Tuesday, March 3, 2015

நடக்கும் நினைவுகள் : உதவலாமா?                                                                                     
                                                                                             Image result for early morning walk images
 
 
நடக்கும் நினைவுகள் எழுதி ரொம்ப நாளாச்சு!

அதிகாலைல நடக்கற பழக்கம் இருக்கு பாருங்க, ரொம்ப நல்ல பழக்கம்.  சுத்தமான காற்று,  சந்தடியற்ற அமைதியான சூழல், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை..

இன்றும் காலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டுப் படியிறங்கிய போதே புத்துணர்ச்சி தொற்றிக் கொண்டது உடலில்.  கேட்டைக் கவனமாக மீண்டும் மூடி விட்டு சாலையில் இறங்கி இரு புறமும் ஒரு பார்வை விட்டு நடக்கத் தொடங்கினால் அந்த அமைதியான சாலை வசீகரித்தது.
 

                                                                                      Image result for early morning walk images
 
சாலையோரம் இருந்த மரங்கள் ஒன்றுக்கொன்று சீரான இடைவெளியில் இருளிலேயே ஒரு தனி நிழலைக் கொடுத்துக் கொண்டிருக்க, மூடியிருந்த கடைகளின் படிகளில்,  சிறு ஈரம் மினுமினுக்க வரிசைக் கடைகளின் காலியிடங்கள் தனிக் காட்சியைக் கொடுத்தன. 

'பீக் அவர்ஸி'ன் போக்குவரத்து நெரிசல்  கோபத்தையும் எரிச்சலையும் தந்து மனதின் அமைதியைக் கெடுக்குமே, அது இல்லாமல் இந்த அமைதி மனதின் நல்லெண்ணப் பகுதியைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது.

தொடர்ந்து நடக்கையில் கொஞ்சம் முன்னால் அருகிலிருந்த தெருவிலிருந்து ஒருவன் ஒரு 'பைக்'கைத் தள்ளிக் கொண்டு வெளிப்படுவது தெரிந்தது.   தள்ளிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.
 

                                                                                      Image result for a man walking with a motor bike images
 
"பெட்ரோல் இல்லையோ?  பங்க் கூட எதுவும் பக்கத்துல இல்லையே'

'எவ்வளவு தூரம் தள்ளிக் கொண்டு நடப்பான்?  கொஞ்ச தூரத்தில் மெயின் ரோட் ஏறுமுன் ஒரு மேடு வேறு ஒன்று வருமே...  கனமான பைக்காகத்தான் தெரிகிறது... கஷ்டமாச்சே '

அந்த மேட்டில் ஏற ஒரு கை கொடுக்கலாமென்று நடையை எட்டிப்போட்டு அவனை  நெருங்க முயன்றாலும், அவன் சற்று வேகமாகத் தள்ளிக் கொண்டு போவது,  அப்படி நெருங்க முயற்சிப்பதானாலேயே தெரிந்தது.  கொஞ்ச தூரத்தில் திருப்பத்தில் திரும்பி விட்டான்.  அந்தத் திருப்பத்தை நெருங்கியபோது அடுத்த திருப்பத்திலும் திரும்பி விட்டான் அந்த பைக்கன்!

எதிரே ஒரு தெருநாய் ஓடிவந்து கொண்டிருந்தது.  இவன் பைக்கைத் தள்ளிக் கொண்டு போகும் வேகத்தைப் பார்த்து, திரும்பி அவன் பின்னாலேயே ஓடி, மோப்பம் பிடித்து விட்டு, சுவாரஸ்யமின்றி அடுத்திருந்த சந்துக்குள் மறைந்தது!


                                                                                                Image result for a man sitting on a motor bike images

மேடேற உதவ வேண்டுமே...  நடையை எட்டிப் போட்டும் அந்தத் திருப்பம் திரும்பிய போது அவன் மேட்டில் பைக்கை ஏற்றிவிட்டு, ஸ்டான்ட் போட்டு அதன் மேல் சாய்ந்தவாறிருந்தான்.  நெருங்க, நெருங்க யாரையோ எதிர்பார்ப்பவன் போல இருந்தான்.

"பெட்ரோல் பங்க் எதுவும் அருகில் இல்லையே.."

"எதுக்கு"

 "இல்லை, தள்ளிகிட்டே வந்தீங்களே.. பாவம், யாருக்காக வெயிட் பண்றீங்க?"
 
"என் ஃபிரெண்ட் நைட் டியூட்டி முடிஞ்சி வர்றான்.  'பைக்கை எடுத்துட்டு வாடா' ன்னான்.  அதான் அவனை அழைத்துப் போக வந்தேன்.  "

"தள்ளிகிட்டு வந்தீங்களே..."

"ஓ.. அதனால கேக்கறீங்களா?  கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செஞ்சு உடம்பு பெருத்துடுச்சு.. தொந்தி வேற..  அதான் வரும்போது பைக்கைத் தள்ளிகிட்டே வந்தேன்.  பயிற்சிக்குப் பயிற்சியாச்சு.  அவனையும் அழைத்துப் போயிடலாம்.  போகும்போது ஸ்டார்ட் பண்ணி ஓட்டிகிட்டு, அவனையும் அழைச்சுக்கிட்டுப் போயிடுவேன்!  மற்றபடி பைக்ல பெட்ரோல் இருக்கு, ரிப்பேருமில்ல"  

தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவன் புன்னகைப்பது நன்றாகத் தெரிந்தது!

ம்....ஹூம்!                                                                                            Image result for a bulb images
17 comments:

mageswari balachandran said...

நல்ல உடற்பயிற்சி,தங்களின் சேவை அவர்க்கு தேவையில்லை என வருந்தவேண்டாம். நன்றி.

Chokkan Subramanian said...

எல்லாம் சரி, நீங்களும் எப்ப இந்த பைக் தள்ளுகிற பயிற்சியை ஆரம்பிக்க போறீங்க.
உண்மையிலேயே ஒரு பக்க கதையை படித்த உணர்வு ஏற்பட்டுச்சு. அருமையாக எழுதியிருக்கீங்க .

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு. நிஜமோ, கற்பனையோ இந்த அனுபவம் தரும் பாடம் அருமை.

RAMVI said...

நல்ல யோசனைதான்.

பழனி. கந்தசாமி said...

ரசித்தேன். எப்படியோ, வடை போச்சு.

KILLERGEE Devakottai said...

அந்த பைக்கன் இந்த வார்த்தையை ரசித்தேன். தமிழ்மண வாக்கு இடமுடியவில்லையே...

Rajakamal said...

I liked the big bulb picture on the end.

கோமதி அரசு said...

பல்ப் வாங்கியதாக ஏன் நினைக்கிறீர்கள்?

உங்கள் உதவும் மனப்பான்மை பாராட்டதக்கது.

எங்கிருந்தோ வண்டியை திருடி கொண்டு போவதால் தள்ளிக்கிட்டு போகிறார் போலும் என்று நினைத்தேன்.

G.M Balasubramaniam said...

அதிகாலை நடை என்பதே மறந்து போச். நமக்கெல்லாம் ஏழு ஏழரை மணிக்குத்த நடக்க அனுமதி. எங்கள் வீட்டருகே இருக்கும் நடைப் பூங்காவுக்கு பைக்கில் வந்து நடை முடித்து பைக்கில் போகின்றவர்களைப் பார்த்து இருக்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

ஹிஹிஹி சரியான பல்பு!!!! ஆமா....இது நிஜமாவேவா...இல்ல உங்க கற்பனையா....(ஏன்னா நீங்க இந்த மாதிரி எழுதறதுல கில்லாடியாச்சே அதான்...!!)

rajalakshmi paramasivam said...

உதவும் மனப்பாண்மை உங்களுக்குள் இருப்பதை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள் ஸ்ரீராம் சார்.
வாழ்த்துக்கள்......

மனோ சாமிநாதன் said...

காலை நேர அமைதியையும் நடக்கும்போது அது எத்தனை இதத்தை மனதுக்குத் தருகிறது என்பதையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி அந்த அமைதி மனதின் நல்லெண்ண‌ங்களை தூண்டி விட்டிருக்கிறது! அது தான் அடுத்தவர் கேட்காமலேயே உதவ முனைந்திருக்கிறீர்கள்!

பரிவை சே.குமார் said...

ஆஹா...
அண்ணா பல்ப் வாங்கினதை அழகாச் சொல்லிட்டீங்க...
இப்பல்லாம் எதையுமே யோசித்துத்தான் முடிவுக்கு வரணும்..

R.Umayal Gayathri said...

பைக் ஆசாமி மாதிரி நாலு பேர் யோசித்தால் பரவாயில்லை...நாட்டுக்கு கொஞ்சம் பெட்ரோல்....மிச்சம் தானே...?

திண்டுக்கல் தனபாலன் said...

பளீர் பளீர் - பிரகாசம்...!

ராமலக்ஷ்மி said...

இதை பல்பாக நினைக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்தும். நல்ல உள்ளத்தோடு கேட்டிருக்கிறீர்கள். ஒருவேளை நிஜமாகவே உதவி தேவைப்படும் சூழலில் இருந்திருந்தால்.. அப்படி இல்லை என்றவரையில் மகிழ்ச்சி என நகர வேண்டியதுதான்.

Ranjani Narayanan said...

இந்தக் கதை படித்ததும் தொலைக்காட்சியில் வரும் 'புஷ்'பராஜ் ஜோக் நினைவுக்கு வந்தது!

பிறர் கேட்காமலேயே உதவ நினைக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!