அவளுக்குக் கிடையாது!) எடுத்து வந்து வளர்த்தவர் ஒரு பரிச்சாரகர். அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தப் பெண் அனாதையாக அழுதுகொண்டிருந்தபோது, அவளை அழைத்து வந்து, அவரும் அவர் மனைவியும் தங்கள் மகளாக சுவீகரித்துக் கொண்டனர். திருப்பதி அலமேலுமங்கைத் தாயாரே அந்தப் பெண்ணின் உருவில் வந்ததாக அவர்கள் கருதி, அலமேலு மங்கா என்று பெயர் வைத்து, மங்கா என்றே அழைத்து வந்தனர். 
            
பரிச்சாரகர் வீட்டில் வளர்ந்ததால், சமையல் வேலைகள் எல்லாமே சுலபமாக வந்தது மங்காவுக்கு. அம்மா அப்பா இறந்தபின் மீண்டும் அனாதையானாள்! திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்று முடிவெடுத்து இப்போ ஐம்பதாவது வயதில் சமையல் காண்டிராக்ட் நிர்வாகம். 
               
சமையல் காண்டிராக்ட் வேலையை இவ்வளவு திறமையாக ஒரு பெண்ணாக இருந்துகொண்டு நிர்வகிப்பது அந்த கும்பகோணம் வட்டாரத்திலேயே பலரை வியப்பில் ஆழ்த்திய விஷயம். 
                
கல்யாணச் சமையல் என்றால் மங்கா மாமியிடம் சொல்லி அட்வான்ஸ் கொடுத்துவிட்டால் போதும். அப்புறம் அந்தக் கல்யாண வீட்டினர் சமையல், கோலம், சீர் முறுக்கு, கட்டுசாதக் கூடை, ஆரத்தி, பாட்டு என்று பல விஷயங்களுக்கு கவலை விட்டது என்று நிற்சிந்தையாக இருந்து விடலாம்! 
                 
மங்கா மாமியைப் பார்ப்பதற்கு, சமையல் இலை சப்ளையர் கணேஷமூர்த்தி வந்திருந்தார். பார்ப்பதற்கு டெல்லி கணேஷ் போல இருந்தார். 
               

"மாமி ஒரு விண்ணப்பம். நீங்க கொஞ்சம் மனசு வைக்கணும்."
               
"மூர்த்தி - ஏதாவது காண்டிராக்ட் தில்லுமுல்லு, ரசீது இது அதுன்னு சொல்வதாயிருந்தா நான் ஒன்றையும் கேட்கமாட்டேன்."
              
"அது தெரியாதா மாமி. இது வேற விஷயம். என்னுடைய பொண்ணு. பத்தாம் கிளாஸ் வரைக்கும் படிச்சுருக்கா. அதுக்கு மேலே படிப்பு வரலை. அவளுடைய அம்மா முந்தியே போய்ச் சேர்ந்துட்டா......."
              
"உம். அதுக்கு என்ன இப்போ?"
             
"படிப்பு வரலையே தவிர லவ்வு வந்திடுச்சு."
                
"ஈஸ்வரா!"
           
" வீட்டுல சும்மா இருந்தா இந்தமாதிரி ஏதாவது ஏறுக்கு மாறா பண்ணிக்கிட்டு இருப்பா. உங்க கிட்ட கொண்டுவந்து விட்டுடறேன். நீங்க உங்க பொண்ணாட்டம் அவளை உங்க கூடவே வெச்சு வேலை வாங்கிக்குங்கோ. சம்பளம் எல்லாம் ஒன்னும் கொடுக்காதீங்கோ. ஏதேனும் ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையா ஒரு இடம் கெடச்சா கல்யாணம் பண்ணி வெச்சுடறேன்." 
                     
"சரி. நாளைக்கு மேட்டுத் தெரு சீனிவாசன் வீட்டுக் கல்யாண சமையல் வேலை இருக்கு. மீனாட்சி கல்யாண மண்டபத்துல மத்தியானத்திலேர்ந்து இருப்பேன். உன்னுடைய பொண்ணை அங்கே கூப்பிட்டுகிட்டு வந்திடு. குழந்தையை ஒன்றும் திட்டாதே. அவா அவா தலையில என்ன எழுதியிருக்கோ அதுமாதிரிதான் எல்லாம் நடக்கும்."
                   
"ரொம்ப தாங்க்ஸ் மாமி. நாளைக்கு அழச்சுண்டு வந்துடறேன்."
                 
"தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு?"
                      
======================================
             
மறுநாள். 
            
மீனாட்சி கல்யாண மண்டபம். 
                 
மாப்பிள்ளை அழைப்புக்காக மண்டபம் தயாராகிக் கொண்டிருந்தது. 
               
மங்கா மாமி பம்பரமாகச் சுற்றி கட்டளைகள் பிறப்பித்து சமையல் பகுதியை கிடுகிடுக்க வைத்தவண்ணம் இருக்கும் பொழுது கணேஷ மூர்த்தி சமையல் அறைக்கு வந்தார். கூடவே சங்கராபரணம் ராஜலட்சுமி போல ஒரு பெண். கையிலே ஒரு பை. பேச்சிலோ நடையிலோ தயக்கம் எதுவும் இல்லை. தேங்காய் உடைத்தாற்போன்று சிரிப்பு, பேச்சு! 
               
   

மூர்த்தி சொன்னார். "மாமி நான் சொன்னேனே .......இவள்தான் என்னுடைய பொண்ணு, கல்யாணி. படிப்பு வரலை. பாட்டு வருது. லவ்வு வந்துடுச்சாம். அந்தப் பையன் யாருன்னு கேளுங்கோ. பணக்கார வீட்டுப் பையன். எங்கே பாத்து எப்படி வந்துச்சோ! பணக்காரப் பசங்களை நம்பலாமோ? அவங்களுக்கெல்லாம் இது பொழுது போக்கு. நமக்கு ......"
                   
"போதும் மூர்த்தி. நான் பார்த்துக்கறேன். குழந்தையை ஒன்றும் சொல்லாதே. அறியாத பொண்ணா இருக்கா. அம்மா இல்லாத பொண்ணு வேற. நீ கிளம்பு."
              
"சரி மாமி நான் கிளம்பறேன். இனிமே இவ உங்க பொறுப்புல. நான் இலை சப்ளை செய்ய வரும்பொழுதெல்லாம் பாத்துக்கறேன்." 
                 
"சரி மூர்த்தி. நான் பாத்துக்கறேன். நீ போயிட்டு வா."
                  
"கல்யாணி நான் போயிட்டு வரேன் அம்மா!"
            
"சரிப்பா" 
        
============================== 
            
"கல்யாணீ! இங்கே வாம்மா. "

"என்ன மாமி?"

"என்னை அம்மான்னே கூப்பிடு."

"என்ன அம்மா?"

"அந்தப் பையன் பேரு என்ன?"

(தொடரும்) 
                        
                

22 comments:

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
நல்ல கதைக்கரு நகர்த்தி செல்லும் விதம் சிறப்பாக உள்ளது. இறுதியில் அந்தப் பையனின் பெயர் என்னவென்று தெரியாது... அதற்காக காத்திருக்கேன் அடுத்த தொடருக்காக
மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

‘தளிர்’ சுரேஷ் said...

சுவாரஸ்யமாகச் செல்கிறது! அருமை! தொடர்கிறேன்! நன்றி!

Madhavan Srinivasagopalan said...

// அந்தப் பையன் பேரு என்ன?" //
எந்த பையன் ?

சீனு said...

தொடர்கதையா, சூப்பர்.. வழக்கமா இது போன்ற முயற்சிகள்ல ஸ்ரீராம் சார் தான் ஈடுபடுவார், இந்தவாட்டி புதுசா நீங்களா :-)

இராஜராஜேஸ்வரி said...

சினிமா நட்சத்திரங்களுடன் மின்னலாக ஆரம்பமாகும் கதை அமர்க்களம்.!

மாடிப்படி மாது said...

மங்கா மாமி போட்டோவ காணோமே.....?

kg gouthaman said...

மங்கா மாமி படமா?
https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054494058637977025/6054494072765737906?banner=pwa&authkey=CNimlcLyrauZ5QE&pid=6054494072765737906&oid=108181302742413253729
முடிஞ்சா இங்கே போய்ப் பாருங்க மாது!

kg gouthaman said...

https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054497583999821361/6054497599610642210?pid=6054497599610642210&oid=108181302742413253729

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா அருமை! ம்ம்ம் பையனின் பெயரை தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரை வெயிட்டிங்க்?!!!!

Yarlpavanan Kasirajalingam said...


சிறந்த பகிர்வு
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

தொடர் கதையா.... ஆரம்பமே ஸ்வாரசியமா இருக்கு.... தொடர்ந்து வருகிறேன்...

Madhavan Srinivasagopalan said...

// https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054494058637977025/6054494072765737906?banner=pwa&authkey=CNimlcLyrauZ5QE&pid=6054494072765737906&oid=108181302742413253729// ஓஹோ அவங்க ஒரிஜினல் பேரு மங்காவா ?

Madhavan Srinivasagopalan said...

// https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054497583999821361/6054497599610642210?pid=6054497599610642210&oid=108181302742413253729 //

You do not have permission to view this album. <>

தேவையா.. இனிமே அங்கிட்டு போவியா.. மாதவா இதெல்லாம் உனக்கு தேவையா ?

Geetha Sambasivam said...

இதை எப்போப் போட்டீங்க? தெரியவே இல்லை! :(

ம்ம்ம்ம், அந்தப்பெண் மங்காமாமிக்குத் தெரிஞ்ச பையரை லவ்வறாளோ?

Geetha Sambasivam said...

சங்கராபரணம் ராஜலக்ஷ்மியை இப்போப்பார்க்கணும்னா தினம் இரவு எட்டு மணிக்கு "தெய்வமகள்" அப்படினு ஒரு அறுவை சீரியல் சன் தொலைக்காட்சியில் வருது. அதிலே பாருங்க! கதாநாயகி ஒரு மண்ணாந்தை! எப்போவும் விளக்கெண்ணெய் குடிச்சாப்போல் மூஞ்சியை வைச்சுக்கொண்டு வருவா! அவளுக்கு அம்மாவா வந்து சொதப்பிட்டு இருக்கிறது சங்கராபரணம் ராஜலக்ஷ்மி தான். :)))))

G.M Balasubramaniam said...

தொடரா.. அதுதான் சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறீரோ. சின்னத் தொடரானா ஓக்கே. நீளமானதாயிருந்தால் சேர்த்து வைத்துப் படிக்கணும்

ஜீவி said...

ஆரம்பமே ஜோர். அடுத்து படிக்கறதுக்கு இழுத்துப் போகிறது.

நிற்சிந்தனையில் ஒரு நிறுத்தம்.

"தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு?" என்று மங்கா மாமி கேட்ட மூணே வார்தைலே அவங்க
கேரட்டரை லேசா பதிச்சுக் காட்டிட்ட திருப்தி ஏற்பட்டது.

"பாட்டு வருது. லவ்வு வந்துடுச்சாம்..."ன்னு கணேச மூர்த்தி தன் பெண்ணை வைத்துக் கொண்டே மாமி கிட்டே ஒரு ஏற்கனவே சொல்லியிருப்பதை மறுபடியும் ரிப்போர்ட் பண்ணுகிற மாதிரி சொல்லியிருக்க வேண்டாம்
என்றாலும், "அந்தப் பையன் பேரு என்ன?" என்று மாமி கேட்டு முடிக்கிற ஸ்பீடுக்கு கதையைத் தொடர்வதால் அது தேவையாக இருந்தது என்று தெரிந்து கொண்டேன்.

இந்த லவ்வு விஷயத்தை மாமிக்குத் தெரியும் என்று பெண்ணுக்குத் தெரியாத மாதிரி தொடர்ந்திருந்தால்
மாமி பெண்ணிடம் கேட்டே பெண் சொல்லி மாமிக்குத் தெரிகிற மாதிரி ஒரு நேர்த்தியான உரையாடலை படிக்கிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்குமில்லையா?..

ஒரு 'தொடரும்' கதையில் இவ்வளவு அவசரம் எதுக்கு? நின்று நிதானித்து எழுதிப் போகலாம் இல்லையா?
.

கோவை ஆவி said...

மாமியோட பையனா இருந்திடப் போறது..! ;)

அப்பாதுரை said...

மண்ணாந்தையா?

Ranjani Narayanan said...

ஸ்ரீராம் எழுதற கதை என்றுதான் நினைத்தேன். கௌதமன் ஸாரா ஆசிரியர்?
தொடருங்கள் KG ஸார்!

வல்லிசிம்ஹன் said...

கல்யாணமே அந்தப் பையனுக்கா இருக்கப் போகிறது. மங்கா மாமி சாதனைப் பெண் வரிசையில் நிற்கிறார். என்ன செய்யப் போகிறாரோ. சுவாரஸ்யம் கேஜி ஜி.

கோமதி அரசு said...

கதை அருமை. பயங்கர ஆவல்.
தொடர்கிறேன் அடுத்தபதிவுக்கு.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!