திங்கள், 1 செப்டம்பர், 2014

திங்க கிழமை 140901 தின்ற அனுபவங்கள் - பெசரட்டு!

   
மூன்று வருடங்களுக்கு முன்பு என்று ஞாபகம். 
               
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா - வாணி மஹால் பிரதான ஹாலில் ஏ சி குளிரில் நடுங்கியவாறே பாட்டுக் கச்சேரிக் கேட்டு முடித்து, வெளியே வரும் முயற்சியில் நானும் என் ஒன்று விட்ட சகோதரனும் ஈடுபட்டோம். 
                  
   

வாணி மஹாலிலிருந்து இரவுக் கச்சேரிக் கேட்டு வெளியே வருபவர்கள் எல்லோரும் ஞானாம்பிகாவின் பிடியிலிருந்து தப்பமுடியாது. 
              
வெளியே வருகின்ற பிரதான வாயில்களை மூடி, காண்டீன் வழியாகத்தான் எல்லோரும் வெளியே செல்லவேண்டும் என்கிற வகையில் டிராபிக் திருப்பி விடப்பட்டிருக்கும். 
               
நாங்கள் இருவருமே ஸெல்ப் குக்கிங் மன்னர்கள். (சரி சரி மந்திரிகள் அல்லது தளபதிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்!) 
                  
இயன்றவரை வீட்டில் சாதாரண நேரத்தில் வந்தால் சாப்பிட, அகாலத்தில் வந்தால் சாப்பிட என்று சில சமாச்சாரங்களை பாதி தயார் செய்து வைத்துவிட்டு வந்திருப்போம். இருவருமே குரோம்பேட்டைவாசிகள். 
              
அன்று எங்கள் இருவர் வீட்டிலும் சாப்பிட எதுவும் தயார் நிலையில் இல்லை. மேலும் கச்சேரி முடிய இரவு மணி பத்து ஆகிவிட்டது. 
                  
ஒ வி சகோதரன் கச்சேரி கேட்காத நேரங்களில் ஒன்று செல்ஃபோனில் வருகின்ற அழைப்புகளுக்கு தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுருக்கமாகப் பேசுவான், அல்லது அவனுடைய ஐ ஓ பி நண்பர்கள் / பிகள் யாரையாவது பார்த்துவிட்டால், சுருக்கமாக இருபது நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு வருவான். 
               
அன்றைக்கு ஒரு நண்பர் நாங்கள் கச்சேரி முடிந்து காண்டீனைக் கடக்க முற்படும்பொழுது மாட்டிவிட்டார். ஒ வி சகோதரனும் அவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 
                
எனக்கு அகோரப் பசி - வயிற்றில் பசியின் அகோரம் தன் கோரைப் பற்களால் கோடு இழுக்கத் துவங்கியது. 
           
அரட்டைக்கு நடுவே ஒ வி ச என்னிடம், 'வீட்டுல ஒன்றும் சாப்பிட இல்லை. ஞானாம்பிகாவிலேயே பெசரட்டு சாப்பிட்டுச் சென்று விடுவோம். இந்த நண்பரை ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்திருக்கேன். இவரும் இங்கே சாப்பிட்டுப் போகலாம் என்றுதான் வந்திருக்கார்' என்றான். 
                
ஒரு டேபிளைச் சுற்றியுள்ள இருக்கைகளில் நான் ஒரு புறமும், அவர்கள் என்னுடைய எதிர்ப்புறத்திலும் அமர்ந்துகொண்டோம். 
                     
மூன்று பெசரட்டுகள் ஆர்டர் செய்தோம். 
              

   
சர்வர் முதல் பெசரட்டைக் கொண்டுவந்து எனக்கு முன்னே வைத்தார். நான், பச்சை சட்டினியா, வெள்ளைச் சட்டினியா, சிவப்புச் சட்டினியா - எதை முதலில் தொட்டுக்கொள்வது என்று மனக்கணக்குப் போட்டவாறே வலது கையை ஆசையாக பெசரட்டைத் தொடப்போனபோது, திருவிளையாடல் படத்தில் சாவித்திரி ஓ ஏ கே தேவரைப் பார்த்து "நிறுத்துங்கள் யாகத்தை" என்று உரத்தக் குரலில் கட்டளையிடுவது போல ஒ வி ச வின்  நண்பர், "சார் கொஞ்சம் இருங்க - அதைத் தொடாதீர்கள் ...." என்று கூவினார். அதே குரலில், சர்வரை அழைத்து, "சர்வர் - இது என்ன? இப்படி மேலே எல்லாம் தீஞ்சுபோன பெசரட்டைக் கொண்டு வந்திருக்கீங்க? மொதல்ல அதை எடுத்துக்கிட்டுப் போங்க! நல்லதா ஒன்றை எடுத்துகிட்டு வாங்க!" என்றார். 
           
சர்வர் என்னை ஒரு முறை முறைத்துவிட்டு, முணுமுணுத்தவாறு பெசரட்டை தட்டோடு எடுத்துச் சென்றார். 
                 
அப்புறம் கால் மணி நேரம் கழித்து, அவர்கள் இருவருக்கும் பெசரட்டு கொண்டுவந்து கொடுத்தார். அவர்கள் இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் என்ன ஏது என்று கூடப் பார்க்காமல் பெசரட்டைச் சாப்பிட்டனர். 
                        
அதற்குப் பிறகு இன்னும் கால்மணி நேரம் கழித்து, முதலில் கொடுத்ததைக் காட்டிலும் அதிக தீயலாக வெள்ளைச் சட்டினி மட்டும் போட்டு (மீதி சட்டினிகள் தீர்ந்து போச்சு சார்!) ஒன்றைக் கொண்டுவந்து எனக்கு முன்னால் வைத்துச் சென்றார். நண்பர்கள் இருவரும் தொடர்ந்து பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்ததால் நண்பர் என்னை கவனிக்கும் முன்பாக படக்கென்று கொஞ்சம் பெசரட்டைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன். (இனிமேல் இதை எடுத்துக்கொண்டு போ என்று சொல்லமுடியாதே!) தொடர்ந்து சாப்பிட்டு முடித்தேன். 

இதுல மேலும் ஒரு சோகம் என்ன என்றால், சர்வர் பில் கொண்டுவந்து எனக்கு முன்பாக வைத்துவிட்டுப் போய்விட்டார். நண்பர்கள் சுவாரஸ்யமான சம்பாஷணையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். பில் தொகையை செலுத்திவிட்டு, "போகலாமா?" என்று கேட்டேன். 

"இருங்க - இன்னும் பில்லு வரலையே" என்றார் அந்த நண்பர்!

சத்தம் போட்டது, தகராறு செய்தது எல்லாம் அந்த நண்பர். சர்வர் பழிவாங்கியது என்னை! பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதான் போலிருக்கு! 
    
 அன்றிலிருந்து யாரு பெசரட்டு என்று சொன்னாலும் எனக்கு இந்த அனுபவம் நினைவில் வராமல் போகாது! 
                  

10 கருத்துகள்:

 1. ‘ஞானம்பிகா’ ஸ்பெஷல் ரெசிப்பி… ஆந்திரா பெசரெட் தோசை

  தேவையான பொருட்கள்:

  பச்சைப் பயறு: 1/4 கிலோ
  பச்சரிசி: 1/4 டம்ளர்
  பச்சை மிளகாய்: 3
  பெரிய வெங்காயம்: 2
  கறிவேப்பிலை: தேவையான அளவு
  பெருங்காயத் தூள்: சிறிதளவு
  இஞ்சி: 1 துண்டு

  செய்முறை:

  பச்சைப் பயறையும், பச்சரிசியையும் நன்றாக அலம்பி நைஸாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாயை விழுதாக அரைத்து இரண்டு டீ ஸ்பூன் அளவு போடவும். அதனுடன் தேவையான அளவு பெருங்காயத் தூள் மற்றும் சால்ட் போட்டு நன்றாகக் கலக்கவும். கலந்த பிறகு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றிப் பதமான சூடாகியதும் வழக்கமாக தோசை போடுகிற மாதிரி போடவும்.

  வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை நைசாக நறுக்கி, தோசையின் மேல் சிறிதளவு தூவவும். இப்போது ஆந்திரா பெசரெட் தோசை ரெடி.

  பதிலளிநீக்கு
 2. ஹாஹாஹா....செம அனுபவம்.....ரொம்பவே ரசித்தோம்.....அது சரி தீஞ்ச பெசரெட் ....பதிலில்....ஞானாம்பிகா ஸ்பெஷல் பெசரெட் ரிசீபி!!!!!!!ஹாஹாஹா....ஒருவேளை கான்டீன் மூடற டைமோ நீங்க போன டைம்? அதான் தோசை மாஸ்டர் கோபத்துல தீச்சுட்டார் போல.....

  பதிலளிநீக்கு
 3. ஹாஹாஹாஹா சிரிச்சு மாளலை! :))))) மேலே சொன்ன ரெசிபியிலே சில மாற்றங்களோடு நான் பெசரட் செய்யறது வழக்கம். செய்முறைக்குறிப்பு வழக்கம் போல சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 4. ஆக மொத்தம் தோசை புராணம் இன்னும் முடியலை! தொடர்கிறது. அடுத்து என்ன தக்காளி தோசையா? தக்காளி ஊத்தப்பமா?

  பதிலளிநீக்கு
 5. அது சரி, மறந்துட்டுப் போயிட்டேனே! அது என்னங்க திங்கக் கிழமை மட்டும் 1,40,901 தின்ற அனுபவங்கள்???? இத்தனை பெசரட்டா தின்னீங்க????????????????????? யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!!!!!!!111

  பதிலளிநீக்கு
 6. பெசரட் புரட்டித்தான் போடுகிறது தங்கள் நினைவலைகளை..!

  பதிலளிநீக்கு
 7. கௌதமன் உங்கள் ஒ.வி.ச இந்தப் பதிவைப் படிக்கணுமே.... தர்ம சங்கடப் பசியை இப்படி நகைச்சுவையாகச் சமாளித்திருக்கிறீர்கள். உண்மையில் மிகவும் ரசித்துச் சிரித்தேன். பால்ஹனுமான் ரெசிப்பியும் நன்றாக வந்திருக்கிறது. நாங்கள் பயத்தம்பருப்புதான் உபயோகிப்போம்.

  பதிலளிநீக்கு
 8. பெஸரட்டு எப்படி பண்ணணும் ஒவ்வொருவர் ஒரு முறை வைத்திருப்பார்கள். காந்தாமல்,கருகாமல் சுடச்சுட அம்மா வார்த்துக் கொடுக்கணும். ஸரிதானே. அன்புடன்

  பதிலளிநீக்கு
 9. ஹிஹி. பெசரட் என்ற பெயர் எப்படி வந்திருக்கும்.?

  ரெசிபிக்கு நன்றி BalHanuman.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!